கட்டுரைச் சுட்டு

அத்தியாயம் பதினெட்டு: ஹென்றியின் சாமர்த்திய(ம். / மா?)

 

 
 தொடர் நாவல்: அமெரிக்கா II - வ.ந.கிரிதரன் -நான்காவது வீதி மேற்கு , ஏழாவது அவென்யு, கிறிஸ்போபர் வீதி ஆகிய வீதிகள் சந்திக்கும் சந்திப்பிலுள்ள நடைபாதையொன்றில் நடைபாதை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஹென்றியை முதலில் ஹரிபாபுதான் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்: "இவன்தான் நான் கூறிய ஹென்றி. எஸ்கிமோ ஹென்றி." அவ்விதம் கூறியபொழுது ஹரிபாபுவின் வதனத்தில் இலேசானதொரு பெருமிதம் கலந்த முறுவலொன்று ஓடி மறைந்ததுபோல் இளங்கோவுக்குப் பட்டது. அந்தப் பெருமிதம் அவனது குரலிலும் தொனித்ததாகவும் பட்டது. ஒருவேளை 'பார்த்தாயா என் சாமர்த்தியத்தை, மராத்தியனான நான் கண்டம் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து வந்து, இங்கு இந்த நாட்டின் ஆதிக்குடிகளிலொருவனைக் கட்டி வைத்து வேலை வாங்குகின்றேனே! என்ன நினைத்துக் கொண்டாய் என்னைப் பற்றி..'யென்று அவன் கருவத்துடன் உள்ளூர நினைத்துக் கொண்டிருக்கலாமோவென்று இளங்கோ தனக்குள்ளே எண்ணிக் கொண்டான். அதே சமயம் குள்ளமாகவும், குட்டையான கால்களுடனும் அந்த எஸ்கிமோ இருந்தான். இளங்கோவுக்கு அவனை அங்கு பார்த்ததும் ஆச்சரியமாகவிருந்தது. அந்த ஆச்சரியம் தனது குரலில் தொனிக்க வேடிக்கையாக, "எஸ்கிமோவான உனக்கு இங்கென்ன வேலை. துருவத்தை விட்டு நீயும் புலம்பெயர்ந்து விட்டாயா? உன்னையும் நாகரிக மோகம் பற்றிக் கொண்டு விட்டதாயென்ன?" என்றான். அதைக் கேட்டதும் எஸ்கிமோ ஹென்றியும் இலேசாகச் சிரித்துக் கொண்டான்: "எத்தனை நாள்தான் துருவத்திலேயே சஞ்சரிப்பது. குளிர் அலுத்து விட்டது. துருவம் விட்டுத் துருவமாகப் பறவைகளே வருடா வருடம் இடம்மாறும்போது மனிதனான நான் மாறுவதிலென்ன தப்பு? ஒரு மாறுதலுக்காக இந்த மாநகருக்கு வந்தவனை இந்த ஹரிபாபு இவ்விதம் வளைத்துப் பிடித்துக் கொண்டான்" என்றும் சிறிது மேலதிகமாகத் தகவல்களைப் பகிரிந்தும் கொண்டான்.

இளங்கோ: "என்ன எஸ்கிமோவுக்குக் குளிர் அலுத்துவிட்டதா? ஆச்சரியமாகவிருக்கிறதே.."

"இதிலென்ன ஆச்சரியம். என்னைப்போலிங்கு இந்த மாநகரை நோக்கிப் பல எஸ்கிமோக்கள் படையெடுத்திருக்கின்றார்கள்" என்ற எஸ்கிமோ ஹென்றியைப் பார்த்து இப்பொழுது அருள்ராசா இடைமறித்திவ்விதம் கேட்டான்: "நானறிந்தவரையில் எஸ்கிமோக்களால் குளிர்பிரதேசங்களைக் கடந்து வேறிடங்களுக்குச் சென்று வாழ அவர்களது உடலமைப்பு இடம் கொடுக்காதென்றல்லவா இதுவரையில் எண்ணியிருந்தேன். உன்னைப் பார்த்தால் அவ்விதம் தெரியவில்லையே"

இதற்கு ஹென்றியின் பதில் அறிவுபூர்வமானதாகவும், தர்க்கச் சிறப்பு மிக்கதாகவுமிருந்தது: "வெப்பமான காலநிலையில் சஞ்சரித்த உன்னால் இந்தக் குளிர்பிரதேசத்திற்கு வந்து வாழ முடியுமென்றால் இந்தக் கண்டத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு இதே கண்டத்தின் இன்னுமொரு பகுதியில் வசிப்பதிலென்ன கஷ்ட்டமிருக்க முடியுமென்று நீ நினைக்கின்ன்றாய்?"

இப்பொழுது ஹரிபாபு இடைமறித்து உரையாடலினைத் தொடர்ந்தான்: "ஹென்றி நல்ல சுறுசுறுப்பான கடுமையான உழைப்பாளி. இவனுடன் ஒரு சில மணித்தியாலங்கள்வரையில் நீங்களிருவரும் இருந்து இவன எவ்விதம் வியாபாரத்தினை நடத்துகின்றானென்று பார்த்துவிட்டு வாருங்கள். அதன் பின்னர் உங்களுக்கும் இந்த வியாபாரத்தை இவனைப் போல் தனியாக இன்னுமொரு நடைபாதையில் நடத்தலாமென்று நம்பிக்கையேற்பட்டால் உங்களுக்கும் நாளை முதல் இவனைப் போல் இன்னுமொரு இடத்தை ஏற்பாடு செய்து
விடுகின்றேன்."

இதன்பின்னர் ஹென்றி பக்கம் திரும்பிய ஹரிபாபு இவ்விதமாகக் கட்டளையிட்டான்: "ஹென்றி, இவர்களிருவருக்கும் நமது வியாபாரத்தைச் சிறிது விளக்கி விடு. நடைபாதையிலிருந்து எல்லோராலும் வியாபாரம் செய்து விட முடியாதல்லவா" . அதன்பின்னர் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஹரிபாபு தன்னிருப்பிடத்துக்குச் சென்று விட்டான். இப்பொழுது இளங்கோவும், அருள்ராசாவும் ஹென்றியுடன் தனித்து விடப்பட்டனர்.

ஹென்றி முக்கியமாக விறபனைக்கு வைத்திருந்த பொருட்களாகப் பித்தளையினாலான பல்வகைச் சிற்பங்கள், பூஜை வழிபாடுகளுக்குரிய குத்து விளக்கு போன்ற உபகரணங்கள், தேநீர் அருந்துவதற்குரிய கிண்ணங்கள் போன்ற பல்வகைச் சமையற் பாத்திரங்கள், இன்னும் பல பித்தளைப் பொருட்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அது தவிர பல்வேறு வகைகளினான குளிர்காலத்துக்குரிய ஆடை வகைகள், மேலும் ஊரில் குறவர்/குறத்தி விற்பார்களே அத்தகைய பாசிமணி , ஊசிமணிமாலை போன்ற ஆபரண வகைகளெனப் பலவகைப் பொருட்கள் அவனிடம் விற்பனைக்கிருந்தன. நடைவாசிகள் பலர் அவ்வப்போது அவன் விரித்திருந்த கடையை ஆவலுடன் பார்த்தார்கள். சிலர் பேரம்பேசி சில பொருட்களை வாங்கியும் சென்றார்கள். ஒரு பருத்த வெள்ளைக்காரப் பெண்மணி தன் காதலனான ஒரு கறுப்பினத்து வாலிபனுக்கு நல்லாயிருக்குமென ஊசிமணி மாலையொன்றை வாங்கிப் பரிசளித்தாள். அவனும் பல சிணுங்கல்களுக்குப் பின்னர் அவளை முத்தமிட்டுத் தன் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு அந்த மாலையினை வாங்கியணிந்து கொண்டான். இவ்விதமாகத் தன வியாபாரத்திலும் கவனமாகவிருந்து கொண்டு அவ்வப்போது இவர்களுடனும் உரையாடலினைத் தொடர்ந்து கொண்டிருந்தான் ஹென்றி. இளங்கோ ஹென்றியின் வியாபாரதிறமைகளையும் அவதானித்தான். அவன் தன் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விறபதற்குக் கையாளும் உரையாடற் தந்திரங்களையும் அவதானித்தான்.

இதே சமயம் அருள்ராசாவும் இளங்கோவும் அவ்வப்போது தமக்குள்ளும் தமிழில் உரையாடினார்கள். அருள்ராசாவுக்கோர் ஐயமேற்பட்டது."இளங்கோ, உன்னாலை இப்படி விற்க முடியுமென்று நினைக்கிறியா?"

இதற்கு இளங்கோ "விற்கிறதுக்குக்கென்ன. அவ்வளவு கஷ்ட்டமாகத் தெரியேலையே. எனக்கென்றால் செய்யலாம் போலைத்தான் கிடக்கு. நீ என்ன நினைக்கிறாய்?" என்று எதிர்க் கேள்வி கேட்கவும் அருள்ராசா "செய்து பார்க்கிறதிலை பிரச்சினையொன்றுமில்லையென்றுதான் படுகுது. செய்து பார்ப்பம். எதுக்கும் முதலிலை இவனிட்டையும் ஏதாவது விசயத்தைக் கறக்கலாமாவென்று பார்ப்போம்" என்றான்.

இவர்கள் தங்களுக்குள் அடிக்கடி பேசிக் கொள்வதை அவ்வப்போது அவதானித்த எஸ்கிமோ ஹென்றி "என்ன இவ்விதம் விறபதற்குப் பயமாகவிருக்கிறதா? " என்று கேட்டான். இதற்கு "அப்படியொன்றுமில்லை" என்று பதிலளித்த இளங்கோ " அது சரி. நீ எவ்விதம் ஹரிபாபுவைக் கண்டு பிடித்தாய?" என்று கேள்வியொன்றினையும் கேட்டு வைத்தான்.

அதற்குச் சிரித்தபடியே ஹென்றி கீழுள்ளவாறு நீண்டதொரு பதிலினையளித்தான்:

"இந்த 'கிறீன்விச் கிராமம்' கலைஞர்களுக்கும், உல்லாசப்பிரயாணிகளுக்கும் பெயர் போனது. மேலும் நியூயார்க் மாகாணப் பல்கலைக்கழகமும் இங்குதானுள்ளது. மாலையென்றால் வாசிங்டன் சதுக்கத்துப் பூங்காவுக்கு அண்மையிலுள்ள நடைபாதைகளில் கோடைகளில் ஓவியர்கள் நடைபாதைவாசிகளை அப்படியே வரைந்து சம்பாதித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். நானும் இந்நகருக்கு
வந்ததும் இவ்விதமாக உடனடியாகவே எனது நடைபாதை வியாபாரத்தை ஆரம்பித்து விட்டேன். வாசிங்டன் சதுக்கப் பூங்காவுக்கண்மையிலுள்ள 'மக்டூகல்' வீதி நடைபாதையில்தான் ஆடைவகைகளை வைத்து விற்றுக் கொண்டிருந்தேன். அப்போழுதுதான் ஒருநாள் இந்தக் ஹரிபாபுவைக் கண்டேன். இவன் அப்பொழுதுதான் தனது நடைபாதை வியாபாரத்தை ஆரம்பித்திருந்தான். ஒருநாள் இந்தப் பகுதியைச் சுற்றி யார் யாரெல்லாரும் இத்தகைய நடைபாதை வியாபாரங்களையெல்லாம் இங்கே செய்து கொண்டிருக்கிறார்களோவென்பதை அறிவதற்காக வந்து கொண்டிருந்தவன் பார்வையில் நான் தட்டுப்பட்டேன். என்னைக் கண்டதுமே அவனுக்கு என்னைப் பிடித்துப் போய் விட்டது. மேலும் இந்தப் பகுதியில் அவனுக்குப் போட்டியாக நானொருவன் மட்டும்தான் இவ்விதம் அவன் விற்கும் பொருட்களிலொன்றான ஆடைவகைகளை விற்றுக் கொண்டிருந்தேன். எனவே என் பொருட்களை மொத்தமாக விலைபேசி வாங்கி என்னைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டால் நல்ல வேலையாள் கிடைத்ததாகவும் அதே சமயம் வியாபாரத்தில் எதிரியொருவனை ஒழித்ததாகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கலாமென்பது அவனது கணக்கு. அவ்விதம் அவனடித்த கல்லில் அகப்பட்டவன்தான்இந்த எஸ்கிமோ ஹென்றி. எனக்கென்ன வேலைக்கு வேலையாகவும் ஆயிற்று. என்னிடமிருந்த பொருட்களை விற்றதாகவும் ஆயிற்று"

"ஆனால் ஹென்றி. சொந்தமாகத் தொழில் செய்யும்பொழுது நீ இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கலாமல்லவா?. அதையிட்டு நீ
கவலைபப்டுவதில்லையா?"

இதற்குச் சிறிது நேரம் அமைதியாகவிருந்த எஸ்கிமோ ஹென்றி மெதுவான குரலில் அவர்களைப் பார்த்துக் கூறினான்: "நீங்களிருவரும் யாரிடமும் கூறுவதில்லையென்று, குறிப்பாகக் ஹரிபாபுவிடம் கூறுவதில்லையென்று எனக்குச் சத்தியம் செய்தால் நானொரு உண்மை சொல்வேன்".

அவன் இவ்விதம் புதிராகக் கூறவும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் அவனிடமிருந்து அந்த இரக்சியத்தை எபப்டியாவது அறிந்து விட வேண்டுமென்று ஆவல் பொங்கியது. அந்த ஆவல் குரலிலும் தொனிக்க , இருவரும் ஒரே சமயத்தில் "நிச்சயமாக ஒருத்தரிடமும் சொல்ல மாட்டோம். சொல்" என்றார்கள்.

அதற்கு எஸ்கிமோ ஹென்றி கூறினான்: "நீங்கள் கேட்டீர்கள் சொந்தத் தொழிலைக் கைவிட்டது கவலையைத் தரவில்லையாவென்று. யார் சொன்னது நான் என் சொந்தத் தொழிலைக் கை விட்டேனென்று."

இளங்கோ: "கை விடாமலென்ன.. இப்பொழுது நீ ஒருவருக்குக் கீழ்தானே வேலை செய்கிறாய்?"

ஹென்றி: "பார்வைக்கு அவ்விதம் தென்பட்டாலும் நான் இன்னும் என் சொந்தத் தொழிலையும் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன்.  அதோ பார் அந்த எனது தோற் பையில் கொண்டு வரும் எனது பொருட்களையும் அவ்வப்போது இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் விற்று விடுகின்றேன். பார்த்தாயா என் சாமர்த்தியத்தை"

சிறிது நேரத்துக்கு முன்தான் 'பார்த்தாயா என் சாமர்த்தியத்தை'யென்று இவனை வேலைக்கு வைத்தவன் பார்வையாலேயே வெளிப்படுத்திச் சென்றதாக எண்ணிக் கொண்டிருந்த இளங்கோவுக்கு குள்ளத்தோற்றத்துடனும் குள்ளக் கால்களுடமிருந்த இந்த எஸ்கிமோவின் இந்த நேரிடையான பதில் சிறியதொரு அதிர்ச்சியினையுமேற்படுத்தியது. எவ்வளவு இயல்பாக இவனால் இன்னொருவனின் முதுகில் குத்துவதை வெளிப்படையாகக் கூற முடிகிறது.

இவனது அதிர்ச்சியினைப் பார்த்த ஹென்றி கேட்டான்: "என்ன பயந்து விட்டாயா?"

இளங்கோ: "இல்லை. இவ்விதன் வெளிப்படையாகவே கூறுகின்றாயே. அதுதான் சிறிது அதிர்ச்சி. எல்லோரும் இவ்விதமான விடயங்களைக் களவாகச் செய்வார்கள். நீயோ எம்மில் இவ்வளவு நம்பிக்கை வைத்து வெளிப்படையாகக் கூறுகிறாயே."

ஹென்றி: "அதிகமாகப் பாவம் புண்ணியத்தை இங்கு பார்த்து விடாதே. அவ்விதம் பார்ப்பவனானால் உன்னால் இந்த நகரில் எதுவுமே செய்ய முடியாது. நண்பனே! இது நாய் நாயைத் தின்னும் உலகம். மறந்து விடாதே!"

அச்சமயம் மேலும் சில பாவனையாளர்கள் வந்து விடவே ஹென்றி அவர்களைக் கவனிக்கச் சென்று விட்டான். அச்சமயம் பார்த்து அருள்ராசா இளங்கோவிடம் கூறினான்: "காய் பொல்லாத காய்தான் எமனையே பச்சடி போட்டு விடுவான் போலை".


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R