சிறுகதை: நிழல் துரத்தும் நிழல்கள்!பயணிகளின் கைகளில் பதினொறாம் விரலாக ஆண்ட்ராய்டு முளைத்திருந்தது. அவர்கள் முகநூல், வாட்ச்அப் இரண்டில் ஒன்றில் மூழ்கி தன்னைத் தானே கரைத்துகொள்வதாக இருந்தார்கள். பலரின் முகநூல் , வாட்ச்அப் புரோபைல் படமாக ஆஷிபா என்கிற காஷ்மீர் சிறுமியிருந்தாள். 

பலரின் கட்டை விரல்கள் ஆண்ட்ராய்டு திரையை கீழிருந்து மேல் நோக்கித் தள்ளுவதாக இருந்தது. ஒரு ஆணின் கட்டளைக்கு பயந்தோடும் பெண்ணைப்போல திரை கீழிருந்து மேல் நோக்கி ஓடியிருந்தது. ஓடிய அத்தனை வேகத்திலும் ஆஷிபாவின் முகம் மட்டும் தனித்து தெரிந்தது. கத்தரிப்பூ ஆடையில் ஆங்காங்கே மஞ்சள் நிறம் தெறிக்க ஆஷிபா தரையில் குப்புறக் கிடந்தாள். அது வெறும் புகைப்படம்தான் என்றாலும் அப்படம் பலரையும் இரங்க வைக்கவும், கோபமூட்டவும் செய்திருந்தது. 

ஆஷிபா சிரித்த முகமாக இருந்தாள். பால்வடியும் முகம். கன்னங்கள் இரண்டும் தங்கக்கின்னங்களாக இருந்தன. உதடு நிறையும் சிரிப்பு. ரோஜா இதழ் சருமம். ஒன்றிரண்டு பேர் ஆஷிபாவை திரையில் நிறுத்தி பார்த்தவண்ணமிருந்தனர். சிலர் ‘ இச்...’ கொட்டிக்கொண்டார்கள். 

ஒருவரின் கையில் தினசரி இருந்தது. அதை நீள்வாக்கில் மடித்து ஆஷிபா முகம் தெரியும்படியாக வைத்துக்கொண்டு அவள் குறித்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருந்தார். ஒரு பெரியவர் தினசரியை எட்டிப்பார்த்துவிட்டு சொன்னார் ‘ ஏன்தான் இவள் குதிரையை தனி ஒருவளாக நின்று மேய்த்தாளோ...?’. அவருக்கானப் பதில் பின் இருக்கையிலிருந்து வந்தது. அப்பதிலைச் சொன்னவர் ஒரு பெண்ணாக இருந்தார் ‘ ஏன் மேய்த்தாலாம்..., அப்பன் பாக்கெட்டை நிரப்பத்தான்...’ 

முன்னவர் பின்னவரைத் திரும்பிப்பார்த்தார். ‘ என்ன இருந்தாலும் அவள் பெண். குழந்தை வேறு இல்லையா...?. காலம் கெட்டுக்கிடக்குது. ஒரு பெண், அதுவும் சிறுமி ஒத்தையாளாக குதிரை மேய்க்கப் போயிருக்க வேண்டியதில்லை என்கிறேன்...’ 

‘அதுக்காகப் போகிற இடமெல்லாம் பொம்பளைப்பிள்ள யாரையேனும் துணைக்கு அழைச்சிக்கிட்டேவா போகமுடியும்...’

‘ பின்னே வேண்டாமா...?’

‘ இப்ப இவ செத்து குழிக்கு போயிருக்காள், அவளுக்குத் துணையா யாரை அனுப்பி வைக்கிறதாம்..? ம்.....’ அவள் கேட்டக் கேள்விக்கு பெரியவரிடம் பதில் இருந்திருக்கவில்லை. கைகளைப் பிசைந்தபடி நின்றுகொண்டிருந்தார்.  பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை. இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் சாவகாசமாக உட்கார்ந்து அடுத்தவர்களின் மேல் தூங்கிவிழுவதும், அலைபேசியில் மூழ்குவதுமாக இருந்தார்கள். பேருந்தில் ஒரு பழையப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. நடத்துநர் பின் படியில் நின்றுகொண்டு ஒரு காலை பேருந்திற்குள்ளும் மற்றொரு காலை படியிலும் வைத்துகொண்டு பேருந்தில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த பாடலுக்கு விரல்களால் பேருந்தின் மேற்கூரையில் தட்டியபடி நின்றுகொண்டிருந்தார். நடத்துநர் காக்கி சீருடை அணிந்திருந்தார். காதில் சொருகியிருந்த ஒரு பேனா. தோளில் நீண்டுத் தொங்கிக்கிடந்தது ஒரு சில்லறைப் பை. பேருந்து ஒரு குலுங்கு குலுங்கி, திசை கிழிய சென்றுகொண்டிருந்தது. தனியார் பேருந்து அது. பேருந்துக்குள் வெளிச்சம் பகல் போல் பாய் விரித்திருந்தது. 

சுப்ரியா, ஒரே இடத்தில் நின்றபடி , சில்வர் கம்பியை இறுகப்பிடித்துக்கொண்டு சன்னல் வழியே பேருந்துக்கும் பின்னால் ஓடும் மரம்,செடி, கொடிகளைப் பார்ப்பதும், பயணிகளின் அலைபேசியைக் கவனிப்பதுமாக நின்றாள். அடுத்த பேருந்து நிறுத்தத்தில் அவள் உட்காருவதற்கு ஓர் இடம் கிடைத்திருந்தது. பின் இருக்கையிலிருந்து நான்காவது இருக்கையாக அவ்விருக்கை இருந்தது. அவள் தன் மடியில் பையை வைத்துகொண்டு இருக்கையின் நுனியில் உட்கார்ந்திருந்தாள். பை நெஞ்சோடு அணைந்திருந்தது. அவள் சன்னல் வழியே தான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதா, இறங்கிய வேண்டிய இடத்தில் நடத்துநர் விசில் கொடுப்பாரா.., எனப் பார்ப்பதுமாக இருந்தாள். 

அவளுக்கும் அருகில் ஒரு தாய், மடி குழந்தையுடன் உட்கார்ந்திருந்தாள். அவள் குழந்தையுடன் பாதித்தூக்கத்தில் இருந்தாள் . சுப்ரியா மெல்ல எழுந்தாள். முன்பகுதியை எட்டிப்பார்த்தாள். அவளுக்குத் தெரிந்த, உறவினர் யாரேனும் பேருந்திற்குள் இருக்கிறார்களா எனத்தேடினாள். அவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. 

நடத்துநர் சத்தமிட்டார் ‘ பாப்பா, உட்காரு. இன்னும் ரெண்டு ஸ்டாப் இருக்கு...’

எழுந்து நின்றிருந்தவள் சட்டென உட்கார்ந்தாள். நடத்துநரைப் பார்த்தாள். நடத்துநருக்கு அவளது மாமா வயதிருக்கும். அவர், வாய் விசிலோடு அவளைப் பார்த்து சிரிப்பதும், மாட்டு வண்டிக்கு விசில் கொடுத்து பேருந்தை வழி நடத்துவதுமாக இருந்தார். பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. பேருந்தில் நின்றிருந்த இரண்டு பேர் பேருந்திலிருந்து இறங்க, ஒருவர் ஏறியிருந்தார். நடத்துநர் விசில் கொடுத்ததும், பேருந்து ஒரு குலுங்கிக் குலுங்கி அவ்விடத்திலிருந்து கிளம்பியது. 

நடத்துநர் பின் படியிலிருந்து முன் படிக்கு வந்தார். ஒரு பாடல் முடிந்து மறுபாடல் வந்தது. அவளுக்குப் பிடித்தமானப் பாடலாக அது இருந்தது. ‘பழைய சோறு பச்சை மிளகாய்...’.எப்பொழுது தொலைக்காட்சியில் அப்பாடல் ஒளிபரப்பானாலும் தன் இரு கைகளையும் இடுப்பிற்குக் கொடுத்து கண் கொத்திப் பாம்பெனப் பார்க்கக்கூடியவள் அவள். நயன்தாராவின் கண்கள் கிறங்குவதைப்போல கிறங்குவாள். தலையைச் சிலுப்பி ஆடுவாள். அன்றைய தினம் அப்பாடலை ரசிக்கும் படியான சூழல் அவளுக்கு வாய்த்திருக்கவில்லை. 

அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்திருந்தது. நடத்துநர் ‘ ஆம், நிற்கட்டும் ’ என்றதும் பேருந்து சக்கரங்களைத் தேய்த்துகொண்டு நின்றது. நடத்துநர், பின் பக்கமாகத் திரும்பி ‘ பாப்பா, நீ இறங்க வேண்டிய எடம்....’ என்றதும் அவள் பையை எடுத்துக்கொண்டு பின் படிக்கு ஓடி தாவிக்குதித்து இறங்குவதற்கு முன்பாக வெட்டவெளியைப் பார்த்தாள். 

பேருந்து நிழற்குடைக்கு வெளியே யாரோ ஒருவர் நிற்பது தெரிந்தது. அவளது அப்பாவாகத்தான் இருக்க வேணும்...? படியிலிருந்து வேகமாகக் குதித்தவள், அவ்வுருவத்திற்கு அருகில் சென்று பார்த்தாள். ஏமாற்றம் அவளது முகத்தில் ‘சப்...’ பென அறைந்தது. 

‘ அ...ப்...’ பிற்பகுதியைத் தொண்டைக்குள் மெல்ல விழுங்கிக்கொண்டாள்.

அந்தி நன்கு இருட்டியிருந்தது. 

அப்பா எப்பொழுது அவளை அழைக்க வந்தாலும் அவர் பேருந்தின் படி வரைக்கும் வரவே செய்வார். கீழே நின்றபடி அவரது கை அவளை நோக்கி நீளும். ஒரு கை அவளைத் தாங்கவும் மற்றொரு கை அவளது பையைத் தாங்கவும் செய்யும். ஆனால் இன்று...? 

பேருந்தின் வெளிச்சம் சன்னல் வழியே பாய் விரித்திருந்தது. அவ்வெளிச்சத்தில் நின்றபடி அப்பாவைத் தேடினாள். அப்பா இல்லாத பேருந்து நிறுத்தத்தை நினைக்கையில் அவளது கண்கள் இருண்டு வந்தன. கண்களைத் தேய்த்துக்கொண்டு விழித்துப்பார்க்கையில் அவளை ஏற்றி வந்திருந்த பேருந்து மொத்த வெளிச்சத்தையும் துடைத்து அள்ளிக்கொண்டு அவ்விடத்தைவிட்டுச் சென்றிருந்தது. 

அவளது கண்கள் தூரத்தில் புள்ளியாகத் தெரிந்த பேருந்தையும், அப்பா வந்திருக்க வேண்டித் திசையையும் பார்ப்பதாக இருந்தாள். இரு திசைகளும் ஏமாற்றத்தின் வெறுமையையே முகத்தில் பூசியிருந்தது. அவள் தன் பையை மார்போடு அணைத்துகொண்டு பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் ஒடுங்கினாள். அவளுக்குள் துடித்த இதயம் காதிற்குள் எதிரொலித்தது. 

அப்பா, ஏன் இன்றைக்கு வரவில்லை, ஏழு மணி பேருந்துக்கு வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தாரே, எப்பொழுதும் பேருந்து வருவதற்கு முன்பே, சைக்கிளுடன் நிற்கும் அப்பா, இன்றைக்கு ஏன்...? அவளுக்கு அழுகையினூடே நடுக்கம் வந்திருந்தது.

இதுநாள் வரைக்கும் அப்பா அவளை அழைக்க வராமல் இருந்ததில்லை. இன்றைக்கும் எப்படியேனும் வரவே செய்வார். அப்பா வர வேண்டிய திசையைப் பார்த்து நின்றுகொண்டிருந்தாள். அவளுக்கு வியர்த்துக்கொட்டியது. கால்கள் தடதடத்தன. 

தூரத்தில் ஒரு சைக்கிள் வருவதைப்போலிருந்தது. ஆம், சைக்கிள்தான்! அப்பாவாக இருக்குமோ. இருக்கலாம்...அவளது கண்கள் சைக்கிளின் மீது குவிந்தன. சைக்கிள் தார்சாலையில் ஏறி பேருந்து சென்ற திசையில் திரும்பியது. அவளுக்கு ‘இச்’ என இருந்தது.

வேறு யாரேனும் தெரிந்தவர்கள் வருவார்களா....? ஒரு மோட்டார் சைக்கிள் அவளைக் கடந்து சென்றது. அவ்வெளிச்சத்தில் எதிர்புறம் நின்றுகொண்டிருந்த நபரைப்பார்த்தாள். அவர் நீண்ட தாடியுடன், வாயில் நெருப்பிலாத பீடியை வைத்துகொண்டு நின்றுகொண்டிருந்தார். அவரது முகத்தை ஆழ்ந்து பார்க்க முடிந்திருக்கவில்லை. 

யாரோ...? இதற்கு முன் எங்கேனும் பார்த்திராத நபராக அவர் இருந்தார். அவ்வுருவம் அவளைப் பயமூட்டுவதாக இருந்தது. 

‘ அப்பா, சுப்ரியா பேசுறேன்கப்பா...’

‘ சொல்லடி கண்ணு...’

‘ வீட்டுக்கு வாறேன்ப்பா...’

‘ எப்படிடி வருவே...? அங்கேயே இரு. நாளைக்கு வந்து உன்ன நான் அழைச்சிக்கிட்டு வாறேன்...’

‘ அப்பா, ஊருக்குள் வருகிற பஸ்ல, சித்தி என்னை ஏற்றி விடுறாங்களாம். நீங்க ஏழு மணிக்கு பஸ் ஸ்டாப்புக்கு வந்திருக்கப்பா...’

‘ ஒத்தையாளாவா...?’

‘ அப்பா, நான் என்ன இன்னும் சின்னப்பிள்ளையா, சிக்ஸ்த் முடிச்சி செவன்த் போகப்பேறன்க்கப்பா. ஸ்கூலுக்கு நான் தனியாதானே போயிட்டு வாறேன்....’

‘ இருந்தாலும்....’

‘ பஸ்லதானேங்கப்பா, வாறேன்....’

‘ சரி, பத்திரமா பஸ் ஏற்றிவிடச்சொல்லி வந்திரு. நான் ஸ்டாப்புல நிற்கேன்...’

அதை நினைக்கையில், வருகை தந்திராத அப்பா மீது கோபமும் விரக்தியும் வந்தது. 

எவ்வளவு நேரம்தான், ஒரே இடத்தில் நின்றுகொண்டிருப்பதாம்...? நடந்தே வீட்டுக்குச் சென்றுவிடலாமா என யோசித்தாள் அவள். அவளது கால்கள் முன்னே இழுக்க, அவளது உடல் பின்னே இழுத்தது. மெல்லத் திரும்பி எதிரில் நின்றுகொண்டிருந்த உருவத்தைப் பார்த்தாள். அவ்வுருவம் அந்த இரவில் அவளைப் பார்ப்பதைப் போலிருந்தது.

அவன் என்னை நோக்கி வந்துவிடுவானோ...? வந்தால்..., நான் ஓடுவதா, அழுவதா...? மனதிற்குள் என்னவோ பிசைவதைப்போலிருந்தது. 

தனியாக நின்றுகொண்டிருந்த அவளை நோக்கி ஒரு நாய்க்குட்டி வந்தது. மெல்ல குரைத்துகொண்டு அவளை உரசி, அவளது காலை ஒரு முறை நுகர்ந்து பார்த்துவிட்டு சாலையில் தனியே ஓடிக்கொண்டிருந்தது. அந்நாய்க்குட்டியைப் பார்க்க அவளுக்கு ஏக்கமாக இருந்தது. இந்தக் குட்டிக்குத்தான் என்னவொரு தைரியம்...? இரவில், பயமில்லாமல், தனியாக....! 

அந்நாய் குட்டி ஓடி மறைந்த சற்று நேரத்தில் ஒரு சிறுவன் சாலையில் குறுக்கிட்டான். அவன் மேல் சட்டையில்லாமல், வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டு பேருந்து வந்த திசையில் நடையும் ஓட்டமுமாக ஓடிக்கொண்டிருந்தான்.

அச்சிறுவனை நினைக்க அவளுக்கு வியப்பாக இருந்தது. என்னை விடவும் இளையவன். சிறுவன். அவன் தனியாக, இரவு என்று கூட பாராமல் அவனால் நடக்க முடிந்திருக்கிறதே, அவனை நினைக்க அவளுக்குள் உத்வேகம் வந்தது. பையை நெஞ்சோடு அணைத்துகொண்டு கால்களை இரண்டடி நீட்டி வைத்தாள். அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவளுக்குள் யாரோ நடப்பதைப்போலிருந்தது. அவளுக்குள் துடித்த இதயத் துடிப்புதான் அப்படியாக எதிரொலித்தது. ஆனாலும் அவள் நடக்கவே செய்தாள். 

பேருந்து நிறுத்தத்திலிருந்து அரை மைல் தூரம் நடந்திருந்தாள். இன்னும் அவள் இரண்டு மைல் தூரம் நடந்தாக வேண்டும். அவள் நடப்பது தார்சாலைதான் என்றாலும் சாலை கொப்புளமும், புண்ணுமாக இருந்தது. சாலையின் இரு புறமும் முந்திரிக்காடு. அதைத்தாண்டினால் தைல மரக்காடு. அதைத்தாண்டினால் மானாவாரியான வேளாண்மைப்பூமி. அதிலிருந்து ஒத்தையடி பாதை வழியே மேலத்தெரு சென்று, வடக்குபக்கமாகத் திரும்பி, வாரிக்குள் இறங்கி ஏறினால் கீழத்தெரு. அங்கேதான் அவளது வீடு இருக்கிறது. 

அவள் போகவேண்டிய தூரமும், திருப்பங்களும் கண்முன்னே வந்து நின்றது. மரங்களின் அசைவுகளும், சருகுகளின் சலசலப்பும் கேட்டபடி இருந்தன. அவள் எதையும் காதினில் வாங்கிக்கொள்ளவில்லை. எப்பக்கமும் திரும்பிப்பார்க்கவில்லை.குனிந்தத் தலை நிமிராமல் நடந்தபடி இருந்தாள். அவள் நடக்கவா செய்தாள்....? நடையின் ஓட்டமாக மனதிற்குள் அப்பாவை நினைத்துகொண்டு நடப்பதாக இருந்தாள். அவள் முந்திரி காட்டைக் கடந்து, தைல மரக்காட்டிற்குள் நுழைகையில் அவளை இறக்கிவிட்டு சென்ற பேருந்து நினைவிற்கு வந்தது. பேருந்திற்குள் தினசரியில், வாட்ச்அப்பில், முகநூலில் சிரித்த முகமாகவும், கனிந்த கண்களுமாக இருந்த ஆஷிபா நினைவிற்கு வந்தாள். அவளது சிரித்த முகம், ரோஜா இதழ்களை ஒத்த கன்னம், உருண்டு , திரண்ட கருவிழிகள்... அவளை திக், திக்...என பயம் மூட்டியது. 

அவள் அத்தனை வேகமாக நடந்தாள். ஆஷிபாவின் நினைவுகள் அவளுக்குள் கலவர மூட்டின. 

‘ என்ன இருந்தாலும் அவள் பெண் குழந்தை இல்லையா, தனியாக போயிருக்கக் கூடாது...’

பேருந்து உரையாடல்கள் செவி வழியே நெஞ்சிற்குள் இறங்கியது. அவள் உடம்பு அவளுக்குக் கனத்தது. அந்நேரம் வரைக்கும் விரைவாக எடுத்து வைக்க முடிந்த கால்களை விரைந்து எடுத்து வைக்க முடிந்திருக்கவில்லை. குற்றவுணர்வு குறுகுறுத்தது.

நான் தனியாக வீட்டிற்குப் பயணம் செய்திருக்கக்கூடாது தானோ...? அப்பாவிற்காக எந்நேரமானாலும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கத்தான் வேண்டுமோ...? 

ஒரு வேளை தனியாக நின்றிருந்தால், யாரேனும் பேச்சு கொடுக்க முன் வந்திருக்கவே செய்வார்கள்... அப்படியாகப் பேச்சுக்கொடுத்தால் அவர்களுடன் பேசலாமா...? நான் கொண்டு போய் உன் வீட்டில் விடுகிறேன் என அழைத்தால் நம்பி அவர்களின் வாகனத்தில் ஏறலாமா...? அதை நினைக்க அவளுக்கு மயக்கம் வந்தது. இன்னும் கொஞ்சம் தூரம்தான். முந்திரி கடந்தாகி விட்டது. அடுத்து தைலக்காடு. அதைத் தாண்டினால் வீட்டை நெருங்கியது மாதிரிதான்... முன்னே விடவும் வேகமாக நடந்தாள். 

அவள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியின் அரவம், அவளுக்குள் துடித்த இதயம், இத்துடன் கூடவே ஒரு காலடி அரவம் பின் தொடர்வதைப் போலிருந்தது. நடையின் வேகத்தைச் சற்று குறைத்து, காதினை மெல்ல பின்பக்கமாகத் திருப்பி, அரவத்தைக் கவனித்தாள். ஓர் ஆணின் ஆளரவமாக இருந்தது. 

அவளுக்கு ‘ திக்..’ என இருந்தது. 

பேருந்து நிழற்குடையில் என்னை துறுதுறுவெனப் பார்த்த, தாடி வைத்த, பீடி குடித்த அந்த உருவமாகத்தான் இருக்குமோ...? அவளுக்குள் யாரோ உதைப்பதைப்போலிருந்தது. அவன்தான், அவனேதான்....!. நடந்தவள் மேலும் வேகமாக நடந்தாள். அவளது வேகத்திற்குப் பின்தொடர்ந்த நடையின் வேகம் மேலும் கூடியிருந்தது. 

அவளுக்கு கீச், மூச்...வாங்கியது. தொண்டைக்குள் என்னவோவொன்று விக்கியது. கணுக்காலுக்கும், கெண்டைக்காலுக்கும் இடையில் ‘விண்ண்...விண்ண்...’ எனத் தெறித்தது. உடம்பு வியர்த்துக்கொட்டியது. 

இந்த இருட்டிற்குள் கண்ணைத் திறந்துகொண்டு நடப்பதும், மூடிக்கொண்டு நடப்பதும் ஒன்றுதான். கண்களை இறுக மூடிக்கொண்டு நடந்தால் பயம் சற்று தணிவதைப்போலிருந்தது. கண்களை இறுக மூடி பாதையின் போக்கை மனதிற்குள் உள்வாங்கி, நடக்கத்தொடங்கினாள். அவளைப்பின்னால் துரத்தி வந்திருந்த நடை மேலும் நெருங்கியிருந்தது. இதற்கு மேலும் என்னால் ஓட முடியுமா, ஓட கால்கள் இருந்தாலும் உடம்பில் பலம் இருந்திருக்கவில்லை. 

என்ன செய்வதாம், இரு காதுகளையும் இறுகப்பொத்திக்கொண்டு உரக்கக் கத்தவேண்டும் போலிருந்தது. கத்துவதால் என்ன வந்துவிடப்போகிறது...? யார் ஓடி வந்து உதவப்போகிறார்கள், என நினைத்தவள், அவளது பைக்குள் ஜியோமண்ட்ரி பாக்ஸ் இருந்தது. அதற்குள் இரு ஊசிகளுடைய கவராயம் இருப்பது நினைவிற்கு வந்தது. பாக்ஸை வேகமாக எடுத்து, திறந்து அதிலிருந்த கவராயத்தை எடுத்து குத்துவதற்கு இலகுவாக வைத்துகொண்டு நடையின் வேகத்தை மேலும் கூட்டினாள். 

அவளுக்கு முன்னே விடவும் பயம் கூடியிருந்தது. நடையை அதற்கு மேல் விரைந்து எடுத்து வைக்க முடியவில்லை. உந்தி எடுக்கும் காலை தரையில் வைக்கமுடியவில்லை. வைத்தக்காலை எடுக்க முடியவில்லை. வலியால் கெண்டைக்கால் கடுத்தது. 

அவளைப் பின் தொடர்ந்து வந்திருந்த காலடி அவளை நெருக்கியிருந்தது. அவளால் இனி ஓடவோ, நின்று, தன் மீது படரவிருக்கும் உருவத்தின் மீது எதிர்த்தாக்குதல் புரியவோ அவளிடம் சக்தி இருந்திருக்கவில்லை. தன் கையிலிருந்தப் பையை புதருக்குள் விட்டெறிந்து, இரு கைகளையும் காதிற்குக் கொடுத்து, தரையில் மண்டியிட்டு தொண்டைக்குள் சிக்கிய விம்மலைக் குடைந்து கத்தலாமென வாயைத் திறந்தாள். 

அவளை பின்தொடர்ந்து வந்த காலடி தடங்கள் சற்றும் நிற்கவில்லை. நின்று என்ன, ஏதுவென்று பார்க்கவில்லை. முன்னே விடவும் படு வேகத்தில் அவளிடமிருந்து விலகி, முன்னே சென்று ஒரு புள்ளியாக மறைந்துகொண்டிருந்தது. 

சுப்ரியா, முகத்தை மூடியிருந்த கைகளை எடுத்து, தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கு அழுகை நெஞ்சுடைத்து வந்தது. 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R