- முனைவர் ப. சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), சங்ககிரி, சேலம் மாவட்டம். -சங்க இலக்கியங்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் சிறப்பு வாய்ந்த நற்றிணையில் அன்றில், அன்னம், ஈயல், காக்கை, காட்டுக்கோழி, கிளி, குயில் குருகு (நாரை), குருவி, கூகை, கொக்கு, கோழி (வாரணம்), சிச்சிவி (சிரல்), பருந்து (எருவை), புறா, மயில், மின்மினி, வண்டு (தும்பி, சுரும்பு), வாவல் உள்ளிட்ட 18 பறவையினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை உவமை, உள்ளுறை, இறைச்சி போன்ற நிலைகளில் இப்பறவையினங்களின் செயல்களை மனிதச் செயல்களோடு ஒப்புமைப்படுத்துகின்ற பாங்கினை நற்றிணையில் அறிய முடிகிறது. இத்தகைய பறவையினங்கள் எவ்வாறு மனித செயல்களோடு தொடர்புப்படுத்தப்படுகின்றன என்பதை ஆராயும் நிலையில் இக்கட்டுரை அமைகின்றது.

1. குருகு
நற்றிணையில் குருகைப் பற்றியப் பாடல்கள் 28 ஆகும். இதுவே அதிகமாகப் பாடப்பட்டுள்ள பறவையினமாகும். தன்னுடைய கூட்டத்தோடு கூடியிருக்கின்ற குருகினைப்பார்த்து நானும் உன்னைப்போல் அன்புடன் தலைவனோடு சேர்ந்திருக்க முடியவில்லையே என்று வருந்துதல், குருகிடம் தன் குறையினைத் தலைவனிடம் எடுத்துக்கூறுவாயாக என்று கூறுதல் என்ற இரு நிலைகளில் குருகிற்கும் தலைவிக்குமான உறவு நிலையில் பாடல்கள் நற்றிணையில் அமைந்துள்ளன.   

தலைவி ‘நாரையே நீயேனும் சென்று, என் குறையை அவர் உணரும் வண்ணம் கூறுவாயாக’ என்று தூதனுப்புகிறாள். ‘கரிய கால்களை உடைய வெண்ணிறக் குருகே நின் சுற்றத்தோடும் சென்று கடல் நீரிடத்தே மேய்ந்துவிட்டுத் தாவிப் பறத்தலினை விரும்பினையாய் உள்ளனை. ஆயினும், தூய சிறகுகளையுடையவும், மிக்க புலவைத் தின்னுபவும் ஆகிய நின் சுற்றத்தோடும் சிறிது நேரம் தங்கியிருந்து, என் சொற்களையும் கேட்பாயாக. சிறுமையும் புன்மையும் கொண்ட இந்த மாலைக் காலமானது எனக்குப் பெரு வருத்தத்தைத் தருகிறது. அதனை வேறாகக் கருதுகின்ற மனப்போக்கினைக் கொள்ளாதே, இதனைக் கேட்பாயாக. கொய்தற்குரிய குழையானது தழைத்திருக்கின்ற இளைதான ஞாழலானது, தெளிந்த கடலலையின் நீல வண்ணப் புறத்தினைத் தடவிக் கொடுக்கும், தாழை மரங்களை வேலியாகவுடைய நும்முடைய துறைக்கு உரிமையுடையவர்க்கு, என் குறைதான் இத்தன்மைத்தென அவர் உணரும்படியாகச் சென்று சொல்வாயாக’ என்று நாரையிடம் கூறுகிறாள். இதனை,

“கருங்கால் வெண்குருகு! எனவ கேண்மதி@
பெரும்புலம் பின்றே, சிறுபுன் மாலை@
அது நீ அறியின், அன்புமார் உடையை@
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என்குறை
இற்றாங்கு உணர உரைமதி”  (நற்றிணை: 54)

என்ற அடிகள் உணர்த்துகின்றன. இன்றேனும் என் குறையை தலைவனிடத்து எடுத்துக் கூறுவாயாக என்று கூறுகிறாள்.‘வெள்ளிய சிறு குருகே! வெள்ளிய சிறு குருகே! நீர்த் துறையிடத்தே ஒலித்தற்குப் போய்வந்த வெள்ளாடையின் தூய மடியினைப் போல விளங்கும், வெண்ணிறம் ஒளி செய்யும் சிறகினையுடைய வெண்மையான சிறு குருகே! அவருடைய ஊராகிய அவ்விடத்து இனிதான புனலே இவ்விடத்தாராகிய என் பரக்கின்ற, கழனியையுடைய நல்ல ஊரிடத்தாராகிய என் காதலருக்கு, என்னுடைய கலன்கள் நெகிழ்ந்து வீழ்கின்ற துன்பத்தை இதுகாறும் சொல்லாத குருகே, அவர் ஊரிடத்திருந்து எம் ஊரிடத்திற்கு வந்து, எம்முடைய உண்ணும் நீரினையுடைய பொய்கைத் துறையிடத்தே புகுந்து துழாவிச் சினைகொண்;ட கெளிற்றுமீனைத் தின்றாயாய், மீண்டும் அவரது ஊருக்கே நீயும் செல்கின்றாய். அவரைப் போலவே பெற்ற உதவியை மறக்கும் அன்பினை நீயும் உடையையோ? அல்லது, பெரிதும் மறதியை உடையையோ’ என்று தன் குறையினைக் குருகிடம் எடுத்துரைக்கின்றாள். இதனை,

சிறுவெள்ளாங் குருகே! சிறுவெள்ளாங் குருகே!
துறைபோகு அறுவைத் தூமடி அன்ன
நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே!
எம்ஊர் வந்துஉம் உண்துறைத் துழைஇ,
சினைக்கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி,
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ,
ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே?” (நற்றிணை: 70)

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

2. நாரை
குருகு என்பதும் நாரை என்பதும் ஒன்றே. அதனுடைய வகையினை வேறுபடுத்துவதற்காக இரண்டு சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம். நற்றிணையில் குருகு என்று பயன்படுத்தும்போது தலைவி அது கூடியிருக்கின்ற தன்மையைக் கூறுவதாகவும், நாரை என்று பயன்படுத்தும்போது தன் பிரிவு வருத்தத்தை எடுத்துரைப்பதாகவும் பாடல்கள் அமைந்துள்ளன.

தலைமகள் தலைமகனை விரைவில் திருமணம் செய்ய விரும்புகிறாள். தலைவன் காலம் தாழ்த்துகிறான்.  தலைமகள் தானுறு துயரைத் தானே தலைமகனுக்கு எடுத்துச் சொல்லுவது என்பது பெண்மை இயல்பு ஆகாமையினால் அதனைக் காப்பதற்கு நாரையினை உவமையாகக் கூறி தன் கருத்தினை வெளிப்படுத்துகிறாள். ‘பசியது மிகுதியாலே இரைதேடி வருதற்குச் செல்லுதலைத் தான் விரும்பியபோதும், தலைச் சூலாலே உண்டாகிய இயங்கமாட்டாத தன் வருத்தத்தினாலே, கானற் கழிக்குத்தான் செல்லாது, கழனிக் கண்ணேயே தங்கியிருந்துவிட்டது வளைந்த வாயை உடைய நாரையின் பேடை ஒன்று அதற்கு உடல் வளைந்த நாரைச் சேவலானது, கடலிடத்து மீனைப் பற்றிக் கொண்டுபோய் அன்போடுங் கொடுக்கும். அத்தகைய் மென்னிலமான கடற்கரைத் தலைவனைக் கண்டதும் பலகால் நாம் ஒளித்துக் கொள்ள முயலவும், அதற்கு உட்படாதே கைகடந்து, நின் மையுண்ட கண்களிலிருந்து வெளிப்படுகின்ற கண்ணீரே நம் வேட்கை நோயை எடுத்துச் சொல்வதாயிற்றே! இனி யாமும் யாதுதான் செய்வோமோ? என்று நாரையிடம் தன் வருத்தத்தைக் கூறுகிறாள். இதனை,

“............................................................. இரைவேட்டு
கடுஞ்சூல் வயவொடு கானல் எய்தாது
கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு,
முடமுதிர் நாரை கடல்மீன் ஒய்யும்” (நற்றிணை:263)

என்ற பாடல் அடிகளால் அறியலாம்.

3. கிளி
நற்றிணையில் கிளியைப் பாசினம், கிள்ளை என்ற பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. கிளியைப் பற்றிய பாடல்கள் 20 ஆகும். குருகிற்கு அடுத்தாற்போல அதிகமாகப் பாடப்பட்டுள்ள பறவை கிளியே. நற்றிணையில் கிளி தலைவி தலைவனிடம் தூது போகுமாறு கூறுதல், கிளிக்கு உள்ள பாசம் தலைவனுக்கு இல்லையே என்று வருந்துதல், கிளி தன் சுற்றத்தோடு இணைந்திருப்பதைப்போல் தம்மால் இணைந்திருக்க முடியவில்லையே என்று வருந்துதல் என்ற நிலைகளில் களிக்கும் தலைவிக்குமான உறவு நிலையில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வரைவதற்காக பொருள் தேடி பிரிந்தானாகிய காதலனின் வரவு குறித்த எல்லையைக் கடந்து நீட்டித்தலால், காதலியின் காமநோய் வரை கடந்து பெருகுகிறது. நலிவும் பெரிதாகின்றது. அவள் கிளியை நோக்கித் தன் குறையை, ‘இம் மலைக்கண்ணுள்ள கானக் குறவரது இளமகளாகிய நின் காதலி, மீட்டும் தினைப்புனம் காக்கும் நிலையினளாக ஆயினள்’ என்று அம்மனைக்கு உரியவராகிய அவரிடத்தே சென்று சொல்லுவாயாக’ என்று, கைதொழுது வேண்டுகிறாள். இதனை,

“கொடுங்குரற் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி!
அஞ்சல் ஓம்பி, ஆர்பதம் கொண்டு,
நின்குறை முடித்த பின்றை, என்குறை
செய்தல் வேண்டுமால், கைதொழுது இரப்பல்” (நற்றிணை: 102)

என்று எடுத்துரைக்கிறாள். கிளிக்குள்ள பாசமும் அருளும்கூட தலைவனிடத்து இல்லையே என்று வருந்துகிறாள் தலைவி. தலைவியைக் களவிற் கூடிய தலைவனும், தன் சுற்றத்தார்க்குச் சொல்லி, சான்றோர் குழுவினருடன் வரைந்து வந்து தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்றும் எண்ணுகிறாள். (நற்றிணை:304)

4. புறா
நற்றிணையில் புறா பற்றிய பாடல் 7 ஆகும். வீட்டில் தன் இணையோடு இருக்கின்ற புறாவினைப் பார்த்த தலைவி உங்களைப் போல் என்னால் மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை, ஏனெனில் தலைவன் என்னைப் பிரிந்து சென்றுவிட்டான் என்று தலைவனின் பிரிவினை எண்ணி வருந்துதல், புறாவினை இணைப்பைக் கண்டு வருந்துதல் என்ற நிலைகளில் புறாவிற்கும் தலைவிக்குமான உறவு நிலையிலே இப்பாடல்கள் அமைந்துள்ளன. புறாவினை உவமையாகக் காட்டக்கூடிய நிலைகளில் பாடல்கள் அமைந்துள்ளன.

செல்வர் வகையமர் நல்லில் அகவிறை உறையும் வண்ணப்புறாச் சேவல் பொருளை நாடாது தன் துணையைக் கூட விரும்பியதாய் அழைக்கும் குரலைக் கேட்டதும், தலைவி தன்னருகே இல்லாத தலைவனின் செயலை நினைத்து வருத்தமுற்று நலிகிறாள். செல்வர்களது வகையமைந்த நல்ல நுமது வீட்டின் உள்ளிறைப்பில் தங்கியிருந்து வாழும் வண்ணப் புறாக்களின் செங்கால்களை உடைய சேவலானது தான் விரும்பிய பெண் புறாவைக் கூட்டத்திற்கு அழைத்திருக்கும் செயலறவு தோன்ற எழுகின்ற அந்தக் குரலொலியை, நும்மை அருகிலற்றாளாய்த் தனிமையுற்றிருக்கும் காலத்தே வருத்தத்துடன் கேட்ட பொலிவு பெற்ற கூந்தலை உடையாளான இவள் பெரிதும் வருந்துவாள்’ என்று தோழி குறிப்பிடுகிறாள். இதனை,

“வகைஅமர் நல்இல் அகஇறை உறையும்
வண்ணப் புறவின் செங்காற் சேவல்
வீழ்துணைப் பயிரும் கையறு முரல்குரல்
நும்இலள் புலம்பக் கேட்டொறும்” (நற்றிணை: 71)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.

5. காக்கை
நற்றிணையில் காக்கையைப் பற்றிய பாடல் 9 ஆகும். சிறு வெண்காக்கை தத்தம் துணையோடு பலரும் காணக் கூடிக் களித்து நீராடி இன்புறுதலைப் போலத் தானும் தலைவனை முறையாக மணந்து கடலாடி இன்புறவில்லையே எனக் கலங்குவாள் தலைவி. இதனைக் கேட்டதும் தலைவனி;ன் உள்ளத்தே களவு உறவைக் கைவிட்டு விரைய மணந்து கோடலே செய்யத் தக்கது, என்னும் தெளிவு உண்டாகும். அவனும் அவள்பாற் கழியக் காதலன் ஆதலின், மணமும் விரைவில் கைகூடும். இச்செய்தியை உணர்த்த நற்றிணையில் காக்கையை உவமையாகப் பயன்படுத்தியுள்ளனர். “சிறு வெண்காக்கைகள் பலவும் தத்தம் துணையோடும் கூடியவையாகப் பெரிய கடற்பரப்பின் கண்ணே தம் கரிய முதுகுப்புறம் தோயுமாறு நீரிற் குடைந்து ஆடியபடியே இருக்கும். அதனைக் தனியே நோக்குங்கால், அது நமக்குத் துயர் தருவதாயுள்ளது. அங்ஙனம் நாமும் களித்து மகிழ்வதற்கு நம் தலைவரும் நம் அருகே இலராயினரே’ என்று வருந்துகிறாள். இதனை,

“கைதொழு மரபின் எழுமீன் போல,
பெருங் கடற்பரப்பின் இரும்புறந் தோய,
சிறுவெண் காக்கை பலவுடன் ஆடும்
துறைபுலம் புடைத்தே தோழி” (நற்றிணை: 231)

என்ற பாடல் அடிகள் உணர்த்துகின்றன.

6. கூகை
நற்றிணையில் கூகையைப் பற்றிய பாடல் மூன்று ஆகும். தலைவி தலைவனை இரவுக்குறியில் சந்திக்க நினைக்கிறாள். இரவில் கூகையானது குரலெழுப்பினால் களவு வெளிப்பட்டுவிடும் என்று எண்ணுகிறாள். அதனால் கூகையிடம் ‘நான் உனக்கு வெள்ளெலியினைச் சூட்டோடு தருகின்றேன் தலைவன் வரும் பொழுது ஒலி எழுப்பாதே’ என்று கூறுகிறாள். இவற்றால் மனிதன் பறவைகளுடன் வருத்தத்தை எடுத்துரைப்பவனாக இருந்துள்ளது அறியமுடிகிறது. ‘எம்முடன் ஓர் ஊரிலே தங்கியிருந்து பழகிய கூகையே தேயாத வளைந்த வாயினையும், தெளிவான கண் பார்வையினையும், கூரிய நகங்களையும் உடையாய், வாயாகிய பறையின் முழக்கத்தாலே பிறரை வருத்துதலைச் செய்யும் வலிமிக்காய், ஆட்டிறைச்சியுடனே தெரிந்து தேர்ந்த நெய்யினையும் கலந்து சமைத்த வெண்சோற்றை, வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு நிறையத் தந்து நின்னைப் போற்றுவோம். அன்பிற் குறைபடாத எம் காதலர் எம்மிடத்து வருதலை விரும்பினமாய்த் துயிலிழந்து, வருந்தியிருக்கும் இந்த இரவுப்பொழுதிலே யாவரும் அஞ்சினராக விழித்துக் கொள்ளும்படியாக, நீதான் நின் கருமையான குரலால் குழளி எங்களை வருத்தாதே, எமக்கு உதவுவாயாக, என்று கூறுகிறாள் தோழி. இதனை,

“வாய்ப் பறை அசாஅம், வலிமுந்து கூகை!
மைஊன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்,
எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும்@
எஞ்சாக் கொள்கைஎம் காதலர் வரல்நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே”  (நற்றிணை: 83)

என்ற பாடல் அடிகள் உணர்த்துகின்றன.

முடிவுகள்
நற்றிணையில் 18 பறவையினங்கள் 133 பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உவமை, உள்ளுறை, இறைச்சி போன்ற நிலைகளில் இப்பறவையினங்களின் செயல்களை மனிதச் செயல்களோடு தொடர்புப் படுத்தப்பட்டுள்ளன. தன்னுடைய கூட்டத்தோடு கூடியிருக்கின்ற குருகினைப்பார்த்து நானும் உன்னைப்போல் அன்புடன் தலைவனோடு சேர்ந்திருக்க முடியவில்லையே என்று வருந்துதல், குருகிடம் தன் குறையினைத் தலைவனிடம் எடுத்துக்கூறுவாயாக என்று கூறுதல் என்ற இரு நிலைகளில் குருகிற்கும் தலைவிக்குமான உறவு நிலையில் பாடல்கள் அமைந்துள்ளன.

நற்றிணையில் குருகு என்று பயன்படுத்தும்போது தலைவி அது கூடியிருக்கின்ற தன்மையைக் கூறுவதாகவும், நாரை என்று பயன்படுத்தும்போது தன் பிரிவு வருத்தத்தை எடுத்துரைப்பதாகவும் பாடல்கள் அமைந்துள்ளன. நற்றிணையில் கிளி தலைவி தலைவனிடம் தூது போகுமாறு கூறுதல், கிளிக்கு உள்ள பாசம் தலைவனுக்கு இல்லையே என்று வருந்துதல், கிளி தன் சுற்றத்தோடு இணைந்திருப்பதைப்போல் தம்மால் இணைந்திருக்க முடியவில்லையே என்று வருந்துதல் என்ற நிலைகளில் களிக்கும் தலைவிக்குமான உறவு நிலையில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தலைவனின் பிரிவினை எண்ணி வருந்துதல், புறாவினை இணைப்பைக் கண்டு வருந்துதல் என்ற நிலைகளில் புறாவிற்கும் தலைவிக்குமான உறவு நிலையிலே அமைந்துள்ளன. தலைவி தலைவனை இரவுக்குறியில் சந்திக்க கூகையிடம் ‘நான் உனக்கு வெள்ளெலியினைச் சூட்டோடு தருகின்றேன் தலைவன் வரும் பொழுது ஒலி எழுப்பாதே’ என்று அதன் உதவியை வேண்டுகிறாள். இப்பறவையினங்கள் பெரும்பாலும் தலைவனைப் பிரிந்த தலைவியின் துன்ப நிலை உணர்வை வெளிப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டிருப்பதை அறியமுடிகிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் - முனைவர் ப. சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), சங்ககிரி, சேலம் மாவட்டம். -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R