பிரேமாவதி மனம்பெரி1971 ஜேவிபி'யினரின் அரசுகெதிரான புரட்சியின் போது கதிர்காமம் அவர்களின் முக்கியதொரு கோட்டையாக விளங்கியது. அங்கு புரட்சியாளர்களை அடக்கிய இலங்கை அரச படையினர் ஆண்கள், பெண்களென்று பலரைக் கைது செய்தார்கள். அவர்களில் பிரேமவதி மனம்பெரியும் ஒருவர். இரவு முழுவதும் தடுப்புக்காவலில் அவரைப்பலமாகச் சித்திரவதைக்குட்படுத்தினர். அவரிடமிருந்து எவ்விதமான தகவல்களையும் பெற முடியாத நிலையில் ஆத்திரமுற்ற உயர் இராணுவ அதிகாரி அவரை நகரத்தெருக்களினூடு நிர்வாணமாக்கி நடக்க வைத்தார். அவ்விதம் செல்லும்போது இன்னுமோர் அதிகாரி அவரைப்பலமாகத் தாக்கினார். இறுதியில் தபால் நிலையமருகில் அவரைச்சுட்டு உயிருடன் புதைகுழிக்குள் விட்டுச் சென்றனர். பின் மீண்டும் இரு தடவைகள் வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். பிரேமவதி மனம்பெரிக்கு அப்பொழுது வயது 22. அவரைக்கொன்ற இராணுவ அதிகாரிகளான விஜேசூரியா, அமரதாச ரட்னாயக்க ஆகியோர் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்டு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றனர். இவர்களில் விஜேசூரியாவை 1988இல் ஜேவிபியினர் பிரேமவதி  மனம்பெரியைக் கொன்றதற்காகச் சுட்டுக்கொன்றனர். சுடப்பட்டு புதைகுழிக்குள் மரணத்தின் விளிம்பில் இருந்தபோதும் அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. யார் மேலும் தனக்குக் கோபமில்லையென்றே கூறியிருக்கின்றார். அந்த மனவலிமை எல்லோருக்கும் வந்து விடாது. பிரேமவதி மனம்பெரி உண்மையான புரட்சிப்பெண். -  பதிவுகள் -


இன்று (ஏப்ரில் 16)  ஜே.வி.பி. ஏப்ரல் கிளர்ச்சியின் 40வது வருட நினைவுநாள்…

இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் 40 வது வருட நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருகின்ற இந்த வேளை அதன்போது கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. 1996ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியின் 25வது வருட நிகழ்வை நினைவை முன்னிட்டு சரிநிகரில் எழுதிய சிறப்புக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று. இக்கட்டுரை எழுதுவதற்காக கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டாருடனும் பெற்றோருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டேன். ஜே.வி.பி தோழர்கள் என்னுடைய இந்த பயணத்தில் உதவினார்கள். குறிப்பாக முற்றிலும் சிங்களப் பிரதேசமான அங்கு அன்றைய சமயத்தில் தமிழர்கள் அச்சமின்றி போய் வரும் நிலை இருக்கவில்லை. என்னோடு வந்த என் சக ஜே.வி.பி. தோழர்கள் என்னுடைய பாதுகாப்பில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டனர்.

மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் (*1) எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 – மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் இருந்து சில நாட்களாக திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது. இலங்கையில் முதன் முதலில் பாரிய ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினர். 1971 ஏப்ரல் கிளர்ச்சி என அழைக்கப்பட்ட இது அரசாங்கத்தின் கொடூர ஒடுக்குமுறையினால் அடக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட ம.வி.மு. பெண் போராளி மனம்பேரி பற்றி இந்த 40 வது வருட நினைவில் சில குறிப்புகள்.

அவள் கொல்லப்பட்டு 40 வருடங்கள். 20,000க்கும் மேற்பட்ட அவளின் தோழர்கள் கொல்லப்பட்டு 40 வருடங்கள். அவளையும் அவளது தோழர்களையும் கொன்றழித்த அந்த அரசமைப்பு மட்டும் இன்னமும் வாழ்கிறது. அவர்களது போராட்டம்…?

ஏப்ரல் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக அன்றைய பிரதமர் சிறிமா பண்டாரநாயக இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் உதவியை நாடியதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி இந்திய படைகளை அனுப்பி உதவினார். இந்தியப் படைகள் தெற்கு காடுகளில் புரிந்த சித்திரவதைகளை பலர் சிங்களத்தில் பதிவு செய்திருக்கின்றனர்.) 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது அரச படையினால் கொல்லப்பட்ட பெண் போராளிகளில் அவளும் ஒருத்தி. இருபதாயிரத்துக்கும் மேற்ப்பட்ட இளம், ஆண், பெண் போராளிகளை அரச யந்திரம் கொன்றொழித்தது. ஆனால் அத்தனைக்கும் நியாயம் கற்பித்த அரசு, ஒரே ஒரு கொலையை மாத்திரம் படையினரின் அதிகார துஷபிரயோகச் செயல் எனக் கூறி கண்துடைப்புக்காக விசாரணையை நடத்தியது. அவ்விசாரணை தான் பிரேமவதி மனம்பேரியின் கொலை விசாரணை. இதிலுள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில் படையினருக்கு எதிரான விசாரணையொன்றில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட ஒரே வழக்கும் இதுதான்.

கதிர்காமத் தாக்குதல்.
1971 ஏப்ரல் 5ஆம் திகதி ஜே.வி.பி.யினர் (மக்கள் விடுதலை முன்னணி) திட்டமிட்டபடி நாடெங்கிலும் உள்ள பல பொலிஸ் நிலையங்களை நள்ளிரவில் ஒரே நேரத்தில் தாக்கினர். யாத்திரைப் புகழ் பெற்ற கதிர்காமத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையமும் இதே நேரத்தில் தாக்கப்பட்டது. இதன் போது இரண்டு ஜே.வி.பி. உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். எனினும், தாக்குதல் மறுநாள் 6ஆம் திகதியும் இடம் பெற்றது. கதிர்காமப் பொலிஸார் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் பின்வாங்கியோடினர்.

இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் நாட்டின் கிளர்ச்சித் தளங்களுக்கு அனுப்பப்பட்டனர். கதிர்காமத்தில் லெப்டினன்ட் விஜேசூரிய தலைமையிலான குழுவொன்று ஏப்ரல் 15ஆம் திகதியன்று முகாம் அமைத்தது. இம்முகாம் இ.போ.ச.வுக்கு சொந்தமான ஓய்வு நிலையத்திலேயே அன்று அமைக்கப்பட்டிருந்தது. இம்முகாம் அமைக்கப்பட்டதன் பிறகு கதிர்காமப் பொலிஸ் நிலையமும் புனரமைக்கப்பட்டது.

இம்முகாமை அமைத்தவுடனேயே லெப்டினன்ட் விஜேசூரிய முதல் வேலையாக கிளர்ச்சியாளர்களை வேட்டையாடுதல் எனும் போர்வையில் கதிர்காமத்தில் பல பெண்களைக் கைது செய்தும், கடத்தியும் கொண்டு வந்து முகாமில் தடுத்து வைத்ததுதான். ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று அவளையும் கடத்திச் சென்றனர்.

அழகு ராணி மனம்பேரி

பிரேமாவதி மனம்பெரி மாணவியாக.

பிரேமவதி மனம்பேரிக்கு அப்போது வயது 22. ஜே.வி.பி.யின் ஐந்து வகுப்புக்களையும் ஆர்வமாக முடித்தவர். கிளர்ச்சியின் போது கதிர்காமத்தில் பெண்கள் அணிக்கு தலைமை தாங்கியவர். ஜே.வி.பி.க்கான சீருடை தைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தவர்.

மனம்பேரியின் தகப்பனார் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தில் கண்காணிப்பாளர்.மனம்பேரியுடன் கூடப்பிறந்தவர்கள் பத்துப்பேர். குடும்பத்தில் மூத்தவர். கதிர்காம வித்தியாலயத்தில் க.பொ.த. (சா-த) வரை கற்று முடித்துவிட்டு விட்டு பௌத்த பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள். (இலங்கையில் ஒவ்வொரு தமிழ் சிங்கள புதுவருட காலத்திலும் கிராமங்களில் அழகுராணி போட்டி நடாத்தப்படுவதுண்டு) 1969ம் புதுவருட அழகு ராணிப் போட்டியில் இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 ஏப்ரல் 16ம் திகதி நடத்தப்பட்ட புதுவருட அழகு ராணிப் போட்டியில் முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டார். அடுத்த வருடம் அதே நாள் கொலைஞர்களால் கடத்தப்பட்டார்.

கடத்தலும் வதையும்
1971 ஏப்ரல் 16ம் திகதி காலை 9 மணியளவில் மனம்பரியின் வீட்டுக்குள் புகுந்த லெப்டினன்ட் விஜேசூரிய தலைமையிலான குழு வீட்டிலுள்ள பொருட்களைக் கிண்டிக் கிளறி தூக்கியெறிந்தது. மனம்பேரியை அடித்து தலை முடியுடன் இழுத்துச் சென்றனர். தாய் லீலாவதி ”பெட்டப்பிள்ளையப்பா ஒண்டும் செஞ்சு போடாதீங்கோ ஐயா!” என கதறி அழுத வண்ணம் பின் தொடர்ந்த போது காலால் உதைத்துத் தள்ளிவிட்டு மனம்பேரியை தூக்கிக் கொண்டு வாகனம் பறந்தது.

அன்றைய இரவு முழுவதும் மனம்பேரி சித்திரவதை செய்யப்பட்டாள். அடுத்தநாள் 17ம் திகதி மனம்பேரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

”ஐந்து வகுப்புகளிலும் கலந்து கொண்டாயா?”
மௌனம்

”ஜே.வி.பி.யுடன் எவ்வளவு காலம் தொடர்பு வைத்திருந்தாய்?”
”………”
”நீ என்னென்ன நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்தாய்?”
இதற்கும் மௌனம் சாதிக்கவே தங்களது வக்கிர இயல்பை வெளிக்காட்டினர். மனம்பேரி விசாரணை வழக்கின் போது வெளிவந்த தகவல்கள் இவை.

”சரி… நான் சொல்வதை அவதானமாகக் கேள். சொல்வதைச் செய்யாவிட்டால் உனது உயிர் போகும்.” இது லெப்டினன்ட் விஜேசூரிய. அவர் தொடர்ந்தும்

”உனது ஆடைகளைக் ஒவ்வொன்றாகக் கழற்று…”

”ஐயோ.. சேர், வேண்டுமென்றால் சுட்டுப் போடுங்கள். ஆடையைக் கழற்றச் சொல்லாதீங்க…” என மனம்பேரி கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறார்.

”அது எனது வேலை. நான் சொல்வதை மட்டும் நீ செய்” என துப்பாக்கியைத் தலையில் அழுத்தி மிரட்டிய போது அழுகையுடன் மேலாடைகளைக் கழற்றி உள்ளாடையுடன் இருந்தார். மீண்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கி உள்ளாடைகளையும் கழற்றி விட்டு நிர்வாணம் ஆக்கினர். தனது கைகளால் மனம்பேரி மறைவிடங்களை மறைத்தார்.

மனம்பேரியை லெப்டினன்ட் விஜேசூரிய முதலில் பாலியல் வல்லுறவு புரிந்தான். அதன் பின் மாறி, மாறி ஏனைய சில இராணுவத்தினரும் பாலியல் வல்லுறவு புரிந்தனர். இதே வேளை அதே முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய இளம் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்கள்.

ஒரு அறையில் இந்த அட்டூழியங்கள் நிகழ்ந்து கொண் டிருக்கும் போது பக்கத்து அறையில் ”வெடகிட்டி கந்த பாமுல விகாரை”யின் பிக்குவும் இதே முகாமில் வதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இப்பிக்குவை தடுப்பிலுள்ள பெண்கள் மீது பலாத்காரமாக பாலியல் வல்லுறவு புரிய வைத்தனர். இறுதியில் இந்த பிக்குவையும் தோண்டி வைக்கப்பட்டிருந்த குழிக்கு அருகில் நிறுத்தி வைத்து சுட்டு வீழ்த்தினர். ”புனித பூமி” என சொல்லப்படுகின்ற கதிர்காமத்தில் தான் இந்த கொடுமைகள் நிறைவேற்றப்பட்டன.

உயிர் பிரிந்தது...
பிரேமாவதி மனம்பெரிஎல்லாவற்றையும் முடித்த பிறகு மனம்பேரியை கைகளிரண்டையும் மேலே தூக்கச் சொல்லி மீண்டும் பணிக்கப்பட்டது. திரும்பியவாறு வீதியில் நடக்க கட்டளை பிறப்பித்தனர். அரை மயக்க நிலையில் தள்ளாடியபடி துப்பாக்கி முனையில் வீதியில் நடத்தப்பட்டார் நிர்வாணமாக. சார்ஜன்ட் அமரதாச ரத்னாயக்காவின் துப்பாக்கி முனையிலேயே மனம்பேரி வீதியில் நடத்தப்பட்டார். மனம்பேரியை முன்னே செல்ல விட்டு துப்பாக்கி தோட்டக்களால் முதுகைத் துளைத்தான் சார்ஜன்ட் அமரதாச. கீழே விழுந்த மனம்பேரியை மீண்டும் உலுக்கி நிறுத்தி நடத்தினான் மீண்டும் அவனின் துப்பாக்கிக் குண்டுகள் மனம்பேரியின் உடலைத் துளைத்தன.

”தண்ணீர் தண்ணீர்…” என முனகிய மனம்பேரிக்கு எலடின் எனப்படும் வியாபாரி ஒருவர் தண்ணீர் கொடுக்க முற்பட்டபோது ”விலகிப் போ! உதவி செய்ய முற்பட்டால் நீயும் கொல்லப்படுவாய்” என அச்சுறுத்தப்படவே அவரும் விலகிச் சென்றார். நடுவீதியில் சூட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்த மனம்பேரியை அப்படியே விட்டுவிட்டு திரும்பினர். இராணுவத்தினர். பின்னர் ஊர் வாசிகளான எலடின் (*2) காதர், பெருமாள் ஆகிய ஊர் வாசிகளை அழைத்து பிணங்களைப் புதைப்பதற்கான குழிகளைத் தோண்டும்படி கட்டளையிட்டனர். அவர்கள் தோண்டினர். மனம்பேரியின் முனகலைக் கேட்ட எலடின் அருகில் சென்ற போது…

“அந்த பையனிடம் (பெருமாள்) எனது காதணிகள் இருக்கின்றன அதனைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்து தங்கைக்கு அதனை கொடுக்கச் சொல்லுங்கள். நான் ஒருவருடனும் கோபமில்லை காமினி பாஸ் (*3) தான் குழுப்பிப் போட்டார்…”

எனக் கூறிக் கொண்டே தண்ணீர் கேட்டிருக்கிறாள். உடனே தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு இராணுவ முகாமுக்குச் சென்று

”உயிர் இன்னமும் இருக்கிறது. என்னால் புதைப்பதற்கு முடியாது.”

என்பதைத் தெரிவித்தார். உடனே இருவரை அனுப்பி உயிரைப் போக்கும்படி பணித்தான் லெப்டினன்ட் விஜேசூரிய. அவர்கள் இருவரும் அப்பாவச் செயலை செய்ய முடியாது என திரும்பி விடவே இன்னொருவன் அனுப்பப்பட்டான். அவன் போய் இறுதியாக மனம்பேரியின் நெற்றிப் பொட்டில் சுட்டான். மனம்பேரி புதை குழியில் சாய்ந்தார். (இறுதியாக சுட்ட நபர் இறுதி வரை அடையாளம் காணப்படவில்லை.)

முன்னைய வருடம் இதே நாள் அழகுராணியாக காட்சியளித்த அதே தபால் நிலையத்திற்கருகிலேயே மனம்பேரியின் உயிரும் பிரிந்தது. அதே இடத்தில் மனித புதைகுழிக்குள் புதைந்தது. அவரது உடல்.

மனம்பேரியின் படுகொலை தொடர்பான பொலிஸ் முறைப்பாடுகள் சிலவற்றை தொடர்ந்து கண்துடைப்புக்காகவே அன்றைய சிறிமா அரசாங்கம் மனம்பேரியின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதென்றால் அது மிகையில்லை.

கொலைஞர்களின் முடிவு
1971ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி முற்பகல் 10.30க்கு மனம்பேரியின் சடலம் புதைகுழியிலிருந்து மீள எடுக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 1973 மே மாதத்தில் இவ்வழக்கு விசாரணை 11 நாட்கள் நடந்தது. வழக்கின் இறுதியில் லெப்டினன்ட் அல்பிரட் விஜேசூரிய சார்ஜன்ட் அமரதாச ரத்நாயக்க ஆகிய இருவருக்கும் பதினாறு வருட கடடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது. 1973ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டணை வழங்கப்பட்ட இரு இராணுவத்தினரும் தங்கள் மீதான தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தனர். இம்மேன்முறையீட்டு வழக்கு 1973 ஒக்டோபரில் நடத்தப்பட்டது. இவ்வழக்கிலும் முன்னைய தீர்ப்பு சரியானதே என தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் தண்டனையை அனுபவித்து வந்தனர்.

அவர்களில் லெப்டினன்னட் விஜேசூரிய “பயங்கரவாதத்தை நசுக்க சேவை செய்ததை கருத்திற் கொண்டு தண்டனை குறைப்பு செய்யப்பட போதும் சில வருடங்களில் சிறையில் நோயுற்று மரணமானான். சார்ஜன்ட் அமரதாச தண்டனை முடிவுற்று விடுதலையான பின் 1988இல் ஜே.வி.பி.யினரால் கொல்லப்பட்டான்.
————
1971 கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்ட தோழர்களில் ஒரு சிலர்

(*1)
மனம்பேரியின் வழக்கின் தீர்ப்பை வழங்கிய உயர் நீதி மன்ற நீதியரசராக இருந்த ஏ.சீ.அலஸ் பிற்காலத்தில் ஜே.வி.பி பற்றி எழுதிய நூல் மிக முக்கியமான நூல்.

(*2)
இவரை 1996 ஆம் ஆண்டு மனம்பேரி படுகொலை பற்றி அறிவதற்காக பயணித்த போது சந்தித்தேன். மனம்பேரியின் வழக்கில் முக்கிய சாட்சிகளில் இவரும் ஒருவர். மிகுந்த சிரமப்பட்டு பல இடகளுக்கும் அலைந்து அவரை சந்தித்த போது ”மன்னியுங்கள் அந்த கொடூர சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவர விரும்பவில்லை” என அது பற்றி கருத்துரைக்க மறுத்து விட்டார்.

(*3)

கிளர்ச்சியின் போது கதிர்காமத்தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் தான் காமினி பாஸ். ஏப்ரல் கிளர்ச்சி குறித்து கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரான விக்டர் ஐவன் எழுதிய நூலில் காமினி பாஸ் காட்டிகொடுப்புகளை செய்தார் என பதிவு செய்திருந்தார். ஆனால் சமீபத்தில் “லங்காவெப்” எனும் இணையதளத்திற்கு தொடர்ச்சியாக 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியை தொடராக எழுதி வரும் டொக்டர் ருவன் எம் ஜெயதுங்க என்பவருக்கு காமினி பாஸ் நிறைய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் மனம்பேரி குறித்து இப்படி கூறுகிறார். ”

“… இராணுவம் நகரத்தை சுற்றி வளைக்கத் தொடங்கியது, போராளிகளை பராமரிக்க போதுமான வளங்களும் இல்லாமல் இருந்தது, தலைமையிடம் இருந்து தொடர்புகள் அற்று இருந்தது. நாங்கள் 20 பேர் இறுதியில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் காடுகளுக்குள் பின்வாங்கினோம். பிரேமவதி மனம்பேரி தானும் எங்களுடன் காடுகளுக்குள் தலைமறைவாவதாக என்னிடம் கேட்டுகொண்டார். மனம்பேரி அமைப்பின் அரசியல் பாசறைகளில் கலந்து கொண்டவர். அமைப்பின் பணிகளில் பங்கெடுத்துக் கொண்டவர். கதிர்காம தாக்குதலுக்காக தோழர்களுக்கு சீருடைகளை தைத்து கொடுத்தவர். எனவே இராணுவ கெடுபிடிக்கு பயந்திருந்தார். காடுகளுக்குள் பின்வாங்கிச் செல்லும் எங்களுக்கு ஒரு பெண்பிள்ளையை அழைத்துச் செல்வதில் சிக்கல் இருந்தது. எனவே தான் மனம்பேரியை வீட்டில் இருக்கும்படி கூறினோம். பின்னர் அவரை கைது செய்து துன்புறுத்தி பாலியல் வல்லுறவு புரிந்து சுட்டுக்கொன்றதை அறிந்தோம்….”
உயிர் போகும் தறுவாயில் மனம்பேரி “காமினி பாஸ் ஆல் தான் இது நேர்ந்தது…” என்று குறிப்பிட்டது இதைத்தான்.

1977 பொதுத் தேர்தலின் போது மனம்பேரி விவகாரம் சிறிமாவின் ஆட்சிக்கெதிராக முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக பாவிக்கப்பட்டது. அத்தேர்தலின் பின் மீண்டும் மனம்பேரி அதே புதைகுழிகளுக்குள் அனுப்பப்பட்டார்.

பிரேமதாசாவின் ஆட்சியின் போது ஏழ்மையான மனம்பேரியின் குடும்பத்தினருக்காக வீடு கட்டி கொடுத்ததுடன் கதிர்காம வீதியில் மனம்பேரிக்கான நினைவுச் சிலையை நிறுவினார். (அதே பிரேமதாச 1987-1989 காலப் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஜே.வி.பி இளைஞ்சர்களையும் யுவதிகளையும் மோசமாக கொன்று ஒழித்தது இன்னொரு கதை)

மனம்பேரி பிற்காலத்தில் பெண்போராளிகளின் குறியீடாகவே தென் இலங்கையில் முன்னிறுத்தப்ப்பட்டார். அவரின் நினைவாக சில பாடல்களும் இயற்றப்பட்டு இடதுசாரி மேடைகளில் பாடப்பட்டன.

2001 ஆம் ஆண்டு மனம்பேரியின் கதை திரைப்படமாக ஆக்கப்பட்டது. பிரபல நடிகை சங்கீதா வீரரத்ன மனம்பேரியின் பாத்திரத்தில் நடித்தார்.

*  நன்றி:  சரிநிகர் - 1996 ஏப்ரல்.4


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R