நூல் அறிமுகம்: காபீர்கள் எழுதிய இஸ்லாமியக் கதைகள்{ கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்தளித்த ‘காபிர்களின் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!“இந்தியா போன்ற கொந்தளிப்பான தேசத்தில் இது போன்ற நூறு தொகுப்புகள் வரவேண்டிய அவசியம் இருகின்றது”  மேற் கூறிய  எடுகோளுடன்   கீரனூர் ஜாகீர் ராஜாவின் முயற்சியில் எதிர் வெளியீடாக ‘காபிர்களின் கதைகள்’  என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பொன்று வெளிவந்துள்ளது. இன்று இந்திய உபகண்டத்தில் கொழுந்து விட்டெரியும் இந்து-முஸ்லிம் பிரச்சினையானது சிக்கலும் நெருக்கடியும் மிகுந்த காலகட்டங்களை எல்லாம் கடந்து   அபாயகரமானதோர் காலகட்டத்திற்குள் பிரவேசித்துள்ளது. இந்தியப் பெருந்தேசியம் என்ற கட்டமைப்பை செயலுறுத்த இந்துமதம் என்ற பேரமைப்பை பிணைப்பு சங்கிலியாக வலியுறுத்தும் அதிகார வர்க்கம், அதற்கு இந்திய தேசத்திற்கு உள்ளும் புறமுமாக  இஸ்லாமியர்களை ஒரு எதிர்சக்தியாக பகைமுரனாக காட்டி வருகினறது. பாபர்மசூதி தகர்ப்பும், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் அதைத் தொடர்ந்து வந்த தொடர் கலவரங்களும்  இதை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றன. ஈழத்திலும் இத்தகைய பதற்றமான ஒரு சூழ்நிலையே இன்று நிலவுகின்றது. அங்கு பல நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்த தமிழ்-முஸ்லிம்களின் சகோதரத்துவ உறவானது, முஸ்லிம் ஊர்காவல் படையினரின் உருவாக்கத்துடன் முறுகல் நிலையை அடைந்து, பின்பு விடுதலைப் புலிகளின் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம், காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் எனும் சம்பவங்களின் ஊடாக மாபெரும் விரிசல் நிலையை அடைந்துள்ளது.  இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் மற்றைய சமூகங்களின் எதிர்ப்புணர்வுகளின் மத்தியில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு முஸ்லிம் சமூகங்களும் மற்றவர்களில் இருந்து தம்மைத் தாமே தனிமைப்படுத்தியும் வேறுபடுத்திக் காட்டும் முகமாகவும்  ஆடை அணிகலங்கலிருந்து  மற்றைய பழக்க வழக்கங்கள் வரை வித்தியாசமாக தம்மை அடையாளப்படுத்திக் காட்டுவதும் மத அடிப்படைவாதிகளாகவும் வஹாபிகளாகவும் மாறும் போக்கும் இன்று அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய காலமும் சூழலும் உவப்பாக இல்லாத ஒரு கால கட்டத்தில் காலத்தின் தேவை கருதியும் சூழலின் அவசியத்தை உணர்ந்தும் ஜாகீர் ராஜா அவர்கள் இத்தொகுப்பினை வெளிக்கொணர்ந்துள்ளார்.

காபீர்கள் – இதற்கு இறை மறுப்பாளர் அல்லது  இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாதவர் என்ற பொருளினை இஸ்லாமிய சமூகத்தினர் வழங்குகின்றனர். இதுவே பல வேளைகளில் தட்டையான அர்த்தங்களிலும் பேசப்படுவதுண்டு. இத்தகைய இஸ்லாமியர் அல்லாத,  நவீன தமிழ் இலக்கிய பரப்பிலும், சமூகத்தின் அறிவு சார்ந்த தளங்களிலும் இடையறாது  இயங்கிய, இயங்கிக் கொண்டிருக்கின்ற, சுப்ரமணிய பாரதியார் தொடங்கி ரமேஷ்-பிரேம் வரையான 18 இலக்கிய ஆளுமைகள் இஸ்லாம் குறித்தும் இஸ்லாமிய சமூகங்கள் குறித்தும்  கொண்டிருக்கும் எண்ணங்களும் அச்சமூகத்தின் அக-புற  தரிசனங்களும் இச்சிறுகதைகளின் வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றன

“இந்த புனிதமானதும் அற்புதமானதுமான இந்நூலானது ஒவ்வொரு தமிழர்களின் வீட்டிலும் இருப்பது அவசியமானது“  இது 19ம் நூற்றாண்டின் இறுதியில் புனித திருக்குர்ஆன் நூலானது தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட போது வ.வே.சு. ஐயர் அவர்களால்  கூறப்பட்ட ஒரு கருத்து. இத்தகையா இஸ்லாம் குறித்தும் இஸ்லாமியர் குறித்தும் இஸ்லாமியர் அல்லாதவர்களால் கூறப்பட்ட கருத்துக்கள் யாவும் திட்டமிட்டு மறுக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருகின்ற காலகட்டத்தில் நாம்  வாழ்ந்து வருகின்றோம். இத்தொகுப்பில் வருகின்ற 18 படைப்பாளிகள் குறித்தும் கூட பல்வேறு எதிமறையான விமர்சங்கள் பல சந்தர்ப்பங்களில் வைக்கப்பட்டதுண்டு.

“தமிழ்நாட்டுக் கதைகளில் முஸ்லிம் வாழ்க்கை சித்தரிக்கப் பெறாததற்கு காரணம் தமிழ் எழுத்தாளர்கள் அவர்களைப் புரிந்து கொள்ளாததுதான். தெரிந்து கொள்வதும் அவ்வளவு எளிதல்ல. முஸ்லிம்கள் மத உணர்ச்சி மிக நுண்ணியது. வாழ்க்கை முறை மிகக் கட்டுத்திட்டமுள்ளது. முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாதது.“   இது கவிஞர் இன்குலாப் அவர்கள் ஒரு தடவை தனது கட்டுரையொன்றில் கூறிய கருத்து. இத்தகைய நுட்பமானதும் கட்டுத் திட்டமுள்ளதுமான ஒரு சமூகத்தைப் பற்றி அதன் அக-புற முரண்பாடுகள் குறித்தும்  புரிந்து கொள்ள முடியாத சமூகத்தைப் புரிந்து கொள்ளும் முயற்சியாகவும் இத்தொகுப்பு அமைகின்றது.

இத்தொகுப்பின் முதல் கதையாக சுப்பிரமணிய பாரதியார் எழுதிய ‘ரயில்வே ஸ்நானம்’ எனும் சிறுகதை வருகின்றது. இது நாம் அறியாத பாரதியாரின் இன்னுமொரு பரிமாணம்.  1920 களிலேயே இஸ்லாமியர்களை விமர்சனப் பார்வையுடன் அணுகிய பாரதியாரின் கவன வட்டம் எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

மேலும் வண்ணநிலவனின் ‘மெஹ்ருன்னிஸா’ கு.ப.ராஜகோபாலனின் ‘நூருன்னிஸா’, பிரபஞ்சனின் ‘பாயம்மா’ என்று பெண்களின் பெயர்களையே தலைப்பாகக் கொண்ட கதைகளிளும்  அசோகமித்திரனின் ‘அழகு’ என்ற கதையிலும் அழகிய பெண்கள், மிக அழகிய பெண்கள் கதை மாந்தர்களாக வந்து போகின்றார்கள். அனுமதிக்கப் பட்ட எல்லைகளுக்குள் உட்படுத்தப் பட்ட அவர்கள் வாழ்வும், முகத்திரைக்குள் மூடுண்டு கிடக்கும் அவர்கள் உணர்வுகளின் வெளிப்பாடுகளும் மூடுண்ட அறைகளுக்குள் அடையுண்ட கிடந்த போதும் வெளியுலகம் குறித்த அவர்களது வியத்தகு புரிதல்களும் இச்சிறுகதைகளின் ஊடாக மிக அழகாக விபரிக்கப்படுகின்றன.

விளிம்பு நிலை மனிதர்களையே எப்போதும் கதை மாந்தர்களாக படைக்கும் கடைத்தெருவின் கதை சொல்லி என்று நவீன தமிழ் இலக்கிய உலகில் கருதப்படும் ஆ.மாதவன் ’எட்டாவது நாள்’ என்ற நீண்ட சிறுகதையொன்றை எழுதியுள்ளார். கடந்த வருடம்  இலக்கியத்திற்கான சாகித்ய அகாதமி விருதிணை அவர் பெற்றுக் கொண்டது அவருக்கு பெருமையோ இல்லையோ, அவரது சிறுகதையை வெளியிட்ட இத்தொகுப்பு பெருமையுருகின்றது.
மேலும் ‘பேராசிரியர் தக்கியின் ஆடு’ என்ற நகைச்சுவையுடனும் எள்ளலுடனும் கூடிய  விட்டல்ராவின் கதையொன்றும் இத்தொகுப்பில் அடங்கியுள்ளது. நாகைப்பட்டினத்தில் மீராசாகிப் பேட்டையில் உள்ள உருது மட்டும் பேசுகின்ற தமிழ் தெரியாத குடியிருப்புத் தெருவொன்றில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்ட ஒரு தமிழ் முஸ்லிம் பேராசிரியரின் அனுபவங்களைப் பதியும் இக்கதையின் பகைப்புலமானது தமிழ் இலக்கியத்திற்கு முற்றிலும் புதிதானது. 

எஸ்.பொ.  தனது  ‘ஈரா’ எனும் சிறுகதையில் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் வட்டார வழக்கினை மிகவும் அற்புதமாக கையாண்டுள்ளார். இஸ்லாமிய கலாச்சாரப் பரிவர்த்தனைக்குள் இவர் இத்தனை துல்லியமாக பயனிப்பதையிட்டு இந்நூலின் தொகுப்பாளரே வியப்புடன் தனது பதிவினை முன்னுரையில் வழங்கியுள்ளார்.

தான் கால் பதித்த இடத்தையெல்லாம் வெற்றிகொண்ட தளபதி மாலிக் கபூரின் இளமைக் காலத்தை அடையாளங் காட்டும் கதையாக அமையும் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘ஹசர் தினார்’ அன்று சுல்தான் கில்ஜியின் ஆட்சியில் மோகத்தின் கொந்தளிப்பில்  இருந்த டெல்லி நகரின் இன்னொரு பக்கத்தினை விபரித்து நிற்கின்றது. சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் வக்கிரம் நிறைந்த ஒருபால் புணர்ச்சிக்கும் உட்படுத்தப்பட்ட ஒரு அழகிய ஹசர் தினார் என்ற சிறுவன், மாலிக் கபூர் ஆக மாற்றம் பெறுவதும், அவன் கண்ணில் படும் தேசங்களையும் நகரங்களையும் சூறையாடி பல்லாயிரம் பேர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்தது அவன் சிறுவயதில் அனுபவித்த கொடுமைகளுக்கான வஞ்சம் தீர்த்தலே என்ற வகையில் எஸ்.ரா. தனது கதையினை நகர்த்தி செல்கிறார்.

வேறு பட்ட கலாச்சாரங்களின் தொகுப்பாக விளங்குகின்ற தஞ்சையின் பல்வேறு பட்ட மக்களின் வாழ்நிலைகளையே என்றும் தனது பகைப்புலமாக கொண்டு தனது எழுத்துக்களை படைப்பவர்  தஞ்சை பிரகாஷ் அவர்கள். அவரது   ‘க்யாமத் என்னும் இறுதித் தீர்ப்பின் நாள்’ எனும் சிறுகதையானது, என்றும் தனது கதைமாந்தர்களின் ஆழ்மன உணர்வுகளுடன் பயணிக்கும் அவரது படைப்பாற்றலை மீண்டும் வெளிப்படுத்தி நிற்கின்றது. வெளியுலகத் தொடர்பற்ற, பர்தாவுக்குள் ஒளிந்திருக்கும் பெண்களின் கனவுகள்,கற்பனைகள், பாலியல் வேட்கைகள், இச்சைகள், பிறழ்வுகள் மற்றும்  வெளியுலகம் பற்றிய அவர்களது விசித்திரமான அறிவுகள் என்பவற்றையே மையமாகக் கொண்டு தனது படைப்பு மொழியை ஒரு உன்னதமான தளத்தில் எம்முன் வைக்கின்றார் தஞ்சை பிரகாஷ் அவர்கள்.

சமகால இந்தியாவின் அல்லது தமிழகத்தின் இன்னொரு பரிமாணத்தை, குறுக்கு வெட்டு தோற்றத்திணை நடைமுறை சார்ந்த பிரச்சினைகளையும் சிக்கல்களையும் அலசும் சிறுகதையாக ரமேஷ்-பிரேமின் ‘பயம்’ என்ற கதை அமைகின்றது. இஸ்லாமிய முகச்சாயல் கொண்டிருக்கும் காரணத்தால் அனைவராலும் ஒரு முஸ்லிம் என அடையாளப்படுத்தப்படும் ஒரு ஆச்சாரமான இந்து குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சிக்கல்களுமே இக்கதையின் மையம். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவங்கள், அதையொட்டிய கலவரங்கள், உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும்போது ஏற்படும் முறுகல் நிலைகள் போன்ற இன்னோரன்ன சம்பவங்களின் போது கதைப் பிரதி எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இந்த  இரட்டையர்கள் தமது மொழியில் மிகவும் அற்புதமாக கையாளுகின்றார்கள். தான் ஒரு முஸ்லிம் அல்ல இந்து என்பதை நிரூபிக்க போலீஸ் அதிகாரிகளிடம் எந்தவித வெட்கமுமின்றி தன் ஆடை களைந்து முன் தோல் மூடிய பாலுறுப்பை அவ் இளைஞன் வெளிக்காட்டுவது இதில் எனக்கெந்த அவமானமும் இல்லை இது எம் தேசந்தின் அவமானம் என்று கூறுவது  போல் அமைகின்றது.
மேற்கூறிய கதைகள் தவிர்ந்து சுந்தர ராமசாமி, பொன்னீலன், சுகுமாரன், நாஞ்சில் நாடன், வேல.ராமமூர்த்தி, ச.சுப்பராவ் போன்றவர்களின் சிறுகதைகளையும் உள்ளடக்கி இங்கு நாம் வாழும் இப்போதுள்ள சூழலில் எம்முன் உள்ள முக்கியமான பேசு பொருளை வெளிப்படுத்தி நிற்கின்றது இத்தொகுப்பு.

மேலும் ஜாகிர் ராஜா தனது முன்னுரையில் “ஜெயமோகனின் படைப்பும் இந்நூலில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அவரது படைப்புகளில் இஸ்லாமிய சித்தரிப்புகள் அதிகம் இல்லை. அதனால் அவரது கதை எதுவும் இங்கு இடம்பெறவில்லை.“ என்று ஏமாற்றத்துடன் கூறுகின்றார். இது அவருக்கு ஏமாற்றத்தினை அளித்தாலும் ஜெயமோகனின் கதை எதுவும் இடம்பெறாத காரணத்தால் எமது மனம் ஆறுதலடைகின்றது. இத்தொகுப்பும் பெருமை அடைகின்றது. இல்லாவிடில் வாசகர்களும் விமர்சகர்களும்  இத்தொகுப்பினை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பர்.

முடிவாக இஸ்லாமிய சமூகமும் மற்றைய சமூகங்களும் தமது குறுகிய  சிந்தனைகளையும் வட்டங்களையும் விட்டு வெளியில் வந்து ஒரு ஆரோக்கியமான  விவாதங்களை நிகழ்த்த இத்தொகுப்பானது ஒரு தொடக்கப்  புள்ளியாக அமையும் என்பது எமது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஆகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R