தோழர் சண்முகதாசன்!-  பெப்ருவரி 8 தோழர் என். சண்முகதாசன் அவர்களின் நினைவு தினமாகும். அவரது நினைவு தினத்தையொட்டி 'பதிவுகள்' (மார்ச் 2010  இதழ் 123) இணைய இதழில் வெளியான இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. அசலகேசரி என்னும் பெயரில் வெளியான இக்கட்டுரையினை எழுதியவர் வி.ரி,இளங்கோவன ஆவார். - பதிவுகள் -


சர்வதேசப் புகழ்பெற்ற,பொதுவுடமைத் தத்துவ ஆசான்தோழர் சண்முகதாசன்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும், சர்வதேச ரீதியாக மதிக்கப்படும், ‘மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் காலமாகிப் பதினேழு வருடங்களாகின்றன. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே, பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும், பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி, முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார்.

1960களின் முற்பகுதியில் சர்வதேசப் பொதுவுடமை இயக்கம் சோவியத் யூனியன் சார்பாகவும், சீனா சார்பாகவும் பிளவுபட்டபோது, இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பாக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். சோவியத் யூனியனின் போக்கைத் ‘திரிபுவாதம்” எனக் கண்டித்தார்.. குருசேவ் முன்வைத்த ‘சமாதான சகவாழ்வு” என்ற சோவியத் பொதுவுடமைச் சித்தாந்தம் மார்க்சிஸக் கோட்பாடுகளை, புரட்சிகரத் தத்துவத்தைத் திரிபுபடுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டி நிராகரித்தார். சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் சிந்தனைகளும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்களும் சரியானவை என்ற இவரது வாதங்கள் சர்வதேச ரீதியான கவனத்தைப் பெற்றன.

1964ம் ஆண்டளவில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் தொழிற்சங்க, வாலிபர் சங்க, கலை இலக்கியப் பிரிவுகளின் பெரும்பகுதியினர் சீனச்சார்பு அணியினராயினர். வடபகுதியிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இவர்களையே ஆதரித்தனர். சோவியத்சார்புப் பொதுவுடமைக் கட்சியினர் அன்று முதலாளித்துவப் பாராளுமன்றப் பாதையூடாக சோசலிச சமுதாயத்தைக் காணலாம் என்று கூறி வர்க்க சமரசமாகியதைச் சண் கடுமையாகச் சாடினார். தொழிலாளி – விவசாயி வர்க்கம் ஒரு வர்க்கப் போராட்டத்தின் – புரட்சியினூடாகவே விடுதலை பெறமுடியும் என்பதை வலியுறுத்தினார்.

மேதினக் கூட்டமொன்றில் சண் உரையாற்றுகிறார்.1964-ல் இடதுசாரிகள் என்று சொல்லப்பட்டவர்கள் அரசுடன் இணைந்துகொண்டதை கடுமையாக விமர்சித்த சண், இது தொழிலாளி வர்க்கத்திற்கு மிகப்பெரிய துரோகம், இடதுசாரி இயக்கம் கண்ட மோசமான பின்னடைவு எனக் கண்டித்தார். மொஸ்கோவில் படித்துக்கொண்டீருந்தவரான ரோகண விஜயவீரா இடைநடுவில் நாடுதிரும்பி கட்சியில் இணைந்து தீவிர சீனச்சார்பாகக் காட்டிக்கொண்டார். கட்சி வாலிபர் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலிருந்தவாறு, கட்சி விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டார்.. மலையக மக்களுக்கெதிரான பிரச்சாரத்தையும் (இந்திய விஸ்தரிப்பு வாதம் என்றவகையில்) மேற்கொண்டார். இதனால் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.. பின்னரே அவர் ‘ஜே. வி. பி.” என்ற இயக்கத்தை உருவாக்கினார். அந்த இயக்கத்தின்மீதும், விஜயவீராமீதும் சண் முன்வைத்த கடுமையான விமர்சனம் குறிப்பிடத்தக்கது. ஜே. வி. பி. என்பது மார்க்ஸிச கொள்கைகளுக்கு எதிரான ஒரு பேரினவாத சக்தியென, அன்று சண் அடையாளங்காட்டியிருந்தமையைப் பின்னர் அரசியல் விமர்சகர்கள் பலரும் ஏற்றுக்கொண்டனர். சீனச்சார்பானதாக, பலம்பொருந்தியதாக வளர்ந்துவரும் கட்சியைப் பிளவுபடுத்தி அழிக்கவென சோவியத் உளவு நிறுவனத்தினால் பயிற்சியளிக்கப்பட்டு அனுப்பப்பட்டவரே விஜயவீரா எனச் சண் ஓரிடத்தில் குறிப்பிட்டார். அன்று சண் தலைமையில் கட்சி பெரும்வளர்ச்சிபெற்று வந்தது. தொழிலாளர்கள், விவசாயிகள், பல்கலைக்கழக மாணவர்கள், கலை இலக்கியவாதிகள் பலரும் கட்சி ஆதரவாளராகினர்.

அன்று இடதுசாரி இயக்கத்திலும், பாராளுமன்ற அரசியலிலும் ஜாம்பவான்களெனச் சொல்லப்பட்ட கலாநிதி என். எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா, பேர்ணாட் சொய்சா, டாக்டர் விக்ரமசிங்கா, பீட்டர் கெனமன் ஆகியோருக்குச் சித்தாந்தரீதியாகச் சவால்விடக்கூடிய அறிவாற்றல், ஆழ்ந்த புலமை, எழுத்தாற்றல், பேச்சாற்றல் மிக்கவராக, அவர்களுக்கெல்லாம் ‘சிம்மசொப்பனமாக” சண்முகதாசன் விளங்கினார். ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் ஆழமான அரசியல் பேருரைகளை நிகழ்த்தும் வல்லமையுள்ளவராக மதிப்புப்பெற்று விளங்கினார்.

இலங்கையெங்கும் நூற்றுக்கணக்கான மார்க்ஸிச வகுப்புகளை, கருத்தரங்குகளை மும்மொழிகளிலும் நடத்தியுள்ளார். ‘சண்முகதாசனின் வகுப்புகளில் கலந்துகொண்டேன்” என்பது அன்று பெருமைமிக்க அரசியல் தகுதியாகச் சிங்கள, தமிழ் மக்களால் கருதப்பட்டது. மூத்த தொழிற்சங்கவாதியாகவும், தொழில் சம்பந்தமான சட்ட விடயங்களில் நிபுணராகவும் விளங்கிய இவர், இலங்கையெங்கும் தொழில் சம்பந்தமான வழக்குகளில் தொழிலாளர் சார்பில் ஆஜராகி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவியுள்ளார். வடபகுதியிலும் சினிமாத் தொழிலாளர் சங்கம், மில்க் வைற் சோப் தொழிற்சாலைத் தொழிலாளர் சங்கம், சிமெந்துத் தொழிற்சாலைத் தொழிலாளர் சங்கம் ஆகியனவுட்படப் பல சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சார்பில் வழக்குகளில் ஆஜராகி வெற்றிகண்டவர்.. இந்த வழக்குகள் பலவற்றில் முதலாளிகள் – நிர்வாகத்தினர் சார்பில் தமிழரசு – தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த சட்டத்தரணிகளே ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையகத்தில் ‘செங்கொடிச் சங்கம்” பின்னர் ‘புதிய செங்கொடிச் சங்கம்” ஆகியனவற்றின் மூலம் தொழிலாளார் ஐக்கியத்தைக்கட்டி வளர்க்கப் பாடுபட்டார்.

வடபகுதியில் தீண்டாமைக் கொடுமைக்கெதிரான பேராட்டம் கட்சிக்குப் பெருமை சேர்த்தது எனலாம். அன்றைய பாராளுமன்றப் பிரதிநிதிகள் தமது பதவிகளையும், வர்க்க நிலைப்பாட்டையும் காப்பாற்றிக்கொள்ள துரோகமிழைத்துவந்தவேளை, 1966 அக்டோபர் 21-ம் திகதி யாழ் முற்றவெளிப் பொதுக்கூட்டத்தில் சண் விடுத்த அறைகூவல் வடபகுதில் ஆலயப்பிரவேசப் போராட்டங்களுக்கும், தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்களுக்கும் உந்துசக்தியானது.

சங்கானை – நிற்சாமம், கரவெட்டி – கன்பொல்லை, நெல்லியடி, சுன்னாகம், காங்கேசந்துறை, மட்டுவில், கொடிகாமம் உட்படப் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்கள் குறித்து இலங்கை வானொலி மௌனம் சாதித்தவேளைகளில் பீக்கிங் வானொலி உண்மைநிலை குறித்து தொடர்ந்து செய்திகளை ஒலிபரப்பியது. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் மகத்தான வெற்றிகளைக் கண்டது. சண் தலைமையில் கட்சி இதற்கு உறுதுணையாகவிருந்து பூரண ஆதரவு வழங்கியது. தென்னிலங்கை மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. இலங்கைப் பாராளுமன்றத்திலும்,தமிழ்த் தலைவர்களது வர்க்க நிலைப்பாடு அம்பலமானது..

1969-ல் மேதினம் கொண்டாடத் தடைவிதிக்கப்பட்டபோது அத்தனை அரசியல் கட்சிகளும் பின்வாங்கிய நிலையில், தடையை மீறி கொழும்பு, யாழ்ப்பாணம், மலைநாடு ஆகிய இடங்களில் படையினருடன் மோதி ஊர்வலமும் கூட்டமும் நடாத்தி வெற்றிகண்டது சண் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியாகும்.

சிறையிலிருந்து மீண்ட சண்.1971 ஏப்ரலில் விஜயவீரா தலைமையிலான ஜே. வி. பி இயக்கத்தினரது காட்டிக்கொடுப்பிலான கிளர்ச்சியின்போது சண்முகதாசனும், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், அனுதாபிகள் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இக்காலத்தில் வடபகுதியிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசத் தலைவர்கள் தேடுதலுக்குள்ளாகியதால் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டனர்.. மக்கள் எழுத்தாளர் கே. டானியல் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். கட்சி சிதறடிக்கப்பட்டது. கட்சி அலுவலகங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டன. சுமார் ஒரு வருடத்தின் பின்னரே சண், டானியல் ஆகியோர் விடுதலையாகினர்.

தலைவர் மாஓசேதுங்கை மகிழ்ச்சியுடன் சண் சந்திக்கிறார்.வெளிநாட்டவர் எவரும் அனுமதிக்கப்படாத, கட்டுப்பாடு மிகுந்த கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்தில் சண்முகதாசன் சீனா சென்றார். தலைவர் மாஓவைச் சந்தித்து உரையாடினார். உலக நாடுகள், கட்சிகளின் தலைவர்களில், தலைவர் மாஓவைப் பலமுறை சந்தி;த்து உரையாடிய பெருமைக்குரியவர் தோழர் சண்முகதாசன் மட்டுமே…
சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் காலமாகியபின் ஆட்சிபீடத்தைக் கைப்பற்றிக்கொண்டவர்கள் அங்கு மாஓவின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை ஒதுக்கத்தொடங்கினர். மாஓவின் ஆதரவுடன் மகத்தான கலாச்சாரப் புரட்சியை முன்னின்று நடாத்திய மாஓவின் மனைவியுட்படப் பலரைச் சிறையிட்டனர். இக்காலப்பகுதியில் சீன ஆட்சிபீடத்தினரால் வலியுறுத்தப்பட்ட ‘மூன்று உலகக் கோட்பாடு” சீரழிவுப் பாதையைக் காட்டுகிறது என சண் விமர்சித்தார் – நிராகரித்தார். இது பின்னர் உலக நாடுகளிலுள்ள புரட்சிகர இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தது. சண்ணின் அறிவாற்றல் மதிப்புக்குள்ளாகியது.

எழுபதுகளின் பிற்பகுதியிலும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இது சண் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மாஓவின் கொள்கைகளையும், புரட்சிப்பாதையையும் முன்னெடுக்க உலகமெங்குமுள்ள மாஓ பாதைக் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டார். அவர்களை ஒருங்கிணைத்து மாநாடுகளை நடாத்தி கொள்கைகளை முன்னெடுத்துச்செல்ல ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் வழங்கினார். இலங்கையின் தலைசிறந்த அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பலரும் அன்று கட்சியின் உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக, அனுதாபிகளாக சண்முகதாசனின் பாசறையில் வளர்ந்தவர்களாவர்.

கட்சியின் ஆதரவுடன் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் தம்மை இணைத்து நின்ற, ஆதரவுச் சக்திகளாகத் திகழ்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களில், பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சி. தில்லைநாதன், பேராசிரியர் என் சண்முகரத்தினம், கலாநிதி சி. மௌனகுரு, கே. டானியல், சுபைர் இளங்கீரன், இ. முருகையன், எச். எம். பி. மொகைதீன், சில்லையூர் செல்வராசன், செ. கணேசலிங்கன், என். கே. ரகுநாதன், நீர்வைப் பொன்னையன், எம். கே. அந்தனிசில், செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், கே. தங்கவடிவேல், யோ. பெனடிக்ற் பாலன், சுபத்திரன், இ. செ. கந்தசாமி, கே. ஆர் டேவிட், புதுவை இரத்தினதுரை, எஸ். ஜி. கணேசவேல், எஸ் வில்வராஜ், க. தணிகாசலம், செல்வ பத்மநாதன், இ. சிவானந்தன், கே. பவானந்தன், வி. ரி. இளங்கோவன், நந்தினி சேவியர், தேவி பரமலிங்கம், நல்லை அமிழ்தன், பொன் பொன்ராசா, பாசையூர் தேவதாசன், குமார் தனபால், இராஜ தர்மராஜா, முருகு கந்தராசா, எஸ். முத்துலிங்கம், எஸ். கனகரத்தினம், க. இரத்தினம், கு. சிவராசா, அண்ணாவியார் கணபதிப்பிள்ளை, எஸ் சிவபாதம், ஆ. தங்கராசா, நா. யோகேந்திரநாதன், செல்லிதாசன், எம். செல்லத்தம்பி, முருகு இரத்தினம், நவின்டில் சிவராசா, சோதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

யாழ்ப்பாணம் – நவாலியைப் பிறப்பிடமாகக்கொண்ட சண்முகதாசன், பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் அன்று சகல மாணவர்களையும் உள்ளடக்கிய மாணவர் சங்கத்தின் தலைவராக விளங்கிய காலம் முதல் புரட்சிவாதியாகச் செயற்பட்டு வந்தவர்.

யான், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐக்கிய நாடுகள் தொண்டராகப் பணியாற்றிவிட்டு நாடு திரும்பியதும் தோழர் சண்முகதாசனைச் சந்தித்து உரையாடச் சென்றேன். அப்போது பிலிப்பைன்ஸ் நாட்டு அனுபவங்கள், அங்குள்ள அரசியல் நிலைமைகள், மக்களின் வாழ்நிலை, போராட்டங்கள் குறித்துப் பேசினேன் . என்னே.. ஆச்சரியம்… அங்குள்ள அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடு, ‘புதிய மக்கள் படையின்” போராட்டம், மின்டனாவோ மாநிலத்தில் இயங்கும் ‘மோரோ தேசிய விடுதலை முன்னணி”யின் போராட்டம், மேற்கு மின்டனாவோவில் முஸ்லிம் மக்களுக்கான, பெயரளவிலான சுயாட்சி அரசு என்பன குறித்தெல்லாம் அற்புதமாக எடுத்துச் சொன்னார். அங்கு நேரில் பார்த்துவந்த எனக்கு அவரது விளக்கங்கள் ஆச்சரியத்தைக் கொடுத்தன. ஆம்.. அது தான் அவரது அறிவாற்றல்…! உலகின் எந்த நாட்டினதும் அரசியல் வரலாறு, நடப்பு நிலைமை, பொருளாதாரம், போராட்டங்கள் குறித்துக்கேட்டாலும் மூன்று மொழிகளிலும் விளக்கமளிக்கும் அற்புத ஆற்றல் அவருக்கிருந்தது.

தோழர் சண் கலை இலக்கியப் படைப்புகள் குறித்தும் மதிப்பிட்டு நெறிப்படுத்தும் தகமையுள்ளவர். ஒருமுறை, அமெரிக்க கறுப்பின மக்களின் வரலாற்றை ஓரளவு வெளிப்படுத்தும் ‘வேர்கள்” ( Roots)) நாவல் குறித்தும், முன்னர் வடசீனாவில் ஏற்பட்ட வரட்சி – பஞ்சம் குறித்து நெக்குருகச் சித்தரிக்கும் (தமிழிலும் வெளிவந்தது, பெயர் ஞாபகத்தில் இல்லை) ஒரு நாவல் குறித்தும் அவரோடு பேசிக்கொண்டது ஞாபகம்.

டானியலின் படைப்புகளை அவர் தொடர்ந்து வாசிப்பவர். டானியல் இறுதியாகத் தமிழகம் புறப்பட முன்னர் கொழும்பில் சண் வீட்டில் ஒரு சில தினங்கள் தங்கியிருந்தார். முன்னதாக சண்ணிடம் தனது அச்சேறாத ‘பஞ்சகோணங்கள்” நாவல் பிரதியைப் படிக்கக் கொடுத்திருந்தார். நாவலை முழுதாகப் படித்து முடித்த சண், அந்த நாவலின் முடிவில் மாற்றம் செய்வது நல்லது என டானியலிடம் குறிப்பிட்டது எனக்கு இன்றும் ஞாபகம். அதன்படியே டானியல் நாவலின் முடிவில் சிறிது மாற்றஞ்செய்து பிரசுரத்திற்கெனப் பேராசிரியர் அ. மார்க்ஸிடம் கொடுத்தார்.

1983-ம் ஆண்டுக்குப் பிறகு பேரினவாத ஒடுக்குமுறையின் உக்கிரம் தமிழ் மக்களைப் போராட்டப்பாதைக்கு உந்தித் தள்ளியதிலுள்ள நியாயத்தைச் சண் ஆதரிக்கத் தவறவில்லை. ஆனால், இதற்கும் சிங்கள முற்போக்குச் சக்திகளைப் புறம்தள்ளிய, தமிழ்த் தேசிய வாதத்திற்குள் மூழ்கிய சில தளம்பல் இடதுசாரிகளின் செயற்பாட்டிற்கும் மிக்க வேறுபாடு உண்டு.

சண் என்றும் ஒரு சர்வதேசியவாதியாகவே விளங்கியவர். மனித சமத்துவம், ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் எழுச்சி, போராட்டங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்ற கொள்கையிலிருந்து அவர் வழுவியதில்லை.

சர்வதேச தொழிற்சங்க அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான டொலர்கள் சம்பளத்தில் பணிபுரிய அழைப்புகள் கிடைத்தும், கொள்கையிலிருந்து கொஞ்சம் வழுவிக் கோடீஸ்வரனாக வாழ வழியிருந்தும், கொண்ட கொள்கைக்காக இறுதிவரை நேர்மைமிக்க சாதாரண மனிதனாகவே வாழ்ந்தவர். இவரது மனைவியும் இறுதிவரை இவரது இலட்சியங்களுக்கு ஏற்ப உற்றதுணையாகவே கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வாழ்ந்தவர்.

தோழர் சண் எழுதிய தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளிலான மார்க்ஸிச விளக்கக் கட்டுரைகள் ஏராளம். பல நூல்களையும் இம்மொழிகளில் எழுதியுள்ளார். அவற்றுள் ‘மார்க்ஸிச நோக்கில் இலங்கை வரலாறு, தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் பாதை எது, வாழ்க்கை வரலாறு குறித்த நூல்” என்பன மிக முக்கியமான நூல்களாகும். சண் காலமாகிய பின்னரும் அவரது பல கட்டுரைகள் நூலுருப் பெற்றுள்ளன.

இருதய நோயினால் பாதிக்கப்பட்ட சண் இறுதிக் காலத்தில் இங்கிலாந்திலுள்ள மகளுடன் தங்கியிருந்தபோது 1993-ம் ஆண்டு மாசி மாதம் 8-ம் திகதி திங்கட்கிழமை காலை… ..74-வது வயதில் காலமானார்.

தோழர் சண் வாழ்நாள் எல்லாம் எந்த இலட்சியத்திற்காக உழைத்தாரோ, அந்த தத்துவத்தைத் தந்த பேராசான் கால்மார்க்ஸ் 1883-ல் இங்கிலாந்திலுள்ள ‘கைகேற்” பக்கத்திலுள்ள சமாதிப் பூங்காவில் அடக்கம்செய்யப்பட்டார். சண்ணும் கால்மார்க்ஸ் காலமாகி 110-வது ஆண்டில் பேர்மிங்காம் நகரில் அடக்கமானார்.

சர்வதேசப் புகழ்பெற்ற, ஒரு நேர்மையான அரசியல், தொழிற்சங்கவாதி, மார்க்ஸிசத் தத்துவ ஆசான் சண்முகதாசன். அவரது இழப்பு மார்க்ஸிச அறிவுலகுக்கு மட்டுமன்றி இலங்கைத் தொழிலாள, விவசாய வர்க்கத்திற்கும், ஒடுக்குமுறைக்குள்ளான சகல மக்களுக்கும் பேரிழப்பு என்பதில் ஐயமில்லை.

கொழும்பில் இயங்கும், ‘மார்க்ஸிச கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்” சண் எழுதிய நூல்கள், கட்டுரைகளின் தொகுப்புகள் ஆகியவற்றை வெளியிட்டுவருவதுடன் கருத்தரங்குகள், அவரது நினைவுச் சொற்பொழிவுகளையும் ஒழுங்குசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மார்ச் 2010  இதழ் 123  http://www.geotamil.com/pathivukal/shanmugathasan.htm

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R