கமலாதேவி அரவிந்தான்இலக்கியமும் வாசிப்பும்
பலகாலமாக எழுதி வரும் அல்லது வாசித்து வரும் நண்பர்களிடம் நான் சில குழப்பங்களைக் கவனித்ததுண்டு. ஓர் இலக்கிய வாசிப்பு எப்படி நிகழ்கிறது; அது பொதுவான பிற வாசிப்பிலிருந்து தன்னை எப்படி வேறுபடுத்திக்கொள்கிறது என்ற அடிப்படையான கேள்விக்குப் பதில் இல்லாமலேயே பலகாலமாக தங்கள் வாசிப்புப் பணியை மேற்கொள்வர். ‘ஒரு பிரதியில் உள்ள சொற்றொடர்களை வாசித்தால் புரிகிறது’ எனும் ரீதியில் அவர்கள் பதில்கள் இருக்கும்.

ஒரு நகைச்சுவைத் துணுக்கு:
டாக்டர் : உங்களுக்கு ஆப்ரேஷன் செய்தால்தான் பிழைக்க முடியும்.
நோயாளி : நானா அல்லது நீங்களா டாக்டர்.

இதை வாசித்தவுடன் நமக்குச் சிரிப்புவரக் காரணம் என்ன என்று கொஞ்சம் ஆராய்ந்தாலே அதில் உள்ள இடைவெளிதான் என்பது சட்டெனப் புரியும். ‘எனக்கு அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள்’ என்பதுதான் நோயாளியின் பதிலின் சாரம். ஆனால் அந்தப் பதிலில் உள்ள மௌனமாக்கப்பட்ட பகுதிகளில்தான் வாசகரான நாம் நமது கற்பனையைத் திணிக்கிறோம். அதில் பங்கெடுக்கிறோம். நோயாளி பதிலில் உள்ள விமர்சனத்தை நாம் சட்டென சுவீகரித்துக்கொள்கிறோம். ‘அறுவை சிகிச்சை செய்யாமல் கூட நான் உயிர் பிழைக்க முடியும் எனும் சூழல் இருந்தாலும்  நீங்கள் பணம் சம்பாதிக்க அதை செய்ய மெனக்கெடுகிறீர்கள்’  என பதில் கொடுத்திருந்தால் நமக்குச் சிரிப்பு வந்திருக்காது. இதை வாசக பங்கேற்பு எனலாம். நகைச்சுவைத் துணுக்கு என்பதே இந்த வாசக பங்கேற்பு நிகழ்ந்தால்தான் வெற்றிப்பெறுகிறது.

ஓர் இலக்கியப் பிரதியும் இந்த வாசகப் பங்கேற்புக்கான இடைவெளியுடன் படைக்கப்படும்போதே அதில் வாசகன் தனது கற்பனையை உபயோகித்து படைப்பு முழுவதும் பயணிக்க இயல்கிறது. ஒரு வாசகனாகிய நான் சொல்லப்படாமல் எனக்கான இடைவெளியைவிட்டு உணர்த்த முயலும் படைப்புகளையே முக்கியமானதாகக் கருதுகிறேன். அந்த இடைவெளிகளில் புகுந்து விரித்தெடுக்கும்போதுதான் நான் அந்தப் படைப்பை எனக்குரியதாக ஆக்கிக்கொள்கிறேன்.

பொதுவாக மலேசியாவில் ஒரு படைப்புக் குறித்த விமர்சனங்களை வைக்கும்போது ‘அது அவரது ரசனைக்குரியதாக இல்லை. அதனால் பிடிக்கவில்லை’ என நழுவிச்செல்லும் எழுத்தாளர்கள் அதிகம். ஒரு படைப்பை என் ரசனைக்குட்பட்டு முன்வைக்கும்போது என் ரசனைக்குட்படாத மற்றவை மோசமானவை என பொருள் அல்ல என்பதை நானும் உணர்வேன். உதாரணமாக ஏதாவது ‘இசம்’ அடிப்படையில் எழுதப்பட்டதாக ஒரு படைப்பை முன்வைக்கும்போது நான் அதை வாசிக்க விரும்புவதில்லை.  அது என் தேர்வு மட்டுமே. இன்னொரு வாசகனுக்கு அதுபோன்ற படைப்புகள் பெரும் நெகிழ்ச்சியைத் தரலாம். இங்கு நான் சொல்ல வருவது அவரவர் ரசனைக்குட்பட்ட வாசிப்புக் குறித்தது அல்ல.  அடிப்படையில் மலேசிய – சிங்கை சூழலில் எழுதப்படும் படைப்புகள் இலக்கியப் பிரதியாக உள்ளதா என்பதுதான் என் தேடல். அது என் ரசனைக்குரியதாக இல்லை என்பதெல்லாம் இங்கு அவசியமற்றது.

ஓரளவு சங்கப் பாடல்களை வாசித்த அனுபவமும் நவீன இலக்கியங்களை வாசிக்கும் பழக்கமும் இருப்பதால் இலக்கியப்படைப்பு  அதன் நுண்மையினால்தான்  இலக்கியத்தகுதியை பெறுகிறது என புரிந்துகொள்கிறேன். இந்த நுண்மைக்கும் கல்விக்கும் பொதுவாக சம்பந்தம் இருப்பதில்லை என தாலாட்டு பாடலை கேட்டாலே புரியும். மலேசிய நாட்டுப்புறப் பாடல் ஒன்றில் இவ்வாறு வரி வருகிறது,

அந்த வெட்டு பார்க்கும் கங்காணி
விறுவிறுன்னு போயி தாவணியப் புடிச்சாரு
தங்கக் காப்பு என்று கையைப் புடிசாரு…


கங்காணி ஏன் கையைப் பிடித்தார் என வாசிக்கும் நமக்குப் புரிகிறது. அதை வாசிப்பவருக்கு இடைவெளியாக விடும் கலை கல்வியாலும் தீவிர வாசிப்பாலும் மட்டுமே வருவதில்லை. மிக எளிய தோட்ட வேலை செய்யும் ஒரு பெண்ணின் துயரத்தில் அந்த நுண்மையே புகுந்துள்ளது. மனிதர்களைச் சித்தரிப்பதிலும் நிகழ்வுகளை விவரிப்பதிலும் தெரியும் வாழ்க்கை மீதான அவதானிப்புகள்தான் எந்த எழுத்தையும் இலக்கியமாக ஆக்கும் முதல் அம்சம். அதேபோல சுழற்றிச் சுழற்றி மொழி ஆளுமையைக் கொட்டினாலும் ஒரு பிரதி இந்த அடிப்படைத்தன்மையைக் கொண்டிருக்காவிட்டால் அது இலக்கியப்பிரதியாக முன்னெடுக்கப்படுவதில்லை. அசோகமித்திரனின் ‘தண்ணீர்’, தகழியின் ‘ஏணிப்படிகள்’, ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ என எதுவுமே வாசகன் கண்களைப் பிதுங்க வைக்கும் மொழியை நம்பி உருவானவை அல்ல ஆனால் காட்சிசார்ந்த நுட்பங்கள் கொண்டவை.

ஒரு வாசகனாக நான் இவை அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன். அவசர அவசரமாக உணவை விழுங்கிவிட்டு, ருசிப்பதாகக் கூறி, பின்னர் ஜீரணிக்காமல் எடுக்கப்படும் வாந்திபோல ஒரு இலக்கிய விமர்சனம் மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அதன் அடிப்படையிலேயே சிங்கப்பூர் படைப்புகளையும் வாசித்து அதில் என் வாசிப்புக்குச் சிறந்தவற்றை முன்னெடுக்க நினைக்கிறேன்.

சூரிய கிரஹணத் தெரு
கமலாதேவி அரவிந்தன் அவர்களின் இரண்டாவது சிறுகதை தொகுப்பான ‘சூரிய கிரஹணத் தெரு’விலிருந்தே அவர் படைப்புலகை அணுகலாம் என நினைக்கிறேன். இவரது முதல் சிறுகதை தொகுப்பு ‘நுவல்’. மூன்றாவது தொகுப்பு ‘கரவு’.

மொத்தம் 12 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பை வாசித்தவுடன் எனக்குப் பெரும் அதிர்ச்சியே ஏற்பட்டது. பொதுவாக எழுத்தாளர்கள் குறித்த மனச்சித்திரம் அவர்கள் வாசிப்பை வைத்து உருவாவது இயல்பு. கமலாதேவி அவர்கள் வாசிப்பை நான் ஓரளவு அறிவேன். நவீன இலக்கிய வாசிப்புப் பரிட்சயம் உள்ளவர். மலையாள இலக்கியப் பரிட்சயம் உள்ளவர். எனவே அவரது சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கும் ஓர் எளிய வாசகன் மிகச்சிறந்த சிறுகதைகளை வாசிக்கப்போவதாகவே முன் முடிவுடன் அவர் நூல்களை அணுகக்கூடும். மேலும் வெங்கட் சுவாமிநாதனின் நல் அபிப்பிராயத்துடன் வெளிவந்திருக்கும் இந்த நூல் குறித்து வேறொரு கருத்தைச் சொல்ல மனத்தடை இருப்பது இயல்புதான். ஆனால் வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் எத்தனை பலவீனமானவர்கள் என்பது இந்தத் தொகுப்புக்கு அவர் முன்னுரை ஒரு சான்றாக எப்போதும் இருக்கும்.

சில சிறுகதைகள்
உத்தமி – மகேஸ்வரியை அவளது கணவர் வேலைக்காரப் பெண்ணுக்காகப் பரிந்து பேசி தே……. (நூலில் அப்படித்தான் எழுதியுள்ளார்) என ஏசி விடுகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இந்தக் கிழவி காப்பகம் ஒன்றில் இணைகிறாள். ஆனால் எதையும் சாப்பிடாமல் அவ்வப்போது அந்த தே….. வார்த்தையை நினைத்து நினைத்து உணர்ச்சிவசப்படுகிறார்.  ஆனால் தமிழ்ப்படத்தில் வரும் நடிகர் விசுபோல ரொம்பவும் ஒத்தாசையாக இருக்கிறார்.  பின்னர் அவரை எஸ்தர் என்பவள் கண்டுபிடிக்க மீண்டும் வீட்டுக்குப் போகப் பிடிக்காமல் கிழவி காணாமல் போகிறாள். கதையில் இப்படி ஒரு குறிப்பு வருகிறது.

(பின் குறிப்பு : நாச்சிமுத்து பெரியவர் அப்படி என்னதான் சொல்லிவிட்டாரென்று வாசகர்கள் விக்கித்துப்போய்க் கேட்டால் பதில் இதுதான். செந்தமிழ்த் தேன் மொழியில், சங்கம் வளர்த்த நற்றமிழில்…..)

எனத்தொடங்கி ‘தேவடியாள்’ என்ற வார்த்தைக்கான விவரணைக் கொடுக்கிறார்.

தொலைதூரம் – கேலாங் எனும் பாலியல் தொழில் நடக்கும் பகுதியில்தான் ராஜ் மற்றும் சியூ கிம் அறிமுகம். தன் பழைய தொழிலை விட்டுவிட்டு சியூ கிம் சமத்தாக வேலைக்குப் போகிறாள். ஆனால் அவள் தன் கணவனின் அப்பா யார் என்று கேட்க சிக்கல் வருகிறது. அவள் பேயறை வாங்கி வெளியேறுகிறாள். இவன் அம்மாவின் அலமாரியைக் குடைந்து தேடியதில் அப்பாவின் படம் கிடைக்கிறது. வெளியே காலிங் பெல் ஒலி. வெளியே சியூ கிம். சுபம்.

திரிபு – சசிரேகா குண்டான பெண். அதனால் தாழ்வு மனப்பான்மை அடைந்து உடல் இளைக்க முயல்கிறாள். ஒரு பெரியவர் அவள் வயதைக் கூட்டிக் கணிக்கிறார். அந்தப் பூங்காவில் இருந்த ஒரு மரமும் அவள் இளைத்தால் அழகாக இருப்பாள் எனச் சொல்கிறது. (ஆம் ! மரம்தான்) அதனால் அவள் ஓடி ஓடி உடல் இளைக்கிறாள். இப்போது அந்த வயதானவர் அந்த மரம் என அனைத்தும் அவளைத் திருமணம் செய்துகொள்ள காதல் விண்ணப்பம் செய்கின்றன. அவளுக்குக் கோபம் வருகிறது. அப்போதுதான் அம்மா அவளுக்குப் பார்த்த பையன் நினைவுக்கு வர வீட்டுக்கு போகிறாள் மாப்பிள்ளை பார்க்க.

சிதகு – ஒரு சீரியலை எங்கிருந்து பார்த்தாலும் கதை புரிந்துவிடும் என்பார்கள். நான் இந்தக் கதையின் இறுதி மூன்று பத்திகளை மட்டும் இங்கு எழுதுகிறேன். வாசகர்களுக்கு முழுக் கதையும் புரியலாம்.

“ஆமாம் பிரகாஷ், உண்மைதான். ஆனா உங்களுக்கு ஒரு குழந்தையைப் பெற்றுத்தர முடியாதே தவிர, வேறு எந்தக் குறையும் வைக்க மாட்டேன். வாழ்நாள் பூரா உங்க அடிமையாவே உங்களுக்காகவே, உங்க சுகத்துக்காக மட்டுமே நான் வாழ்வேன், என்னை நம்புங்க!”

பிறகு சிவாவை யாருமே அந்த அலுவலகத்தில் பார்க்கவில்லை. ஒரு திருநங்கையை மணக்கும் அளவுக்கு அவனுக்கு பக்குவம் வரவில்லை என்று யாராவது நினைத்தால், அட போங்க சார். சிங்கப்பூரில் இந்த திருமணம் சட்டப்படி குற்றம் என்பதுகூடவா உங்களுக்குத்தெரியாது?

சார்! சார்! ஒரு கதை கேளுங்க சார்!- இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரையும் எழுதி இணைத்துள்ளார் ஆசிரியர். பொறுமை உள்ளவர்கள் வாசிக்கலாம்.

புரை – தொடர்ந்து வீட்டில் அவமானப்படுத்தப்படும் பெரியவர் , இறுதியில் ஒரு இளம் பெண்ணுடன் இணைத்து பேசப்படும்போது மாடியிலிருந்து விழுந்து இறக்கிறார். அவர் இறப்பு குடும்பத்துக்கு அவமானமாக உள்ளது.

ஒரு நாள் ஒரு பொழுது – சிங்கப்பூர் அரசின் தேசிய சேவைக்கான அரசு பிரசாரமும் இந்த நூலில் இந்தத் தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது.

நுளம்பு – வழக்கமாக சாப்பிடும் உணவத்தில் சகோதர பாசத்துடன் பழகுகிறான் மச்சக்காளை. ஒருமுறை அவன் உண்டுவிட்டு கொடுத்த 10 வெள்ளியை ஐம்பது வெள்ளி என நினைத்து  மீதம் அதிகமான பணத்தைக் கொடுக்க அதை திரும்பக் கொடுக்கலாமா வேண்டாமா என யோசனையில் இருக்கும்போதே அவன் குழந்தைக்கு உடல் நலம் இல்லை என கேள்விப்படுகிறான். உடனே பணத்தைத் திரும்பக் கொடுக்கிறான்.

கமலாதேவியின் பெரும்பாலான சிறுகதைகள் கேள்விகள் இல்லாமல் உள்ளன. அவரிடம் வாழ்வு குறித்தும் பொதுபுத்தியில் ஊறிய நம்பிக்கைகள் குறித்து எவ்விதமான மாற்று அபிப்பிராயமும் இல்லை. அவரது ஒவ்வொரு கதையை வாசிக்கும்போதும் ‘அதனால் என்ன?’ என்ற கேள்வியே எனக்கு மிஞ்சும் அளவுக்கு மிகைப்படுத்தப்ப நாடகத்தன்மையான சூழலே நிறைந்துள்ளது.  பல சமயங்களில் ஏதோ பழைய திரைப்படத்தை மீண்டும் ஓட்டிப்பார்ப்பதுபோல ஒரு பிம்பம். வழிந்து அவர் திணிக்கும் மலையாளச் சொற்கள் பலவீனமாக அந்தரத்தில் நிற்கின்றன. கமலாதேவி அவர்களால் கதைக்களத்தை மிகச்சரியாகவே தேர்வு செய்ய முடிகிறது. ஆனால் சிறுகதைக்கான எந்த நுணுக்கமும் இல்லாமல், வாழ்வு குறித்து எந்தக் கேள்வியும் இல்லாமல் அத்தனையும் பிரச்சாரமாகவே தொணிக்கிறது. மிகச்சிறிய பாதிப்புக்கு மிகை உணர்ச்சியுடன் பாவனை காட்டும் கதாபாத்திரங்களே அவரது கதைகளில் வந்து செல்கின்றன. அவை உண்மையா இல்லையா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க மேலே குறிப்பிட்டவற்றை நிச்சயம் சிறுகதையாக குறிப்பிடுவது அபத்தம் என்று உறுதியாகச் சொல்வேன். சிந்தனையில் மாற்றம் இல்லாவிட்டாலும் கதை கூறும் பாணியையாவது அவர் அறிந்து வைத்திருந்தால் வெகுஜன வாசகர்களையாவது கவர வாய்ப்புண்டு. ‘சூரிய கிரஹணத்தெரு’ மற்றும் ‘கறுப்புப்பூனை’ அவ்வாரான வாசகர்களைக் கவர வாய்ப்புண்டு.

இந்தத் தொகுப்பில் ‘மாம்பழப் புளிச்சேரி’யில் ஆசிரியர் தனக்கு நாடகம் குறித்து தெரியும் என்ற மெனக்கெடல் இல்லாமல் கதையை நகர்த்தியிருந்தால் நல்ல சிறுகதையாகவே அது உருவாகியிருக்கும். அதேபோல ‘இட்டிலி’ இத்தொகுப்பில் பொருட்படுத்தி வாசிக்க வேண்டிய சிறுகதையாகக் கருதுகிறேன். ஆன்மிகத்தேடலில் நடக்கும் குழப்பங்களை நகைச்சுவையுடன் சொல்ல முயன்றுள்ளார். கதாசிரியர் தலையீடு குறைந்திருப்பது நிம்மதி.

கமலாதேவியின் எழுத்துகளில் மிகப்பெரிய பலவீனம் தனது அறிவாற்றலை கதைகளின் வழி காட்ட முயல்வதே. அதன்மூலம் தனது ஆளுமையை திடப்படுத்திக்கொள்ள முனைவதே. ஒரு சமையல்காரனுக்கு ஏகப்பட்ட பதார்த்தங்கள் செய்யும் திறன் இருந்தாலும் அதை ஒரே சட்டியில் கொட்டி கிண்டினால் எப்படி உண்ண முடியாதோ அதேபோல கமலாதேவியும் தனக்குத் தெரிந்த விசயங்கள் அனைத்தையும் தன் வாசகனிடம் சொல்லிவிடத் துடிக்கிறார். அதுவே அவர் கதைகளை கீழே இழுக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பிணம் போல ஜோடனை சொற்களுடன் கதை தொடங்கும் முன்பே இறந்தும் விடுகிறது.

ஆனால், இவை ‘சூரிய கிரஹணத் தெரு’ தொகுப்பை அடிப்படையாக வைத்து எழுந்த விமர்சனம் மட்டுமே. இன்னும் அவரது இரு சிறுகதை தொகுப்புகள் உள்ளன. அதையும் உள்வாங்குவதுதானே முழுமையான வாசிப்பு.

நாளை கரவு நூல் குறித்து தொடரும்…

நன்றி: http://vallinam.com.my/navin/?p=2252

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R