மாதவி சிவலீலன் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பாடலைப் பேணுவதற்கு மொழி அவசியமாகின்றது. அவர்கள் தங்களது உணர்வுகளையும் தேவைகளையும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனவே மொழி ஆளுமையென்பது ஒருவரது இருப்பைத் தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு குழந்தை வயிற்றில் உள்ள போது கேட்கும் மொழி தாயினது உரையாடல்களேயாகும். பின்னர் அக்குழந்தை தவழ்ந்தும் நடந்தும் வளர்ந்தும் வரும் போது, கேட்டும் பேசியும் படித்தும் தனக்கான ஒரு மொழியில் ஆளுமை பெறுகின்றது.

இவ்வகையில் புலம்பெயர் சூழலில் எமது தாய்மொழிக் கல்வியென நாம் கொள்ளும் தமிழ்மொழி, தாயகத்தில் கற்கப்படுவதற்கும் கற்பிக்கப்படுவதற்கும் உள்ள முறையில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றது. ஏனெனில் சுற்றுச் சூழலும் அதன் அமைவியலும், சுற்றமும் உறவுகளும் தருகின்ற அனுபவங்களும் குடும்ப உரையாடல்களும் தமிழ் மொழியாக இருக்கும் சூழலில் உள்ள குழந்தை தான் பேசிப் பழகிய மொழியில் எழுத வாசிக்க தொடங்குவது அதனது சிந்தனையைப் பல்வேறு வழிகளில் தூண்டுவதாக அமையும். ஆனால் புலம் பெயர் சூழலில் வாழ்கின்ற பிள்ளைகள் வீட்டில் தாய் தந்தையுடன் தமிழ் மொழியைப் பேசிக்கொண்டும் தொலைக்காட்சியிலும் வீட்டிற்கு வெளியேயும் வேறொரு மொழியோடு ஊடாடிக் கொண்டும் தமிழ் மொழியை கற்கத் தொடங்குவது சிரமமேயெனினும் பெரும்பாலான பிள்ளைகள் விருப்புடனேயே தமிழைக் கற்கத் தமிழ்ப்பாடசாலகளுக்கு வருகின்றனர்.

பிரித்தானியாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர்களின் வருகையும் தொடர்பாடலும் கீழைத்தேச நாடுகளில் ஆங்கிலேய ஆட்சி இருந்த காலத்தில் இருந்தே இடம்பெற்றுள்ளது. இலங்கையில் பணியாற்றச் செல்பவர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கும் வண்ணம் தனியார் வகுப்புகள் இடம் பெற்றுள்ளதாக Aberdeen Press and Journal பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளதாக மு.நித்தியானந்தன் தனது கூலித் தமிழ் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். ( தமிழ் போதிக்கப்படும்! கிழக்கு நாடுகளை நோக்கிச் செல்பவர்களுக்கான பயிற்சி! அபர்டீன் வகுப்பு தயார்!)  
ஆனால் அக்காலத்தில் ஈழத்தில் இருந்து பிரித்தானையாவிற்கு வந்த தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பித்துக் கொடுப்பதைக் காட்டிலும் ஆங்கில மொழிக் கல்வியைப் போதித்து ஆங்கிலச்சமுகத்திலும் தம் உறவுகளுடனும் தமக்கான மதிப்பைப் பெறுவதிலேயே குறியாக இருந்தனர்.

பின்னர் தாயகத்தில் ஏற்பட்ட போரும் அதன் இழப்பும் இளைஞர்களை ஐரோப்பிய நாடுகள் நோக்கிப் புலம்பெயர வைக்க அவர்கள் தம்மோடு மொழியையும் பண்பாடு கலாசாரங்களையும் காவி வந்தனர். சிதறுண்டு போய் தத்தமக்குரிய வாழ்விடங்களைத் தீர்மானித்தவர்கள் திருமணம் செய்தும் பிள்ளைகள் பெற்றும் வளர்த்தும் அவர்களுக்குக் கல்வியூட்டும் போது தங்களது மொழியைப் பண்பாட்டைப் போதிப்பதில் அக்கறை கொண்டனர்.

ஆரம்பத்தில் சிறு சிறு குழுக்களாக வீடுகளில் நடாத்தப்பட்ட தமிழ் வகுப்புகள் பின்னர் நிறுவனமயமாக்கப்பட்டு ஆங்கிலப் பாடசாலைகளில் வார இறுதி நாட்களில் நடாத்தப்படத் தொடங்கின. இவ்வகையில் 1973ஆம் ஆண்டு இலண்டனில் முதன் முதலில் திரு ஆனந்தராஜா என்பவரால் விம்பிள்டன் பகுதியில் ஒரு தமிழ்ப் பாடசாலை சனசமுக நிலையமொன்றில் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வந்தது. அது பின்னர் திரு திருச்செல்வம் என்பவரை அதிபராகக் கொண்டு இயங்கிய போதும் அவரது மறைவின் பின்னர் அப்பாடசாலை மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1975ஆம் ஆண்டளவில் ஈஸ்ட்காம் மனொப்பாக்கில் திருவள்ளுவர் பாடசாலை தொடங்கப்பட்டது. 1978ஆம் ஆண்டில் மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலை உருவாகி இயங்கியது. இவை தவிர வோல்த்தம்ஸ்ரோ தமிழ்ப்பாடசாலை, இலண்டன் தமிழ் நிலையம், என்பன  குறிப்பிடத்தக்கனவாக வளர்ச்சி கண்டன. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் அன்று அப்பாடசாலைகள் வெற்றிகரமாக நடைபெற்று வந்தன.

இன்று இலண்டனில் மூலை முடுக்கெல்லாம் தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் தமிழர் மேம்பாட்டுப் பேரவை எனும் அமைப்பினால் எண்பத்தாறு பாடசாலைகள் நிர்வகிக்கப்படுகின்றன. தமிழ்க்கல்விப் பேரவை எனும் அமைப்பில் ஏறக்குறைய 25 பாடசாலைகள் இயங்குகின்றன. இது தவிர தமக்கெனத் தனித்துவமான பாடத்திட்டங்களைக் கொண்டு இயங்கி வருகின்ற பாடசாலைகளில் பெருந்தொகையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். குறிப்பாக இலண்டன் தமிழ் நிலையத்தில் ஏறக்குறைய நானூறு மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இது போன்று இன்னும் சில பாடசாலைகளில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் வருகை தருகின்றனர்.

மழலைகள் பிரிவு, பாலர் பிரிவு, ஆரம்பப் பிரிவு, முதலாம் வகுப்பு என வகுப்புகள் ஏறு வரிசையில் அமைக்கப்பட்டு உயர்தர வகுப்பு வரை மாணவர்கள் அங்கு உள்ளடக்கப்படுகின்றனர். மூன்றரை வயதில் இருந்து மாணவர்கள் தமிழ் படிக்க வருகின்றனர். இவர்களை மழலைகள் பிரிவு எனக் குறிப்பிட்டு, அங்கு அபிநயங்களும் பாட்டும் கதைகளும் சொல்லிக் கொடுக்கபடுகின்றன. தற்போது ஆங்கில மொழியில் இருக்கும் சிறுவர்களுக்கான பாடல்கள் அதே ஓசையுடன் தமிழாக்கம் செய்யப்பட்டுப் போதிக்கப்படுகின்றது. அதனால் குழந்தைகள் அப்பாடல்களுடன் ஒன்றிப் போவதனை அவதானிக்க முடிகின்றது. இது போன்றே குட்டிக் கதைகளும் தமிழாக்கம் செய்து கொடுக்கப்படுகின்றது.

அத்துடன் பாடசாலைகளின் பாடத்திட்டங்களில் ஆசிரியர்கள்,  தாயகத்தில் தாம் கற்ற பாடல்கள், கதைகள் என்பவற்றுடன் மேலதிகமாகக் கட்டுரைகள், உரையாடல்கள், இலக்கணம், பயிற்சிகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளனர். ஒவ்வொரு தவணையும் மாணவர்களிடையே கேட்டல் பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய பயிற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாவெனப் பரீட்சைகள் நடாத்தப்பட்டு தவணை அறிக்கைகள் கொடுக்கப்படுகின்றன. அத்துடன் மாணவர் வரவைக் கூட்டும் வகையிலும், அவர்களது வகுப்புச் செயற்பாடுகளை அதிகரிக்கும் வகையிலும் சிறு பரிசில்கள், நட்சத்திரக் குறியீடுகள் என்பன வழங்கப்படுகின்றன. மேல் வகுப்புகளில் பந்தி வாசித்து விடை எழுதுதல், கட்டுரை, கடிதம், உரையாடல், அறிக்கை எழுதுதல், தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகள், என்பன கற்பிக்கப்படுகின்றன. கேம்பிரீட்ச் உயர்தரப் பரீட்சை வினாத்தாளில் தமிழ் இலக்கியங்கள் ஒரு வினாத்தாளாக இடம்பெறுகின்றது. அங்கு சங்க இலக்கியப்பாடல்கள், திருக்குறள், தேவாரம், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், நவீன சிறுகதைகள், நாடகப் பிரதி என்பன சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. மாணவர்கள் பரீட்சையின் போது ஒவ்வொரு வினாவிற்கும் ஐந்நூறு சொற்களில் விடையளிக்கின்றனர்.

ஆரம்பத்தில் நூல்கள் அச்சுப் பதிக்க முடியாத நிலையிலும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் மாணவர்களுக்கேற்ற மாதிரி நூல் கிடைக்காதவிடத்தும் மலேசியாவில் இருந்து `நற்றுணைத் துணைவன்` எனும் பாடநூல் இறக்குமதி செய்யப்பட்டு முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிப்பிக்கப்பட்டன. அதிக பயிற்சிகளைக் கொண்ட இந்நூலில் குறைபாடுகள் சில இருந்த போதும் ஆசிரியர்களுக்கு இது மிகவும் பிரயோசனப்பட்டதெனலாம். இன்றும் சில பாடசாலைகள் இந்நூலைப் பயன்படுத்துகின்றன. தற்போது தமிழறிவு, வளர்நிலை, வளர்தமிழ் எனும் பெயர்களில் தமிழ்ப்பாட நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றைக் கையேடுகளாகக் கொண்டு, ஆசிரியர்கள் தமது திறமையையும் பயன்படுத்தித் தமிழைப் போதிக்கின்றனர். தனிப்பட்டவர்களும் மாணவர்கள் தேவை கருதி ஒரு சில நூல்களை வெளியிட்டுள்ளனர்.

முதலாம் ஆண்டிலிருந்து மேல் வகுப்பு வரை வளர்தமிழ், வளர்நிலைப் பரீட்சைகள் வருடந்தோறும் நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் கொடுக்கப்படுகின்றன. எடெக்சல்(Edexcel) ஒசிஆர்(Oxford Cambridge and RSA) போன்ற பரீட்சைகளும் நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்களில் மருத்துவம், இதழியல் போன்ற கற்கைநெறிகளுக்குத் தமிழ்மொழிப் பாடச் சான்றிதழ்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

உயர் வகுப்புகளுக்கு வந்த பின்னரே மாணவர்களுக்குத் தமிழ்மொழி கற்க வேண்டுமென்ற ஆர்வம் இயல்பாக அமைந்து அதனைச் சுவைபடக் கற்கத் தொடங்குகின்றனர். உயர்தரப் பரீட்சையின் பின்னர் தமிழில் பட்டப்படிப்புப் படிக்க மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் ஆங்கில மொழி இலக்கியங்களுடன் தமிழ் மொழி இலக்கியங்களை அவற்றின் வடிவங்களை ஒப்பிட்டுப் பார்க்கின்ற தன்மையை அவதானிக்க முடிகின்றது.

பொதுவாகப் பாடசாலைகளில் உள்ள குறைபாடு என்னவெனில் பொது நோக்கில் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள் உள்முரண்பாடுகளினாலும் பதவி ஆசைகளினாலும் உடைந்து போய் இரண்டாகி மூன்றாகித் தம் இயல்பை இழந்து விடுகின்றன. அத்துடன் வார இறுதி நாட்களில் ஆங்கிலப் பாடசாலைகளில் இத் தமிழ்ப்பாடசாலைகள் இயங்குவதால் அப்பாடசாலைகளுக்குப் பெருந்தொகைப் பணத்தை வாடகையாகச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் நிர்வாகத்தினருக்கு ஏற்படுகின்றது. இதிலுமுள்ள சிரமம் என்னவெனில் தங்களது பாடசாலைச் சொத்துக்களில் பாதிப்பு ஏற்பட்டால் மேலதிகப் பணத்தை ஆங்கிலப்பாடசாலை நிர்வாகம் இவர்களிடம் அறவிட முற்படுகின்றது. அத்துடன் அவர்களது அனைத்து உபகரணங்களையும் பாவிப்பதற்கு அனுமதி கிடைப்பதில்லை. இதனால் பாடசாலையின் அசையாச் சொத்துக்களைப் பேணுவதிலும் மாணவர்களைக் கட்டுப்படுத்துவதிலும் நிர்வாகம் பெரும் சிரமத்தை எதிர் நோக்குகின்றது.

ஆயினும் தமிழாசிரியர்கள் விரும்பியே தமிழ்மொழியைக் கற்பிக்க வருகின்றனர். எனவே, இவை அனைத்துக்கும் மேலாகத் தமிழ் மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்கும் போது ஏற்படும் சிக்கல்கள், அவற்றை எவ்வாறு தீர்க்கலாமென்பது பற்றி இருபத்தொரு ஆசிரியர்களுக்கிடையே வினாக்கொத்து மூலம்  பெற்ற தகவல்களின் அடிப்படையிலும், அவர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடியும் பின்வரும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டன.

1.நேரப்பற்றாக்குறை: கிழமைக்கு ஒன்றரை மணித்தியாலயம் அல்லது இரண்டு மணித்தியாலம் மட்டுமே வகுப்பில் தமிழை மாணவர்கள் கற்பதனால் அவர்களின் முன்னேற்றத்தில் அதிகவனம் செலுத்த முடியவில்லை. எனவே பெற்றோரும் வீடுகளில் கவனமெடுத்து தமிழைச் சொல்லிக் கொடுப்பது அவசியமாகும். ஆனால் பெரும்பாலான பெற்றோர் இதனைச் செய்வதில்லை.

2.மாணவர் தரம்: பல்வேறு தரங்களில் மாணவர்கள் வகுப்பில் இருக்கும் சந்தர்ப்பத்தில் பாடத்திட்ட அடிப்படையில் பாடங்களை நடாத்த முடிவதில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன. இடையிலே மாணவர்கள் வந்து பாடசாலையில் அனுமதி பெறுதல்; பதினொரு வயதில் உயர்தரப்பாடசாலைகளுக்கான அனுமதிப் பரீட்சை நடைபெறுகின்றது அதற்குத் தம்மை ஆயத்தப்படுத்துவதற்காகக் குறிப்பிட்ட சில காலம் மாணவர்கள் தமிழ்ப்பாடசாலை வருவதில்லை; இதேபோன்று உயர் வகுப்புகளுக்கு வந்ததும் தமிழ் கற்க நேரம் ஒதுக்குவதில் சிரமப்படுகின்றனர்.

3.பாடத்திட்டம் / பாடநூல்கள்: பாடத்திட்டங்கள் பாடநூல்கள் இதுவரை பல வந்த போதும் இங்குள்ள மாணவர்களின் கற்றலுக்கமைய அவை திருப்தி தருவதாக அமையவில்லை. சில தமிழ்ச் சொற்களுடன் அவர்களுக்குப் பரீட்சயமற்றிருப்பதால் அவர்கள் மனங்களில் அவை படிவதில்லை. உதாரணமாக உரல், உலக்கை, செம்பு, ஓணான், ஐயர், இராட்டினம் இப்படிப் பல; இந்த இடத்தில் மாணவர்களுக்கு கண்களால் படங்களையோ அல்லது ஒளிப்படங்களையோ பார்த்துக் கற்பதற்கான வசதிகள் (visual education) தேவைபடுகின்றது.

4.கற்பிக்கும் முறைமை: மாணவர்கள் தாங்கள் ஆங்கிலப்பாடசாலையில் எவ்வாறு படிக்கின்றார்களோ அவ்வாறு தமிழையும் கற்க வேண்டுமென விரும்புகின்றனர். வகுப்பில் அதிக மாணவர்கள் இருந்தால் ஒவ்வொருவரையும் அதிக கவனம் எடுத்துக் கற்பிக்க முடிவதில்லை. அச்சந்தர்ப்பத்தில் உதவி ஆசிரியர்கள் இருப்பது அவசியமாகின்றது. ( சில பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை உதவியாசிரியர்களாக நியமித்துள்ளனர்; இங்கு பயிற்சி பெற்ற பின்னர் வகுப்பாசிரியர்களாக அவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.)

5.ஒரு சில பாடசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட வகுப்பறைகளே உள்ள காரணத்தால் இரண்டு வகுப்புகள் ஒரு அறையில் நடைபெறுவதுண்டு. இதே போன்று கற்பிப்பதற்குரிய உபகரணங்கள் போதியளவு இல்லாமையும் சிரமத்தைத் தருகின்றது.

6.ஆசிரியப்பயிற்சி போதாமை: தமிழ் போதிக்கும் ஆசிரியர்கள் தாயகத்தில் எவ்வாறு தமிழ் மொழி கற்பித்தார்களோ அவ்வாறே இங்கும் தமிழ் மொழியைக் கற்பிக்கின்ற காரணத்தால் அப்படிப்பித்தல் முறைமை வெற்றி தருவதில்லை. ஆசிரியருக்கான கருத்தரங்குகள் நடைபெற்ற போதும் இன்னும் மேலதிக ஆசிரியப்பயிற்சிகள் நடைபெறுவது அவசியம்.

7.மாணவர்கள் தமிழ் படிக்கும் போது தங்களுக்கான சந்தேகங்களுக்கு ஆங்கில மொழியில் விளக்கங்கள் சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். ஆங்கில மொழியினூடாகத் தமிழ் கற்க விருப்பம் காட்டுகின்றனர்.

8.வார இறுதி நாட்களை மகிழ்வுடன் களிப்பதற்காக வரும் மாணவர்கள் பாடநூல்களை ஒழுங்காகக் கொண்டு வருவதில்லை; அத்துடன் கொடுக்கப்படும் வீட்டுவேலைகளும் செய்து வருவதில்லை. இது அக்கறையுடன் கற்க வருகின்ற ஏனைய மாணவர்களையும் பாதிக்கின்றது.

9.மாணவர்களது உச்சரிப்பு: ஆங்கில மொழியை உச்சரிப்பது போன்று தமிழ் மொழியை உச்சரிக்கின்றனர். அத்துடன் ல,ழ,ள்,ர,ற,ன,ண,ந போன்ற எழுத்துக்களுடன் கூடிய சொற்களை உச்சரிப்பதிலும் சிரமப்படுகின்றனர். உச்சரிப்புப் பிழையாக இருப்பதால் அவர்கள் எழுதும் போதும் பிழையாக எழுதுகின்றனர். உதாரணமாக பந்து என்பதை பன்து என்றும் பெரிய என்பதை பெறிய என்றும் பிறகு என்பதை பெறகு என்றும் எழுதுவார்கள்.

10.தமிழ்மொழியில் உரையாடுவதற்கு ஊக்குவிப்பதும் அவசியமாகின்றது. வீட்டில் தமிழ் பேசும் மாணவர்கள் இலகுவில் தமிழ்க் கல்வியைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆயினும் வீட்டில் தமிழ் மொழி பேசாதவிடத்திலும் மாணவர்கள் தமது கடின முயற்சியால் எழுத்துப் பரீட்சையில் அதிக மதிப்பெண்ணைப் பெற்றுக் கொள்கின்றனர்.

11.பாடசாலைகள் தோறும் சிறு நூலகசேவை இருக்க வேண்டும். அங்கு பிள்ளைகளுக்கான வாசிப்பு நூல்கள், முக்கியமான இலக்கிய நூல்கள் இருத்தல் அவசியம்.

12.ஒவ்வொரு பாட நேரத்திலும் சொல்வதெழுதல் கட்டாயம் செய்விக்க வேண்டும். அது மாணவர்களுக்கான மொழியறிவைக் கூட்டும்.

13.தொழில்நுட்பத்துடன் கூடிய தமிழ்க்கல்வியும் வெளிப்புறக் கல்வியும் தேவை.

14.இளம்பெற்றோருக்குத் தமிழ்மொழி பேசவோ எழுதவோ தெரியாது. எனவே அவர்கள் பிள்ளைகளுக்கு உதவ முடிவதில்லை.


இதேசமயம் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவர்களது தேவைகளையும் விருப்புக்களையும் இனங்காண முடிந்தது. இவ்வாய்வுக்கு இலண்டன் தமிழ் நிலையத்தில் தமிழ் மொழி கற்கும் உயர்தர வகுப்பு மாணவர்களதும்,  வெம்பிளி உயர்தரப் பாடசாலையில் பின்னேர வகுப்பில் தமிழ் மொழி பயிலும் மாணவர்களதும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. அவர்களிடம் கொடுக்கப்பட்ட வினாக் கொத்தில், உனது தாய் மொழி எது? தமிழ் மொழியைப் படிக்க விரும்புகின்றாயா? தமிழ்ப் படிக்கும் போது ஏற்படும் சிரமங்கள் எவை? தமிழப் படிப்பதால் ஏற்படும் பயன்பாடுகள் என்ன? ஏனைய மொழிகளைக் கற்பதில் இருந்து எவ்வாறு தமிழ் மொழி கற்பது வேறுபடுகின்றது? தமிழ் மொழியை எப்படிக் கற்பிக்க வேண்டுமென விரும்புகின்றாய்? வீட்டில் தமிழ் பேசுவாயா? தமிழ் நூல்கள் வாசிப்பாயா? போன்ற வினாக்கள் கொடுக்கப்பட்டன. இவற்றிற்கு அவர்கள் தந்த விடைகள் தமிழ் மொழிக் கல்வியை இன்னொரு படி மேலே முன்னேற்றுவதற்கு உதவுமென நம்பலாம்.

பெரும்பாலான மாணவர்கள் தமிழ் மொழியே தங்களது தாய்மொழியெனக் குறிப்பிட்டுள்ளதுடன் விரும்பியே தமிழ் படிக்க வருகின்றோமெனக் கூறியுள்ளனர். ஆயினும் இடை வகுப்பு மாணவர்களிடம் இவ்வினாவைக் கேட்டால் அம்மாவின் வற்புறுத்தலினால் படிக்க வருவதாகக் குறிப்பிடுவர். தாயகத்திற்குச் செல்லும் போது உறவினர்களோடு உரையாடுவதற்கும், பிரித்தானியாவில் தமிழர்களோடு உரையாடுவதற்கும் தமிழ் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது என்பதுடன், தமிழ்த் திரைப்படங்கள் பார்த்து விளங்கிக் கொள்ளவும் கடிதம், மின்னஞ்சல் என்பன அனுப்பவும்  தமிழ் கற்பது அவசியமென்கின்றனர். ஒரு சில மாணவர்கள் தாமும் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களாக வர விரும்புவதாகக் கூறினர்.

பல மாணவர்களிடையே இது தாய் மொழி என்பதால் படிக்கத்தான் வேண்டுமெனும் சிந்தனை காணப்படுகின்றது. தமிழ் மொழியைக் கற்றால் எதிர்காலத்தில் தங்களுக்கு ஏதோவொரு வகையில் அது உதவுமென்ற நம்பிக்கையும் அவர்களிடையேயுண்டு. உயர்தர வகுப்பு மாணவர்கள் கூறும் போது எங்களது பண்பாடு கலாசார விழுமியங்களை எங்களது மொழிக்கூடாகக் கற்றுக் கொள்வதே சிறந்ததெனக் கூறினர். எனவே தமிழ் மொழி கற்றால் தான் அது சாத்தியமாகுமென்றனர். இது முற்றிலும் உண்மையான விடயமாகும்.

மாணவர்கள் ஆங்கில மொழியுடன் இலத்தீன், ஸ்பானிக்ஷ், பிரன்சு, யேர்மன், மண்டரின், யப்பானிஸ் போன்ற மொழிகளையும் கற்கும் அதேசமயம் தமிழையும் கற்பதால் மொழி வேறுபாடுகளையும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இவை ஒப்பீட்டுக் கல்விக்குப் பெரிதும் உதவுகின்றது.  வீட்டில் பெரும்பாலும் பெற்றோர் தமிழ் மொழி பேசினாலும் அவற்றிற்கு இவர்கள் ஆங்கிலத்திலேயே பதில் கொடுக்கின்றனர். இதனைப் பல வீடுகளில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. பெற்றோர் தாயகத்தில் ஓரளவேனும் ஆங்கிலக் கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பதால் இங்கு பிள்ளைகளின் ஆங்கில உரையாடல்களைப் புரிந்து பதிலளிக்க முடிகின்றது. இதனால் பெற்றோரும் பிள்ளைகளும் முழுமையாகத் தமிழோ ஆங்கிலமோ தங்களுக்குள் பேசிக் கொள்வதில்லை. எனினும் வெகு அரிதாக, குடும்பம் முழுவதும் தமிழ் மொழி பேசுவதைக் காணலாம். பெரும்பாலான மாணவர்கள் தமிழ் நூல்கள் வாசிக்க விரும்பினாலும் அதற்கான நேரமும் வசதியும் அவர்களுக்கு வாய்ப்பதில்லை. இன்று இளம் பெற்றோர்கள் கூடத் தமிழைக் கற்க விருப்பங்காட்டுகின்றனர். பல்கலைக் கழகங்களிலும் மாணவர்கள் தமிழ்ச் சங்கங்கள் அமைத்துள்ளமையால் அங்கும் தமிழ் பேச மாணவர்கள் விருப்புகின்றனர். எனவே தமிழில் உரையாடுவதற்குரிய வகுப்புகள் நடாத்துமாறு கேட்கின்றனர். சில பாடசாலைகள் அதற்கான வகுப்புகளைத் தொடங்கியுள்ளன.

தமிழ் மொழியைக் கற்கும் போது மாணவர்கள் சில சமயங்களில் சோர்வுக்குள் தள்ளப்படுகின்றனர். இதற்கு அவர்கள் கூறும் விளக்கங்கள் சுவாரசியமானவை. புத்தகங்களை மட்டுமே வைத்து எழுதவும் வாசிக்கவும் முழுநேரமும் கற்பிப்பது, தங்களுக்குத் தண்டனை தருவதற்கு ஒப்பானதாகும். இதனை விடுத்து விளையாட்டுக்கள், கருத்துக்களங்கள், சமையல் நேரங்கள், ஒலி ஒளி மூலமான நிகழ்வுகள், கணினி மூலமாகக் கற்றல், திரைப்படங்கள் பார்த்தல், நடிப்பு என்பன மூலம் தமிழைக் கற்பித்தால் மகிழ்வைத் தருமெனக் கருதுத் தருகின்றனர். அத்துடன் ஆரம்ப வகுப்பு முதல் இலக்கணம் போதிக்கப்பட்டால் மொழியமைப்பைத் தம்மால் அறிந்து படிக்க முடியுமென்கின்றனர். மேலும் பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் வேறுபட்டிருக்கின்றது இதனை எப்படி உணர்ந்துபடிப்படிப்பதென வினா எழுப்புகின்றனர். 

முற்று முழுவதுமான ஆய்வின் அடிப்படையில் பார்க்கும் போது பிரித்தானியாவில் தமிழ் மொழிக் கல்வியைப் பேணுவதில் தமிழ்ப்பாடசாலைகள் பெரும் பங்காற்றுகின்றனவெனலாம். இப்பாடசாலைகள் தமிழ்க் கல்வியைப் போதிப்பது மட்டுமன்றிச் சமய வகுப்புகள், முக்கிய பண்டிகைகளான தைப்பொங்கல், நவராத்திரி, நத்தார் போன்றவற்றையும் விழாக்களாகக் கொண்டாடுகின்றனர். பெரும்பாலான பாடசாலைகள் தமிழுடன் நுண்கலைகளையும் போதிப்பதால், இசைவிழாக்கள் பலவும் நடைபெறுகின்றன. ஆனால் இசைப் பாடங்கள் ஆங்கில மொழி மூலமே கற்பிக்கின்றனர். பரீட்சைகளும் ஆங்கில மொழியிலேயே நடைபெறுவது சிறிது கவலைக்குரிய விடயமேயாகும்.

இவை தவிர பாடசாலைகளில் திருக்குறட் போட்டி, நாவன்மைப் போட்டி, பரிசளிப்பு விழா ஆகியவற்றுடன் விளையாட்டுக்கள், வெளிப்புறச் சுற்றுலாக்கள் என்பனவும் அதிகரித்து வருகின்றன. அடிக்கடி ஆசிரியருக்கான கூட்டங்கள் நடைபெற்று வருவதும் குறைகள் இனங்காணப்பட்டு உடனுக்குடன் அவை நிவர்த்தி செய்யப்படுவதும் நல்ல முயற்சியாகும்.

நிறைவாக, தற்போதைய சூழ்நிலையில் பிரித்தானியாவில் தமிழ் மொழி கற்கும் மாணவர்களின் தொகை அதிகரித்த வண்ணமுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதைக் கவனத்திற் கொண்டு அவர்களது தேவைகளுக்கும் கற்றலுக்கும் பயன்படும் முறையில் மாற்றங்களை உட்புகுத்திச் சீரமைத்தால் தமிழ்க் கல்வியென்பது ஏனைய மொழிக் கல்விகளுக்கு ஒப்பானதாகச் சிறப்பாக அமையுமென நம்பலாம். அது தமிழர் ஒவ்வொருவரதும் கடமையெனக் கொள்வோம்.

'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர்: சிவலீனன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R