கலாநிதி எ.பி.ஜெ. அப்துல் கலாம்-பேராசிரியர் கோபன் மகாதேவா -கலாம் எம்மைப் போல் ஒரு தமிழர். எம்மைப் போல் மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து, பின் விடாமுயற்சியால் இந்திய ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதியாக உயர்ந்து இளைப்பாறியவர். மேலும் ஒரு விஞ்ஞானியாகக் கற்றுத் தொடர்ந்து அவ்வாறே பணி செய்து, பல வகையில் ஒரு அரிய உதாரணராக, பத்மபூஷண், பத்மவிபூஷண், பாரத்ரத்ன பட்டங்களுடன் பெரிதான போட்டி இன்றி மிகவிரும்பி எல்லோராலும் ஏற்கப்பட்டு இந்தியாவின் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுத் தானாகவே ஒரே ஒரு தவணையின் பின் தன் உயர் பதவியைத் துறந்து பின்னரும் கல்வித் துறையில் தொண்டராகத் தன் மறைவு நாள் மட்டும் வேலை செய்து கொண்டே வாழ்ந்தவர். மேலும்ஒரு பிரமச்சாரியாக நிலைத்து, தன் பிறந்த குடும்பத்துக்கும் பெற்றோருக்கும் பழைய ஆசிரியர்களுக்கும் நன்றிக் கடனும் பயபக்தியும் உடையவராகவும் வாழ்ந்தவர். தன் வாழ்நாள் முழுவதும் நல்லதையே சிந்தித்து, நல்லதையே செய்து, ஒரு சான்றோராகத் தூய்மையுடன் திகழ்ந்தவர். மனிதருள் ஒரு எடுத்துக் காட்டான மாணிக்கம். சில தடவை இவரை நான் எம் ஈழத்து ஆறுமுக நாவலருக்கு ஒப்பிட்டுச் சிந்தித்தேன். எனினும் கலாம் உலகில் நாவலரிலும் மிகக் கூடிய உயற்சியைப் பெற்றவர்.

பிறப்பும் குடும்பமும்:
ஏபீஜே அப்துல் கலாம் என்று பெயர் சூட்டிய ஆண் குழந்தை பிறந்தது, 1931இன் ஒக்தோபர் 15ந் திகதி அன்று, இந்தியாவின் தமிழ்நாட்டு இராமேஷ்வரம் எனும் தீவின் நடுத்தரக் குடும்பம் ஒன்றில். அவரின் தகப்பனார் பெயர் ஜைனுல்லாபுதீன் மரைக்காயர். தனுஷ்கோடி சேதுக்கரையில் இருந்து இராமேஸ்வரம் சிவன் கோவிலுக்கு வந்து செல்லும் யாத்திரீகர்களின் படகுகளை ஓட்டி ஏற்றிச் சென்றும் திரும்பக் கொணர்ந்தும் உழைத்துத் தன் குடும்பத்தைக் கலாமின் தந்தை வளர்த்து வந்தார். அத்துடன் ஒரு சொந்தத் தென்னங்காணியையும் பராமரித்து வந்தார். அவர்களின் வீடு, 1850களில் சுண்ணாம்பு, செங்கற்கள் முதலியவற்றால் கட்டப் பட்டு மசூதித் தெருவில் இருந்த ஒரு பெரிய பழைய வீடு. அப்துல் கலாமின் தாயார் ஆஷியம்மாவின் மூதாதையரில் ஒருவர் பிரிட்டிஷாரின் இந்திய ஆட்சிக் காலத்தில் பகதூர் பட்டம் பெற்றிருந்தார். கலாமின் பெற்றோர் அதிகம் படித்தவர்களல்ல. எனினும் தங்கள் இஸ்லாம் நெறிமுறையைப் பின்பற்றிக் கொண்டு விருந்தினரை உபசரித்து ஆடம்பரங்கள் இல்லாது வாழ்ந்து உதாரணத் தம்பதிகள் என மதிப்புப் பெற்றவர்கள். கலாமை வீட்டில் அபுல் என்று செல்லமாகக் கூப்பிடுவர். கலாம், மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரியுடன் மூன்றாவது பிள்ளை. கலாமின் பெற்றோர் உயரமானவர்கள். ஆயினும் அவர் உயரத்தில் குள்ளமானவராகவே இருந்தார்.

அவரைத் தகப்பனார் தினமும் மாலைகளில் மசூதிக்குக் கூட்டிச் சென்று அரேபிய மொழியில் திருக்குர்ஆன் கீர்த்தனைகளைப் பாடச்செய்து தெய்வவழிபாடு நடத்துவார். இவர்களின் வீட்டிலிருந்து 10-நிமிட தூரத்தில் ஒரு சிவன் கோவிலும் இருந்தபடியால் இவர்களின் குடும்பம் கணிசமான இந்துக்களால் சூழப்பட்டு, அவர்களுடன் அன்னியோன்யமாக இவர்கள் வாழ்ந்து வந்தனர். இவரின் தந்தை இந்துக்கள் இடையேயும் ஒரு மருத்துவரும் மதக்குருவும் போன்ற சாந்தமான, பரோபகாரப் போக்கும் கிரமமான வேலை நிரலுமுடன் 1976 மட்டும் 100 வயதுக்கு மேல் வாழ்ந்து, அளவில்லா மரியாதை பெற்றிருந்தார்.

கலாமின் பிள்ளைப் பருவம்:
இவரின் குழந்தைப் பருவத்தில் ஆடம்பரம் இன்றி உணவு, உடை, மருந்து, முதலிய தேவையான எல்லாம் கிடைத்தன. மற்றும் பாசமும் பாதுகாப்பும் சமூகச் சூழலும் நன்றாக அமைந்தன. வீட்டில் வழக்கமாகப் பையன் அபுல் சமையலறையில் தரையில் உட்கார்ந்து வாழை இலை போட்டு தாயுடனேயே சாதம், சாம்பார், ஊறுகாய்கள், தேங்காய் சட்னி முதலிய உணவுகளை விரும்பிச் சாப்பிட்டார். இராமேஸ்வரம் ஆரம்ப பள்ளியில் தன் குல்லாத் தொப்பியுடன், பூணூலும் குடும்பியுமாகச் சென்ற இந்துப் பிராமணப் பையன்களுடன் பக்கத்திலே உட்கார்ந்து படித்து, சிநேக குணமுள்ள நேர்மையான பையன் எனப் பெயரெடுத்ததார். கலாமின் இளவயதில் அவருடைய தகப்பனாருடன், பின் அவரின் சகோதரி ஜொகாராவைக் கலியாணம் செய்த, அவருக்கு 15 வயதால் மூத்தவராகிய, தச்சுவேலைக்கார அஹமது ஜலாலுதீனும், ஒன்று விட்ட தமையனான பத்திரிகை விநியோகத்தர் சம்சுதீனும், மிகவும் இணைந்து வாழ்ந்து, கலாமில் மிகவும் கரிசனை எடுத்து நாளாந்த வாழ்க்கையைப் பற்றிப் பல விடயங்கள் கற்பித்துச் சிறிதளவு செலவுப் பணம் உழைக்க வழியும்செய்து கொடுத்தனர். பின்னரும் அவரின் மேற்கல்விக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்து பக்கபலமாக இருந்தனர். ஜலாலுதீனுடன் மாலைகளில் பெரும் தூரம் சிவன் கோவிலடிக்கு உலாத்தச் சென்ற கலாம், அவருடன் சிவன் கோவிலிலும் பயபக்தியுடன் வணங்கப் பழகி, வேறு மதங்களின் ஒரே நல்-நோக்கங்களைச் சிறு வயதிலேயே கற்று, மற்றைய இனத்தாரினுடன் சேர்ந்து வாழவும் அனுபவம் பெற்றார். கடின உழைப்பின் அனுபவமும் பெற்றார். மேலும் சம்சுதீன் விற்ற பத்திரிகைளில் உள்ள செய்திகள், கட்டுரைகள் மூலம் அவற்றின் உள்ளடக்கங்களைச் சம்சுதீனுடன் விவாதித்து, விளங்கி, உலகைப் பற்றியும் கற்றார்.

இவரின் பால்ய காலத்தின் நெருங்கிய சிநேகிதர்கள், ராமநாத சாஸ்திரி, அரவிந்தன், சிவப்பிரகாசன் எனும் ஆசார அனுஷ்டானமான இந்துப் பிராமணக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று பையன்களுமே. தன் படுக்கை நேரங்களில் இவர், தன் சகோதரங்களுடன் தனது தாயார், பாட்டியின் இனிய குரல்களில், இராமாயணத்தில் இருந்தும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் இருந்தும் பல சம்பவங்களைக் கேட்டு மனதில் பதிய வைத்து அவைகளின் புத்திமதிகளின் படி பிற்காலத்தில் வாழ்ந்து வந்தார். இளமையில் கடற்கரைக்குக் கிட்ட வாழ்ந்து வந்த கலாம், விதம் விதமான பறவைகளையும் முகிற் கூட்டங்களையும் பலமணி நேரங்கள் உற்றுப் பார்த்துக் கவனித்துத் தானும் ஆகாயத்தில் பறப்பதைப் பற்றிக் கனவுகள் கண்டு மேலும் தொடர்ந்து படித்து ஒரு விமானம் ஓட்டியாக விரும்பினார். ஆனால் இவரின் தந்தையார், இவர் ஒரு கொலெக்ரர் எனும் உயர்ந்த அரசாங்கப் பதவியைப் பெறவேண்டும் என ஆசைப்பட்டார். எதற்கும் இவர் உயர் கல்வியைப் பெறுவதென முடிவாயிற்று.

கல்விக்கு கலாம் ஏறிய கடின மலைகள்:
இராமேஸ்வரம் ஆரம்ப பள்ளியில் இவர் படித்துத் தேறிய பின்னர், இரண்டாம் மகாயுத்தம் முடிந்து இந்தியாவின் சுதந்திரமும் முடிவாகிய காலத்தில் கலாம் உயர் கல்வியைத் தேடி மாவட்டத் தலைநகராகிய ராமநாதபுரத்தில் உள்ள ஸ்வார்ட்ஜ் உயர்நிலைப் பள்ளியில் நான்கு வருடங் களும், பின்னர் 1950 தொடக்கம் முதற் பட்டம் பெறுவதற்குத் திருச்சி செயின்ர் யோசப் கல்லூரியில் நான்கு வருடங்களும், படித்தார்.  இந்தச் செலவுகளுக்கு விடுதலை மாதங்களில் தன் தமையனார் முஸ்தாபா கமாலின் ரயில் நிலைய மளிகைக் கடையிலும், அதன்பின் தம்பி காசிம் முகமதுவின் சின்னக் கடையிலும் வேலைகள் செய்து உழைத்ததுடன், கடுமையாகப் படித்துப்பெற்ற புலமைப்பரிசுகளிலும் தங்கவேண்டி இருந்தது. திருச்சிக் கல்லூரியில் இவருக்குப் பிற்காலத்தில் உதவிய இயற்பியலுடன் (physics), ஆங்கில, தமிழ் இலக்கியங்கள், வானியல் முதலிய பாடங்களையும் கற்று, விஞ்ஞானத்தில் 1954ல் பட்டதாரியானார். 1955ல் எம்.ஐ.ரீ. எனும் Madras Institute of Technology நிறுவனத்தைத் தன் சகோதரியின் நகைகளை அடகுவைத்துச் சேர்ந்து விமானப் பொறியியல் கற்று, 1959ல் பட்டம் பெற்றுத் தமிழ்ச் சங்கத்தின் போட்டி ஒன்றில், 'நமது சொந்த விமானத்தை நாமே உருவாக்குவோம்' என்னும் கட்டுரைக்கு முதற் பரிசை வென்றார்.  இந்திய விமானப் படையில் அதிகாரியாக முயற்சித்து நேர்முகத் தேர்வில் சித்தியடையாமல் வருத்தமடைந்து, எனினும் Directorate of Technical Development and Production (Air) அதாவது DTDP (Air) எனும் அரசாங்க நிறுவனத்தில் முதுநிலை விஞ்ஞான உதவியாளராக, மாதம் ரூ.250 அடிப்படைச் சம்பளத்துடன், தன் முதல் உத்தியோகத்தில் 1960ல் சேர்ந்தார்.

கலாமின் இந்திய முன்னேற்றக் கனவுகள்:
இந்தக் கட்டத்திலிருந்து எம் கலாம், போர் விமானங்களையும் ஏவுகணைகளையும் மற்றும் பறக்கும் கலங்களையும் இந்தியாவிலேயே முதலிலிருந்து அளவுப் பிரமாணங்களை கணக்கிட்டு நிர்ணயம் செய்து படங்கள் கீறி, உதிரிப் பாகங்களையும் அவ்வாறே நிர்மாணித்து இந்தியாவிலே உற்பத்தி செய்து அவற்றைப் பாவித்து விமானங்களையும் கலங்களையும் கட்டிப் பறக்கவிட்டு, மாதிரிகளைப் பரீட்சித்து மெருகூட்டிக் கடைசியில் அசல்களையும் சிருஷ்டித்து உற்பத்தியாக்குவதைப் பற்றிக் கனாக் கண் டார். மேலும், இந்தியாவைத் தொழில் நுட்பத் துறையில் மற்றைய முன்னணி நாடுகளுக்குச் சமமாக விருத்தி அடையச் செய்து, இந்தியப் படைகளையும் அவர்களின் வாகனங்கள், விமானங்கள், ஆயுதங்களைப் பொறுத்த அளவில் மற்றைய நாடுகளுடன் ஒப்பிட்டால் சோடை போகாமல் உயர்த்த வேண்டும் என்னும் குறிக்கோளுடன், தனது பதவி உயர்வுகளையும் தானாகவே திட்டமிட்டு, மேலதிகாரிகளையும் தன் நற்குணம், நடத்தை, செயற் திறன், தேசபக்தி, பிரயாசை முதலியவற்றால் வசீகரித்து, நாளாந்தம் 18 மணிகள் வேலை செய்தார். மேலும் மண வாழ்வின் எண்ணத்தையே துறந்து எளிய முறையில் சீவித்தும் உண்டும் உடுத்தும் 50 ஆண்டுகள் தினமும் கடுமையாக உழைத்து, அவரை அறிந்தோர், கேள்விப் பட்டோர் எல்லோரினது பாராட்டுகளையும் பெற்றார்.

அவரின் கூர்மையான தீர்க்க தரிசனம்:
இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றித் தீர்க்க தரிசனத்துடன் கனவு கண்டு சொந்தத் தியாகங்களுடன் அயராது வேலை செய்த ஜவர்ஹல்லால் நேரு, இந்திரா காந்தி, கிருஷ்ண மேனன் முதலிய அரசியல் தலைவர்களினதும், கலாநிதிகள்  பிரம்ம பிரகாஷ், ஓ.கே. மெடிரட்டா,  பேராசிரியர்கள் விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், முதலிய தொழில்நுட்பத் துறை ஜாம்பவான்கள், கலாமினுடைய கல்லூரிப் பேராசிரியர்கள் போன்றோரினதும் தீர்க்க தரிசனங்கள், தேசப் பற்று முதலிய வேறு நற்குணங்கள் ஆகிய எல்லாவற்றையும் கலாம் உற்று நோக்கித் தானும் விரும்பி ஏற்றுத் தமதாக்கி, அவற்றை அமுல் செய்தார்.

உத்தியோக வழியில் கலாமின் உன்னத திருப்தி:
கலாம் தன் கனவுக்கேற்ற, விரும்பிய, வேலைகளுக்கே விண்ணப்பித்து அவற்றில் அயராது உழைத்தார். எதிர் வந்த முட்டுக்க ட்டைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு, விடா முயற்சியால் அடி அடியாக அவற்றை வென்று தன் முக்கிய குறிக்கோள்களைச் சென்றடைந்தார். இதைக் கவனித்த அவரின் மேலதிகாரிகள், அவரைக் கடினமான உயர் பதவிகளுக்குத் தாமாகவே சிபார்சு செய்தனர். பிற் காலத்தில் அவர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டி வரவே இல்லை. எனவே அவர் உத்தியோக வழியில் உன்னத திருப்தி அடைந்திருந்தார். இது வாழ்வில் சிலருக்கே கிடைக்கும் வரப் பிரசாதம் எனலாம்.

கலாமின் பதவி முறைக் கடமைகளும் சாதனைகளும்:

இவற்றை அரை-குறையாயே, மாதிரிகளாகவே, இங்கு சொல்ல முடியும்.  1963-1980 காலத்தை கலாமே தன் படைத்தல் காலமென அக்கினிச் சிறகுகள் (1999) நூலில் சுட்டியுள்ளார். அது மட்டும், அவர் முதலில் Supersonic Target விமானத்தை வடிவமைத்தார்.  Gnat MK1 விமானம் பற்றி ஆய்வுப் பணி மதிப்பீட்டில் கலந்து கொண்டார்.  Dart Target வடிவமைப்புக் குழுவில் சேர்ந்து கடமையாற்றினார். Vertical Take-Off and Landing Platform ஆராய்சியில் ஈடுபட்டார். Hot Cockpit ஐத் தீர்மானிப்பதிலும் பங்கேற்றார். இவற்றில் 1960-63 ஆண்டுகள் கழிந்தன. இதன் பின் Aeronautical Development Establishment (ADE) எனும் புதிய நிறுவனம் உண்டாக்கப் பட்டு கலாம் அங்கு மாற்றப் பட்டுத் தனக்கான வாய்புகளையும் வேலையையும் தானே உருவாக்கி அன்றைய பாதுகாப்பு மந்திரி கிருஷ்ணமேனனின் GEM திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். நந்தி எனும் ஹோவர் ரக விமானத்தின் மாதிரி ஒன்றை உருவாக்கி மேனனுடன் பறந்து பரீட்சித்த வெற்றியின் பின் அந்தத் திட்டம் பொசுங்கி விட்டது. ஆனால் அதன் மூலம் கலாநிதி மெடிரட்டா, பேராசிரியர் எம்.ஜீ.கே. மேனன், கலாநிதி விக்ரம் சாராபாய் போன்றோரின் கவனத்தை ஈர்த்து, Indian Committee for Space Research (INCOSPAR)  நிறுவனத்தில் ஏவுகணைப் பொறியியலாளர் (Rocket Engineer) பதவியை உருவாக்கித் தெரிவு செய்யப்பட்டு, 1963ல் தும்பாவில் Equatorial Rocket Launching Station ஒன்றை நிறுவி, உடனே அமெரிக்காவின் NASA (National Aeronautical and Space Authority) இல் Sounding Rocket ஏவுவது பற்றிய ஆறு மாதப் பயிற்சி பெற்றுத் திரும்பித் தனக்கு அளவிலாப் புகழ்  நல்கிய படைத்தல் சாதனைகளை, 1963-1980 காலத்தில் தொடர்ந்து செய்தார்.

கலாம் அமெரிக்காவில் இருந்து திரும்ப, 21-11-1963 அன்று இந்தியாவின் முதல் ஏவுகணையாகிய நைக்-அபாத், விண்ணில் ஏவப்பட்டது. அடுத்த நாள், பேராசிரியர் சாராபாய், கலாமுக்கும் சகாக்களுக்கும் Indian Satellite Launch Vehicle (SLV) திட்டத்தில் இராணுவ விமானங்களுக்கான ஏவுகணை உந்துதலால் உடனடியாக மேலே கிளம்பக் கூடிய RATO (Rocket Assisted Take-Off) செயல்பாடு பற்றி ஆய்வு செய்ய உத்தரவு கொடுத்தார். இதனால் Rohini Sounding Rocket (RSR) திட்டம் உருவாகி, இதில் தான் இந்தியாவின் உண்மையான விண்வெளி ஆராய்ச்சித் திட்டம் தொடங்கியது. Rohini-1, Rohini-2 மாதிரிகள் பரீட்சித்து வெற்றி கண்ட உடனே இந்தியாவின் Propellant Fuel Complex, Rocket Propellant Plant முதலிய தொழிற் சாலைகள் ஆரம்பிக்கப் பட்டன. இக் கட்டத்தில் கலாம் இந்திய NPL, PRL, TIFR ஆய்வு நிறுவன விஞ்ஞானிகளுடனும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் நாடுகளில்உள்ள செயற்கைக் கோள் விஞ்ஞானிகளுடனும் ஆலோசனைகள் நடத்தி, 1967 நவம்பரில் முதலாவது Rohini-75 இந்தியன் ஏவுகணை, தும்பாவிலிருந்து விண்ணில் செலுத்தப் பட்டது. இதன் பின் கலாமின் தலைமையில் Indian Space Research Organisation (ISRO) பேராசிரியர் சாராபாயால் உருவாக்கப்  பட்டது. 31-12-1971ல் தில்லியில் நடந்த ஒரு முக்கிய கூட்டத்தின் பின், 1966-71 காலத்தில் கலாமுடன் வேலை செய்த 24 விஞ்ஞானிகள், பொறியியலருக்கு ஆலோசனையும் ஊக்கமும் தந்து கொண்டிருந்த சாராபாய், மாரடைப்பால் இறந்தார். 08-10-1972 அன்று RATO இயக்கமுறை வெற்றி கரமாப் பரிசோதனை செய்யப் பட்டது. மேலும், தும்பா வளாகத்தின் ISRO, TERLS, SSTC, RPP, RFF, PFC முதலிய அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, சாராபாயின் பெயரில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) உண்டாக்கப் பட்டு, கலாநிதி பிரம்ம பிரகாஷ் அதன் இயக்குநரானார்.  கலாம், 7-10 வருடகால SLV-3 திட்டத்துக்குப் பொறுப்பெடுத்து, ஒவ்வொரு உறுப்பினரும் அவரவர் துறையில் நிபுணராகிய 50 பொறியியலாளர், விஞ்ஞானிகளை இணைத்து வேலை செய்தார். இதன் குறி, 40 கிலோ செயற்கோளை பூமியைச் சுற்றி வர ஏவுவது. இத்திட்டம் சுமார் 250 துணை-அசெம்பிளி பிரிவுகளையும் 44 பெரிய துணை சாதனங்கள், 10-லட்சம் உதிரிப் பாகங்களைக் கொண்டது. 300க்கும் மேற் பட்ட தொழிற் சாலைகள் இவற்றை உருக்கு, மக்னீசியம், தாமிரம், பெரிலியம், ரங்ஸ்ரன், மலிப்டினம் முதலிய உலோகக் கலவைகளில் உற்பத்தி செய்தன... ... ... இவ்வாறு பல சிரமங்களின் பின் 18-07-1980 காலை, இந்தியாவின் முதற் செயற்கைக் கோள் ஏவுகலம் SLV-SHAR இலிருந்து விண்ணிற் கிளம்பி, அதன் திட்டமிட்ட பாதையில் சென்று, கலாமையும் இந்தியாவையும் வரலாற்றுப் பாதையில் மேலும்  தொடர உந்தியது.

உச்சப் பட்டங்களும் சமூகத்தில் கௌரவமும்:
கலாமுக்கு 1959-60 வரை அவர் கற்றுப் பெற்ற மூன்று பட்டங்களின் பின், 1980ல் SLV என்னும் Satellite Launch Vehicle ஏவுகலத்தைப் பாவித்து, ரோகினி-1 எனும் துணைக்கோளை (satellite) விண்ணில் ஏற்றி வெற்றி கண்டதற்கு 1981ல் கிடைத்த பத்மபூஷண் எனும் கௌரவ பட்டத்தில் தொடங்கி, உலகின் எத்தனையோ பல்கலைக் கழகங்கள் போட்டி போட்டுக் கொண்டு இவரின் அறிவு பரந்த விஞ்ஞானம், பொறியியல், சட்டம், கலை போன்ற துறைகளிலும் கௌரவ பட்டங்களை அளித்தனர்.  பல பல்கலைக் கழகங்கள் அவரை வருகைப் பேராசிரியராக நியமித்தனர். பல பெருஞ்சாலைகள், நகரங்கள், நிறுவனங்கள் அவரின் பெயரைத் தாங்கின. இன்னும் கணக்கில்லாக் கௌரவங்கள் உலக ரீதியாக அவரை வந்தடைந்தன. அவர் 2015ல் இறக்கு மட்டும் பட்டம் வழங்கினர். இவற்றின் உச்சம், 1997ல் கிடைத்த பாரத்ரத்ன பட்டமும் 25-07-2002ல் கிடைத்து இவர் ஐந்து வருடங்களுக்கு வகித்து 2007ல் தாமாகவே துறந்த இந்தியக் குடியரசின் ஜனாதிபதிப் பதவியும் எனலாம். இவ்வளவு புகழுடன், அவர் என்றும் போல் எளிமையாகவே வாழ்ந்து,  சில நூல்களுடன், மனைவியோ வீடோ பிள்ளைகளோ இன்றி, ஒரு சோடி மாற்றுச் சட்டைகளும் ஒரு சிறு வங்கிக் தொகையையும் விட்டு, தன் பெற்றோருடனும் அத்தான், ஒன்று விட்ட அண்ணனுடம் இறையடியில் சேர்ந்தார்.

கவிதையிலும் சங்கீதத்திலும் இலக்கியத்திலும் கலாமின் ஈடுபாடு:
இளமையில் இருந்தே ஆங்கில, தமிழ்க் கவிதையிலே அவர்  கொண்டிருந்த மோகம், விஞ்ஞானச் சிந்தனையைத் தொழிலாகக் கொண்டிருந்த கலாமை ஒரு சம்பூர்ண, முழுமையான மனிதனாக ஆக்கி, ஒரு சமாந்திரமான, சாந்தமான, மன இய்லபை அவருக்கு அளித்தது எனலாம். மேலும் அவர் பொதுவாகச் சங்கீதத்திலும், விசேடமாக வீணையிலும் கொண் டிருந்த திறனும் இயல்பும், அவரின் வேலை நேரப் பழுக்களைக் குறைத்து, அவருடைய மனோ பலத்தையும் தன்னம்பிக்கையையும் மேலும் கூட்டி, அவரின் வாழ்வைச் சீர்மைப் படுத்தியது என்றும் சொல்லலாம்.

இளைப்பாறலும் தொண்டர் சேவையும்:
தன் 60வது வயதில் இளைப்பாறிப் பின்னர் சமூகத் தொண்டு செய்ய வேண்டுமென முன்னர் எண்ணி இருந்த கலாம், 2007ல் தன் 76ம் வயதிலேயே, ஜனாதிபதிப் பதவியில் இருந்து இளைப்பாற முடிந்தது. அதன் பின் பிள்ளைகள், இளைஞரின் கல்விக்கு ஊக்கமூட்டித் தொண்டுகள் செய்து கொண்டு, அவர் 1999ல் எழுதிய அக்கினிச் சிறகுகள் எனும் சுய சரிதை நூலைப் பின் பற்றி இன்னும் 10 நூல்களை எழுதி, தன் 83ம் வயதில் விட்ட கடைசி மூச்சு வரை, வேலை செய்து கொண்டே வாழ்ந்தார்.

கலாமின் மறைவு:
எம் நாயகரின் உயிர் பிரிந்தது, இவ்வாண்டு (2015) ஜூலை மாதம் 27ந் திகதி திங்கள் அன்று, மாலை 7.45 மணி நேரத்தில். அவர், தன் தொண்டர் சேவையாக, மேகாலய மாநிலத்தின் ஷில்லாங் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் மாணவருக்கு, 6.30 மணியளவில், நாம் வாழக் கூடிய இப் பூமிக் கிரகம் எனும் கருப் பொருளில் ஒரு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு இருந்த போது, சடுதியாக மாரடைப்பினால் மயங்கி விழுந்து, கிட்டிய பெதனி தனியார் சிகிச்சை மனைக்கு உடனே கொண்டு செல்லப்பட்டு, ஒரு விதமான சிகிச்சையும் பலனளிக்காமல் உயிர் துறந்தார். உலகின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் தம் விசனத்தை உடனேயே அறிவித்தனர். கலாமின் பூதவுடல் அவரின் பிறந்த இடமாகிய ராமேஸ்வரத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டு, உயர்ந்த இராணுவ மரியாதைகளுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட, பல பிரமுகர்களின் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. மக்களின் ஜனாதிபதி என்றும் ஏவுகணை மனிதன் எனவும் இந்திய மக்களால் செல்லமாக அழைக்கப் பட்ட அவுல் பக்கீர் ஜைனுல்லாபுதீன் அப்துல் கலாம் எனும், மகாத்மா காந்தியை ஒத்த மாமனிதர், தன் நாட்டுக்கு அளித்த அளப்பற்ற 83 வருடம் 9-மாத ஆயுள் சேவையின் பின், இன்று எம் இதயங்களில் வாழ்கிறார். அவரின் கள்ளம் கபடமற்ற வாழ்வு எம்மை என்றும் ஊக்குவிக்கும்!

முடிவு:
இந்திய உபகண்டத்தின் வரலாற்றின் பின்னணியில் அப்துல் கலாமின் சேவைகளையும் அவர் வாழ்வில் அடைந்த உயர்வையும் சற்று ஆராய்வோம். 1947ம் ஆண்டு, இந்திய உபகண்டம், முக்கியமாக முஸ்லீம்களின் தலைவராகிய மொஹமத் ஜின்னாவின் அணுங்குப் பிடிவாதத்தால் இரண்டாக்கப் பட்டு இந்தியா, பாகிஸ்தான் எனும் மூன்று துண்டான இரண்டு நாடுகள் ஆகிற்று. இந்தப் பிரிவினையைப் பெரும்பான்மையான இந்திய இந்துக்களும், தம் ஆதிக்க பூமியைப் பிரித்தளித்த பிரித்தானியரும், விரும்பவில்லை. எனினும், பாக்கிஸ்தானுக்குச் செல்ல விரும்பாத, கலாமின் குடும்பத்தவரைப் போன்ற முஸ்லீம்களை இந்தியா பெருமளவில், கொள்கையளவில், நன்றாகவே  நடத்தியது. உதாரணமாக, முஸ்லீம்களை இந்தியா புறக்கணிக்காமல், பலதடவை ஜனாதிபதி, உபஜனாதிபதி போன்ற பதவிகளுக்குத் தொடர்ந்து தெரிவு செய்தது. இந்த அம்சத்தில் நன்றியறிவின் நிமித்தம், கலாம் தன் தேசாபிமானம் குன்றாது, உண்மையில் உயர்ந்து, மிகவும் மேலதிகமாக, இந்தியாவுக்குப் பயபக்தியுடன் சேவை செய்தார் என்று கொளலாம். மேலும், கலாம் செய்த அசாதாரணமான தொண்டு, பாக்கிஸ்தானிலுள்ள சக-முஸ்லீம்களின் அழிவுக்குப் பாவிக்கக் கூடிய ஏவுகணைத் துறை ஆகும். இதைப் பற்றிக் கலாம் சிந்தித்து இருக்காமல் முடியாது. எனவே அவர் இனப் பற்றிலும் பார்க்கத் தேசாபிமானத்துக்கு மிகக் கூடிய முன்னுரிமை கொடுத்தார் என்றே கொள்ள முடியும். இதற்கு நன்றியாக, மேலும் அவரின் தூய பிரமச்சார்யம், வாழ்வின் எளிமை, மச்சம் உண்ணாமை, பெண்-பொன்-பூமியாதிக்கத் துறவுத் தன்மை, நாளாந்தம் 18-மணித்தியாலங்கள் தினம் தினம் 83 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கப் பூர்வமாக உழைத்தது, போன்ற அம்சங்களினாலேயே இந்திய மக்கள் எல்லோரும் அவரில் மரியாதையும் மோக பக்தியும் கொண்டதும், ஜனாதிபதியாகத் தெரிந்ததும், இன்று ஒரு தெய்வத்துக்குரிய அந்தஸ்து (காந்தியைப் போல்) கொடுக்கும் பாதையில் செல்வதும் எனலாம். வாழ்க, உத்தம புருஷரும் அபூர்வப் பிறவியும் மாமனிதருமாகிய அப்துல் கலாமின் நினைவும் புகழும்.  மேலும், தமிழர் சிறுபான்மை இனத்தவராக வாழும் சிறீலங்காவுக்குக் கலாமின் கதை உரிய படிப்பினையும் ஆகட்டும். உலகின் மக்கள் எவரும் அவரின் கதையைப் படித்துப் பலன் பெறுவாராக.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R