Miral எம்.கே.முருகானந்தன்மண்ணிலிருந்து வேரோடு பிடிங்கி எறியப்பட்ட மரம் தன் பசிய இலைகள் ஊடாக வியர்வை சிந்திக் கருகுவதைப் போல மனித உயிர்கள் அடாவடித்தனமாக பறிக்கப்படுவதைக் கண்டும் மனம் கலங்காத கல் மனம் கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயிரைப் பறிப்பது  மட்டுமல்ல தன் மண்ணிலிருந்து தூக்கி எறியப்படுவதும் அத்தகையதே. ஒருவர்; காலாகாலமாக வாழ்ந்த பூமியை மற்றொருவர் அடாவடித்தனமாக பிடித்து அமுக்கித் தமதாக்கி, அதன் பூர்வீக உரிமையாளர்களை அடிக்கி ஒடுக்கி இரண்டாந்தரப் பிரஜைகளாக்குவது அநியாயமான செயல்பாடு என்பதைச் சொல்லித் தெரிய வேண்டும் என்றில்லை. தான் மாத்திரமல்ல தனது பெற்றோர், பேரன் பீட்டிகள் எனப் பரப்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணை இழப்பதன் சோகத்தை வார்த்தை சிறைகளுக்குள் அடக்க முடியாது.

  பாலஸ்தீனர்கள் தமது மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். மிகுதி மண்ணில் அடையாள அட்டை, வேலை செய்வதற்குப் பாஸ், இஸ்ரேலியர்களை எதிர்த்துப் பேசினால் கடும் தண்டனை எனக் கடுமையான அடக்கு முறைகளுக்கு ஆளானார்கள். இந்த நிலையை அவர்கள் எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். பலஸ்தீன விடுதலை இயக்கம் பற்றியும், இனவெறி பிடித்த இஸ்ரேலிய அரசின் வெறித்தனமான செயற்பாடுகளையும், அதற்குத் துணை போகும் மேலைத் தேச அரசுகள் எனப் பலதையும் அறிந்து வைத்திருக்கிறோம்.

ஆயினும் றீமிக்சிங் செய்யும் ஊடக ஒலிகளுக்கு அப்பால், அங்கு வாழும் சாதாரண மக்களின் குரலை இயல்பாகக் கேட்டது அரிது. நான்கு பெண்களின் வாழ்வின் நாதமாக, போரினால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் குரல் இத் திரைப்படத்தில் ஒலிக்கிறது. ஆனால் அந்த நான்கு குரல்களும் ஒரே லயமானவை அல்ல. சுரதிபேதம் கொண்டவை. அவர்களது பார்வைகள் ஒரே விதமான பார்வைகள் அல்ல. வௌ;வேறு கோணங்களில் தெறிக்கும் பார்வைகள். ஒரே அடிப்படைப் பிரச்சனையை, வஞ்சிக்கப்பட்ட அந்த ஒரே வாழ்வை நால்வரும் அனுபவித்தாலும் அவர்களது எண்ணம், எதிர்பார்ப்புகள், எல்லாம் பல்வேறு விதங்களாக இருக்கின்றன.

மிரால் என்ற இச் சினிமா அமெரிக்க தயாரிப்பாளரால், அமெரிக்க நெறியாளர் ஊடாக அமெரிக்க சமுதாயத்திற்காக எடுக்கப்பட்டது. இருந்தபோதும்

ரூலா ஜெப்ரியல் என்ற பெண்ணினது சுயசரிதை நூலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்பதால் பலாஸ்தீனக் குரல் அடிநாதமாக ஒலித்தபடியிருப்பதைத் தடுக்க முடியவில்லை எனலாம். ஆங்கிலப்படம். ஆயினும் இடையிடையே அரபி மொழி கலந்திருக்கிறது. முக்கியமாக அவர்களின் கலை, பண்பாட்டு அம்சங்கள் காட்சிப்படுத்தப்படும்போது. இதனால் ஆங்கில உபதலைப்பின்றியும் புரிவதில் சிரமமிருக்கவில்லை.

படத்தின் பிரதான பாத்திரம் மிரால் என்ற இன்றையப் பெண். இவள் வாழ்வே படத்தின் முக்கிய பகுதி. இவளது வாழ்க்கைப் பாதையைச் செதுக்குவதில் ஏதொவொரு வழியில் உதவியவர்கள் ஏனைய மூவருமாகும். பிரதான பாத்திரம் திரையில் வருவதற்கு முன்னர் கிட்டத்தட்ட படத்தின் மூன்றில் ஒரு பகுதி ஓடி முடிந்துவிடுகிறது. பாலஸ்தீனியப் பிரச்சனையை ஓரளவு புரிந்து கொள்ள இது அவசியம்தான். ஆனாலும் கருவின் மையத்துள் நுளைவதற்கு இவ்வளவு நேரம் எடுப்பது சற்றுச் சோர்வு அளிக்கிறது. அத்துடன் ஆரம்பக் காட்சிகளைப் புரிந்து கொள்வதில் சற்று சிக்கல் இருந்தது. வேறு விதமாக எடிட் பண்ணியிருக்க முடியாதா என எண்ணத் தோன்றுகிறது.

முதல் பெண் ஹின்ட் ஹீசெனி. இவள் முதலாமவள். பாலஸ்தீனத்திலிருந்து ஒரு பகுதியைப் பிய்த்தெடுத்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அறிமுகமாகிறாள். இஸ்ரேல் உருவானபோது ஏற்பட்ட போரில் அனாதைகளான, வாழ வழியில்லாத மக்களின் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி, வளர்த்து, கல்வியூட்டி நல்ல பிரஜைகளாக்குவதற்காக தனது சொந்த வீட்டையே பள்ளியாக்குகிறாள். அது Tifl Al-Arabi Institute என்ற பெயரோடு அரசியல் சாயல் படியாத மனிதாபிமான கல்வி நிறுவனமாகத் தொண்டாற்றுகிறது.

இரண்டாமவள் நடியா. இவள்தான் மிராலின் தாய் ஆகும். பாலியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்டவள். ஒரு இஸ்ரேலியப் பெண்ணை பஸ்சில் வைத்து அடித்தற்காகச் சிறை செல்கிறாள். அங்கு மூன்றாமவளான பற்றிமாவைச் சந்திக்க்pறாள். பற்றிமா இஸ்ரேலியரின் அடாவடித்தனமான நடவடிக்கைளில் கோபமும், இன உணர்வும் தாய் நாட்டில் பற்றும், கொண்ட பெண். தீவிரவாதி எனலாம். இஸ்ரேலியர்கள் சினிமா பார்க்கும் அரங்கில் வெடி குண்டு வைத்ததால் அகப்பட்டுச் சிறை செல்கிறாள். சிறையில் இருவரும் அறிமுகமாகிறார்கள்.

நான்கு பெண்களின் கதையாக இருந்தபோதும் ஹின்ட் ஹீசெனி, அவளது பள்ளிக்கூடம், அவளது நம்பிக்கைகள் என்ற அத்திவாரத்தில் எழுப்பப்பட்ட மாளிகையாக சினிமா அமைகிறது. மாளிகையாக இருப்பது முக்கிய கதாபாத்திரமான மிராலின் வாழ்க்கை.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினரின் மூர்க்கத்தனமும், எதேச்சிகார நடவடிக்கைகளும், அடாவடித்தனங்களும் கோபப்பட வைக்கின்றன. தமது வீட்டில் வாழ்ந்தவர்களை ஒரு சிலநிமிட அறிவித்தலுடன் வெளியேற்றி வீதியில் கலைத்துவிட்டு அவர்களது வீட்டை பாரிய இயந்திரங்களால் நிர்மூலமாக்கும் காட்சி மனதைக் குடைகிறது. மனதில் இயலாமையும் கோபமும் கொப்பளிக்க எதுவும் செய்ய முடியாது ஏக்கத்திடன் பார்த்திருக்கும் காட்சி மனதைத் தொடுகிறது. வீதியில் நின்று கல்லெறிந்து தமது எதிர்ப்பைக் காட்டும் சாமானியர்கள் துப்பாக்கி குண்டுகளால் தண்டிக்கப்படுகின்றனர்.

மற்றொரு காட்சியில் பற்றிமாவுக்கு ஆயுற்காலச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. குண்டு வைத்ததற்காக இரண்டு, இஸ்ரேலிய நீதிபதிக்கு முன் எழுந்து நின்று மரியாதை செய்யாததற்காக மூன்றாவது. சட்டமும், நீதியும் கூட எதேச்சிகார ஆட்சிகளுக்கு  முண்டுக் கொடுப்பதற்காக பாகுபாடு காட்டுகின்றன. ஈவிரக்கமின்றியும் தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொள்கின்றன. இவை வெறுக்க வைத்தாலும், நாம் அறியாதது அல்ல. மிராலின் அன்புக்குரியவன் பாதையால் செல்லும்போது சடுதியாக பாதுகாப்புச் சாவடியுள் இழுத்து ஓசையின்றி கொன்று முடிக்கிறார்கள். அவன் குற்றவாளியாக இருக்கலாம். இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் கைது செய்தல், விசாரணை, நீதிமன்றம், வழக்கு என எதுவும் இல்லாது மறைவாகக் கொன்று தடயமின்றி அழிக்கப்படுகிறான். பல வருடங்களின் பின் புதைகுழியிலிருந்து மீட்கப்படக் கூடிய இனங்காணப்படாத உடலின் எச்சங்களில் இவனதும் அடங்கியிருக்கலாம்.

இனவாத அரசுகள் இவ்வாறுதான் தமது இராணுவங்களுக்கு புனிதக் கடமையெனப் பெயர் சூட்டி அளப்பற்ற அதிகாரங்களை வழங்குகின்றன. தட்டிக்கேட்க யாருமில்லை. ஆனால் அதே நேரம் விடுதலை இயக்கங்கள் இனவிடுதலை என்ற பெயரில் தமது மக்கள் மனங்களை மூளைச்சலவை செய்கின்றன. பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்லுதல் ஆட்கடத்தல் என பயங்கரச் செயல்களில் ஈடுபடுகின்றன. தாம் செய்யும் ஜனநாயக விரோத, தனிமனித சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் சரியானவை என நம்ப வைக்கும் செயற்பாடுகளில் முனைகின்றன.

முரணான இந்த இரு பக்கங்களையும் இத் திரைப்படம் காட்சிப்படுத்த முனைகின்றது. அதனால் இஸ்ரேல் சார்பான அமெரிக்க மற்றும் மேற்குலக மக்கள் இது பலஸ்தீனக் குரலாக மட்டுமே ஒலிக்கிறது. பக்க சார்பானது எனக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் பாலஸ்தீன பக்கம் சார்பானவர்கள் இது தமது போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது என கோபப்படுகின்றனர்.

அன்பு, அமைதி, விட்டு;கொடுத்தல், கல்வியால் சமுதாயத்தை முன்னேற்றலாம் என்ற நம்பிக்கைளின் சின்னமாக ஹின்ட் ஹீசெனி இருக்கிறாள். நடியா பாதிக்கப்பட்ட அபலையாக இருக்கிறாள். பற்றீமா விட்டுக் கொடுக்காத முரட்டுப் போராட்டத்தை நாடுகிறாள். இவர்களுக்கிடையே வந்த புதிய பரம்பரையின் சின்னமான மிரால் வருகிறாள். அவள் தேர்ந்தெடுக்கும் பாதை என்ன? அதைத்தான் இப்படம் பேசுகிறது.

பாலஸ்தீனியப் போராளியான ஹனி, மிராலின் மனத்தில் இடம் பிடிக்கிறான். ஹனி மீதான ஈர்ப்பும், பாலஸ்தீனியப் விடுதலை இயக்கம் மீதான பற்று ஒரு புறமும் கல்வி, சச்சரவற்ற எதிர்காலம், தகப்பன் மேலோன அன்பு ஆகியவை மறுபுறமும் அலைக்கழிக்கின்றன. போதாக்குறைக்கு சந்தேகத்தின் மேல் கைது செய்யப்பட்டு கடுமையான விசாரணைக்கு ஆட்படுகிறாள். மிருதுவான அவளது முதுகுப்புறம் புண்படுமாறு அடிவாங்குகிறாள்.

ஒருவாறு விடுபட்டு வெளிவந்தபோது அவளது அன்புக்குரியவனே அவள் மீது சந்தேகப்படகிறான். காட்டிக் கொடுத்தவள் எனக் குற்றம் சாட்டுகிறான்.

குற்றம் செய்யாத அவள் மனம் துய்ந்து போகிறது. விடுதலை இயக்கம் மீதான முரட்டுப் பற்றுதலால் தமது அன்புக்குரியவர்களையே சந்தேகிக்கும், கொலையும் செய்யத் துணிந்த மனிதர்களைக் கண்ட எமக்கு இது ஆச்சரியமானதல்ல, ஆயினும் மனம் நோகிறது.

மிராலின் தகப்பனாக வரும் ஜமால் அற்புதமான பாத்திரம். Siddig கின் மிகையில்லாத நடிப்பில் சாதாரண அப்பனின் மனநிலையை உணரமுடிகிறது. தீவிரவாத இயக்கங்களிலிருந்து தனது மகளை காப்பாற்றி நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்ற தந்தையின் பாத்திரத்தை அழகாகச் செய்கிறார். மனத்தில் நிலைக்கிறார்.

படத்தை நெறியாழ்கை செய்திருப்பவர் Julian Schnabel ஆகும். ஏற்கனவே Before Night Falls, The Diving Bell and the Butterfly போன்ற சினிமாக்கள் மூலமாகக் கவனிப்பைப் பெற்றவராவார்.

Slumdog Millonaire Gfo; Fredia Pinto  புகழ் ; Fredia Pinto பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார். ஆயினும் அவரது உருவம் அரபுப் பெண்கள் போலாக இல்லை என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். கமெரா Eric Gautier பல காட்சிகள் மனதை அப்பிக் கொள்கின்றன.

இலங்கையில் திரையிடப்படவில்லை. படம் டிவீடியில் கிடைக்கிறது. முடிந்தால் பாருங்கள். எமது வாழ்வுடனான ஒற்றுமை வேற்றுமைகளை அசைபோட்டுப் பார்க்கலாம்.

http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot .com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com /pathivukal/health.html

Muruganandan Muttiah Kathiravetpillai <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R