சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -முப்பதுகளிலிருந்து எழுத்தாளனாக வாழ விரதம் பூண்டு சென்னைக்கு வந்து விட்ட செல்லப்பாவுக்கு இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக தான் விரும்பிய இலக்கிய வாழ்க்கை வாழ்ந்துவிட்ட பிறகு, இனி சென்னையில் வாழ வழியில்லை என்று தோன்றிவிட்டது ஒரு சோகம் தான். சோக உணர்வு நமக்கு. ஆனால் அவருக்கு, வத்தலக்குண்டுக்கு குடிபெயர நினைத்தது இயல்பான விஷயம் தான். சொந்த மண். பிறந்த மண். வத்தலக்குண்டு செல்லப்பாவின் பாசம் நிறைந்த ஊர். அவரது பிள்ளைப் பிராயம் கழிந்த ஊர். அந்த ஊர் மாத்திரமா? அந்த மண்ணின் மனிதர்களும், பேச்சும், வாழ்க்கையும் பண்பாடும் அவரது இதயத்தை நிறைக்கும் சமாசாரங்கள். அவரது எழுத்து அத்தனையும் அந்த மண்ணையும் மக்களையும் வாழ்க்கையையும் பற்றியுமே இருக்கும். கதை, நாடகம், நாவல் எல்லாமே, பால்ய கால நினைவுகள் அத்தனையும்,  அம்மண்ணையும்  மக்களையும் பற்றியே இருக்கும். மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையே ஆன  வீர விளையாட்டுக்கூட ரத்தம் படிந்ததாக இராது. அது சார்ந்த தர்மங்களைப் பேசுவதாக இருக்கும். குற்ற பரம்பரையினராக ஆங்கிலேயர் காலத்திலிருந்து பேசப்பட்ட, அவ்வாறே அதற்கான கடுமையுடன் நடத்தப்பட்ட தேவர் மக்களிடம் கூட, அவர்களில் இன்னமும் குற்றம் புரியும் பழக்கம் விடாதவர்களிடம் கூட நிலவும் தர்மங்களைப் பற்றித் தான் அவர் கதைகள் பேசும்.

அது மட்டுமல்ல. இவையெல்லாம் ஒரு ஒட்டுதலுக்கும் பாசத்துக்குமான காரணங்கள். இவற்றிற்கும்  மேலாக,  ஒரு இலக்கியவாதியாக அவர் பெருமைப் பட்டுக்கொள்வதற்குமான காரணங்களையும் வத்தலக்குண்டு கொண்டிருந்தது.  நவீன தமிழ் இலக்கியத்தின்  மூலவர்களில் ஒருவரான, பி.ஆர். ராஜமய்யரைத் தந்த ஊர் அது.  செல்லப்பாவின் ஊர். விவேகானந்தரால் பிரபுத்த பாரதா ஆசிரியத்வத்துக்கு தேர்ந்தெடுக்கபட்டவர். இருபத்தைந்து வயது இளைஞர்.  அந்த வயதிலேயே ஆன்மீக தேடலே அவரது வாழ்க்கையாயிற்று.  பிரபுத்த பாரதாவுக்காக அவர் எழுதிய தத்துவார்த்த கட்டுரைகளும் தத்துவ உபதேச கதைகளும் அடங்கிய ஒரு தடித்த புத்தகம் Rambles in Vedanta மறுபடியும் வெளியிடப்பட்டது செல்லப்பாவால். பி.ஆர். ராஜமய்யரின் நூற்றாண்டு விழாவை செல்லப்பாதான் முன்னெடுத்துக் கொண்டாடினார். அதை வத்தலக்குண்டுவில் கொண்டாடாமல் வேறு எங்கு எடுத்துச் செல்வார் செல்லப்பா? பி. ஆர் ராஜமய்யர் என்னென்னவோ பெருமைகளுக்கெல்லாம் உரியவராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் நூற்றாண்டைக் கொண்டாட, எங்க ஊர்க்காரராக்கும்  என்ற பாசம் கொண்ட ஒரு பழுப்புக் கரை படிந்த கதர் வேட்டியும் சட்டையுமே தன் அடையாளமாகக் கொண்டு தெருவில் புடவை விற்பவரோ என்று தோற்றம் தந்த, ஒரு எளிய, சந்தையில் தோற்ற எழுத்தாளர் தான் முன் வரவேண்டியிருந்தது. அரசு, அல்லது பல்கலைக் கழகம், அல்லது தமிழ் எழுத்தாளர் சங்கம் இது பற்றி யோசித்திருக்க வேண்டும். ராஜம் ஐயருக்கு விழா எடுக்க, Rambles in Vedanta திரும்பப் பதிப்பிக்க, ராஜம் அய்யர் வாழ்ந்த விடு இது என ஒரு நினைவுக் கல் பதிக்க, சென்னையிலிருந்தும் மற்ற ஊர்களிலிருந்தும் தமிழ் பிரமுகர்கள் எனப்படுபவர்களை விழாவுக்கு அழைத்து சிறப்பிக்க, - எல்லாம் செய்ய வேண்டியிருக்கே விழா எனப் பெயர் பெற, ப்த்திரிகைகளில் இடம் பெற, செல்லப்பா என்ன கஷ்டப்பட்டார், எத்தனை பிரமுகர்கள், செல்வந்தர்கள் வீட்டுப் படியேறி, அவர்களது  அசல் முகம் கண்டு வேதனைப்பட்டார் என்பதை உடன் இருந்த சச்சிதானந்தம் தான் சொல்ல வேண்டும். இல்லையெனில் வெளி உலகம் அறியாது. ஆனால் என்ன, தனக்கென என்றால் “நம்மை மதிக்கலேன்னா அந்த வீட்டு  வாசப்படியை எதுக்காக மிதிக்கிறது?” என்று ஒதுங்கலாம். ஒதுங்கினார். பிழைப்புக்கு பொம்மை பண்ணி வித்துக்கலாம். விற்றார். ஆனால் வத்தலக்குண்டுக்கு என்றால், எங்க ஊர் ராஜம் அய்யர் என்றால்? அப்படி இருக்க முடிவதில்லை. விழா நடந்தது. Rambles in Vedanta ஒரே புத்தகமாக வெளிவந்தது. எழுத்து பிரசுரத்தின் எந்த வெளியீடும் இவ்வளவு பெரியது இல்லை. போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்று தெரியாத புத்தகத்துக்கு செல்லப்பா இவ்வளவு துணிந்தது பெரிய விஷயம் தான். ராஜம் அய்யர் வீட்டின் அடையாளமாக நினைவுக் கல்லும்  பதிப்பிக்கப்பட்டது. பட்ட அவமானங்களும் வேதனைகளும் மனதுக்குள் அடக்கிக் கொள்ளப்பட்டது. ஒரு நாடகமும், செல்லப்பாவின் முறைப் பெண், விழாவை ஒட்டிய ஒரு நிகழ்வாக மேடையேறியது என்று நினைவு.

சரியாக நினைவில் இல்லை. ஒரு வேளை பி. எஸ் ராமையாவின் அறுபதாண்டு நிறைவைக் கொண்டாடினாரே, அதே வத்தலக் குண்டுவில், அதே ஊர் பாசத்தோடும், தனக்கு மூத்த, தன்னை மணிக்கொடி எழுத்தாளனாக ஆக்கிய, தன் மதிப்பீட்டில் உலகத் தரத்து சிறுகதை ஆசிரியனான, இன்னொரு வத்தலக்குண்டுக் காரருக்கு!. பி.எஸ் ராமையா விஷயத்தில் அவ்வளவு கஷ்டங்கள் பட்டதில்லை. கஷ்டங்கள் இல்லாமல் இல்லை. பி.எஸ் ராமையா பல துறைகளில் தன் தடம் பதித்தவர். நாடகம், சினிமா, இலக்கியம், காங்கிரஸ், தேசீயம் என. வாஸனிலிருந்து எஸ் வி சகஸ்ரநாமம் வரை பல துறைப் பிரமுகர்களும் தனக்கு வேண்டியவர் என்று ராமையாவின் அறுபதாண்டு நிறைவைக் கொண்டாட உதவுவார்கள். மிகத் திறமை சாலி. எந்தத் துறையானாலும் எளிதில் கற்றுக்கொண்டு செயல்படக்கூடியவர். எல்லாவற்றுக்கும் மேலாக செல்லப்பாவுக்கு ராமையாமீதுள்ள இலக்கிய பாசம். குரு-சிஷ்ய பாவம். முதல் தடவையாக ஒரு இலக்கியகர்த்தாவுடனான ஒரு நீண்ட உரையாடல் மிக சீரியஸான உரையாடல் வெளிவந்தது. எழுத்து பத்திரிகையில். பி.எஸ் ராமையா சிறப்பு மலராக. அதில் ராமையாவின் மார்பளவு சிலை வடிக்கப்பட்டதன் புகைப்படமும் வெளிவந்திருந்தது. சிற்பியின் பெயர் எனக்கு மறந்து விட்டது.

அந்த விழா ராமையாவின் புகழை மாத்திரம் அடையாளப் படுத்தவில்லை. செல்லப்பாவின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் கூட ஒரு அடையாளம் தான். எங்கோ படித்த நினைவு. செல்லப்பா தான் எழுதியிருந்தார். பி.எஸ் ராமையா சுலபத்தில் யாருக்கும் அடங்குபவர் இல்லை. அவர் தனி ஆள் தான். விழா அவருக்கேயானாலும் அவரது சுபாவம் அதற்காக தன் இயலபை விட்டுக்கொடுக்காது. விழா ஏற்பாடுகளைக் கவனிப்பதா, இல்லை பி.எஸ்ராமையாவின் பிடிவாதத்துக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதா? செல்லப்பாவின் கோபமும் பொத்திய வாய்க்குள் எங்கும் மறைந்து கொள்ளும் வகையினது அல்ல. “ராமையா, இந்த விழா உனக்காக, தெரியுமோல்யோ. இங்கே நீ மாப்பிள்ளை மாதிரி. பேசாமல் மனையில் உட்கார்ந்து கொள். வேடிக்கை பாரு. எல்லாக் காரியமும் அதது பாட்டிலே நடக்கும்”. என்று ஒரு அதட்டல். ராமையாவையே அதட்டி தன் கட்டுக்குள் கொண்டு வர முடிகிறது. இதிலிருந்து எல்லாமே செல்லப்பாவின் மேற்பார்வையில்தான், என்றாலும்  குழப்பங்களும்  சந்தடிகளும் நிறைந்தது தான். எழுத்து பத்திரிகைக்கும், அவரது விமர்சனத்   துக்கும், புதுக்கவிதை வெளிப்பாட்டுக்கும்  என்ன கிண்டல், உதாசீனம் அவரது கூட்டாளிகளிடமிருந்து வந்தனவோ, அவற்றையெல்லாம் மீறி அவர் தன் பிடிவாதத்தாலும் அர்ப்பணிப்பு உணர்வாலும் சாதித்துக் காட்டினாரோ, அதே கிண்டலும் உதாசீனமும் இங்கும் வத்தலக்குண்டு விழாக்களுக்கும் தொடர்ந்தது, அவற்றையெல்லாம் மீறி அவர் சாதித்துக்காட்டினார். வத்தலக்குண்டு பிடிப்பும், அந்த மண்ணின் சிறந்த சாதனையாளர்களை வத்தலக்குண்டும் சரி தமிழகமும் சரி மறந்துவிடக்கூடாது என்ற துடிப்பு.

பின்னர் வத்தலக்குண்டுக்கு குடிபெயர்ந்த பின் சச்சிதானந்தம் செல்லப்பாவை அடிக்கடி அங்கு சென்று நாட்கள் பல தங்கியிருந்ததுண்டு. பழைய வீட்டை குடியிருப்புக்கு லாயக்காக்க புனரமைப்பு வேலைகள். தோட்ட வேலைகள் எல்லாம் செல்லப்பா தனித்திருந்தே செய்த காரியங்கள். வத்தலக்குண்டுவைச் சுற்றி வரச் செல்வதுண்டு. எப்போதும் பேச்சு இலக்கியம் பற்றித் தான். அவருக்கு வேறு எதிலும் ஈடுபாடோ அக்கறையோ கிடையாது. இலக்கியம் ஒரு obsession என்கிறார் சச்சிதானந்தம். வெளிப்புறத்தில் சுற்றி வந்து கொண்டிருக்கும் போது செல்லப்பா ஒரு சிறு ஓடையை, காலை எட்டி போட்டால் தாண்டி விடக்கூடிய ஓடை, ஓடையா, சிறு வாய்க்காலா என்ன பெயர் சொல்வது அதற்கு! அதைக் காட்டி,”இது தான் ராஜம் அய்யர் கமலாம்பாள் சரித்திரத்தில் சொல்லும் “மஞ்சள் ஆறு” என்று சச்சிதானந்தத்திடம் சுட்டிக் காட்டுகிறார். “இதா? ஆறா? மஞ்சள் ஆறா? என்று சச்சிதானந்ததுக்கு வியப்பு. ”ஆமாம். ராஜம் அய்யர் காலத்தில் நூறு வருஷத்துக்கு முன் ஆறா இருந்தது. இப்போ இப்படி ஆயிருக்கிறது” என்கிறார். மஞ்சள் ஆறு செல்லப்பாவின் பிரக்ஞையில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது, அது ஆறாக இல்லாது போயினும். தாமிரபரணியும், காவிரியும் கூட அப்படி அழிந்து போகத்தான் சபிக்கப்பட்டுள்ளனவோ என்னவோ.

வத்தலக்குண்டுக்கு அழிந்த சரித்திரம் இன்னும் பல உண்டு. அவற்றையெல்லாம் தான் சுதந்திரப் போராட்டத்தின் போது வாழ்ந்த மனிதர்களையும் நிகழ்வுகளையும் அவர் நினைவு கொள்கிறார் சுதந்திர தாகம் நாவலில். அவர் நினைவு கொள்ளும் அந்த மனிதர்களும் இல்லை. அந்த சூழலும் இல்லை. வத்தலக் குண்டும் அந்த பழைய பிள்ளைப் பிராய வத்தலக்குண்டு இல்லை. தெருவில் நடந்து போகும் போது திண்ணையில் சீட்டாடிக்கொண்டிருப்பவர்கள் ஒரு கை குறைகிறது என்று சத்தம் போட்டு அழைக்கிறார்கள். செவி கொடுக்காது தன் வழி செல்கிறார் செல்லப்பா.

அவர் நினைவில் பதிந்திருக்கும் வத்தலக்குண்டு இல்லை அது.  அந்த மனிதர்களும் இல்லை. அந்த வாழ்க்கையும் இல்லை. எல்லாமே மாறிவிட்டன. இவ்வளவு பிரயாசை எடுத்து இங்கு குடிபெயர்ந்த பிறகு தான் செல்லப்பாவுக்கு இந்த வத்தலக் குண்டுவில் தான் வாழமுடியாது. தன் உயிர்ப்பு இதில் இல்லை என்று தெரிகிறது. அங்கு யாரிடம் இலக்கியம் பேசுவார்? பொழுது எப்படிப் போகும்?

அவரை பார்க்க ஒரு விடுமுறை சமயத்தில் நான் வத்தலக்குண்டு சென்றிருந்தேன் சரியாக நினைவில்லை எந்த வருடம் என்று. என்னை வளர்த்து படிக்கவும் வைத்த பெரிய மாமா காலமாகி வருடங்கள் பலவாகிவிட்டன. சின்ன மாமா மாத்திரம் நிலக்கோட்டையில்.  தஞ்சையில் யுவர் மெஸ் நடத்திவந்த, தஞ்சை பிரகாஷ் எனக்கு அறிமுகப்படுத்திய இருளாண்டி அப்போது இருந்தது தேனியில். நிலக்கோட்டைக்கும், தேனீக்கும் இடையில் வத்தலக்குண்டு. மதுரையில் ஸிந்துஜா. தேவ சித்திர பாரதி நடத்திய ஒரு கூட்டம். மதுரை காலேஜ் ஹவுஸில் ப.சிங்காரம். ரொம்ப தூரம் தள்ளி காந்தி மண்டபமோ என்னவோ அங்கு ஜி.நாகராஜன், எப்போது என்று நினவில்லை. தனியாகவா நண்பர் யாருடனுமா, எழுபதுகளின் மத்தியில் ஒரு வருடம்.

செல்லப்பா வீட்டைக் கண்டு பிடிப்பதா கஷ்டம்? ஆனால் அவர் இல்லை. ஊரில் இல்லை. எங்கோ போயிருப்பதாக மாமி சொன்னார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். எழுத்து பழைய பிரதிகள் வருட வாரியாக பைண்ட் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவரது புத்தகங்களும். Rambles in Vedaanta வும் அவற்றினிடையில். எனக்கு ஒரு பிரதி வாங்கிக்கொண்டேன். காசு கொடுத்து வாங்கிய முதல் எழுத்து பிரசுரம் அது தான். “முதல் ஐந்தாறு புத்தகங்கள் அவர் எனக்கு அவரே அனுப்பியிருந்தார். அறுபது, சிறிது வெளிச்சம், புதுக்குரல்கள், ஜீவனாம்சம், காட்டுவாத்து, வழித்துணை,  இப்படி எத்தனையோ. தொடர்ந்து எழுத்து பிரசுரம் அத்தனையும் அவ்வப்போது அனுப்பி வந்தார்.  “நீங்கள் எழுத்து குடும்பத்தைச் சேர்ந்தவர். நீங்கள் பணம் அனுப்ப வேண்டாம்” என்று எழுதியே அனுப்பி வைத்தார். ”வந்தால் சொல்லுங்கள்” என்று மாமியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினேன். ஊரே வெறிச்சிட்டுக் கிடந்தது. மதிய வேளை. கடும் வெயில் என்பதன் காரணமாக இருக்கலாம். செல்லப்பா வத்தலக்குண்டில் இல்லாததும் எனக்கு ஊர் வெறிச்சிட்டுப் போய் தோன்றுதாகவும் இருக்கலாம்.

ஒரு பிரம்மாண்ட நாவலின் ஒரு பாகம் முடிந்துள்ளது போல, இன்னொரு பாகம் வேறிடத்தில், வேறு மனிதர்களோடு வேறுபட்ட இன்னொரு வாழ்க்கை தொடரக் காத்திருப்பது போல ஒரு உணர்வு.

நினைத்துக் கொண்டேன். பழைய மனிதர்களும் இப்போது புதியவர்களாக, புதிய பார்வைகளும் வாழ்க்கை நோக்கும் கொண்டவர்களாக ஆகியிருந்தார்கள். எல்லோரும் அவரவர் வழிச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். ஊர் ஊராக புத்தக மூட்டையைச் சுமந்துகொண்டு செல்லப்பாவுக்கு துணை நின்ற வல்லிக் கண்ணன். எழுத்து பற்றியும் புதுக்கவிதையின் தோற்றம் பற்றியும் எழுதிய வல்லிக்கண்ணன். ”எனக்கு முன் தமிழை வளப்படுத்திய என் முன்னோர்களை கௌரவிக்காத இந்த சாகித்ய அகாடமி பரிசு எனக்கு வேண்டாம் என்று அதை உதறிவிடுவது தவிர எனக்கு வேறு யோசனைகள் இராது” என்று சுந்தர ராம சாமி எழுதியிருந்தார். இலக்கிய நெருக்கம் ஒரு புறம் இருக்க சுந்தர ராமசாமியை விட வல்லிக்கண்ணன் எத்தனையோ விஷயங்களில் செல்லப்பாவுக்கு நெருக்கமானவர். மனமும் இதயமும் ஒன்றியவர்கள். இருப்பினும் வல்லிக்கண்ணனுக்கு சாகித்ய அகாடமி பரிசு வந்த போது அதை ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை. செல்லப்பாவுக்கு இன்னும் தரப்படவில்லை என்ற ஒரு வாசகம் கூட அவரிடமிருந்து வரவில்லை. இதை விட மோசமான ஒரு நிகழ்வு, ஒரு சமயம் சாகித்ய அகாடமி பரிசுக்கு உரியவரை சலித்துச் சலித்து கடைசியில் தரப்பட்ட பட்டியலில் இருந்து ஒருவரை சிபாரிசு செய்யும் கடைசி தேர்வாளர் மூவரில் வல்லிக்கண்ணன் இருந்தார். பட்டியலில் செல்லப்பா பெயரும் இருந்தது. சுந்தர ராமசாமி பெயரும் இருந்தது. வல்லிக்கண்ணனுக்கு அப்போது செல்லப்பா பெயரைச் சொல்ல என்ன காரணத்தாலேயே மனம் வரவில்லை. அவர் தேர்ந்தது அவரது இலக்கிய இரட்டையரை. அப்போது செல்லப்பா உயிருடன் இல்லை. சாஹித்ய அகாடமி பரிசுக்கு அவரைப் பரிந்துரைக்க சொல்லப்பட்டது, அவரது மூன்று பாகங்களில் எழுதப்பட்ட சுதந்திர தாகம்.  நா.பார்த்தசாரதி எவ்வளவோ மன்றாடியும் அவரது வேண்டுகோளுக்கு மறுப்பு சொல்லி வந்தவர், இறந்த பிறகுதான் யாரும் அவரது படைப்பு எதையும் முன் வைத்து பரிசுக்கு சிபாரிசு செய்ய முடிந்தது. ஆனால் வல்லிக்கண்ணனுக்கு தேர்வு அவர் முன் வைக்கப் பட்டபோது, அதைக் கண்டு கொள்ள அவருக்கு மனமிருக்க வில்லை. இது செல்லப்பாவின் ஜாதக விசேஷம் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்ப முதலே அவர் எதிர்கொண்டது நிராகரிப்பும் கேலியும் தான். அவரது சகாக்கள், அவர் தோழமை கொண்ட, பாராட்டி எழுதிய சகாக்கள் தொடங்கி அவர் எழுத்து மூலம் தெரிய வந்தவர்கள் பலர் வரை. செல்லப்பா வீட்டில் எல்லோர் முன்னும் ஒரு வார்த்தை பேசாது மௌனமாக ஒரு சிஷ்ய பாவத்தில் உட்கார்ந்திருப்பதை வழ்க்கமாகக் கொண்ட எழில் முதல்வன், “இவர் ரொம்ப ஆர்வத்தோடு வருகிறார். கற்றுக்கொள்ள, இவர்கள் மூலம் தான் எதிர் காலத்தில் நவீன தமிழ் இலக்கியம் பல்கலைக் கழகங்களுக்குள் நுழைய வேண்டும்” என்று சொல்லி வந்தார் செல்லப்பா. பின்னர் எழில் முதல்வன் தமிழில் நாவல் இலக்கிய வளர்ச்சி பற்றியும் அதில் அகிலனின் மகத்தான பங்கு பற்றியும் புத்தகம் எழுதி, அகிலன் சாகித்ய அகாடமியின் ஆலோசனைக் குழுவில் கன்வீனராகவோ, உறுப்பினராவோ இருந்த போது தம் புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி பரிசும் பெற்றார். பின்னர் தானே ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பின்னர் கன்வீனராகவும் ஆனார். அவரது ஆலோசனையில் எந்தெந்த எழுத்தாளர் முன்வைக்கப்பட்டிருப்பார், சிபாரிசு பெற்றிருப்பார் பரிசும் பெற்றிருப்பார் எனச் சொல்ல வேண்டிய தேவையில்லை. செல்லப்பா ஜாதக விசேஷம் தான்.

வத்தலக்குண்டுவில் அவர் வீட்டில் எழுத்துவின் பன்னிரண்டு வருட இதழ்களும் பைண்ட் செய்யப்பட்டு வைத்திருந்ததைச் சொன்னேன். சென்னையில் வாழ்முடியாது வத்தலக்குண்டு போனதையும் சொன்னேன். ஒரு அயல்நாட்டு தமிழறிஞர், தமிழ் நாட்டின் முற்போக்குகளுக்கு பேரதரவாளர், செல்லப்பாவிடம் சென்று தனக்கு அந்த எழுத்து பௌண்ட் வால்யூம் வேண்டு மென்று கேட்டார். செல்லப்பாவுக்கு வந்த கோபத்தில் பொரிந்து தள்ளிவிட்டார். ”எட்டணா கொடுத்து வாங்க உங்களுக்கு அன்று மனமிருந்ததில்லை. இப்பொது அதற்கு ஒரு இலக்கிய மதிப்பு வந்தபிறகு வேண்டியிருக்கோ, உங்களுக்கு நான் கொடுப்பதாக இல்லை” என்று நிர்தாக்ஷண்யமாக கத்தி விட்டாராம்.

அவர் கிடக்கட்டும் 1960 லிருந்தே எழுத்து பத்திரிகையில் கவிஞராக உலகுக்கு தெரியவந்தவர், நல்ல சம்பாத்தியம் உள்ளவர் சொன்னார்: “ஒரு கவிதை எழுதி அனுப்பி விடுவேன் பத்திரிகை வந்துவிடும்” என்று எட்டணா சந்தா கட்டாமல் பத்திரிகை பெற்ற தன் சாமர்த்தியத்தை சந்தோஷத்துடன் சொல்லிக்கொண்டார். எல்லாத் தலைமுறையினரும் இப்படி இருக்கும் போது எழுத்து நீடிப்பது எப்படி சாத்தியம்? பன்னிரண்டு ஆண்டுகள் நீடித்ததே ஒரு அதிசயம் தான்.

வத்தலக்குண்டு வாசம் சாத்தியமில்லாது போயிற்று. அதன் மனிதர்களும் சரி. அங்கு சாத்தியமில்லாது போன இலக்கிய வாழ்வும் சரி. இலக்கிய சுவாசம் இல்லாத இடத்தில் செல்லப்பாவால் இருக்க முடியவில்லை. வாழ்க்கை சென்னையில் எவ்வளவு சிரம சாத்தியமாக இருந்த போதிலும்.

திரும்ப சென்னைக்கே திரும்பினார். அதே பிள்ளையார் கோயில் தெருவில் ஒடுங்கிய ஒரு சந்தில். அந்த சந்தில் அவருக்குக் கிடைத்தது ஒரு ஒடுங்கிய அறை கொண்ட வீடு தான். அந்த ஒடுங்கிய அறையில் தான் அவரது கையெழுத்துப் பிரதிகளும், சுதந்திர தாகம் புத்தகப் பிரதிகளின் கட்டுக்களும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R