அத்தியாயம் நான்கு!

நோயல் நடேசன்சுந்தரம்பிள்ளை வீடு திரும்பியதும் வீட்டில் குதூகலம் நிரம்பி வழிந்தது. இந்த வேலை கிடைத்த விடயம் குடும்பத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்தது. வேலை புருச லட்சணம் என சும்மாவா சொல்கிறார்கள்? முக்கியமாக வேறு நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வருபவனது மனநிலையில் வேலை, அவனது உயிருக்கு அடுத்த நிலையில் உள்ளது. அவனில் அவனது குடும்பம், பிள்ளைகள் அவர்களின் எதிர்காலம் என பல சுமைகளை இலகுவாக்கிறது. சுந்தரம்பிள்ளையின் சிந்தனையில் ‘என் போன்று தொழிலுக்காக பட்டப்படிப்பில் நாலு வருடம் படித்தபின் பின் பலவருடங்கள் சொந்த  ஊரில் ஏற்கனவே வேலை செய்து விட்டு வரும் போது அது தொழிலை தொடர்ந்து செய்வது என்பது மிக முக்கியமானது. இளமையில் பல வருடங்களை அழித்து எதிர்காலத்தில் விருப்பான தொழிலுக்காக கண்முழித்து, இரவு பகலாக முயற்சியுடன் படித்து பட்டம் பெற்ற பின்பு அந்த வேலை வாய்ப்பற்று வேறு வேலை செய்வது என்பதே வாழ்கையின் தோல்வியாகிறது. வேலைகள் எல்லாம் சமன் என்று சொல்வது இலகுவான போதிலும் குறிப்பிட்ட ஒரு வேலையை இலட்சியமாக எடுத்து அதற்காக வருடக்கணக்காக அர்ப்பணித்து தயர்ப்படுத்திய பின் மற்ற வேலை எவ்வளவு உயர்வாக இருந்தாலும் அதில் மனநிம்மதி கிடைக்காது. ஜீவனோபாயத்திற்காக வேறு வழியில்லாமல் என்னை நானே சங்கிலியில் பிணைத்துக் கொள்வது போன்று வேலை செய்தாலும் வாழ்க்கையின் தோல்வி என்ற எண்ணம் நிழலாக தொடரும். எனது வாழ்க்கையில் அவுஸ்திரேலியாவுக்கு வந்து மூன்று வருடங்களாக நிரந்தரமான ஒரு வேலை இல்லை. சிட்னியில் பெயின்ற் தயாரிக்கும் தொழிற்சாலையில் சில மாதங்கள், பின்பு உணவுச்சாலையின் சமயல் கூடத்தில் சிலமாதங்கள் என கிடைத்த வேலைகளை செய்துகொண்டு படித்து மிருக வைத்திய பரீச்சையில் பாஸாகினாலும் அலைச்சல் தொடர்ந்தது. நிரந்தர வேலை குதிரைக் கொம்பாக இருந்தது. மெல்பனில் சிலநாட்கள் கிழமைகள் மிருக வைத்தியராக வேலை, அதன் பின்பு அடிலயிட்டுக்கு அப்பால் உள்ள ஊரில் சுமார் ஆறு மாதகாலம் வேலை என்பது தொடர்ச்சியான பயணமாக இருந்தது. கிடைத்த இடங்களில் கிடைத்த வேலையை வேண்டாம் என்று சொல்லாமல் எடுத்துக் கொண்டு சில இடங்களுக்கு குடும்பத்துடனும், மற்றய இடங்களுக்கு தனியாகவும் செல்ல வேண்டி இருந்தது. எனது குடும்பம் மட்டுமல்ல சாருலதாவின் தாயும் தந்தையும் மகளையும் பேரப்பிள்ளைகளையும் பிரிய முடியாமல் பின் தொடர்ந்தனர். ஐரோப்பாவில் அலைந்து திரியும் ஜிப்சிகள்போல் இருந்தது.ஆனால் என்ன குதிரையும் கரவனும் இருக்கவில்லை. இந்த வேலையோடு ஜிப்சி வாழ்க்கை எனக்கு முடிந்து விடும்’ என சுந்தரம்பிள்ளை உணர்ந்த போது மனத்தில் அமைதி வந்தது.

அவுஸ்திரேலிய நாகரங்களில் தங்கள் வாழும் இடங்களில் இருக்கும் கால்ப்பந்து குழுவை பெரும்பாலும ஆதரிப்பது வழக்கம். அதன் பிரகாரம் சுந்தரம்பிள்ளையின் மகன் சகன், பல நகரங்களுக்கு குடும்பம் செல்லும் போது அந்தந்த நகரங்களின் கால்ப் பந்தாட்ட குழுக்களில் ஏதாவது ஒன்றை தனது அபிமான குழுவாக ஏற்று ஆதரவை அளிப்பான். ஐந்து வயது முதல் எட்டு வயது வரையும் பல நகரங்களையும் இப்படி சுற்றுவதால் ஒரு வருடத்திற்கு ஒரு குழுவை அபிமான குழுவாக அவன் ஏற்றுக்கொள்வதன் சங்கடம் சுந்தரம்பிள்ளைக்கு புரிந்தது. அவுஸ்திரேலியாவில் கால்ப்பந்தாட்ட குழுக்களுக்கு கிடைக்கும் ஆதரவு, இந்திய – பாகிஸ்தான் கிரிக்கட் ஆட்டத்தில் அந்தந்த நாட்டைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவைப் போன்றது. அதைவிட இப்படி புதிதாக குடிவந்த பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் கால்பந்தாட்ட குழுக்கழுக்கு ஆதரவு கொடுப்பது முக்கிய விடயம். பாடசாலை நண்பர்கள் குழுக்களாக ஒன்றாவதற்கு உதவும் முக்கிய விடயம். இதனால் சகனுக்கு அப்பாவுக்கு வேலை கிடைத்தால் மெல்பனில் தொடர்ந்து இருப்பதை விட ஏற்கனவே பிரபலமான கொலிங்வூட் என்ற கால்பந்தாட்ட குழுவை தனது அபிமான குழுவாக தேர்ந்தெடுத்திருந்ததால் அந்தக் குழுவை தொடர்ந்து ஆதரிக்க முடியும் என்பது அவனது மகிழ்ச்சிக்கு காரணமாகியது. அடிலயிட்டில் பிரிந்திருந்த அப்பா இனிமேல் ஒவ்வொரு நாளும் வீடு வருவார் என்பது மகள் சாந்திக்கு சந்தோசம் அளித்தது. இருவரின் சம்பளத்தில் மெல்பனில் நல்ல வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும் என்பது சாருலதாவின் எண்ணம். இப்படி ஒவ்வொருவர் மனங்களும் வெவ்வேறு காரணங்களால் குதூகலித்தது.

சாருலதாவிடம் வேலை கிடைத்த விடயத்தை மகிழ்சியுடன் சொல்லிவிட்டு, அங்கு நிகழ்ந்த வினோதமான சம்பவம் பற்றியும் சுந்தரம்பிள்ளை விவரித்தபோது அவள் அதை நம்ப மறுத்தாள்.

கோலிங்வூட் என்ற பெயருடைய பூனை பேசியதை சாருலதாவால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கும் அவள், ‘உங்கள் மனதில் இருந்த ஒருவகை நினைப்புத்தான் அந்தப் பூனை பேசுவது போல் கேட்டிருக்கிறது. உட்காதும் மூளையின் ஒரு பகுதிதானே ’ என்றாள்.

‘இல்லை. சாரு… உண்மையாகக் கேட்டது’

‘முட்டாள்தனமாக பேசாதீர்கள் மற்றவர்கள் சிரிக்கப்போகிறார்கள்”.

‘உண்மை நீ நம்பாவிட்டாலும்’

‘மனோவியாதியால் பீடிக்கப்பட்டவர்களுக்குத்தான் இப்படி உணர்வு வரும். வேலை கிடைக்காமல் தலை பேதலிப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் மட்டும்தான் வேலை கிடைத்ததால் இப்படி ஒரு பேதலித்த நிலையை அடைந்திருக்கிறீர்கள்’ எனக் கூறிவிட்டு கணவனை தனது நோயாளியை போல் பார்த்துவிட்டு நகைச்சுவைக்காக செய்வது போல புன்னகைத்தாள்.

இந்தக் கதையை இவளிடம் இனி பேசிப் பிரயோசனம் இல்லை எனப் படுக்கைக்கு சென்றான் சுந்தரம்பிள்ளை. படுக்கையிலும் காலோசின் காதல் விடயங்களுடன், பேசும் பூனையின் நினைவுகள் தொடர்ந்தன. கணக்காளரின் மலச்சிக்கலும், மலகூடத்து பிளேபோய் மகசின் விவகாரமும் சிரிப்பை வரவழைத்தன. தொடர்ந்து வந்த அன்றைய நிகழ்வுகளின் நினைவுகள் தமிழ் படத்தில் வரும் நவரச
காட்சிகள்போல் வந்தன.. சில மணித்தியாலத்தில் நினைவுகள், குழந்தைகளின் உணவைச் சுற்றிப் பறக்கும் இலையான்கள் போல் பறந்தன. விரட்டிவிட்டு நித்திரைக்குச் செல்ல நடுநிசி கடந்துவிட்டது. அதன் பின்பு அந்த நினைவுகள் மீண்டும் கனவுகளின் காட்சிகளாகின.

அடுத்த நாள் வேலைக்குச் சென்ற போது சாம் அன்ரோவிச் என்ற அழகான இருபத்தைந்து வயதான இளைஞன் சுந்தரம்பிள்ளைக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டிருந்தான். சாம் யூகோஸ்லாவியாவில் குரோசியவைச் சேர்ந்தவன். ஏற்கனவே நாலு வருடங்கள் மிருகவைத்தியம் படித்துவிட்டு பட்டப்படிப்பை முடிக்காமல் அவுஸ்த்திரேலியா வந்தவன்.‘ஏன் தொடர்ந்து படிக்கவில்லை’ எனக் கேட்டபோது ‘ஆங்கிலம் இங்கு எனக்கு படிப்பதற்கு பிரச்சினையாக இருந்தது. தற்பொழுது திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தந்தையாகி விட்டபடியால் குடுப்பத்திற்காக உழைக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்’ என்றான். வெள்ளைக்காரர் இலங்கையை ஆண்டதால் தனக்கு ஆங்கிலம பிரச்சைனையாகவில்லை என்ற நினைப்பு சுந்தரம்பிள்ளைக்கு வந்தது. சாம் எப்பொழுதும் சிரித்தமுகத்தோடும், மற்றவர்களிடம் நகைச்சுவையாகவும் பெண்களிடம் சாதுரியமாகவும் பேசும் சாமை உடனடியாகவே பிடித்திருந்தது. இருவரும் வெளிநாட்டவர்களாகவும் இருந்ததால் நட்பு வசந்தகாலத்து செடியாக துளிர்த்தது.

காலை நேரத்தில் வேலை தொடங்கியதும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மிருகங்களை பரிசோதிக்க வோர்ட் ரவுண்ட் போகவேண்டும். அதற்கான குறிப்புப் புத்தகத்துடனும், பரிசோதனைக் கருவிகள், மருந்துகளுடனும் சாமும் சுந்தரம்பிள்ளையும் பூனைகள் அடைத்து வைக்கப்பட்ட பகுதிக்குச் சென்றபோது கொலிங்வூட் எதிரில் வந்தது. ‘வேலை தொடங்குவதற்கு போகும் போது எதிரில் வந்தாலும் இந்தப் பூனை மிகவும் புத்தி சாதுரியமானது. தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும். எந்த நாய்க்கும் பயப்படாது. இல்லையா ஹொலிங்வூட்? ’ என்று சாம் அதனை கையில் தூக்கி அதனது சாம்பல் நிறமான பட்டுப் போன்ற உரோமங்களை கைகளால் தடவியபடி அறிமுகப்படுத்தியபோது சுந்தரம்பிள்ளை, ‘ஏற்கனவே எனக்கு அறிமுகமாகிவிட்டது’ எனச் சொன்னவாறு கொலிங்வூட்டின் பழுப்பு நிற கண்களை பார்த்து அதன் தலையில் தடவினான் சுந்தரம்பிள்ளை. இருவரது தொடுகைகளிற்கு எந்த அசைவையும் காட்டாது தனக்கு இப்படி செய்வது உங்கள் கடமை என இராணுவ மேலதிகாரி, சோல்ஜரிடம் சலுட்டை ஏற்றுக்கொள்வது போல் இருந்துவிட்டு திடீரென சாமின் கையில் இருந்து கீழே பாய்ந்து சுந்தரம்பிள்ளையின் காலைப் பிராண்டியபடி ‘பெண்கள் விடயத்தில் மட்டும் இவனை நம்பாதே. மற்றும்படி இவன் நல்வன்’ எனக் கூறியது. சுந்தரம்பிள்ளை திடுக்கிட்டு வீட்டில் மனைவி சாருலதா கூறியதை நினைவு கூர்ந்தான். ‘இந்தப் பூனை போன்று இங்கு ஒரு நாயும் உள்ளது’ என்று சாம் கூறினான். ஆனால் சாமைப் பற்றிய கொலின்வூட்டின் கூற்று அவனுக்கு கேட்டிருக்க சாத்தியமில்லை. எனக்கு மட்டுமே அதனைக் கேட்கமுடிகிறது என்ற எண்ணத்தில் தன்னை சுதாரித்துக்கொண்டு ஒவ்வொரு கூட்டில் இருந்த பூனைகளை பார்த்துப் பரிசோதித்து, ஏற்கனவே நோய் குணமானவற்றை வீட்டுக்கு அனுப்பும்படி குறிப்பெழுதிவிட்டு, சிலவற்றிற்கு ஏற்கனவே கொடுக்கும் மருந்தை மாற்றி வேறு மருந்தை எழுதினான் பூனைகளின் வோட்டின் ஒரு மூலையில் உள்ள கூட்டில் சிறிய, நாலுமாதம் மட்டுமே வயதான மோல்ரீஸ் இன நாய்குட்டி இருந்தது. வெள்ளை நிறத்தில் புதிதாக பெய்த பனியை திரட்டிச் செய்த உருண்டை போல் அழகாக இருந்தது. கருமையான மூக்கு திருஸ்டிப் பொட்டாக தெரிந்தது. கண்கள் உரோமத்தில் புதைந்திருந்தது.. அந்த நாய்க்குட்டி தன் தலையை தொடர்ச்சியாக மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டிருந்தது. உரோமத்தை விலக்கி கண்கள் இரண்டையும் பார்த்தபோது கண்கள் இரண்டிலும் மெதுவான கிரிக்கட்டின் சுழல் பந்து வீச்சில் தெரியும் சுழற்சி தெரிந்தது. மேலும் கீழுமாகவும் மற்றும் இடம் வலம் என நான்கு திசைகளிலும் சுழற்சி இருந்தது. அந்த கண்களை பார்த்தவுடன் அதன் மூளை நரம்பின் பகுதிகள் மூளை காச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது புரிந்தது. கூட்டிலிருந்து சோதனை செய்வதற்காக நாய்குட்டியை சாம் தூக்கியபோது கூட்டின் உட்பகுதியில் தலைமயிர் வளர்த்த இந்திய சாமியார் சத்திய சாயிபாபாவின் கண்ணாடிப் பிரேம் போட்ட சிறிய படம் இருந்தது. பல இலங்கை இந்தியர்களது வீடுகளில் சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கும் படம் இப்படி நாயினது கூட்டில் இருப்பது சுந்தரம்பிள்ளை எதிர்பாரக்காதது ‘இது என்ன? இந்தக் கூட்டில் சாயிபாபாவின் படம் இருக்கிறது?’

‘இந்தியப் பெண் ஒருவரின் நாய்க்குட்டி.. இவர் ஒரு ஞானி என்றும் இவரின் ஆசியால் மூளைக்காய்ச்சல் குணமாகும் என்று வைத்திருக்கிறார். அந்தப்படத்தை கூட்டை விட்டு எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.’ என்றார்.

அந்தப் பகுதிக்கு பொறுப்பான மோறின் ‘ஏன் இங்கு வைத்தியத்துக்கு கொண்டு வந்தார்கள். அப்படியே அவரிடம் கொண்டு போயிருக்கலாமே?'

‘அவர் இந்தியாவில் இருப்பதால்தான் இங்கு வந்திருக்கிறார்கள்’ மீண்டும் சிரித்தபடியே அவள் சொன்னாள்.

அந்தப் பதில் நகைச்சுவையாக மட்டுமல்ல தர்க்கரீதியாகவும் இருந்து. அந்த நாய்க்குட்டி குணமானால் பெயரும் புகழும் கிடைப்பது சத்திய சாயிபாபாவிற்குத்தான். வைத்தியசாலைக்கு அல்ல. ஆனால் நாய்க்குட்டி இறந்தால் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்பும் இறந்து விட்டது என்பார்கள் . ஆக மொத்தத்தில் சாயிபாவாவின் கீர்த்திக்கு பங்கம் வராது. புற்று நோய் வந்த ஒருவர் பலதடவை கீமோதிரபி, ரேடியோதிரப்பி என விஞ்ஞானத்தின் பயன்களை பெற்று குணமாகி இருப்பதும், பலகாலம் வாழ்வதும் இக்காலத்தில் சகஜமாக நடக்கிறது. ஆனால் அதற்கான பெயர் மட்டும் யாரோ மயிர் வளர்த்த பேர்வழிக்கு செல்வது வைத்திய தொழில் செய்யும் சுந்தரம்பிள்ளைக்கு அநியாயமாகப் பட்டது. புற்றுநோயை பற்றி பல காலம் ஆராச்சி செய்த விஞ்ஞானிகள் மற்றும் குணமாக்கிய வைத்தியர்கள் எந்த பாராட்டுதலும் பெறுவதில்லை. அவர்களது பெயரைக் கூட எவரும் நினைவு வைத்திருப்பதில்லை. பரவாயில்லை. சத்தியசாயி பக்தர்கள் செலுத்தும் பணம் மருத்துவருக்கும் வைத்தியசாலைக்கும் கிடைக்கிறது. இந்த நினைப்பு சுந்தரம்பிள்ளைக்கு சிறிது ஆறுதலைக் கொடுத்தது. சாமின் உதவியுடன் மயக்க மருந்தை ஏற்றி அந்த குட்டி நாயை நித்திரையாக்கிவிட்டு இருவரும் நாய்கள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குச் சென்றார்கள்.

நாய்களின் வோர்ட், பூனைகளை வைத்திருக்கும் வோர்ட்டில் இருந்து சிறிது துரத்தில் உள்ளது. இடைப்பட்ட பகுதியில்தான் சத்திரசிகிச்சை செய்யும் அறைகள் மற்றும் பல்வைத்திய பிரிவும் உள்ளன. இதன் மூலம் நாய்களின் குரைப்புச் சத்தங்கள் பூனைகளுக்கு கேட்காது. நாய்கள் பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு தொற்று நோய்ப் பிரிவும் தொற்றாத நோய்களால் பீடிக்கப்பட்ட நாய்களை வைத்திருக்கும் பிரிவும் உள்ளன. தொற்றாத நோய்ப் பகுதி மேலும் இரண்டாக பிரிக்கப்பட்டு, அதில் தீவிர சிகிச்சைப்பிரிவு தனியாக உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாக இருப்பவர்களுக்கு மேலாளர் மேவிஸ் என்ற ஐம்பது வயதான பெண். பருத்த உடலும் கரகரத்த ஆண்குரல் போன்ற அவரது குரல் நாய்களை மட்டுமல்ல மனிதர்களையும் ஒரு வழிக்குக் கொண்டு வரும் போல் தெரிந்தது. காக்கிநிற அரைக்கால் சட்டையுடன் சிகரட்டு பிடித்தபடி வைத்தியசாலையின் வாசலில் எதிர்கொண்ட போது சாமால் மிக மரியாதையாக
அறிமுகப்படுத்தபட்டார்.

இருவரும் சென்ற பாதையில் டொக்டர் காலோஸ் சேரமும் அண்ட்ரூவும் தங்களது வோர்ட் ரவுண்டை முடித்துக்கொண்டு வந்தபோது எதிர்ப்பட்டார்கள். இருவரது முகத்திலும் அணையின் மேலாகப் பாயும் வெள்ளம் போல் சிரிப்பு நுரைத்தபடி;வழிந்தோடியது.

‘இவர்கள் சிரிப்புக்கு ஏதாவது செக்ஸ் ஜோக்குகள்தான் காரணமாக இருக்கும்’ என சாம் மெதுவாக காதோரமாக சொன்னான்.

‘சாம், இன்று அழகான ஒரு பெண் வைத்தியர் வேலை தேடி நேர்முகத்துக்கு வந்தார். ‘காலோஸ் அந்த பெண்ணின் நேர்முகம் முடியும் வரை கண்ணை அவளது தொடைகளில் இருந்து எடுக்கவில்லை. ஆண்களின் கண்களை களவு கொண்டு செல்லும் அபாரமான அழகு. அழகைவிட அவளது நடை பேசும் தோரணை விபரிக்க முடியாத அளவு கவர்ச்சியானது. இந்த வைத்தியசாலை அவளது அழகைத் தாங்குமோ தெரியாது?’

அண்டரூவின் வாயில் இருந்து அழகின் ஆராதனையுடன் நாடகப்பாணியில் வார்த்தைகள் எச்சியில் தோய்ந்து வழிந்தன..

‘அவளுக்கு வேலை நிச்சயம்தானே, காலோஸ்’ என்றான் சாம்.

‘நேற்று இப்படியான ஒரு முகத்தை வேலைக்கு எடுத்தேன். அதற்கு சமன் செய்ய அழகான பெண்ணை வேலைக்கு எடுக்க வேண்டாமா? சுந்தரம்பிள்ளையை பார்த்து சிரித்தபடி காலோஸ் சொன்னபோது அந்த வழியால் வந்த மோறின், ‘ உமது முகத்தை பலவருடமாக பார்த்து பொறுத்துக்கொள்ளுகிறோம் காலோஸ் உன்னிலும் பார்க்க இளமையும் அழகும் சிவாவிடம் உள்ளது’ என்றாள்.

“மோரினுக்கு கறுப்பு பிடிக்கும்“ என்றான் காலோஸ்

‘பிளடி காலோஸ்’ என கூறியபடி கடந்து சென்றாள்

இந்தச் சம்பாசணையில், வேலையில் சேர்ந்த இரண்டாம் நாள் காலை நேரத்தில் கலந்துகொள்ள விருப்பம் இல்லாமல், தீவிர சிகீச்சை பிரிவுக்குள் சுந்தரம்பிள்ளை சென்றான். அந்த இடத்தில் ஒரு இளைஞன் சிரித்தபடியே வந்து கைகளைத் தந்து தன்னை ஜோன் ரிங்கர் என அறிமுகப் படுத்திக்கொண்டான். சிரிக்கும்போது முன் பல்லுக்கு மேலே உள்ள சிவந்த முரசும் தெரிந்தது. கருப்பான சுருள் தலைமுடியுடன் ஆறடி உயரத்தில் அழகாக இருந்தான்.அவனது சிரிப்பில் மற்றவர்களை தொற்றிக்கொள்ளும் கவர்ச்சி இருந்தது. அந்தத் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருப்பவை அதிக கவனிப்பு தேவைப்படும் நோய் கொண்டவை இருந்தன. அதில் பாம்பு கடித்த ஒரு ஆண் அல்சேஷன் நாய் இருந்தது. அதனது மூத்திரவாயில் ரியுப் செலுத்தி பிளாஸ்ரிக் பையுடன் இணைத்திருந்தார்கள். அந்த நாயில் இருந்து இரவு முழுவதும் வெளியேறிய சலத்தின் அளவைக் குறித்து வைத்திருந்தார்கள்.

அவுஸ்திரேலியாவில் உள்ள ரைகர் இனத்தைச் சேர்ந்த பாம்பினால் கடிக்கப்பட்டுஇரவு வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட இந்த நாய்க்கு பாம்புக்கடிக்கான மாற்று மருந்து செலுத்தப்பட்டதால் இன்று உயிர் பிழைத்துள்ளது. வெப்ப காலத்தில் காலை மாலை நேரத்தில் இந்த ரைகர் பாம்பினால் மிருகங்களும் மனிதர்களும் கடிபடுவார்கள். பாம்புகள் இரைதேடி இடம்பெயரும் போது நாய்கள் அவற்றை நோக்கி கடிப்பதற்காகவோ விளையாட்டாக மூக்கை நுளைக்கும் போது அவற்றின் முகத்திலும் கால்களிலும் கடிக்கப்படும். சிறுநீரகத்தை தாக்கும் இந்தப் பாம்பின் விசம் உடனடியாக மாற்று மருந்து கொடுக்காவிடில் உயிரை எடுக்கக் கூடியது. சிறுநீரகத்தின் பாதிப்பை அறிந்து கொள்ள சிறுநீரின் அளவு பயன்படும்.

அந்த நாயின் சலத்தில் இரத்தம் தெரியவில்லை. மேலும் எழுந்து நின்று மோப்பம் பிடித்தபடி நின்றது. புதிய ஜென்மத்தை அடைந்துவிட்டது என தெரிந்ததால் உரிமையாளருக்கு நாயை பற்றிய நல்ல செய்தியை தெரிவிக்க வேண்டும் என குறித்துக்கொண்டு அடுத்த கேசை பார்த்தான். அது ஒரு சிவப்பும் நரை நிறமும் கலந்த நீண்ட உரோமங்களைக் கொண்ட பொமரேனியன் இன நாய், இதய
நோயால் பாதிக்கப்பட்டதால் கண்ணாடியால் ஆன ஒட்சிசன் பெட்டிக்குள் இரவலாக சிலிணடரில் இருந்து கிடைத்துவரும் காற்றை சுவாசித்துக்கொண்டு, ஆட்களைப் பார்த்து வாலையாட்டியது.

அதிக காலம் வாழ விரும்பும் மனிதர்கள் போல் செல்லப்பிராணிகளையும் தன்னுடன் வைத்துக்கொள்ள மனிதர்கள், விலங்கு மருத்துவர்களை நம்பி இருக்கிறார்கள். ஒரு செல்லப்பிராணிகளின் கடைசி நிமிடத்தை தீர்மானிப்பது மிருக வைத்தியரின்
மிகவும் பொறுப்பு வாய்ந்த கடமையாகிறது. இனிமேல் இந்த செல்லப்பிராணி நோயால் துன்பப்படும். அந்த நோயை எம்மால் குணப்படுத்தவோ, குறைக்கவோ முடியாது. மேலும் அதன் துன்பம் உங்களுக்கும் பாரமாகவும், கவலையாகவும் இருக்கும் என்பதை உரிமையாளர்களுக்கு உணர்த்த வேண்டும். இங்கே அந்த விடயத்தை அவர்களுக்கு புரியும்படி சொல்லும் அதே நேரத்தில், அந்த வார்த்தைகள் நூற்றுக்கு நுாறு வீதம் உண்மையாகவும் இருக்கவேண்டும். அங்கு வைத்திருந்த செல்லப்பிராணிகளின் நோய்களின் வரலாற்றை, மருத்துவ அறிக்கையில் படித்து தெரிந்து கொள்ள முன்பு ஜோன் ரிங்கரால் சுந்தரம்பிள்ளையிடம் எடுத்துக் சுருக்கமாக கூறப்பட்டது. ‘ஜோன் மெல்பனில் உள்ள சிறந்த கிறமர் கல்லூரியில் படித்தவன்’ என்றான் சாம். மெல்பனின் தனியார் பாடசாலைகள் அவுஸ்திரேலியாவில் புகழ் பெற்றவை. அவற்றில் படிப்பதற்கு உள்ளுர் மாணவர்கள் மட்டுமல்லாது பல ஆசிய நாடுகளில் இருந்து செல்வந்த மாணவர்கள் வருவார்கள். கல்விமான்களை மட்டும் உருவாக்காமல் சிறந்த விளையாட்டு வீரர்களையும் சமுதாயத் தலைவர்களையும் சேர்த்து உருவாக்கும் இந்தப் பாடசாலைகளில் படிப்பதற்கு நிச்சயமாக பெருந்தொகைப் பணம் வேண்டும். பெற்றோர் இங்கு பிள்ளைகளை படிக்க வைக்கும்போது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீடாகவே அதனைச் செய்வார்கள். அப்படியான சிறந்த பள்ளியில் படித்து விட்டு நாய்களை பராமரிக்கும் வேலைக்கு ஜோன் வந்தது அவனது பெற்றோரின் சிறந்த முதலீடாக சாமுக்குத்
தெரியவில்லை.

‘நாய்களைப் பராமரிக்கும் வேலை எனக்குப் பிடித்தது அதுதான் செய்கிறேன். சிவா, நான் வசிக்கும்; இடத்திற்கு உங்கள் இடத்தை கடந்துதான் செல்ல வேண்டும். வேலை முடிந்த பின் என்னோடு காரில் வந்தால் உங்கள் வீட்டில் இறக்கி விடுவேன். உங்களுக்கு இரயில் பணம் மிச்சமாகும். எனக்கும் பேச்சுத்துணையாக இருக்கும்.’ என்றான் சாம். ஜோனின் நேரடியான பேச்சும், அவன், சாமின் கூற்றை சிரித்தபடியே புறக்கணித்ததும் சுந்தரம்பிள்ளைக்கு பிடித்திருந்து.

‘நல்லது மீண்டும் மாலையில் சந்திப்போம்’ என்றான் சுந்தரம்பிள்ளை. சாம், நீ ஆங்கிலம் தெரியாது என்றாய் ஆனால் எப்படி அழகாகாக பேசுகிறாயே? ‘நான் படிக்கிற காலத்தில் குரேசியாவில் உல்லாசப் பிரயாணிகள் ஹொட்டேல் ஒன்றில் பகுதி நேர பரிமாறுபவனாக வேலை செய்தபோது ஆங்கிலத்தை பேசுவதற்கு கற்றுக் கொண்டேன். பேசும் ஆங்கிலம் எழுதுவதற்கோ, படிப்பதற்கோ காணாது.

‘இந்த வைத்தியசாலையில் வேலை செய்வது இலகுவாக இருந்ததா?’

‘அதற்கு நான் காலோசிற்கு நன்றி சொல்லவேண்டும். எனது பிரச்சனையை சொல்லிய போது வேலை தந்ததுடன் என்னை தொடர்சியாக பாதுகாப்பது காலோஸ்தான்.

‘ஏன் பாதுகாக்க வேண்டும்’?

‘எனது ஆங்கிலம் பல செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. அதை பெரிய விடயமாக்கி சிலர் என்னை வேலையில் இருந்து எடுக்க வேண்டும் அல்லது நாய்களுக்குப் பொறுப்பாக போடவேண்டும் என பிரச்சனை உருவாக்கிய போது காலோஸ் அந்த இடத்தில் என்பக்கம் நின்றதால் ஒருவாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை.

‘இந்த வைத்தியசாலையில் இனவாதமானவர்கள் பலர் இருக்கிறார்களா’?

‘இனவாதம் இருந்தாலும் பலர் வெளியே காட்டமாட்டார்கள். ஆனால் நம்மைப்போல் வெளிநாட்டவர்களிடம் திறமை இருக்கு என்பதை வெளிக்காட்டும் வரையும் அவர்கள் நம்பமாட்டார்கள்.’

‘அது சரியானதுதானே’?

‘என்னைப்பொறுத்தவரை நேரடியான இனவாதத்தை நான் இதுவரை சந்தித்தது இல்லை’

‘அது ஒருவிதத்தில் நிம்மதியளிக்கிறது. என்னைப் பொறுத்வரை சிறுமிருகங்களின் வைத்தியத்தை இப்பொழுதுதான் செய்கிறேன். அதற்காக இந்த வைத்தியசாலையைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பித்தேன். குறைந்தபட்சமாக வேறு பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்தால் இலகுவாக இருக்கும்.’

ஊர், சமூக கூட்டம், ஏன் ஒரு வேலைத்தலமாக இருந்தாலும் ஒரு அன்னியர் செல்லும்போது அந்த இடத்தின் சமநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. ஏற்கனவே அங்குள்ளவர்கள் தங்களது செயல்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த மாற்றம் இலகுவானதல்ல. இந்த மற்றத்தை விரும்பாதவர்கள் புதிதாக வந்தவர்களை வெறுக்கிறார்கள். மற்றவர்கள் மாற்றத்தை அனுசரித்தபடி தங்களை மாற்றுகிறார்கள். மாற்றம் மெதுவாகத்தான் நடைபெறும் என்பது வரலாறு சொல்கிறது. அவுஸ்திரேலியா, ஆவுஸ்திரேலிய ஆதிகுடிகளை மனிதர்கள் இல்லையென கூறியது. பின்பு ஆசியர்களுக்கு எதிராக வெள்ளையர் மட்டும்தான குடியேறலாம் என இருந்து மற்றமடைந்து பல்கலாச்சார சமூகமாகமாறி சகலரையும் வரவேற்கிறது. இந்த மாற்றம் மெதுவாகத்தானே நடந்தது. இனவாதம், சமயவெறி, ஏன் சாதியஎதிர்ப்பு என்பன இந்த மாற்றத்தை வெறுக்கும் உணர்வால் உருவாகிறது. இளைஞர்கள், பெண்கள் மாற்றங்களை ஏற்றுகொண்டு செல்பவர்களாக இருப்பதால் இந்த எதிர்ப்பு உணர்வுகள் அவர்களில் குறைவாகவும் ஆண்களில் வயதானவர்கள் மாற்றத்தை வெறுப்பவர்களாக இருப்பாதால் இப்படியான எதிர்ப்புணர்வுகளை அதிகம் கொண்ட டைனோசர் போன்று இருக்கிறார்கள். இந்த வெறுப்புகள் எதிர்ப்புணர்வுகள் சமூகங்கள், சமயங்கள், சாதிகள் தொடர்சியாக இருப்பதற்கு உதவும் என்பதால் இப்படியான கூட்டத்தில் தமது பிழைப்பை நடத்துபவர்கள், இதை தொடர்சியாக வைத்துக்கொள்ளவிரும்புகிறார்கள். கத்தோலிக்க பாப்பாண்டவருக்கோ ஒரு முல்லாவுக்கு ஒரு கூட்டத்தின் தனித்தன்மையை பேணுவது அவர்கள் அதிகாரத்திற்கும், பிழைப்பிற்கும் தேவையாகிறது.

சாம், உன்னை காலோஸ் உள்வாங்கியது போல் இப்பொழுது நான் வந்திருக்கிறேன். இது எப்படியாக வைத்தியசாலையில் பார்க்கப்படுமோ தெரியவில்லை.? ‘

‘காலோஸ் இருக்கும்வரையில் எவராலும் எதுவும் செய்யமுடியாது.காலோசுக்கு இந்த வைத்தியசாலையை நடத்தும் நிருவாக குழுவினரிடம் நல்ல மரியாதை உள்ளது. பத்துவருடங்கள் தலையை வைத்தியராக இருந்து நடத்துவது பெரிய காரியமாக
அவர்கள் நினைக்கிறார்கள்’ என்றான்

தொடரும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R