முகநூல் குறிப்புகள்: குளச்சல் மு. யூசுபுடன் ஒரு நேர்காணல் [எழுத்தாளர் குளச்சல் மு. யூசுப் நல்லதொரு மொழிபெயர்ப்பாளர். மீஸான்கற்கள் (நாவல்), ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (அனுபவப் பதிவு), மஹ்ஷர்பெருவெளி (நாவல்), நளினிஜமீலா (சுயசரிதை), நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி (சுயசரிதை), அழியாமுத்திரை (நாவல்), அமரகதை (நாவல்), வினயா (சுயசரிதை), அடூர் கோபாலகிருஷ்ணனின் இடம் - பொருள் - கலை (திரைப்படப் பதிவு), உலகப்புகழ்பெற்ற மூக்கு (சிறுகதைத் தொகுப்பு), நக்ஸலைட் அஜிதா (சுயசரிதை), மேலும் சில இரத்தத் துளிகள் (நாவல்) போன்ற மலையாள இலக்கியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் இவரே. இவர் தான் வழங்கிய நேர்காணலொன்றினை முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனைப் 'பதிவுகள்' தனது 'முகநூல் குறிப்புகள்' வாயிலாகத் தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. - பதிவுகள்]

கேள்வி: குடும்பப் பின்னணி பற்றி கூறுங்கள்?

என்னுடன் பிறந்தவர்கள், ஆறுபேர். குடும்ப அமைப்புகளைக் குலைக்கவேண்டும் என்று சொல்லும் எல்லா நவீன சிந்தனையாளர்களையும்போல் நானும் குடும்பஸ்தன்தான். மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். நான் கற்றது, சான்றிதழையோ குமாஸ்தா உத்தியோகத்தையோ நோக்கமாகக் கொள்ளாத கல்வி முறை. அதாவது நம்ம குருகுலம் மெக்காலேவின் தொழிற்கூடமல்ல. இது திட்டமிட்டு நிகழ்ந்ததுமல்ல, சொல்லப்போனால் திட்டமிடாததால் நிகழ்ந்து விட்டது. எங்களுடைய பூர்வீகச் சொத்தை, அதாவது மூன்று சென்டு நிலத்தை சமீபத்தில் நாங்கள் பாகம் பிரித்துக்கொண்டோம். அதில் எனக்குக் கிடைத்தது, மூவாயிரத்து நூற்றுப் பதினைந்து ரூபாய். ஒரு பேராசிரியரின் ஏறத்தாழ ஒருநாள் கூலி. இந்தப் பின்னணியிலிருந்து நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளலாம்.

கேள்வி: நீங்கள் எந்த வயதிலிருந்து எழுதி வருகிறீர்கள்?

நம்புவீர்களா, தெரியாது. இருந்தாலும் சொல்கிறேன்: என்னுடைய பன்னிரெண்டாவது வயதிலிருந்து! எழுதியவை வெளிச்சம் காணவேண்டுமென்ற ஆர்வமெல்லாம் முன்பு ஒருபோதுமே இருந்ததில்லை. எழுதத் தோன்றினால் எழுதுவேன். கிழித்தெறியத் தோன்றி னால் கிழித்தெறிவேன். நான் எழுதி முதலில் பத்திரிக்கைக்கு அனுப்பியதும் பிரசுரமா னதும் 1983இல் நிகழ்ந்த சஃபானுபேகம் வழக்கு சம்பந்தமாக உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாக எழுதிய கட்டுரைதான்.

கேள்வி: கவிதை எழுதும் வழக்கம் உங்களுக்கு உண்டா?

எழுதப் படிக்கத் தெரிந்து, இளமையின் துவக்கக் காலத்தில் கவிதை எழுதாத எந்த மனிதனும் இருக்கவே முடியாதென்று நினைக்கிறேன். பதினெட்டு வயதில் நான் எழுதிய கவிதையொன்று:

ஏடா பயலே எழுந்துருடா!
தாயின் திருப்பள்ளியெழுச்சி.
சோபனக் கனவில் சுருக்கென்று திரை.
அன்றாட அவலங்கள் நின்றாடும் மனதில்
பளிச்சென்று வெளிச்சம்.
பனகல் பார்க்கில் பார்ப்பதாகச் சொன்னாளே,
இன்றைய பொழுதுக்கு பனகல் பார்க் நம்பிக்கை.

பனகல் பார்க் எங்கே இருக்கிறது என்றெல்லாம் அப்போது தெரியாது.

கேள்வி: மலையாளம் தங்களின் தாய்மொழியா?

இல்லை. தமிழ்தான் என்னுடைய தாய்மொழி. முன்பு, கேரளத்தின் வேணாட்டு அரசர் களின் ஆட்சிக்குட்பட்ட திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த தமிழ்ப் பகுதிதான் குமரிமாவட்டம். மொழிரீதியாக தமிழும், கலாச்சார ரீதியாக மலையாள அடையாளங்களுமுள்ள குறிப்பிட்ட ஒரு சில பிரிவினர் இம்மாவட்டத்தில் வாழ்கிறார்கள். நானும் அவர்களிலொருவன்.

கேள்வி: மலையாள மொழியைக் கற்றதன் நோக்கம்?

தாய்மொழியின் எழுத்து வடிவத்தை சுயமாகக் கற்ற அதே நோக்கமற்ற நோக்கம்தான். மலையாளமொழியின் வடிவ ஒற்றுமையும் சொற்றொடர்களின் அமைப்பும் தமிழ் போலவே இருப்பது கற்பதற்கு வசதியாக அமைந்திருந்தது. தமிழாகட்டும், மலையாள மாகட்டும், என்னுடைய ஆசான்கள் திரைப்பட சுவரொட்டிகளும் தினசரிப் பத்திரிகை களும்தான். மலையாள மொழி ஓரளவு பரிச்சயமான பிறகு வைக்கம் முகம்மது பஷீரின் படைப்புகளை அம்மொழியிலேயே வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் மேலோங்கியது.

கேள்வி: தங்களின் மொழிபெயர்ப்பு நூல்கள், தேர்வு, மற்றும் முறையியல் பற்றி கூறுங்கள்?

இதுவரை வெளிவந்துள்ள நூல்கள்: மீஸான்கற்கள் (நாவல்), ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (அனுபவப் பதிவு), மஹ்ஷர்பெருவெளி (நாவல்), நளினிஜமீலா (சுயசரிதை), நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி (சுயசரிதை), அழியாமுத்திரை (நாவல்), அமரகதை (நாவல்), வினயா (சுயசரிதை), அடூர் கோபாலகிருஷ்ணனின் இடம் - பொருள் - கலை (திரைப்படப் பதிவு), உலகப்புகழ்பெற்ற மூக்கு (சிறுகதைத் தொகுப்பு), நக்ஸலைட் அஜிதா (சுயசரிதை), மேலும் சில இரத்தத் துளிகள் (நாவல்).

தேர்வு முறையியலைப் பற்றிச் சொல்வதானால், விளிம்புநிலை மனிதன் எனும் நிலையில் என்னுடைய வாழ்க்கை போராட்டக்களத்தில் நிற்பதால் எனது மொழிபெயர்ப்பில் அதிகமும், மேட்டுக் குடி மனிதர்களால் பார்க்க இயலாத விளிம்புநிலை மக்களின் மற்றும் சமூகப் போராளிகளின் வாழ்க்கையைப் பற்றிய பதிவுகளாக இருக்கின்றன. போராளிகளின் தியாகத்தையும், காலம் அம்மணமாகத் திரியும் கோலத்தையும் நான் திரை நீக்கிக் காட்ட முயற்சிக்கிறேன்.

மொழிபெயர்ப்பின் முறையியலைச் சொல்வதானால், மொழிபெயர்க்கப்படவிருக்கும் நூலின் தன்மை, கருப்பொருள், அதன் காலகட்டம்போன்ற அடிப்படையான பல்வேறு விஷயங்களைக் கவனத்தில்கொண்டு பொதுத் தமிழ், வட்டார வழக்கு, மணிப்பிரவாளம், நவீன மொழிநடை என, முறையியலைத் தீர்மானிக்கிறேன். சில நேரங்களில் இப்படியான முன்தீர்மானங்கள் மூலநூலின் போக்கில் தடங்கலாக அமைந்துவிடுவதுமுண்டு. அண்மையில் வைக்கம் முகம்மது பஷீரின் ஒரு நாவலை மூன்று முறை திருத்தி எழுதவேண்டியதாயிற்று. மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரைக்கும் இது புதிய முயற்சி. சரளமான மொழிநடையாக இருப்பதாலும் அதன் அசல்தன்மைக்காகவும் இவை பரவலான கவனத்தைப் பெறுகின்றன.

கேள்வி: தங்களை தமிழிலக்கிய உலகம் இனம் கண்டு பாராட்டியது எப்போது?

எப்போது பாராட்டியது?

கேள்வி: நீங்கள் எழுத்துத் துறைக்கு வரக் காரணமாக இருந்தவர்களைப் பற்றி கூறுங்கள்?

மகாகவி பாரதியார், வைக்கம் முகம்மது பஷீர், புதுமைப்பித்தன், சந்து மேனோன், கேசவதேவ், தகழி, சுந்தரராமசாமி, மேலும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் பலர்.

கேள்வி: உங்கள் நாவலுக்குக் கிடைத்த விருதுகள் பற்றி கூறுங்கள்?

நான் இதுவரை சொந்தமாக நாவல் எழுதவில்லை. மொழிபெயர்ப்பைப் பற்றி கேட்கிறீர்கள் என்றால், வழங்கியவர்களின் தனிப்பட்ட ஆர்வங்களின் காரணமாக மூன்றோ நான்கோ விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருதுகளை வாங்கி எரவாணத்தில் சொருகி வைக்க முடியாதென்பதால் தற்போது வீடு மாறியிருக்கிறேன். அதில் ஒரு விருது நல்ல கூர்முனையுடன் இருக்கிறது.

கேள்வி: உங்கள் எதிர்காலத் திட்டம் பற்றி......?

பன்னாட்டு முதலாளியிடம் கேட்க வேண்டிய கேள்வியை பாவப்பட்ட தமிழ் எழுத்தாளனி டம் கேட்கிறீர்களே?

கேள்வி: எதிர்காலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு முன் அறிவிப்பான இந்த நாவலை எழுதியதன் நோக்கம்?

ஒரு படைப்பு என்பது நோக்கங்களைக் கடந்தது. அது, தனிமனிதனை, அவனது, உணர்வுகளை, சமூகத்தை, எண்ணவோட்டங்களை, அறிவியலை, மூடத்தனத்தை, காலங் களைச் சித்தரிக்கலாம். அல்லது, குலைத்துப்போடலாம், கட்டியெழுப்பலாம். இலக்கிய படைப்புகளுக்கான நோக்கம் இலக்கியமாகவுமிருக்கலாம், மக்களை நோக்கிய தாகவும் இருக்கலாம். சமூகங்களினுள் பிளவை ஏற்படுத்தும் என்று தெரிந்தே கட்ட மைக்கும் எழுத்துச் செயல்பாட்டைத் தவிர, குறிப்பிட்ட எந்த சட்டகங்களையும் இதற்கென தயார் செய்து வைத்திருக்க முடியாது. இந்த நாவலைப் பொறுத்தவரைக்கும் ஆசிரியர் சில விஷயங்களைச் சொல்ல நினைத்திருக்கிறார்; அதற்கான ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அவ்வளவுதான்.

கேள்வி: ‘மாறாமுத்ரா' எனும் இந்த மலையாள நாவலை மொழிபெயர்த்தற்கான குறிப்பிட்ட காரணங்கள் ஏதாவது?

நவீன மலையாளப் படைப்பிலக்கியத்தில் இந்நாவல் கருத்து சார்ந்தும் வடிவம் சார்ந்தும் சில அதிர்வுகளை உருவாக்கியதுடன் பரவலான பாராட்டுதல்களையும் பெற்றது. அறிவியல் வளர்ச்சி, உலகம் தழுவிய தரகு வர்த்தகம், அதன் தாக்கங்கள், பொருளியல் முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொண்ட உலகில் நுட்பமான மனித உணர்வுகள் படும் துயரம் என இந்நாவல், தமிழில் இதுவரை வெளிவந்துள்ள அறிவியல்புனைவு களிலிருந்து மாறுபட்டிருந்தது. இந்த அம்சங்கள்தான் என்னை மொழிபெயர்க்கத் தூண்டின.

கேள்வி: நீங்கள் எழுதி வெளிவரவிருக்கும் புதிய படைப்புகள் பற்றி கூறுங்கள்?

தற்கால மலையாளச் சிறுகதைகள் தொகுப்பு, மலைவாழ் இனத்தைச் சேர்ந்த நாவலா சிரியர் நாராயண் எழுதிய ஒரு நாவல், வைக்கம் முகம்மது பஷீரின் படைப்புகள், பெண் எழுத்தாளரும் மகப்பேறு மருத்துவருமான கதீஜாமும்தாஸ் எழுதிய அரபு நாட்டைப் பின்னணியாகக் கொண்ட ஒரு நாவல், லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய நம்பூதிரி சமூகத்தைப் பின்னணியாகக் கொண்ட ஒரு நாவல் ஆகியவை.

கேள்வி: அறிவியல் செய்திகளைப் பற்றி எழுதுவதில் அதிக ஆர்வமிருக்கிறதா?

இல்லவே இல்லை. திரும்பவும் சொல்கிறேன், நான் புரிந்துகொண்டவரை இந்நாவல், அறிவியல் வளர்ச்சியடைந்த நிலையில் மனங்களின் செயல்பாடுகளைப்பற்றியதுதான்.

கேள்வி: ‘அழியாமுத்திரை' நாவலில் வரும் கதாபாத்திரங்களில் உங்களுக்குப் பிடித்த பாத்திரமெது? நீங்கள் அதில் மறைமுகமாக வருகிறீர்களா?

பிடித்த கதாபாத்திரம், தாவரன். மளிகைக்கடைக்காரன், புகைப்படக்கலைஞன், நடை பாதைக் கடை வியாபாரி, விற்பனைப் பிரதிநிதி, பிழை திருத்துபவன் உள்ளிட்ட ஏராளமான வேடங்களை நான் அணிந்ததுண்டு. இது சார்ந்த அனுபவங்களின் சாயல் களை நான் வாசித்த ஒவ்வொரு நாவல்களிலும் ஒவ்வொரு மொழிபெயர்ப்பிலும் என்னால் உணர முடிந்திருக்கிறது. இது என்னுடைய மட்டும் அனுபவங்களாக இருக்க முடியாது. மனிதர்களின் எல்லா படைப்புகளிலும் பிற மனிதர்கள் மறைமுகமாகவோ நேரடியாகவோ வருவார்கள்தான்.

கேள்வி: இந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை வைக்கம் முகம்மது பஷீர் நினைவாக சமர்ப்பித்தற்கான காரணமென்ன?

ஏற்கனவே சொன்னதுதான்.

கேள்வி: சிறுஎண்ணிக்கையினர் வாசிக்கும் இவ்வகை நூல்களால் எந்தவகையான அரசியல் மற்றும் சமூக மாற்றம் நிகழ்ந்து விட முடியும்?

எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு இயங்கி வருகிற, வர்த்தக நோக்கத்து டனான கலைகளுக்கு மாற்றுக் கலை வடிவங்கள் என்பது இன்றைய சமூகத் தேவை. குறிப்பிட்ட ஒரு கலையை வெகுஜன இரசனைக்கேற்ப மாற்றியமைப்பதற்கான அம்சங்களில் பெருமளவும் சுலபமானதும் மலினப்பட்டதுமாகவே இருக்க முடியும்.

கேள்வி: இலக்கியம் மூலம் சமூக மாற்றம் வந்து சேருமா?

வந்து சேர்வதாகவே வைத்துக்கொள்வோம். இவ்வகை மாற்றங்கள் சரியானவையாக இருக்க முடியுமா? நாவல்கள் திரைப்படங்கள் மூலம் நாம் சமூக மறுமலர்ச்சியை உருவாக்க நினைக்கிறோமா? சமூக மாற்றத்திற்கான அடிப்படைக் கூறுகளினுள் கலை களுக்கான இடமும் இருக்கலாம். இலக்கியம் மட்டுமல்ல, எந்தக் கலைவடிவத்தை முன்னிறுத்தியும் சமூக மாற்றம் நிகழ்ந்துவிடக் கூடாது. இது கலைக்கு மட்டுமல்ல, அந்த சமூகத்திற்கே ஊறுவிளைக்கும் விஷயம். கலை இலக்கியமென்பதெல்லாம் மனித மனங் களைத் தூண்டிவிடுவதற்கானவை; ஆற்றுப்படுத்துவதற்கானவை. ஆனால், தமிழ்ச் சூழலில் கலைகளை முன்னிறுத்தி சமூக மாற்றங்கள் நிகழ்ந்துபோய் விடுகின்றன.

கேள்வி: சமீப காலமாக தமிழின் தீவிரமான இலக்கிய முகாம்களில் சர்ச்சைகள் மிகவும் மோசமாக உள்ளன என்ற எண்ணம் உள்ளதே?

சொல்லப்போனால் கால்நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையைவிட இப்போது ஓரளவு பரவாயில்லை. சிறுசிறு குழுவினராக இயங்குவதாலும் இலக்கிய அரசியல்சார்ந்து ஒவ்வொருவருக்குள்ளும் முரண்பாடுகள் இருப்பதாலும் அங்கீகாரத்தைத் தவிர்த்த வேறெந்த பலன்களையும் இவர்கள் எதிர்பார்ப்பதில்லை என்பதாலும் இவர்களது கருத்துக்கள் சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொள்கின்றன. இவர்களது ஆரோக்கியமான செயல் பாடுகளைக் கண்டுகொள்ளாத வணிக ஊடகங்கள்தான் சர்ச்சைகளை வெகுஜன தளத்திற்கு எடுத்துச்செல்லும் பணியை செவ்வனே நிறைவேற்றியும் வருகின்றன.

கேள்வி: தற்போதைய மலையாள தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள் என்ன?

மலையாள இலக்கியம் தமிழ்த் திரைப்படத்துடன் ஒப்பிடும் அளவுக்கு பிரமாண்டமான ஒன்று. வாசிப்பை ஒரு கலாச்சாரமாகவே வளர்த்தெடுத்துக்கொண்டவர்கள் மலையாளி கள். அரசுப் பணிகளைத் துறந்துகூட அங்கே ஒருவர் எழுத்துப்பணியில் ஈடு பட முடிகிற அளவுக்கு வாய்ப்புள்ள துறை அது. இலக்கியத்தின் வகைமாதிரிகளை எடுத்துக் கொண்டால், சமூகம், குடும்பம், கலைகள், பண்பாடு, பொருளியல், அரசியல் என அனைத்து வகைமாதிரி இலக்கியப் படைப்புகளும், மக்களை விட்டு அன்னியப்பட்டு விடாத கதைசொல்முறை மற்றும் மொழிசார்ந்த முயற்சிகளும் அங்கே நிகழ்ந்து கொண்டு தானிருக்கின்றன. மரபணு பாகுபாடுகளால் ஒடுக்குதலுக்குள்ளானவர்கள், ஒழுக்க மதிப்பீடுகள் சார்ந்து புறக்கணிக்கப்பட்டவர்கள், பொருளாதாரம் மற்றும் கலாசார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள், பிழைப்புக்காக அயல்தேசம் செல்பவர்கள், மலையின மக்கள், திருட்டுத் தொழில் புரிபவர்கள், விலைமாதர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் என, மக்கள்தொகையில் அதிக விழுக்காடுகொண்ட விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை யைச் சித்தரிக்கும் படைப்புகள் நிறைய வெளிவந்துகொண்டிருக்கின்றன. இது உலகம் தழுவிய ஒரு இலக்கிய போக்காகவும் இருந்து வருகிறது. நாங்கள் இதையெல்லாம் பார்க்க வில்லையென்று முகத்தைத் திருப்பிக்கொள்வதன்மூலம் இந்த உண்மைகளும் இல்லை யென்றாகி விடப் போவதில்லை. அண்மையில் பாலியல் தொழிலாளி நளினிஜமீலாவின் சுயசரிதையையும் தஸ்கரன் மணியன்பிள்ளையெனும் ஒரு திருடனின் சுயசரிதையையும் கேரள பல்கலைக்கழகத்தில் பாடமாக வைத்திருக்கிறார்களென்பதிலிருந்து கேரளத்தின் இலக்கியப் போக்கை ஓரளவு நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

தமிழ்ச்சூழலில் இவ்வகை இலக்கிய முயற்சிகளில் பெருமளவும் அதன் நோக்கத்தை இரண்டாமிடங்களுக்குத் தள்ளிவிட்டு அரசியல், சாதி, மதச் சாயங்களைப் பூசிக் கொள்கின்றன. இதிலிருந்து விலகி நிற்கும் படைப்புகளுக்கு இத்தகைய சாயங்களை விமர்சகர்களே பூசி விடுகின்றனர். இதன்காரணமாக சர்ச்சை இலக்கியம், கலக இலக்கியம், கோள் இலக்கியம், குடி இலக்கியமென்றெல்லாம் எழுதி மற்றவர்களின் முகத் திரையைக் கிழிக்கும் ஆர்வம் மேலோங்கி நிற்கிறது. இவ்வகை அரசியல்களைக் கடந்தும் சில நேரங்களில் அபூர்வமான படைப்புகள் வெளிவந்துகொண்டுதானிருக்கின்றன.

கேள்வி: வசதியற்ற கிராமத்து வாழ்க்கையை சொர்க்கமென்று சித்தரிப்பவர்கள் பலநூறு வசதிகள் குவிந்து கிடக்கும் பட்டணத்தில்தான் வாழ்கிறார்கள் என்கிறது ‘புதிய கலாச்சாரம்' இதைப்பற்றி தங்களது கருத்தென்ன?

சொர்க்கம் இந்த அளவுக்கு மோசமாக இருக்குமென்று நினைக்கிறார்களா, அல்லது, தங்களது பண்ணையில்லங்களில் உருவாக்கி வைத்திருக்கும் கிராமச் சூழலை மனதில் வைத்துச் சொல்கிறார்களா தெரியவில்லை. மாசுபடிந்த நிலத்தடிநீர், மின்சார வசதி யின்மை, சாலை வசதியின்மை, ஆசிரியர் இல்லாத ஆரம்பப்பள்ளி, துருப்பிடித்தப் பூட்டு தொங்கும் ஆரம்ப சுகாதார மையக் கதவுகள் என எல்லா ‘வசதி’களுமுள்ள இந்த சொர்க்கத்தில் அவர்களை வந்து வாழ்ந்து பார்க்கச் சொல்ல வேண்டும். மேட்டுக்குடி மனிதர்களின் இந்த மனோபாவத்தை வனப்பகுதிக்கு ஒருநாள் உல்லாசப்பயணம் வரும் யாத்திரீகனின் சிலாகிப்பாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். கிராமங்களில் வாழும் மக்களின் அவலநிலைகளை அற்புதமானதென்று புகழ்வதன்மூலம் விதியை ஏற்றுக் கொண்டு வாழ அவர்களை அறிவுறுத்தும் விதிக்கோட்பாட்டின் நவீன விரிவுரையாளர்கள் சொல்லும் விஷயங்கள்தான் கிராமப்புறங்கள் சொர்க்கமென்பதெல்லாம்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R