முனைவர் மு. இளங்கோவன்22.08.2008 மாலை சிங்கம்புணரியில் நீண்ட நேரம் நின்றும் பேருந்து இல்லை.மழை பெய்தபடி இருந்தது.மதுரை செல்லும் பேருந்து வரவில்லையாதலால் கொட்டாம்பட்டி சென்றால் விரைவுப் பேருந்துகள் கிடைக்கும் என்றனர்.கொட்டாம்பட்டிக்கு அங்கிருந்து நகர் வண்டியில் சென்றேன்.அங்கிருந்தும் பேருந்துகள் வாய்ப்பாக இல்லை.கூட்டம் மிகுதியாக இருந்தது.அவ்வழியில் மகிழ்வுந்து ஒன்று வந்தது.அதில் ஏறிக்கொண்டேன். கையில் கைப்பையும்,மடிக்கணினிப் பையும் தோள்பட்டைகளைப் பதம் பார்த்தன.இப்பொழுது செலவு இனித்தது.போக்கில் இருக்கும் பொழுது அறிஞர் தமிழண்ணல் அவர்கள் செல்பேசியில் அழைத்தார்கள்.பிறகு பேசுவதாக ஐயாவிடம் தெரிவித்துவிட்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ் இணையக் கருத்தரங்கை ஏற்பாடு செய்த நண்பர் முத்துராமன் அவர்களுக்குப் பேசினேன்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள உணவகத்திற்கு முன்பாகக் காத்துள்ளதைத் தெரிவிக்க மகிழ்ந்தேன்.கால் மணி நேரத்ததில் அன்பர் முத்துராமன் இருந்த இடம் சென்று சேர்ந்தேன்.இரு மாணவர்களும் காத்திருந்தனர்.

அங்குள்ள உணவகத்தில் உணவை முடித்தோம்.காலையில் சிற்றுண்டி உண்டதும்,தொடர்ந்து செலவுக் களைப்பு,பேச்சு,பரபரப்பு என மிகவும் சோர்வாக இருந்தேன்.உணவை முடித்துக் கொண்டு காமராசர் பல்கலைக்கழகம் அருகில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியை இரவு பத்து மணியளவில் அடைந்தேன்.

அறிஞர் தமிழண்ணல் ஐயாவிற்குச் செல்பேசியில் பேசி, நாளைய நிகழ்ச்சி பற்றி சொன்னேன். அண்ணல் அவர்களிடம் பல்லாண்டுகளாக ஒரு விருப்பத்தை முன்வைத்து அடிக்கடி நினைவூட்டி,எழுதியும்,பேசியும் வைத்திருந்த ஒரு விருப்பம் நிறைவேற உள்ளதை அண்ணல் அவர்கள் சொன்னதும் அளவிலா மகிழ்ச்சியடைந்தேன்.நான் கேட்டிருந்த ஒரு பொருளை நாளை வந்தால் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்கள்.நிகழ்ச்சி முடிந்ததும் நாளை வந்து பெற்றுக்கொள்வதாக உறுதிகூறி,இரவு 11.30 மணியளவில் ஓய்வெடுத்துக் கொண்டேன்.

காலை 7.30 மணிக்கு அன்பர் முத்துராமன் அவர்கள் அறைக்கு வந்துசேர்ந்தார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக கல்லூரியை ஒருமுறை சுற்றிப்பார்க்க நினைத்து என் ஒளிப்படக் கருவியுடன் சென்று பல படங்களை எடுத்துக்கொண்டு அறைக்கு வந்து காலைக் கடமைகள் முடித்து நிகழ்ச்சிக்கு ஆயத்தமானேன்.

நாடார் இன மக்களால் அவர்களின் பொருள் உதவியால் இயங்கக்கூடிய அரசு உதவிபெறும் தன்னாட்சிக்கல்லூரி வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி ஆகும்.இக்கல்லூரி ஏறத்தாழ நாற்பது (1965) ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கப் பட்டுள்ளது.பல்வேறு உயர் படிப்புகளை வழங்கும் நல்ல நிறுவனம்.நல்ல கட்டட வசதிகள்.ஆடுகளங்கள் உள்ளன.போக்குவரவு வசதிஉடையது. நல்ல இயற்கைச் சூழல்.கல்லூரி வனப்பை எண்ணும்பொழுது மகிழ்வு தருகிறது.

காலை 9 மணி அளவில் தனசேகரபாண்டியன் அரங்கில்(விழா நடைபெறும் இடம்) உள்ள இணைய வசதிகள்,கணிப்பொறி வசதிகள்,இருக்கை அமைவுகள் யாவற்றையும் ஒரு முறை சரிபார்த்துக்கொண்டேன்.ஏற்பாடுகள் அனைத்தும் மிகச்சிறப்பாக இருந்தது.கல்லூரி நூலகத் துறையில் நடைபெறும் முதல் கருத்தரங்கம் என்பதால் விடுமுறை நாள் எனினும் மாணவர் கள் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டனர்.

பின்னர்க் கல்லூரி முதல்வர் அறைக்கு என்னை அழைத்துச்சென்று அறிமுகம் செய்தனர். கல்லூரியின் நிர்வாகத்தைச் சிறப்பாகச் செய்துவரும் பொறுப்பாளர்களைக் கண்டு மகிழ்ந்தேன். கல்லூரியின் சிறப்பை உரையாடித் தெரிந்துகொண்டேன்.என் தமிழ் இணைய ஈடுபாட்டைக் கண்டு அனைவரும் பாராட்டினர்.அனைவரும் விழா அரங்கை அடைந்த பொழுது மாணவத் திரள் மிகுதியாக இருந்தது. 500 மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.

காலை சரியாக 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.

கல்லூரிப்பொருளாளர் திரு மணிமாறன் அவர்கள் தலைமை தாங்கினார்,திரு குணசேகரன் அவர்கள் வரவேற்புரை.கல்லூரி முதல்வர் மகாத்மன்ராவ் அவர்கள் மிகச் சிறப்பாக என்னை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றினார்.

முற்பகல் 11 மணிக்குத் தமிழில் இணையத்தள வளர்ச்சி என்னும் என் உரை தொடங்கியது. பகல் ஒரு மணிவரை நீண்ட காட்சி விளக்க உரை மாணவர்களுக்குச் சலிப்பின்றி இருந்ததை உணர்ந்தேன்.என் பேச்சின் விவரம் வருமாறு:

(நேற்றே திருச்சியில்,மேலைச்சிவபுரியில் உரையாற்றிய செய்திகள் சில இடம்பெற்றாலும் அடிப்படைச் செய்திகள் ஒன்று என்பதால் மீண்டும் சிலவற்றை நினைவுகூர்தல் தேவையாகிறது.)

உலகில் கணிப்பொறி தோன்றிய விதம்,தமிழ் எழுத்துகள் உள்ளிடப்பெற்று அச்சான கணிப்பொறிவழி உருவான முதல் நூல் பற்றிய செய்தி, தமிழ் எழுத்துகள் தொடக்கத்தில் ஏற்படுத்திய சிக்கல்,தரப்படுத்தப்பட்ட எழுத்துகள்,பல்வேறு தமிழ் மென்பொருள்கள்,தமிழ் மென்பொருள் உருவாக்கத்திற்கு உழைத்தவர்கள்,சீனர்களின் மொழிப்பற்று,தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை,தமிழ் இணைய மாநாடுகள்,இதற்காக உழைத்த அறிஞர் சிங்கப்பூர் கோவிந்த சாமி அவர்களின் பங்களிப்பு,முரசு முத்தெழிலன், வா.செ.குழந்தைசாமி,முனைவர் ஆனந்த கிருட்டிணன்,முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் ஈடுபாடு,பணிகள் பற்றிப் பலபட எடுத்துரைத்தேன்.

தமிழக அரசு கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சிக்காலத்தில் மிகபெரிய தமிழ் இணைய மாநாடு நடத்தியதையும்,தமிழ் இணையப்பல்கலைக்கழகம் உருவான விதத்தையும் எடுத்துரைத்தேன்.சேந்தமங்கலம் முகுந்தராசுவின் எ.கலப்பை,காசியின் தமிழ்மணம் பற்றி காட்சி விளக்கத்துடன் என் பேச்சு தொடர்ந்தது.

தமிழில் வெளிவரும் மின்னிதழ்களை அறிமுகம் செய்தேன். நாளிதழ், வார இதழ், மாத இதழ் எனப் பல பிரிவுகளாகப் பிரித்துகொண்டு விளக்கினேன். தினமலர் நாளிதழ் உலக அளவில் தமிழர்களால் படிக்கப்படும் இதழாகவும்,பல்வேறு வசதிகளை இவ்விதழ் தருவதையும் விரிவாக எடுத்துரைத்தேன்.(இதனைத் தினமலர் மதுரைப் பதிப்பில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டது.24.08.08).

அதுபோல் தினகரன், மாலைமலர், தமிழ்முரசு, தினமணி, திண்ணை, தமிழ்க்காவல், தெளிதமிழ், தமிழம். நெட், தட்சுதமிழ், வணக்கம் மலேசியா, லங்காசிறீ, புதினம், பதிவுகள்,  தினக்குரல், கீற்று உள்ளிட்ட பல இதழ்களைப் பற்றி விளக்கிப் பேசினேன்.காட்சி வழியாகவும் விளக்கினேன். அவையினர் இவ்வளவு இதழ்களையும் கண்டு வியப்பும் மலைப்பும் அடைந்தனர்.

பிறகு தமிழ்மரபு அறக்கட்டளையின் தளத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள மரபுச் செல்வங்களை விளக்கினேன்.மேலும் தமிழ் இணையப்பல்கலைக்கழக நூலகம்,படிப்புகள், ஓலைச்சுவடிகள்,பண்பாட்டுக்கலைகள்,திருக்கோயில் படங்கள் உள்ள அதன் சிறப்புகளை எடுத்துரைத்தேன்.

அதுபோல் மதுரைத்திட்டம்,சென்னை நூலகம், காந்தளகம் விருபா, விக்கிபீடியா பற்றியெல்லாம் காட்சி வழியாகவும் உரை வழியாகவும் பல தகவல்களை அவைக்கு வழங்கினேன்.ஒரு மணிக்கு உணவு இடைவேளைக்காக அனைவரும் பிரிந்தோம்.இதற்குள் இச்செய்தி ஊடகங்கள் வழியாக மதுரை மக்களுக்கும் உலகிற்கும் தெரியவந்தது.தட்சுதமிழ் இணைய இதழ் இச்செய்தியை உடன் வெளியிட்டு உலகிற்கு முதலில் தந்தது.

பிற்பகல் உணவுக்குப்பிறகு 2,30 மணிக்கு மீண்டும் பேசத் தொடங்கினேன்.தமிழ் விசைப் பலகை 99 பற்றியும் அதில் உள்ள
சிறப்புகள்,அமைப்புகள் பற்றியும் காட்சி விளக்கத்துடன் செய்து காட்டியபொழுது அனைவரும் மகிழ்ந்தனர்.

அதன் பிறகு வலைப்பூக்கள் உருவாக்கும் முறை பற்றி விளக்கிக் காட்டப்பட்டது.தமிழில் மின்னஞ்சல் செய்வது, உரையாடுவது, குழுவாக இயங்குவது பற்றியெல்லாம் விரிவாகப் பேசினேன்.மாலை 4.30 மணிக்கு என் காட்சி விளக்க உரை நிறைவுக்கு வந்தது.அனைவரும் உள்ளம் நிறைந்த அன்போடு விடைதந்தனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நூலகத் துறையினர்க்கு அளவுகடந்த மகிழ்ச்சி.கருத்தரங்கம் வெற்றியுடன் நடந்ததால் கல்லூரி முதல்வர் நூலகர் அவர்களையும் ஒருங்கிணைப்பாளர்கள் முத்துராமன்,கவிதா தேவி ஆகியோரையும் என் கண்முன் பாராட்டினார்.  அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அறிஞர் தமிழண்ணல் இல்லத்திற்கு வந்து உரையாடி னேன்.அவர் தமிழுக்குப் பாதுகாத்து வைத்திருந்த மிகப்பெரிய செல்வத் தொகுதியை என் பல ஆண்டுகால விருப்பத்தை நிறைவேற்றும் படியாக வழங்கினார்.அண்ணல் அவர்களைச் சில படங்கள் எடுத்துக்கொண்டேன்.

28.08.2008 இல் வெளியிட உள்ள பத்து நூல்களை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். அவற்றைப் பெற்றுக்கொண்ட மகிழ்விலும் அண்ணலைக் கண்ட மகிழ்விலும் மூடுந்தில் ஏறிச் சிறிது தூரம் வந்த பிறகு உடன் அண்ணல் செல்பேசியில் அழைத்தார்.முதன்மையான அந்தத் தமிழ்ச் செல்வத்தைப் பேச்சுவாக்கில் அங்கே மிசைமேல் வைத்து வந்தது அப்பொழுதுதான் அண்ணல் அழைப்பிற்குப் பிறகு நினைவுக்கு வந்தது.மீண்டும் அண்ணல் இல்லமான ஏரகத்திற்குத் திரும்பினேன்...

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http://muelangovan.blogspot.com/

 பதிவுகள் செப்டம்பர் 2008; இதழ் 105


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R