ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

ஆய்வுச் சுருக்கம்
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் நகர நிர்மாணம், வாஸ்து அமைப்பு,மயன் கலை, சமயம், நீதி முறைமை, குன்றக் குரவர் முதல் கோவேந்தர் வரை கூடிய சமுதாய ஒற்றுமை என்கிற உறவு நலத்தைக் காட்டுவது போன்றவற்றை இளங்கோவடிகள் கையாண்டுள்ள விதத்தை அறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

கலைச் சொற்கள்

நிர்மாணம் - உருவாக்குதல்
வாஸ்து - கட்டடக் கலை வழிகாட்டி

முன்னுரை:
தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் வரிசையில் சிலப்பதிகாரத்திற்கு மிகுந்த ஏற்றமுண்டு. இரண்டாம் நூற்றாண்டு காப்பியமான இதில் இளங்கோவடிகள் அதன் பாத்திரங்கள் வழியாக பல்வேறு வாழ்க்கை நெறிகளை மிக விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். பாட்டுக்கொரு புலவன் பாரதி

“ நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு”1

என்று பாடியுள்ளதைப் போல் சிலப்பதிகாரம் வரலாற்றுக் களஞ்சியமாகவும் பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது. அத்தகைய சிலப்பதிகாரம் பற்றிய சில தகவல்களை இங்கு சற்று காண்போம்.

வாஸ்து
ஒவ்வொரு வஸ்துவும் (வஸ்து = பொருள்) இப்படி இப்படி அமைந்திருந்தால்இன்னின்ன நலன்கள் ஏற்படும் என்பதே வாஸ்து ஆகும்.நம் பயன்பாட்டில் இருக்கும் எல்லா வஸ்துக்களையும் நான்கு வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.அவை

 

நிலம் (பூமி)
பிராசாதம் (வீடு மாளிகை கோவில் மண்டபம் போன்றவை)
யானம் (வாகனங்கள்)
சயனம் (கட்டில் ஆசனம் கருவிகள் போன்றவை) என்பன.

இவற்றைச் செய்ய குறிப்பிட்ட அளவு முறைகள் உள்ளன.அவற்றின் அடிப்படை அளவு அங்குலம் என்பதாகும்.சாதாரணமாகச் சொல்வதாக இருந்தால் இது ஒருவரது கட்டைவிரல் அகலமாகும்.இதற்கு அளவீடுகள் கொடுத்துள்ளார்கள். அந்த அங்குலத்தின் அடிப்படை அளவு பரம அணு ஆகும். 8 பரம அணுக்கள் கொண்டது ஒரு ரேணு எனப்படும். 8 பரம அணு = 1 ரேணு

1.பாரதியாரின் தேசிய கீதம்-செந்தமிழ் நாடு-7

8 ரேணு = 1 வாலாக்ரா (தலை முடியின் சுற்றளவு)
8 வாலாக்ரா = 1 லீக்‌ஷா (பேன் முட்டை –இது ஒரு மில்லிமீட்டராகும்)
8 லீக்‌ஷா = 1 யூகா ( பேன்)
8 யூகா = 1 யவம் (பார்லி)
8 யவம் = 1 அங்குலம்.)

நகர நிர்மாணம்:
நகர நிர்மாணம் ஒரு பரந்த சாத்திரமாகும். நகரம் கோட்டங்களாகவோ அன்றிப் பகுதிகளாகவோ பிரிக்கப் பட்டிருந்தது. இவ்வாறு அமைக்கப்பட்ட நகரங்களிலிருந்துதான் மன்னர் தம் மக்கள் மீது ஆட்சி செலுத்தி வந்தனர். ஒழுங்கு முறையையும் கட்டுப்பாடுகளையும் மக்கள் தாமே வகுத்துக் கொண்டு நல்ல சுகாதார முறைகளை அனுட்டித்து வந்தனர். ஆங்காங்கே பூம்பொழில்களும் நீண்ட அழகிய தெருக்களும் உயர்ந்த மாட மாளிகைகளும் நகரங்களின் அழகுக்கு மேலும் அழகூட்டின. மாலை நேரங்களை உல்லாசமாக்க் கழிக்க களியாட்ட சாலைகள் இடையிடையே இலங்கின. நகரத்தின் வெளிப்புறமிருந்து கோட்டையின் உள்ளிடம் வரையில் பலத்த காவல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இயற்கையே பல இடங்களில் தக்க அரண்களாக அமைந்திருந்தன. செயற்கைக் கோட்டைகளும் பகைவரைத் திணற வைக்கும் தன்மையனவாக விளங்கின. கோட்டைச் சுவர்களின் உச்சியில் பல வகை எந்திரப் பொறிகளும் வைக்கப் பட்டிருக்கும். பகைவர்களிடமிருந்து காக்க இவ்வளவு ஏற்பாடுகள் செய்திருந்தாலும் அறத்தினின்றும் அரசர்கள் வழுவ மாட்டார்கள்.

மருவூர்ப்பாக்கத்தில் நிலா முற்றம் அதாவது மொட்டை மாடிகள் கொண்ட பல வீடுகளும் சாளரங்களையுடைய மாளிகைகளும் இருந்தன. மேலும் அணிகலன்கள் குவித்து வைக்கும் சரக்கு அறைகளும் உள்ளதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். மேலும் நகர வீதிகளில் வாசனைக் குழம்புகள், வாசனைப் பொடி மணம் கமழும் சந்தனம் நறுமண மலர் மற்றும் பல வாசனை பண்டங்கள் விற்குமிடமாகத் திகழ்ந்த்து காவிரிப்பூம்பட்டினம். அது மட்டுமின்றி பட்டு பவளம் சந்தனம் அகில் முத்து இரத்தினங்கள் பொன்னாபரணங்கள் போன்றவை எண்ணிக்கையிலடங்கா வண்ணம் குவிந்து கிடந்தன.

அடுத்ததாக கூல வீதி என்னும் தானியங்களைத் தனியே பிரித்து வைத்து விற்பனை செய்கின்ற கடைத் தெருக்களும் காணப்பட்டன. பலவகைத் தொழிகள் புரியும் பலதரப் பட்ட மக்களும் தனித்தனி இடக்களில் வாழ்ந்து வந்தனர். பட்டினப்பாக்கத்தில் அரச வீதிகள் சிறந்த குடியில் பிறந்த வணிகர்கள் வாழும் வீதிகள் மாட மாளிகைகள் உழவர்கள் மற்றும் பல விதமான தொழில் செய்யும் மக்கள் குதிரை வீரர்கள் யானைப் பாகர்கள்,போன்றோர் வாழத் தனித்தனி வீதிகள் அழகாக அமைந்திருந்தன.

சிலப்பதிகார காலத்தில் காவிரப்பூம்பட்டினம் சர்வ தேசத்துறைமுகமாக விளங்கியதால் வெளிநாட்டு வணிகர்கள் புகாருக்கு அடிக்கடி விஜயம் செய்தனர். புகார் மதுரை மற்றும் வஞ்சி நகரம் மிகுந்த காவலுடைய நகரமாகத் திகழ்ந்தன. பெருங்கோட்டைகளும் கோட்டை மதிள்களுக்குரிய பாதுகாப்புப் பொறிகளும் அமைக்கப் பட்டிருந்தன. காவற்காடு அகழி மதிலென அடுத்தடுத்து அமைந்த நிலையில் மதுரைக் கோட்டையில் வாயிற்காவல் அமைந்திருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது.(சிலம்பு 2 14: 6266). சிவன் கோயில் முருகன் கோயில் திருமால் கோயில் இந்திரனுக்கான கோயில் புத்தர் பள்ளி மற்றும் அருகன் கோயில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருக்கின்றன. இங்கெல்லாம் வேத ஒலியும் வேள்வி ஒலியும் முழங்கிக் கொண்டிருக்கின்றன. மதுரை புறஞ்சேரியில் புத்தர் பள்ளியும் அருகன் பள்ளியும் மற்றும் மறச் சாலைகளும் ஆன்றோர் ஒலிக்கும் அறவுரைகளும் ஒலித்தன.

“பிறவாயாக்கை பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்” -2

இடையீடின்றி வணிகம் நடக்கும் பெருமறுகுகளிலே வேற்று நாட்டினர் பலர் வந்து ஒருங்கிருந்து அளவளாவி மகிழ்ந்தனர். நகராண்மைக் கழகங்களின் ஆட்சி வியத்தகு நிலையில் அமைந்திருந்தது. பெருவழிகளும் மறுகுகளும் என்றும் தூய்மையுடன் வைத்துப் பாதுகாக்கப் பட்டு வந்தன. ஆங்காங்கே இருள் போக்கும் ஒளி விளக்குகள் அமைக்கப் பட்டிருந்தன. வீடுகள் அனைத்தும் சுடுமண்ணாலும் கோட்டு நூற்றாலும் கட்டப்பட்டு வளி உலவும் சாளரங்கள் பலவற்ரை உடையனவாய் இருந்தன. எழுநிலை மாடங்கள் எண்ணிலவாய் விளங்கியமையின் தென்னாட்டுச் சிற்பக்கலை உச்ச நிலை அடைந்து விளங்கியமை காணலாம்.

இந்திய சமூகம் ஒரு சாதியச் சமூகம் என்பது அனைவரும் அறிந்ததே. இச் சாதிய சமூகம் அரசர் அந்தணர் வணிகர் வேளாளர் என்ற முறையிலும் இனக் குழுக்களான குறவர் ஆயர் வேட்டுவர் என்ற நிலையிலும் சிலம்பில் பேசப்படுகிறது. கோவல-கண்ணகியர் பெரு வணிகக் குல மக்கள். இவர் தம் வாழ்வியல் வளத்தோடு கணிகையர் குலம் இணைகிறது. பெரு வணிகர் பற்றிப் பேசும் சிலம்பு சிறு வணிகர்களான அப்பம் விற்போர் பிட்டு விற்போர் பூவிலையாளர் இறைச்சி விற்போர் பற்றியும் பேசுகிறது. பொன் கடை வீதி இரத்தினக் கடை வீதி நாளங்காடி அல்லங்காடி எனப் பெருநகர் ஒரு பெரும் வணிகக் கூடமாகத் திகழ்ந்ததைச் சிலம்பு விரிவாகப் பேசுகிறது. இந்நகர்ப்புற நாகரிக வளர்ச்சியின் ஒரு கூறாகப் பரத்தையர் வீதி தனியாக இருந்ததையும் சிலம்பு எடுத்துரைக்கிறது. நகர அமைப்பே பொருளாதார நிலை உயர் பதவி ஆகிய அடிப்படையில் அமைந்துள்ளதை இந்திர விழவூரெடுத்த காதை வாயிலாகப் பேசுகிறார் இளங்கோவடிகள். இவ்வகையில் குறிப்பிடத் தக்கது பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் என்ற புகார் நகர அமைப்பாகும். பெரு வணிகர் உயர் படைத் தளபதிகள் தலைக்கோல் பட்டம் பெரும் கணிகையர் ஆகியோர் வாழுமிடம் பட்டினப்பாக்கம்.சிறு வணிகர் சாதாரணப் படை வீரர்கள் சாதாரணக் கணிகையர் ஆகியோர் வாழுமிடம் மருவூர்ப்பாக்கம்.

மயன் கலை:
மயாசுரனுக்கு இன்றைக்கு 10000 ஆண்டுகளுக்கு முன் சூரியன் சூரிய சித்தாந்தத்தை உபதேசித்தான் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணனுடைய மகாபாரத விவரத்தைக் கொண்டு மய வாஸ்து என்பது கிருஷ்ணனுடைய அனுமதியின் பேரில் முதன் முதலில் பாரதத்தில் நுழைந்திருக்கிறது என்று தெரிகிறது. மய வாஸ்து என்பதே குறிப்பாக யானம் சயனம் மாயத் தோற்ற அமைப்புகள் விசித்திர அமைப்புகள் போன்றவற்றிற்குப் பெயர் போனவை. சிலப்பதிகாரத்தில் கோவலன்-கண்ணகி கட்டில் மயன் நிருமித்த விதிகளால் செய்யப் பட்ட கட்டிலைப் போல் இருந்தது என்ற குறிப்பு வருகிறது.

“மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி”- 3

என்பதில் அன்ன என்று சொல்லியுள்ளதால் மயனது விதிகளால் செய்யப் பட்ட கட்டிலைப் போன்று இருந்தது என்றாகிறது. 1800 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட சிலப்திகாரத்தில் மாதவி நடன அரங்கேற்றம் செய்த அரங்கின் அளவு சொல்லப் படுகிறது. அது வாஸ்து நூல்களில் சொல்லப்பட்டுள்ள அளவுகளே.”எண்ணிய நூலோர்” என்றும் “நூல் நெறி மரபின் அரங்கம் “ என்றும் முன்பு இருந்த நூல்களைக் காட்டி அவற்றின் அடிப்படையில் அரங்கு அமைத்தனர் எங்கிறார் இளங்கோவடிகள். (அரங்கேற்றுக் காதை). அதிலும் 24 அங்குலத்தில் உத்தம அளவீட்டில் அமைத்துள்ளார்கள். அந்த அரங்கை ஒரு கோல் உயரத்திற்கு உயர்த்தி 8 கோல் நீளமும் 7 கோல் அகலமும் அரங்கின் தளத்திலிருந்து 4கோல் உயரத்தில் அதன் மேல் விதானமும் அமைத்தார்கள் என்கிறார் இளங்கோவடிகள்.நீளத்தை விட அகலம் ஒரு பங்கு குறைவாக இருப்பது என்பது சிறந்த வாஸ்து விதியாகும். இவை 2000 வருடங்களுக்கு முன் இருந்ததென்றால் அதற்கு முன் எப்பொழுது இந்த சாத்திரம் தோன்றியிருக்கும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. அது மட்டுமல்ல இந்த சாத்திரம் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. மயனது சீடர்கள் செய்து கொடுத்த பந்தலும் பட்டி மன்றமும் தோரண வாயிலும் கரிகாலன் வசம் வந்து பூம்புகாரில் காட்சிப் பொருளாக ஆயின.“தொல்லோர் உதவிக்கு மயன் விடுத்துக் கொடுத்த மரபின்”என்ற பாடலில் தொல்லோர் என்பது பாண்டவர்களுக்கு மயன் மாளிகை கட்டிக் கொடுத்த போது அவனிடம் வேலை செய்தவர்களாக இருக்க வேண்டுமென்பது இளங்கோவடிகள் வாயிலாக வெளிப் பட்டிருக்கிறது. சிற்பங்கள் விசித்திர அமைப்புகள் யானம் சயனம் ஆகியவற்றில் மயவாஸ்துவைக் கற்றுக் கொண்டு பின்பற்றியுள்ளார்கள் என்பதை“மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி”என்னும் சிலப்பதிகார வரிகள் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

சமயம்:
பல்வேறு சமயங்களின் களஞ்சியமாகத் திகழ்வது சிலப்பதிகாரம் ஆகும். வேறுவேறு கடவுளர் சாறு சிறந்தொரு பால் எனவரும் இளங்கோவடிகள் கூற்றால் சோழர் தலைநகரில் பல சமயக் கடவுளர்க்கும் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றதை அறிய முடிகிறது.

''பிறவாயாக்கை பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வே ளணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி நொடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
.... .... .... .... ..... .... ....
அறவோர் பள்ளியு மறனோம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணித் தானமும் 4

ஆகிய பல சமயக் கோயில்களும் கோட்டங்களும் சிறப்புற்று இருந்தன. பூதங்களும் புகாரைக் காவல் புரிந்ததாக நம்பினர். இத்தகைய நம்பிக்கை கொண்ட சமுதாயத்தில் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் வந்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த கண்ணகி சோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கிக் காமவேள் கோட்டந்தொழுதால் கணவனைப் பெறலாம் எனப் பார்ப்பனத் தோழி தேவந்தி கூறியபோது பீடன்று எனப் பொழிந்திருந்து பெற்றிமையைக் காண முடிகிறது. இங்குக் காதல் வாழ்க்கைக்குக் கடவுளையும் துணை வேண்டா நிலையைக் காண முடிகிறது.

நீதி முறைமை:

நாட்டு மக்களின் வாழ்க்கைக்கும் உரிமைக்கும் உத்திரவாதம் அளித்துப் பாதுகாப்பது நீதித்துறை ஆகும்.

''எள்ளது சிறப்பி னிமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் டீர்த்தோ னன்றியும்
வாயில் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுடத் தான்றன்
பெரும் பெயர்ப் புகா ரென்பதியே'' 5

எனத் தன் ஊர்ப் பெயரைச் சுட்டும் போதே தன் நாட்டில் மக்களுக்கு மட்டுமின்றி மாக்களுக்கும் நீதி வழங்கிய பெருமையினைக் கண்ணகி உரைக்கிறாள்.

''தென்றமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரை'' 6

''பிழையா விளையும் பெருவளஞ் சுரப்ப
மழை பிணிந் தாண்ட மன்னவன் வார்கெனத் 7

தீதுதீர் சிறப்பினையுடைய தென்னவனை மாமுது மறையோன் வாழ்த்துகின்ற வாழ்த்தும் பாண்டிய நாட்டிலும் நீதி ஒருபாற் கோடாதிருந்த நிலையை உணர்த்துவனவாகும். மதுரையில் வாழ்ந்த பொற்கொல்லன் அவன் கூறிய மொழிகளைக் கேட்ட சினையலர் வேம்பன் அவன் ஊர்க்காப்பாளனை அழைத்து அவனிடம் கட்டளையிட்டுக் கூறியது தென்புலிக் காவலின் மன்பதைப் பழிப்புக்குரிய செயலாகி விடுகிறது. இறுதியாகத் தன் முன் வைத்த சிலம்பை எடுத்துக் கண்ணகியுடைக்க மாணிக்கப்பரல் மன்னவன் வாய் முதல் தெறிக்கின்றது.

''பொன்செய் கொல்லன் தன் சொற்கேட்ட
யானோ வரசன் யானே கள்வன்
மன்பதைக் காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுளென
மன்னவன் மயங்கி வீழ்ந்து'' 8

என வளைந்த செங்கோலை உயிர் கொடுத்து நிமிரச் செய்து ஓங்கு புகழ் எய்துகின்றான் பாண்டி மன்னன். தேராமன்னா என விளித்தக் கண்ணகியும் பாண்டிய மன்னன் செயல் கண்ட நெஞ்சம் நெகிழ்ந்தது. இறுதியில்

''தென்னவன் றீதிலன் றேவர்கோன் றன்கோயில்
நல்விருந் தாயினா னானவன் நன்மகள்'' 9

என்று புகழாரம் சூட்டி உறவு கொள்கிறாள்.

முடிவுரை:

“வையை என்னும் பொய்யாக் குலக்கொடி புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி”

என்ற வையையின் வருணனை ரசிக்கத்தக்கது. அரசியல் பொருளாதாரம் சமூகம் என்று ஒருங்கிணைந்த மக்களைக் கொண்டுள்ளதாகவும் அவர்கள் தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையான பங்கை அளித்துள்ளனர் என்றும் பல சம்பவங்களின் வழி உணர்த்தியுள்ளார் இளங்கோவடிகள். தமிழ்ச் சமுதாயம் அன்பு அருள் அறிவு ஆற்றல் கலைவளம் நாகரீகம் பண்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதைச் சித்தரித்துக் காட்டும் சிலப்பதிகாரத்தை முத்தமிழ்க் காப்பியம் குடிமக்கள் காப்பியம் வரலாற்றுக் காப்பியம் எனப் பல வகையாகப் பாராட்டத் தகுந்த காப்பியம் எனில் மிகையாகாது. ஏனெனில் சமயப் பொதுமை நோக்கிய ஒரு இலட்சிய சமூக அமைப்பைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. சேர சோழ பாண்டிய எனும் அரசியல் பிரிவுகளையும் மனித நலம் சிறந்ததற்கான அனைவரும் கூடிப் பெண்மையைப் போற்றுகிற சமுதாய அமைப்பைச் சிலப்பதிகாரம் உலகிற்கு உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது. குன்றக் குரவர் முதல் கோவேந்தர் வரை கூடிய சமுதாய ஒற்றுமை என்கிற உறவு நலத்தைக் காட்டுவது இந்தக் காப்பியத்திற்கு உரிய தனித்தன்மையாகும்.

அடிக்குறிப்புப் பட்டியல்

1. பாரதியாரின் தேசிய கீதம் – செந்தமிழ் நாடு 7
2. சிலம்பு 1 5, 169 – 181
3. சிலம்பு 2, 12
4. சிலம்பு 5- 177 -58
5. சிலம்பு 20 51 – 56
6. சிலம்பு நாடுகாண் காதை 58
7. சிலம்பு நாடுகாண் காதை 29-30
8. சிலம்பு வழக்குரைக் காதை – 75 – 79
9. சிலம்பு வழக்குரைக் காதை – 10

* கட்டுரையாளர்: - ஜெ.சீதாலக்ஷ்மி, முனைவர் பட்ட ஆய்வாளர், பகுதி நேரம், தமிழ்த்துறை, சர் தியாகராயா கல்லூரி, சென்னை-600 021-

உசாத்துணை நூல்கள்

1. கரிகால் வளவன் – கி. வ. ஜகன்னாதன், அமுதநிலையம் லிமிடெட், சென்னை - 14, முதற்பதிப்பு - 1966
2. கட்டுரை – நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் -முனைவர். மு. இளங்கோவன்: http://muelangovan.blogspot.com/2018/01/blog-post_73.html

3. பாரதியார் கவிதைகள் - http://www.tamilvu.org/library/l9100/html/l9100ba1.htm

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R