ஞானம் சஞ்சிகை ஏப்ரில் 2020'ஞானம்' ஆசிரியர்: ஞானசேகரன்இலங்கையில் கொழும்பிலிருந்து நீண்டகாலமாக வெளிவந்துகொண்டிருக்கும் ஞானம் மாத இதழின் இம்மாதத்திற்குரிய ( 2020 ஏப்ரில் ) பிரதி கிடைக்கப் பெற்றோம். உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்குத் தெரியாத எதிரியை முறியடிக்க ஒவ்வொரு தேசமும் போராடிக்கொண்டிருக்கும் சமகாலத்தில், இந்த எதிரியின் தோற்றம் வளர்ச்சி குறித்த விரிவான பார்வையுடன், இம்மாதம் 01 ஆம் திகதிவரையில் கிடைக்கப்பெற்ற பாதிப்பு தொடர்பான புள்ளிவிபரங்களுடனும், இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடியை சமாளிப்பதற்கு பொதுமக்கள் எவ்வாறு தங்களது அன்றாட வாழ்க்கை முறைகளை தேசத்தின் நலன் கருதி மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதை அறிவுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்  ஆசிரியர் தி. ஞானசேகரன் விரிவானதோர் ஆசிரியத்தலையங்கம் எழுதியுள்ளார். ஆசிரியர் தி. ஞானசேகரன் தொழில்முறையில் முன்னர் மருத்துவராக இலங்கையின் மலையகப்பிரதேசங்களில் பணியாற்றியவர் என்பதும்  குறிப்பிடத்தகுந்தது. முன்னைய காலங்களில் சில வைரஸ் அச்சுறுத்தலை சந்தித்த  சில உலக நாடுகளில் நேர்ந்த  தாக்கங்கள் குறித்தும், அதிலிருந்து அந்நாட்டு மக்கள் மீண்டெழுவதற்கு தேவைப்பட்ட காலப்பகுதி  பற்றியும்  விரிவாக பதிவுசெய்துள்ளார். சமூகப்பிரக்ஞையுடன் ஒரு கலை, இலக்கிய இதழாசிரியர் இந்த ஆசிரியத் தலையங்கத்தை எழுதியிருப்பது பாராட்டத்தக்க செயலாகும்.

239 ஆவது இதழாக வெளியாகியிருக்கும் ஞானம் இதழ் , வ.ஐ.ச. ஜெயபாலன், மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, புலோலியூர் வேல் நந்தன், சமரபாகு சீனா உதயகுமார், சித்தி கருணானந்தராஜா, கெக்கிராவ சுலைகா, ஜின்னா ஷரிப்புத்தீன், செல்லத்தம்பி சிறிக்கந்தராசா, ரஷீத் எம். இம்தியாஸ், ஆகியோரின் கவிதைகளுடனும் – எஸ்.ஐ. நாகூர்கனி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஞானம் பாலச்சந்திரன் ஆகியோரின் சிறுகதைகளுடனும் – கோத்திரன் – கே. சித்திரவேலாயுதன், க. சண்முகலிங்கம், நாட்டிய கலாநிதி  கார்த்திகா கணேசர், பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஆகியோரின் கட்டுரைகளுடனும் – தமிழ்மணி மானா மக்கீன், பேராசிரியர் துரை மனோகரன் ஆகியோரின் தொடர் பத்தி எழுத்துக்களுடனும் பத்திரிகையாளர் கே. பொன்னுத்துரை எழுதும் சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் தொடர்பான செய்திக்குறிப்புகளுடனும், வாசகர் கருத்துக்களுடனும் வெளியாகியுள்ளது.

சமகால அச்சுறுத்தலினால் சித்திரை வருடப்பிறப்பையும் வெளியே சென்று கொண்டாட முடியாமல் தவித்திருப்பவர்களின் ஆதங்கத்தை  ஆர்வருவார் சித்திரையை வரவேற்க என்ற தலைப்பில் கவிதையாக வடித்துள்ளார் மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா. வ.ஐ. ச. ஜெயபாலன்,  சென்னையிலிருந்தவாறு, தானது குடும்பம் வாழும் புகலிடத்தையும் நினைத்தவாறு அருமையான கவிதை எழுதியுள்ளார். அதன்வரிகள் வலிக்கின்றன.  சென்னையின் மாடி வீட்டுத்தோட்டத்தில் முல்லை மலர்ந்தாலும், அமேசன் காட்டுத்தீயையும் மிஞ்சி உலகை வேட்டையாடுதே கொரோனா- பெசன்ட் நகர் கடற்கரையில் கைவிடப்பட்ட படகுகளில் அஞ்சாமல் நண்டுகள் தொற்றும் இரவில் குடிசைகளுள் படகெனத் துயிலும் பெண்டிர் மார்பில் வலிய விரல்கள் ஊர்கின்றன சாத்தானே அப்பாலே போ – மனிதர்கள் கைவிடப்படுவதில்லை – ஒருபோதும் வெல்லப்படுவதுமில்லை. தனது புகலிடம் ஒஸ்லோ குறித்தும் சொல்லிச்செல்கின்றார்.

2019 இல் எழுத்தாளர்( அமரர் ) செம்பியன் செல்வன் ஞாபகார்த்த சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசுபெற்ற எஸ்.ஐ. நாகூர்கனியின் சிறுகதை, மணக்கும் மனிதம் இந்த இதழில் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு கொழும்பில் நடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலின் பின்னணியில் அருகருகே அந்நியோன்யமாக வாழ்ந்த முஸ்லிம் – கிறிஸ்தவ குடும்பங்களிடையே நீடித்திருந்த வாஞ்சையை சித்திரிக்கிறது. இதனை எழுதியிருப்பவர் சமூக ஒற்றுமையை வலியுறுத்துவதற்கு மனிதநேயமே சிறந்த மார்க்கம் எனச்சொல்கிறார். குறிப்பிடத்தகுந்த சிறுகதை. தவத்திரு விபுலாநந்த அடிகளாரின் பிறந்த தினத்தைமுன்னிட்டு, கோத்திரன் எழுதியிருக்கும் கட்டுரைதான் மகாநதி. பூமிப்பந்தை குளிர்வித்து ஓடிக்கொண்டிருக்கும் மகாநதிகளின் சேவைகளுடன் ஒப்பிட்டு விபுலாநந்தரின் வாழ்வையும் பணிகளையும் புதியகோணத்தில் எழுதியிருக்கிறார். பாடசாலை  - கல்லூரி – பல்கலைக்கழக மாணவர்களுக்கு பரிந்துரைக்கத்தக்க ஆக்கம். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் அங்கிள் அப்பா எனும் சிறுகதை புகலிடத்தில் எம்மவரின் வாழ்வுக்கோலத்தின் மற்றும் ஒரு பக்கத்தை சித்திரிக்கிறது. அப்பா எவ்வாறு அங்கிளானார்…?  பின்னர் எப்படி அங்கிள் அப்பா என அழைக்கப்பட்டார்…!?   என்பதை மனவலியுடன் பேசும் கதை இது. ஆதித்தன்  என்ற இலங்கைத்தமிழனுக்கும் மேரி என்ற ஆங்கில மாதுவுக்கும் பிறந்த லலிதாவுக்கு – பெற்றோரின் விவாகரத்தால் நேர்ந்துவிடும் அவலத்தைக்கூறுகிறது. தாய் அழுதாள் பாசம் – தகப்பன் அழுதால் மனநோயா…? இது என்ன கொடுமை…?  புகலிடத்தின் விவாகரத்துச் சட்டங்களுக்கு சாட்டையால் அடிக்கும்  கதையாக வார்த்துள்ளார் ராஜேஸ்வரி. பெண்கள்,  கண்ணீர் விட்டும் காரியம் பார்க்கலாம் என்பதையும் ஒரு பெண்ணியவாதி சுட்டிக்காண்பிக்கின்றார். சித்தி கருணானந்தராஜாவும் உலக கவிதைத் தினத்தை முன்னிட்டு எழுதியிருக்கும் கவிதையில் கொரோனாவைத்தான்  எமன் வடிவில் அழைத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் கொழும்பில் மறைந்துவிட்ட மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையனை நினைவுகூரும் கண்ணீர் அஞ்சலி பதிவும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. ஞானம் பாலச்சந்திரனின் சிறுகதையான   கொரோனா – உள்ளே – வெளியே – உள்ளே -  சமகாலத்தில் இலங்கைத் தலைநகரில் ஒரு மத்தியதர குடும்பஸ்தன் படும் அவஸ்தையை சித்திரிக்கிறது. கணத்திற்கு கணம் ஆயிரக்கணக்கான விமானங்கள் பறந்துகொண்டிருந்தன. அவை அனைத்தும் சேவையை நிறுத்திக்கொண்டதனால், அதில் சிலவற்றில் பயணிப்பவர்களின் உணவுத் தேவையை கவனித்த ஒரு நிறுவனத்தின் ஊழியன் செல்வநாயகத்திற்கும் வேலை பறிபோகும் அபாயம் சூழ்கிறது. இடைக்கிடை இருமலும் வருகிறது. அவனும் மனைவி செல்வியும் குழந்தைகளும் வீட்டுக்குள் முடங்கியவாறு படும் அவஸ்தையை ஞானம் பாலச்சந்திரன் யதார்த்தமாகச் சித்திரித்துள்ளார். திருக்குறளின் மருத்துவக்குறிப்புகள் பற்றி கெ. சித்திரவேலாயுதன் எழுதியிருக்கும் ஆக்கம் பேசுகிறது. உஷா ஜவகாரின் கவிதையும் இந்தக்கொரோனாவை விட்டுவைக்கவில்லை.

நியுடன் குணசிங்கவின் சார்புமண்டல முதலாளித்துவம் என்ற நூல் பற்றிய, அதிலிருந்து சில அத்தியாயங்களை தமிழில் ஏற்கனவே  மொழிபெயர்த்துள்ள க. சண்முகலிங்கம் தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துள்ளார். உலகமயமாதல் பேசுபொருளாகியிருக்கும் வேளையில்,  அந்த நூலின் பயன்பாட்டினை சண்முகலிங்கம்  விளக்கியிருக்கிறார். பரவலான வாசிப்புக்கு செல்லவேண்டிய  கட்டுரை.  “ கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தே…  “ என்ற காலத்தால் அழியாத கானத்தை இயற்றிய தனது குருநாதர் இயல் இசை வாருதி வீரமணி  ஐயர் பற்றிய கட்டுரையை  கலாநிதி கார்த்திகா கணேசர் எழுதியுள்ளார். படித்தவனே பாராளவேண்டும் என்ற தலைப்பில் ஜின்னா ஷரிப்புத்தீன்  மரபுக்கவிதை எழுதியுள்ளார். மக்கள்  இதுவிடயமாக சிந்திக்கவேண்டும் எனவும் சொல்கிறார். எங்கள்  காலத்தில்தான்  படிக்காத மேதை கர்மவீரர் காமராசர் தமிழ்நாட்டில் முதலமைச்சராக பதவியிலிருந்து ஏழை மாணவர்களின் கல்விக்கண்ணைத் திறந்தார்.  படித்த மனிதரான எங்கள் தேசத்து தகநாயக்கா, பிரமராகவிருந்தவர். இறுதிவரையில் எளிமையாக வாழ்ந்தவர். தேர்தல் எனும் தெருக்கூத்து என்ற கவிதையை யேர்மனியிலிருந்து அம்பலவன் புவனேந்திரன் எழுதியுள்ளார். இலங்கையில் தேர்தல் நடக்குமா..? நடக்காதா..? என்ற இழுபறி  தலை சுமையாகியிருக்கும் இக்காலப்பகுதியில் தலைவர்கள் அறிக்கை பட்டிமன்றம் நடத்தும் வேளையில் இக்கவிதையும் வெளிவந்துள்ளது. கலைஞர் மாவை நித்தியானந்தன் முன்னர்  வட இலங்கை கிராமங்கள் தோறும் மேடையேற்றிய  திருவிழா என்ற  அங்கதச்சுவை மிக்க இசைக்கூத்து நிகழ்வை இக்கவிதை நினைவூட்டுகிறது.

ஞானம் ஆசிரியர் சிறுகதைகள், நாவல்கள் எழுதியிருப்பவர். அவரது   பார்வையில் எழுதப்பட்ட அரசியல் நாவல் எரிமலை.  2018 ஆம் ஆண்டில் வெளியானது. அதற்கு கொடகே நிறுவனத்தின்  சிறந்த நாவலுக்கான விருதும் கிடைத்துள்ளது. இந்நாவலை வி. தில்லைநாதன் The Volcano என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அதுபற்றிய தமது வாசிப்பு அனுபவத்தை பேராசிரியர் சோ. சந்திரசேகரம் எழுதியுள்ளார். எந்தத் தேசத்து மக்களும் மலிவு விலையில் வாங்கிய பொருட்கள் பலவற்றிலும்   Made in China என்ற அடையாளக்குறி இருக்கும்.  கண்ணுக்குத் தெரியாத வைரஸ்  அதே China விலிருந்து வந்துவிட்டதை கட்டமிது நற்பாடம் கட்டாயம் கற்பதற்கு  என்ற தலைப்பில் கவிதையாக வடித்து எச்சரிக்கமுனைகிறார் கவிஞர் வழக்கறிஞர் செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. சமகாலத்தில் வாட்ஸ் அப்  இணைப்புகளில்  துள்ளிவிளையாடும் மீம்ஸ்  அமளிகளில் சீனா சிக்குண்டிருப்பது போதாதென்று,  இந்த  சட்டம் தெரிந்த அறிஞரும் கவிதை வடிவில்  மக்களை எச்சரிக்கிறார். சீனாவை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முனைபவர்களுக்கு இக்கவிதை மெல்லுவதற்கு அவலாகிவிட்டாலும் ஆச்சரியமில்லை.

பேராசிரியர் துரை மனோகரன் ஞானம் இதழில் தொடர்ந்து எழுதிவரும் பத்தி எழுத்து எழுதத்தூண்டும் எண்ணங்கள். இவ்விதழில் சமகால அச்சுறுத்தலின்போது மானுடம் எவ்வாறு வெல்லவேண்டும் என்பது பற்றியும் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தல் குறித்து, தேர்தல் கோலங்கள் என்ற தலைப்பிலும் எழுதியுள்ளார். முன்னாள் வடக்கு முதல்வர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அய்யாவின் புதிய கட்சிக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும் அரூடம்  கூறுகிறார்.  கிழக்கையும் மலையகத்தையும்  தொட்டுச்செல்கிறார். வடக்கில் யாழ், மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து நாடாளுமன்றிற்கு தெரிவாகவேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதிற்குள்தான் அடக்கம். ஆனால், நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 300 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் பலரிடம் நிதிவளம் இருப்பதனால்தான்,   தோல்வி நிச்சயம் எனத் தெரிந்தும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதுபற்றியும்  துரைமனோகரனின் ஆருடத்தையும் எதிர்பார்க்கின்றோம்.   அந்த வேட்பாளர்கள் வாக்குக்கேட்கவும் வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். குறைந்த பட்சம் வடக்கின் மக்களுக்கு உலர் உணவுப்பொதிகளை தங்கள் கட்சிகளின் பணத்தில் தேர்தல் செலவுக்கு வைத்திருக்கும் நிதியில் வழங்கி துரைமனோகரன் எதிர்பார்க்கும் மானுடத்தை வெல்ல வைக்கலாம் !

மற்றும் ஒரு வழக்கறிஞர் ரஷீத் எம் இம்தியாஸ் எழுதியிருக்கும் உன்னை நோக்கிப்பாயும் தோட்டா  என்ற கவிதையும் யாருக்கு வாக்களிக்கவேண்டும்..?  என்பதைப்பற்றியே பேசுகிறது. தமிழ்மணி மானா மக்கீனின் வழக்கமான  பத்தி எழுத்தும் இவ்விதழை அலங்கரிக்கிறது. ஒரு புதிய தகவலை அவர் தந்துள்ளார். கேரளத்தைச்சேர்ந்த ஷஃபி செருமா விலாயி என்ற கட்டிடத் தொழிலாளி, முன்னர் தேநீர்க்கடையில் சாயா தயாரிக்கும் சிற்றூழியரின் கதையை சுருக்கமாகச்சொல்லி, நாமெல்லோரும் வியந்து பார்க்கவேண்டிய செய்தியையும் வெளியிட்டுள்ளார். அந்த சாமனியன் – கட்டிடத் தொழிலாளியாக வாழ்ந்துகொண்டே தினக்கூழி ஊதியம் பெற்றவர்,  பல தமிழக சிறுகதைகள், நாவல்கள், கவிதைகளை மலையாள மொழிக்கு பெயர்த்து வரவாக்கியுள்ளார். சுஜாதா முதல், எஸ்.ரா., தோப்பில், சா. கந்தசாமி, திலகவதி  உட்பட சல்மா முதல் சுகந்திவரையில் பல கவிஞிகள் உட்பட பலரை கேரள இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  தனது வயிற்றுப்பாட்டுக்காக  “சாயாவாலா   “ வாகி, நடைபாதை வியாபாரியாகி, செங்கல் சுமந்து வாழும் அந்த  ஆளுமைமிக்க மொழி பெயர்ப்பாளர் ஷஃபி செருமா விலாயி பற்றி அழகான அறிமுகம் தந்திருக்கும் மானா  மக்கீனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தப்பதிவை படித்தபோது, எமக்கு, உக்ரேய்னைச்சேர்ந்த கட்டிடத்தொழிலாளி    ( அமரர் ) விதாலி ஃபுர்ணிக்கா அவர்கள்தான் நினைவுக்கு வருகிறார். இவரும் ஒரு நாட்கூலியாக வாழ்ந்து பின்னாளில் மகாகவி பாரதியின் கவிதைகளினால் கவரப்பட்டு, தமிழகம் சென்று அறிஞர் மு. வரதராசனிடம் தமிழ் கற்று, தமிழகப்பித்தன் என்ற புனைபெயருடன் ஜெயகாந்தனின் எழுத்துக்களை சோவியத் மக்களுக்கு தமது மொழிபெயர்ப்புகளின் ஊடாக அறிமுகப்படுத்தியவர். ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் நண்பர். பத்திரிகையாளர் பொன்னுத்துரை வழக்கமாக எழுதிவரும் சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் செய்தித்தொகுப்பும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது.

மொத்தத்தில்  ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் நெருக்கடி மிக்க இக்காலப்பகுதியில் இலக்கிய வாசகர்களின் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் ஏப்ரில் மாதத்திற்குரிய இதழை வெளியிட்டுள்ளார். தபாலில் வரும் கடிதங்கள், இதழ்கள் , பொதிகளையும்  கிருமி தொற்று நீக்கிகளினால் ( ANTI BACTERIAL WIPES ) துடைத்துவிட்டுப்பார்க்கவேண்டிய  இக்காலத்தில், ஞானம் இதழை வெளிநாட்டு உள்நாட்டு வாசகர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக  (  PDF  Format )  தொடர்ந்தும் அனுப்பிவரும் ஆசிரியர் மருத்துவர் தி. ஞானசேகரனுக்கும் ஞானத்தின் உள்ளடக்கத்தை நிரப்பியிருக்கும்  எழுத்தாளர்களுக்கும் எமது வாழ்த்துக்கள். நாமும் கணினியை குறிப்பிட்ட தொற்று நீக்கியைக்கொண்டு துடைத்துவிட்டுத்தான் ஏதும் படிக்கவும் பார்க்கவும் வேண்டியிருக்கிறது. கொரொனா,  தனது அச்சுறுத்தலுடன் சுத்தம் சுகம் தரும் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R