ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


முன்னுரை :-
நம்பிக்கைகள் மக்களின் வாழ்வியலோடு ஒன்றியதாகும். நம்பிக்கைகள் சமுதாயத்தின் தேவைகளின் அடிப்படையில் தோன்றியவை. அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கைகள் என்பர். 'நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு அம்மக்கள் சமுதாயத்தால் பாதுகாக்கப்படுகின்றன. மனிதனின் தன்னல உணர்வும் சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன'. தனிமனித நம்பிக்கை காலப்போக்கில் சமுதாய நம்பிக்கையாக மாற்றம் பெறுவதுண்டு. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த ஆசாரக் கோவையும் பண்டைத் தமிழரின் வாழ்வியல் நம்பிக்கைகளை வெளிப்படுத்துகின்றன. மேலும் 'சிலவற்றை மறுக்க முடியாத உண்மை என்று கருதி ஏற்றுக் கொள்வதே நம்பிக்கை' என்று வரையறைச் செய்யலாம். சதக நூல்களுள் முதன்மைப் பெற்று விளங்குகின்ற அறப்பளீசுர சதகத்தில் வாழ்வியல் நம்பிக்கைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. அதனை எடுத்துக் கூறுவதே ஆய்வின் நோக்கமாக அமைந்துள்ளது.

அறப்பளீசுவரர் சதகம் :-

சிற்றிலக்கியங்களில் நீதி நூல்களாகவும் வரலாற்றுக் கருவூலங்களாகவும் பக்தி பனுவல்களாகவும் விளங்கும் சதக இலக்கியங்கள் ஒருவகையாகும். கார் மண்டல சதகம், சோழ மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், செயங்கொண்டார் சதகம் போன்ற புகழ்ப்பெற்ற சதகங்கள் தவிர முப்பத்தியொரு வகையான சதக நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளதாக கூறுவர்.

அறப்பளீசுர சதகம் என்பது அறப்பள்ளி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள கடவுள் மீது நூறு பாடல்களால் பாடப்பெற்ற நூல் ஆகும். அறப்பள்ளி என்ற ஊர் சதுரகிரி என வழங்கும் கொல்லிமலையில் உள்ள ஒரு சிற்றூர். இது சேலம் மாவட்டத்தில் நாமக்கல் நகரிலிருந்து ஆறுகல் தொலைவில் உள்ளது. சதுர கிரிக்கே அறப்பள்ளி என்ற பெயருண்டு என்பர் சிலர். அறப்பள்ளியில் எழுந்தருளியுள்ள இறைவன் அறப்பளீசுரர் ஆவார். இந்நூலின் ஆசிரியர் அம்பலவாணக் கவிராயர் என்னும் நல்லிசைப் புலவராவார். மக்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அறச்செயல்கள், நம்பிக்கைகள் பற்றி இந்நூல் விரிவாக கூறுகிறது. பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் முதன்மை பெற்று விளங்கும் பெருமையுடையது இச்சதக நூல்.

நாள் பற்றிய நம்பிக்கைகள் :-
ஒவ்வொரு நாளுக்கும் பலன் உண்டு என்ற நம்பிக்கை பண்டைத் தமிழரிடம் இருந்தது. அவ்வகையில் சிலச் செயல்களைச் செய்யும் போது இன்னின்ன நாட்களில் செய்தால் மிகுந்த பலன் கிடைக்கும் என்று நம்பினர். அந்நாட்களில் காரியங்களை மேற்கொண்டனர்.

எண்ணெய் தேய்த்து நீராடக் கூடிய நாட்கள் :-
பழந்தமிழ் மக்கள் எண்ணெய் தேய்த்து நீராடுவதால் உடல் தூய்மை ஏற்படுவதோடு உடலில் வலுவும் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும் என்று நம்பினர். ஞாயிற்றுக் கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது. அவ்வாறு குளித்தால் அழகு நீங்கும் என்று நம்பினர். திங்கட்கிழமை நீராடினால் பொருட்செல்வம் சேரும் என்றும், செவ்வாயக் கிழமை நீராடினால் துன்பம் வரும் என்றும், புதன் கிழமை நீராடினால் அறிவு பெருகும் என்றும், வியாழக்கிழமை நீராடினால் அறிவு கெடும் என்றும், வெள்ளிக் கிழமை நீராடினால் சேமித்து வைத்த பொருட்செல்வம் அழியும் என்றும், சனிக்கிழமை நீராடினால் ஆயுள் பெருகும், செல்வ வளம் பெருகும் என்றும் கூறுகிறது. இதனையே 'சனி நீராடு' என்கின்றனர். இவ்வாறு நல்ல நாள் பார்த்து நீராடினால் நன்மை விளையும் என்று கூறியதோடு தீய நாட்களில் நீராட நேர்ந்தால் அதற்கான பரிகாரம் செய்து குளிப்பது நன்று என்கிறது சதக நூல்.

ஞாயிற்றுக் கிழமை அவரி மலரும்
செவ்வாயக் கிழமை மண்ணும்
வியாழக்கிழமை அறுகம்புல்லும்
வெள்ளிக் கிழமை எருப்பொடியும்
எண்ணெயுடன் சேர்த்து குளித்தால் நற்பலன் என்கிறது. ஆசாரக்கோவையும் நீராடும் முறை குறித்தச் செய்திகளைக் கூறுகிறது.

புத்தாடை அணிவதில் நாள் பலன் :-
புதிய ஆடைகளை நல்ல நாள் பார்த்து அணிய வேண்டும் என்ற நம்பிக்கை இன்றளவும் மக்களிடம் காணப்படுகிறது. அவ்வாறு அணிந்தால் ஆடை அணிகலன்கள் பெருகும் என்பதே காரணம். ஞாயிற்றுக் கிழமை புத்தாடை அணியலாம். அவ்வாறு அணிந்தால் ஆடையில் கறை படியாது. தூய்மையாக இருக்கும். வியாழக்கிழமை அணிந்தால் அழகு பெருகும். நல்ல ஆடைகள் கிடைக்கும். புத்தாடை அணிவதற்கான நல்ல நாள்களாக ஞாயிறு, வியாழனைக் குறிப்பிடுகிறது. மற்ற நாட்களில் அணிந்தால் துன்பத்தை உண்டாக்கும் என்கிறது சதக நூல்.

புதுமனை புக ஏற்ற நாட்கள் :-
வீடு என்பது வெறும் கற்களால் ஆனதல்ல. அன்பும், அமைதியும் கொலுவிருக்கும் இடம் ஆகும். ஆகவே வீடு கட்டும் பணியைத் தொடங்கும் போது நல்ல மாதம், நாள், நேரம் பார்த்துத் தொடங்குவது மரபு. சித்திரை மாதம் வீடு கட்டும் பணியைத் தொடங்கினாலும் குடி புகுந்தாலும் செல்வம் நிறையும், வைகாசியில் குடிபுகுந்தால் நன்மை உண்டாகும். ஆவணி நலங்கள் பல தரும் மாதம். ஐப்பசி உயர்வைத்தரும். கார்த்திகை நன்மை தரும். தை மாதம் உயர்வு உண்டாகும். ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி, பங்குனி, போன்ற மாதங்கள் நன்மை தராது. ஆகவே நன்மை தரும் மாதங்களில் புதுமனை புகுவர். இன்றும் தமிழரிடம் இவ்வழக்கம் நீடிப்பதைக் காணலாம்.

விருந்துக்கு ஏற்ற நாட்கள் :-
விருந்தினர்களை உபசரிப்பது தமிழர் பண்பாடு. விருந்தோம்பலின் சிறப்பை சங்க இலக்கியங்களும், திருக்குறள் போன்ற நீதி இலக்கியங்களும் எடுத்தியம்புகின்றன. விருந்து உபசரிப்புக்குக் கூட நாளும் கிழமையும் பார்த்தனர். அவ்வாறிருந்தால் தான் உறவு நீடிக்கும் என்று நம்பினர். திங்கட் கிழமை விருந்து உண்டால் உறவு நலம் தரும். நன்மைகள் உண்டாகும், புதன் கிழமையும் நல்லது. வெள்ளிக் கிழமையே விருந்துக்குச் சென்று உணவு உண்ண சிறந்த நாளாகும். ஞாயிற்றுக் கிழமை விருந்து உண்ணக் கூடாது. விருந்து இடவும் கூடாது. அவ்வாறு செய்தால் பகை வரும். செவ்வாய் கிழமையும் பகை உண்டாக்கும். வியாழக்கிழமை அதிகமான பகை உண்டாக்கும்.

திங்களுக்(கு) உறவுண்டுளூ நன்மையாம்ளூ பகைவரும்
செவ்வாய் விருந்திருந்தார்ளூ
பொங்கு புதன் நன்மையுண்(டு) உறவாம்ளூ(அ.சதகம் 68)
போன்ற அரியச் செய்திகளைச் சதகநூல் குறிப்பிடுகின்றது.

பிறந்தநாள் பற்றிய நம்பிக்கைகள் :-
குழந்தை பிறந்த நாளை வைத்து அதன் எதிர்காலத்தைக் கூறும் வழக்கம் பழந்தமிழ் மக்களிடம் உள்ளது. ஞாயிற்றுக் கிழமை குழந்தை பிறந்தால் அலைச்சல் ஏற்படும் என்றும், திங்கட் கிழமைப் பிறந்தால் நல்ல உணவுடன் திருமகளின் அருள் கிடைக்கும் என்றும், புதன் எனில் ஆராய்ச்சித்திறம் இருக்கும் என்றும், வியாழன் எனில் நலம்பல கிடைக்கும் என்றும், வெள்ளிக் கிழமையாயின் பெண்களின் இன்பம் கிடைக்கும் எனவும், செவ்வாய்க் கிழமைப் பிறந்தால் நன்மை கிடையாது என்றும், சனிக் கிழமைப் பிறந்தால் மயக்கம் தரும் நோய் உண்டாகும் என்பன போன்ற கருத்துக்கள் நூலில் காணப்படுகின்றன.

பூப்பெய்தும் நாள் மற்றும்; ராசி பலன் :-
பெண்கள் பூப்படையும் நாளை வைத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கை நிலையைக் கணித்தனர். பூப்பெய்துகின்ற நாளையும் ராசியையும் கொண்டு பலன்களைக் கூறுகிறது அறப்பளீசுர சதகம். ஞாயிற்றுக் கிழமை பூப்படைந்தவள் கற்புடையவள் என்றும், செவ்வாய்க் கிழமை எனின் மிகுதியான மன வருத்தத்தைத் தரும் என்றும், புதன் கிழமை என்றால் அதிகமான குழந்தைகளைப் பெற்றறெடுப்பாள் என்றும், வியாழக் கிழமை எனில் மக்கட்பேற்றுடன் செல்வ வளம் இருக்கும். வெள்ளிக் கிழமை எனில் செல்வமும், இன்பமும் நிலைக்கும். சனிக்கிழமையானால் தீய குணமுடன் வறுமையுற்று அலைவாள் என்று பெண்கள் பூப்படைவதற்கான நாள் பலன்களைக் கூறுகிறது. மேலும் பெண்கள் மேட ராசியில் பூப்படைந்தால் வறுமை உண்டாகும். இடப ராசியாயின் அவள் விலை மாதாவாள். மிதுனத்தில் நல்வாழ்வும் இன்பமும் கிடைக்கும். கடகம் எனில் கணவன் அல்லாத பிறருடன் உறவு கொள்வாள். சிம்மம் எனில் வறுமையுடையவள் ஆவாள். கன்னி ராசியில் பூப்படைந்தால் புகழ் பெறுவாள். துலாம் எனில் சிக்கனமுடன் இருப்பாள். விருச்சிகம் எனில் நோயால் துன்புறுவாள். தனுசு எனில் நடக்கின்ற வழி தவறுவாள். மகரம் எனில் பெருமையை இழப்பாள். கும்பம் எனில் நிறைவான இன்பமுடன் இருப்பாள். மீனம் எனில் சிறந்த அறிவுடன் இருப்பாள்.

வறுமைதப் பாதுவரும் மேடத்தில்ளூ இடபத்தில்
மாறாது விபசாரி ஆம்ளூ
வாழ்வுண்டு போகமுண் டாடும்மிதுனம்ளூ கடகம்
வலிதினிற் பிறரை அணை வாள்.    (அ.சதகம், பாடல் - 70)

என்று பூப்படையும் ராசியை வைத்து அவர்களின் குணமும் எதிர்கால வாழ்க்கையும் இருக்கும் என்று கணித்ததை அறிய முடிகிறது.

பயணம் சார்ந்த நம்பிக்கைகள் :-
பயணம் மேற்கொள்ளும் போது நல்லநேரம் பார்த்து பயணம் செய்வது, நல்ல பொழுது, நற்சொல், நல்லச் சகுனம் பார்த்துச் செல்லல் போன்ற நம்பிக்கைகள் பண்டைக்காலம் முதல் வழக்கில் இருந்து வருகிறது. கருடன், பாம்பு, குரங்கு, கலைமான், அட்டைப்பூச்சி, எலி, கூகை, ஆந்தை, கரடி, காட்டுப்பசு, பூனை, புலி, உடும்பு இவை வலப்பக்கம் இருந்து இடப்பக்கம் சென்றால் நன்மை உண்டாகும். வெற்றி கிடைக்கும். பயணிப்பவர்களின் தலையில் இடித்தல், ஒரு காலில் நிற்றல், வந்து கையைப் பிடித்தல், ஒற்றைத் தும்மல், ஆணையிடுதல், இருமல், போகாதே எனும் சொல் காதில் விழுதல் இவை எல்லாம் பயணம் செய்யும் பொழுது நிகழ்ந்தால் நல்லதல்ல.

பயணம் செய்யும் போது நல்ல குறிகள் நடைபெற வேண்டும். தீய குறிகள் நிகழ்ந்தால் பயணம் செய்யக் கூடாது என்பதை சதக நூல் சுட்டிக் காட்டுகிறது.

சகுனம் பார்த்தல் :-
சகுனம் பார்த்தல் சங்க காலத்திலும் வழக்கிலிருந்தது. போருக்குச் செல்லும் அரசர்கள் நற்குறி கேட்டும், சகுனம் பார்த்துமே போருக்குச் சென்றனர். நரி, மயில், பச்சைக்கிளி, கோழி, கொக்கு, காக்கை, கத்தூரி மிருகம், சிச்சிலிப் பறவை, வல்லூறு, செம்போத்து, எருமை, பசு, அந்தணர், புலி, முயல் போன்றவை வலப்புறமாக வந்தால் செல்கின்ற செயல் வெற்றி பெறும் என்றும் ஒரு பணியின் நிமித்தம் செல்லும் போது குதிரை கனைத்தல், வா வா எனும் வாய்ச்சொல் காதில் விழுதல், சங்கு ஒலித்தல், கொம்பு, முரசு, தப்பட்டை ஆகியவை முழங்குதல் போன்றவை நல்ல சகுனம் என்ற கருத்துக்களை அறப்பளீசுர சதகம் வாயிலாக அறிய முடிகிறது.

பயண காலப்பயன் :-
விரித்துப் போட்ட தலைமுடியுடன் ஒருவர் எதிராக வருதல், ஒற்றைப் பிராமணன் தனியே வருதல், தவயோகி, துறவி, பொற்கொல்லன் தனியே வருதல், மண்பாண்டம், எண்ணெய் முதலானவைக் கொண்டு வருதல் போன்றவை தீய பலன்களைத் தருவதாகும். நீர் நிறைந்த குடம், எருக்கூடை, இரட்டைப் பார்ப்பான், சுமங்கலிப்பெண், வண்ணானின் அழுக்குத்துணி, பால் குடம், மணி, வளையல், மலர் என எதிர் வந்தால் நன்மையாகும் என்ற நடைமுறை வழக்கங்கள் அக்காலத்தில் வழக்கில் இருந்ததை சதக நூல் குறிப்பிடுகிறது. நல்ல காரியங்களுக்காகச் செல்லும் போது எதிர்ப்புப் பார்த்துச் செல்லும் வழக்கம் இன்றும் மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது.

உணவு சார்ந்த நம்பிக்கைகள் :-
இன்றைய நாகரிக உலகில் நாம் உணவு உண்ண அலங்காரமாக பலப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இலைகளில் உண்ணுதல் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நம் முன்னோர் அறிந்து வைத்திருந்தனர். அதிலும் குறிப்பாக எந்த இலையில் உண்டால் நன்மை விளையும் என்பதையும் கூறுகிறது சதக நூல். வாழை இலை, புன்னை இலை, புரசு இலை, குருக்கத்தி இலை, மா, பலா, தென்னை, பன்னீர் போன்றவற்றில் உணவு உண்ணலாம். அரச இலை, வனச இலை, பாடலம் இலை, தாழை இலை, அத்தி இலை, ஆல இலை, எரண்ட பத்திரம், சகதேவம், முள் முருங்கை இலை, எருக்கு இலை ஆகியவற்றில் உணவு உண்ணக் கூடாது. உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். அது போன்று எச்சில் இலைகளில் உண்ணக் கூடாது. அடிக்கடி நீர் பருகுதல், சிற்றுண்டிகள் உண்ணுதல், சிறிது உண்ணுதல், அதிகம் உண்ணுதல் முதலியவை நோய்க்கு இடமளிக்கும். எதையும் அளவாய் உண்பது நல்லது என்கிறது சதக நூல். நம் முன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததால் ஆரோக்கியமாக வாழ்ந்தனர் என்பதை அறிய முடிகிறது.

மழை பற்றிய நம்பிக்கைகள் :-
மழை பொழியும் பருவத்தை வைத்தும் நம் மக்கள் வளமையை அறிந்தனர். சித்திரை மாதம் பதிமூன்று நாட்களுக்குப் பின்பு பரணி நட்சத்திரத்தில் பெய்யும் மழையும் வைகாசி மாதம் பௌர்ணமி கழிந்து நான்காம் நாள் பெய்யும் மழையும், ஆனி மாதம் தேய்பிறை காலத்தில் ஏகாதசி நாளில் சூரியன் மறையும் காலத்தில் பெய்யும் மழையும், ஆடி மாதம் ஐந்தாம் நாள் ஞாயிற்றுக் கிழமை பெய்யும் மழையும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் சூரியன் மறைவின் பின் பெய்யும் மழையும் என இந்நாட்களில் பெய்யும் மழையால் விவசாயம் செழித்து நல்ல விளைச்சல் உண்டாகும் என்கிறது நூல்.

சித்திரைத் திங்கள் பதின்மூன்றுக்கு மேல்நல்ல
சீரான பரணிமழை யும்,
தீ(து)இல் வைகாசியிற் பூரணை கழிந்தபின்
சேரும் நாலாநா ளினில்
ஒத்துவரு மழையும், அவ் ஆனியில் தேய்பிறையில்
ஓங்கும்ஏ காதசியி னில்
ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்.
(அ.சதகம் - 79)

பிற கருத்துகள் :-
இவை தவிர அறம் சார்ந்த கருத்துக்களையும் சதக நூல் முன்வைக்கிறது. மழை பெய்யத் துணையாவது பெண்களின் கற்பும், அரசர்களின் நீதியும், அந்தணர்களின் ஒழுக்கமும் என்ற சான்றோர்களின் கருத்தை சதக நூலும் முன்வைக்கிறது. விவேக சிந்தாமணியும் இக்கருத்தை விளம்புகிறது.

'வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர்மழை
நீதிமன்னர் நெறியினுக்கு ஓர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே'    (வி.சிந்தாமணி – 19)

கலியுகத்தில் நன்மைகளைப் போற்றாமல் தீமைகள் போற்றுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவன் மருத்துவ நூல்களை முறைப்படி கற்றவனாக இருந்தாலும், கைராசியுடையவனாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் யோகப்பயிற்சி செய்யும் வல்லமைப் பெற்ற சித்தர்களாக இருந்தாலும் கூட ஊழ்வினையில் அகப்பட்டு தவிப்பர். பிரம்மன் கூட ஊழ்வினையில் இருந்து தப்ப முடியாது என்பன போன்ற கருத்துக்கள் பொதிந்துள்ளன. அந்தணர், அரசர் போன்ற அனைத்து தரப்பு மக்களும் சிறப்புடன் வாழ வழி செய்பவர்கள், உழவுத் தொழில் புரியும் வேளாளர்களேயாவர் என்று உழவின் சிறப்பினைக் கூறுகிறது.

முடிவுரை :-
இவ்வாறு அன்றைய கால மக்கள் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் காரண காரியத்துடன் நம்பிக்கை கொண்டிருந்தனர். இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததினால் உடல் ஆரோக்கியத்துடனும், மன ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தனர். கால சுழற்சியின் காரணமாக அவசர வாழ்க்கை, நாகரிகத் திணிப்புக் கொண்ட நம் மக்களிடையே கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆகவே இத்தகைய நம்பிக்கைகளை மூடத்தனமானது என புறந்தள்ளும் வழக்கமே தற்போது பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது. நம்மால் இயன்ற அளவு 'கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு' வாழ்ந்தால் இளம் சமூகம் நன்மை பெறும் என்பது திண்ணம்.

துணை நின்ற நூல்கள் :-
1.    அறப்பளீசுவர சதகம், அம்பல வாணக் கவிராயர்
2.    நாட்டுப்புறவியல் ஆய்வு, டாக்.சு.சத்திவேல் (ப – 188)
3.    நாட்டார் வழக்காற்றில் சில அடிப்படைகள்,தே.லூர்து ப – 237
4.    விவேக சிந்தாமணி        -    ப.21


* கட்டுரையாளர்: பேராசிரியர், முனைவர்.இரா.நி.ஸ்ரீகலா, தெ.தி.இந்துக் கல்லூரி, நாகர்கோவில்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R