அமரர் சி. வி. வேலுப்பிள்ளைவீடற்றவர், நாடற்றவர் கதை சொல்வோமா? வாழ்வில் பட்ட கதை சொல்வோமா? "மலையக மக்கள் கவிமணி" சி.வி.வேலுப்பிள்ளை  (1914 -1984) நினைவுகள்  "பிள்ளைகளுக்கு கதை கேட்பதில் எத்தனை இன்பம். கதை சொல்லுவதில் பாட்டிக்குத் தனி இன்பம். பாட்டி தான் கண்டதையும் கேட்டதையும் தன்னைப்பற்றியும் தன் குடும்பம் தன் பந்துக்கள், தன் கிராமம், தன் ஊர், தன் இன்ப துன்பம் இவைகளைப்பற்றியும் கதை கதையாகச்சொல்லுவாள். பேரன் பாட்டியை கதைசொல்லும்படி கேட்டபோது, அவள் நான் பிறந்த கதைசொல்லுவேனா? நான் பட்ட கதைசொல்லுவேனா? என்ற கேள்வியைச்சொல்லி கதையை ஆரம்பித்தாளாம். பலவருடங்களுக்குப்பின் மலைநாட்டில் பிறக்கும் ஒரு பேரன் தன் பாட்டியிடம் கதைசொல்லும்படி கேட்டால், அநேகமாய் பழைய பாட்டி சொன்ன பதிலையே சொல்லுவாள். அது நாம் பிறந்த கதையாகவும் பட்ட கதையாகவும்தான் இருக்கமுடியும். இந்தக்கதை நாடற்றவர், வீடற்றவர் கதை." இவ்வாறு தொடங்குகிறது அமரர் சி. வி. வேலுப்பிள்ளையின் நாடற்றவர் கதை.  இதன் முதல் பதிப்பு 1987 இல் தமிழகத்தில்தான் வெளிவருகிறது. அவருடைய வாரிசுகளில் ஒருவரான இர. சிவலிங்கம் அதனை தமிழகத்தில் வெளியிடுகிறார். 

உலகின் பலபாகங்களில் இன்றும் நாடற்றவர்கள், வீடற்றவர்கள் பரதேசிகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இயக்குநர் பாலாவும் பரதேசி என்ற பெயரிலே அவர்களின் கதையை படமாக்கினார்.  பேரக்குழந்தைகளுக்கு கதை சொல்லக்கூடிய பாட்டிமாரின் நேரத்தை தற்காலத்தில் மெகா சீரியல்கள, தொலைக்காட்சிகள் ஊடாக ஆக்கிரமித்துள்ளன. அதனால் கதைசொல்வதற்கு பாட்டிகளும் இல்லை. கேட்பதற்கு பேரர்களும் இல்லை. பாட்டிகள் வேறு உலகத்திலும் பேரர்கள் வேறு உலகத்திலும் இருக்கும் இக்காலத்தில் இலங்கையில் வெள்ளையர்களினால் இழுத்துவரப்பட்டு மலையக காடுகளை பசுமையாக்கிய கறிவேப்பிலைகளாக தூக்கியெறியப்பட்டு ஒப்பாரிக்கோச்சிகளில் ஏற்றப்பட்டவர்களின் கதையை சி.வி. வேலுப்பிள்ளையின் நூலிலிருந்து தெரிந்துகொள்கின்றோம். கறிவேப்பிலைகள், ஒப்பாரிக்கோச்சி என்ற தலைப்புகளிலும் இலங்கை மலையக எழுத்தாளர்கள் கதைகள் எழுதியிருக்கிறார்கள்.

சி.வி. என்று இலக்கியஉலகில் அறியப்பட்ட வேலுப்பிள்ளை அவர்கள் மலையகத்தில் தலவாக்கொல்லையில் மடக்கொம்பரை என்ற கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்தவர். அவருடைய நூற்றாண்டு கொண்டாடப்பட்டு, மூன்று வருடங்கள் கடந்த நிலையில் அவர் பற்றி எழுதுகின்றேன். இவரை கொழும்பில் ஒரே ஒரு தடவைதான் சந்தித்துபேசியிருந்தாலும் அன்றைய தினத்தை என்னால் மறக்கமுடியாது. 1982 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெள்ளவத்தையில் இலக்கிய ஆர்வலர் நண்பர் ரங்கநாதன் அவர்களின் இல்லத்தில் ஒரு இனிய மாலைப்பொழுதில் நடந்த சந்திப்பில்தான் அவரை முதல் முதலில் கண்டேன். அவ்வேளையில் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை நாடளாவிய ரீதியில் தொடக்கிவைத்திருந்தது. தமிழகத்திலிருந்து எழுத்தாளரும் அவ்வேளையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளரும் கட்சியின் ஏடு ஜனசக்தியின் ஆசிரியருமான தோழர் த. பாண்டியனை அழைத்திருந்தது.
அவர் தமிழகம் திரும்புவதற்கு முதல் நாள் ரங்கநாதன் இல்லத்தில் நடந்த சந்திப்பு தேநீர் விருந்துபசாரத்திற்கு சி. வி. வேலுப்பிள்ளையும் வருகை தந்திருந்தார். பேராசிரியர் கைலாசபதி, சோமகாந்தன், மாணிக்கவாசகர், பிரேம்ஜி ஞானசுந்தரன், அந்தனி ஜீவா, தெளிவத்தை ஜோசப், மேமன்கவி, நீர்வை பொன்னையன் உட்பட பலர் வருகை தந்திருந்தனர்.

சி.வி.வேலுப்பிள்ளையின் உறவினரான ஸி. எஸ். காந்தி என்ற பத்திரிகையாளர் வீரகேசரியில் உதவி ஆசிரியராக இருந்தார். அங்கு நானும் பணியாற்றியதனால் அடிக்கடி சி.வி. அவர்கள் பற்றி கலந்துரையாடுவோம். சி.வி. எழுதிய தொடர்கதைகளை வீரகேசரியிலும் தினகரனிலும் ஏற்கனவே படித்திருக்கின்றேன். அப்பொழுது நான் பாடசாலை மாணவன். பின்னாளில் நானும் சி.வி. போன்று எழுத்தாளனாவேன் என்று கனவும் காணாத பருவத்தில் அவருடைய கதைகளைப்படித்து மலையக மக்களின் ஆத்மாவைத் தெரிந்துகொண்டேன். 

1982 இல் அவரைச்சந்தித்தவேளையில் தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் பாரதி இயல் ஆய்வாளருமான தொ.மு. சி. ரகுநாதனின் பேரன் முறையானவன் என்று என்னை அறிமுகப்படுத்தியதனால் தனது நெஞ்சத்திற்கு நெருக்கமானவன் என்ற ரீதியில் என்னை அணைத்துக்கொண்டார். அதன் பின்னர் 1983 இல் இலங்கையில் நடந்த பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகளுக்காக தமிழகத்திலிருந்து ரகுநாதனையும் பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணனையும் படைப்பாளி ராஜம் கிருஷ்ணனையும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அழைத்திருந்தது. அச்சமயம் மீண்டும் ரகுநாதனுடன் சி.வி. அவர்களுக்கு நெருக்கம் வந்தது. சி.வி.யின் இனிப்படமாட்டேன் நாவலின் மூலப்பிரதியை ரகுநாதன் தமிழகத்தில் வெளியிடுவதற்காக எடுத்துச்சென்று சென்னையில் பதிப்பித்தார். குறிப்பிட்ட நூல் 1984 இல் அச்சகத்தில் தயாராகும்போது நான் ரகுநாதன் அவர்களுடன் சென்னையில் நின்றேன். ரகுநாதனும் அந்த நாவலை சிலாகித்து பேசியிருக்கிறார். சி.வி. 1984 இல் மறைந்த வேளையில் அந்தத் துயரமான செய்தி பரவலாக அறியப்படவில்லை என்பது வருத்தமானது. நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையும் அதற்கு முக்கிய காரணம்.

சி.வி. அவர்கள் கொழும்பில் நாலந்தா கல்லூரியில் கற்றவர். 1934 ஆம் ஆண்டு ரவீந்திரநாத தாகூர் இலங்கைவந்தசமயத்தில் அவரை நேரில் சந்தித்து, தான் எழுதிவைத்திருந்த விஸ்மாஜினி என்னும் இசைநாடக நூலை அவரிடம் வழங்கி ஆசிபெற்றிருக்கிறார். இலங்கை வானொலி Voice of lanka நிகழ்ச்சியில் இவரது Tea Pluckers என்ற கவிதை அறிமுகமானதையடுத்து வானொலி நேயர்கள் மத்தியிலும் அறிமுகமானவர். ஆங்கிலப்புலமை மிக்க சி.வி, ஆங்கிலத்தில் பல படைப்புகளை தந்திருப்பவர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உத்தியோகபூர்வ ஏடான Congress News என்னும் ஏட்டிலும் ஆசிரியராக இருந்தார். கதை என்னும் இலக்கிய இதழ், மாவலி என்ற மாத இதழ் ஆகியனவற்றினதும் ஆசிரியராக இயங்கினார் என்பதை அறிகின்றோம். கைலாசபதி தினகரன் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில், கொழும்பில் வசித்த சில எழுத்தாளர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியிருந்தார். பிறநாட்டு இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தி அவர்தம் படைப்புகளையும் தினகரனில் வெளியிடச்செய்வதற்கு அவர் சிலருடன் தொடர்புகளை பேணிவந்தார். அக்காலப்பகுதியில் இலக்கிய ஆர்வலரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான பொன். கிருஷ்ணசாமி அவர்களைக்கொண்டு சி.வி.யின் ஆங்கிலப்படைப்புகளை தினகரனில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு ஆவனசெய்தார். சி.வி.யின் மனைவி இலங்கையில் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர் என்பதும், அவரும் கவிதைகள் எழுதுவார் என்பதும் நம்மால் அறியக்கூடிய தகவல்கள்.

வீடற்றவர், நாடற்றவர் கதை சொல்வோமா? வாழ்வில் பட்ட கதை சொல்வோமா? "மலையக மக்கள் கவிமணி" சி.வி.வேலுப்பிள்ளை  (1914 -1984) நினைவுகள்  1947 இலிருந்த சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் நடந்த சட்டசபைத்தேர்தலில் மலையகத்திலிருந்து தெரிவான ஏழு பிரதிநிதிகளுள் சி.வி.யும் ஒருவர். தலவாக்கலை தொகுதியிலிருந்து தெரிவாகியிருக்கும் சி.வி. பின்னர் அன்றைய ஐக்கிய தேசியக்கட்சி பதிவியிலிருந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தால் அந்த வாய்ப்பையும் இழக்கநேர்ந்தது. அந்தச்சட்டம்தான் மலையக தமிழ் தோட்டத்தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கியது. அதன்பின்னர் சி.வி.யின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் வலதுசாரிப்போக்குள்ள தொழிற்சங்கமாக இயங்கியதனால் சி.வி. வெள்ளையன் முதலானவர்களிடமிருந்து முற்போக்கான தொழிற்சங்கமாக தொழிலாளர் தேசிய சங்கம் உருவானது. மீண்டும் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் 1977 இல் நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் நுவரெலியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட சி.வி. அரசியல், தொழிற்சங்கம், இதழியல், படைப்பிலக்கியம், மற்றும் சமூகப்பணிகளில் தமது ஆளுமையை வெளிப்படுத்தி வாழ்ந்தவர். அவருடைய In Ceylon's Tea Garden நூலை கவிஞர் சக்தி பாலையா இலங்கை தேயிலைத்தோட்டத்திலே என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். வாழ்வற்ற வாழ்வு, எல்லைப்புறம், நாடற்றவர் கதை ஆகியனவற்றை பொன். கிருஷ்ணசாமி மொழிபெயர்த்திருக்கிறார்.

சி.வி. அவர்களின் நூற்றாண்டு காலத்தில் இலங்கையில் அவரது நினைவாக முத்திரையும் வெளியிடப்பட்டது. சி.வி. ஆரம்பத்தில் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும் மலையக மக்களைப்பற்றித்தான் எழுதிவந்தவர்.  பின்னாளில் அவர் தமிழிலேயே சில நவீனங்களை படைத்தார். அவ்வாறு வெளியானவைதான் பார்வதி, இனிப்படமாட்டேன் முதலானவை. சி.வி. தமது இலக்கியப்பிரவேசகாலத்தில் முதலில் ஆங்கிலத்தில் எழுதியதன் மூலம் மலையக மக்களின் வாழ்வை பரவலாக அறியச்செய்தவர். 

" ஆங்கிலத்தின் எழுதியதன் மூலம் துயரம் தோய்ந்த இம்மக்களின் வாழ்வை, தமிழின் எல்லைகளுக்கப்பாலும் கொண்டுசென்ற பெருமைக்குரியவர் சி.வி. என்பது ஒருபுறமிருக்க, ஆங்கிலத்தில் எழுதிய ஒரே காரணத்தால் மலையகம் அல்லாத மற்றைய இலக்கியகாரர்கள் மத்தியில் ஒரு பரவலான அறிமுகத்தையும் எழுத்தாள அந்தஸ்தையும் சி.வி. பெற்றிருந்தார். ஆனால், மலையகத்தமிழ் எழுத்து, இலக்கியத்தைப்பொறுத்தவரை ஓர் அந்நியராகவே இருந்திருக்கின்றார். அறுபதுக்குப்பின் சிலிர்த்துக்கொண்டெழுந்த மலையக இலக்கியம் கண்டு பூரித்துப்போன சி.வி. புதியவர்களுடன் தன்னைப்பரிச்சியம் செய்துகொண்டார். புதுமை இலக்கியம் என்று அதற்குப்பெயரிட்டுப்போற்றினார். தன்னுடைய எழுத்துக்கள் தமிழில் வரவேண்டிய அவசியத்தை உணர்ந்தார்." என்று மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தமது மலையகச்சிறுகதை வரலாறு என்னும் நூலில் பதிவுசெய்துள்ளார்.

இந்தியாவில் தோன்றிய ரவீந்திரநாத்தாகூர் ஆங்கிலத்தில் எழுதியமையால் உலகெங்கும் அறியப்பட்டார். கொண்டாடப்பட்டார். அவருக்கு ஈடாக மட்டுமன்றி அவரையும் விட மேன்மையாக மக்களைப்பற்றி எழுதியவரும் தீர்க்கதரிசியுமான மகாகவி பாரதி தமிழில் அதிகம் எழுதியதனால், அவர் பற்றிய புகழ் குறிப்பிட்ட தமிழ் எல்லைக்குள் நின்றது. அவரது நூற்றாண்டுக்குப்பின்னர் அந்த எல்லைகளையும் கடந்து பேசப்பட்டார். இலங்கையில் ஆங்கிலத்திலேயே எழுதிவந்திருக்கும் எங்கள் சி.வி. அதனால் தமிழ் வாசகர்களிடம் செல்லமுடியாது என்று கருதியதனாலோ என்னவோ தமது ஆங்கில மூலப் படைப்புகளை தமிழில் வெளிவரச்செய்தார். அவருக்கு இதுவிடயத்தில் பெரிதும் உதவியவர்களாக சக்தி பாலைய்யாவும் பொ. கிருஷ்ணசாமியும் போற்றப்படுகின்றனர். காலப்போக்கில் தாம் ஆங்கிலத்தில் எழுதியவற்றை தாமே தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கிய சி.வி. அவர்கள் பின்னர் தமிழிலேயே எழுதத்தொடங்கிவிட்டார். சி. வி.யின் எழுத்துலகம் இவ்வாறுதான் பரிமாணம் பெற்றிருக்கிறது. பரிமளித்திருக்கிறது.

சி.வி பற்றி திருச்செந்தூரன், இர. சிவலிங்கம், மு.நித்தியானந்தன், சாரல்நாடன், லெனின் மதிவானம், கார்மேகம், மல்லியப்பு சந்தி திலகர், தெளிவத்தை ஜோசப், அந்தனிஜீவா, தங்கத்தேவன் உட்பட பலர் ஏற்கனவே தனித்தனி ஆய்வுக்கட்டுரைகளும் சில நூல்களும் எழுதியிருக்கின்றனர். மலையக கலை இலக்கியப்பேரவையின் ஸ்தாபகர் அந்தனிஜீவா, கவிஞராகவும் அறியப்பட்ட சி.வி. அவர்களுக்கு ' மக்கள் கவிமணி' என்ற பட்டத்தையும் வழங்கியிருக்கிறார். மலையக நாட்டார் பாடல்களை தேடிச்சேகரித்து தொகுத்திருக்கும் பாரிய பணியையும் சி.வி. செய்திருக்கிறார். (அமரர்) துரைவிஸ்வநாதனின் துரைவி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் மலையகச்சிறுகதைகளின் இரண்டாம் பாகத்தின் பெயர் உழைக்கப்பிறந்தவர்கள். இதனைத்தொகுத்திருக்கும் தெளிவத்தை ஜோசப், சி.வி. அவர்களின் கதையையே இத்தொகுப்பில் முதலாவதாக இடம்பெறச்செய்து பாராட்டி கௌரவித்திருக்கிறார். ஆனால், அந்த அரிய தொகுப்பினை பார்க்காமலேயே சி,வி. 19-11-1984 இல் மறைந்துவிட்டார். அவர் மறைந்தவேளையில் அரசியல் காரணங்களுக்காக ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனால் அவரையும் அவரது படைப்புகளையும் நேசித்த பலருக்கும் அவரது மரணச்செய்தி தாமதமாகவே கிடைத்தது. சி.வி.யின் கல்லறை தலவாக்கொல்லை மடக்கும்பரவில் தரிசனத்திற்குரியதாகியிருக்கிறது. அவர் கல்லறையில் உறங்கினாலும் அவர் பற்றிய நினைவுகள் எங்கள் நெஞ்சறைகளில் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றன. 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R