மாஸ்டர் சிவலிங்கம் மகாபாரதக்கதையை வியாசர் முதல் ஜெயமோகன் வரையில் பலரும் எழுதியிருக்கின்றனர். தற்போது ஜெயமோகன் வெண்முரசு என்னும் தலைப்பில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். அதனை ஒரு தவப்பணியாகவே மேற்கொண்டு வருவது தெரிகிறது. 2014 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் விருது விழா முடிந்து வீடு திரும்பியதும், தனது குழந்தைகளுக்கு மகா பாரதக்கதையைச் சொல்லி, அதில் வரும் பாத்திரங்களின் இயல்புகளையும் விபரித்திருக்கிறார். அவர் கதைசொல்லும் பாங்கினால் உற்சாகமடைந்த அவரது குழந்தைகள், " அப்பா, இந்தக்கதையையே இனி எழுதுங்கள்." என்று வேண்டுகோள் விடுத்ததும், அவர் அன்றைய தினமே மகா பாரதக்கதைக்கு வெண்முரசு என்று தலைப்பிட்டு ஒவ்வொரு பாகமும் சுமார் 500 பக்கங்கள் கொண்டிருக்கத்தக்கதாக இன்று வரையில் எழுதிக்கொண்டிருக்கிறார். நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் பிறந்தால் ஜெயமோகன் எழுதும் வெண்முரசுவுக்கு வயது மூன்று ஆண்டுகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பிய காவியம்தான் மகா பாரதம். இலங்கைப்பயணம் தொடர்பான பத்தி எழுத்தில் ஏன் மகாபாரதம் வருகிறது, ஜெயமோகன் வருகிறார் என்று வாசகர்கள் யோசிக்கக்கூடும். இலங்கையில் ஒரு காலகட்டத்தில் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மகா பாரதக்கதையைச் சொல்லிக்கொண்டிருந்த இரத்தினம் சிவலிங்கம் என்ற இயற்பெயர்கொண்ட மாஸ்டர் சிவலிங்கம் அவர்களைத்தான் அன்று பார்ப்பதற்கு புறப்பட்டுக்கொண்டிருந்தேன்.

மட்டக்களப்பில் நண்பர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணனுடன் அன்று காலை புறப்படுவதற்கு முன்னரே அன்றைய தினம் எங்கெங்கு செல்வது என்று தீர்மானித்துக்கொண்டேன். முதலில் சுவாமி விபுலானந்தரின் சமாதி தரிசனம், அருகிலேயே விபுலானந்த இசைக்கல்லூரிக்கு செல்லுதல், அதனையடுத்து மாஸ்டர் சிவலிங்கத்தை பார்ப்பது, ஊடகவியலாளர் சங்கீத் பணியாற்றும் ஊடகப்பள்ளிக்குச்செல்வது, கிழக்கு பல்கலைக்கழகம் மொழித்துறைத்தலைவர் - ஆய்வாளர் ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பது, அடுத்து எமது கல்வி நிதியத்தின் உதவியினால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டதாரியாகி தொழில் வாய்ப்பு பெற்றிருக்கும் பிரபாகரன் என்பவரையும், மற்றும் பேராசிரியர் செ. யோகராசாவையும் அழைத்துக்கொண்டு மதிய உணவுக்குச்செல்வது, அதனையடுத்து சுகவீனமுற்றிருக்கும் ஈழநாடு மூத்த பத்திரிகையாளர் 'கோபு' கோபாலரத்தினம் அவர்களிடம் சென்று சுகநலன் விசாரிப்பது, மட்டக்களப்பில் வதியும் சிறுவர் இலக்கிய எழுத்தாளரும் தமிழ்நாடு காமராஜர் பல்கலைக்கழகத்தின் இலங்கை பிரதிநிதியுமான நண்பர் ஓ. கே. குணநாதனை சந்திப்பது, மாலையில் மட்டக்களப்பு நூலக கேட்போர் கூடத்தில் நடக்கவிருக்கும் எதிர்மனசிங்கத்தின் நூல் வெளியீட்டில் கலந்துகொள்வது, அதனையடுத்து இரவு Hotel East Lagoon இல் நடைபெறவிருக்கும் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்திற்கு சமூகமளிப்பது, அதனை முடித்துக்கொண்டு, கன்னன் குடாவில் அன்று இரவு நடக்கும் கண்ணகி குளுர்த்தி கொண்டாட்டத்திற்கு செல்வது என்று நீண்ட ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரித்தோம்.

ஆச்சரியம் என்னவென்றால், இதில் குறிப்பிடப்பட்ட அத்தனை நிகழ்ச்சிகளிலும் சந்திப்புகளிலும் ஒரே நாளில் கலந்துகொண்டு நடு இரவு வீடு திரும்பினோம் என்பதுதான். ஆச்சரியம்தான்....!!! ஆனால், அதுதான் உண்மை. உண்மையைத்தவிர வேறில்லை பராபரமே...!!!! இவ்வாறு துரிதமாக நாம் இயங்குவதற்கு துணையாகவிருந்த நண்பர் கோபாலகிருஷ்ணனின் வாகனத்திற்குத்தான் எமது மனமார்ந்த நன்றியைத்தெரிவிக்கவேண்டும். அந்தக்கார் இல்லையென்றால் துரிதமாக நாம் குறிப்பிட்ட இடங்களுக்கெல்லாம் பயணித்திருக்க முடியாது.

கிழக்கு மாகாணத்தின் கலைப்பாரம்பரியத்திற்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. யாழ்நூல் தந்த சுவாமி விபுலாநந்தருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. இசை, கூத்து, கல்வி, நாடகம், இலக்கியம், இதழியல் உட்பட பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்தவர்கள் தோன்றிய மட்டக்களப்பில் நான் இந்தப்பயணத்தில் பார்க்கவிரும்பியவர்களும் அநேகம். தரிசிக்க விரும்பிய இடங்களும் அநேகம். கிடைத்துள்ள குறுகிய அவகாசத்தில் முடிந்தவரையில் விரும்பிய இடங்களுக்குச்சென்றேன். முதலில் கல்லடியில் அமைந்துள்ள சுவாமி விபுலாநந்தரின் சமாதியில் தரிசனம் செய்துகொண்டு அன்றைய பயணத்தை ஆரம்பிப்போம் என்று நண்பரிடம் சொன்னேன்.

" வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது" என்ற வரிகள் பொறித்திருந்த சுவாமிகளின் சமாதியை வணங்கிவிட்டு அருகிலிருந்த இசைக்கல்லூரியையும் எட்டிப்பார்த்தேன். மாணவர்கள் இசைப்பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

முன்னாள் அமைச்சர் செல்லையா இராசதுரையின் முன்முயற்சியால் அந்தக்கல்லூரி நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. அவர் தற்பொழுது பதவியில் இல்லாதிருந்தாலும், அவர் பெயர் சொல்வதற்காவது அந்த கலைக்கல்லூரி பணிகளை தொடர்வதையிட்டு அவரும் அங்கு பயனடையும் மாணவர்களும் பெருமை கொள்ளலாம்.

" பேராசிரியர் மெளனகுரு அவர்களையும் இன்றே பார்த்துவிட முடியுமா...? " என்று கோபாலகிருஷ்ணனிடம் கேட்டேன். " இன்று மாலை நீங்கள் அவரை மட்டக்களப்பு நூல்நிலைய கேட்போர் கூடத்தில் பார்க்கலாம்." என்றார் நண்பர்.

" எனக்கு மட்டக்களப்புக்கு வரும்போதெல்லாம் 1964 ஆம் ஆண்டளவில் நான் யாழ்ப்பாணத்தில் படித்த ஸ்ரான்லிக்கல்லூரிக்கு மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலிருந்து வருகை தந்து வள்ளி திருமணம் என்ற கூத்தை அரங்காற்றுகை செய்தவர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்" என்றேன்.

" கன்னங்கறுப்பி... சிவப்பி.... கறுத்தக்கொண்டைக்காரி அய்யா மாரே... அவள் காதிலே குண்டலம் கடுக்கணும் போடுவாள் அய்யாமாரே..." என்று நான் பாடத்தொடங்கினேன். சுமார் 53 வருடங்களுக்கு முன்னர் நான் யாழ்ப்பாணத்தில் கற்ற கல்லூரி மேடையில் அன்று கேட்டு ரசித்து உள்வாங்கிக்கொண்ட அந்தக்கூத்துப்பாடலை அதன்பின்னர் வேறு எங்கும் கேட்கவில்லை என்று சற்று ஏமாற்றத்துடன் நண்பரிடம் சொன்னேன்.

அதன்பின்னர் அந்தவகை கூத்துக்கள் பல்வேறு பரிமாணங்களை பெற்றுவிட்டதாகச்சொன்ன நண்பர், " நீங்கள் கூத்தை ரசிக்கவேண்டுமென்றால் சிறிது காலத்திற்காவது மட்டக்களப்பில் இருக்கவேண்டும்" என்றார்.

" புலம்பெயர்ந்த பின்னர் இழந்தது அதிகம்தான். அவுஸ்திரேலியாவில் அண்ணாவியார் 'பத்தண்ணா' இளைய பத்மநாதனால்தான் அங்கு கூத்துக்கலை உயிர்வாழ்கிறது. அவருக்குப்பின்னர்....?" என்று எனது ஏக்கத்தையும் நண்பரிடம் சொன்னேன்.

இங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் மற்றும் ஒரு முதிய கலைஞரிடம் செல்லவிருக்கிறோம் என்று சொன்னவாறு, மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் வீட்டுக்கு எந்த முன்னறிவிப்புமின்றி காரைச்செலுத்தினார் கோபாலகிருஷ்ணன். மட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாயில் 1933 இல் பிறந்திருக்கும் மாஸ்டர் சிவலிங்கத்திற்கு தற்பொழுது 84 வயது. எங்களைக்கண்டதும் உற்சாகமாகப் பேசத்தொடங்கிவிட்டார். நாம் அவரது வீட்டின் கேட்டில் தட்டிய ஓசைகேட்டு உறக்கத்திலிருந்த அவரே எழுந்து வந்து கேட்டைத்திறந்து அழைத்தார். கோபாலகிருஷ்ணனை உடனே அடையாளம் கண்டுகொண்டார். என்னை நான் அறிமுகப்படுத்தியதும் முகம் மலர்ந்து சிரித்தார். நீண்ட பெரிய இடைவெளியின் பின்னர் அவரைப்பார்க்கின்றேன். வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில் அவர் தினபதி சிந்தாமணியில் பணியிலிருந்தவர். எனது சிறிய பராயத்தில் எங்கள் ஊருக்கு வந்து பாரதி குறித்து வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை அவர் நடத்தியிருப்பதை நினைவுபடுத்தினேன். சிறுநீரக சிகிச்சைக்குட்பட்டிருக்கும் அவரது உடலில் முதுமைக்கான தளர்ச்சியிருந்தபோதிலும், எம்மைக்கண்டதும் அந்தத்தளர்ச்சி எங்கோ ஓடி மறைந்துவிட்டதை அவதானிக்க முடிந்தது. அயற்சியின்றி கலகலப்பாக பேசினார்.

ஏறக்குறைய அரைநூற்றாண்டு காலமாக சிறுவர்களுக்கு கதைசொல்லும் கலைஞராகத்திகழ்ந்தவர். கவிதை, நாடகம், சிறுவர் இலக்கியம், வில்லுப்பாட்டு, நகைச்சுவை உரைச்சித்திரம் முதலான துறைகளில் பிரகாசித்தவர். அதற்காக பல விருதுகளும் பெற்றவர். சென்னைக்கலைக்கல்லூரியில் கேலிச்சித்திர கலைத்துறையிலும் பயின்றிருப்பவர். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, பண்டிதமணி வீ. சீ. கந்தையா, கிருபானந்த வாரியார், செல்லையா இராசதுரை ஆகியோரிடத்திலும் கொழும்பு தமிழ்ச்சங்கம், மட்டக்களப்பு இந்து சமய அபிவிருத்திச்சங்கம் ஆகிய அமைப்புகளிடத்திலும் பட்டங்கள் பெற்றவர். இலங்கை கலாசார அமைச்சு, வடகிழக்கு மகாண அரசின் சாகித்திய விருது, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கிய தமிழியல் விருது என்பவற்றையும் பெற்றவர். இவரது ஆற்றல்களை நன்கு இனங்கண்டுகொண்ட புலவர் மணி, இவரை இலங்கை வானொலி கலையகத்திற்கு அழைத்துச்சென்று அங்கு சிறுவர் மலர் நிகழ்ச்சியை தயாரித்து வழங்கும் வானொலி மாமா சரவணமுத்துவிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

" சிறுவர்களுக்கு நேரில் கதை சொல்லமுடியும். ஆனால், வானொலி ஊடாக சிறுவர்களுக்கு எவ்வாறு கதை சொல்வீர்...?" என்று அந்த மாமா இவரிடம் கேட்டதும், அங்கிருந்த மாமாவின் பெரிய டயறியை கையில் எடுத்திருக்கிறார் சிவலிங்கம்.

" அதனை எதற்கு எடுக்கிறீர்....?" மாமா கேட்கிறார்.

" இதிலும் கதை இருக்கிறது" எனச்சொல்லிவிட்டு, டயறியை கையில் வைத்து விரல்களினால் அதில் வெவ்வேறு ஒலி எழும்வகையில் தட்டியிருக்கிறார்.

குதிரை வேகமாக ஓடுகிறது என்று சொல்லி டயறியில் தட்டி குதிரை ஓடும் ஓலியை எழுப்பியிருக்கிறார். பின்னர் இப்பொழுது குதிரை நடக்கிறது எனச்சொல்லி குதிரையின் மெதுவான நடையையும் அந்த டயறியிலேயே மெதுவாகத்தட்டித்தட்டி காண்பித்திருக்கிறார். குதிரையின் கதையையும் சொல்கிறார்.

பல வருடங்களுக்கு முன்னர் இலங்கை வானொலி கலையகத்தில் வானொலி மாமா இவருக்கு நடத்திய நேர்முகத்தேர்வில் தான் எவ்வாறு தெரிவுசெய்யப்பட்டேன் என்பதை இந்த கதைசொல்லிக்கலைஞர் அன்று நினைவு மறதியின்றி எம்முன்னே அபிநயத்துடன் ஒரு டயறியில் தட்டி குதிரை ஓடும், நடக்கும் ஒலியலைகளை எழுப்பி எம்மிருவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

தற்பொழுது ஜெயமோகன் தனது அபிமான வாசகர்களுக்காக மகா பாரதக்கதையை வெண்முரசு என்ற தலைப்பில் எழுதிவருவதுபோன்று, சில வருடங்களுக்கு முன்னர் மாஸ்டர் சிவலிங்கம், வீரகேசரி வாரவெளியீட்டின் சிறுவர் பகுதியில் மாணவர்களுக்காக மஹா பாரதக்கதையை 57 வாரங்கள் தொடர்ந்து எழுதியிருக்கிறார். அந்தத்தொடரை பின்னர் மாணவர்கள் விரும்பிப்படிக்கும் வகையில் தனி நூலாக அழகிய வண்ணப்படங்களுடனும் வெளியிட்டிருக்கிறார். இதுவரையில் இந்த நூல் மூன்று பதிப்புகளைக்கண்டுவிட்டது.

" தனித்துவத்துக் கொரு உருவம் மாஸ்டர். நல்ல
தங்குபுகழ்க்கொரு உருவம் மாஸ்டர். வல்ல
இனித்தகதைக் கொருஉருவம் மாஸ்டர். நீங்கா
எளிமைக்கும் பண்புக்கும் மாஸ்டர்.
நனிபுனைந்த கதைகளெலாம் நூல்களாக
நாம் கண்டு சுவைக்கின்ற நற்பேறுற்றோம்.
இனியென்ன, நீங்களும்தான் வாங்கி வாங்கி
இனித்தினித்துப் படிப்பதற்கும் இடையூறுண்டோ...? "

என்று இந்த நூலை வாழ்த்தி வரவேற்றுள்ளார் கவிஞர் திமிலைத்துமிலன். மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கதைசொல்லும் ஆற்றல் கைவரப்பெற்று விளங்கிய மாஸ்டர் சிவலிங்கம், அன்றைய தினம் என்னையும் கோபாலகிருஷ்ணனையும் தனது மனதிற்குள் குழந்தைகளாக உருவகித்துக்கொண்டே தனது வானொலி கலையக வாழ்க்கை மற்றும் பத்திரிகை உலக அனுபவங்களை சொல்லிக்கொண்டிருந்தார்.

(பயணங்கள் தொடரும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R