‘அநாமிகா’கற்றது கையளவு; கல்லாதது கடலளவு…. பழமொழி சரியா, தவறா – இந்தக் கேள்வி அவசியமா, அனாவசியமா – அவசியம் அனாவசியமெல்லாம் highly relative terms….. எனவே, இந்த ஆராய்ச்சிக்குள் இப்பொழுது நுழையவேண்டாம்….. பின், எப்பொழுது? எப்பொழுது இப்பொழுது….? இப்பொழுது எப்பொழுது…. இப்பொழுது இப்போது – எது ‘அதிக’ சரி….? எப்போது, எப்போதும்…. ஒரு ‘ம்’இல் எத்தனை அர்த்தமாற்றம்….

ஹா! நினைவுக்கு வந்துவிட்டது. ஒரு பிறவிகளிலான பல பிறவிகளாய் நீண்டுபோகும் வாழ்க்கையில் நாலாம் வயது நிகழ்வுகள் இந்த நாற்பத்திநாலாம் வயதின் நினைவில் மீண்டும் தட்டுப்படுவதேயில்லை என்றாலும் நேற்று முன் தினம் நடந்ததுகூட நினைவிலிருந்து நழுவப் பார்ப்பது உண்மையிலேயே கொடுமைதான். ‘கொடுமை’ என்ற வார்த்தையை விட ‘வன்முறை’ கூடுதல் சிறப்புவாய்ந்ததாக இருக்கக்கூடுமோ….. கூடலாம்…. ஆம் என்றால், எடைக்கல் எது? அளப்பவர் யார்? குறைவின், கூடுதலில் நிர்ணயகர்த்தா அல்லது அவர்களின் பன்மை யார் யார்….? சே, அங்கே நிர்ணயிக்கப்பட்டதுபோல், உண்மையிலேயே பேதையாக இருந்தால் ( மனதில் அடிக்கடி ஒரு ‘குதிரைவால்’ பின்னல் போட்ட குட்டிப்பெண் அரங்கேறியவாறு இருப்பதுண்டு என்றாலும்) அது நிச்சயம் ஒரு blessing in disguise ஆகத்தான் இருக்கும் என்று படுகிறது.

ஆனால், நான் பேதையில்லை என்னும்போது அதைப் பிறருக்குப் புரியவைக்கவேண்டியது என் பொறுப்பல்லவா? பொறுப்பாவது, பருப்பாவது – எல்லாம் வெறும் பேச்சு என்று யாராவது எடுத்துரைக்க, அந்த வார்த்தையையும் என்னுடைய களஞ்சியத்திலிருந்து வீசியெறிய வேண்டிவரலாம். வார்த்தைகளைத் தவிர வேறு சேமிப்பில்லாத நிலையில் அவற்றை அத்தனை அன்பும் அந்நியோன்யமுமாகப் பொத்திப் பொத்திப் பராமரித்துவந்து இன்று பறிகொடுக்கவேண்டிவந்தால் மனம் அநாதரவாய் உணரத்தானே செய்யும்…. நிராதரவுக்கும், அனாதரவுக்கும் நூலிழை வித்தியாசம் உண்டுதானே! ‘வின்ஸ்ல்ப்ப்’விடம் கேட்டால் ஒவ்வொன்றுக்கும் பத்துப் பத்து அர்த்தம் தரக்கூடும். (குழல் _ துளையுடைய பொருள், ஊதுகுழல், இசைப்பாட்டு, மயிர்க்குழற்சி, பெண்மயிர், உட்டுளை, யோனி). ஆனால், இத்தனை வருடங்களில் அவற்றின் நேரிடையான, ஒற்றை அர்த்தத்தை மட்டுமே தெரிந்துவைத்திருக்கிறோம் என்றிருக்கையில் அதை எடுத்துரைப்பதும் ‘வன்முறை’ என்றால், தெரிந்ததை விட்டுக்கொடுத்துவிடவேண்டியதுதானா? எல்லாவற்றிற்குமாய் துக்கம் தொண்டையை அடைத்தது.

‘அன்பு, அந்நியோன்யம், துக்கம்…. ஹா! பேதாய்! இந்த வார்த்தைகளின் பொதுவான அர்த்தத்திலேயே கூவம் எருமையாய் உழன்றுகொண்டிருக்கும் பெப்பேரிளம்பெண்ணே! இதோ, இப்பொழுதே உன் போக்கை மாற்றிக்கொள்…. இன்றேல், ‘பேதாய்’ என்ற விளியின் இடை உடைந்து நீ பேயாகிவிடவும் கூடும் – எங்கள் மடைதிறந்த கணிப்பில்…. ‘என்று நாலா பக்கங்களிலிருந்தும் நாலுவித தொனிகளில் அசரீரி கேட்டவண்ணமிருக்க, சற்று அச்சமாகத்தான் இருக்கிறது.

ஹா! இனி ‘அன்பு’க்கு பதில் ‘அம்பு’. அம்பு என்பது எல்லாவகையிலேயும் வன்முறைக்குக் குறியீடாகிவிடப் பொருத்தமாயிருப்பதில் சிறுவட்டத்திற்குள்ளான குறுவட்டத்திற்குள் இனி நான் இதம்பதமாய்ப் பொருந்திவிடுவேன்!

அந்தக் கூட்டத்திற்குப் போன பிறகுதான் ‘கற்றது கையளவு’…. என்ற பழமொழியின் முழு அர்த்தமும் புரிந்தாற்போலிருந்தது. என்னதான் இருந்தாலும் ‘நாற்பத்ஹ்டி நாலாவது’ வயதில் இப்படிச் சில அரிச்சுவடிகளைக் கற்கவேண்டி வந்ததில் சற்று கலக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால், கல்விக்குக் காலநேரம் உண்டா என்ன?

‘கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ – ஆக, நான் கசடறக் கற்றுக்கொண்டுவிட்டது உண்மையென்று காட்ட அதன்படி நடக்கவேண்டியது அடிப்படைத் தேவையாகிறது. துணிந்துவிட்டேன். என்னுடைய சொற்பேழையிலிருந்து இரண்டு  வார்த்தை முத்துக்களை – வேண்டாம், ‘முத்து’ என்பதும் much abused சொல்தான் – எனவே, இதை ‘வெத்து’ என்று மாற்றிச் சொன்னால் பாந்தமாயிருக்கும். ‘வெத்து’ என்பதில் ‘வெறுமை’ என்ற ஒரு எதிர்மறைப் பொருள் நேரிடையாகவும், கரந்தும் சுரப்பதால் இரண்டு ‘வார்த்தைவெத்துக’ளை உதறித் தள்ளிவிட ஏகமனதாய் தீர்மானித்துவிட்டேன். When you are in Rome, be a Roman….. ரோமனை ஓமன் ஆக்கினால்…. வேண்டாம், முதலில் நம் தமிழ். பிறகு மற்ற மொழிகளைப் பார்த்துக்கொள்ளலாம். முப்பது நாளில் கற்றுக்கொள்ளும் ப்ரெஞ்சு, ஜப்பானிய, மலையாள, துளு, கிரேக்க, லத்தீன் மொழிகளில் நம் பிரயத்தனமெதுவுமில்லாமலே அன்பு அம்பாகிவிடுவதும், அக்கறை சர்க்கரையாகிவிடுவதும் நடந்தேறிவிடும்தான். ஆனாலும், அக்கறைக்கு சர்க்கரை என்பதுதான்  சற்று உதைக்கிறது. சர்க்கரை இனிப்பான பொருள். இனிப்புக்கும், வன்முறைக்கும் தூரத்து உறவு இருக்க வழியுண்டுதான் என்றாலும்கூட, அக்கறைக்கு சர்க்கரை பதிலியாக வருவதில் அத்தனை இணக்கமில்லை. ரத்தக்கறை என்று போட முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அக்கறைக்கும், ரத்தக்கறைக்கும் இடையே ஒலிநயம் இடறுகிறது. நாணயத்திற்கு ஆணவத்தை பதிலியாக்கினால்… ஆனால், ‘ய’ வேறு, ‘வ’ வேறு… உண்மை – எல்லாமே, எந்நாளுமே வேறுவேறு தான்….. துக்கம் என்பதற்கு பதிலாய் இனி ‘கக்கம்’ என்று பழகினால்…. இல்லை, துக்கத்தின் விரிவு கக்கத்திற்குள் குறுகிவிடலாகாது….

ஹா! சிறுவட்டத்தின் குறுவட்டத்திற்குள் கச்சிதமாய் என்னைப் பொருத்திக்கொள்ளத்தான் எத்தனை முனைப்பு என்னிடம்…. ஆனால், இரு பத்து வருடங்களாக, ஆத்மார்த்தமாக சிறிய மூர்த்தியின் பெரிய கீர்த்தியைக் கண்டுணர்ந்து இந்த கிரகத்திற்குள்ளாகவே சுற்றிச் சுற்றி வந்து இப்பொழுது வெறும் இரண்டு வார்த்தைகளால் நான் விரட்டியடிக்கப் பட்டுவிடலாகுமா? கூடாது…. யுரேகா! ‘பொறுப்பு’ என்பதற்கு பதிலாய் இனி ‘வெறுப்பு’ என்று பிரயோகிப்பதுதான் சரி. பொறுப்பு என்பதை relative term என்று உரைப்பவர்கள் இருக்கலாம். ஆனால், வெறுப்பை அப்படி யாரும் துண்டமிட முடியாது! வீடளாவிய வெறுப்பு, ஊரளாவிய வெறுப்பு, நாடளாவிய வெறுப்பு, உலகளாவிய வெறுப்பு, பிரபஞ்சமளாவிய வெறுப்பு என்று அது பல்கிப் பெருகிக்கொண்டேதான் போகுமே தவிர, பின்னமாகாது!

’அன்பு’ ‘அம்பா’கி, ‘பொறுப்பு’ ‘வெறுப்பா’கிவிட்டதில் மனதிற்குள் ஒரு ஆசுவாசம் பரவுகிறது. இனி எனக்கு பாசத்திற்கும், நேசத்திற்கும் பஞ்சமில்லை. பரஸ்பரம் ஒருவர் மேலொருவர் கல்லெறிந்துகொண்டும், கண்களைத் தோண்டிவிட்டுக்கொண்டும் பரிவுறவாடிக்கொள்ளலாம்! புனர்ஜென்மமெடுத்துவிட்டேன் நான்! ‘பவர் பேர்ள்ஸ்’ சோப்புக்கட்டியால் என் மொழிப்பிரயோகத்திலான அழுக்குகளையும், கறைகளையும் அறவே களைந்துவிட்டேன்!

இனி, பரிவர்த்தனையில் என் புதுச் சொல்லைப் பழகவேண்டும்……

“அம்பே சிவம்” என்றேன்.

“அப்படியானால் நீ அப்துல் கலாமை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கலாம் என்கிறாயா?”

அகிம்சை இங்கே ஒரு செயல் உத்தியாக இருந்த சமயத்தில் ஆயுதத்தை நம்பிய கேப்டன் லஷ்மியின் ஆதரவாளர்கள், இன்று நாம் விரும்புகிறோமோ இல்லையோ போர் என்பது இன்றைய நடப்புண்மை என்பதை நினைத்துப் பார்க்க மறுப்பவர்களாய் கலாமை உலக பயங்கரவாதிகள் சங்கத் தலைவராக்கிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று எண்ணியபடி,

“அவர் ஒரு ‘வெறுப்பு’ வாய்ந்த மனிதர் தானே”, என்றேன்.

“பார்த்தாயா! நீயே சொல்கிறாய். பிறகு, அவரை ஜனாதிபதியாக்கலாம் என்கிறாயே”, என்று கொக்கரித்த, மொழிரீதியான அந்த ’வெறுப்பை’ ’பொறுப்பா’ய் புரிந்துகொள்ளாத பிற்போக்குவாதியைப் பரிதாபத்தோடு பார்த்து அங்கிருந்து அகன்றேன்.

அம்பும், வெறுப்பும் கூடிய உறக்கத்தில் உதித்த கனாவில் நான் ஒரு வனாந்திரத்தில் கிடக்க, என்னைச் சுற்றிலும் ‘வெத்து’ வார்த்தைகள் நத்தைகளாய் ஊர்ந்தவண்ணம். நான் இத்தனை காலம் ஊட்டச்சத்தாக என்னுள் பொத்திப்பொத்திப் பாதுகாத்துவந்த அந்த, இன்றைய நிலவரப்படியான ‘கெட்ட’ வார்த்தைகள் தத்தித் தடுமாறும் குழந்தைகளாய் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி, ‘குழந்தைகளை விற்ற கயவர்களை நோகாமல்,  எங்களை போகச் சொல்கிறாயே – இது நியாயமா?’ என்று கண்களால் குறுக்குவிசாரணை செய்தவாறு கடலுக்குள் நடந்திறங்கி முங்கி மறைகின்றன.

ஆஃப்கானிஸ்தானத்திலும் சரி, அந்த நூற்றிப்பத்து அடுக்குமாடிக் கட்டிடத்திலும் சரி, எண்ணிறந்த தனிநபர்களின் குருதி பெருக்கித் துடித்துக்கொண்டிருக்கும் இதயங்கள் சில அராஜக உள்ளங்கைகளால் முறுக்கிப் பிழியப்பட்டு வெறும் தசைப்பொதிகளாகத் தங்கள் அடையாளம் தொலைந்துபோக, மொழியழிந்து விக்கித்துப்போய் மௌனவோலத்தில் கரிந்துபோகின்றன.

தூக்கிவாரிப்போட விழித்துக்கொள்ளும்போது நல்ல, கெட்ட வார்த்தைகளெல்லாம் என்னை தீரத் தாக்குவதுபோல் ஒரு தீவிர வலியில் உள்ளும், புறமும் துவளும்.

‘மந்திரமாவது சொல்’ என்ற வரி மனதிற்குள் சுவாதீனமாய் நுழைந்துகொள்ளும்.

வீட்டில், என்னுடைய மொழிசார் பிரயத்தனங்கள் தொடர்பான சிந்துபாத் அலைச்சல்கள் தெரியாததாய் பாட்டி ‘நான் ஒட்டுபத்து இல்லாமல் எத்தனை பாராமுகமாய் இருக்கிறேன்’, என்று மூக்குறிஞ்சினார்கள்.

“சத்தியமா, நான் அப்படிக் கிடையாது பாட்டி. என் மனசுலேயும் அம்பு இருக்கு. எனக்கும் வெறுப்பு இருக்கு.”

“பின்னே, இல்லாமலா? அதுதான் எப்படா என் மேல எறியலாம்னு சமயம் பாத்துக்கிட்டிருக்கே. மனசுல ‘அம்பை’த் தூக்கிவச்சுக்கிட்டு திரிஞ்சிக்கிட்டிருக்கே! உங்கிட்டே ‘வெறுப்பை’த் தவிர வேற என்ன இருக்கு?”

அவசர கால புத்தம்புது மொழி வகுப்பு ஒன்று நான் நடத்தினாலென்ன? ’வின்ஸ்லோ’ தமிழ் அகராதியில் அல்லது ‘ராட்லரி’ல், அல்லது ‘சிதம்பரம் செட்டியார் அகராதியில் ஒரு சொல்லுக்குத் தரப்பட்டுள்ள பல்வேறு பொருள்கள் பரிச்சயப்படுத்தப்படுவதும், அதோடு நில்லாமல், ஒரு சொல்லை அதன் பல பொருள்களில்  எதுவொன்றிலும் உபயோகிக்கும் உரிமைக்குக் குரல் கொடுக்கும் ஓர் அமைப்பையும் உருவாக்கலாம். மனிதர்களுக்கு இடையேயான தொடர்புறவாடல் பாழாகிவிடலாம் என்று யாரேனும் கூறலாம். ‘அது இப்பொழுது மட்டும் என்ன வாழ்கிறது?’ என்று எதிர்க்கேள்வி கேட்டால் போயிற்று. ‘வாழ் – பாழ்; வாசம் – நாசம்’….. சே, இந்தக் கேடுகெட்ட மனம் ஏன் வார்த்தைப் பொருளின் புத்துயிர்ப்புப் பணியிலும் இத்தகைய ஒலிநயத்தை நாடுகிறது? எல்லாம் பழக்கதோஷம். மனைவி, துணைவிக்கிடையிலேயே துல்லிய வித்தியாசத்தைக் காண முடிந்தவர்களிடம் இனி ‘தோல்வி’ என்ற வார்த்தைக்குப் பொருள் வெற்றி என்பதாகவும், பின்னதன் பொருள் தோல்வி என்பதாகவும் _ ஐயோ, மறுபடியும் antonyms and synonymsக்கு இடையில் தஞ்சம் புகும் என்னைக் கண்டால் எனக்கே ‘பொறுப்பாக’ இருக்கிறது.  ஆனால், பொறுப்பு வெறுப்பானால் வெறுப்பு பொறுப்பாகிவிடும் என்று யார் வரையறுத்தார்கள்? வரையறுப்பதும் நானே – அதை மறுதலிப்பதும் நானே…. நான் என்றால் நீ. நீ என்றால் நான். ஐயோ, இது சினிமாக் கதாபாத்திரங்களின் அம்புபோல் இருக்கிறது. அட, இப்பொழுதுதான் அது எனக்கு உறைக்கிறது. அம்புக்குறி – மன்மத பாணம்! ஆக, அம்பு அன்புதான்! ஹா! குறைந்தபட்சம் இரண்டு கெட்ட வார்த்தைகளையாவது விட்டொழிக்கும் போக்கில்தான் எத்தனையெத்தனை ‘யுரேக்காக்கள்’ கொட்டிக்கிடக்கின்றன! அப்புறம், அது யார் கவிதை…? ‘உன்னை நான் பொருட்படுத்துவதால்தான் உன் மீது வெறுப்பு கொள்கிறேன்….’ பொருட்படுத்துவதால் என்பது ஒருவித பொறுப்பேற்பு. எனவே, வெறுப்பு பொறுப்புதான்!

இதேவேகத்தில் போனால் ஒருவேளை நான் புரட்சியாளராகப் பகுக்கப்பட்டு ஒளிந்துவாழவேண்டிவரலாம். அதற்காய் இப்பொழுதே ஒரு கட்டு வெள்ளைத்தாள் வாங்கி பத்திரப்படுத்திக்கொள்கிறேன். அடுத்த வருடம் இதே நேரத்தில் ஒரு புத்தம்புது ’மொழிப்பொருள் அகராதி’ தயாராகிவிடும்! அதற்கடுத்த வருடம் போதிய நிதிவசதி கிடைத்தால் ஒரு புத்தம்புது மொழிப்பொருள் பயன்பாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவிவிட முடியும்! இனியான நல்ல வார்த்தைகளைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டுமானால் அகராதியை துருவித் துழாவும் சிரமம் ஏற்படக்கூடும். ஆனால், கெட்ட வார்த்தைகளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்! இன்றைய நல்ல வார்த்தைகள் என்ற பிரிவில் அவைகளெல்லாமே அடங்கிவிடும்!

அந்த அகராதி, பல்கலைக்கழகம், அன்னபிறவற்றின் உந்துசக்தியாய் விளங்கும் அறக்கட்டளை ‘அம்பும் வெறுப்பும்’ என்ற பெயரில் இயங்கிவரும்.

எனக்கு ’நல்லது’, ’அல்லது’ பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொடுத்ததன் விளைவாய் என் ‘அம்பு’க்கு உரித்தானவர்களுக்கு என்றென்றும் ‘வெறுப்போ’டு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன் நான்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R