kamaladevi599.jpg - 16.73 Kbதிடீரென்று மருத்துவர் சுவா அவளை அழைத்தது ஆச்சரியமாக இருந்தது . வெளியிலென்றால் அவரது அப்பாயிண்ட்மெண்டுக்கு காத்திருக்கவேண்டும். ஆனால் இன்று அவர் வரும் நாள் என்றறிந்தும் இவள்  அலட்டிக் கொள்ளாமலிருந்ததற்குக் காரணமிருந்தது.  . இப்பொழுது புறப்பட்டால் தான் சுலமானைப் போய் பார்த்து சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்துவிட்டு, இவள் ஜோகூர் சுங்கச்சாவடிக்கு போய், அங்கிருந்து சிங்கப்பூருக்குப் போக சரியாக இருக்கும்.

மருத்துவர் சுவா இந்த திருமணத்துக்கு முழு ஆதரவு தரவில்லை. இது மருத்துவமனை அல்ல. காப்பகம் தான். என்றாலும்   இந்த வியாதிக்கு சட்டென்று ஒரு முடிவுக்கும் வர இயலாததற்கான காரணத்தை மருத்துவர் இவளுக்கு விளக்கியாயிற்று.அதற்கு இம்மியும் மாற்றுக் குறையாது சுமித்ரா, தன்னுடைய கருத்தின் நியாயம் பற்றி,  அதைவிட எதிர்பார்ப்போடு  விளக்கினாள்

“ சோ, திருமணம் இன்னும் ஒரு வாரத்திலா?  “ .மருத்துவரின் புன்னகை ஏனோ இவளுக்கு ரசிக்கவில்லை. ..கடந்த பத்தாண்டுகளாக   இந்த காப்பகத்துக்கு வரும் இவளுக்கும் மருத்துவர் சுவாவுக்கும் நல்ல நட்பு இருந்தது. ஆனால் இப்போது சில நாட்களாக அப்படியில்லை.

”வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள் ? அவள் மிகவும் தெளிவாக இருக்கிறாள்.இந்த சின்னஞ்சிறு உலகில் அவளையும் ஒருவன் நேசிக்கிறான் , நிச்சயம் அவர்கள் மகிழ்வாக வாழ்வார்கள், என்று  ஏன்  நம்பக்கூடாது??? ”

மீண்டும் அரை மணிநேர உரையாடலுக்குப் பிறகு வெளியே வந்தபோது, சுமித்ராவுக்குக் கவலையாக இருந்தது.

சிறுநீரில் நனைந்து , ஒருக்களித்துக் கிடந்த அந்த பெண்ணை பார்த்த முதல்நாள்  ஞாபகமிருக்கிறது. உட்கார், என்றால் உட்கார்ந்து, நில் என்றால் நிற்க அவள் தயாராக இருந்தாள். அப்படி உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. மின்னதிர்வு பெற்ற மறுநாள் கிட்டத்தட்ட எல்லா நோயாளிகளுமே அந்த நிலையில் தான் இருப்பார்கள். இவர்களா அப்படி கோபப்பட்டு, ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் ? என்று திகைக்க வைக்கும் அளவுக்கு மின்னதிர்வின் பாதிப்பு அவர்கள் உடல்மொழியில் இருக்கும்.

ராமாயியின்  கண்களிலிருந்து அப்படி கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. சொல்லத் தெரியாத வேதனையோடு அவள் அழுதாள். எழுப்பியபோது எழுந்தவளை ,அழைத்துப்போய் குளிக்கச் செய்தபோதும், பரிவோடு அவளிடம் பேசிய எதுவுமே அவளிடம் போய்ச் சேரவில்லை. விம்மாமல், விசும்பாமல், ,தன்னிச்சையாய் கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தது.. ஆனால் நினைத்து நினைத்து  உடம்பு மட்டும் அப்படி அதிர்ந்து கொண்டிருந்தது.

“இல்லக்கா! இல்லக்கா, இனிமே ,என்ன சொன்னாலும் கேக்கறேங்கா!. கரண்டு  மட்டும்  வேண்டாங்கா!  அக்கா! டாக்டர் கிட்ட சொல்லுக்கா!  ”

குழறிக் குழறி  கடைவாயிலிருந்து ஒழுகிய கூழ் எச்சிலோடு ராமாயி மன்றாடியது நெஞ்சைப் பிசைந்தது.

அதற்குள் பிறந்த மேனியாய் , நீண்ட அந்த குளியலறையில்,குளித்துக்கொண்டிருந்த, [குளிப்பதாய் பேர் பண்ணிக்கொண்டு,]   நின்று கொண்டிருந்த மற்ற பெண்களில் சிலர்,  கிட்டே வந்து கண்ணீர் விடும் ராமாயியை பார்க்கத்  தொடங்கினார்கள் .சிலருக்குச்சிரிப்பு, சிலருக்கு அலட்சியம், ஒருத்தி மட்டும் அருகே வந்து, ஏய், என்று ராமாயியை, தொட்டாள்.

மெல்ல அவளை எழுப்பி,  உடை அணியச்செய்து நிமிர்ந்தால், உடன் வந்த மிஸஸ் லிம் , இன்னும் எப்படி இவளுக்கு கவுன்சிலிங் செய்யப்போகிறாய் ? என்பது போல் பார்க்க. ,சமிக்ஞையாலேயே, அவரை போகச் சொல்ல வேண்டியிருந்தது. மிஸஸ் லிம் மற்றவர்களுடன் பேசப் போனபிறகு, சுமி, கொண்டுபோன உணவை எடுத்து தட்டில் வைத்து கொடுத்தபோது, ஒரு தாவரமாய் தான் அதை உண்டாள்.

பின் படுத்துக் கொண்டாள்.மருந்து வேகத்தில் சட்டென்று தூங்கியும் போனாள்.

ஒரு வாரமெடுத்தது அவள் இயல்பாக,. ராமாயியின் கதை சோகமானது. ராமாயி  படித்தவள். ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது,திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும்  உண்டு என்பதையே சொல்லாமல் மறைத்து வைத்து, அவளைக் காதலித்த கிறிஸ்டபரிடம் உடலும் உள்ளமும் பறி கொடுத்தவள். விஷயம் தெரிந்து  கல்லூரிக்கே வந்து ,அவளை  கெட்ட வார்த்தைகளால் ,நார் நாறாய்க் கிழித்த  கிறிஸ்டபரின் மனைவியால் அவமானத்தில் சுருண்டு ,வீட்டுக்கு வந்தால், இரண்டு அண்ணன் மார்களும் அடித்து துவைத்து,எடுத்ததில் நினைவு தவறிவிட்டது.ஆனால் நினைவு திரும்பியபோது அவளது மூன்றுமாத கர்ப்பம் செந்நீராய் வழிந்தோடிய வலியில் மீண்டும்  நினைவு போய்விட்டது.

ஒரு மாதத்துக்குப் பிறகு  ஒரு மூட்டையாய் தான் அவளை இங்கு கொண்டு வந்து சேர்த்தார்கள், வந்த மூன்று வாரமும் பேச்சு, பேச்சு, ஓயாத பேச்சு தான்.அதுவும் எப்படி? செந்தமிழ்த் தேன்மொழியில்.  அவளது மொழி அழகு கேட்டு நின்ற சுமிக்கு முதலில் வியப்பாக இருந்தது..இவளுக்கா மன நோய்?

சீன, மலாய்த் தாதிகளுக்கு இந்த சுந்தரத்தமிழ் புரியாது என்றாலும், அவர்களுக்கு இதென்ன புதுசா? ஒவ்வொருத்தியின் பிரச்சினையும் அவர்களுக்கு கரதலப்பாடம்.

மனநலம் கெடல் என்பதற்கு இலக்கணம் வழுவாது  நிகண்டுவில் கூட விளக்கியுள்ளதாக வரலாறு இல்லை.

”நெகிழ நெகிழ புடவையும்  தளரத்தளர கூந்தலுமாய் , மகிழ மகிழ உன்னை ---- என்றெல்லாம் என்னை அனுபவித்தாயே? ஆனால் தொங்கத் தொங்க தாலி மட்டும் ஏன் தரவில்லை?  ஏண்டா தரவில்லை?

”காலா , உனை நான் சிறு புல்லென நினைக்கின்றேன், அடக் காலா ! வாடா ! என் காலருகே வாடா?, உனை நான் புழுவாக மிதிக்கிறேன்”

- அதற்கு மேல் அவள் புழங்கிய சொலவடையை   இங்கு எழுத இலக்கிய தர்மம் எனை அனுமதிக்கவில்லை.

பேசிப்பேசியே , திடீரென்று  உக்கிரமாவாள்.ஒரு நாள் அப்படித்தான் ஆமோய் இவள் மோனம் அறியாது அருகே பேச வர அப்படியே பேய் மாதிரி அவளை அறைந்தாள்.ஆமோய் மட்டும் என்ன ரிஷிபத்தினியா?

திருப்பி விட்டாளே ஒரு அறை, ! ஏய், என்று கட்டிப் புரண்டு இருவரும் தாக்கியதில் கடுமையான ரத்தக் களறி. பிறகு பூட்டிய அறையில் கொஞ்ச காலத்துக்கு, அதற்குப் பிறகும் உக்கிரம் குறையாது போகவே, மின்னதிர்வுக்குப் போயே ஆக வேண்டிய நிலை.அந்த துர்ப்பலமான  நிலையில் தான் சுமி இவளை சந்தித்தாள்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக  இங்கு வரும் சுமிக்கு இந்த பெண்களின்  நிலை ஓரளவுக்குத் தெரியும்.

மனநல மருத்துவமனையில் கொண்டு விட்ட பிறகு, முதலில் சில மாதங்களுக்கொரு முறை குடும்பத்திலிருந்து யாராவது பார்க்க வருவார்கள். பிறகு மெல்ல மெல்ல அது தேய்ந்து சட்டென்று ஒரு கட்டத்தில் நின்றே விடும். அதனாலேயே சுமி அவர்களை  நேசித்தாள். நீங்கள் யாருமற்ற அனாதையல்ல என்று  உணர்த்தவே அவர்களை அடிக்கடி சந்தித்தாள். எப்படி? எல்லா விதத்திலும் --????ஆனால்  மனிதாபிமானத்தின் -அடிப்படையில் மட்டுமே ,  நெஞ்சமெலாம் பாகாய் உருக , உக்கி உக்கி அவள் சொட்டும் ஈரத்தை வார்த்தைகளால் எழுதி கொச்சைப்படுத்த விரும்பவில்லை.  என்றாலும் சிங்கப்பூர் அக்கா”, சொன்னால் அவர்கள் கேட்டார்கள்.அவர்களுக்குக் கொண்டுபோகும் முறுக்கு, அடை, கோரெங் பீசாங், ஏப்போ ஏப்போ,வை அங்கு வேலை செய்யும் தாதிகளும் கூட கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்கள்  .மாதந்தோறும் பிரியாணி சாப்பாடு மட்டும் சுலைமான் கடையில் சொல்லி ஏற்பாடு செய்து கொண்டாள். காப்பகம் வரை கொண்டுவிடும் வண்டியோட்டிகளே சாப்பாட்டுப் பானைகளை சுமந்து கொண்டு வந்து தந்து விட்டுப் போனார்கள்.

“கோழிக்கறியும் பிரியாணி சோறும் நல்லாத்தான் இருக்கு.! ஆனா நானாஸுக்குப் பதிலா, மாங்கா இருந்தா நல்லா இருக்கும்கா  ! என்று எலிசபத் குறைப் பட்டுக் கொண்டாள். பார்த்துப் பார்த்து அவர்களைத் திருப்திப் படுத்துவதே மிகப்பெரும் பொறுப்பாக மாறிப் போனது. அதனாலேயே சுமித்ராவுக்கு செலவும் அதிகமாயிற்று. அவளது நற்பேறு கணவர் வாய் நிறைய அவளைத் திட்டுவதோடு நிறுத்திக்கொண்டார்.

வெளியே வெயில் உக்கிரமாக பொரிந்துகொண்டிருந்தது  .

“நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்ன வென்று தெரியுமா “”

 

“ கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு என்னுடைய முத்தம்  என்ன வென்று தெரியுமா? ”

 

வசந்தியும், ரத்தினமாலாவும் உணர்ச்சிகரமாகப் பாடிக்கொண்டிருந்தார்கள். பத்தீமாவும் , ரொஸ்மியும் மலாய் மொழியில் பாடிக்கொண்டிருந்தார்கள். முத்துவையும் கண்ணில் படும் போதெல்லாம், ”மாமா! மாமா ! எப்ப ட்ரீட்டு, ” என்று பாடுவதை அவர்கள் நிறுத்தவில்லை.அதற்காக முத்து ஒன்றும் வெட்கப்படவில்லை, புல்  வெட்டிக்கொண்டே விரும்பி அவர்கள் பாடலை ரசித்துக் கொண்டிருந்தான்.

எல்லோருமே அவரவர்  மொழியில் சுகமாக கானமழை பொழிந்து கொண்டிருக்க, மதில் உயரம் பரிவோடு உள்ளே நுழைந்த சுமியைக்கண்டதும் ஸ்விட்ச் போட்டாற் போல் ,  பாடல் மழை நின்று விட்டது, அத்தனைபேருமே ஓடிவந்து அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். கொண்டு சென்ற உணவைப் பங்கீடு செய்து முடித்ததும் பலரும் சென்று படுத்துக்கொண்டார்கள்.

சுந்தரவதனி மட்டும் அருகே வந்து அமர்ந்து கொண்டாள். ஆம், இனி அவளை சுந்தர வதனி என்றே சொல்லலாம் . என்று புல் வெட்டும் முத்து அவளுக்கு அறிமுகமானானோ, அன்றே ராமாயி தன்னுடைய பெயரை “சுந்தர வதனி “ என்று மாற்றிக் கொண்டாள்.

” ராமாயிங்கறதெல்லாம் ஒரு  பேராக்கா, படிப்பறிவில்லாத முண்டங்க பேரு வச்சிருக்கு பாருங்க” என்று சலித்துக் கொள்வாள்.மருத்துவரும் தாதிகளும் தவிர்த்து, வேறு யாருமே அவளை ராமாயி என்றழைக்கக் கூடாது, என்று கறாராக சொல்லி விட்டாள்.

.சுந்தர வதனியின் முகம்  பளபளப்பில் மினுங்கியது. ஃபேர் அண்ட் லவ்லியும், கடலைமாவில் பாலும் அடித்து தேய்த்து தேய்த்து கழுவுவதே வேலையாயிருந்ததில் முகம் சும்மா ஜம்மென்றிருந்தது.

”அக்கா! கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்கு.அத்தான் எனக்கு ஒரு தோடு வாங்கி வச்சிருக்காரு ! நேத்து கொண்டு வந்து காட்டினாரு, ”

திருமணம்தான் இங்குள்ளவர்களின் பெருங்கனவு.திருமண ஏக்கமே பாதி வியாதிக்கு காரணமாயிருந்தது.

”முத்துவைப் பாத்துட்டு தான் வறேன், ஒழுங்கா எக்சசைஸ் எல்லாம் செய்யிறியா?, “

”ரெண்டு கிலோ எளச்சிருக்கேனே , பாத்தா தெரியலையாக்கா?” என்றவள் மீண்டும் அத்தானின் செய்திகளில் இறங்கினாள்.தினமும் பொத்தான் கட்டும் வேலைக்கும், கைவேலை செய்யும் வகுப்புக்கும் போகிற நேரத்தில் தான் முத்துவுக்கும் சுந்தரவதனிக்கும் காதல் மலர்ந்திருக்கிறது. எல்லாமே அந்த வளாகத்துக்குள் தான்.அதைவிட்டு வெளியே போக முடியாது.அப்படியே தப்பித்து ஓடிப் போனாலும்   கவலைப்பட யாரிருக்கிறார்கள் ?.

சில மாதங்களுக்குப் பிறகு பிச்சையெடுத்துக்கொண்டிருந்த நிலையில், அல்லது இன்னும் சீரழிந்த நிலையில்,தெருவில் அலையும்போது,  காவலர்கள் கண்ணில் பட்டால்,  திரும்பவும் இங்கேயே கொண்டு வந்து  சேர்த்து விட்டுப் போவார்கள்.,மீண்டும் இந்த அனாமத்துப் பேதைகளின் போக்கிடம் இங்கு தான், .இங்கு மட்டுமே.

முத்துவுக்கும் சொல்லிக் கொள்ளும்படியாக குடும்ப பிண்னனி இல்லை. ஏதோ அனாதை விடுதியில்  வளர்ந்தவன். அங்குள்ள கட்டுப்பாடு பிடிக்காமல் வெளியே ஓடிவந்து, திருடி, சூதாடி ,  சிறைக்குச்சென்று,, மீண்டு, பின் , எங்குமே வேலை கிடைக்காமல் , இறுதியாக  இங்கு வந்து சேர்ந்தவன்.

என்று இவர்கள் காதலிக்கத்தொடங்கினார்களோ, அன்று தொடங்கியது தலைவலி.திடீர் திடீரென்று முத்துவும் சுந்தரவதனியும் காணாமல் போனார்கள். காப்பகத்தின் மூலையில் உள்ள கற்றாழைச் செடியருகே நின்று மெய்மறந்திருப்பதும், முத்து ஓய்வெடுக்க உள்ள சின்ன ஸ்டோர் ரூமில் இருவரும் பிடிபடுவதும்,அதனால்  காட்டமாய் தாதிகளின் வாயிலிருந்து விழும் திட்டுக்களால் முத்துவுக்கு  பெரிசாக வருத்தம் ஏதுமில்லை.ஆனால் சுந்தரவதனி தான் நொறுங்கிப்போனாள்  .பொடிந்துபோன கனவுச் சிதைவுகளின் ஏக்கத்தில் அவளுக்கு மூச்சு முட்டியது.

சுமித்ராவிடம் வாய் விட்டழுதாள். ”எனக்கு அத்தானைப் பிரிஞ்சு இருக்கமுடியாது.எங்களுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுடுக்கா! “

போராடித்தான் இந்த திருமணத்துக்கு அனுமதி வாங்க வேண்டியிருந்தது. பல காரணங்களை மருத்துவர்  எடுத்தியமபினாலும், என் செய ?

எப்படியோ திருமணம் முடிவாகிவிட்டது. இன்னும் நாலே நாளில் கல்யாணம்.காப்பகம் சுந்தரவதனியின் சங்கத்தமிழில் விதிர்விதித்துப் போயிருந்தது,

“நாளை வதுவை மணமென்று நாளிட்டுப் பந்தலிட்டு, கோளரி மாதவன், முத்து என்பவர் கைத்தலம் பற்றகனாக்கண்டேன் தோழி ? என்று பாடிக்கொண்டே ஆடினாள்.

அடுத்து சினிமாப்பாடல் ?உன் சமையலறையில் நான் உப்பா, சர்க்கரையா?”அடுத்த வரியும் அவளே பாடினாள். திடீரென்று ”அன்பே அன்பே கொல்லாதே! என்று தொடங்கியபோது,பலரும் சேர்ந்து பாடினார்கள்

சுமி திருமணச்செலவுக்கும், நானூறு பேருக்கு பிரியாணி சாப்பாட்டுக்கும் ,  நகைவாங்கவுமாக, அலைந்து கொண்டிருந்தாள்.வழக்கமாக மாதந்தோறும் இவள் காப்பகத்துக்கு கொண்டு செல்ல சமைத்துத் தரும் சுலைமானிடம் முன்பணம் கட்டி,  தங்கம் விற்கும் விலையில், நகைக்கடைக்குச்சென்று ,குண்டு, மாங்காய்,   தாலிப்பொட்டுக்கும், என   பணம் கட்டி விட்டு காப்பகம் வந்தால்,ஆவலோடு ஓடி வந்த சுந்தரவதனி வெட்கத்தில் சிலிர்த்து, “ அக்கா, முதலிரவுக்கு, மறக்காம , "-என்றபோது, சட்டென்று கோபம் வந்தது.  ! அவளது பொறுமை பறி போயிற்று !

”என்ன இது , உனக்கு வேஎற வேலையே இல்லையா? சதா முதலிரவுப் பேச்சு தானா? ஆனால் குண்டூசியால் குத்தினாலும்,  காண்டீபமே கொண்டு அடித்தாலும் ,எந்த நிந்தாஸ்துதியும், அவளை அசைக்கவில்லை, .சுந்தரவதனி அப்படி சொக்கிப் போய்க் கிடந்தாள்.

“நிறைய மல்லிப்பூவும், மொட்டு ரோஜாக்களுமா கட்டிலை அலங்காரம் செஞ்சுடச் சொல்லுங்கக்கா !”

கனவில் மிதந்து கொண்டிருந்தவளை சுமித்ரா கடந்து சென்றாள். கையிலிருந்த பணமெல்லாம் வெங்காயம் உரித்ததுபோல் காலியாகிவிட்டது. இனி கணவரிடம் கேட்பதை நினைக்கவே பகீரென்றிருந்தது.

மருத்துவர் சுவா முத்துவுக்கும் ,சுமித்ரா சுந்தரவதனிக்கும் ,மாலை எடுத்துக்கொடுக்க முடிவாயிற்று. அந்தப்பெண்களின் ஆரவாரமும் பூரிப்பும் பார்த்தபிறகே அவர் சம்மதித்தாரா, என்று தெரியவில்லை.? .

தாதி கிரேசின் காமிராவில் அவர்களை நிழற்படம் எடுக்க ஏற்பாடாகிவிட்டது

மறுநாள் அதிகாலையிலேயே பிரும்ம முகூர்த்தத்தில் மிஸஸ் .லிம்முடன் புறப்பட்டு, ஜோகூர் போய் சேர்ந்து, அங்கிருந்து முக்கால் மணிநேரம் டேக்சியில் பயணித்து,காப்பகம் போய்ச் சேர்ந்தபோது, இன்னும் இருள் பிரியவில்லை.

விடு விடு வென்று காப்பகத்தினுள் நுழைந்து ,அவர்களுக்காக ஒதுக்கியிருந்த சின்ன அறைக்கு முன் போய் நின்றாள் சுமித்ரா. முத்து ஸ்டோர் ரூமிலேயே தான் இருந்தான்.சுந்தரவதனி மட்டும் முதல் நாளே அந்த அறைக்குள் போய் படுத்துக்கொள்ள ஆசைப்பட்டதால்,அவளோடு பாத்தீமாவையும் துணைக்கு போய் படுத்துக் கொள்ள ஏற்பாடாகி இருந்தது.

ஆனால் உள்ளே நுழையும் போதே பாத்தீமா தான் எதிர்பட்டாள்.

“ என்னை கொஞ்ச நேரத்திலேயே வெளியே போகச்சொல்லி விட்டாள்,” என்றபோது சிரிப்பு வந்தது. இன்று அவர்கள் முதலிரவு அல்லவா? அந்த அறையில் பாத்தீமா போய் துணைக்கு படுத்தது பிடிக்கவில்லை போலும்.!

அடுத்த பத்தாவது நிமிடம் காப்பகமே அல்லோலகல்லோலப்பட்டது.

எப்படி  தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.சுமித்ரா கிடுகிடுத்துப்போய் நிற்க, செக்யூரிட்டி,கதவை உடைத்துத்தான்  திறக்க வேண்டியிருந்தது. அடுத்தகணம் அமிலக்கட்டி உடைந்த   வலியில், ”நோ, ! நோ, என வீறிட்டலறிய சுமித்ராவின் சர்வாங்கமும் நடுங்கியது...அப்படியே தரையில் சரிந்து கதறியவளை மருத்துவர் சுவா தான் பற்றித் தூக்கினார்.

“அதீத துக்கம் மட்டுமல்ல, அதீத மகிழ்ச்சியும் கூட ஆபத்தே , இப்பொழுது புரிகிறதா?“

தாங்கவே மாட்டாது  நெஞ்சுடைய சுமி அழுதாள்.

குழந்தையைப்போல் காலைச்சுருட்டி மடக்கிக்கொண்டு கை நிறைய கல்யாண வளையல்களும் , தலை நிறைய பூவும் ,கண்களில் அழுத்தமான மையுமாய், மோகனப்புன்னகையோடு ,கற்பனையிலேயே முதலிரவு கொண்டாடிய உச்சசுகத்தில், இவர்களைப் பார்த்து சிரித்த சுந்தரவதனியின் உடம்பில் பொட்டுத் துணியில்லை. பிறந்த மேனியாய் உதட்டில் உறைந்து நின்ற வெட்கத்திலிருந்து அவள் மீளவேயில்லை.

ஆனால் அந்த நிர்வாணம் காணச்சகிக்காமல், முத்து தான் ஓடிச்சென்று போர்வையால் அவளை மூடினான்.

சுந்தரா , சுந்தரா, என்று விசித்து விசித்து அழுத முத்துவை  யாராலுமே தேற்ற முடிய வில்லை.

வெளியே பொழுது பொலபொல வென்று விடிந்து கொண்டிருந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R