காதலன் - 4

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -நாகரத்தினம் கிருஷ்ணாஎனது இளைய சகோதரன் 1942ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்திருந்தான். 1932ம் ஆண்டிலிருந்து 1949ம் ஆண்டுவரை சைகோனில் இருப்பதென்பது பெண்மணியின் திட்டம். இளைய சகோதரின் இறப்பு அவள் வாழ்க்கையை முடக்கிவிட்டது. அவள் வார்த்தையில் சொல்வதென்றால், 'வீடு, வீட்டை விட்டால் இளைய சகோதரனின் கல்லறை,' முடிந்தது. பிறகு ஒருவழியாக பிரான்சுக்குத் திரும்பினாள். நாங்கள் இருவரும் திரும்பவும் சந்தித்தபோது என் மகனுக்கு இரண்டுவயது. இச்சந்திப்பு கூட காலம் கடந்ததே. அவளது மூத்த மகனைத் தவிர்த்து, எங்களை இணைக்க வேறு விஷயங்கள் இல்லை என்பதால், எங்கள் சந்திப்பு அர்த்தமற்றது என்பதைப் பார்த்த்வுடனேயே புரிந்துகொண்டோம். 'லுவார்-எ-ஷேர்'(Loire-et-Cher) என்ற இடத்தில் பதினான்காம் லூயிகாலத்து அரண்மனை மாதிரியான ஓர் இடத்தைப் பிடித்து தன் வாழ்நாளின் எஞ்சிய நாட்களை அங்கே கழிப்பதென்று, வேலைக்காரி 'தோ'வுடன் குடியேறினாள். .அங்கும் இரவென்றால் அவளுக்குப் பயம், வேட்டைக்கான துப்பாக்கியொன்றை விலைகொடுத்துவாங்கி பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டாள். மேல்மாடியிலிருந்த மச்சுகளில் 'தோ' காவல் இருந்தாள். தனது மூத்த மகனுக்கு ஆம்புவாஸ்(Amboise) அருகே சொத்தொன்று வாங்கினாள். அங்கு சுற்றிலும் ஏறாளமாய் மரங்கள். ஆட்களை ஏற்பாடுசெய்து மரங்கள் முழுவதையும் வெட்டிச் சாய்த்தான். பாரீஸில் இருந்த பக்காரா சூதாட்டவிடுதிக்குச் சென்றான். ஒர் இரவிலேயே மரத்தை விற்றுச் சம்பாதித்த பணம் அத்தனையும் தொலைந்தது. கணத்தில் நினைவுகள் வேறுதிசைக்கு பயணிக்க, எனது விழிகள் கண்ணீரில் மிதக்கின்றன, அக்கண்ணீருக்கு மூலம் எனது சகோதரனாக இருக்கலாம். மரங்களையும், அதற்குண்டான பணத்தினையும் இழந்தபிறகு நடந்த சம்பவம் நினைவில் இருக்கிறது. 'மோன் பர்னாஸில்'(Montparnasse) லா கூப்போல்(La Coupole)1 எதிரே, மோட்டார் வாகனத்திற்குள் அவன் படுத்துக்கிடந்தாய் நினைவு. அதுத் தொடர்பாக வேறு எதையும் நினைவுபடுத்த இயலவில்லை. பணத்தை எப்படிச் சம்பாதிப்பது என்பதை அறிந்திராத ஐம்பது வயது குழந்தையான மூத்தமகனுக்கென்று, அவ்வளவு பெரிய கோட்டையை வைத்துக்கொண்டு அவள் செய்த காரியங்கள் கற்பனைக்கு எட்டாதது. கோழிக்குஞ்சுகள் பொறிக்கவென்று எந்திரங்கள் வாங்கினாள், கீழே இருந்த பெருங்கூடமொன்றில் அவற்றைப் பொருத்தினாள். திடுமென்று, அருநூறு குஞ்சுகள், நாற்பது மீட்டர் பரப்பளவுகெண்ட கூடம் கோழிக்குஞ்சுகளால் நிறைந்தன. எந்திரத்தின் வெப்ப அளவை எவ்வாறு கையாளுவது என்பதை அறியாததால் குஞ்சுகளின் அலகுகள் பொருத்தமின்றி இருந்தன, அவைகளை மூட இயலாலாமல் குஞ்சுகள் தவித்தன, பசியில் வாடின. கோழிக்குஞ்சுகள் பொறிக்க இருந்த நிலையில் கோட்டைக்குச் சென்ற ஞாபகம், அதன்பிறகு செத்துக்கிடந்த குஞ்சுகளும், அவற்றுக்கான தீனியும், கெட்டு துர்நாற்றமெடுத்தபோது அங்கு மறுபடியும்போயிருக்கிறேன், வாந்தி எடுக்காமல் அப்பொழுது சாப்பிட்டதில்லை.

இறுதிக்காலத்தில், குளிர் கடுமையாக, உரைபனி நிலையை எட்டும் சமயங்களில், கீழ்த்தளத்திலிருந்த அவளது பெரிய அறையில், அவளது பிள்ளைகளெனச் செல்லமாகச் சொல்லிக்கொண்ட நான்கு அல்லது ஆறு ஆடுகளோடு எப்போதும் நித்திரைகொள்வாள், தோ'வுக்கும் அச் செல்லப்பிள்ளைகளுக்கும் இடையில் ஒருநாள் அவள் 'செத்துக் கிடந்ததும் நினைவில் இருக்கிறது.

அங்கே இங்கேயென்று அலைவதை விடுத்து ஓரிடமாக, அதாவது எங்கள் குடும்பப் பிரச்சினைகளை எல்லாம் முடித்துவிட்டு அக்கடாவென்று கடைசியாகத் தங்கப்போன லுவார் பிரதேசத்து இருப்பிடத்தில்தான் அவளுடைய பைத்தியக்காரத் தனமான நடவடிக்கைகளை முதன் முதலாக கொஞ்சம் அதிகப்படியாக புரிந்துகொள்ள முடிந்தது. நான் சொல்வதை உறுதிபடுத்துவதுபோல என் கண்முன்னே பைத்தியம் பிடித்தவள்போல என் அம்மா. 'தோ'வும், சகோதரனும், அவளது பேய்க்குணங்களுக்குப் பழகியிருந்தார்கள். ஆனால் நான், அவளை அப்படியான நிலையில் அதற்குமுன்பு கண்டதில்லை. ஆனால் அவள் மன உளைச்சலுடன் இருந்திருக்கிறாள் என்பது உண்மை, சொல்லப்போனால் அது அவளுடைய இரத்தத்தில் கலந்திருந்தது, இடையில் பீடித்த நோய் என்று சொல்லிவிட முடியாது, பிறவி குணம். அவளது ஆரோக்கியமே அதில்தான் என்றாயிற்று, துணைக்கு 'தோ'வும், மூத்த மகனும். அவர்கள் அன்றி வேறொருவர் அவளைப் புரிந்துகொண்டதில்லை. எந்நேரமும் சிநேகிதர்கள் சூழ இருப்பாள், அவர்கள் நீண்டகால நண்பர்கள், நித்தம் நித்தம் இணைந்துகொள்கிற புதியவர்களுக்கும் குறைவில்லை, பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பார்கள், தொடக்கத்தில் அவர்கள் ஆரம்பச் சுகாதார நிலையங்களோடு சம்பந்தப்பட்டவர்களாக இருந்தனர், பிறகு தூரன்(Touraine)பக்கமிருந்தும் நண்பர்கள் கிடைத்தார்கள், அவர்களில் பலர் காலணி நாடுகளிலிருந்து பணிஓய்வு பெற்றுத் திரும்பியவர்களாக இருப்பார்கள். அவளைச்சுற்றி எப்போதும் மனிதர்கள் இருக்கும்படி பார்த்துக்கொண்டாள், அவர்களுக்கு வயது வரம்பென்று எதுவுமில்லை. சாதுர்யமானவளாக அவள் இருக்கிறாள் என அதற்குக் காரணம் சொன்னார்கள், இயல்பாகவே அவளிடம் ஒட்டிக்கிடத்த உற்சாகத்தின் விளைவாக மிகுந்த சுறுசுறுப்புடன் இருந்தாள்.

ஹனாய் வீட்டுக்கூடத்தில் எடுத்த நிழற்படத்தில், விரக்தியுடன் அவள் இருப்பதை படம் பிடித்தது யாரென்று நினைவில் இல்லை. ஒரு வேளை எனது தந்தை எடுத்த கடைசி படமோ? அந்த நேரம் ஒரு சில மாதங்களில், உடல்நிலைகாரணமாக அவர் பிரான்சுக்குத் திரும்ப அனுப்பப் படவிருந்தார், இதற்கிடையில் ப்னோம்- •பென்(Pnom-Penh) நகரத்திற்கு, புதிய பணியொன்றிர்க்கு நியமனம் செய்யப்பட இரண்டு மூன்று வாரங்கள் அங்கே தங்கவும் வேண்டியிருக்கிறது. பிரான்சுக்குத் திரும்பிய ஒருவருடத்திற்குள் இறந்து போகிறார். அவருடன் திரும்புவதற்கு அம்மா மறுத்து விடுவாள், இருந்த இடத்திலிருந்து வேறெங்கும் போகக்கூடாது என்றிருந்தாள். அங்கேயே தங்கிவிடுகிறாள். 'போனம்-•பென்'னில் பலரும் வியந்த எங்கள் வீட்டிலிருந்துப் பார்த்தால், மீகாங் நதிக்கரையில், ஏக்கர் கணக்கில் அமைந்து பார்ப்பவரை அச்சுறுத்திய- அம்மாவுக்கும் பயமிருந்தது- பூங்காவுக்கிடையே கம்போடிய நாட்டு மன்னருக்குச் சொந்தமான பழைய அரண்மனை தெரியும். குறிப்பாக இரவு வேளைகளில் அப்பூங்கா மிகவும் பயமுறுத்தும். நாங்கள் நால்வரும் ஒரே கட்டிலில் படுப்பது வழக்கம். எங்களிடத்தில், இரவென்றால் தனக்குப் பயம் என்பாள். அப்பா இறந்துபோன சேதி அவளுக்குத் தெரியவந்ததும் அந்த வீட்டிலிருந்தபோதுதான். அன்றையதினம் நள்ளிரவு, ஒரு பறவை அசாதரணமாக குரலெழுப்பி அப்பா பணிபுரிந்த அரண்மணையின் வடபகுதி அலுவலக திசைக்காய் மறைந்ததை பார்த்திருக்கிறாள். மறுநாள் காலையில் தந்தை இறந்ததாக தந்தி வருகிறது. அதுபோலவே அப்பா இறப்பதற்கு ஒரு சில நாட்கள் இருக்கையில் மற்றொன்று நடந்தது. நடு நிசி, அம்மா நின்றுகொண்டிருக்கிறாள், எதிரேப் பார்க்க அப்பாவும், தாத்தாவும் அதாவது அம்மாவின் அப்பாவும்-நின்று கொண்டிருக்கிறார்கள். விளக்கை ஏற்றுகிறாள். அவர் போகவில்லை, அரண்மனையின் விசாலமான கூடத்தில் மேசையருகே நிற்கிறார், அவளை அவர் பார்க்கிறார். அப்போது கேட்ட அலறல் -ஒரு வித அபாய அறிவிப்பு போல- இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. பிறகு எங்களை எழுப்பியவள், நடந்ததைச் சொன்னாள், அவர் உடுத்தியிருந்தவிதம் அதாவது வழக்கமாய் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் அணிகிற சாம்பல் வண்ண சூட்டில்; அவர் நின்றிருந்த விதம்; அவளை நேராகப் பார்த்தது; ஒன்றுவிடாமற் கூறினாள். " நான் சின்னப்பெண்போல மாறி இருக்கிறேன், அவரை அழைக்கிறேன், சிறிதளவும் பயமில்லை", இவைகளெல்லாம் அவள் கூறிய வார்த்தைகள். மாயமாய் மறைந்த உருவத்தைத்தேடி ஓடி இருக்கிறாள். எந்தத் தேதியில் எந்த நேரத்தில் பறவையையும், உருவங்களையும் பார்க்க நேர்ந்ததோ, அந்தத் தேதியில், அதே நேரத்தில்தான் இருவரும் இறந்திருந்தார்கள். அச் சம்பவத்திலிருந்து, மரணம் உட்பட அனைத்து விஷயங்களிலும் அம்மாவுக்குள்ள ஞானத்தை உணர்ந்து அவளை மதிக்கத் தொடங்கினோம்.

தனது சொகுசுக்காரிலிருந்து மிடுக்காக உடையணிந்திருந்த மனிதன் இறங்குகிறான். பிரிட்டிஷ் சிகரெட் ஒன்றை புகைக்கிறான். ஆண்களுக்கான தொப்பியும், மின்னும் காலணிகளுமாக நிற்கிற சிறுமியைப் பார்க்கிறான். அவளை நோக்கி மெல்ல நடந்து வருகிறான். அம் மனிதனிடத்தில் ஒருவித மரியாதைகலந்த வியப்பு, புன்னகைக்கவில்லை. முதலில் அவளிடம் சிகரெட் ஒன்றை நீட்டுகிறான், அவனது கரம் நடுங்குகிறது. இருவருக்கும் இடையில் இனப்பாகுபாடு இருக்கிறது, அவன் வெள்ளையன் இல்லை. பேதத்தைக் கடந்தாகவேண்டும், எனவே அவனது உடலில் நடுக்கம். தனக்கு புகை பிடித்து பழக்கமில்லை என்பதால் அவள் அவனிடம், நன்றி, வேண்டாம் என்கிறாள், அவளிடத்திலிருந்து வேறு வார்த்தைகள் இல்லை. என்னை அமைதியாக இருக்கவிடு, என்றெல்லாம் அவனிடத்தில் அவள் சொல்லவில்லை. எனவே அவனுக்குக் கொஞ்சம் துணிச்சல் வந்தது, தான் கனவுலகத்தில் இருப்பதுபோல உணர்வதாக சொல்கிறான். அவளிடம் பதிலில்லை. பதில் சொல்லி என்ன ஆகப்போகிறது? சொல்வதற்கும் என்ன இருக்கிறது? அவள் மௌனமாக இருந்தாள். அவன் அவளிடம்," எங்கிருந்து நீங்கள் வருகிறீர்கள்?", என்று கேட்கிறான். அவள், " சாடெக்கிலுள்ள பெண்கள் பள்ளியின் ஆசிரியை மகள்", எனப் பதிலிறுக்கிறாள். அவன், அப் பெண்மணியைப் பற்றியும், கம்போடியாவில் அவள் சொத்தொன்று வாங்கி, அதுமுதல் சந்தித்துவருகிற சங்கடங்களை அறிந்திருப்பதாகவும் கூறிவிட்டு, தான் சொல்வது சரிதானே என்று கேட்கிறான். அதற்கு அவள், 'சரிதான்', என்கிறாள்.

தொடர்ந்து, தோணியில் அவளை மாதிரியான ஒருபெண்ணைப் பார்ப்பது மிகவும் அபூர்வம் என்கிறான். அதிலும் அதிகாலை நேரத்தில், வெள்ளையர் இனத்து இளம்பெண், உள்ளூர் மக்கள் உபயோகிக்கிற பேருந்து ஒன்றில் பயணிக்கும் அதிசயம் அன்றாடம் நடப்பதல்லவென்றும், அவள் அணிந்திருக்கும் தொப்பி பொருத்தமாக, சொல்லப்போனால், மிகமிகப் பொருத்தமாக, வித்தியாசத்துடனும் ரசிக்கக்கூடியதாகவும் இருக்கிறது, என்கிறான். "ஆண்களுக்கான தொப்பியாகக்கூட இருக்கட்டுமே, அதானலென்ன?", என வியப்பில் ஆழ்கிறான். உண்மைதான் நினைத்ததைச் சாதிக்கலாம், அவளது அழகிற்கு அத்தனை பலமிருக்கிறது.

இப்போது அவள் முறை, அவன்மீது பதித்த பார்வையைத் திசைதிருப்பும் எண்ணமில்லை. அவன் யாரென்று கேட்கிறாள். பாரீஸில் தனது கல்வியை முடித்துவிட்டுத் திரும்பி இருக்கிறேன், என்கிறான். அவனும் சாடெக்கில்தான் வசிக்கிறான், வேறெங்கே? நதிக்கரையை ஒட்டி, நீலவண்ணத்தில் செராமிக் இழைக்கபட்ட பால்கணியும், பெரிய தளமுமாக இருக்கிற வீடொன்றில்தான் அவனும் இருக்கிறான். அவனது பூர்வீகம் பற்றிய கேள்விக்கு, சீனாக்காரனென்றும், அவனுடைய குடும்பத்தவர் •பூ-ஷ¥வென் என்ற சீனநாட்டின் வடபகுதியிலிருந்து வந்தவர்கள் என்கிறான். என்னுடன் சைகோன் வருவதற்குச் சம்மதமா? எனகேட்க, அவள் மறுக்கவில்லை. தனது வாகன ஓட்டியை அழைத்து இளம்பெண்ணுடைய உடமைகளை பேருந்திலிருந்து எடுத்து கறுப்பு நிற வாகனத்தில் வைக்குமாறு கட்டளை இடுகிறான்.

காலனி நாட்டில் சாதாரண மற்றும் நடுத்தரவர்க்க மக்களுக்காக வீடு, மனை வாங்குவதும் விற்பதுமான தொழில்கள் அனைத்திலும் பிறரை நுழையவிடாமல் காலூன்றி இருப்பவர்கள்- சீனர்கள். அந்தச் சிறுபான்மை கூட்டத்தில் ஆக, இவனும் ஒருவன். மீகாங் நதியூடாக அன்றைய தினம், சைகோன் சென்றுக்கொண்டிருந்தான்.

கறுப்பு நிற வாகனத்திற்குள் அவள் நுழைகிறாள். வாகனத்தின் கதவு மூடிக்கொள்கிறது. திடுக்கென்று, மெலிதாக ஒருவித அச்சம், சோர்வு, மெல்ல மெல்ல நதிமீதி பரவியிருந்த வெளிச்சம் மங்கிவருவதுபோலத் தோற்றம், ஒருவித நிசப்தம், அதுகூட மென்மையாகவே உணரப்படுகிறது, பிறகு எங்கும் தெளிவற்ற காட்சிகள்.

இனி உள்ளூர்மக்கள் பயணிக்கிற பேருந்து எனக்கு ஒத்துவராது. விடுதியிலிருந்து உயர்நிலைப்பள்ளிக்கு போகவும் வரவும், சொகுசு வாகனமொன்று வைத்துக்கொள்வேன். இரவு உணவிற்கு, நகரத்திலுள்ள மிகவும் ஆடம்பரமான இடங்களுக்குச் செல்லக்கூடும். நித்தம் நித்தம் என்னால் செய்யப்படுபவைகளுக்கும்; செய்ய மறந்த அல்லது வேண்டாமென்று ஒதுக்கியவைகளுக்கும்; என்னால் ஏற்றுக்கொள்ளபட்ட நல்லது கெட்டதுகளான அதாவது பயணம் செய்த பேருந்து, சிரித்து என்னோடு மகிழ்ந்த பேருந்து ஓட்டுனர், பின் இருக்கையில் அமர்ந்தபடி வெத்திலைமெல்லும் கிழவிகள், லக்கேஜ் காரியரில் அமர்ந்திருக்கும் சிறுவர்கள், சாடெக் குடும்பம், அங்குற்ற வேதனைகள், அதன் ஈடிணையற்ற அமைதி, என அனைத்திற்கும் மேலே குறிப்பிட்ட, அதாவது இரவு உணவுக்கென்று செல்லும் சொகுசுவிடுதிகளிற்தான் வருந்தியாகவேண்டும் என்பதால், அங்கு அடிக்கடி செல்வேன்.

அவன் பேசியபடி இருந்தான். கவர்ச்சிகரமான பாரீஸ் பெண்கள்; திருமணம்; வெடிகுண்டுகள்; லா கூப்போல்(La Coupole)1; விருப்பத்துடன் சென்ற லா ரொத்தோந்து(La Rotonde)2; இரவு விடுதிகள் மற்றும் இதுதான் வாழ்க்கை என்பது மாதிரி ஆடம்பரங்களும், உல்லாசங்களும் என்றிருந்த இரண்டுவருட பாரீஸ் வாழ்க்கை; அவனுக்கு அலுத்துவிட்டதாம். அவனுடைய உரையாடல், செல்வ செழிப்பை உணர்த்திற்று, தொடர்ந்து செவிகொடுத்துக்கேட்டால் அவன் எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் என்பது தெரியவரலாம், மிகவும் கவனத்துடன் சொல்வது அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள். நிறுத்தாமல் தொடர்ந்தான். அவனது தாயார் இறந்துவிட்டாள். வீட்டுக்கு ஒரே பிள்ளை, இருக்கிற சொத்துகள் அனைத்திற்கும் இவன் ஒருவன்தான் வாரிசு, அதற்கு உரிமையென்று சொல்லிக்கொள்ள இப்பொதைக்கு உயிரோடிருக்கும். அவனுடைய தந்தை மட்டுமே. அவர், அல்லும் பகலும் கஞ்சா புகைத்துக்கொண்டு நதியைப்பார்த்தபடி இருப்பார், கட்டிலில் இருந்தபடி, சொத்துகளைப் பராமரித்து வருகிறார். அவள், 'புரிகிறது', என்கிறாள்.

சடெக்கில் இருக்கும் ஆரம்பச் சுகாதாரவிடுதியொன்றைச் சேர்ந்த வெள்ளைத் தோல்கொண்ட விபச்சார சிறுமியை, தன் மகன் மணப்பதற்கு அந்த நபர் அனுமதிப்பார் என்று நினைக்கவில்லை.

காட்சி, கைப்பிடி கம்பிக்கருகே நிற்கிற வெள்ளைக்கார சிறுமியை நெருங்கியதற்கு முன்னால் தொடங்குகிறது, அதாவது தனது கறுப்பு நிற சொகுசுக் காரிலிருந்து அவன் இறங்கும் நேரத்தில், அதாவது அவளை நோக்கி அவன் நடக்க ஆரம்பித்த பொழுது, அதாவது தன்னை நெருங்கிற அவனிடத்தில் ஒருவித அச்சம் தலைகாட்டுகிறது என்பதை அவள் உணர்ந்த மாத்திரத்தில்.

தொடக்கத்திலேயே, இவளுடைய தயவில்தான் அவன் இருக்கிறான் என்பதுபோல உணருகிறாள். சந்தர்ப்பம் அமையுமானால் அவனைப்போலவே வேறுசிலரும் அவளது தயவுக்காக காத்திருக்கக்கூடும், என்பதும் தெளிவு. தனது தேவைகள் சிலவற்றை அவளால் மட்டுமே பூர்த்திசெய்து கொள்ள முடியும் என்ற நிலையில் இதுவரை காலம் கடத்திவந்தாள், அதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. நடப்பது எதுவும், அம்மாவுக்கோ, சகோதரர்களுக்கோ எட்டாமற் பார்த்துகொள்ளவேண்டும் என்பதில் கூட அன்றையதினம் அவள் தெளிவாக இருந்தாள். கறுப்புநிற மோட்டார் வாகனத்தில் அமர்ந்தாளோ இல்லையோ, முதன்முறையாக மட்டுமல்ல நிரந்தரமாகத் தனது குடும்பத்தைவிட்டு விலகுகிறாள் என்பதை உணர முடிந்தது. அவளுக்கு என்ன ஆயிற்று என்பதை அறிய அவர்களுக்கு இப்பொழுது உரிமையில்லை. யார் வேண்டுமானாலும் அவளைத் தொடலாம்; எவர் வேண்டுமானாலும் அவளைத் தூக்கிச் செல்லலாம்; யார் வேண்டுமானாலும் அவளைக் காயப்படுத்தலாம், எவர் வேண்டுமானாலும் அவளைக்கெடுக்கலாம், அம்மாவுக்கும் சரி, என் இரு சகோதரர்களுக்கும் சரி அதைத் தெரிந்துகொள்ள அவசியமில்லை. அவர்கள் தலைவிதி அப்படி கறுப்புவண்ன சொகுசுக் காரில் அதற்காக வேண்டிய அளவு கண்ணீரும் சிந்தியாயிற்று..

சிறுமி சற்று நேரத்தில் உறவு கொள்ள இருந்தவன், தோணியில் அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவன், அவள் வாழ்க்கையில் குறுக்கிட்ட முதல் ஆண்.

1. La Coupole- பாரீஸில் மோன்பர்னாஸ்பகுதியைச் சேர்ந்த மிகபெரிய விடுதி -
2. La Rotonde, பாரீஸில் மோன்பர்னாஸ்பகுதியைச் சேர்ந்த உணவு விடுதி


காதலன் - 5

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -அவளது முதல் அனுபவத்திற்கான அந்நாள் அத்தனை சீக்கிரம் அமையும் என நினைத்ததில்லை, அது ஒரு வியாழக் கிழமை. உயர்நிலைப் பள்ளியிலிருந்து விடுதிக்குத் தனது காரில் அழைத்து செல்ல அவன் நாள் தவறாமல் வருவான். ஒரு வியாழகிழமை பின்நேரம் விடுதிக்கு வந்திருந்தான். அவளைத் தனது கறுப்புகாரில் அழைத்து போனான்.

சீனர்கள் நிறைந்த ஷோலென்(Cholen) நகரம், மத்திய சைகோனோடு அதனை இணைப்பது அமெரிக்காவிலிருப்பதுபோல ஓர் அகன்ற சாலை, அதிற்றான் டிராம்கள், மோட்டார் வாகனங்களும், கை ரிக்ஷாக்கள் என அனைத்தும் போகவேண்டும், அங்குதான் எனது முதல் அனுபவம். பிற்பகலின் ஆரம்பம், விடுதிப் பெண்கள், வெளியிற் செல்ல அனுமதிக்கப்படும் நேரம், அதனை இவள் பயன்படுத்திக்கொண்டிருந்தாள்.

பார்க்க நவீனமாக இருந்த, நகரத்தின் தென் பகுதி. உள்ளிருந்த தளவாடங்கள்: ஆடம்பரமாக இருக்கவேண்டுமென்று அவசரகதியில் வாங்கிப் போடப்பட்டவையாக இருக்கவேண்டும். அவள் எண்ணத்தைப் புரிந்துகொண்டவன்போல, 'இவைகள் எனது தேர்வல்ல', என்றான். தனி அறையில் போதிய வெளிச்சமின்றி இருந்தபோதிலும், சன்னலைத் திறவென்று அவனை இவள் வற்புறுத்தவில்லை. இன்னதென்று விவரிக்க இயலாத உணர்வுகள், சூழலுக்கு இணங்கும் பக்குவம், நிராகரிக்கும் மனமில்லை, ஒருவேளை அவளுள் சுரந்த இச்சை அதற்குக் காரணமாக இருக்கலாம். முதல்நாள் மாலை, வரமுடியுமா என்று அவன் கேட்ட உடனேயே, சம்மதம் தெரிவித்திருந்தாள். ஆக அவளது விருப்பத்துடனே வந்திருக்கிறாள். நடப்பதனைத்தும், நேற்றுவரை இவள் காத்திருந்ததும், தனக்கு என்ன நேரும் என இவள் நினைத்ததுமன்றி வேறல்ல என்கிறபோதும், இலேசாக ஒருவிதம் பயம். அவளது எண்ணமெல்லாம் அறையை தன்னுள் அடக்கிய இறைச்சலும், வெளிச்சமுமான வெளி உலகினைப் பற்றியதாக இருக்க, அவன் உடலில் நடுக்கம். முதலில் அவள் பேசட்டும் என எதிர்பார்த்தவன்போல, அவளைப் பார்க்கிறான், ஆனால் அவள் மௌனமாக இருக்கிறாள். அவனுக்கும் அவளது ஆடைகளை அவிழ்க்கும் எண்ணமேதும் தனக்கில்லை என்பதுபோல சிலைபோல நிற்கிறான். மெல்ல அவள் அருகில் வந்து, 'உன்னை வெறித்தனமாக நேசிக்கிறேன்', என முணுமுணுத்தவன் மீண்டும் அமைதியாய் இருக்கிறான். இவளிடத்தில் அதற்கான பதிலில்லை. 'உன்னிடத்தில் எனக்கு அப்படியொன்றும் பிரியமில்லை', எனச்சொல்லி இருக்கலாம், இல்லை, சொல்ல இல்லை. ஒன்று மட்டும் உடனடியாக தெரிந்துகொள்ளமுடிந்தது, 'அவளை அவனுக்குப் புரியாது, இப்போதுமட்டுமல்ல, ஒருபோதும், அவளைப் புரிந்துகொள்ள அவனால் இயலாது, தப்பான காரியங்களை அறிந்துகொள்வதற்கான வழிமுறைகளோ, அதற்கான ஞானமோ அவனுக்குப் போதவே போதாது. தெரிந்துகொள்ளவேண்டியவள் அவள், எனவே விளங்கிக் கொள்கிறாள். அவனது அப்பாவித்தனம் சடாரென்று எதையும் ஒளிக்காமல் விளங்கப்படுத்துகிறது. தோணியில் அவனைப் பார்த்தவுடனேயே அவளுக்குப் பிடித்திருந்தது. ஆம், இதோ இக்கணத்திலுங்கூட அவனைப் பார்க்க மகிழ்ச்சி, ஆக இவள்தான் செயல்படுத்தவேண்டும்.

அவனிடத்தில், "என்னை நீ விரும்பித்தான் அழைத்து வந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை, பிற பெண்மணிகளிடம் எப்படி நீ நடத்துவாயோ அதுபோல என்னையும் நடத்தினாற் போதும், அதற்கு என்னை நீ விரும்பவேண்டும் என்று அவசியமல்ல. அவன் முகம் வெளிறிப்போனது, "உனக்கு வேண்டியதெல்லாம் அதுதானா", கேட்கிறான். "ஆம் அதுதான்", என்பது அவளது பதிலாக இருக்கிறது. முதன் முறையாக, அவனுடைய அறையில், நெருக்கடிக்கு உள்ளானான், அதை அவனால் ஒளிக்க முடியவில்லை. தன்னை ஒருபோதும் அவள் விரும்பமாட்டாள் என்பதை, ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டானாம், சொல்கிறான். சொல்லட்டுமென்று காத்திருக்கிறாள். முதலில் அப்படியா? எனக்குத் அது தெரியாதே, என்றவள், அவன் பேசட்டும் என்பதுபோல பின்னர் அமைதியாக இருந்தாள்.

உன்னிடத்தில் கொண்டுள்ள வெறித்தனமான இக் காதலன்றி, இப்போதைக்கு எனக்கு வேறு துணையில்லை, என்கிறான். தானும் தனித்து இருப்பதை உணர்வதாக அவனிடம் சொல்கிறாள். எதனுடன் என்று அவள் சொல்லவில்லை. வேறொருத்தர் பின்னால் நீ போவதைப்போலத்தான், என்னைத் தொடர்ந்தும் வந்திருக்கிறாயா? அவன் கேட்கிறான். இதுவரை ஒருவரை அவரது இருப்பிடம்வரைத் தேடிசென்ற அனுபவம் எனக்கில்லை என்பதால், என்னால் அதற்குப் பதில் சொல்ல இயலாதென்கிறாள். "பேசிக்கொண்டிருக்க வேண்டாமே, வழக்கமாக உனது அறைக்கு அழைத்து வரப்படும் பெண்களிடம் எப்படி நடந்துகொள்வாயோ, அப்படி நடக்கவேண்டுமென்பதுதான் எனது விருப்பமும், தயவு செய்து உடனே ஆரம்பி", அவனிடம் கெஞ்சுகிறாள்.

அவளுடைய கவுனை வேகமாக உருவி, எறிகிறான். பருத்தியினால் ஆன வெண்மை நிற உள்ளாடையையும் உருவிப் போட்டவன், நிர்வாணமாக இருந்தவளைக் தூக்கிச் சென்று கட்டிலிற் கிடத்தினான். பிறகு? பிறகென்ன கட்டிலின் மறுபக்கம் திரும்பி உட்கார்ந்துகொண்டு விம்முகிறான். அவள் பொறுமைசாலி, சகித்துக்கொள்கிறாள், மெதுவாக தன் பக்கம் கொண்டுவந்தள், அவனது ஆடைகளை அகற்றத் தொடங்கினாள். கண்களை மூடியபடி, அவசரமின்றி நிதானமாக அதைச் செய்கிறாள். அவளது செய்கைக்கு உதவ முற்படுபவன்போல அவன் பாவனை செய்கிறான். நான் பார்த்துக்கொள்கிறேன், நீ அமைதியாய் இரு, நானே செய்ய வேண்டுமென்று எனக்கு ஆசை, என்றவள் அவ்வாறே செய்தாள், ஒன்றன் பின் ஒன்றாக அவனது ஆடைகளை நீக்கினாள். இவள் கேட்டுக்கொண்டதின் பேரில், உறக்கத்தில் இருப்பவளை எழுப்பிவிடக்கூடாது என நினைத்தவன் போல, கவனமாக மெல்ல இடம் மாற்றிப் படுக்கிறான். உடலின் மேல்தோலானது மிகவும் இனிமையாக இருக்கிறது. உடல்? மெலிந்திருக்கிறது, எளிதில் நோயில் விழக்கூடிய தகுதிகளுடன், அல்லது நாட்கள் பலவாக நோயிற் கிடந்து தேறிவரும் உடல்போல, பலமற்றவனாக, தசைகளில் திரட்சி அற்று, முகத்தில் உரோமமின்றி, 'குறி'யைத் தவிர ஆண்மைக்கான வேறு அடையாளங்களின்றி, அத்தனை பலவீனமாக இருந்தான். பிறர் அவனை எளிதாக இளப்பத்துடன் பேசவும், அதுகுறித்த வேதனைகளை சுமக்கவும் உரியவன்போலிருந்தான் அவனது முகத்தை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏன் அவனையே அவள் பார்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். மாறாக மிருதுத் தன்மைக்காக அவனது ஆண் குறியையும், அதன் சருமத்தையும் தொட்டுப் பார்க்கிறாள், அதன் மஞ்சள் நிற மினுமினுப்பிற்காகவும், அறிந்திராத அதன் புதுமைக்காகவும் வருடிக்கொடுக்கிறாள். அவன் செருமிக்கொள்கிறான், கண்ணீர்விட்டு அழுகிறான், ஏதோ அசாதாரண காதல் வயப்பட்டவன்போல.

அழுதபடி காரியத்தில் இறங்குகிறான், ஆரம்பத்தில் வலி தெரிந்தது, பின்னர் அதன் இடத்திற்கு வேறொன்று, பரவசத்தின் உச்சநிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவளாக, மெல்ல விலகிக்கொள்கிறாள்.

அது கடல்போல, வடிவமென்று ஏதுமில்லை, அல்லது இதுதான் என்று ஒப்பிடமுடியாதது

இச்சம்பவத்திற்கான காட்சிப் படிமம், முன்னதாகவே தோணியில் தன்னை அரங்கேற்றிக்கொண்டிருக்கவேண்டும்.

மீண்டும் அணிந்த காலுறைகளுடன், பெண்மணி அறையை கடந்து செல்லும் காட்சி. பார்க்க, அவளிடத்தில் சிறுமி ஒருத்திக்கானத் தோற்றம். அவளது புதல்வர்கள் அதற்கான காரணத்தை அறிவார்கள். அவளுடைய மகளுக்கு, என்ன நடக்கிறது என்பது இதுவரை தெரியாது. தங்களுடைய தாயாரைப்பற்றி ஒன்றாக அமர்ந்து பேசிய வழக்கமில்லை, குறிப்பாக அவளைப் பற்றி அறியவந்த இறுதிகாலத்து, தீர்மானமான தகவல்கள், அவளுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளிக்குக் காரணமாகி இருக்கின்றன என்பதுபற்றிகூட அவர்கள் உரையாடியதில்லை.

கலவியினால் கிடைக்கக்கூடிய பரவசத்தின் உச்சநிலை அனுபவத்தினை அவள் அறிந்தவளல்ல.

இரத்தம் வருமென்று எனக்குத் தெரியாது. உனக்கு வலிக்கிறதா என்று கேட்கிறான், இல்லை என்கிறேன், தான் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாகச் சொல்கிறான்.

இரத்தத்தைத் துடைக்கிறான். பின்னர் தண்ணீர் கொண்டு, கழுவ, செய்வதனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தன்னைப்பற்றிய பிரக்ஞையின்றி என்னிடம், விரும்பும் வகையில் மீண்டும் இணைந்துகொள்கிறான். எங்கள் அம்மா விதித்திருந்த தடைகளைமீறி நடப்பதற்கான வலிமையை எங்கிருந்து பெற்றேனென்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். மிகவும் அமைதியாக, எடுத்த முடிவில் உறுதியுடன், இக்காரியத்தில் நான் இறங்க எதுகாரணமாக இருக்கலாம்.

இருவரும் ஒருவரையொருவம் பார்த்துக்கொண்டோம். என்னைக் கட்டி அணைக்கிறான். எதற்காக நீ வந்தாய்?- கேட்கிறான். வேறுவழியில்லை, அப்படியான நெருக்கடியிலிருக்கிறோம், -என்பது எனது பதில். இருவரும் முதன்முறையாக தயக்கமின்றி உரையாட முடிகிறது. எனக்கு இரண்டு சகோதர்கள் இருக்கிறார்களென்றும், கையில் சுத்தமாக பணமின்றி, தரித்திரர்களாக வாழ்க்கையை நடத்துகிறோம், என்றும் கூறுகிறேன். அவன் எனது மூத்த சகோதரனை அறிவானாம். கஞ்சா புகைக்குமிடங்களில் அவனை சந்தித்து இருக்கிறானாம். எங்கள் அம்மாவிடம் இருப்பதெல்லாம் கஞ்சா புகைத்தே தீர்ந்துபோகிறது, வேலைக்காரர்களைக்கூட எனது சகோதரன் விட்டுவைப்பதில்லை. ஒரு சில நேரங்களில், அவனுக்கு கஞ்சா விற்பவர்கள் அம்மாவைத்தேடி வீடுவரை வருவதும் நடந்திருக்கிறது. அவனிடம், அணைகள் குறித்தும் பேசுகிறேன். தொடர்ந்து நிலைமை மோசமாக இருப்பதால், அம்மா வெகு சீக்கிரம் இறக்கக்கூடும் என்கிறேன். இன்றைக்கு எனக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமைக்குக்கூட அம்மாவின் சமீபத்தில் இருக்கிற மரணம் காரணமாக இருக்கலாம்.

அவனது தேவையை உணருகிறேன். எனக்காக மனம் இளகினான். நான், "வேண்டாம், எனது அம்மாவைவைத் தவிர்த்து ஒருவரும் பரிதாபமான நிலையில் இல்லை, எனவே இரக்கப் பட வேண்டாம்", என்கிறேன். "நீ வந்ததற்கு, என்னிடமுள்ள பணம்ந்தானே காரணம்", என்றான். நான், "உனது பணத்தையும், உன்னையும் சேர்த்தே விரும்பினேன், உன்னை பார்த்தபோது, காரில் ஏற்கனவே அதாவது பணத்திற்கான அடையாளத்துடன் அமர்ந்திருந்தாய், நீ வேறொருவனாக இருந்திருந்தால், எனது முடிவு என்ன என்பதுபற்றியெல்லாம், சொல்லத் தெரியாது", என்றேன். "உன்னை என்னுடன் அழைத்துச் செல்ல விருப்பம், நீ இல்லாமல் புறப்படுவதில்லை என்றிருக்கிறேன், வருகிறாயா?", கேட்கிறான். "நான் வருந்தியாகவேண்டும், அதற்குள் அம்மாவைப் பிரிந்து உன்னுடன் வர சாத்தியமில்லை", என்கிறேன். "உன்னை அழைத்துச் செல்ல எனக்குக் கொடுப்பினை இல்லையென்றுதான் நினைக்கிறேன்", என்றபோதிலும், எனது எதிர்பார்ப்பை உணர்ந்தவனாகப் பணம் கொடுக்கிறான். அவன் மறுபடியும் கால்களை நீட்டிப் படுத்துக்கொள்கிறான். மீண்டும் பேச்சின்றி இருவரும் மௌனமாக இருக்கிறோம்.

அறைக்கு வெளியே நகரத்தில் அப்படியொரு இரைச்சல், செவிடாக்கவேண்டுமென்று தீர்மானித்து, திரைப்படமொன்றினை அதிக சத்தத்துடன் வைத்திருப்பதைப்போல எனது நினைவில் இன்றைக்கும் ஒலிக்கிறது. 'அறைக்குள் இருள், எங்களுக்கிடையே உரையாடலில்லை, சுற்றிலும் நகரத்தின் கூச்சலும் குழப்பமும். மூட்டை முடிச்சுகளுடன் நகரத்தில், நகரத்தின் இரயிலொன்றில் பயணித்த உணர்வினை, இன்றைக்கும் நினைவில் கொள்ள முடிகிறது சன்னலுக்குக் காற்றுவாரிப்பலகையும், இலைக்கதவும்(1) இருந்தன, கண்ணாடிகளில்லை. இலைக்கதவுகளில், வெளியே நடைபாதை தளத்தில் நடந்துபோகின்றவர்களுடைய நிழல்கள். சனசந்தடி மிகுந்த நகரம். நிழல்கள் சாளரத்தில்வெளிப்படும் சூரியக் கதிர்களினால் ஒரே அளவாக துண்டாடப் படுகின்றன. மரத்தாலான பாதணிகள் எழுப்பும் ஓசை, தலையில் இடிக்கிறது. சீனர்கள் உரத்துப் பேசுகின்றவர்கள், பாலைநிலமக்கள் மொழிகளைக் கையாளுவதைப்போல, நம்பமுடியாதவகையில், அந்நியத்தன்மை அம்மொழிக்கு இருப்பதாக நினைக்கிறேன், அதை உறுதிபடுத்தும் வகையில் குரல்கள், காதினைக் கிழிக்கின்றன.

அந்தி சாயும் நேரம், சாலைகளிலும், நடைபாதைகளிலும் வருகின்ற குரல்கள் சிறிதுசிறிதாக, இன்னதென்று பிரிக்கவியலாதபடி அதிகரிப்பதைவைத்து, தெரிந்து கொள்ளமுடிகிறது. இன்பத்தைத் துய்ப்பதற்கான நகரம், இரவானால், அதன் மூழுவீச்சும் தெரியவரும். சூரியன் மேற்கில் மறையட்டுமென காத்திருந்ததுபோல இரவு வாழ்க்கை தொடங்கிவிட்டது. எங்களுடையக் கட்டிலை, நகரத்தினின்று, சன்னலும் அதிலிட்டிருந்த முரட்டுப் பருத்தித் துணியிலான இலைல்கதவும் பிரிந்திருந்தன. பிற மனிதர்களிடமிருந்து எங்களைத் தனிமைப்படுத்தவென்று வேறு கடினமானப் பொருட்களில்லை. வெளி மனிதர்கள் எங்கள் இருப்பினை அறிந்திருக்கமாட்டார்கள். ஒளிக் கதிர்கள், குரல்கள், மக்கள் நடமாட்டங்கள் என்பவற்றிலிருந்து, எச்சரிக்கைஒலி வாகனங்கள் உடைந்த குரலில்; எதிரொலிகளின்றி; சோகத்தின் உச்சியில் வீறிடும் சத்தம் போன்று; ஏதோவொன்று காதில் விழுகிறது.

இப்போது அறைக்குள் சர்க்கரைப் பாகின் மணம், வேர்க்கடலைகளை வறுக்கும் மணம், சீனர்களுடைய சூப்பின் மணம், தீயில் வாட்டிய இறைச்சிமணம்., புற்கள், மரியுவானா, ஹசீ£ஷ், மல்லிகை, தூசி, சாம்பிராணி குச்சிகளின் மணம், விற்பனைக்காக சட்டிகளில் நெருப்பைச் சுமந்தபடி வீதிகளில் அலைபவர்கள் ஏற்படுத்துகிற விறகுக் கரியின் மணம் என அனைத்தையும் நாசிக்குள் உணரமுடிகிறது. இந்நகரத்தின் மணமென்பது, இங்குள்ள குக்கிராமங்களிலும், காடுகளிலும் வீசுகிற மணத்திற்குச் சமம்.

1. மதுரமொழி வலைத்தளத்திற்கும், திரு. மதுரபாரதிக்கும் நன்றிகள்


அத்தியாயம் -6

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -திடீரென்று பார்க்கிறேன், குளித்து முடித்ததின் அடையாளமாக கறுப்புவண்ண குளியல் அங்கியில் அமர்ந்திருக்கிறான். புகைத்தபடி விஸ்கி குடித்துக்கொண்டிருக்கிறான்.

நான் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், குளித்து முடித்தானாம். உறங்கியதை நினைக்க ஆச்சரியமாக இருந்தது. காப்பி மேசை மீதிருந்த விளக்கை ஏற்றினான்.

செய்கின்ற காரியங்கள் எதுவும் அவனுக்குப் புதிதல்லவென்று தோன்றியது, அனைத்திற்கும் பழக்கப்பட்டவன்போல நடந்துகொள்கிறான். அடிக்கடி இவ்விடத்திற்கு வருகிறவனாக இருக்கவேண்டும். கலவி சுகத்தில் அதிக நாட்டமுள்ளவனென்ற போதிலும், பயந்தாங்கொள்ளி. உடலுறவின் மூலம் அதிலிருந்து மீள நினைக்கிறான். அவனுக்கு பெண்கள் சகவாசம் அதிகம் எனபதை நினைக்கிறபோது மகிழ்ச்சியாகவே இருக்கிறது, அவர்களில் ஒருத்தியாக இருக்க எனக்கும் ஆசை, அதை அவனிடத்திலும் தெரிவிக்கிறேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் பார்வையில் கள்ளம் புகுந்துகொள்கிறது, சட்டென்று அக்காட்சியே பொய்யென்று ஆகிறது, முடிவுக்கு வருகிறது.

அவனை என்னருகில் அழைக்கிறேன், என்னை தனதாக்கிக்கொள்ளும் காரியத்தில் அவன் மறுபடியும் இறங்கவேண்டும். அருகில் வருகிறான். அவனிடத்தில் பிரிட்டானிய சிகரெட்டின் மணம், விலை உயர்ந்த பர்·ப்யூமின் மணம், தேனின் மணம், அடிக்கடி அணிந்த இந்திய பட்டு ஆடைகளின் இனிமையான மணம், தங்கத்தின் நறுமணம். கலவிக்கு உகந்தவன். அவனிடத்தில் எனக்குள்ள அதீத இச்சையை தெரிவிக்கிறேன். அவசரப்படாதே, என்கிறான். முதற்காதலனான அவன்மீது என்னிடத்திலுள்ள விருப்பத்தையும், கலவியில் எனக்குள்ள நாட்டத்தையும், நதியைக் கடந்த அடுத்தநொடியிற் புரிந்துகொண்டானாம். தவிர, அவனிடத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்தில் எந்தவொரு ஆணிடத்திலும் உண்மையாக நான் நடந்துகொள்ளமாட்டேன், என்கிறான். அவனுக்கும் நேரம் சரியில்லையாம், சொல்லச் சொல்ல மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருக்கிறேன், எனது மகிழ்ச்சியை அவனிடத்திலும் தெரிவிக்கிறேன். கணத்தில் ஒருவித மூர்க்கம், ஒருவித நம்பிக்கையின்மை, என்மீதுப் பாய்கிறான், முதிராத எனது இளம்மார்பகங்களை வாய்கொள்ள உண்கிறான், சத்தமிடுகிறான், எனக்கெதிராக தகாதச் சொற்களை உபயோகிக்கிறான். அனுபவித்திராத பரவசத்தின் காரணமாகக் கண்களை இறுக மூடிக்கொள்கிறேன். இம்மாதிரியான காரியங்களுக்கு அதாவது உடலுறவுகளுக்குப் பழகியவன் போலிருக்கிறது, கைகளில் நல்ல தேர்ச்சி தெரிகிறது., அழகாய், கன கச்சிதமாய் ஆற்றுகின்றன. எனக்கும் அதிர்ஷ்டமென்று நினைக்கிறேன். இதைத் தொழிலாகக்கூட அவன் தொடரலாம். எந்த பள்ளிக்கும் செல்லாமலேயே என்ன செய்யவேண்டும், என்ன பேசவேண்டுமென தெரிந்துவைத்திருக்கிறான். என்னை வேசி என்கிறான், கழிசடை என்கிறான், மிகக் கேவலமாக நடத்துகிறான். வேறொருத்தியை அவன் தொட்டதில்லையாம், இவ்வுலகத்தில் அவனுக்குக் காதலியென்று இருப்பதெல்லாம் நான் ஒருத்திமட்டுந்தானாம், சொல்கிறான். கண்டதைப் பேசவும், விரும்பும்வகையில் என்னைக் கையாளவும், உடலில் வேண்டியதைத் தேடவும், கண்டெடுக்கவும் அனுமதிக்கிறேன் இல்லையா, ஆதலால் இதுபோன்ற உளரல்களை சகித்துகொள்ளத்தான் வேண்டும். இனி நானொரு கழிவுப்பொருள் அல்ல, உபயோகபடக்கூடும். ஊத்தையாக இருந்தாலென்ன, மெருகூட்டினால், பிராகசிக்கப்போகிறேன், அத்தனை கழிவுகளும், காதற் தாபத்தில் கரைந்தோடாதா?

நகரத்தின் இரைச்சல், சன்னற்கதவுகளில் மோதுவதுபோல, வெகு அண்மையில் மிக அருகில் கேட்கிறது. அறையில் எங்களைக் கடந்துசெல்வதுபோல காதோரங்களில் சப்தம். அவ்வோசைக்கிடையே, கடந்து செல்லும் பாதையில் வைத்து அவனுடலை அணைத்துக்கொள்கிறேன். பரந்துவிரிந்தகடல், சுருங்கிக்கொள்கிறது, விலகிச் செல்கிறது, மீண்டும் என்னிடத்தில் வருகிறது.

நிறுத்திடாதே தொடர்ந்து செய் என வற்புருத்துகிறேன், அவனும் அப்படியே செய்கிறான். கொழகொழவென்று இரத்தம், உயிர்போவதுபோல உணருகிறேன், அது இல்லையென்று ஆனாலும் என் மூச்சுநின்றுபோகலாம்..

சிகரெட் ஒன்றை பற்றவைத்து என்னிடத்தில் கொடுக்கிறான். எனது முகத்தருகே நெருங்கி, தாழ்ந்த குரலில் பேசுகிறான். பதிலுக்கு எனது குரலும் அடங்கி ஒலிக்கிறது. அவனுக்கானது எதுவென்று அவன் அறியான், அவனுக்காக அதுபற்றி நான் பேசுகிறேன். கம்பீரமான வனப்பு அவனிடம் குடிகொண்டிருப்பதைப் புரியவைக்கிறேன்.

அந்தி சாயும் நேரம். எதிர்காலத்தில் அவனது பெயரும், முகமும் மறக்க நேர்ந்தாலும், இப் பின்நேரத்தை வாழ்நாள் முழுதும் என்னால் நினைவில் நிறுத்த முடியும் என்கிறான். இவ்வீட்டை என்னால் மறக்காமல் இருக்கமுடியுமா, என்று கேட்க, அவன்: நன்றாகப் பார்த்துக்கொள், என்கிறான். நான் பார்க்கிறேன். எல்லா இடங்களிலும் இருப்பதுபோலத்தானே?-நான். அதற்கவன், ஆமாம். அப்படித்தான், சந்தேகம் வேண்டாம், என்கிறான்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இன்றைக்கும் அவன் முகத்தைப் பார்க்கிறேன். அவனுடைய பெயரும் நினைவில் இருக்கிறது. வெள்ளை நிற சுவர்களையும், சன்னல் இலைத்தட்டி ஊடாக பெரிய அடுப்பு ஒன்றையும் பார்க்கிறேன். மேற்புறம் வளைந்த கதவினைத் திறக்க பிறிதொரு அறை, அடுத்து திறந்தவெளி தோட்டம்- கோடைவெப்பத்தின் காரணமாக செடிகள் கருகிக் கிடக்கின்றன- சாடெக் நகரின் பெரிய வில்லாக்களில் மீகாங் நதிபக்கமாக அமைந்த மொட்டை மாடிகளில் இருப்பதுபோல நீலநிறத்தில் மதிற்சுவர். மூழ்கும் கப்பல், அபாயகரமான இடம்,

சிந்தனையைக் கலைப்பதுபோல மீண்டும் அவனிடமிருந்து கேள்வி, "உன் மனதிலிருப்பது என்ன? சொல்லேன்". "அம்மாவை நினைத்துக்கொண்டேன், உண்மை தெரியவந்தால், என்னைக் கொன்றுவிடுவாள்"- நான். என்ன சொல்வதென்று யோசிக்கிறான். பின்னர், எனது நினைப்பு நியாயமானதுதான், என்கிறான். 'இச்செயல் குடும்பத்திற்கு இழிவைத் தரக்கூடியதென்றும், இவ்விஷயத்தில் திருமணம் என்றபேச்சுக்கே இடமில்லை', என்றும் சொல்கிறான். நான் அவனைப் பார்க்கிறேன். அதைஉணர்ந்தவன்போல, மிடுக்குடன் "உன்னைப் புண்படுத்தும்படியான வார்த்தைகளை உபயோகித்தமைக்கு என்ன மன்னிக்கவேண்டும்", என்கிறான். நானொரு சீனன், என அடுத்து சொன்னபோது, இருவரிடத்திலும் மெல்லிய புன்னகை. "கலவிக்குப் பிறகு இருவரையுமே, ஒருவித கவலை ஆட்கொள்கிறதே, இது இயல்பாக நடப்பதா?" என்று அவனிடத்தில் கேட்கிறேன். அதற்கவன், "நாம் பகலில், நல்ல கோடைவெப்பத்தில் உறவு கொண்டோம், இல்லையா? அதுதான் காரணம். தவிர புணர்ச்சிக்குப் பிறகான நிலை கொடுமையானது, இரவென்றால் வந்த சுவடு தெரியாமல் அது போய்விடும்", என்கிறான். பதிலுக்கு, "புணர்ச்சிக்குப் பின்னர்வரும் வேதனைகளுக்கு, நீ நினைப்பதுபோல பகல் காரணமல்ல, நானே காரணம். கவலைகளோடு வாழ்பவள் நான், அதற்கென்றே காத்திருப்பவள் நான். எனது வாழ்க்கைத் துயரத்தால் ஆனது. எனது சிறுவயது நிழற்படங்களிலும் அத்துயரத்தினைப் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு என்னிடத்தில் இருக்கின்ற வேதனைகளும், நெடுநாளாக என்னை அறிந்தவையே. தோற்றத்தில் என்னைப்போலவே இருப்பதால், எனது பெயரைச் சொல்லிக்கூட அதனை அழைக்கலாம். இன்றைக்கு அதற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது, அம்மா தனது வாழ்க்கையின் வறட்சிகாலங்களில் என்னைச் சபித்த கெட்டநேரம் கடைசியில் இப்போதுதான் அதற்கு வாய்த்திருக்கிறது. அவளுடைய கூச்சல்களை நான் சரியாக விளங்கிக்கொண்டதில்லை, எதற்காகக் காத்திருந்தேன் என்றும் தெரியாது. ஆனால் இன்றைக்கு இந்த அறையில் அதற்கான விடை கிடைத்திருக்கிறது. எல்லாமே கடவுளால் தீர்மானிக்கபட்டவையென அம்மா சத்தம் போடுவாள், பிறகு எந்தவொரு பொருளுக்காகவும், மனிதருக்காவும், அரசாங்கத்திற்காகவும், கடவுளுக்காகவும் காத்திருக்கக்கூடாதென்று சொல்வாள்", அவனது பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். நான்பேசுவதை அவதானிக்கிறான், அவனது கண்கள் என்னை விட்டு அகலாமல் இருக்கின்றன. பேசுகிறபோது எனது உதடுகள் அசைவை அவன் கவனிக்கிறான். ஆடையின்றி இருக்கிறேன். கட்டுப்பாடற்ற அவனது கைகள், எனது உடலில் தங்குதடையின்றி பயணிக்கின்றன. இதுவரை நான் சொன்னவற்றை அவன் காதில் வாங்கி இருப்பானென்று நினைக்கவில்லை. 'பிறருக்கு தீங்கிழைக்க நினைப்பவள் அல்ல, நிலைமை அப்படி. அம்மா ஒருத்தியின் ஊதியத்தில், நாங்கள் உண்ணவும், உடுக்கவும் வேண்டும், மொத்தத்தில் எங்கள் தினசரி வாழ்க்கை எத்தனைக் கடினமானதென்று அவனுக்கு விளக்கினேன். தொடர்ந்து சொல்லமுடியாமல் நெஞ்சை அடைக்கிறது. "என்ன நடந்தது? நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்?" அவன். "வீதிக்கு வந்தோம், வேறென்ன செய்ய முடியும்.? அவரவர்க்கு முடிந்ததை வகையில் நெருக்கடியிலிருந்து மீள நினைத்தோம். எவ்வளவு கேவலமாக நடந்துகொள்ள முடியுமோ நடந்துகொண்டோம்", - நான். இப்போது அவன் உடல் என்மீது பரவுகிறது, முரட்டுத்தனமாக என்னுள் பிரவேசிக்கிறான். ஒரு சில நிமிடங்கள் அசைவற்று இருக்கிறோம், வெளியில் நகரத்தின் ஆரவாரத்தைக்கேட்டபடி, கலவியின் வேதனையில் இருவருமாய் துடிக்கிறோம், சிறிது நேரத்திற்குப் பிறகு சுற்றிலும் நிசப்தம். உடல்மீதான முத்தங்கள், நம்மை கண்ணீர் சிந்தவைக்கின்றன. அழுவது மனதிற்கு ஆறுதலைத் தருகிறதென்று சொல்லலாம். வீட்டில் நான் கண்கலங்கியதில்லை. அன்றைக்கு, நான் சிந்திய கண்ணீர் எனது கடந்தகாலத்திற்கு மட்டுமல்ல, எதிர்காலத்திற்குமான ஆறுதலையும் தந்தது. "என்றேனும் ஒரு நாள் என் அம்மாவைவிட்டுப் பிரிந்து செல்வேனென்றும், அம்மாவாக இருந்தாலென்ன, அவளையும் வெறுக்கும் சந்தர்ப்பம் எனக்கு நேரக்கூடும்", என்கிறேன். கதறி அழுகிறேன். "சிறுவயதில் எனக்கான கனவுகளென்பது, அம்மாவின் தரித்திரங்களன்றி வேறல்ல. கனவுகளிற்கூட அம்மாவைக் கண்டதுண்டே தவிர, கிறிஸ்துமஸ் மரங்களையல்ல. அவளென்றால் அவளை மட்டுமே. அவளைமட்டுமே கண்டிருக்கிறேன், எப்படி?: தோல் கழண்ட தரித்திர அம்மாவாக, வறுமையின் அத்தனைத் தோற்றங்களையும் காட்சிப்படுத்துகிற அம்மாவாக, ஒருவேளை உணவுக்குகூட வழியின்றி அலையும் அம்மாவாக, எந்நேரமும் தனக்கு - அதாவது மரி லெகிராண் தெ ரூபேக்கு(Marie Legrand de Roubaix) நேரும் இடர்பாடுகளை, பிறறிடம் புலம்பித்திரியும் அம்மாவாக, தனது அறியாமை, தனது சிக்கனம், தனது நம்பிக்கை என்று கதைக்கிற அம்மாவாக மட்டுமே அறிவேன்".

இரவு பிறந்திருப்பதைச் சாளரங்கள் ஊடாக அறிய முடிந்தது. இப்போது கூடுதலாகச் சத்தம் வருகிறது. முன்னிலும்பார்க்க ஆகக் கூடுதலாக, அதிக இரைச்சலோடு கேட்கிறது. தெருவிளக்குகளில் இருந்த சிவப்பு பல்புகள் ஏற்றப்பட்டிருக்கின்றன.

அறையைவிட்டு இருவரும் வெளியில் வந்தோம். ஆண்களுக்கான கருப்புநிற பட்டைகொண்டதொப்பி, பொன்னிற காலணிகள், கருஞ்சிவப்பு உதட்டுச் சாயம், பட்டினாலான கவுன், மீண்டும் என்னை அலங்கரித்திருந்தன. சட்டென்று எனக்கு வயது கூடியிருப்பதைப்போல உணர்கிறேன். என்னைப் பார்த்துக்கொண்டிருந்தவன், நீ மிகவும் களைத்திருக்கிறாய் என்கிறான்.

நடைபாதை எங்கும் கூட்டம். இன்ன திசை என்றில்லாமல் மக்கள் நடக்கிறார்கள், சோர்வாக சுறுசுறுப்பாக, எதிர்படுபவர்களை முட்டிமோதிக்கொண்டு முன்னேறும் கூட்டம், பார்வையற்ற இரவலர்க¨ளைப்போலவும், வெறிபிடித்த தெரு நாய்களைப் போலவும் அலையும்கூட்டம் - சீனர்களின் கூட்டம், வளமையுடனான இப்போதையக் காட்சிகளுக்கிடையே மறுபடியும் அக்கூட்டத்தைப் பார்க்கிறேன், இருவரும் பதற்றத்துடன், கூட்டத்தில் அவர்களன்றி வேறொருவர் இல்லை என்பதுபோல, பாவப்பட்டவர்களாக, வேதனைகளை மறந்து, ஆர்வமின்றி, நடக்கவேண்டும் என்கிற எண்ணம் எதுவுமின்றி, கால்போனபோக்கிலே, வலப்பக்கம்.. அல்ல அல்ல.. இடப்பக்கமாக, மற்றவர்களை முந்திக்கொண்டு நடக்கிறார்கள்.

அடுக்குமாடிகளுடனிருந்த ஓரு சீன உணவு விடுதிக்குள் நுழைகிறோம். கட்டிடம முழுமையும் விடுதி ஆக்ரமித்திருக்கிறது. பெரியக் கடைகளைப்போலவும், ராணுவ முகாமைப் போலவும் அளவில் மிகப்பெரியதாக இருக்கிறது. உணவு விடுதியின் உபரிகைகளும், தளங்களும் வீதியைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. பரிமாறுபவர்கள், உணவுக்கான உத்தரவுகளைப் பெற்று தயாரிப்பவர்களிடம் சொல்ல, அவ்வுத்தரவுகளைப் பெற்றுக்கொண்டு பதிலுக்கு அவர்கள் கூக்குரலிட, கட்டிடத்திலிருந்து வருகின்ற சத்தமானது, ஐரோப்பிய நாடுகளில் கேட்கமுடியாதது. சாப்பிட வந்தவர்கள் ஒருவரும் பேசிக்கொண்டிருக்கவில்லை. மாடிகளில், சீன இசைக்குழு வாசித்தபடி இருக்கிறது. நாங்கள் அமைதியாக இருந்த, அதாவது ஐரோப்பியகள் அதிகமாக இருந்த, மாடியொன்றுக்குச் செல்கிறோம். எல்லா இடங்களிலும், ஒரேமாதிரியான உணவுவகைகள் கிடைக்குமென்ற போதிலும், இங்கு சத்தம் குறைவு. இங்கே காற்றுவாரிகள் இருந்ததோடு, சப்பதத்தைக் குறைக்கும் வகையில் தடித்த திரைகள் தொங்கவிடபட்டிருக்கின்றன.

"உன்னுடைய தந்தை எப்படி, எவ்வகையில் பணம்படைத்தவராக மாறினார்?" என அவனைக் கேட்டேன். பணத்தைப் பற்றி பேசுவதென்றால் அவனுக்கு கசப்பு என்றவன், நான் தெரிந்துகொண்டுதான் ஆகவேண்டுமென்றால், அவனது அப்பாவுடைய செல்வத்தைக் குறித்து சொல்ல விருப்பமென்றான். "ஷோலென் நகரிலேதான் ஆரம்பம் என்றுசொல்லவேண்டும், உள்ளூர் மக்களுக்கென்று முந்நூறு பிரத்தியேகக் குடியிருப்புகளைக் கட்டினார். பல வீதிகளை அவருடையதென்று சொல்லலாம்",- அவனது பிரெஞ்சு உச்சரிப்பில் பாரீஸ் தொனி இருக்கும்படி மிகவும் கவனத்துடன் பேசுகிறான். பணமென்று வருகிறபோதெல்லாம், அவன் பேச்சில் உண்மையிலேயே ஒரு அக்கறையின்மை இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஷோலென் நகருக்குத் தெற்கே புதிய குடியிருப்புகளக் கட்டுவதற்கு நிலங்கள் வேண்டியிருந்ததால், அவனது அப்பா தனக்குச்ச் சொந்தமான நிறையகட்டிடங்களை விற்றதாகக் கூறினான். சாடெக் நகரிலிருந்த நெல் விளையும் நிலங்களைக் கூட அதற்காத்தான் விற்றாரென்று அவன் நினைக்கிறானாம். எனக்குத் தெரிந்து, அவன் சொல்கிற மாதிரியான குடியிருப்புப் பகுதியொன்றில், கொள்ளைநோய் காரணமாக ஒருமுறை மாலையிலிருந்து மறுநாள் காலைவரை, சன்னல்களையும்,, கதவுகளையும் மூடியதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டத்தையும் தடைசெய்திருந்தார்கள், என்பதால் அவனிடம் தொற்றுநோய்களைக் குறித்து விசாரித்தேன். சிற்றூர்களைக் காட்டிலும், எலி ஒழிப்பு, இங்கே மும்முரமாகக் கடைபிடிக்கப்பட்டதால், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறான். சடாரென்று குடியிருப்புகளைப் பற்றிய தகவல்களை கதைபோல ஆர்வத்துடன் விவரிக்கத் தொடங்குகிறான். தனித்தனி வீடுகளைகளைக் காட்டிலும், இவற்றிர்க்கான கட்டுமான முதலீடு குறைவு என்பதோடு, சராசரி மக்களின் தேவைகளை வெகுவாகப் பூர்த்திசெய்யக்கூடியதாகவும் இருக்கிறதாம். இங்கு வாழ்கிற மக்கள் ஏழைகள், கிராமங்களிலிருந்து குடியேறியவர்கள், அவர்களுக்கும் தனித் தனி வீடுகளைக் காட்டிலும் சேர்ந்துவாழ்வது பிடித்தமானது, தவிர சாலையோரங்களில் உண்பதும் உறங்குவதும் அவர்களது இரத்தத்தில் கலந்தது, ஏழைகளில் இம்மாதிரியான வழக்கங்களை மதிக்கவேண்டும். எனவே அப்பா கட்டிய குடியிருப்புகள் அனைத்தும் வீதியோடு இணைந்த, வசீகரமான, மேற்கூரையிட்ட வாயில்களைக் கொண்டவை, மக்கள் பெரும்பாலான நேரங்களை வாயில்களிலேயே கழிக்கிறார்கள். கோடைநாட்களில் உறங்குவதும் நடக்கிறது. சின்னவயதில் வெளியில் உறங்க ஆசைப்பட்டதுண்டு எனவே அவனிடம் எனக்குக்கூட அதுபோன்ற குடியிருப்பொன்றில் வசிக்க விருப்பமென்று தெரிவிக்கிறேன். மதியம் என்னைப் பரவசத்தில் ஆழ்த்தியபோது, சிராய்பொன்றை ஒன்றை ஏற்படுத்தி இருந்தான், எனது இதயம் சட்டென்று அவ்விடத்தில் இடம்பெயர்ந்ததைபோல உணர்ந்தேன், கூடவே இலேசாக வலிக்கிறது. அவன் சொல்வது எதுவும் காதில் விழவில்லை, காதுகொடுத்து கேட்கும் நிலையில் நானுமில்லை. புரிந்துகொண்டவன்போல அமைதியானான். நிறுத்தாதே தொடர்ந்து பேசு என்கிறேன். அவன் தொடர, மறுபடியும் அக்கறையுடன் காதில் வாங்குகிறேன். அவனது நினைவில் முழுக்கமுழுக்க பாரீஸ் நகரம் இடம்பெற்றிருப்பதாச் சொல்கிறான். நற்குணங்களற்ற பாரீஸ் பெண்களைப்போல அல்லாமல், வேறுபட்டவளாக நான் இருக்கிறேனாம். 'குடியிருப்பு தொழில் இவ்வளவு பணத்தை உங்களுக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்குமென்று நான் நினைக்கவில்லை', என்கிறேன். அவனிடத்தில் பதிலில்லை.


அத்தியாயம் -7

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -எங்கள் இருவருக்குமான சத்திப்பு காலம் முழுவதும் அதாவது ஒன்றரை ஆண்டுகாலம், இப்படித்தான் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோமேயன்றி, இருவருக்குமான வாழ்வொன்றைப் பற்றிய நினைப்போ, அது தொடர்பான உரையாடலோ இல்லை. எங்களிருவருக்கும் பொதுவான வாழ்க்கையொன்றை கற்பனை செய்வதற்கில்லை என்பது முதல்நாளே விளங்கிவிட்டது, எனவே நடக்கும் உரையாடல்கள் இருவருக்குமான வாழ்க்கைப்பற்றிய அக்கறையின்றி சஞ்சிகைக்குறிய கருப்பொருள் தன்மையுடனோ, விவாதத்திகுறியதாகவோ, பேச்சில் ஒருவரொருக்கொருவர் ச¨ளைத்தவரல்ல என்பதை நீருபிக்கின்ற வகையிலோ இருந்தது.

" பாவம்! உனது பிரான்சு அனுபவம் மோசமாக அமைந்துவிட்டது", என்கிறேன். அதை ஆமோதித்தான். பெண்கள், கல்வி, ஞானம் அனைத்தையும் பாரீஸில் பணம் கொடுத்து வாங்க முடிந்தது என்கிறான். என்னை விட பன்னிரண்டு ஆண்டுகள் வயதில் கூடுதலாக இருப்பது அவனை பயமுறுத்துகிறது. ஏமாற்று வார்த்தைகளோ, காதல் மொழிகளோ, எதுவென்றாலும், அப்பேச்சில் நாடக அனுபவத்தின் இணக்கமும், நேர்மையும் இருக்க, அக்கறையுடன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

எனது குடும்பத்தை அறிமுகப்படுத்த இருக்கிறேனென்று சொல்ல, ஐயோ வேண்டாமே என்கிறான். நான் சிரிக்கிறேன்.

அவனது உணர்வுகளை வேடிக்கையாக வெளிப்படுத்த தெரிந்துவைத்திருக்கிறான். அவனது தந்தையைப் பகைத்துக்கொண்டு, என்னை விரும்பவோ, கைப்பிடிக்கவோ, அவனோடு அழைத்துக்கொள்ளவோ முடியாதென்பதும் புரிகிறது. தனக்குள்ள அச்சத்திலிருந்து விடுபட்டு என்னை நேசிப்பதற்குறிய துணிச்சல் அவனிடத்தில் துளியுமில்லை. என்னை அவனது பிடியில் சிக்கவைக்க முடிந்த கதாநாயகத் தன்மை ஒருபக்கம், தனது தந்தையின் பணம் ஏற்படுத்தியிருக்கும் கோழைகுணம் மறுபக்கம், இரண்டும் அவனிடத்தில் இருக்கின்றன. எனது சகோதரர்களைப் பற்றிப் பேச நான் வாய் திறந்ததால்போதும்? முகம் வெளுத்துபோகிறது. அத்தனை பயம். ஏதோ எனது குடுப்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும், தங்கள் வீட்டுப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டே ஆகவேண்டும், என்றிவனைக் கெஞ்சுவதுபோல நினைக்கிறான். எனது குடும்பத்தவர்களுக்கு எப்போதோ அவன் அர்த்தமற்றவனாக ஆகி இருப்பனாம், இனி அவளுக்கென்று கூடுதலாக மதிப்பற்றுப்போய், அதன்பொருட்டு அவளையும் ஒருநாள் இழப்பதன்றி, வேறு எதுவும் நடப்பதற்கு வாய்ப்பில்லையாம், கூறுகிறான். .

பாரீஸ¤க்குத் தான் போன நோக்கம் வணிகத்துறையில் கல்விகற்பதற்காகவென்றும், அவன் அதைத் தவிர பிறவற்றில் அக்கறைகாட்டியதால் கோபமுற்ற அவனது தந்தை, செலவுக்கென்று அனுப்பிய பணத்தைச் சுத்தமாக நிறுத்தியதோடு, சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கானப் பயணச் சீட்டையும் அனுப்பியிருந்ததால், பாரீஸைவிட்டு புறப்டவேண்டிய அவசியம் வந்ததாகக் கடைசியில் உண்மையைக் கூறினான். தனது படிப்பைத் தொடரமுடியாமல் திரும்பிவந்தற்காக வருந்துகிறானாம். தொலைதூர கல்விதிட்டத்தின் மூலம் பாதியில் விட்டக் கல்வியை முடிக்கவிருப்பதாகக் கூறுகிறான்.

எங்கள் குடுபத்துடனானச் சந்திப்பு ஷோலென் விடுதியொன்றில் ஏற்பாடு செய்யபட்ட விருந்துடன் தொடங்கியது. அம்மாவும் எனது சகோதரர்களும் சைகோனுக்கு வருகிறபோது நகரத்திலுள்ள அவர்கள் அறிந்திராத, இதுவரை நுழைந்திராத எதோவதொரு பெரிய சீன உணவுவிடுதிக்கு அழைத்துச் செல்லவேண்டுமென்று கூறுகிறேன். ஏற்பாடு செய்த, பெரும்பாலான மாலை நேர விருந்துகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகக் கழிந்தன. எனது சகோதரர்கள் அவனிடம் உரையாடுவதுமில்லை, ஏறெடுத்துப் பார்ப்பதுமில்லை, அவர்கள் கவனம் முழுதும் பரிமாறப்படும் உணவிலிருக்கிறது. அவர்களால் அவனைக் கவனிக்கப் போதவும் போதாது, அது நடக்கக்கூடியதென்றால், ஒழுங்காகக் கல்வி கற்கவும், சமுதாயத்தின் ஆரம்ப வாழ்வியல் விதிகளுக்கு இணங்கிப்போகவும் அவர்களால் முடிந்திருக்கும். உண்கிறபோது அம்மா மாத்திரம் கொஞ்சநேரம், தொடக்கத்தில், பறிமாறப்படும் உணவைக்குறித்தோ, அதிகபடியான அதன் விலைகள் குறித்தோ ஒரு சில வார்த்தைகள் கூறுவாள், பிறகு வாயைமூடிக்கொள்வாள். இரண்டுமுறை வீணாகத் அவன் முயற்சித்தான், முதலின் தனது பாரீஸ் அனுபவத்தைச் சுருக்கமாகச் சொல்ல முயன்றான், முடியவில்லை. சில சமயங்களில் அவன் எதையாவது சொல்லிக்கொண்டிருக்க, நாங்கள் ஏதோ கேட்டோமென்று பேர்பண்ணிகொண்டிருப்போம், அவ்வளவுதான். எல்லோருடைய கவனமும் உணவிலிருக்க, அவனது முயற்சிகள், நிலவிய அமைதியில் கரைந்துபோகின்றன. என் சகோதரர்ககளோ இத்தனை நாட்களாகப் பட்டினிகிடந்தவர்களைப்போல உண்கிறார்கள், இதற்குமுன், அவர்களைப்போல உண்பவர்களை வேறெங்கும் கண்டதில்லை.

உண்ட உணவிற்கான பணத்தினைச் சிறிய பீங்கான் தட்டொன்றில் எண்ணி வைக்கிறான். நாங்கள் அனைவரும் வியப்புடன் பார்க்கிறோம். முதன்முதலாக எழுபத்தெட்டு பியாஸ்தர் பணத்தை தட்டில் அடுக்கி இருக்க, மூர்ச்சை ஆகாதகுறை. அம்மாவிடம் சந்தோஷம் தாண்டவமாடுகிறது. எல்லோரும் புறப்பட தயாரானோம். 'நன்றி' என்ற சொல்லை மறந்துங்கூட ஒருவரும் வாய்திறந்து உச்சரிக்கவில்லை. இப்படியான உபசரிப்புக்காகவாவது நன்றி என்று சொல்லி இருக்கலாம். 'இல்லை', 'வணக்கம்', 'பிறகு சந்திப்போம்', 'நலமா'? போன்றவை நாங்கள் அறிந்திராத சொற்கள்.

குறிப்பாக என் இரு சகோதரர்களும் ஒரு வார்த்தைகூட அவனிடத்தில் பேசவில்லை. அவர்கள் தொட்டுணரவும், பார்க்கவும், கேட்கவும் வாய்ப்பினை அளிக்கவல்ல ஸ்தூல உடம்புடன் அவன் வரவில்லைபோலிருக்கிறது. அவர்களால் அது முடியவும்முடியாது என்பதற்கு அடுக்கடுக்காகக் காரனங்களைச் சொல்லலாம், முதலாவது என் காலடியில் அவன் கிடப்பதும், என் அன்பினைப் பெறுவதற்கான தகுதி அவனுக்கு இல்லையென்று அவர்கள் நினைப்பதும். அடுத்து பணத்திற்காக அவனுடன் இருக்கும் நம் சகோதரி, உண்மையாக அவனை நேசிக்கமாட்டாள் என்றும் அவர்கள் கருத இடமுண்டு. காதலை முறித்துக்கொள்ளும் நிலைக்குச் செல்லக்கூடியவன் இல்லை என்பதால், என்னால் நேர்படும் எந்த இடர்பாட்டையும் சகித்துக்கொள்ளக்கூடியவன் என்பதுகூட ஒரு காரணம். பிறகு அவன் ஒரு சீனன் என்பதும், நான் ஒரு ஐரோப்பிய பெண் என்பதும் அவற்றுள் மிகமுக்கியமானது. எனது மூத்த சகோதரன், அவனை ஒருபொருட்டாகவே மதிப்பதில்லை என்ற வகையிலும், அவனிடம் பேச விருப்பமில்லாமல் இருப்பதும், அவளை அப்படியொரு முன் மாதிரியான முடிவொன்றிற்கு இட்டுச் செல்கிறது. எனது காதலனுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளுக்கும் எனது சகோதரனையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். நான் மட்டு விதிவிலக்கா என்ன? எனது குடும்பத்தார் சார்பாக எதையாவது பேசவேண்டும் என்கிறபோது மட்டும் வாய்திறப்பதோடு சரி மற்ற நேரங்களில் நானும் மௌனமாகவே இருக்கிறேன், எனது குடும்பத்தை வைத்துக்கொண்டு அவனிடம் என்ன பேசமுடியும். உதாரணமாக எனது சகோதரர்கள் இரவு உணவை உண்டு முடித்தபிறகு 'சூர்சு'க்குச்(Source) சென்று குடிக்கவும், ஆடவும் விருப்பமென்று என்னிடம் தெரிவிக்க்கிறபோது, எங்கள் அனைவருக்கும் குடிக்கவும், ஆடவும் விருப்பமென்று அவனிடம் சொல்வது நானாகத்தான் இருக்கும். நான் சொல்வது எதையும் காதில் வாங்காதவன்போல நடந்துகொள்கிறான். சொன்னதைத் திரும்பச் சொல்வதோ, எனது வேண்டுகோளை மறுபடி அவனிடம் கொண்டுபோவதோ நல்லதல்ல என்பது என் மூத்த சகோதரனின் தீர்மானம், அவனுடைய பொருமலுக்கும் நான் பணிந்து ஆகவேண்டும். கடைசியில் அவனும் மனமிறங்குகிறான். எனது கெஞ்சலை முடிவுக்குக் கொண்டுவர நினைத்தவன்போல தாழ்ந்தகுரலில், ஒருசில விநாடிகள் என்னோடு தனித்திருக்க விருப்பமென்ற தனது அந்தரங்க ஆசையைத் தெரிவிக்கிறான். இப்பொழுது என் முறை, எனக்கு அவன் சொல்வது எதுவும் காதில் விழாதாதுபோல நடந்துகொள்ளவேண்டும். அவனை பழி தீர்த்துக்கொள்ளும் கூட்டத்தில் இப்போது நானும் ஒருத்தி, ஒருவகையில் எங்கள் காரியத்தினைக் குறைசொல்ல, குறிப்பாக எனது மூத்தசகோதரனின் நடத்தைக்குப் பாடம்கற்பிக்க ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தருவதற்காகவாவது அவனுக்குப் பதிலிறுக்கக்கூடாது. அவன் தொடர்ந்து, " உங்களூடைய அம்மா எவ்வளவு சோர்வாக இருக்கிறார்கள் என்று பார்", என்கிறான். உண்மையில் ஷோலென் சீனவிடுதியில் தடபுடலாகச் சாப்பிட்டதின் காரணமாக கண்களில் நித்திரை தெரிகிறது. என்னிடத்தில் பதிலில்லை. என்னுடைய மூத்தச்கோதரன் வாயிலிருந்து மோசமான வார்த்தையொன்று கேட்கிறது. அம்மா, 'எனது மூன்று பிள்ளைகளில் பெரியவனுக்கு மட்டும் ஒழுங்காக பேசவரும்' எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். திடீரென்று அங்கே அமைதி; எனது காதலனின் பயத்தினை அறிந்தவள், அவ்வாறே எனது இளைய சகோதரனும் பயப்படக்கூடியவன் என்பதை அறிந்திருக்கிறேன். மறுவார்த்தையில்லை. அடங்கிப்போகிறான். எல்லோரும் 'சூர்சு'க்குப்(Source) போகிறோம். அம்மாவும் வருகிறாள். கூடிய சீக்கிரம் உறங்கிவிடுவாள் என்று நி¨னைக்கிறேன்.

எனது மூத்த சகோதரனுக்கு முன்பாக, காதலன்போல அவன் நடந்துகொள்வதில்லை. அவனது இருப்பைத் தெரிவித்துக்கொள்வதற்கான சமிக்ஞைகள் இருந்தபோதிலும், எனக்கு அவன் இருப்பு வெற்றிடமாக, புல் பூண்டற்றுப் போனதாக உணர்த்தப்படுகிறது. எனது இச்சை மூத்த சகோதரனுக்குக் கீழ்ப்படிகிறது, அவன் என் காதலனை நிராகரிக்கிறான். இருவரையும் சேர்ந்து பார்க்கிறபோதெல்லாம், அப்படியொரு காட்சியை இனி என்னால் சகித்துக்கொள்ளகூடாதென்று நினைக்கிறேன். அவனுக்கேற்படும் இழிவுக்கு அவனது நோஞ்சான் உடலே காரணம், ஆனாலந்த நலிந்த உடலே என்னைத் திருப்திபடுத்துகிறதென்பதை எப்படி புரியவைக்க. எனது சகோதரனுக்கு அவன் ஒரு வெளியிற்சொல்லமுடியாத வெட்கக்கேடான விஷயம், பெருமைக்குரியவனல்ல. கமுக்கமாகப் பிரயோகிப்படும், என் மூத்தசகோதரனின் கட்டளைகளை மீறவோ எதிர்க்கவோ எனக்குத் துணிச்சலில்லை. இதுவே என் இளையசகோதரனென்றால் சண்டை இடமுடியும். என் காதலன் விஷயத்தில், எனக்கு எதிராகக்கூட எதையும் செய்யமுடிவதில்லை. இன்றைக்கு உங்களிடத்தில் அதைப்பற்றி சொல்கிறபோதுகூட என் கண்ணெதிரே பராக்கு பார்க்கும் பாசாங்குடன்கூடிய முகமொன்றைப் பார்க்கிறேன், அம்முகத்தில் இது தவிர வேறுவிஷயங்கள் சிந்திக்க இருக்கின்றன என்பதுபோல ஒருபாவனை. எனினும் விலையுயர்ந்த விடுதியொன்றில் நன்றாகச் சாப்பிட ஆசைப்பட்டு, இதுபோன்ற அவமதிப்புகளை சகித்துக்கொள்ளவேண்டியிருக்கிறதே என்பதால் ஏற்பட்ட எரிச்சலில், கீழ்வாய்ப்பகுதி சற்றே இறுக, அதற்கான நியாயத்தையும் புரிந்துகொள்கிறேன். எனது நினைவுகளைச் சூழ்ந்தபடி எங்கும் வேட்டையாடுபவர்களுக்கான தெளிந்த இரவு. குழந்தையொன்று 'வீல்' என்று அழுவதையொத்த சத்தம், எதிர்பாராத நேரத்தில் புறப்பட்டு அச்சுறுத்துகிறது.

சூர்ஸ¤க்குச்(Source) சென்ற பிறகும் நாங்கள் அவனிடம் உரையாடலில்லை என்றே சொல்லவேண்டும்.

மர்த்தெல் பெரியே(Martel Perrier) கொண்டு வரச் செய்தோம். என் சகோதரர்களிருவரும், கொண்டுவந்த உடனேயே மடமடவென்று குடித்துவிட்டு, இரண்டாவதாக ஒன்று வேண்டுமென்றார்கள். அம்மாவும், நானும் எங்களுடையதை அவர்களிடம் கொடுத்தோம். குடித்து முடித்தார்களோ இல்லையோ, போதை தலைக்கேறியது. என் காதலனிடத்தில் பேசவில்லை என்ற குறையே தவிர, அவர்கள் புலம்பலில் குறைச்சல் இல்லை, குறிப்பாக எனது இளைய சகோதரனைச் சொல்லவேண்டும். அந்த இடம் ஏதோ இழவு வீடுபோல இருப்பதாகக் குறைபட்டுகொள்கிறான், தவிர அங்கே மது பரிமாற பெண்கள் இல்லையே என்ற வருத்தம் வேறு. வார நாட்கள் என்பதால் சூர்சு(Source)வில் அதிகக் கூட்டமில்லை. எனது இளைய சகோதரனுடன் சிறிது நேரம் ஆடினேன். என் காதலனுடனும் சிறிது நேரம் ஆடினேன். எனது மூத்த சகோதரனோடு நான் ஆடவில்லை, அவனுடன் இதற்கு முன்பு ஆடியதுமில்லை. ஓர் ஆணுக்கான கவர்ச்சி அவனுடலில் அதிகமென்று நினைக்கிறேன், அது ஏற்படுத்தும் பயம் என்னை அவனை நெருங்கவிடாமல் தடுக்கிறது. எங்கள் இருவருக்கும் பொதுவான அம்சம் எங்கள் முகத்துக்கிடையே உள்ள ஒற்றுமை. ஷோலென் நகரத்து சீனனுடைய கண்கள் கலங்கி இருக்கின்றன, கொஞ்சம் சீண்டினால் அழுது விடுவான்போல. என்னிடம், " நான் அவர்களுக்கு என்ன குற்றம் செய்தேன்?", என்கிறான். பதிலுக்கு நான் அவனிடம்," உனக்கெதற்கு அவர்களைப் பற்றிய கவலை, வீட்டிலும் இதுதான் நிலைமை, எந்த மாதிரியான சூழ்நிலையென்றாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதென்பது அரிது", என்கிறேன்.


அத்தியாயம் -8

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -அவனது அறைக்குத் திரும்பியதும், விளக்கமாய் எடுத்துரைக்கவேண்டும். நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும், அல்லது எங்களுக்கு எது நேர்ந்தாலும், எனது மூத்த சகோதரனிடத்தில் முரட்டுசுபாவமும், பரிவற்றதன்மையும், பிறர்அவமதிப்பும் வெளிப்பட்டிருக்கிறது. அந்நேரங்களில் அவனது முதற்தேர்வு எதிராளிகளைக் கொல்லுதல் அல்லது அவர்களது வாழ்க்கையை அர்த்தமற்றதாக ஆக்குதல், இக்கட்டான நேரங்களில் அவர்களிடமிருந்து ஒதுங்கிக்கொள்ளுதல், எதிர்வாதம்செய்தல், வெருட்டுதல், வேதனைப்படுத்துதலென்று எதையாவது செய்வான். அவனுடைய செய்கைகளாற் கலக்கமுறக்கூடியவளென்று பார்க்கையில் நானொருத்தியாகத்தான் இருப்பேன் என்பதால், எனது காதலன் பயப்பட ஒன்றுமில்லை, எனவே அதைத் தவிர்க்கவேண்டுகிறேன்.

காலையோ, மாலையோ, அல்லது புதுவருடமோ எதுவாக இருக்கட்டும் நாங்கள் வணக்கமோ வாழ்த்தோ சொல்லிக்கொள்வதில்லை. நன்றியென்ற சொல்லை அறிந்ததில்லை. எங்களுக்கிடையே உரையாடல்களில்லை, அதற்கான தேவையுமில்லை. ஒவ்வொருவரும் மற்றவரிடத்தில் ஊமையாய் இருக்கப் பழகிக்கொள்கிறோம். எதற்கும் இளகாதக் கல்நெஞ்சக்காரர்கள் நாங்கள். எங்கள் நாட்கள் ஒவ்வொன்றும், எப்படியாவது அடுத்தவரை முடித்துவிடவேண்டும் என்றகவலையோடு பிறக்கிறது, அதற்கான முயற்சியிலும் இறங்குகிறோம். பேசுவது இருக்கட்டும், ஒருவரையொருவர் நேரிட்டுக்கொள்வதையும் தவிர்க்கிறோம். அடுத்தவரை காண்கிறபோதெல்லாம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறோம். நேரிட்டுப் பார்ப்பதென்பது, பிறரிடத்தில் அல்லது பிறருக்கென்று வெளிப்படுத்தும் ஒருவித ஆர்வச் கோளாறு, அது நம்மைக் கீழ்மைப்படுத்திவிடுமென்பது எங்களுடைய எண்ணம். பார்க்கப்படுகிற ஒருவருக்கும் பார்க்கும்படியான தகுதிகளில்லை. அது தகுதியற்ற செயல். 'உரையாடல்' என்ற சொல் எங்கள் அகராதியிலில்லை, மாறாக பாசாங்கும், அகம்பாவமும் எங்களிடத்திருந்தன. வீட்டுநிகழ்ச்சியோ அல்லது பொது நிகழ்ச்சியோ - நிகழ்ச்சியென்று ஒன்றுகூடுகிறபோது, மற்றவர்களுக்கு நாங்கள் இழிவானவர்கள், வெறுக்கத்தக்கவர்கள். மிகக் கேவலமாக வாழ்வதே எங்கள் அத்தனைபேரின் நோக்கம். இச்சமுதாயத்தாற் சீரழிக்கபட்ட நம்பிக்கைக்குரிய பெண்மணி ஒருத்தியை மூன்றுபிள்ளைகளும் தாயாகப் பெற்றிருந்தது ஒன்றுதான் எங்களிடையே இருக்கிற ஆழமான ஒற்றுமை. விரக்தியின் விளிம்பில் எங்கள் அன்னையைத் தள்ளிய சமுதாயத்தின் பக்கம் நாங்கள் இருக்கிறோம். எங்கள் பாசத்திற்கும், நம்பிக்கைக்கும் உரிய அம்மாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிகள், வாழ்க்கை மீதான கசப்பினை எங்களிடத்திற் கூட்டியிருக்கிறது. அவ்வப்போது வீட்டில் அரங்கேறிய நம்பிக்கை பொய்த்த காட்சியிடமிருந்துகூட அவள் பாடங் கற்றுகொள்ளவில்லை, குறிப்பாக அவளது பையன்கள் அதாவது இருமகன்ககளால் ஏற்பட்ட விபரீதம். இவற்றையெல்லாம் முன்கூட்டியே ஒருவேளை அறிந்திருந்தாளா? அவளுடைய வாழ்க்கையே பொய்த்துவிட்ட நிலையில், எப்படி இவளாள் அமைதியாக இருக்க முடிகிறது? முகம், பார்வை, பேச்சு, அன்பு என அத்தனையையும் பொய்யாய், போலியாய் வெளிப்படுத்தும் திறனை எங்கிருந்து பெறுகிறாள். எதற்காக வாழவேண்டும்? இறந்து தொலைத்திருக்கலாமே. வாழ்வதற்கு இயலாத சமுதாயத்திலிருந்து விலகி நிற்பதும், வயதில் மூத்தவனை, இளையவர்களிடமிருந்து பிரித்ததும் அவளல்ல. விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காதவள், பொறுப்பற்றவள், இயல்புகளுக்கு மாறானவளென எல்லாமாக இருந்தவள். அதனாற்றான், அவளுக்கு இயலுமென்றால்கூட பலநேரங்களில் அமைதியாகவோ, ஒதுங்கிக்கொள்ளவோ, பொய்சொல்லவோ முடிவதில்லை. நாங்கள் மூவரும் பலவகையில் வேறுபட்டிருப்பினும், அவளுடனான எங்கள் அன்பில் மாத்திரம் ஒத்திருந்தோம்.

ஏழாண்டு காலம் அது தொடர்ந்தது. எங்களுக்குப் பத்து ஆண்டுகளிருக்கையில் ஆரம்பித்தது. பிறகு பன்னிரண்டு ஆண்டுகள், பிறகு பதினான்கு ஆண்டுகள், பதினைந்து ஆண்டுகள், பதினாறு ஆண்டுகள், பதினேழு ஆண்டுகள்..

ஆக மேற்சொன்ன எல்லாவயதுகாலத்திலும் தொடர்ந்து நடந்தது அதாவது ஏழாண்டுகாலம். அதுவரை இருந்த நம்பிக்கையெல்லாம் பொய்த்துப்போனது அல்லது விட்டுப்போனது. சமுத்திரத்திற்கு எதிரான எங்கள் முயற்சிகள்கூட கைவிட்டுப்போயின. தாழ்வாரத்தின் கீழ் உட்கார்ந்தபடி சியாம் மலையினைவேடிக்கைப் பார்க்கிறோம், சூரியன் உச்சிக்கு வந்திருந்தநேரம், கன்னங்கரேலென்று இருட்டினைப்போல காட்சியளிக்கும் மலை. இறுதியில் வாயடைத்து அம்மா ஊமைபோல நிற்கிறாள். பிள்ளைகள் எங்களுடைய வாழ்க்கை அலுப்புற்றதாகவிருந்தாலும், எதையும் எதிர்கொள்ள தயாராகவிருந்தோம்.

இளைய சகோதரன் 1942ம் ஆண்டு டிசம்பர், ஜப்பானியர் ஆக்ரமிப்பிலிருந்த சமயம் இறந்திருந்தான். பள்ளி இறுதிவகுப்பான இரண்டாவது சான்றிதழைப் பெற்ற பிறகு சைகோனிலிருந்து 1931ம் ஆண்டே புறப்பட்டு விட்டேன். பத்து ஆண்டுகளிம் ஒரே ஒருமுறைதான் எனக்குக் கடிதம் எழுதியிருந்தான். அதற்கான காரணம் என்னவென்று ஒருபோதும் எனக்குத் தெரியாது. அளவாக, பிழையின்றி, படியெடுத்து, முத்துமுத்தாக எழுதபட்டக் கடிதம். அவன் நன்றாக இருப்பதாக கடிதம் தெரிவித்தது, பள்ளி வாழ்க்கையிலும் பிரச்சினைகளில்லையென தெரிவித்திருந்தான். இரண்டுபக்கங்களை நிரப்பியிருந்த ஒரு பெரிய கடிதம். அவனுடைய குழந்தைத் தனமான கையெழுத்து நானறிந்ததுதான். கடிதத்தில் சொந்தமாக ஒரு மகிழுந்தும், வசிப்பதற்கான இருப்பிடமும் உண்டென எழுதியிருந்ததோடு, அவை தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தான். மீண்டும் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தது, தான் நன்றாக இருப்பது, எல்லாம் ஒழுங்காக இருக்கிறது என எதையும் விடவில்லை. என்னை மிகவும் நேசிப்பதாகக் கடிதத்தை முடித்திருந்தான். நடந்த யுத்தத்தைப் பற்றியோ, எனது மூத்தசகோதரனைப் பற்றியோ மருந்துக்கும் ஒரு வார்த்தை அதிலில்லை.

எனது சகோதரர்களைக்குறித்து பேசுவதே எங்கள் எல்லோரையும்பற்றிப் பேசுவதற்குச் சமம், அவளும் - அதாவது அம்மாவும் அதைத்தான் செய்தாள். நான் 'என் சகோதர்கள்' என்ற சொல்லைக் கையாளுவதுபோலவே, அவளும் மற்றவர்களிடத்தில் பேசுகிறபோது 'என் மகன்கள்' என்று சொல்வது வழக்கம். தன் மகன்களில் வலிமையைப் பற்றி அவள் சொல்வதெல்லாம், அவர்களுக்குப் புகழ் சேர்ப்பதாக இருக்காது. வெளியில் அதுபற்றி விவரமாகப் பேசுவதில்லை. மூத்தமகன் இளைய மகனைவிட பலசாலி என்பாள். வடபகுதியில் விவசாயம் பார்க்கிற சகோதரர்களைக் காட்டிலும் பலசாலியென்று கூடச் சொல்லியிருக்கிறாள். விவசாயம் பார்க்கிற சகோதர்களைப்போலவே தன் பிள்ளைகளும் பலசலியாக இருப்பதில் அவளுக்குப் பெருமை. தனது மூத்தமகனைப்போலவே அவளும் நலிந்த மனிதர்களை மதிப்பதில்லை. எனது ஷோலென் பிரதேசத்துக் காதலன் கூட அவளது மூத்தமகனைப் போலத்தானாம். அவள் சொன்னவற்றை இங்கே எழுத இயலாது. அவை பாலை நிலங்களில் கிடக்கிற சடலங்களுக்கு ஒப்பானது. 'எனது சகோதர்கள்' என்று இப்போது சொல்லக்காரணம் அந்நாட்களில் அவர்களை அப்படித்தான் அழைத்தேன். அப்படி அழைத்தது என் இளையசகோதரன் பெரியவனாகி உயிர்த்தியாகம் செய்யும்வரைத் தொடர்ந்தது.

எங்கள் குடும்பத்தில் விழாவென்று எதையும் கொண்டாடியதில்லை. கிறிஸ்துமஸ் மர அலங்கரிப்பில்லை, கைக்குட்டைகளில் அலங்காரமோ, பூவேலைபாடுகளோ ஒருபோதும் செய்ததில்லை. அதுபோலவே நான் வீட்டிலிருந்தவரை மரணமோ, உடலடக்கமோ, நினைவுகூறலோ நடத்தப்பட்டதில்லை. அவள் தனித்திருக்கிறாள். மூத்த சகோதரன் கொலைகாரன் என்ற பட்டத்துடன், இருக்கவேண்டியிருக்கிறது. பின்னாளில் இளையசகோதரன் இறப்புக்குக் காரணமாகிறான். நான் புறப்பட்டிருந்தேன், அதாவது வேருடன் பிடுங்கப்பட்டிருந்தேன். அவன் இறக்கும்வரை மூத்த சகோதரன் வசம் இருந்தான்.

அந்த நேரத்தில் 'ஷோலென்', அதுசம்பந்தப்பட்ட 'படிமங்கள்', 'காதலன்', 'அம்மா' ஆகியச் சொற்கள் என்னைப் பைத்தியக்காரியாக மாற்றியிருந்தன. உண்மையில் ஷோலெனில் என்ன நடந்ததென்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை அவதானிக்கிறாள் என்பதும், ஒரு சிலவற்றை சந்தேகிக்கிறாள் என்பதும் புரிகிறது. குழைந்தையான தன் மகளைப் பற்றி நன்கு அறிந்தவளில்லையா? மோப்பம் பிடித்துக்கொண்டு அக்குழந்தையைச் சுற்றி வருகிறாள். சமீபத்தில் என்ன ஆயிற்றோ, அவளிடத்தில் ஒருவிதமாற்றம் அதை எச்சரிக்கை என்றும் சொல்லலாம், நெருக்கத்தில் நடந்தது அவளது கவனத்தை ஈர்த்திருக்கிறது, வழக்கத்திற்கு மாறாக நிதானமாக வார்த்தைகள் வருகின்றன. எதிலும் ஆர்வம் காட்டுகிற அவளால், நினைவைத் தொலைத்துவிட்டவள்போல நடமாடமுடிகிறது, நேரான பார்வையைத் தவிர்க்கிறாள், தனது சொந்தத்தாய்க்கே வேடிக்கைப்பொருளாக, வேதனைத் தருபவளாக அவள் மாறியிருக்கிறாள். நடக்கிற சம்பவத்தை வேடிக்கைப் பார்க்கிறாள் என்றும் சொல்லலாம். எனது அம்மாவின் வாழ்க்கையில் எதிர்பாராதவொரு அசம்பாவிதம். அவளது மகள் அவளைப் பொறுத்தவரையில் திருமணமென்றால் என்னவென்று அறிந்திராதவள்; சமுதாயத்தில் தனக்குரிய இடத்தை இன்னமும் தேடிப் பெறாதவள்; அவளோடு ஒப்பிடுகிறபோது பரிதாபத்திற்குறியவள், வீணாய்ப்போனவள், ஒதுக்கபட்டவள், அவ்வாறிருக்க அந்த மகள் ஆபத்தைத் தேடிப்போகிறாள். அவற்றையெல்லாம் நினைத்தமாத்திரத்தில், பைத்தியக்காரிபோல என்மீது விழுந்து பிறாண்டுகிறாள், விரல்களை மடித்து என்னைத் தாக்குகிறாள், எனது உடல், எனது ஆடையென்று மோப்பம் பிடித்தவள், அதில் சீனன் உபயோகிக்கும் வாசனைதிரவியத்தின் மணம் வீசுகிறதென்கிறாள், அவளது குற்றச்சாட்டு எல்லை மீறுகிறது. என்னுடைய ஆடையில் சந்தேகத்திற்குரிய கறைகள் இருக்கிறதாவென்று திரும்பத் திரும்பப் பார்க்கிறாள், அவளது மகள் விபச்சாரியென்று ஊர்முழுக்கப் பேச்சாம், வீதியில் நிறுத்தப் போகிறாளாம், பட்டினிகிடக்கப் பார்க்கவேண்டுமாம், அப்போதுதான் ஒருவரும் என்னைச் சீண்டமாட்டார்களாம், நாயினும் கேவலமானவளாம். வீட்டிலுள்ள நாற்றம் போகவேண்டுமென்றால், மகளை வீட்டைவிட்டுவெளியேற்றாமல் வீட்டிற் வைத்துகொண்டு என்னசெய்யப்போகிறேனென்று அழுகிறாள்.

அடைத்து சாத்தப்பட்ட அறையின் நான்கு சுவர்களுக்குள்ளே, என் சகோதரன்.

அடுத்தவர்க்குக் கேட்டுவிடக்கூடாதென்போல, அவன் குரல் உள்ளிருந்து மெதுவாக வருகிறது."பிள்ளைகளை அடித்துவளர்க்க தாய்க்கு உரிமை இருக்கிறது", என்கிறான், சொற்களில் அன்பு குழைந்திருக்கின்றன. "உண்மையை அறிய எதுவென்றாலும் பரவாயில்லை", என்கிறான். அம்மாவுடைய இந்த மோசமான நிலமைக்கு விடிவு காணவேண்டுமெனில், மகள் தனது பாதையை மாற்றிக்கொள்ளமென்கிற உண்மையை அவர்கள் அவளுக்குக் கட்டாயம் உணர்த்தவேண்டுமாம். அம்மா தனது முழுபலத்தையும் உபயோகித்து அடிக்கிறாள். என் இளையசகோதரன் வேண்டாமென்று கதறித் தடுக்கிறான். தோட்டத்துப் பக்கம்சென்றவன் மறைந்துகொள்கிறான். என்னைக் கொன்றுவிடுவார்களென்கிற அச்சம். உண்மையில் அவனுக்கு வேறொருவனிடம் பயம், அவன் எனது மூத்தசகோதரன். என் தம்பிக்கு ஏற்பட்ட அச்சம், அம்மாவின் கோபத்தைத் தணிக்கிறது. சீரழிந்த அவளது வாழ்க்கையை எண்ணியும், குடும்பத்திற்கு அவப்பெயரைச் சம்பாதித்த தனது மகளை எண்ணியும் அழுகிறாள். இப்போது நானும் அவளுடன் சேர்ந்துகொண்டு, என்பங்கிற்கு அழுகிறேன். "எனது வாழ்க்கையில் எதுவும் நேர்ந்துவிடாது, என்னை முத்தமிடுவதற்குக்கூட ஒருவரையும் அனுமதிக்கமாட்டேன், இது சத்தியம்", என்கிறேன், பொய் சொல்கிறென் என்பதும் புரியாமலில்லை. "நோஞ்சானாகவும், சகிக்கமுடியாதத் தோற்றத்துடனுமிருக்கும் ஒரு சீனனுடன் எனக்கு உறவிருக்குமென எப்படி உன்னால் நினக்க முடிகிறது?", என்று அவளைக் கேட்கிறேன். என் அண்ணன் கதவருகில் நின்று ஒட்டுக்கேட்பானென்று எனக்குத் தெரியும். அம்மா என்னசெய்வாளென்பதும் அவனுக்குத் தெரியும். நான் நிர்வாணமாக இருப்பதும், என்னை அவள் அடிக்கிறாள் என்பதுகூட அவன் அறிந்ததுதான். அது தொடரவேண்டுமென்று நினைக்கிறான். என் மூத்த சகோதரன் மனதிற் தீட்டியுள்ள அருவருப்பான, கலவரமூட்டக்கூடிய ஓவியத்தினைக் குறித்த அறிவு அவளுக்கில்லை.


அத்தியாயம் -9

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -அப்போதெல்லாம் நாங்கள் வயதில் மிகவும் சிறியவர்கள். என் சகோதரர்கள் இருவரும் வெளிப்படையான காரணங்களின்றி ஒரு நாளைப்போல சண்டையிட்டுக்கொள்கிறார்கள். எனது மூத்த சகோதரனுக்கு வழக்கமாகக் காரணம் ஒன்றுண்டு, அது அன்றைக்கும் என் இளைய சகோதரனிடத்தில் சொல்லப்படுகிறது: " எனக்குத் தொந்தரவு கொடுக்காதே, வெளியிற் போ!" சொல்லி முடித்தானோ இல்லையோ, தம்பியை அடிக்கிறான். வாய்ச் சொல்லுக்குச் செலவின்றி இருவருக்குமிடையே கைகலப்பு. அவ்வப்போது ஸ்.. ஸ்ஸென்று வெளிப்படும் மூச்சுக்காற்றும், பொருமலும், அதிகச் சத்தமின்றி மாறிமாறி இருவரும் குத்திக்கொள்வதும் கேட்கின்றன. இதுபோன்ற சம்பவங்களின்போது, பொதுவாக அம்மா இசைநாடகங்களை பாராட்டுவதுபோல சத்தமிட்டு ஆரவாரம் செய்வது வழக்கம்.

இருவரும் கோபப்படுங்கலையில் தேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அக்கோபத்தினை சாதாரணரகமென்று சொல்வதற்கில்லை, ஆபத்தானது, ஒருவிதமான கொலைவெறி தன்மை கொண்டது. அதை வேறு சகோதரர்களிடத்திலோ, வேறு சகோதரிகளிடத்திலோ, வேறு அம்மாக்களிடத்திலோ காண்பதரிது. என் அண்ணனுக்கு விருப்பம்போல பாதகங்களை செய்யவும், தீர்மானிக்கவும் இங்கென்று இல்லை வேறு இடங்களிற்கூட முடிவதில்லையே என்ற ஏக்கமுண்டு. அவனது இத்திறனை எதிர்க்கப் பலமின்றி பரிதாபமான நிலைமையில் என் தம்பி.

சண்டையிடுகிறபோது, இருவரில் ஒருவர் உயிருக்கு ஆபத்தென்பதுபோல அஞ்சுவோம். பிறந்ததிலிருந்தே இருவரும், ஒற்றுமையாக விளையாடியதைக் காட்டிலும் சண்டையிட்டுக்கொண்டதே அதிகமென்று அம்மா சொல்லிக்கொண்டிருப்பாள். இருசகோதரர்களிடத்திலுமுள்ள பொதுவான ஒற்றுமையென்று, அவர்களுடைய அம்மா மற்றும் சகோதரியிடத்திலுள்ள இரத்த உறவினைத்தான் குறிப்பிடவேண்டும்.

அம்மா தனது மூத்த மகனைப்பற்றி பேசும்போதுமட்டும் 'என் பிள்ளை'யென்று சொல்லக் கேட்டிருக்கிறேன்; எங்கள் இருவரையும், 'சின்னப் பிள்ளைகள்' என்று அழைப்பதோடு சரி.

பொதுவாக எங்கள் வீட்டிலிருந்து எந்த ரகசியமும் வெளியிற்போகாது. இப்படி வாய்மூடிக்கிடக்கக் கற்றுக்கொடுத்ததே எங்கள் வாழ்க்கையில் முக்கியபங்கினை வகித்த வறுமையென்று கூறலாம், பிறகுதான் மற்றவை. நாங்கள் கட்டிக்காத்த ரகசியங்களுள் முதன்மையானது (இச்சொல் கொஞ்சம் அதிகப்படியானதாக உங்களுக்குப்படலாம்) காதலர் குறித்தத் தகவல்களும், பின்னர் காலனிகளுக்கு வெளியேயென்று ஆரம்பித்து, சைகோன் தெருக்களில்; தோணிப்பயனங்களில், இரயில் பயணங்களின்போது எனத் தொடர்ந்து, இறுதியில் எங்கெல்லாம் முடியுமோ அங்கென காதலர்களுடன் வைத்துக்கொள்கிற சந்திப்புகளூம் ஆகும்.

மாலைவேளையில், குறிப்பாக வறட்சி காலத்தில், திடீரென்று அம்மா கழுவித் தள்ளுகிறேன் பேர்வழிஎன்று ஆரம்பித்துவிடுவாள், வீட்டைத் தூய்மைப்படுத்தவும், குளிர்ச்சிப்படுத்தவும் முழுவதுமாக கழுவியாகவேண்டும் என்பது, அவள் சொல்லுங் காரணம். வீடு, தோட்டத்திலிருந்து பிரிந்து மேடான பகுதில் கட்டப்பட்டிருக்கிறது. அவ்வாறு கட்டபட்டிருப்பதால் பாம்பு, தேள், எறும்பு முதலானவற்றின் படையெடுப்பிலிருந்தும், மீகாங் நதியின் உடைப்பிலிருந்தும், பருவமழையின்போது அடிக்கும் சூராவளியிலிருந்தும் தப்ப முடிகிறது. நிலப்பகுதியிலிருந்து சற்று மேடானப் பகுதியில் வீடு இருப்பதால் பெரியவாளிகளை உபயோகித்து, தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவதுபோல நிறைய தண்ணீர் முகர்ந்து கழுவ முடிந்தது. இருக்கிற நாற்காலிகள் அனைத்தும் மேசைமேல் ஏற்றப்படும். வீடு முழுக்க நீரோடைகள் பாயும். கூடத்தில் இருக்கிற பியானோவின் கால்கள் நீரில் ஊறிக்கொண்டிருக்கும். படிகளில் வழியும் நீர் முற்றத்தை நனைக்கும். வேலைக்காரப் பையன்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள், அவர்களுடன் சேர்ந்துகொண்டு தண்ணீரில் நனைகிறோம், பிரான்சு நாட்டில் மர்செய்(Marseille) பகுதியில் தயாரிக்கப்படும் ஒருவிதமான கிருமி நாசினி சவுக்காரத்தினைத் தரைக்குப் போடுகிறோம். காலணிகளென்று எதையும் அணிவதில்லை, அம்மா உட்பட அனைவரும் வெற்றுக்கால்களுடனிருக்கிறோம். அற்பத்தனமான சங்கதிகளை அம்மா கண்டிப்பதில்லை ஆதலால் சிரிக்க மட்டும் செய்கிறாள். புயல்மழைக்குப்பிறகு ஈர பூமியிலிருந்து எழுகிற மணத்தைப்போல வீடு முழுக்க நறுமணம். அம்மணம், வேறு மணங்களுடன் இணைகிறபொழுது குறிப்பாக மர்செய் சவுக்காரம்; தூயதன்மை, உண்மை, துவைத்தத் துணிகள் மற்றும் அதன் வெண்மை போன்றவற்றோடு கலந்து, மகிழ்ச்சியில் மூழ்கடிக்கிறது. தண்ணீர் நாங்கள் உபயோகிக்கும் பாதைகளையும் விட்டுவைக்கவில்லை மூழ்கடித்து விடுகிறது. வேலைக்கார சிறார்களின் குடும்பம், பையன்களின் கூட்டாளிகள், அண்டையிலிருக்கிற வெள்ளைக்கார சிறுவர்களென பெரியதொரு கூட்டஞ் சேர்ந்துவிடுகிறது. வீட்டை இப்படி கலைத்துப் போடுவது, அம்மாவை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. சிலவற்றை மறக்க இதுபோன்ற நேரங்கள் நல்வாய்ப்பாக அமைகின்றன, வீட்டைக் கழுவுதல் அதிலொன்று. அம்மா கூடத்திற்குப் போகிறாள், பியானோவைத் திறந்து, பள்ளியில் கற்றிருந்த இசைக்குறிப்பொன்றை வாசிக்கிறாள், அவள் கற்றிருக்கிற ஒன்றேயொன்று. பாடுகிறாள், அடுத்து வாசிக்கிறாள். சிரிக்கிறாள். உட்கார்ந்திருந்தவள் எழுந்து நிற்கிறாள், பிறகு பாடிக்கொண்டே ஆடுகிறாள். சீர்குலைந்திருக்கும் வீடொன்று சட்டென்று ஒரு குளமாக, ஆறொட்டிய நஞ்சை நிலமாக, ஆழமற்ற துறைநீராக, நதிக்கரையாக அவதாரமெடுக்கிறபோது ஒரு தாயாரானவள் மகிழ்ச்சிகொள்ளலாமென மற்றவர்கள் நினைப்பதுபோலவே அவளும் எண்ணுகிறாள்போலிருக்கிறது.

அந்த வீட்டில் கடைசியாய்ப் பிறந்த பையனும் பெண்ணும் முதன்முதலாக அச்சம்பவத்தை நினைவுபடுத்திக்கொள்கிறார்கள். சிரித்துக்கொண்டிருந்தவர்கள் சட்டென்று நிறுத்திக்கொண்டு, மாலை முதலில் கால்வைக்கிற தோட்டத்துக்குப் போகிறார்கள்.

இதை எழுதிகிற இந்நேரத்தில், சட்டென்று என் நினைவுக்கு வருவது, நாங்கள் வீட்டை இவ்வாறு தண்ணீரில் மூழ்கடித்தபோது என் அண்ணன் வேன்லோங்கில்(Vinhlong) இல்லை, பிரான்சு நாட்டில் எங்கள் கிராமமான லோ-எ-கரோன்னில்(Lot-et-Garonne), எங்கள் பங்குத்தந்தையின் ஆதரவிலிருந்தான்.

அவனும் ஒருசிலநேரங்களில் எங்களைப்போலவே சிரிப்பவன், எனினும் எங்கள் அளவிற்குப் பைத்தியகாரத்தனமான சிரிப்பினை அவனிடம் பார்க்கமுடியாது. எல்லாவற்றையும் மறக்க விரும்புகிறேன், உங்களிடத்தில் சொல்லக்கூட விருப்பமில்லை, அதனினும் பார்க்க நாங்கள் சிரிக்கும் பிள்ளைகளாக இருந்ததையும், அச்சிரிப்பினூடாக சுவாசத்தையும் வாழ்க்கையையும் தொலைக்க நாங்கள் விரும்பியதையும் பகிர்ந்துகொள்ளாலாமென்று நினைக்கிறேன்.

போருக்கும், எனது பிள்ளைப் பருவத்திற்கும் நிறங்களில் அதிக பேதமில்லை. பலநேரங்களில், என் அண்ணனுடைய அட்டூழிய காலத்தையும், போர் நடந்த காலத்தையும் ஒன்றாக எண்ணி குழப்பிக்கொள்கிறேன். ஒருவேளை எனது தம்பி அச்சமயத்தில் இறந்தது காரணமாகயிருக்கலாம். இதற்கு முன்பு நான் குறிப்பிட்டிருந்ததுபோல, அவனது இதயத்தை விட்டுச் சென்றிருக்கிறான். எனது மூத்தச்சகோதரன் அதை ஒருபோதும் சந்தித்தவனில்லை. அதற்கு முன்பாக என் இளைய சகோதரன் உயிருடன் இருக்கிறானா அல்லது இறந்துவிட்டானா என்றத் தகவலைக்கூட மூத்த சகோதரன் சுமந்து சென்றவனில்லை என்கிறபொழுது, இதயம் எக்கேடு கெட்டாலென்ன? மூத்தச்கோதரனைபோலவே போர் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறது, ஊடுருவுகிறது, களவாடுகிறது, சிறைப்படுத்துகிறது, கலந்து, அங்குமிங்குமாய், உடலில், எண்ணத்தில், முதல் நாளில், உறக்கத்தில், எல்லா நேரங்களிலும், நேசிப்புக்குரிய சிறுபிள்ளை உடலை ஆக்ரமித்துள்ள போதைகிளர்ச்சியின் இரையாக, மெலிந்தவர் சரீரத்தில், குறிப்பாக தோற்றவர்களிடம் அங்குதானே கெட்டதைச் சுலபமாக அரங்கேற்றமுடியும் அதனால் அவர்கள் அண்மையில், அவர்கள் உடலோடென்று எங்கும் இவ்விரண்டும் இருக்கின்றன.

மீண்டும் அவனுடைய அறைக்கு வருகிறோம். நாங்கள் காதலரில்லையா? எங்கள் இருவருக்குமிடையேயான காதலை ஒருவர் மற்றவர்க்கு உணர்த்தவேண்டுமே அதற்காக. அவனுடன் உறங்கிவிடுவதால் சிலவேளைகளில், விடுதிக்குத் திரும்பமுடியாமல் போய்விடுகிறது. அவனது அணைப்பில், கதகதப்பில் உறங்க விருப்பமில்லையென்கிறபோதும், அவனுடைய அறையில், அவனுடைய கட்டிலில் தூங்கிவிடுகிறேன். சில நேரங்களில் பள்ளிக்குச் செல்வதும் இயலாமற் போகிறது. இரவு உணவினை நகரத்தில் முடிக்கிறோம். எனக்குத் தூறற்குளியல் செய்விக்கிறான், நீராட்டுகிறான், நீரில் நனைக்கிறான், அவற்றையும் விரும்பிச் செய்கிறான். எனக்கு ஒப்பனை செய்கிறான், உடுத்திப்பார்க்கிறான், என்னை துதிக்கவும் செய்கிறான். அவனுடைய வாழ்க்கைக்கு நான் மிகவும் வேண்டப்பட்டவள். இன்னொருவனுடனான எனது சந்திப்பென்பது அவனை அதைரியப்படுத்தக்கூடியது. அதுபோன்ற சம்பவங்களுக்கு அதாவது அவன் வேறொருத்தியோடு போனால் நான் கவலைப்படுபவளல்ல. அவனுக்கு வேறொரு அச்சமும் இருக்கிறது. அவ்வச்சம் நான் வெள்ளைக்காரி என்பதால் துளிர்ப்பதல்ல, நானொரு சிறுவயது பெண் என்பதால் வருவது. எங்களிருவருக்குமான உறவு பற்றிய உண்மை வெளிஉலகிறகுத் தெரியவரும்போது, எனது சிறுவயது அவனை சிறைக்குள் தள்ளிவிடுமென்று பயப்படுகிறான். அதனால் என் மூத்தசகோதரன்,என் அம்மா மாத்திரமல்ல வெளி உலகிற்கும் எங்கள் ரகசிய உறவு தெரியக்கூடாதாம். தொடர்ந்து பொய் சொல்லி சாமர்த்தியமாக மறைக்கவேண்டுமென்கிறான். நானும் பொய்களைத் தொடர்ந்து கூறிவருகிறேன். அவனுடைய பயத்தினை நினைத்து சிரிக்கிறேன். இப்போதுள்ள எங்கள் தரித்திர நிலையில் மறுபடியும் வழக்கு வம்பென்று யாரையும் எதிர்த்து அம்மா நீதிமன்றம் போக வாய்ப்பில்லை என்கிறேன். அவள் போடாத வழக்கில்லை அத்தனையும் தோற்றிருக்கின்றன: நில அளவு பிரச்சினைக்காக, நிருவாகிகளுக்கு எதிராக, ஆளுனர்களுக்கு எதிராக, சட்டத்திற்கு எதிராக.. அவளால் அமைதிகாக்க முடியாது, அவளால் முடிந்ததெல்லாம் வழக்குப் போடுவது, போட்டாள். மீண்டும் மீண்டும் காத்திருப்பது அவளால் இயலாது. அப்படி வழக்குகள்போட்டே சீரழிந்தாயிற்று என்று கூச்சலிட்டிருக்கிறாள். தன் மகளுக்கான வழக்கின் முடிவும் தெரிந்ததுதான், எனவே எனது வயது குறித்தபயம் அர்த்தமற்றதென்று கூறுகிறேன்.

(தொடரும்)


மார்கெரித் த்யூரா (1914-1996)

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவருடைய, 'காதலன்'(L'Amant - The Lover)) என்ற நூலின் வெற்றி அளவிடற்கு அரியது. 1984ல் பிரசுரமான இந்நாவலுக்கு, பிரான்சின் மிகப்பெரிய இலக்கிய பரிசான கொன்க்கூர் (Le Prix Goncourt) பரிசு கிடைத்தது. நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்தது. அவரது எழுத்துக்கள் அனைத்துமே அவரது சுயவரலாறுகள் எனச் சொல்லப்பட்டாலும், அச் சுயவரலாற்றை சொல்லுவதற்கு அவர் தேர்வு செய்திருக்கும் மொழியின் நேர்த்தியும் அதன் வசீகரமும், அவற்றில் இடம்பெறும் பாத்திரப் படைப்புகளும், வாசகர்களை முற்றிலும் வேறான உலகத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை, மாயா உலகத்தில் சஞ்சரிக்க வைப்பவை. வாழ்க்கையின் இறுதி நாட்கள்வரை கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்டப் புள்ளியில் தன்னை நிறுத்தி குழம்பியவரென விமர்சனத்திற்கு உள்ளாகியவர். அவரது எழுத்து ஒருவகைப் பாவமன்னிப்புகோரலாகவும், கழிவிரக்கம்போலவும் வாசிப்பவர்களால் உணரப்படும். தனது உறவுகளை ஆவேசத்துடன் எழுத்தில் குதறி இருக்கிறார். முன்னாள் பிரெஞ்சு நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா மித்தரானுக்கு நெருக்கமான தோழி. நாற்பதுக்கு மேற்பட்ட இவரது படைப்புகளில் நாவல்கள், நாடகங்கள் இரண்டும் உள்ளன. இவரது பல படைப்புகள், இவரது இயக்கத்திலேயே திரைக்கும் வந்துள்ளன.

http://www.diplomatie.gouv.fr/label_france/ENGLISH/LETTRES/DURAS/duras.html

(தொடரும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R