சிங்கப்பூர் சிறு கதைகளில் மிளிரும் தமிழர் பண்பாட்டு விழுமியங்கள்சீனர், மலாயர், இந்திய வம்சாவழியினர் , யுரேஷியர் மற்றும் இதரர் என்னும் பல்வேறு இனம் மற்றும் மொழிபேசுகின்ற குடிமக்களையும் நிரந்தரமாய்த் தங்கி வாழ்வோரையும் கொண்ட சிங்கப்பூரின் இன்றைய மக்கள் தொகை 53 லட்சம். இவர்களுள் இந்திய வம்சாவழியினர் மட்டும் சுமார் 9 விழுக்காடு. இவர்களுள் தமிழ் பேசுவோர் 3.2 விழுக்காட்டினர். இவ்வாறு குறுகிய எண்ணிக்கையில் தமிழரும் தமிழ் பேசுவோரும் வாழ்கின்ற நாடாக வளமிக்க சிங்கப்பூர் இருந்தாலும் மலாயாவிலிருந்து பிரிந்து சுதந்திரக் குடியரசாக 1965 ல் பிரகடனப்படுத்தப்ட்டதிலிருந்து  கீழ்த்திசை நாடுகளின் வளர்ச்சிச் சுடரொளியாய் பரிணமிக்கும் இந்நாடு தமிழ் மொழிக்குத் தந்திருக்கும் தகுதி உயர்வானதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். சிங்கப்பூர் அரசின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத்துவ மொழிகளுள் தமிழும் ஓன்று . ஆங்கிலம் , சீனம், மலாய் என்பன பிற அதிகாரத்துவ மொழிகள். கல்வித்துறையில் இங்குள்ள பாலர் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழைப் பாடமாகப் பயில முடியும். பொது ஊடகங்களில் சிங்கை வானொலியின் ஒலி  96.8 அல்லும் பகலும் தமிழை ஏந்தி வருகிறது. தொலைகாட்சியின் வசந்தம் சென்ட்ரல் தமிழ் நிகழ்சிகளை நள்ளிரவு வரை நல்கிடக் காண்கிறோம். அச்சு ஊடகங்களில் தமிழவேள் கோ. சாரங்கபாணியவர்களால் 1935-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ் முரசு நாளேடு இன்றும் தொடர்ந்து வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழாக இங்குள்ள தமிழ் சமூகத்தின் அடையாளமாகத் திகழக் காண்கிறோம். 

கலை, சமயம் மற்றும் சமூகப் பண்பாட்டு வளர்ச்சித் தளத்தில் 70க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் தமிழர் அமைப்புக்கள் தனித்தும் இணைந்தும் செயல் படுகின்றன. ஆண்டுதோறும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஊக்கம்தரும் வகையில் நிகழ்வுறும் தமிழ் மொழி விழா ஒரு மாத நிகழ்வாக உயர்கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் இணைந்து தமிழ் வளர்ச்சி முயற்சியின் கூறாக இந்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.
 
இத்தகு பின்புலத்தில் தமிழர் பண்பாடு , கலை, சமூகம் மற்றும் தனிமனித ஒழுக்கம் சார்புடைய விழுமியங்கள் குறித்த புரிதல்களைத் தெளிவுபடுத்தலும், நினைவூட்டுவதும் , அவற்றை கட்டிக்காத்து வளர்த்தெடுப்பதும் சமகால மற்றும் எதிர்காலத் தமிழ்ச் சமூகத்திற்கு இலக்கியப்படைப்பாளர்கள் ஆற்றவேண்டிய கடமைகளுள் தலையாயதாகும். இப்பணியை முன்னெடுத்துச் செல்வதில் அச்சு ஊடகங்களில் தங்களின் தரமான ஆக்கங்களைப் பதிவுசெய்யும் எழுத்தாளர்கள் முன்னணியில் நிற்கின்றார்கள். இவர்களுள் புகழ்பெற்ற இரண்டு தமிழ்ச் சிறுகதை மற்றும் புதினப் படைப்பாளர்கள் ஜே. எம். சாலி , கமலாதேவி அரவிந்தன் ஆகியோர் சிங்கப்பூர் தமிழிலக்கியத் தளத்தில் தமக்கெனத் தனி முத்திரை பதித்துள்ளார்கள். தேர்ந்த கல்வி ஞானமும் , நிறைந்த அனுபவமும், தமிழ் மீதும் தமிழர் மீதும் மாளாத பற்றும் பாசமும் கொண்டுள்ள இவர்கள் தமது கருத்தாழமிக்க படைப்புக்களால் தமிழ் பண்பாட்டு விழுமியங்களை இங்குள்ள தமிழர் இல்லங்கள் தோறும் கொண்டுசெல்லத் துணை நிற்கின்றார்கள்.இவ்விருபெரும் படைப்பாளிகளின் சிறுகதைகளில் மிளிரும் தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் குறித்தமதிப்பீடு இந்த ஆய்வுரையின் நோக்கம்.
 
ஜே.எம். சாலி
ஜே.எம். சாலி அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழிலக்கிய வானில் இலங்கிடும் நட்சத்திர எழுத்தாளர் ஜே. எம். சாலி. இவரது எழுத்துலகப் பயணம் தமிழ் மண்ணில் தொடங்கி சிங்கப்பூரில் இன்றும் தொடர்கிறது. 1959-ல் கண்ணன் இதழின் தொடர்கதைப் போட்டிக்கு இவர் எழுதிய முதற்கதை 'இரு கண்கள்'. இலக்கிய வெளியில் இவர் பயணிக்கவிருக்கும் தூரங்களை தொலை நோக்குடன் முன்னுரைக்கும் பொருத்தமான தலைப்பாக சாலியின் முதற்கதைக்கு இவர் தந்துள்ள தலைப்பே அமைந்துவிட்டது.  சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாளேடுகளில் வெளிவந்த சாலின் நெடுங்கதைகள் மற்றும் சிறு கதைகளான ' அலைகள் பேசுகின்றன (1971), அழகே ஆர்கிட் மலரே (1979), கவிதை தேடும் ராகம் (1981), நெஞ்சத்தைக் கொஞ்சம் தா (1982), நெருப்பு மலர் (1983), கனவுக் கன்னி (1983), ஆவிகள் அழைக்கின்றன ( 1985), தீண்டாத தென்றல் (1986), தேனிலவு ( 1987),வானம் தேடும் வெண்ணிலா (1987), புன்னகை மன்னன் (1987), மின்னல் பூ (1988), அழகிய முகங்கள் (1989), முகத்திரை (1994) போன்றவை இவரது பேசப்படும் படைப்புக்களாகும்.

குடும்பச் சீர்மை, பெண்மை நலம், சமயம் மற்றும் ஆன்மீகத்தினை அடிநாதமாகக் கொண்ட அறம் வலியுறுத்தல், ஒழுக்கத்தின் விழுப்பம் பேசுதல், சமூகக் கட்டொழுங்கு குறித்த தீர்மானமான பார்வை, நிலைபேறுடைய தமிழர் பண்பாட்டு விழுமியங்களை வலியுறுத்தல், பழியஞ்சப் பரிந்திடல், ஒப்புரவுடன் உயர் நோக்கில் வாழ்க்கைக் குறிக்கோள்களை எட்டிட விழைதல், போன்ற தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் சாலியின் ஆக்கங்களில் இழையோடக் காண்கிறோம்.

தமிழர் பண்பாடு, கலை மற்றும் சமூகச் சூழலிலிருந்து விட்டுநீங்கி இன அடையாளங்கள் மட்டுமே பெரும்பாலும் தாங்கி வாழும் புலம்பெயர் தமிழ் இளையர்கள் மற்றும் குடும்பத்தினர் தமிழர்தம் இனம், மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்களை இனங்கண்டு அவற்றை அவர்களோடு இணைத்துவிடும் பண்பாட்டுப் பாலமாய் ஜே. எம். சாலின் படைப்புக்கள் அச்சு மற்றும் ஒலி/ஒளி ஊடகங்களில் மிளிர்கின்றன. 

‘சாலி சமூகத்தில் நிகழும் பிரச்சினைகளைத் தம் உலகளாவிய பார்வையால் பரிசீலித்துத் தீர்வுகளும் சொல்கின்றார். மதம் வேறாக இருந்தாலும் மனிதத்துவம் என்னும் பரந்த நோக்கில் இவர் கதைசொல்லும் செய்திகளும் நேர்த்தியும் இதயத்தைத் தொடும் வல்லமையுடன் அமைந்துகிடக்கக் காண்கின்றோம்’. என்னும் இலக்கிய வீதி இனியவனின் கூற்றினை இவரது ஒட்டுமொத்த படைப்பாக்கங்களுக்கும் வழங்கப்பட்ட பொது மதிப்பீடாகக் கொள்ளலாம்.

கமலாதேவி அரவிந்தன்
தனது 15-ம் வயதில் சங்க இலக்கியம் குறித்த கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டதிலிருந்து தொடங்கியது கமலா தேவியின் இலக்கியப் பயணம். இன்று சிங்கப்பூர், மலேசியா , தமிழகம் மற்றும் கேரளத்தில் அறியப்படும் தரமான இலக்கியப் படைப்பாளர் கமலா தேவி பிறப்பால் மலையாளி. சிறுகதைகள் மற்றும் புதினங்களில் மட்டுமின்றி வானொலி, தொலைகாட்சி, மேடை நாடகங்களென்று பல்வேறு நிகழ்த்துக் கலைத்துறைகளில் ஆழக்கால் பதித்துள்ள கமலா தேவி தமிழ் சிறுகதை மற்றும் புதினப் புனைவுலகின் திறனாய்வு பிரம்மாக்களான கடலோடி நரசையா வெங்கட் சுவாமிநாதன் போன்றவர்களின் பாராட்டுதல்களைப் பெற்ற திறன்மிக்க படைப்பாளி.

 கமலாதேவி அரவிந்தன் -எழுத்துக்கலையின் நுட்பங்கள் கைவரப்பெற்ற கமலாதேவியின் சிறுகதைப் படைப்புக்களில் கதை சொல்லும் திறன், நவரச பாவங்களை எழுத்தில் கொண்டுவரும் ரசவாதம், கதைகளில் ஊடாடும் உயர் நோக்கு போல்வன தரமான வாசகர்களை கவனிக்கவைக்கின்றன.  ஒரு தேர்ந்த உணவுப் படைப்பாளியின் நேர்த்தியும் திறனும் அவர் படைத்திடும் உணவிலும் , நாவின் நுனிமுதல் அடிவரை தங்கி நிற்கும் அதன் சுவையிலும், உணவை பக்குவமாய் அவர் பரிமாறும் பக்குவத்தில்  உண்போன் காணும் நிறைவிலும் வெளிப்படுவதுபோல் கமலாதேவி தம் கதைகளில் சொல்லும் கருத்துக்களும் , அவர் கதைவிரிக்கும் களங்களும் ,கதைமாந்தரும், அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளும் எவ்விதப் பாசாங்குகளுமில்லாமல் உயர்தரத்தில் மிளிரக் காண்கிறோம். இவரது கதைகள் வாசித்து மறக்கப்படும் சராசரி படைப்புக்களல்ல. படித்து உள்வாங்கி இதயத்தில் தக்க வைத்துக்கொள்ளும் தகுதியுள்ள  எழுத்து.

கமலாதேவியின் அத்தனை சிறுகதைகளிலும் மையக் கருத்தாக மனித நேயம் ஊடாடக் காண்கிறோம். நுளம்பு, மாம்பழப் புளிசேரி , சூரிய கிரஹணத் தெரு, விரல், தாகம், சிதகு, புரை, சார் !சார்! ஒரு கதை கேளுங்க சார்!, ஒரு நாள் ஒரு பொழுது, என்பன 2012-ல் சிங்கப்பூர் மலேசிய ஏடுகளில் வெளிவந்த கமலா தேவியின் முத்தான பத்து முத்திரைக் கதைகள்.. இவற்றுள் பல இலக்கிய அமைப்புக்களாலும் வாசகர்களாலும் பாராட்டும் பரிசுகளும் பெற்றவை.

தமிழர் பண்பாட்டு விழுமியங்களாக இவரது சிறுகதைகளில் விருந்தோம்பல் (மாம்பழப் புளிசேரி, ஒரு நாள் ஒரு பொழுது ), முதுமையை மதித்தல் (சார் சார் ஒரு கதை கேளுங்க சார், புரை), ஒழுக்கக் கட்டொழுங்கு வலியுறுத்தல் (சிதகு, சூரிய கிரஹணத் தெரு ), புலம் பெயர் சமூகம் சந்திக்கின்ற சவால்களை தியாகம் மற்றும் திறன் வளர்த்துக் கொள்வதன் மூலம் எதிர்கொள்ளல் (நுளம்பு, விரல்), பொது ஒழுக்க முரண்களை நேர் செய்தல் (இட்டிலி), பெண்மை பற்றிய புரிதல்கள் (தாகம்) என்பவற்றை அவர் தமது ஆக்கங்களில் வலியுறுத்துகின்றார். 

கமலா தேவியின் படைப்புக்கள் பொழுது போக்கு எழுத்துக்களாக இல்லாமல் சமூக நடப்பியல் நிதரிசனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் பாங்கில் அமைந்துள்ளவை. இதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள், வாழ்புலம், பண்பாட்டு வழக்காறுகள் கற்பிதங்கள் சார்ந்த புனைவுகளாய் இல்லாமல் தமிழ்ச்சமூகம் உணர்ந்து தனதாக்கிக் கொள்ளவேண்டிய நிலைபேறுடைய பண்பாட்டு விழுமியங்களை பதிவு செய்கின்றன. 

முடிவுரை 
சிங்கப்பூர் அரசாங்கத்தின் உன்னத விருதாகிய கலாசார பதக்கத்தினை சிங்கப்பூர் அதிபர் டாக்டர் டோனி டான் அவர்களிடமிருந்து சென்ற ஆண்டு பெற்று தமிழ் சமூகத்தை பெருமை கொள்ள செய்த எழுத்தாளர், இதழாளர் ஜே. எம். சாலியும் பலகலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புக்களின் பரிசுகளும் பாராட்டுதல்களும் பெற்று வரும் பெருமைக்குரிய எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனும் சிங்கப்பூர் தமிழிலக்கிய வெளியில் தனித்துவமிக்க படைப்பாளர்கள்

கமலாதேவி அரவிந்தன் அண்மையில் தஞ்சைப்பல்கலைக்கழக  கரிகாற் சோழன் விருதும் பெற்றுள்ளார்.

இவர்கள் இருவரும் நம் பண்பாட்டு அடையாளங்களை முன்னெடுத்துச் செல்லும் பெருமைக்குரிய எழுத்துச் சிற்பிகள்.

துணை நூற் பட்டி

1. சிங்கப்பூர் சிறுகதைகள்- திறனாய்வு  முனைவர் க. மோகன்
நிதீஷ் பிரபா பதிப்பகம் காரைக்குடி
2009
 
2. சிங்கப்பூர் தமிழிலக்கியம்- ஒரு நூற்றாண்டு
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்
சிங்கப்பூர்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R