நினைவில் வாழும் கலைத்தூது அருட்தந்தை மரியசேவியர் அடிகளார்! - முருகபூபதி -
அன்பால் அனைவரையும் அரவணைத்த பண்பாளர் கலைத்தூது அருட்தந்தை மரியசேவியர் அடிகளார், இப்பூவுலகைவிட்டு மறைந்தாலும் அவரால் நேசிக்கப்பட்ட மக்களாலும் நண்பர்கள் மற்றும் கலை, இலக்கியவாதிகளினாலும் மறக்கப்பட முடியாத அற்புதமான பிறவி. தனது சமயப்பணிகளுக்கும் அப்பால், தமிழ்க்கலை வளர்த்த கர்மயோகி. தேடல் மனப்பான்மையுடன் அவர் தேடியது பணம், பொருள் அல்ல. எங்கள் தமிழின் தொன்மையைத் தேடியவர். “ தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் “ என்ற கூற்றுக்கு அமைய, தான் தேடிப்பெற்றதையும் கற்றுக்கொண்டதையும் தமிழ்மக்களுக்கு நினைவூட்டிச்சொல்லிவந்த பெருந்தகை. “கன்னித் தமிழ் வேர்களுக்குள் முத்தெடுப்போம் , காலமெல்லாம் முத்தம் பதிப்போம். “ என்ற தாரகமந்திரத்துடன், இலங்கையில் திருமறைக் கலாமன்றத்தை தங்கு தடையின்றி இயக்கிவந்தவர். “ மனிதநேயமொன்றையே இவரிடம் காணமுடிகிறது. கலை என்ற புனிதமான பாதையில் மனிதநேயம் என்ற ஒளியைத்தேடி, பூரணத்துவமான பாதையில் சலசலப்பின்றி தெளிந்த நீரோடைபோல் தனது பயணத்தை தொடர்பவர் “ என்று 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மல்லிகை கலை, இலக்கிய மாத இதழில் இவர் பற்றி பதிவாகியிருந்தது. அந்த இதழின் முகப்பை அலங்கரித்தவர் மரியசேவியர் அடிகளார்தான். அட்டைப்பட அதிதியாக இவர் பற்றிய பதிவை பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன் எழுதியிருந்தார். அதனைப்படித்தது முதல், அடிகளாரை சந்திக்கவேண்டும் என விரும்பியிருந்தேன். நான் 1987 ஆம் ஆண்டே அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்ட பரதேசி. அதனால், அடிகளாரின் அருமை பெருமைகளை மல்லிகையின் குறிப்பிட்ட இதழிலிலேயே தெரிந்துகொண்டேன்.எனது ஆவல் காலம் கடந்து அவுஸ்திரேலியாவில் நிறைவேறியது. 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியென நினைக்கிறேன்.
அவர் அவுஸ்திரேலியாவில் நான் வதியும் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் மாநகருக்கு வந்திருந்தார். அச்சமயம் எனது நண்பர் கொர்னேலியஸ் செபஸ்தியான் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்திருந்த அடிகளாரை சந்தித்தேன். அச்சமயம் மெல்பனில் திருமறைக்கலா மன்றத்தின் கிளை அமைக்கப்பட்டது. நண்பர் அன்டனி கிறேஷியன் உட்பட வேறும் சிலர் இச்சந்திப்பில் பங்கேற்றனர். அடிகளார் மறைந்தபின்னர் மெல்பன் வானமுதம் வானொலியில் அதன் நிகழ்ச்சித்தயாரிப்பாளர், திரு. வில்லியம் ராஜேந்திரன் ஒருங்கிணைத்த நினைவேந்தல் நிகழ்விலும் இந்த நண்பர்கள் அடிகளார் பற்றி நினைவுரையாற்றினார்கள். முதல் சந்திப்பிலேயே அடிகளார் எனதும் நண்பரானார். அவரை அட்டைப்பட அதிதியாக மல்லிகையில் பாராட்டி கௌரவித்த மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவுக்கு 2002 ஆம் ஆண்டு பவளவிழா வந்தது. அந்த விழா 2003 ஆம் ஆண்டுவரை நீடித்தது. குறிப்பிட்ட 2003 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தேசிய சாகித்திய விழாவுக்காக நான் வந்திருந்தபோது, அடிகளார் என்னைத் தொடர்புகொண்டு, அந்த விழாவுக்கு முதல்நாள் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடந்த திருமறைக் கலாமன்றத்தின் காப்பிய விழாவுக்கு அழைத்தார். அத்துடன் ஒரு வேண்டுகோளையும் என்னிடம் விடுத்தார். இந்த காப்பிய விழாவில் மல்லிகை ஆசிரியரை பாராட்டி கௌரவிக்கவிருக்கிறோம். வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் நீங்கள், மல்லிகையால் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர் என்பதை அறிவேன். நீங்களே வந்து ஜீவா பற்றி உரையாற்றவேண்டும் என்றார். இந்த எதிர்பாராத அழைப்பு எனக்கு இன்ப அதிர்ச்சியை தந்தது. அடிகளாரின் வேண்டுகோளை அன்றைய தினம் அங்கே சென்று பூர்த்திசெய்தேன்.