தேடியெடுத்த கதையும் கவிதையும்: 'பல்லி தந்த பாடம்' & 'விழித்தெழும் புது யுகம்' - வ.ந.கிரிதரன் -
நான் இந்த சிறுகதை மீண்டும் கிடைக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் நூலகம் தளத்தின் உதவியால் மீண்டும் இச்சிறுகதையினைப் பெற முடிந்தது. அதற்காக நூலகத்துக்கு நன்றி.
என் பதின்ம வயதுகளில் இரவுகளில் என் அறையில் படுக்கையில் சாய்ந்தபடி சுவரில் பூச்சி பிடித்துண்டும் பல்லிகளையு, உணவாகும் பூச்சிகளையும் அவதானிக்கையில் எழுந்த உணர்வின் வெளிப்பாடு இச்சிறுகதை. ஜுலை 6, 1980 வெளியான ஈழநாடு வாரமலரில் வெளியாகியுள்ளது. 'பல்லி தந்த பாடம்' என்னும் தலைப்பில் வெளியான சிறுகதை. இந்நிலையில் மீண்டும் இச்சிறுகதை என் கைகளை வந்தடைந்தது மகிழ்ச்சியைத் தருகின்றது. அக்காலகட்டத்தில் நான் எழுதிய ஈழநாடு வாரமலரில் வெளியான கடைசிச்சிறுகதை இதுதான். ஈழநாடு வாரமலரில் வெளியான எனது ஆரம்பச் சிறுகதைகளில் என்னிடம் இல்லாத சிறுகதை இதுதான். ஈழநாடு நிறுவனமும் பல தடவைகள் போர்ச்சூழலில் எரிக்கப்பட்ட நிலையில் இச்சிறுகதை மீண்டும் கிடைக்குமென நான் நினைத்திருக்கவேயில்லை. உண்மையில் இச்சிறுகதை கிடைத்தது எதிர்பாராத மகிழ்ச்சிதான். என் பால்ய, பதின்ம மற்றும் இளமைப்பருவங்களில் என் படைப்புகளைப் பிரசுரித்து ஊக்குவித்த ஈழநாடு பத்திரிகையை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. எப்பொழுதும் என் நெஞ்சில் அதற்கோரிடமிருக்கும்.
பின்னர் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்திருக்கையில் தாயகம் (கனடா) சஞ்சிகையில் இச்சிறுகதையில் வரும் பல்லி- பூச்சி அனுபவத்தை மையமாகக்கொண்டு 'பல்லி' என்றொரு சிறுகதை எழுதினேன். அது வேறொரு பார்வையில் எழுதப்பட்ட சிறுகதை. பின்னர் பல வருடங்கள் கழிந்த நிலையில் இச்சிறுகதையை மையமாகக்கொண்டு விகடனுக்குப் 'பல்லிக்கூடம்' என்றொரு குட்டிச் சிறுகதை அனுப்பினேன். அது விகடனில் அதன் பவள விழாவையொட்டிய காலத்தில் வெளியானதால் முத்திரைக்குட்டிக்கதையாகப் பிரசுரமானது.