நனவிடை தோய்தல் குறிப்புகள் ! - முருகபூபதி -
இன்று நவம்பர் 26 ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம்!
இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. யாழ்ப்பாணம் நல்லூரில் 1932 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி பிறந்தார். அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மறைந்தார். இன்று அவரது நினைவு தினம் !
எஸ்.பொ. குறித்த நினைவுகளை இங்கு நனவிடை தோய்தலாக பதிவுசெய்கின்றேன். நனவிடை தோய்தல் என்ற சொற்பதத்தையும் அவர்தான் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். எஸ்.பொ. அவர்களை 1972 ஆம் ஆண்டு, எனது இலக்கியப்பிரவேச தொடக்க காலத்தில்தான் முதல் முதலில் கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில் ரெயின்போ அச்சகத்தில் சந்தித்தேன். அதன்பிறகு கொழும்பில் பல இலக்கியக்கூட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன். எஸ்.பொ. மஹாகவி உருத்திரமூர்த்தி, இரசிகமணி கனக செந்திநாதன் , கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துரை உட்பட பல இலக்கியவாதிகள் எமது நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடத்திய தமிழ் விழாவிற்கு வருகை தந்த காலப்பகுதியில் எனக்கு எட்டு வயதுப்பராயம்.
அந்த வயதிலேயே அவரது நகைச்சுவையான பேச்சை கேட்டுள்ளேன். மீண்டும் அவரைச்சந்தித்து பேசும்போது எனது வயது 21. அதன்பின்னர் கொழும்பு -07 இல் அமைந்திருந்த கல்வி வெளியீட்டுத்திணைக்களத்திலும் விவேகானந்தா வித்தியாலயத்திலும் அடிக்கடி சந்தித்து உரையாடியிருக்கின்றேன். அவர் இந்த வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.
எஸ்.பொ. 1980 களில் நைஜீரியாவுக்கு தொழில் நிமித்தம் புறப்பட்ட வேளையில் கொழும்பு - ஜம்பட்டா வீதியில் மலையக நாடகக் கலைஞரும் அவள் ஒரு ஜீவநதி திரைப்படத்தின் தயாரிப்பாளரும் வசனகர்த்தாவுமான மாத்தளை கார்த்திகேசுவின் இல்லத்தில் எஸ்.பொ.வுக்காக நடந்த பிரிவுபசார நிகழ்வில் உரையாற்றினேன்.
மீண்டும் அவரை சில வருடங்களின் பின்னர் 1985 இல் ஒரு விஜயதசமி நாளில் வீரகேசரியில் நடந்த வைபவத்தின்பொழுது என்னைச்சந்திக்க வந்த எஸ்.பொ.வின் ஆபிரிக்க அனுபவங்கள் பற்றிய நேர்காணலை எழுதி வெளியிட்டேன். 1987 இல் நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் - 1989 இல் எனது இரண்டாவது சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள் நூலின் வெளியீட்டு விழாவை ( 25 ஜூன் 1989 ) மெல்பனில் நடத்தியபொழுது சிட்னியில் மூத்த புதல்வர் டொக்டர் அநுராவிடம் அவர் வந்திருப்பது அறிந்து, அவரை பிரதம பேச்சாளராக அழைத்தேன். அன்றைய நிகழ்வே அவர் அவுஸ்திரேலியாவில் முதல் முதலில் தோன்றிய இலக்கிய பொது நிகழ்வு.