
அமெரிக்கா நினைத்தால் எதனையும் செய்யலாம். உற்பத்தி சங்கிலிகளையும், விநியோக பாதைகளையும் ஒருங்கே சிதைத்து மூடலாம். பொருளாதார தடைகளை விதிக்கலாம். முழு உலகத்தையும் பட்டினி போட்டு அலைய செய்யலாம். கடற் பாதைகளை, கைப்பற்றி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட செய்யலாம்.
காரணம்: பதினொரு பிரமாண்டமான விமானம் தாங்கி கப்பல்களை அது வரிசையாக சொந்தம் கொண்டாடுகின்றது. மேலும், 80 நாடுகளில், கிட்டத்தட்ட 750-800 படைத்தளங்கள். 1.33 மில்லியன் யுத்த துருப்பினர். பின், 11,000 விண்வெளி செய்மதிகள். ஆனால், இவை அனைத்தும் நேற்றைய செய்தியானது. இன்று உலகம் மாறி வருகின்றது.
அமெரிக்காவின் உள்நாட்டு கடன் 38 ட்ரில்லியன் டாலரை தாண்டி உள்ளது என்பதும், தொழிநுட்பங்களில், சீனா-ரஷ்யா-இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவை விஞ்சி உள்ளது என்பதும், டாலரின் சரிவும், BRICS போன்ற அமைப்புகளின் உதயமும் இன்றைய உலகின் முகத்தை புதிதாய் வரைவதாய் இருக்கின்றன. இச்சூழ்நிலையிலேயே, ஈரானிய போரும் தோன்றியுள்ளது.
தனது மூன்று விமானம்தாங்கி கப்பல்களை, ஈரான் நோக்கி திசை திருப்பியும், இஸ்ரேல் என்ற மத்திய கிழக்கின், பெயர் போன காட்டுமிராண்டி நாட்டை (காசா புகழ் இஸ்ரேல்) அதிரடி தாக்குதல்களை நடத்துமாறும், மக்களை குண்டு வீசி கொலை செய்யுமாறும், ஊக்குவித்தும் அதே பாணியில், தானே முன்நின்று தாக்குதல்களை தனிப்பட நடத்தி, கொமெய்னி உள்ளிட்ட 40 முக்கியஸ்தர்களை கொன்றொழித்தும், 600க்கும் மேற்பட்ட பிஞ்சு பள்ளி சிறார்களை குண்டெறிந்து அழித்தும் - அது ஆட்டம் காட்டினாலும், ஈரான், இன்னும் அமெரிக்காவிடம் மண்டியிட்டதாக தெரியவில்லை.