
இலங்கையின் வட மாகாணத்தின் எழுவைதீவு என்ற பிரதேசத்தில் அம்பலவாணர் சின்னத்தம்பி - ஆனந்தராணி நமச்சிவாயம் இணையருக்கு டிசெம்பர் 23,1954 அன்று மகனாகப் பிறந்த நோயல் சின்னத்தம்பி நடேசன்ஆரம்பக் கல்வியை எழுவைதீவு முருகவேள் பாடசாலையிலும் நயினாதீவு மகாவித்தியாலத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பேராதனை பல்கலைக்கழத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவில் சிட்னி நியு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணி (முதுகலை) பட்டம் பெற்றவர் நோயல் நடேசன், 1984 - 1987 காலப்பகுதியில் தமிழகத்தில் தங்கியிருந்தபோது, தமிழர் மருத்துவ சேவை என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அந்த நிறுவனத்தில் நோயல் நடேசனுடன் மருத்துவரான அவரது மனைவியும் பணியாற்றினார். 1987-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 40 வருடங்கள் விலங்கு மருத்துவராக பணிபுரிந்து, ஓய்வு பெற்று, தற்போது மெல்பேர்னில் வசித்து வருகிறார். நோயல் நடேசன் ஏப்ரல் 1984-இல் 'உதயம்' மாத இதழை மெல்பேர்னில் ஆரம்பித்தார். 13 வருடங்களாக நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு வரை 'உதயம்' பத்திரிகை ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக வெளியானது. 'உதயம்' பத்திரிகையில் பல பத்திகள், சிறுகதைகள், தொடர்கள், தான் பணிபுரிந்த மிருக வைத்தியத்துறைசார் அனுபவங்கள் என்பவற்றை நோயல் நடேசன் எழுதினார். 1980-1983 ஜூலை வரையான காலத்தில், இலங்கையின் - மதவாச்சி பகுதியில் மிருக வைத்தியராக பணிபுரிந்த காலப் பின்னணியில் எழுதப்பட்ட நடேசனின் வண்ணாத்திக்குளம் என்ற முதலாவது நாவல் 'மித்ர 'பதிப்பகத்தினால் வெளியானது. இந்நாவல் பின்னர் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.
1980-83 கால கட்டத்திலே இலங்கை மக்களின் வாழ்க்கை முறைகளையும் இலங்கையின் அரசியல் பொருளாதார – சமூக நிலை மாற்றங்களையும் எடுத்துரைக்கும் நாவலே வண்ணாத்திக் குளம்.நடேசன் நாவலில் வரும் பதவியாக்குளம் எனப்படுகின்ற வண்ணாத்திக்குளம் தற்போது. இது ஒரு சிங்களக் குடியேற்றப் பிரதேசமாக மாறிப்போயுள்ளது. நடேசனின் சொந்த அனுபவங்களின் பிரதிபலிப்பே இந்நாவல். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் மிருக வைத்தியர் ஒருவர் தொழில் நிமித்தமாக மதவாச்சி சென்று தான் தங்கியிருக்கும் விடுதியில் கூடவே தங்கியிருக்கும் பதவியாவைச் சேர்ந்த சிங்கள இளைஞனின் தங்கையைக்; கண்டு, காதல் கொண்டு பதிவுத் திருமண மூலம் கணவன் மனைவியாக வாழ முற்படும் போது நாட்டு நிலை அவ்விருவரையும் நேர்ந்து வாழ இடமளிக்காது புலம்பெயர்ந்து செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளுகிறது. இதன் வெளிப்பாடே வண்ணாத்திக் குளம்.
நோயல் நடேசனின் 'உனையே மயல் கொண்டு' என்ற நாவல் குடும்பம் என்ற அமைப்புக்கூடாக புலம்பெயர்ந்தவர்களின் உளவியல் பிரச்சினைகளைப் பேசுகிறது. ஈழத்து அரசியலின் இருண்ட வாழ்வினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையே நடேசனின் 'உனையே மயல் கொண்டு' நாவல் மகப்பேறின் பின்னர் பைபோலர்(Bipolar) நோயினால் பாதிக்கப்படும் பெண்ணுக்கும் கணவனுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புக்களையும் அவர்களின் நிம்மதியற்ற வாழ்வையும் பேசுகிறது.
புதியசூழலில் முகம் கொள்ளும் மனித இருப்பையும் அவ்விருப்புக்கூடாகத் துலங்கும் வாழ்க்கைப் போராட்டத்தின் அலைக்கழிப்பையும் வெளிப்படுத்தும் நோயல் நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை' ஒருமையும் குவிதலுமற்று புனைவின் ஊடாக புதிய எல்லைகளை உள்வாங்கிக் கொள்கிறது. ஈழமண்ணில் இருந்து வெளியேறிய சிவா சுந்தரம்பிள்ளையின் வாழ்வின் வழி விரியும் இந்நாவல் மூன்று பாகங்களைக் கொண்டது. நனவிலி உத்திவழி இயங்கும் இந்நாவல் புலம்பெயர்ந்த ஆஸ்திரேலியச் சூழலில் சிவாசுந்தரம்பிள்ளை எதிர்நோக்கும் சிக்கல்களையும் அச்சிக்கல்களில் இருந்து விடுபட்டு அம்மண்ணோடு பொருந்திக் கொள்ள அவன் படும் பாடுகளையும் நுண்மையாகப் பதிவு செய்கிறது.
இலங்கையில் முப்பதாண்டு காலமாக விடுதலைப்புலிகளாலும் இலங்கை அரசாலும் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தையும் போருக்குள் உழன்று மீளவழியற்று தம் இனிய எதிர்கால வாழ்வைத் தொலைத்த இலங்கைவாழ் மக்களையும் பேசுபொருளாகக் கொண்டு படைக்கப்பட்ட நோயல் நடேசனின் 'கானல் தேசம்' நாவல் புனிதங்களாகக் கற்பிக்கப்பட்டு வந்த புதையுண்ட வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் போடுகிறது. விடுதலைப்புலிகளின் கறைகளின் வழி மானுட அறத்தை பேச விளையும் இப்பிரதி இலங்கை அரசால் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளைப் பேசத் தயங்குகிறது. நாவலில் கட்டமைக்கப்பட்ட பெரேரா என்னும் இராணுவ வீரரைத் தவிர நாவலில் இடம்பெறும் அனைத்து இராணுவவீரர்களையும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்களாகவும் மக்களைக் காக்க வந்த தேவதூதுவர்களாகவும் நடேசன் சித்திரித்துள்ளார். ஒரு பக்க சார்புநிலையோடு விடுதலைப் புலிகள் மீது தீராத விமர்சனங்களை முன் வைக்கும் இந்நாவல் 'விடுதலைப்புலிகளை அழித்து போரற்ற வாழ்வை எதிர்காலச்சந்ததியினருக்கு பரிசளிப்போம்' என்ற நோக்குடனேயே இலங்கை அரசு நாலாம் கட்டப்போரைத் தொடங்கியதாகக் கட்டியம் கூறுகிறது. எங்கும் எந்த வடிவிலும் புதையுண்டு போய்இருக்கும் உண்மைகளைக் கண்டறிவதை விடுத்து இலக்கியப்பிரதியின் வழி பொய்மையையும் மெய்மையாக்க முனையும் இப்புனைவு வரலாற்றை உருமறைப்புச் செய்கிறது.
இந்தியச் சமுதாயத்தில் மனிதர்கள் மிருகங்களைவிடக் கொடுமையாக நடத்தப்படும் நிலைகண்டு எழுந்த கொதிப்பின் பிரதிபலிப்பே பண்ணையில் ஒரு மிருகம். பண்ணையில் வேலை செய்யும் மனிதர்களின் வாழ்வை வெளிப்படுத்தும் இந்நாவல் சாதிய அடக்குமுறைகளையும் மனிதன் தன் சகமனிதன் மீது மேற்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களையும் ஒடுக்குமுறைகளையும் இந்நாவல் கோடிட்டுக் காட்டுகிறது. பண்ணையில் வேலை செய்யும் சிறுவர்களும் ஒடுக்கு முறைக்கு ஆளாகின்றனர்.
வாழ்வின் பிரதிபலிப்பே இலக்கியமாகும். புதுப்பிரக்ஞையும் புதுப்பரிணாமமும் கொண்ட உரைநடைப் புனைவுகதைகளுள் ஒன்றாகிய நாவல் அழகியல் நிலைப்பட்ட ஆக்கத் தொகையாக அமையாது அழுத்தம் பெற்ற அனுபவநிலையின் சாரம்சமாக அமையவேண்டும். சமூக பண்பாட்டின் வேர்களையும் அதன் இயங்குநிலை மாற்றங்களையும் போக்குகளையும் சித்திரிக்கும் நாவல்கள் வாழ்வின் சிக்கல்களைப் பிரதிபலிப்பவையாகவும் அதன் எல்லையைத் தொட முயல்பவையாகவும் அமையவேண்டும். இதிலிருந்து பிறந்ததே யதார்த்தவாதமாகும். அதாவது மனிதன் காலச் சூழலுக்கமைய தன்னை உணர்ந்து வாழும்போது நடப்பியலின் உக்கிரமான தரிசனத்துக்கு முகங் கொடுக்க முற்படும்போது தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவுநிலையை யதார்த்த வாதம் வெளிப்படுத்தி நிற்கிறது. சமுதாய மாற்றங்களால் தனிமனிதன் பாதிக்கப்படுவதையும் தனிமனித முனைப்பு சமூக மாற்றத்துக்கு தோற்றுவாயாக அமைவதையும் யதார்த்த நாவல்கள் புலப்படுத்தி நிற்கின்றன. தனிமனித மாற்றமானது குடும்ப உறவுகளின் சிதைவுகளில் இருந்தோ தோன்றுகின்றது. இதன் வெளிப்பாடே நடேசனின் தாத்தாவின் வீடு ஆகும்.
நடேசனின் தாத்தாவின் வீடு புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற ஒருவன் தன் மனைவியோடு எழுவதீவுக்குச் செல்லும் போது அங்கு அவர் எதிர்நோக்கிய அனுபவங்களைக் கூறும் இந்நாவலில் நனவுடை உத்தியாக இளைஞனின் கடந்த கால வாழ்க்கை அனுபவங்கள் இணைக்கப்படுகன்றன. எழுவைதீவு இலங்கையின் வடபகுதியில் இந்தியாவின் கரைக்குத் தெற்கே அமைந்துள்ள சிறிய தீவு. இரண்டு மைல்கள் நீளம், ஒரு மைல் அகலமானது. பனை மரங்கள் அதிகமாக நிற்பதால் மற்ற தீவுகளைச் சேர்ந்தவர்கள் பனங்கூடல் என்பார்கள். இதனை கதைப்புலமாகக் கொண்டு படைக்கப்பட்ட நாவலே தாத்தாவின் வீடு.
நடேசன் அவர்கள் எழுவைதீவின் உருவமைப்பை வெறும் கற்பனையாகச் சொல்லாமல், அறிவியல் பின்னணியோடு அந்நிலத்தின் தோற்றத்தையும் புவியியல் பின்னணியும் விளக்குகிறார்:
'ஊர் அரிசியில் கல்லிருப்பதுபோல், ஆங்காங்கு தென்னை மரங்களும் நின்றன. வேம்பு, கிளுவை, முருங்கை, பூவரசு என மற்றைய தாவரங்களும் வளரும் . நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்புப் பாறைகள் கடலில் வாழும் கோறல் இன உயிரினத்தின் கழிவால் ஒரு காலத்தில் உருவாக்கப்பட்டு அந்த உயிரினங்கள் அழிந்தபின்பு பாறைகள் கூட்டமாக பிற்காலத்தில் தீவாக உருவாகியதாக நினைக்க முடியும். யாழ்ப்பாணக் குடா நாட்டின் செம்மண் கொண்ட நடுப்பகுதியைத் தவிர மற்றைய பகுதிகளின் வரலாறு எழுவைதீவைப் போன்றதே. மணல் பாங்கான தரையானதால் பனையினதும் தென்னையினதும் சல்லிவேர்கள் கடைசி நீர்த்துளியையும் தேடிப்பிடித்து கடைசித் துளி சர்பத்தை உறிஞ்சும் குழந்தையாக உயிர் வாழும் . ஊரின் நடுப்பகுதியில் உடை மரங்களும் மற்றும் காரை போன்ற தண்ணீர் அதிகம் தேவையற்ற வறண்ட நிலத் தாவரங்களும் உள்ளன . வேம்பு, ஆல், ஒதி என்பன பனையோடு நெருங்கியும் தழுவியும் வளரும் என்றாலும் அதிகமில்லை'
நடேசன் ஊர் பற்றிய விபரணையை வெறும் தகவலாகத் தராது மனத்தில் பதியும் வண்ணம் வெளிப்படுத்துகிறார். வேம்பு, கிளுவை, முருங்கை, பூவரசு எனப் பட்டியலிட்டு ஊரின் அடையாளத்தை அங்கிருக்கும் மரங்களைக் கொண்டே ஆசிரியர் நிலைநிறுத்தும் விதம் தனித்துவமானது. அந்தப் பகுதியின் தட்பவெப்ப நிலையை இம்மரங்கள் எமக்குணர்த்தி நிற்கின்றன. நாவலில் கையாளப்படும் உவமைகள் தத்துருபமானவை. 'ஊர் அரிசியில் கல்லிருப்பதுபோல் ஆங்காங்கு தென்னை மரங்கள்' இவ்வரிகள் அந்த ஊரின் இயல்பான அமைப்பை மிக எளிமையாகப் புலப்படுத்துகிறது. விளக்குகிறது. அரிசியில் கல் எப்படித் துருத்திக்கொண்டு தெரியுமோ, அதுபோல சமவெளியில் தென்னைகள் தனித்துத் தெரிவதை இவ்வுவமை உணர்த்தி நிற்கிறது. தென்னையின் சல்லிவேர்கள் கடைசி நீர் துளியையும் தேடிப்பிடிப்பதை 'கடைசித் துளி சர்பத்தை உறிஞ்சும் குழந்தையாக என்னும் உவமை துல்லியமாகக் கூறிநிற்கிறது. மரங்களின் வேர்கள் நீரைத் தேடுவதை ஒரு குழந்தையோடு ஒப்பிடுவது, அந்தத் தாவரங்களின் உயிர் போராட்டத்தையும் நிலத்தின் வறட்சியையும் ஒரே நேரத்தில் வாசகர்களுக்குக் கடத்துகிறது. சல்லிவேர்கள் பற்றிய குறிப்பு, மணற்பாங்கான நிலத்தில் தாவரங்கள் எப்படித் தப்பிப் பிழைக்கின்றன என்ற நுட்பமான அவதானிப்பையும் வெளிப்படுத்துகிறது.
ஒரு இடத்தை விவரிக்கும்போது அதன் தோற்றம் குறித்த வரலாற்றுப் பார்வை நடேசனுக்கு உள்ளது. சுண்ணாம்புப் பாறைகள் உருவான விதம், 'கோறல் ' உயிரினங்களின் எச்சங்கள் தீவாக மாறியது போன்ற குறிப்புகள், வெறும் புனைவாக அமையாது அந்த நிலத்தின் தொன்மையை விளக்கும் ஆவணமாகவும் காணப்படுகிறது. ஊரின் ஒவ்வொரு பகுதியும் ஒரே மாதிரியாக இல்லாமல், வெவ்வேறு தன்மைகளைக் கொண்டிருப்பதை நடேசனின் விபரணை விளக்கி நிற்கிறது.நடுப்பகுதி: செம்மண் கொண்ட பகுதியாகவும் மற்றைய பகுதிகள் மணற்பாங்கான, சுண்ணாம்புப் பாறைகள் கொண்ட பகுதியாகவும் வறண்ட பகுதி உடைமரம், காரை போன்ற தண்ணீர் தேவையற்ற தாவரங்களைக் கொண்ட பகுதியாகவும் விளங்குவதை தனது நாவலில் நுட்பமாகக் கூறி நிற்கிறார். வேம்பு, ஆல், ஒதி என்பன பனையோடு நெருங்கியும் தழுவியும் வளரும்' என்ற வரிகள், தாவரங்களுக்கு இடையிலான பிணைப்பை எடுத்துக் காட்டுகின்றன. இது நிலத்தின் அடர்த்தியையும், மரங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ள காட்சியையும் கண்முன் நிறுத்துகிறது.
இந்த விபரணை என்பது வெறும் இடத்தைப் பற்றிய வருணனை மட்டுமல்ல, அது எழுவைதீவின் ஆன்மாவை, அதன் மண்ணியல் மற்றும் உயிரியல் கூறுகளோடு இணைத்துச் சொல்லும் ஒரு உயிருள்ள சித்திரம். வாசிப்பவருக்கு அந்தத் தீவின் வெப்பம், மண்ணின் மணம் மற்றும் மரங்களின் அடர்த்தி ஆகியவற்றை நடேசனின் வரிகள் நேரடியாக உணர வைக்கின்றன.இந்த நாவல் எழுவைதீவின் தனித்துவமான சூழலியலை ஆவணப்படுத்தும் ஒரு முக்கியப் பகுதியாகவும் இதைக் கருதலாம்
இனவரையியல் (Ethnography) என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கை முறை, பண்பாடு, மற்றும் அவர்கள் வாழும் சூழலுக்கும் அவர்களுக்குமான பிணைப்பை விவரிப்பதாகும். நடேசனின் நாவல் எழுவைதீவு மக்களின் வாழ்வியலை, இனவரையியல் அடிப்படையில் அணுகுவதற்கு மிக முக்கியமான சான்றாகத் திகழ்கிறது. ஒரு நிலப்பரப்பின் புவியியல் அமைப்பு, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கலாசாரத்தையும் எப்படித் தீர்மானிக்கிறது என்பதை நடேசன் காரண, காரியங்களுடன் நிறுவிச் செல்கிறார்.
சுண்ணாம்புப் பாறைகள் நீரைத் தக்கவைக்காது என்ற அறிவியல் உண்மை, அந்த மக்களின் 'தண்ணீர் தேடும்' கலாசாரத்தைத் தீர்மானிக்கிறது என்பதை நடேசன் தத்துருபமாக உணரத்திச் செல்கிறார். 'சுண்ணாம்புப் பாறைகளால் உருவான நிலத்தில் அக்கிராமத்தில் மழைத்தண்ணீர் தேங்காது. பெய்த மழை வேகமாகப் பொசிந்து கீழே இறங்கி விரைவில் கடலோடு சேர்ந்துவிடும்.' என்ற வரி இதனை நிதர்சனமாக உணர்த்தி நிற்கிறது.நீர் என்பது இங்கு வெறும் பருப்பொருள் அல்ல: அது 'அமிர்தம்' மற்றும் 'மருந்து'. ஒரு பொருளின் அருமை அதன் பற்றாக்குறையில்தான் இருக்கிறது என்ற இனவரையியல் உண்மையை நடேசனின் அடிகள் உணர்த்தி நிற்கின்றன.
'கிணறுகளில் நிலத்தடி நீர் அதிகமிராது. கடல் பெருகினால் தவிர மழைக்காலத்தில் வெள்ளம் வருவது குறைவாகும். மழைக் காலத்தில் மட்டும் குடிதண்ணீர் கிடைக்கும். மழை முடிந்த மற்றைய காலங்களில் ஏதோ ஒரு இடத்தில் உள்ள கிணற்றில் நல்ல தண்ணீர் அமிர்தமாக ஊறும். வறண்டு மழையற்ற காலங்களில் தண்ணீர் மருந்தாகி விடும்' நாவலில் இடம்பெறும் இவ்வடிகள் அதனை எம் கண்முன் நிறுத்துகிறது.
தண்ணீருக்காக மக்கள் படும் அவலம் நட்சத்திரனின் தாயாரின் வாழ்க்கைக்கூடாக எடுத்துக்காட்டப்படுகிறது. கடற்கரை மணலில் இரண்டு அல்லது மூன்றடிக் குழியமைத்து அதில் ஊறும் நிலத்து நீரைத் தேங்காய் சிரட்டையால் அள்ளி மணலை துணியால் வடித்து குடத்தில் நீரெடுப்பார்கள். நவீன வசதிகள் அற்ற காலத்தில்இ ஒரு சமூகம் தனது தேவைகளைத் தீர்க்க எத்தகைய மரபுவழி உத்திகளைக் கையாண்டது என்பதை இது விவரிக்கிறது.கடற்கரை மணலில் குழியமைத்து நீர் எடுப்பது அந்த மக்களின் நிலம் சார்ந்த அறிவை வெளிப்படுத்துகிறது.தேங்காய் சிரட்டையை அகப்பையாகப் பயன்படுத்துவதும், மணலை வடிகட்டத் துணியைப் பயன்படுத்துவதும் ஒரு சமூகத்தின் எளிய ஆனால் நுட்பமான வாழ்வியல் கருவிகளை அடையாளம். சமூகத்தில் குடிநீரைப் பெற்று வருவது பெண்களின் கடமையாக வரையறுக்கப்பட்டிருந்தது.பெண்களின் அன்றாட உழைப்பை இது பதிவு செய்கிறது. இதேபோல் மட்டி எடுக்கப்போவதையும் நாவல் எமக்குணர்த்தி நிற்கிறது
எழுவை தீவு மக்களின் சமூகக்கட்டமைப்பு
தாத்தாவின் வீடு' நாவலில் நடேசன் அவர்கள் முன்வைக்கும் இந்தத் தரவுகள், ஒரு சிற்றூரின் சமூகப் படிநிலை (Social Hierarchy) மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இனவரையியல் (Ethnography) ஆய்வில் இது ஒரு 'சிறிய சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்.' எழுவைதீவு மக்களின் சமூகக்கட்டமைப்பை நாவல் விளக்கி நிற்கிறது. ஊரில் அரைவாசிப்பேர் மீன்பிடிக்கும் கத்தோலிக்க மக்களாகக் காணப்பட , மிகுதி விவசாயம் செய்யாத யாழ்ப்பாண வெள்ளாளர். எழுவைதீவின் சமூக அமைப்பு பாரம்பரியமான தொழில் பிரிப்பு முறையை தாத்தாவின் வீடு விளக்கி நிற்கும் அதேசமயம் வண்ணார், பள்ளர், கொல்லன் மற்றும் அனலைதீவிலிருந்து வரும் பரியாரி என யாவரும் சேவைப்பிரிவினராகக் காட்டப்படுகிறது. மீன் பிடிக்கும் கந்தோலிக்கருக்கும் வெள்ளாருக்கும் துணி துவைக்க வண்ணார் மற்றும் கள்ளுச்சீவ இரண்டு மூன்று பள்ளர் குடும்பங்கள். மயிர் வெட்டப் பரியாரி ஒருவர் மாதமொரு முறை அனலைதீவிலிருந்து வருவார் எனக் கூறுவதில் இருந்தும் இரும்படிக்க ஒரே ஒரு கொல்லனும் காணப்படுகிறார் என்பதில் இருந்தும் ஒரு கிராமம் இயங்குவதற்குத் தேவையான அத்தியாவசியச் சேவைப் பிரிவினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தததை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இது அந்தத் தீவின் சிறிய சனத்தொகையையும், அதேநேரம் தங்கிவாழும் நிலையையும் காட்டுகிறது. இரும்பு வேலை செய்பவரும் மழை பொய்த்துப் போக அக்கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். இது அந்தத் தீவின் பொருளாதாரச் சுருக்கத்தைக் காட்டுகிறது .வறண்ட நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலையில், அங்கிருக்கும் பெரும்பாலான பலரின் தொழிலாகக் கிடுகு பின்னல் காணப்படுகின்றன. அங்கிருக்கும் தென்னை மற்றும் பனை வளத்தை வைத்து ஒரு பொதுவான குடிசைத் தொழிலாகக் கிடுகு பின்னல் மாறியிருப்பதை இது பதிவு செய்கிறது.
எழுவைதீவு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தீவாக இல்லாமல்இ பிற இடங்களோடு கொண்டிருந்ததை உறவுமுறைகளின் திருமண பந்தத்தின் ஊடாக வெளிப்படுத்துகிறார். திருமணத்துக்கு பெண்ணுக்கு மாப்பிள்ளை அனலைதீவு, நயினாதீவில் இருந்து எடுக்கும் வழக்கத்தையும் சுட்டிநிற்கிறது. நிலப்பரப்பு ரீதியான உறவுமுறையை இது சுட்டி நிற்கிறது.சமய ரீதியான திருமண உறவுமுறைகளும் நாவலில் வந்து செல்கின்றன. கத்தோலிக்க மக்கள் யாழ்ப்பாணத்தின் 'இளவாலை' போன்ற தூரத்து இடங்களோடு தொடர்பு வைத்திருந்தார்கள் என நடேசன் கூறுவது சமயம் எப்படி புவியியல் எல்லைகளைத் தாண்டி மக்களை இணைக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
எழுவைதீவு மக்களின் வேர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருப்பதாகக் கூறுவது ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவு: பஞ்சத்தின் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்தது, ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொன்மையான கடல்வழிப் போக்குவரத்தையும், இடப்பெயர்வு வரலாற்றையும் உறுதிப்படுத்துகிறது. இது அந்த மக்களின் மொழிநடை மற்றும் கலாசாரக் கூறுகளில் உள்ள ஒற்றுமைக்கான காரணத்தையும் விளக்குகிறது.
இவர்களை எழுவதீவார் முறைமையற்று நடாத்திய வரலாற்றையும் நாவல் இலைமறைகாயாகக் கூறினாலும் ராமலிங்கத்துக்கும் தாத்தாவுக்கும் இடையிலான உறவு குடும்ப உறவாக நாவலில் பதியப்படுகிறது. ராமலிங்கம் தனது கடின உழைப்பால் வீட்டில் உள்ள அனைவரையும் கவர்கிறான். தேவையறிந்து கோபப்படுகிறான். பின்னர் திருமணம் செய்ய எண்ணி ஊர் திரும்புவதோடு அவனுடைய கதை முடிவுக்கு வருகிறது.
கள்ளுத் தவறணைகள் தோன்றாத காலத்தில் கள்ளு குறித்த தகவல்களையும் நாவல் தருகிறது. யாழ்ப்பாணத்தின் தேசிய பானமாகிய கள்ளு, இக்காலத்தில் பணம்போல் சமூகத்தில் பலரை ஒன்றாக ஒட்டி வைக்கும் பசையாக ஆகியிருந்ததை நாவல் கோடிட்டுக் காட்டுகிறது. இதுவே சமூகத்தில் சாதி முறையைத் தக்கவைத்துக் கொள்கிறது. அதேநேரத்தில் சாதிகளை இணைக்கும் சங்கிலியாகவும் கள்ளுத்தொழில் காணப்பட்டதையும் நாவல் கூறிச்செல்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களைத் தொடர்ந்தும் வெள்ளாளரது காணிகளில் உள்ள மரங்களில் கள்ளேற வைப்பதும் அவர்களை நிலமற்றவர்களாகத் தொடர்ந்து வைத்திருப்பதற்கும் கள்ளே ஊடகமாகவிருந்ததை நாவல் விபரித்துச் செல்கிறது. கள்ளு வியாபாரம் எவ்வாறு நடைபெற்றது என்பதையும் நாவல் எமக்குணர்த்தி நிற்கிறது. மரமேறுபவர்கள் மரத்திற்கு இவ்வளவு கூலி என மரத்தின் சொந்தக்காரர் கொடுப்பதையும் கள்ளேறுபவர்கள் அரசுக்கும் வரிப்பணம் கொடுத்துவிட்டு கள்ளேறுவதையும் நாவல் கூறிச் செல்வதுடன் பெரும்பகுதி மக்கள் கள்ளை அவர்கள் வாழும் குடிசைகள் அருகே வைத்து விற்பார்கள் என்பதையும் நாவல் எமக்குணர்த்தி நிற்கிறது.
மேல்தட்டு வர்க்கம் கள் இறக்கிய கதையை சிவசாமியின் மருமகனான துரையப்பா, கள் வியாபாரம் செய்வதனூடாக நாவலாசிரியர் எடுத்துரைக்கிறார். உண்மையில் துரையப்பா, கள் வியாபாரத்தை வீட்டில் தொடங்கியதன் நோக்கம் அதில் லாபம் சம்பாதிப்பதற்கல்ல. அவர் பணம் ஒரு பொருட்டல்ல. அவரால் கடற்கரையோரத்தில் உள்ள குடிசைகளில் போயிருந்து கள் குடிக்க முடியாது. அவரது நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக குடிப்பதற்காக வீட்டின் பின்வளவில் ஒரு சிறிய கொட்டில் போட்டு சில தென்னைகளிலும் பனைகளிலும் கள் இறக்கினார்.
அரசின் மதுவரித் திணைகளத்தவர்கள் கள் ஏறும் பனை, தென்னையில் பெயின்டால் இலக்கமெழுதிவிட்டு செல்வதையும் பனையில் கள்ளிறக்கினால் அதற்கு அபராதத்துடன் தென்னை அல்லது பனை மரத்தில் பாளையை வெட்டிவிட்டுச் செல்வதையும் நாவல் எமக்குணர்த்தி நிற்கிறது. மரவரி உத்தியோகத்தினர் ஊருக்கு வருவதென்றால் யாராவது தகவல் சொல்லியே வருவார்கள் என்பதையும் வரும்போது உள்ளூர் விதானையும் வருவார் என்பதையும் ஏதாவது பிரச்சனைகளை எதிர்பார்த்தால் அவர்கள் பொலிசுடன் வருவார்கள் என்பதையும் நாவல் எமக்குகூறி நிற்கிறது. கள் முதலாளிமார்களும் மரவரித்திணைக்களமும் கள்ளன் பொலிஸ் உறவாக இருப்பதையும் நாவல் சம்பவங்கள் பலவற்றின் வாயிலாகக் கூறிச் செல்கிறது. கள்ளிறக்குபவனாக வரும் வேலாயுதத்தின் நடை, உடை பாவனைகள் அழியாவடு நாவலையும் நீண்ட பயணம் நாவலையும் நினைவூட்டிச் செல்கிறது. கள் ஏறும் மரங்களுக்கு பெயரிடும் வழக்கம் காணப்பட்டதை வேலாயுதத்தின் உரையாடல் எமக்குணர்த்தி நிற்கிறது. 'வேப்பமரத்துக்காரி ஏறுவதற்குப் பிரயோசனமில்லை. வம்புப்பாளை வந்திருப்பதுபோல, எதற்கும் பாப்பம்' என்ற அடி இதனை வெளிப்படுத்தி நிற்கிறது.
நாவல் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் நடந்த கள்ளக்கடத்தல் நிகழ்வுகளையும் கூறிநிற்கிறது. குறிப்பாக கஞ்சா கடத்தப்படுவதையும் நாவல் கூறிநிற்கிறது. பொலிஸாருக்கு கடத்தல்காரர் எவ்வாறு தண்ணீர் காட்டினார்கள் என்ற விடயத்தையும் நாவல் எமக்குணர்த்திச் செல்கிறது. அத்தோடு விசர்நாய்களை தீவில் கொண்டு விடும் வழக்கம் இருந்ததையும் நாவல் நமக்குணர்த்தி நிற்கிறது. இவ்வூர் குறித்து நடேசன் சொல்லும்போது அதில் அங்கதம் ஒளிந்திருக்கும். 'ஒரு சுண்டு நெல் விளையாத வளமற்ற பிரதேசம். ஏற்கனவே உள்ளவர்கள் எப்படி இந்தத்தீவை வாழ்வதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்பதே அதிசயம் அதிலும் இத்தனைப்பேர் வாழ்வதே பூவுக்குள் பூசனிக்காய் வைத்த உலக அதிசயம்'.
1960களில் இருந்த எழுவைதீவுக் கிராமத்தின் குறுக்குவெட்டு முகத்தை இந்நாவல் எமக்கு கூறிநிற்கிறது. ஆண்ணாதிக்க சமூகத்தில் குடும்பத்தலைவனின் வன்முறைக்கு பெண் மற்றும் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறனர் என்பதை நாவல் வெளிப்படுத்தி நின்றாலும் உண்மையில் தாத்தாவின் கதையே இந்நாவல். ஈழத்திலக்கிய வரலாற்றுப் பாதையில் புராதன பண்பாட்டு எல்லையில் வேர்கொண்டு அதன் அகங்களையும் முகங்களையும சாந்தனின் 'சித்தன் சரிதம் எவ்வாறு வெளிப்படுத்தி நின்றதோ அதேபோல் குடும்ப வன்முறையும் சாதிய அடக்குமுறையும் உறைந்து உரமாகிக் கிடந்த எழுவைதீவு கிராமத்தில் வாத்தியராக வாழ்ந்து ஓய்வுபெற்று மடிந்த சிவசாமி வாத்தியாரின் கதையே இந்நாவல்.
யாழ்ப்பாண மத்தியதரவர்க்கத்தின் சமூக வாழ்வை அதன் இயல்ப் பண்போடு எடுத்து விளக்கும் இந்நாவல் யாழ்ப்பாண கிராமப் புற மக்களின் இயற்கையோடு ஒட்டிய வாழ்வையும் அம்மக்கள் வாழ்வில் எதிர்கொண்ட நெருக்கடிகளையும் காட்சிப்படிமங்களுக்கூடாக நுண்மையாகச் சித்திரிக்கிறது. தலைமுறையினர் வாழ்வு என்றவுடன் இந்நாவலை சினுவா அச்சிபியின் சிதைவுகள் நாவலுக்கும் அலெக்ஸ் ஹெய்லியின் வேர்கள் நாவலுக்கும் இதனை ஒப்பிட்டு பேசுவர். தலைமுறையினர் வாழ்வு என்றவுடன் இந்நாவலை சினுவா அச்சிபியின் சிதைவுகள் நாவலுக்கும் அலெக்ஸ் ஹெய்லியின் வேர்கள் நாவலுடன் ஒப்பிட்டு பேசமுயன்றாலும் இவ்விருநாவல்களின் கதைக்கருவும் அவற்றின் பேசுபொருளும் கதைச்சித்திரிப்பு முறைமைகளும் வெவ்வேறானவை. ஆயினும் இம்மூன்று நாவல்களும் தம் பரம்பரைக்கதைக்கூறல் என்னும் மையப்புள்ளியில் சந்திக்கின்றன. சினுவா அச்சிபியின் சிதைவுகள் நாவல் 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வருகையால் நிகழும் மாற்றங்களையும் ; கலாசாரச் சிதைவுகளையும் பேசிநிற்கிறது. நடேசனின் தாத்தாவின் வீடு சிவசாமி வாத்தியாரின் மரணத்திற்குப் பின் ஒரு குடும்பமும், ஒரு தீவின் அடையாளமும் சிதைவதைப் பேசி நிற்கிறது. அலெக்ஸ் ஹேலியின் 'வேர்கள்' நாவல் எழு தலைமுறைகளின் வாழ்வைப் பேசுகிறது. சாந்தனின் சித்தன் சரிதம் ஆறுதலைமுறையினரின் வாழ்வைப் பேசுகிறது. இந்நாவல் மூன்று தலைமுறைகளின் வாழ்வைக் கோடிட்டுக் காட்டுகிறது. தாத்தாவின் வீடு' என்ற இந்த நாவல் நட்சத்திரன் என்னும் நோயல்நடேசனின் இளவயதுச் சம்பவங்கள் சிலவற்றை மையமாக வைத்துப் பின்னப்பட்ட நாவல் ஆகும். நாவலின் காலம் 1965 -1970 வரையிலான போரற்ற காலத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டாலும் வன்முறைக்கு இரையாகிப் போயிருந்த யாழ்ப்பாண தீவகற்பத்தின் கடந்தகால வாழ்வை எடுத்துரைக்கிறது.
குடும்ப வன்முறை, சாதிய அடக்குமுறைக்கு உரமாகிக் கிடந்த கிராமத்தில் இன வன்முறை வேர்விட்டதை நடேசன் துல்லியமாக எடுத்துக்காட்டியிருக்கிறார். நாவலின் தொடக்கத்தில் அவுஸ்ரேலியாவில் இருந்து தாய்நாட்டு வரும் நட்சத்திரனுக்கும் கடற்தொழிலாளிக்கும் இடையிலான உரையாடல் நட்சத்திரனின் தந்தை குறித்த விம்பத்தைச் சிதைக்கிறது. நாவலின் தொடக்கத்தில் ஊராரின் நகைகளை அடவுபிடிக்கும் ஒருவராக நட்சத்திரனின் தந்தையார் விளங்குவதைப் எடுத்துரைக்கும் நாவலாசிரியர் கதை செல்லச் செல்ல மகன் தந்தைக்கும் இடையிலான முரண்பாட்டை விரிவுபடுத்திச் செல்கிறார். வாத்தியார் கனடாவில் இறந்து கால நூற்றாண்டுக்குப் பிறகு வயோதிபர் நட்சத்திரனிடம் 'வாத்தியாரிடம் எனது மனைவியின் சங்கிலியை அவசரத்துக்கு அடைவு வைத்தேன் . ஏதாவது தெரியுமா?' எனக் கேட்ட கேள்வியால் நட்சத்திரன் நிலை குலைந்து போகிறான். அவமானத்தால் புழுங்கிப் போகிறான். அவ்விடத்தில் தாயார் என்ற பாத்திரத்தைச் சரியாகக் கொண்டு வருகிறார். 'அடைவு நகை வாங்காதே . அதிலும் பணம் இல்லையென்று சொல்வது புண்ணியம். பிற்காலத்தில் நகையை மீட்க முடியாதவர்கள் உங்களைத் திட்டும் பாவம் என்ரை பிள்ளைகளுக்குத்தான் சேரும்' எனச் சொல்லி தாயார் தலையில் அடித்துக் கொள்வதை நட்சத்திரனின் நினைவடுக்குகளின் வாயிலாக இந்நாவல் வெளிப்படுத்துகிறது. 'அடைவு நகை வாங்காதே' என்று தடுத்த தாயின் குரல், அந்தச் சமூகத்தில் நிலவிய எளிய அற விழுமியங்களைப் பிரதிபலிக்கிறது. தந்தையின் வன்முறைக்கு எதிராகத் தாயின் அமைதியான ஆனால் உறுதியான ஆளுமை இங்கே முன்னிறுத்தப்படுகிறது. நேர்மையானவராகவும் அநீதிக்காகக் குரல் கொடுப்பவராகவும் தன்மானம் நிறைந்தவராகவும் வரும் நட்சத்திரனின் தாயார் சிறுமை கண்டு பொங்குபவராகக் காணப்படுகின்றார்.
தாத்தாவின் இழவு வீட்டில் நட்சத்திரனின் அப்புவை குறைசொல்வதன் வாயிலாக தந்தையார் குடும்பத்துக்கு இழைத்த கொடுமை விளக்கப்படுகிறது. அதுவே கடுமையான வெறுப்பாக மாறுகிறது. தந்தையார் பாசமானவராகக் காணப்பட்டாலும் கண்டிப்பானவர். கோபக்காரர். இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் இராணுவத்தில் பணியாற்றி பின்னர் வாத்தியார் தொழிலில் இணைந்து கொண்டவர். முதல் வெறுப்பு: லீவுக்கு மலையத்தில் இருந்து வீட்டிற்கு வந்த தந்தையின் தூக்கத்தைக் கெடுத்தமையால் தந்தையார் நட்சத்திரனைக் கண்டிக்கிறார். பின்னர் அவன் விளையாட்டில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தி வருவதாலும் தந்தையின் சொல்லைச் செவிமடுக்காமையாலும் நட்சத்திரனின் துடும்பாட்ட மட்டையை கொத்தி எறிகிறார். அத்தோடு தாயாரை, தந்தையார் கண்டித்தமையாலும் அவன் தந்தை மீது கோபம் கொள்கிறான். அதுவே நாவல் முழுதம் தந்தை மீது கொண்ட வெறுப்பாக மாறிப் போகிறது.
கதைசொல்லியாக வரும் நட்சத்திரன் 1970 ஆண்டுடன் எழுவைத்தீவுடனான தொப்புள்க் கொடியை அறுத்துக் கொள்கிறார். நட்சத்திரன் எழுவைத்தீவுடனான தொப்புள் கொடியை அறுத்துக் கொண்ட காலத்தை போரில்லாத அமைதிப் புறாக்கள் வானத்தில் சிறகடித்துப் பறந்த காலமாகக் கூறுகிறார். பின் ஐம்பது ஆண்டுகள் கடந்தநிலையில் அவன் வீட்டுக்கு வரும்போது அவன் எதிர்நோக்கும் சங்கடங்கள் அநேகம். தாத்தாவை ஆவி வடிவில் தன் சொந்த வீட்டில் காணும் இவன் மனம் நொடிந்து போகிறான். எழுவைதீவின் முதல் ஓட்டு வீடாக தாத்தாவின் வீடே காணப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் பின்பாக எழுவைதீவிற்கு சீமெந்து வந்தநிலையில் கட்டப்பட்ட வீடு அழிவுண்டு இருந்த இடமே தெரியாமல் போனதை நினைத்து மனமுடைந்து போகிறான் நட்சத்திரன். எட்டாம் தரத்தில் யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் படிக்கும்போது தாத்தா இறந்து போன செய்தியை நினைத்துப் பார்க்கிறான். கூட்டு குடும்பமாக வாழ்ந்த வீடு நட்சத்திரனின் தந்தையால் கலைகிறது. தாத்தாவும் அவருடைய மகளின் குடும்பத்தாரும் அவ்வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்: வெளியேற்றப்படுகின்றனர். ஈற்றின் தாத்தாவின் மரணம் குடும்பத்தைச் சிதைக்கிறது. நட்சத்திரன் யாழ்ப்பாண நகரத்தின் விடுதியில் தங்கி பத்தாவது தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவரோடு அவருடைய குடும்பத்தினரும் யாழ்ப்பாணத்தை நோக்கி இடம் பெயர்ந்தனர். அவ்விடம்பெயர்வை தம்பிகள் தங்கைகள் என் அனுமனது வாலாக நீண்டதாகக் கூறுகிறார்.
நாவலில் வரும் அன்பும் பரிவும் கொண்ட தாத்தா பாத்திரம் கனதியான கச்சிதமான பாத்திரம். ஊரின் நன்மை, தீமைகளில் கலந்து சிறப்பிக்கும் பாத்திரமான தாத்தா பாத்திரத்தைச் சிற்பியைப் போல் நடேசன் செதுக்கியுள்ளார். சிவசாமி வாத்தியார் வெறும் ஒரு பாத்திரமல்ல, அவர் எழுவைதீவின் ஒரு காலகட்டத்தின் அடையாளம். நட்சத்திரனின் வாழ்வோடு சங்கமமாகி அவனுடைய வாழ்வின் ஒவ்வாரு கணங்களிலும் அவனோடு கலந்து இயைந்து பின்னிப் பயணிக்கும் பாத்திரமே தாத்தா பாத்திரம். தீவில் நடுப்பகுதியில் பல தலைமுறையாக வாழ்ந்தவர் சிவசாமி வாத்தியார். சிறுவனாக இருந்தபோது அமெரிக்க மிசனால் தத்தெடுக்கப்பட்டவர். பின்பு தெல்லிப்பழை மகாஜனாக்கல்லுரியில் படித்து ஆசிரியரானவர். அவரது மனைவிகூட அக்காலத்தில் உடுவில் மகளிர் கல்லூரியில் படித்தவர். இருவரும் அந்தத்தீவிலே உள்ள பள்ளியில் ஆசிரியரானர்கள். ஆசிரியர்களை மக்கள் தங்கள் குருவாக மதித்ததால் அவர்களிடம் அந்த ஊர் மக்கள் நல்லது கெட்டது கேட்டு நடந்தனர். நாற்பது வருடங்கள் ஒரே ஊரில் கற்பித்தபடியால் இரண்டு தலைமுறையினர் அவர்கள் கற்பித்த கல்வியின் துணையோடு வாழ்க்கையை நடந்து கடந்து வந்தவர்கள்.
கடலால் பிரிந்து கிடந்த தீவுகளை ஒன்றிணைக்கும் லோன்ஞ் எனப்படும் இயந்திர வள்ளங்களின் போக்குவரத்து வந்தபோது அதை ஒரு கூட்டுறவு நிறுவனமாக உருவாக்கிய பெருமையும் தாத்தாவைச் சேரும். குறைந்த பணத்தில் மக்கள் சேவையாக மாற்றிய வரலாறு பலருக்கு மறந்திருக்கும். அதில் சிவசாமி வாத்தியாரின் பங்கு முக்கியமானது. வள்ளங்கள் வந்தபோது அவர் அந்த வள்ளச்சேவையை நடத்தும் கூட்டுறவுச் சங்கத்தில் முக்கியமானவராகவும் பின்பு தபால் சேவை வந்தபோது அதற்குப் பொறுப்பாகவும் ஆகினார். எனவே, அந்தத் தீவிற்குப் போக்குவரத்து (இயந்திர வள்ளம்), தபால் சேவை போன்ற நவீனத்துவத்தைக் கொண்டு வந்த முன்னோடியாகத் தாத்தா திகழ்கிறார்.
பத்து பிள்ளைகளில் ஐந்து மட்டும் புவியில் தங்கின. மற்றவை ஊரில் பெய்த மழை நீராக மறைந்துவிட்டன. இரண்டு ஆண்களுக்கும் மூன்று பெண்களுக்கும் திருமணம் முடித்து வைத்தார். எட்டாம் வகுப்புவரை படித்த கடைசி மகள் ராணியை தனக்குப்பின் தபால் கந்தோருக்குப் பொறுப்பாக்கினார். ராணியின் கணவர் மலையகத்தில் வாத்தியாராக வேலை செய்ததால் அவளது மூத்தமகன் நட்சத்திரன், சிவசாமி வாத்தியாரின் மடியில் வளர்கிறான். கடைசி மகளின் மகனானதால் அவனுக்கு அந்த வீட்டில் அதிக உரிமை ஏற்படுகிறது. இரண்டாவது மகள் சீனியம்மாவின் மூத்த மகன் யாழ்ப்பாணத்தில் படிக்கிறான். இளையவன் சமரசம். அத்துடன் பெண்பிள்ளைகளும் பிறந்தன. கணவர் துரையப்பா. சிலகாலம் விதானையாகவும் பின்பு பல தொழில்கள் செய்தபோதிலும் இறுதியில் கள் வியாபாரம் நடத்த முடிவு செய்தார்.
யதார்த்த நாவலில் விந்தைக் கூறுகளாய் இணையும் மாயா யதார்த்தம் தாத்தாவின் ஆவியாகத் துலங்கி வேரோடு மண்ணில் நிலைகொள்கிறது. எழுவைதீவில் நட்சத்திரன் மனைவியோடு தங்கியிருந்த நிலையில் தாத்தா குறித்த ஞாபகம் நடு இரவில் தன்னுடைய சொந்த வீட்டை நோக்கி நடக்க வைக்கிறது. அங்கு இறந்த சமரசத்துடன் தாத்தா தோன்றி வீட்டை நடு இரவில் மீளக்கட்டுகிறார். இறந்த தாத்தா குறித்த மனப்பதிவுகளே தாத்தாவை ஆவி வடிவில் நட்சத்திரன் காண வழிசெய்கிறது. இது நட்சத்திரனின் ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் குற்ற உணர்வு அல்லது ஏக்கத்தின் வெளிப்பாடாகக் கொள்ளலாம். தாத்தாவின் தோற்றத்தை கதைசொல்லியே எடுத்துரைக்கிறார். முற்றாக முகச்சவரம் செய்த முகம். முன் நெற்றி வழுக்கலும் கூரிய நாசியும் பொதுநிறமாகத் தோன்றுபவர் தாத்தா. அவரது கழுத்தும் அதன்கீழ் நெஞ்சின் இருமருங்கும் அடர்த்தியாகி பின் வயிற்றில் வேட்டிவரை பரந்து இருக்கும் நரைமயிர்கள் கொண்ட கூனல் கொண்ட தேகம் இயல்பான கதையோட்டத்தின் வாயிலாக எடுத்துரைக்கப்படுகிறது.
நாவலில் இடம்பெறும் சீனியம்மா, மன்னார் மாமா, மொட்டை விதானை, செல்வரத்தினம் அண்ணை, மலேசியாவில் இருந்து வந்த சின்னாச்சி, சின்னாச்சியின் மகன் சிறிதரன் அவனுடைய பிள்ளைகள் என வருகின்ற அனைத்துப்பாத்திரங்களும் மனத்தினில் நின்ற, நிற்கின்ற பாத்திரங்களாகவே சித்திரிக்கப்பட்டன. தாயாரின் தமையனாக வரும் மன்னார் மாமா நோய்வாய்ப்பட்டவராக இருந்தாலும் வலுவானவர். மன்னாரில் ஐந்து பிள்ளைகளை பெற்றுவிட்டு மத்திய வயதில் இறந்தார். மீன் வாங்குவதற்காக வீட்டுக்கு வியாபாரி ஒருவர் வந்த சமயத்தில் அவனைக் கண்டித்தவர். பின்னர் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டவர். சீனியம்மா பாத்திரமும் நாவலில் ஒரு சில இடங்களில் வந்து போனாலும் அவர் நட்சத்திரனின் கொண்ட பாசத்தையும் நாவல் சித்திரிக்கிறது.
மொழிநடை
நடேசனின் மொழிநடை கச்சிதமான, கட்டுக்கோப்பான மொழிநடை. சிக்கல் சிடுக்கின்றி நகருகிறது. சிலவிடங்களில் அழகிய கவிதை போல் நகர்ந்து செல்கிறது. பால்யப் பருவத்தை இரை மீட்டும் போது உரைநடை மென்னுணர்வுத்தளத்தில் இயல்பாக நகர்கிறது.
'வாழ்வின் பெரும்பகுதியைப் பிறந்த இடத்திற்கு வெளியே கரைத்துவிட்டேன். உறவினர்கள், நண்பர்கள், அறிந்தவர்கள் என மிகுதியாக ஊரில் இருந்தவர்களைக் கைவிரலில் எண்ணமுடியும். ஆனால் எனது நினைவுகள், வானத்தில் உள்ள விண்மீன்கள் போல் பெரிதும் சிறிதுமாக எண்ணற்று இருந்தன. வழியில் நடந்த சம்பவம் எண்ணக் குவியலை ஆழமாக உழுதுவிட்டது.'
நடேசனின் மொழிநடை எடுத்துக்கொண்ட பொருளைச் செம்மையாகக் கூறிநிற்கிறது. தத்துவார்த்தக் கருத்துக்களோடு வெளிப்படும் இம்மொழிநடை படைப்புக்கு உயிர் கொடுக்கிறது. எளிய, தெளிவான இம்மொழிநடை சிறிய சிறிய வாக்கியங்களாலானது.
'வீடுகள் காலத்தினால் சிதைந்தபோதிலும், முட்கிழுவையால் உருவாக்கப்பட்ட உயிர்வேலியாகக் காலத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தது. வாழ்வில் போராட்டம் மனிதர்களுக்கு மட்டுமே என நினைத்து வாய் கிழியக் கத்தியபடி நாம் சுயநலமாக நடந்து கொண்டாலும் மிருகங்கள் தாவரங்கள், ஏன் ஒரு நாணல்கூட ஆற்றோடும் காற்றோடும் மவுனமாக தம் வாழ்விற்காகப் போராடுகின்றன.'
எழுவைதீவில் சிதிலமடைந்து இருக்கும் வீட்டை நட்சத்திரனால் பார்க்கமுடியவில்லை. இதனைத் தெருவில் நின்று இரும்புக் கதவூடாகப் பார்த்துவிட்டு நகர்கிறார். மனத்துக்கு கஷ்டமான அந்நிகழ்வை உவமையணிக்கூடாகக் காட்சிப்படுத்துகிறார்.
'குணமாக்க முடியாத புற்றுநோயாளியான உறவினர் ஒருவருக்கு இறப்பு நிச்சயம் என்று தெரிந்து கொண்டே அவரை வைத்தியசாலையில் சென்று பார்க்கும் மன நிலையில், நான் வளர்ந்த வீட்டைத் தெருவில் நின்று இரும்பு கதவு ஊடாக எட்டிப் பார்த்து விட்டு அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்தேன்.'
கதையொட்டத்தின் உரையாடலுக்கேற்றாற்போல் உவமைகள் கச்சிதமாக நாவலில் பொருந்திப் போகின்றன. நடேசனின் காட்சிப்புலம் விபரணச்சித்திரமாய் நாவலில் துலங்குகிறது. கற்பனையற்று நிதர்சனமாகத் தான் கண்ட அனுபவித்த காட்சிகளை எவ்வித பாசாங்கும் அற்று நடேசன் விளக்கிச் செல்கிறார்.
'சிறு வயதில் அம்மாவோடும் நண்பர்களோடும் பல முறை கால்கள் புதைய நடந்த மணற் பிரதேசம். கற்களற்ற கடற்கரையில் தற்போது கரையெங்கும் குடிசைகள். ஆங்காங்கே மீன்பிடி வள்ளங்கள். நீரின் மேலே சில வள்ளங்கள் தண்ணீரின் அசைவுக்கேற்ற மாதிரி அசைந்து கொண்டிருந்தன. சில கரையில் ஏற்றி விடப்பட்டுக் கிடந்தன.'
நடேசனின் உரையாடலில் யாழ்ப்பாண வட்டாரப் பேச்சு வழக்கே கையாளப்படுகிறது.
தாத்தாவின் வீடு நாவல் 1960-களின் பிற்பகுதியில் எழுவைதீவு மக்களின் வாழ்வியலை அதன் இயல்பான தன்மையோடு பதிவு செய்கிறது. அந்தத் தீவின் வறண்ட நில அமைப்பு, மக்களின் நீர் தேடல், மீன்பிடி மற்றும் கைத்தொழில் சார்ந்த சமூகப் பிரிவுகள், தமிழகத்துடனான வரலாற்றுப் பிணைப்பு என ஒரு கிராமத்தின் ஒட்டுமொத்தப் பின்னணியையும் இந்நாவல் விவரிக்கிறது. அதேநேரம், குடும்ப அமைப்பிற்குள் நிகழும் வன்முறை, தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான முரண்பாடு மற்றும் சாதிய அடுக்குமுறை போன்ற கசப்பான உண்மைகளையும் இது மறைக்காமல் பேசுகிறது. சிவசாமி வாத்தியார் என்னும் தாத்தா பாத்திரத்தின் ஊடாக ஒரு தலைமுறையின் கதையைக் கூறும் நடேசன், இறுதியில் போரினாலும் இடப்பெயர்வினாலும் சிதைந்து போன ஒரு ஊரின் கடந்தகால வாழ்வை நட்சத்திரன் என்னும் பாத்திரத்தின் நினைவுகள் வழியாக வாசகர்களுக்குக் கடத்துகிறார். ஒரு குறிப்பிட்ட காலத்தின் சமூக மாற்றத்தையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் யதார்த்தமாகப் படம்பிடித்துக் காட்டியிருப்பதே இந்நாவலின் வெற்றியாகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.