கட்டுரையாளர்: மு. இராமர் மாசானம், முனைவர் பட்ட ஆய்வாளர் (ORCID ID - 0009-0003-3769-0623)  | நெறியாளர்: முனைவர் க. மாரியப்பன், உதவிப் பேராசிரியர், தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை, திராவிடப் பல்கலைக் கழகம், குப்பம், ஆந்திர பிரதேசம் – 517425 [9486863620, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]


ஆய்வு சுருக்கம்:

தேவதேவனின் சொல்லாளுகைத் திறனை அறிவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை பயணிக்கிறது. இதற்குத் தரவாக தேவதேவனின் ‘நல்லதோர் வீணை’ கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் சில கவிதைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சொல்லாளுகைக் குறித்தும் சொல்லாளுகைத் திறனாய்வு குறித்தும் கட்டுரையின் தொடக்கத்தில் தெளிகிறோம். பின்னர், சொல்லாளுகைக் கருவிகள் குறித்த தெளிவோடு, பரவலாக தேவதேவனின் கவிதைகளில் பயின்று வந்த சொல்லாளுகைக் கருவிகளை அடையாளம் காண்கிறோம். கையோடு, அவை வாசகரிடத்தில் ஏற்படுத்தும் விளைவு குறித்தும் ஆராய்கிறோம். முடிவாக, தேவதேவன் தன் கவிதைகளில் எத்தகைய சொல்லாளுகைக் கருவிகளின் வழி, வாசக எதிர்வினையைக் கட்டமைக்கிறார் என்று தொகுத்து காண்கிறோம். இவ்வாய்வுக் கட்டுரையில் சொல்லாளுகை அனுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

புதுக்கவிதை எனக் கவிதை புதிய பரிணாமமடைந்து தமிழ்ச் சூழலில் நிலைத்து பல்லாண்டு கால வரலாற்றைக் கண்டுவிட்டது. இவை நவீனமாகி தற்போது கவிஞர்களால் பல்வேறு உத்திகளைக் கைக்கொண்டு இயற்றப்பட்டு வருகின்றன. இக்கவிதைகள் உருவாக்கத்தில் கவிஞர்களால் சில பல கலையாக்க உத்திகள் கையாளப்படுகின்றன. இத்தகைய கலையாக்கப் படைப்பில் சொல்லாளுகையின் பங்கு இருப்பது தவிர்க்க இயலாதது. ஆசிரியர் முனைந்து, திட்டமிட்டுச் செய்யாவிட்டாலும் கலைப்படைப்பின் உட்கூறுகளாக இவற்றை நாம் கவிதைகளில் காணலாம். இவை கவிஞரின் தனித்தன்மையைக் காட்டக்கூடியவை. வாசகர்களை கவிதையின் பால் ஈர்க்க, அரிய பல கருத்துக்களை எளிய மொழியில் கொண்டுபோய்ச் சேர்க்க, குறிப்பிடத்தக்க எதிர்வினையை உருவாக்க என கவிதையின் நோக்கைப் பொறுத்து இவை அமையும். தேவதேவன் கவிதைகளை சொல்லாளுகைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, தேவதேவனின் சொல்லாளுகைத் திறனை அறிவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை திகழ்கிறது. இவ்வாய்வானது, கவிதைகளில் இடம்பெறும் உத்திகளை அடையாளம் காண்பதோடு மட்டும் நிற்காமல் அவற்றின் சொல்லாளுகைச் செயல்பாட்டை ஆராய முற்படுகிறது. இதன் வழி, ஒரு குறிப்பிட்ட கவிஞர் தன் கவிதைகளில் கொள்ளும் மொழியும் பொருளும் எத்தகைய வாசக எதிர்வினையை உருவாக்குகிறது என்பதை அறிய முடியும்.

 

[ கவிஞர் தேவதேவன்]

சொல்லாளுகை (Rhetoric):

சொல்லாளுகை 2000க்கும் மேற்பட்ட ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. இதற்கு அரிஸ்டாட்டில் முதற்கொண்டு பல அறிஞர்கள் பலவிதமாக விளக்கங்களைத் தந்துள்ளனர். இவ்வாறு கிடைக்கும் விளக்கங்களைத் தொகுத்து சொல்லாளுகை என்பது நம் அன்றாடத்தில் நிகழும் உரையாடல்கள் முதற்கொண்டு விளம்பரம், செய்தித்தாள், மேடைப்பேச்சு, அரசியல் உரைகள், இலக்கியம் முதலிய தகவல் பரிமாற்றச் சூழல்களில் மக்களைக் கவர, அவர்களின் சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்த கையாளப்படும் மொழிசார், மொழிசாராத மற்றும் கலைச்சார் செயல்முறைகளின் தொகுப்பு அதாவது குறியீடுகளின் தொகுப்பு எனலாம்.

வரையறை:

சொல்லாளுகைக்கான வரையறை என்று பார்ப்போமானால், வரலாற்று நெடுகிலும் பல அறிஞர்கள் வரையறைகள் வழங்கியிருப்பதைக் காண முடிகிறது. அரிஸ்டாட்டிலின் வரையறை தற்காலத்தில் சொல்லாளுகை பயன்படுத்தப்படும் பல்வேறு சூழல்களுக்கும் ஏறத்தாழப் பொருந்தி வருவதால், நாம் இங்கு அவரது வரையறையைப் பார்ப்போம்.

ஒவ்வொரு குறிப்பிட்ட சூழலிலும், மற்றவர்களைத் தன்வயப்படுத்துவதற்குக் கிடைக்கக்கூடிய வழிமுறைகளைக் கண்டறியும் திறன்.

சொல்லாளுகைத் திறனாய்வு:

“சொல்லாளுகைத் திறனாய்வு என்பது, சொல்லாளுகைச் செயல்முறைகளைப் புரிந்துகொள்வதற்காக, குறியீட்டுச் செயல்கள் மற்றும் குறியீட்டுப் பொருட்களை முறையாக ஆராய்ந்து விளக்கும் செயல்முறை ஆகும்”. (K. Foss. Sonja. 6-7).

உருவாக்கத் திறனாய்வு:

சொல்லாளுகைத் திறனாய்வு பொதுவாக, Neo-Aristotelian Criticism முதற்கொண்டு பல்வேறு அனுகுமுறைகளில் நிகழ்த்தப்படுகிறது. நம் ஆய்விற்கு ஏற்ற அனுகுமுறையாக நாம் Generative Criticism அனுகுமுறையை ஏற்போம். ஏனெனில்,

Generative Criticism ஆய்வாளரின் ஆய்வுக் கேள்விகளிலிருந்து உருவாகும் பகுப்பாய்வு அலகுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நெகிழ்வான, படைப்பாற்றல் மிக்க திறனாய்வு முறையாகும். இது ஆய்வாளருக்கு, படைப்பின் தனித்துவத்திற்கேற்ப புதிய ஆய்வுப் பார்வைகளை உருவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

உருவாக்கத் திறனாய்வின் செயல்முறையானது, கட்டுரை எழுதத் தொடங்குவதற்கு முன்னதாக மூன்று செயல்முறைகளை உள்ளடக்கியது.

அவை…

ஆய்வுக் கேள்வியை உருவாக்குதல் மற்றும் ஆய்வுப் பொருளைத் தேர்ந்தெடுத்தல்

பகுப்பாய்வு அலகைத் தேர்ந்தெடுத்தல்

(அ) கருத்துருக்கள் அல்லது கோட்பாடுகளிலிருந்து பகுப்பாய்வு அலகுகளை உருவாக்குதல்

(ஆ) ஆய்வுக் கேள்வியிலிருந்து பகுப்பாய்வு அலகுகளை உருவாக்குதல்

ஆய்வுப் பொருளைப் பகுப்பாய்வு செய்தல் (K. Foss. Sonja. 484).

இவ்வாய்வு தேவதேவன் கவிதைகள் சொல்லாளுகைத் திறனை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன?

என்ற ஆய்வுக்கேள்வியை மையமாக வைத்து, கவிதைகளில் இடம்பெறும் சொல்லாளுகைக் கருவிகள் வாசகருடனான உறவாடலை எவ்வாறு கட்டமைக்கின்றன எனப் பகுப்பாய்வதன் வழி தேவதேவனின் சொல்லாளுகைத் திறனை விளக்குகிறது.

இவ்வாய்வின் ஆய்வு பொருள்:

தேவதேவனின் படைப்பாக்கமான நல்லதோர் வீணை நூலில் இடம்பெரும் சில கவிதைகளே இக்கட்டுரையின் ஆய்வுப் பொருளாக உள்ளன. குறிப்பிட்ட எந்தவொரு வரையறையின்றியே கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவை ஆய்வாளரின் தற்சார்புத் தேர்வாக இருப்பதால், இவ்வாய்வின் முடிவுகள் தொகுப்பு முழுமைக்கும் பொதுமைப்படுத்தக்கூடியவை அல்ல. சொல்லாளுகை இயங்கும் விதத்தை எடுத்துக்காட்டும் விளக்கங்களாகவே அவை உள்ளன.

ஆய்வுக் கேள்வி:

தேவதேவன் கவிதைகள் சொல்லாளுகைத் திறனை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன?

பகுப்பாய்வு அலகு:

கவிதைகளில் காணக் கிடைக்கும் சொல்லாளுகைக் கருவி வகைகளை அடையாளம் காணுதல்; அவை இயங்கும் தொடர்கள் எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளப்படும்.

பகுப்பாய்வு முறை:

கவிதைகளில் வரும் சொல்லாளுகைக் கருவிகளை அடையாளம் கண்டு வகைப்படுத்துதல்; ஒவ்வொரு வகையும் வாசகருடன் உறவாடும் விதத்தை விளக்குதல்.

சொல்லாளுகைக் கருவிகள்:

“சொல்லாளுகைக் கலையின் வரலாற்றுப் போக்கில், குறியீட்டு அமைப்புகளில் கிடைக்கக்கூடிய பல்வேறு வளங்களைத் திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம் விரும்பிய விளைவுகளை உருவாக்க முடியும் என்ற புரிதலின் அடிப்படையில் இக்கலை வளர்ச்சியடைந்துள்ளது.” (HERRICK. JAMES A. 16). இதிலிருந்து, விரும்பிய விளைவுகளை உருவாக்க சொல்லாளுகையாளரால் திறமையாகப் பயன்படுத்தப்படும் குறியீட்டு அமைப்பின் பல்வேறு வளங்களைச் சொல்லாளுகைக் கருவிகள் என்கிறோம் என்பது தெளிவாகிறது. இதனை இலக்கியப் பிரதிக்குப் பொருத்திப் பார்க்கும்போது, சொல்லாளுகைக் கருவிகள் என்பவற்றை, ஒரு பிரதி தன் வாசகர்/கேட்போரை நிலைப்படுத்தப் பயன்படுத்தும் மொழி, வடிவம், உத்திகள் என்று அறிகிறோம்.

தேவதேவன் கவிதைகளில் சொல்லாளுகைக் கருவிகளின் பயன்பாடும் வாசக எதிர்வினையும்:

மனித வாழ்க்கைச் சுரங்கமே கவிதைகளின் பிறப்பிடமாக இருக்கிறது. எண்ணற்றக் கவிஞர்களின் எண்ணற்றக் கவிதைகள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் தன் அனுபவப் பெரு வெள்ளத்தையும் கடத்துவதாக உள்ளது. அதை கடத்தும் நிகழ்வில் பலவாறான அதிசயங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. அவையே கவிதைகளின் கூறுகளாகப் பொதிந்துள்ளன. இக்கவிதைகளின் ஊற்றுக்குச் சுனையாய் இருந்துவரும் வாழ்வின் மகிழ்ச்சிகளை வரிகளில் கடத்தும் நம்பிக்கை வரிகளைக் கொண்டு நிகழ்த்தியிருப்பார் அதிசயத்தை.

‘அங்கே நிகழ்ந்தது’ என்ற கவிதையில், இழந்த ஒன்றை மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியை கவிதை வரிகளில் கொண்டு வந்திருப்பார்.

‘மலைமுடியில் எரிந்த ஒரு விளக்குபோலும்’
என்று ஒரு தூர நம்பிக்கையை வரிகளில் விதைக்கிறார்.

‘சருகிலேயே ஒரு புதுச்சுடர் பூத்தது போலும்’
என்று உயர்ப்பெற்ற நிலையைக் காண்பிக்கிறார்.

இவ்வாறு உவமை, உருவக் குறியீட்டின் வழி புதிய உணர்வைக் கடத்தியிருப்பார்.

சொற்களே கவிதைகளில் நிரம்பியுள்ளன. வெற்றுப் பார்வைக்கு அவை வெறும் அர்த்தக் கூடே. இரசனைக் கண்களுக்கே அத்தகைய அர்த்தக் கூட்டின் உள்ளார்ந்த நுகர்வு தெரியும். கவித்துவமான சொற்களில் மனதைப் பறிகொடுத்து மன நிறைவடைவதே வாசகனின் அன்றாடமாக உள்ளது. அவ்வகையில் கவிதைகளில் இடம்பெறும் தனித்துவமானச் சொற்கள் நிறைந்து ஏற்படுத்தும் பேரின்பத்தைக் கண்கூடக் காணவே விருப்பம். இவ்வகைச் சொற்கள் பலவற்றைத் தேவதேவன் கவிதைகளில் காணலாம். ‘நிறைவாழ்வுப் பேரொளி’ என்பது முழுமையடைந்த ஒரு வாழ்வில் வீசும் பேரொளி என்ற உணர்வைக் கடத்துகிறது. இதுபோன்று ‘உதிர் இலைகள்’, ‘கருணைக்கொடை’, ‘புனிதமான வெறுமை’, ‘தானியங்கிச் சாலைகள்’ முதலிய நுட்பமான சொற்தேர்வு தேவதேவன் கவிதைகளில் இருப்பதைக் காண முடிகிறது.

பொதுஜனம் காணும் சாதாரணக் காட்சிகள் ஒரு கவிஞருக்குச் சாதாரணமாகப்படுவதில்லை. காட்சிகளை அசாத்தியக் கற்பனையில், அலாதியான முறையில் வர்ணிப்பது, அவ்வாறே சில சிறப்புச் சொற்களின் கூட்டுத் தன்மையால் வர்ணிப்பது என்று பலவாறான முறைகளில் ஒவ்வொரு கவிஞரும் வருணிக்கும் திறத்தை அவர்களது கவிதைகளில் காணலாம். தேவதேவன் கவிதைகளில்,

‘பாம்பு போல் மலைகளில் ஏறும் சாலைகள்’,

‘கரடு முரடான கவசத்தால் தன் உயிர்க் குருத்தை காத்துக் கொண்டிருக்கும் மரம்’,

‘அனைத்து உயிர்களும் விண்ணோக்கிய தவத்தில் இருப்பது’,

‘காற்றைக் கொண்டு இத்துணை மகிழ்ச்சியடைபவர்கள் இந்த மரஞ்செடி கொடிகள்தாம்’,

‘கொளுத்தும் வெயிலில் குளித்துக் கொண்டிருந்த நீச்சல் குளம்’,

‘காலடி ஓசை பூமியுடன் பூமியின் மைந்தன் ஆடும் உரையாடல்’,

‘நடை நிறுத்தி ஒற்றைக் கால்களால் ஆன்றமைந்துவிட்ட மரங்கள்’,

என்றவாறு எளியக் காட்சிகளையும் எளிய ஒன்றையும் அரியக் கற்பனையில் அலாதியான வர்ணனையில் தனித்துவச் சொற்களை வளமேற்றி உருகவிட்டிருப்பார்.

கவிஞர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றென, கவிதைகளில் அறக் கருத்துகளைப் போதிப்பதைச் சொல்லலாம். இது ஒருபட்சக் கருத்தாக இருந்தாலும், ஒருவிதத்தில் உண்மை. ஒருகாலத்தில் தமிழ்ச் சூழலில் அறக்கருத்துக்களைப் போதிக்கும் கவிதைகள் மலிந்து கிடந்தன. இத்தகைய அறத்தைப் போதிக்கும் கவிதைகள் சலிப்பு தட்டியது என்றே சொல்லலாம். இத்தகைய கவிதைகள் நவீனமாகி தங்களது வடிவத்தை மாற்றிக் கொண்டுள்ளன. அதன் சாத்தியத்தை தேவதேவன் கவிதைகளிலும் காணலாம். பல வருடங்களாகக் கவிதைகள் இயற்றிவரும் ஒரு முதிர்ச்சிக் கவிஞரிடமிருந்து இதை எதிர்பார்ப்பது நியாயமே. இவர் கவிதைகள் போதிக்கும் அறத்தைப் பார்க்கப்போனால்,

சில கவிதைகளை வாசிக்கையில், திருக்குறள் வரிகளும் நினைவுக்கு வருகிறது. அதற்கு உதாரணமாக, ‘அத்துணை பிரமாண்டமான’… என்ற கவிதையைச் சொல்லலாம். இதனை வாசிக்கையில், “கனியருப்பக் காய்க் கவர்ந்தற்று” என்ற அடியே நினைவை அடைந்தது.

‘எடைகள் வைக்கப்படுவதற்கு முன்’ கவிதையில், மூளையும் மனமும், அன்பும் அழகும் அறமும் பூக்கும் பொன் வெறுமையில் இருப்பதைத் தராசில் எடை வைப்பதற்கு முன்னுள்ள நிலையோடு ஒப்பிடுகிறார்.

தராசு எடைக்கணக்கில் பொருளேற்ற வடிவமைக்கப்பட்டிருப்பதுபோல் மனமும் மூளையும், அன்பும் அழகும் அறமும் பூக்க ஏதுவாய் இருப்பதாக உருவகித்து ஒப்புமைப்படுத்துகிறார்.

சமூக அநீதிகளைச் சுட்டிக்காட்டும் போக்கு கவிஞர்களிடம் உண்டு. தம் கவிதையின் பங்களிப்பாக அதனைக் கருதுவர். அதன் மூலம் ஒரு சிறிதளவு மாற்றத்தையாவது செய்திட மாட்டோமா என்ற ஏக்கம் கவிஞர்களிடம் ஒட்டிக்கொண்டே இருக்கும். இதே அநீதிகளைக் காணும்போது பீரிட்டு கவிதைகளாக வெளியேறும். உணர்ச்சிகளின் வடிகாலாக இருக்கும் கவிதைகள் அறிவுக்கும் கொஞ்சம் வேளை வைக்கிறது. அறிவுக்கண் கொண்டு காண வேண்டியிருப்பதையே தேவதேவன் ‘உள்ளதை அறிபவர்கள்தாமே நாம்?’ என்றவாறு வினா எழுப்பி அது தவறென உணர்த்துகிறார்.

‘நடைபாதையிலும் திருமண மேடையிலும்…’ எனும் கவிதையில்.

நடைபாதையில் பிச்சைக்காரியாய் அமர்ந்திருக்கும் பெண்ணுக்கும் திருமண வளாகத்தில் அலங்காரத்தோடு வலம்வரும் பெண்களுக்கும் உள்ள ஒப்புமையைக் காண்கிறோம். முதல் பகுதியில் பிச்சைக்காரியைப் பார்த்து எழுப்பும் சில கேள்விகளும் அடையும் அனுதாபமும் இரண்டாவது பகுதியில் விவரிப்பின் விரிவில் பல அர்த்தப் புரிதல்களை அடைகின்றன. மேலும் இக்கவிதையில்,

‘ஒரு செயல்முறைப் பாடமாயும் சுட்டும்
ஓர் அழகினைத்தானே
அலங்காரம் என்கிறோம்
மஹாலட்சுமி என்கிறோம்
இன்று மானுட லட்சியம் என்கிறோம்.’

என்று நம் அழகின் வரையறையை நோக்கி கேள்வி எழுப்பி அதனைக் குலைத்துப் போடுகிறார்; உண்மைக் கண் வேண்டுகிறார்.

கவிஞர் சமூகத்தின் உடல்-மையப் பார்வையை பரிகாசத் தொனியில் விமர்சிக்கிறார். நீச்சல் உடையில் இருக்கும் பெண்கள் கரையேர மறுத்து வெகுநேரம் குழித்துக் களிப்பதை,

‘குளத்துக் கரையேறாத கோபியர்கள்’ என்பதன் மூலம் அதை பரிகாசத்திற்கு உள்ளாக்குகிறார்.

இவ்வரிகள் நமக்குக் கண்ணன் ஆடைகளை எடுத்துக்கொண்டதால், குளத்துக் கரையேராத பிருந்தாவனக் கோபியர்களை நினைவூட்டுகிறது.

இதுபோன்றதொரு தன்மையையே ‘அன்னையாய்…’ எனும் கவிதையிலும்,

‘நாம் ஏன் பிச்சைக்காரர்களாய்
பைத்தியக்காரர்களாய்
மூடர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?’

என்று வெளிப்படுத்தி கடுமையாகச் சாடுகிறார்.

இவ்வளவு கடுமையாகச் சாடும் அவர் அதற்கான தீர்வாக மஹாராஜாவைப் போல் வாழும் வழி இருப்பதைக் காட்டுகிறார்.

இக்கருத்திலேயே ‘ஏதோ ஒரு…’ எனும் கவிதையில் மிக வெளிப்படையாகவே சாடுகிறார்.

பெண்கள் இந்த ஆடைக் குறைவான உடல் அழகாலேயே கலாச்சாரம், பண்பாடு, மதம், தத்துவம் செய்யத் தவறிய இவ்வுலகைக் காப்பாற்றும் செயலில் இறங்கியவர்கள் போல் நினைப்பவர்கள் போல் என்று பரிகாசிக்கின்றார். .

‘புதிதாக போதகர்கள்’ என்ற கவிதையில் தென்னைமரங்களை போதகராகப் போற்றுவதைக் காணலாம். போதனையாளர்களாக தென்னைமரம், குரங்குகளின் நான்கு நான்கு கால்களின் தாள லய நடையைக் கூறுகிறார். இயற்கையில், வாழ்விற்கான போதனைகள் நிறைந்திருப்பதை இவரது கவிதைகளில் காண்கிறோம்.

இசை எங்கும் நிறைந்திருக்கும் ஒன்றாகக் கவிதைகளிலும் தன் இருப்பைக் கொண்டிருக்கிறது. கவிதைகளில் இசைத்தன்மை நிறைந்திருப்பது கவிதையின் பலம் கூட்டும் செயலாகும். இதில் வாசிப்பின் எளிமையை உணர முடியும். ஒருவித இலகுத் தன்மையை ஏற்றி மனதில் கவிதையை நிலைநிறுத்தும்.

‘அவன் நன்றாய் அறிந்தது போலவே தோன்றுகின்றன’ என்ற கவிதையில் இடம்பெறும்

‘அவன் நன்றாய் அறிந்தது போலவே தோன்றுகின்றன’ என்ற வரி கீர்த்தனை இசைப்பாடலில் ஒவ்வொரு சரணத்திற்குப் பின்பும் இடம்பெறும் பல்லவி போன்று ஒவ்வொரு வரிக்குப் பின்பும் வாசித்து அர்த்தப் புரிதலை உருவாக்கும் வண்ணம் செயல்படுவதைக் காண முடிகிறது.

‘கட்டான உடலுடைய பெண்களைக் காணும்போதெல்லாம்
தேவதைகளும்
குண்டுப் பெண்களைக் காணும்போதெல்லாம்
குழந்தைகளும்
நினைவுக்கு வருகிறார்களே ஏன்?’

என்ற கவிதையில் சமூகத்தின் பார்வையிலான தேவதைகள் எப்படிப்பட்டவர்கள் என்றால் அவர்கள் கட்டுக்கோப்பானவர்கள். குண்டானவர்கள், தேவதைகள் ஆவதில்லை என்ற சமுதாயத்தின் வழக்கமான பூச்சைக் காண முடிகிறது. அடுத்து குண்டானப் பெண்களைக் காண்கையில் தேவதைகளுக்கும் மேலான குழந்தைகள் நினைவுக்கு வருகிறார்கள் என்று சமுதாயத்திடமிருந்து முரண்பட்டு அமைகின்றார். இத்தகைய முரண்பாடே பொதுவாகக் கவிஞர்களின் தனித்தக் குரலாகக் கவிதைகளில் வெளிப்படும். ஆண்கள் அழக்கூடாது, ஆண்கள் பலசாலிகள் என்றவாறெல்லாம் சமுதாயம் கட்டமைத்தச் சுதைகளை உடைத்தெரிந்து வெள்ளை அடிக்கும் செயலாக கவிஞர்கள் சமுதாயத்திடமும், அறிவற்ற சமுதாயச் செயல்களிடமும் முரண்பட்டு அமைவர். இதையே தங்களின் வாழ்நாள் சாதனையாக, கவிதைகளின் வெற்றிச் சிதறல்களாக எண்ணி அப்பாதையிலேயே பயணிப்பர்.

பேரழகைப் படிமங்களாகக் காட்சிபடுத்தும் செயலை பல கவிதைகளில் காண்கிறோம். தேவதேவன் கவிதைகளில் பேரழகின் படிமம் எவ்வகையில் விரிகிறது என்பது கவனிக்கத்தக்கது.

பெயர்கள் அதிலும் சாதிப் பெயர்கள் நீங்கிய நிலையில் மனிதர்கள், பெண்கள், மரங்கள், பறவைகள், வானம் என்று எல்லாமுமே பேரழகுடன் ஒளிர்கின்றன.இங்கு ஒளிர்பவற்றை அடுக்கல் முறையில் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. பெயரற்ற நிலையில் என்பதில் உள்ள அடைப்புக்குறிக்குள் இடம்பெறும் சாதி என்பது செயற்கையான உருவாக்கம் சாதி என்பதைக் காட்டுகிறது.

‘மானுடர் அனைவரும் கூடிவிட்டால்
நடக்கப்போகும் பேரழகு நாட்டியம்’,

‘ஒருமை கொண்ட
நான்கு நான்கு கால்களின்
தாள லயம்தான் எத்துணை அழகு!’,

என்று கவிதைகளில் பேரழகின் படிமங்கள் வடிவதைக் காணலாம்.

வாழ்வின் நித்தியச் சோகம் என்பதே வாழ்வைக் கடத்துவது. தேவதேவன் கவிதைகளில் வாழ்க்கைப் பற்றியும் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது. இப்படி பலவாறு வாழ்வின் தவிப்பை தன் வரிகளில் கொண்டு வந்திருப்பார்.

‘தன்னிலிருந்தும்
தன் எண்ணங்களில் இருந்தும்
விடுபடவே முடியாத வாழ்வைத் தானே
வாழ்ந்து கொண்டும்
எழுதிக்கொண்டுமிருக்கிறார்கள்
மனிதர்கள்?’

என்ற வரிகளில். மேலும் இந்த வாழ்வை வாழ்ந்துகொண்டும் புரிந்த வாழ்வை எழுதிகொண்டும் கடத்துகிறார்கள் மனிதர்கள் என்ற வினாவை எழுப்பி சிந்திக்க வைக்கிறார் வாசகரை. இவ்வாறு வினாக்கள் மூலம் வாசகரைச் சிந்திக்க வைக்கும் பகுதிகள் பலவற்றை நாம் தேவதேவன் கவிதைகளில் காணலாம். இதற்கு ஆதரவாக,

தேவதேவன் ‘இன்று காதலர் தினம்’ என்ற கவிதையில்,

‘மலராத மொட்டாகவும்
கனியாத காயாகவும்
காத்திருக்கிறதோ காதல் திருமணம்?’

என்று வினா எழுப்பி வாசகரின் பதிலை எதிர்பார்க்கும் இடமாக அமைந்திருப்பதைக் காணலாம். இதேபோன்று,

‘ஏந்துவோமா நம் கைகளிலே ஒரு கிண்ணத்தை?’ என்று தலைப்பை அமைப்பதன் மூலம், இதனைக் கவிஞர் தனிமனிதனுக்கான வினாவாக அல்லாமல் கூட்டுப் பொறுப்புணர்வை உருவாக்கும் சமுதாயத்தின் ஒவ்வொரு தனிமனிதனுக்குமான அழைப்பாக விடுக்கிறார். தனிமனித அக மனத்திலிருந்து உருவாகும் மாற்றத்தை விரும்பி இப்படி ஒரு உத்தியைக் கைக்கொள்கிறார். இதன் மூலம் வாசகர்கள் கிண்ணத்தைக் கையில் ஏந்தும் ஒரு கற்பனைச் செயல்பாட்டிற்குள் ஆழ்கின்றனர்.

காலம் - இடம் - அதைப் பற்றிய புரிதல் இதைச் சுற்றிய ஒரு தத்துவக் கவிதையாக, தன் மகனிடம் உரையாடும் அப்பாவின் உள்மனக் கேள்வியாக அமைகிறது; ‘இந்த வேளையா?’ கவிதை. இக்கவிதையில்,

‘உபவனத்து மாந்தோப்பு’ என்பதை உலகத்திற்கான குறியீடாக பயன்படுத்தியிருப்பது தெரிகிறது. இன்னோரிடத்திலும்,

‘யாருமற்ற தனிமையில்
மாந்தோப்பில்
தரையிறங்கி நடந்து கொண்டிருந்தன
சில குரங்குகள்…’

என்ற வரிகளில்,

இடம்பெறும் மாந்தோப்பு, உலகத்தின் குறியீடாக இடம்பெறுவதைக் கவனிக்கலாம்.

‘கொளுத்தும் வெயில்’ கவிதையில்,

‘பச்சைப் பசேலென
மலைகள் பள்ளத்தாக்குகள் அருவி
ஆறு ஏரி சோலைகள் என
அன்னை நீ’

என்று இவற்றை வாழ்வின் வசந்தத்தின் குறியீடாய் உருவகிக்கும் தேவதேவன் இவற்றை அன்னையின் மதிப்பீட்டிற்கு உயர்த்துகிறார். மேலும் கொளுத்தும் வெயிலை மானுடத் துயரின் குறியீடாய் உருவகித்திருப்பதையும் காண முடிகிறது.

இதேபோல் ‘கொளுத்தும் வெயிலில்’ எனும் கவிதைத் தலைப்பு மானுடத் துயரில் என்பதன் குறியீட்டைத் தாங்கி நிற்கிறது.

‘கொளுத்தும் வெயிலில்
ஒரு குளிர்சாதனக் கார்’

என்ற வரிகளில் கொளுத்தும் வெயில் என மானுடத் துயர்ச் குழலைக் குறியீடாக உருவகித்த தேவதேவன் குளிர்சாதனக்காரின் பயணத்தை மனித வாழ்வின் பயணமாக உருவகிக்கிறார். இங்கு குளிர்சாதனக்கார் வாழ்வின் குறியீடாக வருகிறது.

இந்த இரண்டு கவிதைகளையும் அடுத்தடுத்து வைத்து கவிதைகளில் ஒரு தொடர்ச்சியைப் பேணுகிறார். இதுபோலவே, ‘அழகல்லாதவர்களாய்’, ‘ஒரு கோணமாய்’ என்ற இரு கவிதைகளை அடுத்தடுத்து வைத்து ஆண்களை அழகல்லாதவர்களாக முதல் கவிதையில் விவரித்து இரண்டாவது கவிதையில்,

‘ஓர் இணைக் கைகளும்
ஓர் இணைக் கால்களும்
கூடிக் கிடந்த
அன்பின் ஆழமோ
சொல்லில் அடங்காது!’

என்று பெண்களின் துயில் உடலை அன்பின் ஆழமாக, சொல்லில் அடங்காததாக விவரித்திருப்பதைக் காணலாம். இதுபோல் பல கவிதைகளில் அராத ஒரு தொடர்ச்சியைக் காணலாம்.

‘நாம் செய்ய வேண்டியதென்ன?’ என்ற கவிதையில், தேவதேவன் இந்த உலகைக் கோயிலாகவும் ஒவ்வொரு உயிர்களையும் தாவரங்களையும் விக்கிரங்களாகவும் தானாக நிகழும் ஒவ்வொரு செயலையும் கடவுளாக உருவகித்து இவ்வுண்மைய உணர்வதற்கு நாம் செய்ய வேண்டியதென்ன என்று வினா எழுப்பி, செயல் தானாக நிகழ்வதல்லவா என்று வினாவாக முடிக்கிறார். அதாவது கவிதையின் கூற்றுப்படி தன்னிச்சையாக நிகழுவது செயல். தன்னிச்சையாக நிகழும் அந்தச் செயல் கடவுள் என்கிறார். இதனால் கவிதை ஒரு சுழற்சி முறையில் புரிதலுக்குள்ளாகிறது. இவரது கவிதைகளில் உயிர்களோடு சேர்த்து தாவரங்களும் தனிக் கவனிப்பு பெருகிறது.

‘அங்கே’ என்ற கவிதையில், ஏறி இறங்கும் வாழ்வின் சுழற்சிக்கான பயணவெளியாகப் படிக்கட்டுகள் உருவகிக்கப்படுகின்றன.
இலக்கில்லாத பயணம் ஒன்றுதான் என்றபடி வாழ்க்கை சோரமாக இருப்பதை உணர்த்துகிறது. ஒளியின் பிரதிநிதியாக நிலாவும்
இருளின் பிரதிநிதியாக அம்ருத பேரிருளும் வருகின்றன. இங்கே, பாதை, பயணவெளியின் பிரதிநிதியாகவும் நடை, பயணத்தின் பிரதிநிதியாகவும் வருகின்றன.

வாழ்க்கை ஏறி இறங்கும் சுழற்சியைக் கொண்டதென்ற தத்துவம் பெறப்படுகிறது. வாழ்க்கை ஒரு இலக்கில்லாத பயணம் என்பது பெறப்படுகிறது.

‘இருட் சூழலுக்குள் ஒளிரும் நிலா’ என்பது, ஒளியானது அம்ருத பேரிருளின் நடுவில் உள்ளது. ஒளியானது அந்த இருளைத் தாண்டி வீசக்கூடியது, இருளுக்குள் ஆழ்ந்து கிடக்கிறது ஒளி என்ற பலவாறான வாசிப்பு அர்த்தங்களைத் திறந்து வைத்திருக்கிறது.

"அங்கே" என்ற கவிதை படிக்கட்டு, பாதை, நடை, நிலா, அம்ருதப் பேரிருள் ஆகிய குறியீடுகளின் வழி படிமக் காட்சிகளைக் கட்டமைத்து, தத்துவங்களை வெளிப்படுத்துவதோடு, பல அடுக்குகளைக் கொண்ட வாசிப்பிற்கானச் சாத்தியங்களையும் திறந்து வைக்கிறது.

‘நான்’ என்ற கவிதையில், ‘செயலும் செயலற்ற அடையாளமும் நானே’ என்கிறார். நான் என்ற தேடலுக்கான ஆன்மீக விளக்கம் உரைப்பவர்களின் பிரிதிநிதியாக இக்கவிதை வலம் வருகிறது.

வாசிப்பில் பலவித அர்த்தங்களை நாம் கோருகிறோம் என்பது கவிதையைப் பொறுத்த வரையில் பேருண்மை. அப்பொருண்மையை கவிதையாக்கியுள்ளார் ‘எல்லாக் கவிதைகளுமே’ எனும் தலைப்பில்.

‘எல்லாக் கவிதைகளுமே
மொழிபெயர்ப்புக் கவிதைகள் தாம்’ என்கிறார்.

மெழிபெயர்ப்பு என்றதுமே இயல்பாய் நாம் மூலத்தைத் தேடுவோம். அந்த இயல்பிலேயே கவிதையும் பயணிக்கிறது. பின்னர் கவிதையைப் பற்றி பேசுவதெல்லாம் நாம் அந்தக் கவிதையைச் சிந்திக்கும் முறையைதான் என்று பிறகுதான் கவிதை வந்து நிற்கிறது! என்கையில் கவிதையின் நீடித்த உயிர்ப்புணர்வை உணர்கிறோம். இவ்வாறு ஒரு இயல்பான நகர்வாக அமைகிறது தேவதேவன் கவிதை. இக்கவிதையில் வாசிப்பின் இயங்கியலை ஆராய்ந்து வெளிப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம்.

பொதுவாக கவிதைகள் கொள்ளும் வடிவமுறை சற்று புதிர்த்தன்மையோடே ஆரம்பிக்கும். அவ்வாறே, ‘ஏந்துவோமா நம் கைகளிலே ஒரு கிண்ணத்தை?’ என்ற கவிதையில்,

ஆரம்பமே, ‘உள்ளது அது’ என்ற புதிரோடு ஆரம்பிக்கிறது. இவ்வாறு அந்தப் புதிர்த்தன்மை கிட்டத்தட்ட கவிதை முழுவதும் நீடிக்கிறது. 'அது' எதுதான் என்ற அர்த்தம் பல கோணங்களில் விரிவடைவதன் மூலம் புதிர் மெல்ல மெல்ல அவிழ்வதைக் காண முடிகிறது. மேலும் ‘எங்கும் உள்ளது’ என்பது ஒரு தேடலையும் துவக்கி விடுகிறது.

இக்கவிதையில் குவளை, கிண்ணம் ஆகியவை எதன் குறியீடாக இங்கு ஆளப்படுகின்றன என்பது முக்கியமானது. குவளையின் வெறுமை காலியாக இல்லை என்று ஆழமான தத்துவக் குறியீடாகக் குவளை வருகிறது. அது ஏற்கும் பொருளாக மாறும் தன்மை பேசப்படுகிறது. மேலும் குவளை ஒருவகை வாசிப்பில் வெள்ளந்தி மனதாக உருவகிக்கப்படுகிறது. இவ்வாறு குவளையும் கிண்ணமும் வெறும் பாத்திரமாக அல்லாமல் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், கருணை, பரம்பொருள், மனிதநேயம், விழிப்புணர்வு முதலிய பலவற்றின் குறியீடாகத் திகழ்கிறது.

‘உள்ளது அதற்கும்
அதைக் காணுதற்கும்
மய்யமொன்று இல்லாததால்
எல்லைகளும் இல்லை’. என்ற வரிகளிலும்

‘வெற்றுக் குவளை அதில்
இருக்கிறது உள்ளது’.

என்ற வரிகளிலும் முரணான சொற்கள் இடம்பெற்று அர்த்தப் பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது. இவை கவிதை வாசிப்பை சுவாரசியமாக்கும்.

இக்கவிதையில் ‘உள்ளது’ என்ற சொல் சில அடைகளோடு ‘உள்ளது அது’ ‘எங்கும் உள்ளது’ என்றவாறு மீண்டும் மீண்டும் பயின்று வருவதைக் காணலாம். கவிஞர் இதை அமைத்ததன் நோக்கமாக எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளாக, மிகு புனிதத்தன்மை கொண்டதாக அதை மேலும் விரிக்க எனலாம்.

‘வறுமையாகவோ
கடுந்துயராகவோ
துயர்மலி உலகின் பெருவலியாகவோ
அது உள்ளது'.

இங்கு தனிமனிதத் துயரத்திலிருந்து மெல்ல மெல்ல உலகப் பொதுமைக்கு உரியதாகச் சோகத்தை உயர்த்துகிறார் கவிஞர். அதன் இருப்பு இவ்வாறு ஏதோ ஒன்றாக ஒரு நிலைப்புத் தன்மை இல்லாத உலகச் சோகங்களின் வடிவாக வாசக மனத்திற்குள் படிகிறது.

‘மய்யமொன்று இல்லாததால்
எல்லைகளும் இல்லை.’

என்ற வரிகளில், எல்லை கடந்த, எல்லையில்லா ஒன்றாக 'அது' விளக்கமடைகிறது. வரைபடம் வகுத்து எல்லைக்குட்பட்டிருந்த மனிதச் செயல்பாடுகள் எல்லையில்லாததால் போர்களும் சச்சரவுகளும் இல்லாததாகிறது. எல்லையற்ற ஒன்று என்ற பிரம்மாண்டத்தை வாசகர் மனதில் படியச் செய்யும் உத்தியாக மீயுரைத்தல் செயல்படுகிறது.

அது மையமின்றி எல்லையின்றி இருப்பதோடு அதைக் காண்பதற்கும் மையமின்றி எல்லையின்றி ஆகிறது. மேலும் வெற்றுக் குவளையாய் அதிலும் இருப்பைக் கொண்டுள்ளது என எங்கும் உள்ளது என்பதன் மூலம் எங்கும் வியாபித்திருக்கும் ஒன்றாக விளக்கமடைகிறது 'அது'. இவ்வாறு வியப்பூட்டுதல் வாசகரை ஆர்வமூட்டுகிறது.

‘எல்லைகளில்லாதலால்
போர்களும் சச்சரவுகளுமில்லை’

என்ற வரிகள், போர்களை ஆதரிக்கும், அதன்மூலம் ஆதாயமடையும் ஆதிக்கச் சக்திகளுக்கு எதிரான குரலாக ஒலிக்கிறது. உலகப் பேரமைதி எல்லையில்லாத உலகத்திலேயே சாத்தியம் என்பதை வாசக மனதில் பதிக்கிறார். இப்படி போர்களும் சச்சரவுகளுமில்லாத உலகை கவிதைகளின் வழி ஏங்குகிறார்.

அறிவியல் தொழில்நுட்பம் நம் வாழ்வில் ஒன்றெனக் கலந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். நவீன உலகில் அறிவியல், தொழில்நுட்பப் பயன்பாடு நம் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுவிட்டது. ஒரு நவீனக் கவிஞராய் இதைப் பற்றி பேசாதவர்களே இருக்க முடியாது. தேவதேவனின் ‘காலமும் இடமும்’ என்ற கவிதை, தொழில்நுட்ப வளர்ச்சியை வெறும் இயந்திர முன்னேற்றமாகப் பார்க்கவில்லை. அது மனித உள்ளங்களை இணைக்கும் கருணையின் செயல்முறையாக, வியப்பூட்டும் சிந்தனையாகப் பார்க்கிறது. காலத் தொலைவுகளையும் இடைவெளிகளையும் சுருக்கி, உலகெங்கும் "தானியங்கிச் சாலைகள்" மலர்ந்துள்ள இக்காலத்தின் மாற்றத்தைக் காட்டுகிறது.

‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணையின்
செயல்முறைப் பாடமாய்’

இதனை உருவகிக்கிறார். இவ்வாறு வள்ளலாரின் புகழ்பெற்ற வாசகம் கவிதையில் பயனுறுவதைக் காண முடிகிறது.

உலகம் என்னதான் நவீனமாகிவிட்டாலும் தொழிலாளி வர்க்கம் தன் சக்தியை விரயமாக்கி உழைக்கும் நிலையை நம் சமுகத்தில் கண்டுதான் வருகிறோம். உழைக்கும் வர்க்கத்தின் பாடு தீராத பொருளாதார நெருக்கடியிலும் நோயின் பிடியிலும் வறுமையிலும் பீடி, சிகரெட் போன்ற தீயப் பழக்கங்களிலும் கட்டுண்டிருப்பதைக் காண்கிறோம். இவர்களைத் தன் கவிதையில் பேசாமல் இல்லை தேவதேவன். துணி துவைப்பவரை, சாலை போடுபவர்களை, இஸ்திரி போடுபவரைத் தன் கவிதைகளில் கொண்டு வந்துள்ளார். ‘ஒற்றைக் கை’ கவிதையில்,

‘இவன் ஆற்றல்களையெல்லாம் உறிஞ்சிவிட்டது
இந்த உழைப்பு மட்டும் தானா?’

என்று எழுப்பும் கேள்வி, ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தினருக்குமான குரலாக ஒலிக்கிறது அல்லவா?

இவர் இதை கூற்றாக வைக்காமல் வினாவாக எழுப்பி வாசகர்களை கவிதையில் ஈடுபடுத்தி விடுகிறார். இவ்வாறு குற்றவாளி மனதைக் குடைகிறார்.

‘பொட்டுத் தீ கனலும் பீடி கொண்டே
தன் உடலைப் பேணிக் கொள்கிறான் அவன்'.

என்று ஒரு இஸ்திரி தொழிலாளியின் புகைப் பழக்கத்தை விமர்சிக்கிறார். இப்படி நாம் காணும் கட்டிடத் தொழிலாளர்கள் முதற்கொண்டு தொழிலாளிகள் பெரும்பாலோர் எதோ அவர்களுக்கே உரிய உடல் மொழியோடு ஒரு போதைப் பழக்கத்தைக் கைக்கொண்டிருப்பதைக் கண்டிருப்போம்.

அவர்கள் தங்களது உடல்நிலையைக் கவனிக்கும் விழிப்புணர்வின்றி இருப்பதைக் காணலாம். காரணம் வறுமை, விழிப்புணர்வின்மை என்று பலவாறு கூறலாம். இத்தகைய அவலத்தை,

‘பயில்வானுடையது போலிருக்கும்
ஒரு புஜம் தவிர்த்து அத்தனை உறுப்புகளும்
ஒரு குச்சிப் பூச்சியினுடையது போலிருக்கின்றன’.

என்ற வரிகளில் கடத்தியிருப்பார்.

இவ்வரிகளில், உழைத்து உரமேறியிருக்கும் இஸ்திரி தொழிலாளியின் புஜத்தைக் காண்கிறோம். அதே சமயம் வறுமையால், நோயால் ஒடுங்கியிருக்கும் அவர் உடலைக் காண்கிறோம். இந்நிலையே தொழிலாள வர்க்கத்தினர் அனைவருக்கும். இங்கு, பயில்வானுடையது * குச்சிப் பூச்சியினுடையது என்று முரண் அர்த்தச் சொற்களை ஒரே பத்தியில் கொண்டுவந்து அர்த்தத்தைக் கவித்துவமாகக் கடத்தியிருப்பார்.

வாழ்வின் மீதான விரக்தியையும் மனிதர்களின் செயலில் கண்ட அதிருப்தியையும் வெளிப்படுத்தும் சிந்தனைகளாக, மனித சமுதாயம் கற்று தெளியவேண்டிய சிந்தைகளைத் தொகுத்து வழங்குவதோடு தான் கண்டு இரசித்த இயற்கை கவிதைப்பொருள் ஆகியிருப்பதோடு, கருணைக் கொடையான அறிவியல் தொழில்நுட்பமும் கவிதைக்குரியதாயிருப்பதைக் காண முடிகிறது. வாழ்வின் மூடிய பகுதிகளை வெளிச்சத்திற்குள்ளாக்கும் செயல்முறையில் தேவதேவன் கவிதைகளில் தத்துவப் பார்வை தனியிடம் பெறுகிறது. இவரது கவிதைகள் அழுது வடியவில்லை. ஆனால் மென்மையான சோகம் இளையோடுகிறது. வாழ்வின் மீதான புரிதலாக அவை ஒரு இருண்மைக்குள் ஆழ்த்துகின்றன. மனிதன் கற்றுத் தேற வேண்டிய அன்பினைக் கைக்கொண்டே உலகம் உய்ய முடியும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றன. போர்களும் துயர்களும் நம் பைத்தியக்காரத்தனத்தால்தான் என்கிறார். இவரது கவிதைகளில் தொழிலாளிகள் மீதான கருசனையைக் காண முடிகிறது. இவர் புதியதோர் உலகு செய்யும் விருப்பில் இருப்பது தெரிகிறது. இவர் தம்மை ஆன்மீகத் தேடலுடைய ஒருவராக இக்கவிதைகளின் வழி அறிமுகப்படுத்திக் கொள்கிறார். முதிர்ச்சியடைந்த ஒரு கவிஞரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் அனுபவச் செறிவும் வாழ்வியல் தெளிவும் இத்தொகுப்பில் வெளிப்படுகின்றன. இவர் தம் கவிதைகளின் வழியே, அன்பும் அழகும் அறனுமுடைய போரும் சச்சரவுமில்லா ஒரு எல்லையில்லாப் பேருலகும் ஊற்றெடுக்கத் தொடங்க வேண்டுமென்று கனவு காண்கிறார்.

தேவதேவன் கவிதைகளில் குறியீடு, படிமம், உவமை, உருவகம், முரண், பரிகாசம், கற்பனை, சொற்தேர்வு, அடுக்கல் உத்தி, மீயுரைத்தல், மீளுரைத்தல், தொன்மம் முதலிய இலக்கிய உத்திகள் பயின்று வருவதை அடையாளம் காண்கிறோம். அதோடு, விவரித்தல், வியந்துரைத்தல், வருணித்தல், ஒப்பிடுதல், வினா எழுப்புதல், பதிலுரைத்தல், அறிவுறுத்தல், அழைப்பு விடுத்தல், விமர்சித்தல், உரையாடுதல் முதலான மொழிச் செயல்பாடுகளோடு எளிய சொற்களின் இயல்பான நடை, கவிதைகளின் தொடர்ச்சி, காலத்திற்கேற்ற நவீன நடை முதலிய நடைப் பண்புகளைப் பெற்றதாய் நுண்ணிய பார்வை வெளிப்படுவதைக் காண முடிகிறது.

இவை வாசகரின் உணர்வு, சிந்தனை, மதிப்பீடு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்போது அவை சொல்லாளுகைச் செயல்பாட்டைப் பெறுகின்றன. தேவதேவன் கவிதைகளில் சொல்லாளுகை என்பது வெறும் அலங்கார உத்தியாக இல்லாமல், வாசகரின் உணர்வு, சிந்தனை, மதிப்பீடு மற்றும் அறவுணர்வை இயக்கும் தகவல்-அழகியல் செயல்முறையாக இயங்குகிறது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சொல்லாளுகைக் கருவிகளை இயல்பான நடையுடனும் கவிதை மொழியின் செறிவுடனும் கையாள்வதன் மூலம், தேவதேவன் வாசகரை வெறும் பெறுநராக மட்டுமல்லாமல் பிரதியோடு இணைந்து அர்த்தப் புரிதல்களை உருவாக்கும் பங்கேற்பாளராக நிலைப்படுத்துகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

துணைநின்ற நூல்கள்:

தேவதேவன். நல்லதோர் வீணை. வேரல் புக்ஸ். சென்னை. முதல் பதிப்பு - செப்டம்பர் 2025.
Timothy Borchers Heather Hundley. RHETORICAL THEORY - AN INTRODUCTION. Second edition - 2018.
Foss. K. Sonja. RHETORICAL CRITICISM EXPLORATION AND PRACTICE. Second edition - 1996.
HERRICK. JAMES A. THE HISTORY AND THEORY OF RHETORIC AN INTRODUCTION. Sixth edition - 2018
1 the ability, in each particular case, to see the available means of persuasion.
Timothy Borchers Heather Hundley. RHETORICAL THEORY - AN INTRODUCTION. Second edition - 2018. P.5

7397453450, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்