
கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061
முன்னுரை
மனிதர்கள் செய்யும் வேலைகளை எந்திரங்களைக் கொண்டு செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. மனிதர்கள் பல நாட்கள் செய்யும் வேலையை, எந்திரங்கள் சில மணிநேரங்களிலேயே முடித்து விடுகின்றன. இதனால் நேரத்தைச் சேமிக்க முடிகிறது. எந்திரங்களுக்குச் சோர்வு இல்லை. தொடர்ந்து வேலை செய்வதால் உற்பத்தித் திறனை அதிகரிக்கமுடியும். எந்திரங்கள் ஒரே அளவிலும், துல்லியமாகவும் வேலைகளைச் செய்யும். உற்பத்தி செய்யும் அனைத்துப் பொருட்களும் ஒரே தரத்தில் இருப்பதை உறுதி செய்கின்றன.மனித உயிர்களைப் பாதுகாக்கிறது. செலவும் குறைகிறது. மனிதனால் செய்யமுடியாத மிகக் கடினமானப் பணிகளை (கடலுக்கு அடியில் ஆராய்வது, விண்வெளிப் பணிகள்) போன்றவற்றைச் செய்ய எந்திரங்கள் தேவைப்படுகின்றன.
சங்ககாலத்திலேயே எந்திரப் பொறியியல் குறித்து செய்திகள் காணப்படுகின்றன.
பொருள்வயிற் பிரிவதற்கு எண்ணிய தலைவன் தலைவியிடம் சொல்வதற்கு அவளுக்கு அருகில் செல்கிறான். அவனது பிரிவைக் குறிப்பால் உணர்ந்த தலைவி வருந்தி, அவன் மீது சாய்ந்து கலங்குகிறாள். நான் பிரிவதில் விருப்பம் இல்லாதவளாய் மெல்ல மெல்ல என் அருகில் வந்து நீ எங்கே போகிறாய் என்று கேட்க முடியாமலும், போக வேண்டாம் என்று தடுக்க முடியாமலும் இருப்பாள். அத்தகைய அவள் சித்திரத் தொழில் அமைந்த பாவையொன்று எந்திரமற்று விழுந்ததைப் போல கலங்கி என் மார்பின் மீது சாய்ந்து விழுவாள்.
“வெறி கமழ் துறு முடிதயங்க, நல்வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,
ஆகம் அடைதந்தோளே அது கண்டு”
(நற்றிணை 308:6-8)
தலைவனும், தலைவியும் உடன்போக்கு மேற்கொண்டனர். வழியில் அவன், அவளைப் பாராட்டும்போது கொல்லிமலைக்கண் சமைத்த இயந்திரப்பாவை போல அழகுடைய நீ என்று வர்ணிக்கின்றான். இயந்திரப்பாவையை இயக்குவான் இயக்க இயங்குதல்போல யானுரைத்த வண்ணம் நீ வந்தாய் என்கிறான்.
“வினை அமை பாவையின் இயலி நுந்தை
மனை வரை இறந்து வந்தனை ஆயின்”
(நற்றிணை 362:1-1)
சாவி கொடுத்தால் ஓடும் பொம்மை
சாவி கொடுத்தால் ஓடும் பொம்மை கலித்தொகை நெய்தல் கலியில் கூறப்பட்டுள்ளது.தலைவியோ தன்னை எந்திர பொம்மையாகக் கருதுகிறாள். பல உறுப்புகளையும் காட்டி இயங்குவதோர் பொறியாகச் செய்த பாவைப் போலத் துன்பத்திலே அழுத்தி மயங்கிச் செல்கின்றேன் என்று கூறுகிறாள்.
“பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கிச்
செல்வேன் விழுமம் உழந்து”
(கலித்தொகை நெய்தல்கலி 146)
சாவி கொடுத்தால் ஓடும் பொம்மை போல இயங்குவதாகக் கூறுகிறாள். இவ்வாறு பொம்மைகளை இயக்கும் தொழில்நுட்பம் எந்திரத் தொழில்நுட்பம் அன்றே புழக்கத்தில் இருந்தது என்பது அறிய வேண்டிய செய்தியாகும்.
கரும்பு பிழியும் எந்திரம்
சங்க காலத்திலேயே கரும்பிலிருந்து சாறு எடுக்க, வெல்லம் காய்ச்ச பெரிய எந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை,
“தீம்பிலிஎந்திரம் பந்தல் வருந்த” (பதிற்றுப்பத்து 19:21)
“கரும்பின் எந்திரம் களிற்றுஎதிர் பிளிற்றும்” (ஐங்குறுநூறு 55:1)
“கரும்பின் எந்திரம்சிலைப்பின்அயலது” (புறநானூறு 322)
“கரும்பின்எந்திரம் கட்பி னோதை” (மதுரைக் காஞ்சி 258)
கூறுகிறது.
கரும்பைப் பிழிந்து பாகை அடும் கொட்டிலில் காய்ச்சுவதை,
“கால்க்கரும்பின் கமழாலைத்
தீத்தெறுவிற்கவின்வாடி” (மலைபடுகடாம் 340-341)
கூறுகிறது.
கோட்டை மதில்களில் பாதுகாப்பு எந்திரம்
அரண்மனை அமைத்தலில் கோட்டைப் பாதுகாப்பாக மதிலை அமைத்தனர்.அம்மதில் ஏழு உறுப்புகளைக் கொண்டு விளங்கியதாக சேந்தன் திவாகரம் கூறுகிறது.
"பதப்பாடு, எந்திரம்,கோசம்,தோலை
விதப்பு,ஞாயில்,நாஞ்சில், மதில்உறுப்பே"
(சேந்தன் திவாகரம்)
தானே அம்பு எய்யும் எந்திரங்கள் அமைக்கப்பட்ட கோட்டை முகப்பு இருந்ததாகக் கூறுகிறது.
"எந்திரத் தகைப்பின் அம்புஉடை வாயில்" (பதிற்றுப்பத்து)
கோட்டை மதில்களில் அம்புகளையும், கற்களையும் பகைவர்கள் மீது ஏவுவதற்காகச் செய்யப்பட்ட எந்திரப் பொறிகள் அமைந்த துவாரங்கள் இருந்தன.
“அம்புதுஞ்சுஞ் கடியரண்” (புறநானூறு 20:16)
என்று கூறுகிறது.
பயிர்களைப் பாதுகாக்க விலங்குப் பொறிகள் பயன்படுத்தினர் முள்ளம்பன்றிகளைப் பிடிக்க பெரிய துவாரத்தினை உடைய எந்திரம்
“எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்யும் மேவல் சிறுகட் பன்றி
ஓங்குமலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நுழை நுழையும் பொழுதில், தாழாது”
(நற்றிணை 98 :1-4)
பன்றியைப் பிடிக்க வைத்திருந்த பெருங்கல் அடார் என்ற எந்திரத்தில் புலி அகப்பட்டதை,
“திணைஉண் கேழல் இரிய புனவன்
சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர்
ஒண்கேழ் வயப்புலி படூஉம்”
(நற்றிணை 119:1-3)
என்று கூறுகிறது.
கம்பராமாயணத்தில் எந்திரவியல்
உருக்காட்டு படலத்தில் சீதையிடம்,அனுமன் அன்னையே இராமன் பர்ணசாலையிலிருந்த பஞ்சவடியிலிருந்து புறப்பட்டு, நெருங்க முடியாத காடுகளிலும், மலைகளிலும், ஆறுகளிலும் போய் நின்னைத்தேடி, உயிர் இல்லாமல் பொறியால் இயங்கும் பாவையைப் போன்றவன் ஆனான்.அவன் தனது உயிர்க்கொடுத்துப் புகழ் கொண்ட சடாயுவைக் கண்டான்.
“அந்நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை நின்னை
துன் இருங்கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திரப்படிவம் ஒப்பான்”
(உருக்காட்டுபடலம் 565)
எந்திரம்
கரன் வதைப் படலத்தில் இராமனுடன் கரன் போரிட்டான். கரன் எந்திரம் போல விரைந்து செல்லும் தனது பெரிய தேரை இழந்தான். இழந்ததால் ஆரவாரம் செய்தபடி ஆகாயத்தின் எழுந்து, அழகிய ஒப்பற்ற வில்லை உடைய இராமனது தோள் என்னும் மந்தர மலையின்மீது மழை பொழிந்தது போல அம்புகள் அனைத்தையும் சொரிந்தான்.
"எந்திரத் தடந்தேர் இழந்தான் இழந்து
அந்தரத்திடை ஆர்த்து எழுந்து அம்பு எலாம்
சுந்தரத் தனி வில்லிதன் தோள் எனும்
மந்தரத்தில் மழையின் வழங்கினான்"
(கரன் வதைப்படலம் 540)
எந்திரப்பொறி
அக்ககுமரன் வதைப்படலத்தில் மந்திராலோசனைக் குழுவில் இருந்தவர்களுடைய புதல்வர்கள், அறிவு காட்டும் வழியிலே செயல்படும் அமைச்சருடைய புதல்வர்கள், படைத் தலைவர்களுடைய புதல்வர்கள், இராவணனுக்குத் தேவமகளிர் மூலம் பிறந்த புதல்வர்களாகிய நான்கு இலட்சம் வீரர்கள் எந்திரப்பொறி அமைந்த தேர்களில் ஏறி அக்ககுமாரனைச் சூழ்ந்து சென்றார்கள்.
"அந்தரத்து அரம்பைமாரில் தோன்றினார் ஆதிஆனோர்
எந்திரத் தேரர் சூழ்ந்தார் ஈர் இரண்டு இலக்கம் வீரர்"
(அக்ககுமரன் வதைப்படலம் 942)
எந்திரத்தால் இயங்கும் பொம்மை
கும்பகர்ணன் வதைப்படலத்தில் இராவணன் தூதரை அழைத்துவரக் கஞ்சுகியை ஏவுகிறான். மந்திராலோசனைக்குத் துணை செய்பவரும் ஒளிபொருந்திய நெற்றியை உடைய மனைவியரும் சேனைத்தலைவர்களும் தன்னுடைய உறவினர்களும் எந்திரத்தின் வலிமையால் இயங்கும் பொம்மைகளைப் போலத் திகைத்து நிற்க, எவரும் தன்னைப் பின்தொடர்ந்து வராமல், தான் மட்டும் சிந்தூரப்பொடி பூசப் பெற்ற ஒரு யானை, கொட்டாரத்தை அடைவதைப் போல, இராவணன் தனது அரண்மனையின் உள்ளிடத்தை அடைந்தான்.
“எந்திரப் பொறியின் நிற்ப யாவரும் இன்றித் தான்ஓர்
சிந்துரகளிறு கூடம் புக்கெனக் கோயில் சேர்ந்தான்”
(கும்பகர்ணன் வதைப் படலம் 1217)
எந்திரத்தேர்
கும்பகர்ணன் வதைப் படலத்தில் கும்பகர்ணன் இராவணனை வேண்டுகிறான். சிந்தூரப்பொடி போன்ற சிவந்த புதிய இரத்தம் திசைகள் தோறும் அலைகளுடன் கூடிய ஆறாகி எந்திரம் அமைக்கப்பட்ட தேர், யானை, குதிரை, காலாள் ஆகிய இவைகளை இழுத்துக் கொண்டு ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவனும், அழகான பொன்மயமான மேருமலையை ஒத்தவருமான கும்பகர்ணன் தன் கண்ணெதிரே நின்ற அழகிய பொன்னணிகளை அணிந்த தோள்களை உடைய இராமனை, நேராகப் பார்த்து பின்வரும் சொற்களைச் சொல்லலானான்.
“சிந்தூரச் செம் பசுங்குருதி திசைகள் தரும் திரை ஆறா
எந்திரத் தேர் கரி பரி ஆள் ஈர்த்து ஓடப் பார்த்திருந்த”
(கும்பகர்ணன் வதைப்படலம் 1565)
மகரக் கண்ணன் வதைப் படலத்தில் மகரக்கண்ணன் இராவணனை நோக்கி வஞ்சினம் பேசுகிறான். வந்துள்ளவன் இந்திரன் பகைவரான இந்திரஜித் தானோ என்று ஒருவகை அச்சமடைந்து வானர சேனை நிலைகுலைந்து சிதறவும், வானரப் படையின் பெருந்தலைவர்கள் எந்திரத்தால் தாக்கி எறியப்பட்டவர்கள் போல, அம்புகள் தாக்கப் புரண்டார்கள். மகரக் கண்ணனும் அழகிய தோளைப் பெற்ற இராமனை அடைந்து பின்வரும் சொற்களைச் சொல்லலானான்.
“எந்திரம் எறிந்தது என்ன ஏவுண்டு புரண்டார் எய்திச்
சுந்தரத் தோளினானே நோக்கி நின்று இனைய சொன்னான்”
(மகரக்கண்ணன் வதைப்படலம் 2359)
பிலம்புக்கு நீங்கு படலத்தில் சாம்பவன் அந்த வானரங்களை நோக்கி ஒன்று சொல்லத் தொடங்கினான். தன்னிடம் இயல்பாகத் தோன்றிய வஞ்சத்தாலே மூங்கில் போன்ற தோள்களையுடைய சீதையை எடுத்துச் சென்று மறைத்து வைத்த பெரும் கள்வனான இராவணன், சீதையைத் தேடி வரும் நாம் அனைவரும் தவிக்குமாறு செய்து வைத்த இந்த எந்திரம் நன்றாய் உள்ளது. இதற்கு ஒரு முடிவு இல்லை. இதுவரை நமக்கு உண்டாகிய ஊக்கம் முன்பிறப்பில் செய்த தீவினையால் நீங்கிவிடும் என்று மனம் நொந்து கூறினான்.
“நாம் புக அமைத்த பொறி நன்று முடிவு இன்றால்
ஏம்பல் இனி மேலை விதியால் முடியும் என்றான்”
(பிலம்புக்கு நீங்கு படலம் 854)
இலங்கை வேள்விப் படலத்தில் முதலில் அமைந்த வஞ்சக வேலைப்பாடும் நூற்றுவரை கொல்லி முதலிய எந்திரங்களின் மேம்பாடும் மிக்க காவலாக உள்ள அரண்களும் பிறவற்றையும் எண்ணத் தொடங்கினால் எண்ண (எண்ணிக்கை) முடியாதவாறு ஆயுள் சுருங்கிவிடும் பல கூறி என்ன? அந்த இலங்கை தன்னைச் சூழ்ந்த கடலையை அகழியாகக் கொண்டதாகும். இதை நீங்களும் நேரே காணலாம் என்று இலங்கை காவல் குறித்து வீடணன், இராமனிடம் கூறினான்.
“மருங்குடை வினையமும் பொறியின் மாட்சியும்
இருங் கடியரணமும் பிறவும் எண்ணினால்”
(இலங்கை வேள்விப்படலம் 475)
எந்திரம்
மகுடபங்கப் படலத்தில் இராவணனும், சுக்ரீவனும் சண்டையிட்டனர். வானத்தில் உலவுகின்ற கதிரவனின் மகனான சுக்ரீவன் அகழியே கடலாக, அழகையுடைய கையாலே இழுத்துக் கடையும்போது சுழி பொருந்தி அதன் நடுவே இயந்திரம் போல திரிகின்ற இரக்கம்அற்ற அரக்கனான இராவணன் மந்தரமலைபோல விளங்க, முன் காலத்தில் பாற்கடலைக் கடைந்த தன் தமையனான வாலியைப் போன்று விளங்கினான்.
“எந்திரம் எனத் திரி இரக்கம் இல் அரக்கன்
மந்தரம் எனக் கடையும் வாலியையும் ஒத்தான்”
(மகுடபங்கப்படலம் 852)
அதேப்படலத்தில் தன்னைத் தொடர்ந்து வந்தவனான இராவணனை, நின்றவனான சுக்ரீவன் வலிமை கொண்டு போரிட்டவனாய்க் காலனும் அஞ்சுமாறு நிலத்தில் இட்டுத் தேய்த்தான். அந்த இராவணன் இயந்திரம் போல விரைந்து சுக்ரீவனை எடுத்து அப்பால் எறிந்தான். அவனும் பந்தைப் போல எழுந்து போர் செய்ய எதிர்த்து வந்தான்.
“எந்திரமெனக் கடிது எடுத்து அவன் எறிந்தான்
கந்துகம் எனக்கடிது எழுந்து எதிர்கலந்தான்”
(மகுடபங்கப்படலம் 858)
இந்திரசித் வதைப்படலத்தில் வானவெளியில் நின்று வேடிக்கைப் பார்த்த தேவர்கள், சூரியனும், சந்திரனும், பெரிய மேருமலை ஆகியவை பொடித்து விழும்படியும், இந்திரசித்தன் அழகிய தோள் அறிந்த பிறகும் சில மக்கள் எந்திரப்பாவை போன்ற இந்த உயிர் வாழ்க்கையை விரும்புவதால் என்ன பயன் என்றனர்.
“இந்திரசித்தின் பொன் தோள் இற்று இடை விழுந்தது என்றால்
எந்திரம் அனைய வாழ்க்கை இனிச் சிலர் உகந்து என் என்றார்”
(இந்திரசித் வதைப்படலம் 3102)
செங்கோலினால் உலக மக்களை ஆளுதலாலும் பகைவரது மகுடம் அணிந்த தலைகளைப் போர்க்களத்தில் கைக் கொள்வதாலும் மனுதர்ம சாசனத்தின்படி நடக்கும் நேர்மையாலும், எவருக்கும் ஒப்பு பார்க்க முடியாத காவலினாலும் வலிமை பெற்றுள்ளவையாலும் வேல், வில்,வாள் முதலிய படைக்கருவிகள் பழகுவதாலும் கொடிய தந்திரங்களைப் பெற்றுள்ள மையாலும் பிறரால் வெல்ல முடியாத வெற்றியை பெற்றிருப்பதாலும் சிறப்புமிக்க முயற்சியினாலும் ஆனைச் சக்கரத்தைச் செலுத்தும் தன்மையாலும் அந்த மதிலானது சூரிய குலத்துத் தலைவரான அரசர்களை ஒத்துள்ளது. அளவுகோலால் அளக்கப்படுதல் பகைவர் தலைகளைத் தன் படைகள் மூலம் வாங்குதல், மனு என தெய்வச் சிற்பியின் நூலின் படி அமைத்தல் உள்ளே நுழைந்து பார்க்க முடியாத காவல் பெறுதல், வலிமை உறல், வேல் வாள், வில் முதலிய கருவிகளைப் பெற்றிருத்தல் சக்கரப் படையைப் பெற்றிருத்தல் ஆகிய மதிலின் குணங்கள் ஆகும்.
“வேலொடு வாள் வில் பயிற்றலின் வெய்ய
சூழ்ச்சியின் வெலற்கு அருவலத்தின்
சார்புடை உயர்வின் சக்கரம் நடாத்தும்
தன்மையின் தலைவர் ஒத்துள்ளதே”
(நகரப் படலம் 104)
நகரப் படலம் அயோத்தி நகரத்து மதிலின் ஆட்சி குறித்துக் கூறும்போது அந்த மதில் பொருந்திய அறிவினால் முடிவு காண முடியாத படி இருப்பதால் வேதத்தை ஒத்திருக்கும். விண்ணுலகத்தை அடைவதால் தேவர்களை ஒத்திருக்கும். போர்ப் பொறிகளைத் தன்னுள் வைத்திருப்பதால் ஐம்பொறிகளை அடக்கி வைத்துள்ள முனிவர்களை ஒத்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காவல் தொழிலில் கலைமானை வாகனமாகக் கொண்ட துர்க்கையை ஒத்திருக்கும். தன் சிகரத்தில் இடிதாங்கியாகிய சூலத்தைப் பற்றி இருப்பதால் காளியை ஒத்திருக்கும். யாரும் தன்னை அணுக முடியாத தன்மையில் ஈசனை ஒத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
“மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்
வேதமும் ஒக்கும் விண் புகலால்
தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும்
திண் பொறி அடக்கிய செயலால்
காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும்
சூலத்தால் காளியை ஒக்கும்
யாவரும் தன்னை எய்துதற்கு அரிய
தன்மையால் ஈசனை ஒக்கும்”
(நகரப் படலம் 102)
அம் மதிலில் கொசுக் கூட்டத்தையும், பறவைகளின் அரசனான கருடனையும், இயங்கும் காற்றையும், நன்மை அல்லாத தீயவற்றையும் சிந்திக்கும் மனத்தையும், துணிக்க வல்ல கோபத்தையும் உடையவேலும், கொலைத் தொழிலை உடைய வாளும், வில்லும், மழுவாயுதமும், தண்டாயுதமும், சக்கராயுதமும், கைவேலும், இருப்பு உலக்கையும், மேகத்தின் இடையே உண்டாகும் இடி போன்ற அச்சத்தைத் தரும் கவண் கல்லும், என்று சொல்லப்பட்ட இதைப் போன்ற அளவற்ற ஆயுதங்கள் உள்ளன என்றாலும் அதன் சிறப்பை தனித்தனியே விரித்துச் சொல்ல வேண்டும் என்ன உள்ளது.
“சினத்து அயில் கொலை வாள் சிலை மழு தண்டு
சக்கரம் தோமரம் உலக்கை
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல்
என்று இவை கணிப்பு இல உலங்கின்
இனத்தையும் உவணத்து இறையையும்
இயங்கும் காலையும் இதம் அல நினைவார்
மனத்தையும் எறியும் பொறி உள என்றால்
மற்று இனி உணர்த்துவது எவனோ”
(நகரப்படலம் 105)
முடிவுரை
எந்திரங்களுக்குச் சோர்வு இல்லை. தொடர்ந்து வேலை செய்யும். மனிதனால் வேகமாகச் செய்ய முடியாத வேலைகளையும் எந்திரங்கள் செய்யும். குறி தவறாமல் சரியான நேரத்தில், சரியான இலக்கை, வேகமாக சென்றடையும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. போர்க்களத்தில் ஒரே நேரத்தில் நூற்றுவரைக் கொல்ல நூற்றுவரைக்கொல்லி என்ற எந்திரம் கம்பராமாயண காலத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
துணைநூற்பட்டியல்
1. கருத்திருமன்.பி.சி. கம்பர் கவியும் கருத்தும் வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2018
2. காசி.ஆ, கம்பரும் திருத்தக்கதேரும், தமிழ்சோலை பத்ப்பகம், சென்னை, 2010.
3. சக்தி நடராசன்,க, கம்பரின் கை வண்ணம், சரசுவதி பதிப்பகம், ஆர்க்காடு, 2017.
4. சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம், சென்னை, 2019.
5. செல்வம்.கோ,கம்பன் புதையல், சாரு பதிப்பகம், சென்னை 2016.
6. பூவண்ணன் கம்பராமாயணம் மூலமும் உரையும், தொகுதி 1,2,3,4,5,6,7,8, வர்த்தமானன் பதிப்பகம் 2000.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.










