
[ எழுத்தாளர் வாசுகி நகுலராஜாவின் பேராசிரியர் கா.சிவத்தம்பி பற்றிய நூல் வெளியிட்டு நிகழ்வில் எழுத்தாளர் க.நவம் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்]
‘Friends, Romans, Countrymen! Lend me your years! I come to bury Caesar; not to praise him. The evil that men do lives after them. The good is often interred with their bones. So, let it be with Caesar!
உலகமகா கவிஞன் ஷேக்ஸ்பியரது ஜூலியஸ் சீசர் நாடகத்தில், ரோமாபுரிச் சக்கரவர்த்தி சீசர், அவரது நண்பன் ப்ரூட்டஸால் முதுகில் குத்திக் கொலை செய்யப்பட்ட தருணத்தில், சீசரின் இன்னொரு நண்பன் மார்க் அன்ரனி நிகழ்த்திய, சீசருக்கான இறுதிப் புகழாஞ்சலியின் முதல் வரிகளே, இவை!
சீசர் தனது கடைசிக் கணத்தில் திரும்பிப் பார்த்து, ”You too, Brutus! / நீயுமா Brutus!” எனக் கூறியவாறுதான் உயிர் துறந்தவர்.
அன்று முதல் இன்றுவரை, ”துரோகம்” எனும் உடனிருந்து கழுத்தறுக்கும் ஈனச் செயலை, அச்சொட்டாகச் சுட்டிநிற்கும் சொற்றொடராக, இந்த ’You too, Brutus!’ பயன்படுத்தப்பட்டு வருகின்றது!
அண்மையில் ஒருநாள், சகோதரி வாசுகி நகுலராஜா தொலைபேசியில் என்னை அழைத்து, ”பேராசிரியர் சிவத்தம்பி பற்றிய எனது ஆய்வு நூலொன்றினை வெளியிட இருக்கிறேன், அண்ணா. அதில் நீங்களும் உரையாற்ற வேண்டும்” என வேண்டி நின்றார்.
எனது சமகால உடலியல் சவால்கள் காரணமாக, நான் சற்றே தயக்கம் காட்டியதை உணர்ந்த அவர், “நீங்கள் பேராசிரியரைப்பற்றி மட்டும் உரையாற்றினால் போதும்….” என்று ஒரு சிறு சலுகை தந்தார். மனமுவந்து சம்மதித்த நான், இன்று உங்கள்முன் வந்து நிற்கின்றேன்! வாய்ப்புக்கு நன்றி, வாசுகி!
Bible of Public Speakingஇல் எத்தனை Commandments உண்டோ எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றுமட்டும் அதில் உண்டென்பதை அறிவேன். அதுதான் – Know your Audience!
அவையறிந்து எப்படிப் பேசுவது என்பது பக்குவம்; எதைப் பேசுவது என்பது அறிவு; எதைப் பேசக்கூடாது என்பது பேரறிவு எனச் சொல்லித் தந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்!
5 நிமிடம் பேசுவதாக இருந்தால்கூட, குறைந்தது அரை மணித்தியாலமாவது அதுபற்றிச் சிந்தித்து, குறிப்புகளை எழுதியெடுத்துக்கொண்டுதான் பேசவேண்டும் என்பதுவும் அவரது ஆலோசனைகளில் ஒன்று!
அத்தகைய பேராசிரியர் பற்றிச் சிந்தித்து, சேகரித்துக் குறிபெடுக்கக் குந்தியபோதுதான் - ’மாமேருமலையை அண்ணாந்து பார்த்த மலைப்பு’ எனது மனதை அச்சுறுத்தியது.
பன்முக ஆற்றல்களைக் கொண்ட, உலகப் பேரறிஞர் பற்றி, சொற்ப நிமிடங்களில் சொல்லி முடிப்பதென்பது - நரி வாலைக் கொண்டு கடலாழத்தை அளக்க முற்பட்ட கதையாகிவிடுமல்லவா?
எனவேதான், பேராசிரியர் பற்றி இற்றைவரை பொதுவெளியில் பெரிதும் பேசப்படாத – பார்க்கப்படாத - பக்கங்களில், ஒருசிலவற்றை மட்டும், தேர்ந்தெடுத்துப் பேசுவதற்கு முடிவெடுத்தேன்!
பேராசிரியரது தந்தையார் கார்த்திகேசு அவர்கள், எனது அயலூரான கரவெட்டியைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பண்டிதர், சைவப்புலவர். கொழும்புத்துறையில் குடிகொண்டிருந்த யோகர் சுவாமியின் பக்தர்!
பேராசிரியர் பிறந்த கையோடு, யோகர் சுவாமியின் ஆச்சிரமவாயிலை அவர் சென்றடைந்தபோது, ‘எடே, நில்லங்கே! உனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அவனுக்குச் சிவத்தம்பி என்ற பெயர் சூட்டு. அவன் சிவத்தம்பியாகவே இருப்பான்’ எனக் கூறித் திருப்பி அனுப்பினார், யோகர் சுவாமி!
நல்ல பெயருக்கும், நற்பெயருக்கும் வித்தியாசம் உண்டு. நல்ல பெயரைப் பெற்றோர்கள், பெரியோர்கள் வைப்பார்கள்; நற்பெயரைப் பிள்ளைகள்தான் சம்பாதிக்க வேண்டும். பேராசிரியரோ இவ்விரண்டையும் ஏககாலத்தில் தமதாக்கிக்கொண்ட, ஒரு பெருமகன்!
பேராசிரியர் ஒரு முற்போகுச் சிந்தனையாளர். ஆயினும், இடைவிடாத இறை நம்பிக்கையாளர். புதிதாகக் கார் வாங்கியபோது, தமது குடும்பத்தோடு செல்வச்சந்நிதிக்கு வெள்ளோட்டம் போய், வழிபட்டு, தமக்கு மட்டுமன்றி, புதிய காருக்கும் விபூதி, சந்தனம் பூசிக்கொண்டு வீடு திரும்பியவர்.
ஓய்வுபெற்ற கிரேக்க படைத் தலைவன் போன்ற, கம்பீரமான தமது உடலைத் தூக்கிகொண்டு, கதிரை கட்டிலை விட்டிறங்கி எழும் போதெல்லாம் ‘அப்பனே முருகா’ என உரத்து உச்சாடனம் செய்யத் தவறாதவர்.
தவிர, முற்போக்குச் சிந்தனை என்பது, வெறும் இடதுசாரிச் சிந்தனையல்ல. அது - ’எல்லார்க்கும் எல்லாமென்றிருப்பதான இடம் நோக்கி நடக்க வேண்டும் இந்த வையம்’ என்பதான மார்க்ஸிய அடிப்படையிலான சமதர்ம சிந்தனை என வலியுறுத்தி வந்தவர்.
அத்துடன், மார்க்சியம் காலத்திற்கேற்றபடி வளர்க்கப்பட வேண்டும்; அதன் பிரயோகத்தின் மூலம் வர்க்க, சமூக ஒடுக்குமுறைகள், சுரண்டல் முறைகள் ஒழிக்கப்பட வேண்டும்; மனித விமோசனத்துக்கான தத்துவமாக அது நீடிக்கப்பட வேண்டும் எனக் கூறிவந்தவர்.
கலை இலக்கியம் என்பன வெறும் இரசனைக்குரியன என்ற போக்கை முறியடித்து - அவை மக்களுக்கானவை என்பதை நிலைநிறுத்தவும், அவற்றில் சமூகப் பார்வையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் கடினமாக உழைத்தவர்.
மேலும், மேடையில் வாதங்கள், விவாதங்கள் என வரும்போது ‘முதற் கல்லை ஒருநாளும் போடக்கூடாது’ என்பதிலும் - ‘அதேவேளை, இரண்டாவது கல்லைப் போட ஒருநாளும் பின் வாங்கக்கூடாது’ என்பதிலும் மிகக் கவனமாக இருந்தவர்.
’மாற்றுக் கருத்துக்களிலும் ஏதாவது நியாயம் இருக்கக்கூடும். அதனையும் திறந்த மனதோடு நாம் அறிந்துகொள்ள வேண்டும்’ என்ற பெருமனது கொண்டவர்.
பெரும் திரளான கூட்டங்களில் பேசவேண்டி ஏற்பட்டால், அக்கூட்டத்தின் மத்தியில், யாராவது ஒருவன் இருப்பான். வேலி ஓரமாக, பூவரச மரத்தில் சாய்ந்த வண்ணம், ஒரு காலை மெல்ல மடக்கி வைத்தபடி, கூர்ந்து கேட்டுக்கொண்டு நிற்பான். அவன் ஒருவன் மாத்திரம் தமக்குப் போதும் என எதிர்பார்ப்பவர்.
உலகில் சிறந்த நூலொன்று வெளிவந்திருக்கிறது என்றால், அந்த நூலைப் படிக்கும் முதல் ஆளாக, தாமிருக்க வேண்டும் என எண்ணி ஆவலாதிப்படுபவர்.
வெறும் வாழைப்பழத் தோலை உரித்து வாயுள் திணிப்பதல்ல கற்பித்தல்; கேள்விகளை உருவாக்கி, பதில் தேடக் கற்றுக் கொடுப்பதே கற்பித்தல் எனும் கொள்கையுடையவர்.
இதேவேளை, இன்னொரு முக்கிய விடயத்தையும் இங்கு நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
’சந்நியாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?’ எனக் கேட்டபோது, ஓர் ஊறிப் பழுத்த அனுபவசாலி சொன்னார் – ‘சந்நியாசி புலித்தோலுடன் படுத்துறங்குவான்; சம்சாரி புலியுடன் படுத்துறங்குவான்!’
(இண்டைக்கு, இந்தாள் பாவம், வீட்டை போய்ப் பசியுடன் படுத்துறங்குவார்’ என, நீங்கள் என்னைப் பார்த்துப் பரிதாப்படுவதும் எனக்குத் தெரிகிறது)
சங்கடமான இத்தகைய சம்சார சமாச்சார சமூக சூழலில், முற்றிலும் பிறிதொரு உலகில் அனுதினமும் சஞ்சரித்துக் கொண்டிருந்த பேராசிரியரது - மூன்று பெண்பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தை -முகம் சுழிக்காமல் கட்டியிழுத்தவர், அவரது துணைவியார் ரூபவதி அக்கா!
ஆணியும் சுத்தியலும் இணையர்கள்தான். ஆனால் நல்ல நண்பர்களோ, அன்பான கணவன் - மனைவியரோ அல்ல; பொருந்தாவிட்டால் செருப்புக்கூடச் சேர்ந்திருக்க முடியாது!
ஆனால், அல்லும்பகலும் எப்போதும் முன்னோக்கிப் பாய்ந்து, ஓடிக்கொண்டிருக்கும் நதிபோல இயங்கிவந்த பேராசிரியர் சங்கமிக்கும் அமைதிக் கடலென, அவரது அனைத்து வகைப்பட்ட புறகிரித்தியங்களிலும் துணையாக, தூணாக நின்றுபிடித்தவர், அவரது துணைவியார், திருமதி ரூபவதி அவர்கள்.
கவிஞர் தாகூர் ஒருமுறை கூறியதற்கு ஒப்ப, பேராசிரியர் சிவத்தம்பி எனும் அம்பின் சுதந்திரம், ரூபவதி எனும் வில்லின் தயவிலேயே பெரிதும் தங்கியிருந்தமை வெளியுலகு அறியாத பேருண்மை.
நல்லதொரு “இல்லாளகத்திருக்க, இல்லாததென்றில்லை” என்ற துணிச்சலுடன், இந்த விடயத்தில் மட்டும், பேராசிரியர் ஒரு விட்டேத்தியாகத் திரிந்தவர்.
அவ்வாறு, அனுதினமும் அவரோடு இணைந்து, சதா இயங்கிக்கொண்டிருந்த ரூபவதி அக்கா அவர்களையும் இந்நேரத்தில் நினவுகூராதிருக்க முடியவில்லை!
எப்போதும் சமூக சிந்தனையுடன் - ஒரு சமூக மனிதனாக - சமூக மட்டங்களில் உள்ள எல்லா சராசரி சாதாரண மக்களோடும் -நெருக்கமான உறவைப் பேணி வந்தவரான பேராசிரியரை –
பழிக்கஞ்சி வாழ்ந்த பண்பாளராக, மிக மென்மை உள்ளன்புடன் உண்மையாக , குழந்தை போலப் பேசிப் பழகும் குணாம்சம் கொண்டவரான பேராசிரியரை –
ஊர் நடுவே பெருகிக்கொண்டிருந்த வற்றாத நன்னீர் ஊற்றாக, வளங்குன்றாத பேராறாக, உலகறிந்த பேரறிஞராக வாழ்ந்தவரான பேராசிரியரை –
அன்பு, நட்பு, மனித நேயம், சமூக அக்கறை, புலமை, ஆளுமை கொண்ட ஆழ்ந்தகன்ற நல்லறிவாளரான பேராசிரியரை –
இரண்டாயிரத்துப் பதினோராம் ஆண்டு, ஏழாம் மாதம், ஆறாம் திகதி அந்த ஈவிரக்கமற்ற - எழுதப் படிக்கத் தெரியாத எமன் –
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எனும் ஓர் அருமருந்தன்ன – அழகிய கவிதைப் புத்தகத்தை - கிழித்துப் போட்டுவிட்டுப் போய்விட்டான்!
மனதுக்குப் பிடித்தமானவர்களைவிட, அழகானவர்கள் வேறு எவருமிருக்க முடியாது! அவர்களது இழப்பை மறைக்க முடியும்; ஆனால் மறக்க முடியாது!
இன்று அத்தகைய ‘பன்முக ஆற்றலாளர் கா. சிவத்தம்பியின் தமிழியல் பார்வை’ எனும் நூலை இவ்வரங்கில் சோதரி வாசுகி வெளியிடுகின்றார். அவர் பற்றியும் சில வார்த்தைகளைச் சொல்லாமல் என்னால் விட்டுச் செல்ல முடியவில்லை.
சில புத்தகங்களின் பக்கங்கள் அறிவைத் தருகின்றன; சில புத்தகங்களின் பக்கங்கள் தூக்கத்தைத் தருகின்றன; பெரும்பாலான புத்தகங்களின் பக்கங்கள் பலசரக்குக் கடைகளில், கறிச்சரக்குகளைச் சுற்றிப் பொதிகட்டித் தருகின்றன என்பதையும் –
எம்மைத் தலைகுனிய வைத்து, தலைகுப்புற வீழ்த்தவல்ல நல்ல நல்ல செல்போன்கள் வாழும் இந்நாட்களில், எம்மைத் தலைகுனிய வைத்து, தலைநிமிர வைப்பன நல்ல புத்தகங்கள்தான் என்பதையும் –
’இலக்கியமும் இலக்கணமும் படியாதான் ஏடெழுதல் கேடு தரும்’ என்பதையும் – தெட்டத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பவர், சகோதரி முனைவர், வாசுகி நகுலராஜா அவர்கள்.
அவர், Take out சாப்பாட்டுக் கடைகளில் கெட்டியாகக் கட்டித் தரப்படும் இடியப்பச் சொதிபோல - மற்றநாள் வைத்துச் சாப்பிட்ட மக்டொனால் ‘பிரெஞ்ச் பிரைஸ்’ போல, உப்புச் சப்பற்றுப் பேசுகின்றவருமல்ல, எழுதுகின்றவருல்ல!
அவர் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும், ஆழ்ந்தகன்ற நுண்ணறிவுகொண்ட புத்திஜீவி! தமக்கே உரிய சொல்லோடும், பொருளோடும், சுவையோடும் விளையாடும் தமிழில் இதனை எழுதித் தந்திருக்கிறார், என நிச்சயம் நம்பலாம்!
இந்நூலினைத் தொடுபவர்கள், விதைகளின் விளைநிலமாக விளங்கிய ஒரு மகத்தான மானுடரது பாதார விந்தங்களைப் பயபக்தியோடு தொடுவர் என்பதுவும் நிச்சயம்! அன்புச் சகோதரி முனைவர் வாசுகிக்கு எனது பாராட்டுகளும், வணக்கங்களும், வாழ்த்துகளும்!
முடிவாக -
”காய்த்த மரம் ஆதலினால் / கல்லெறிகள் பட்டவன் நீ கல்லால் எறிந்தவர்க்கும் / கனிகொடுத்த பழமரம் நீ”
பேராசிரியர் சிவத்தம்பியின், அந்நாளைய மாணவரும், இந்நாளைய ஓய்வுநிலைப் பேராசிரியருமான சிவலிங்கராஜா அவர்கள் எழுதிவைத்துள்ள, வலிமிகுந்த இக்கவிதை வரிகள், சூசகமாச் சுட்டிநிற்கும் கருப்பொருள் – மூதறிஞர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு அந்திமகாலத்தில் இழைக்கப்பட்ட ‘துரோகம்’!
அன்றைய, யாழ் மேலாண்மை மனோபாவக் கல்விக் கட்டமைப்பு, பேராசிரியரது தகுதி கண்டு, அவருக்கு வழங்கவேண்டிய பதவிகளையும் கௌரவத்தையும் வழங்குவதைத் தவிர்த்து, இழைத்த ’துரோகம்’!
அது பேராசிரியரின் கடைசி நிமிடம்வரை, புலன்களுக்குப் புலப்படாத கண்டல் புற்றுநோய் வலியாக - அவரைச் சதா வருத்திகொண்டு வந்தது; அவரை மதிக்கும் நடுநிலை நோக்காளர் பலர் மனங்களை, இன்றுவரை வருத்திக்கொண்டே வருகின்றது.
எனவேதான், ’துரோகம்’ எனும் கொடும் வலியுடன் இன்று ஆரம்பித்த என்னுரையை, நான் அண்மையில் படித்த – எனது மனதை வருத்தி, அலைக்கழித்து, அல்லாட வைத்த -‘துரோகம்’ எனும் அதே தலைப்பிலான கவிதை ஒன்றுடன், முடித்துவைக்க நினைக்கின்றேன் –
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தவர்
மூன்று நாட்களுக்கு முன்னர் கனவில் வந்திருந்தார்.
வெகு நாட்களாக கேட்க நினைத்ததைக்
கேட்டுவிட்டேன், ஒரு வழியாக.
எது தமக்கு அதிக வலி தந்தது?
சபிக்கப்பட்ட ரோமானிய வீரர்களின் சவுக்கடியா?
முன்நெற்றியில் இறங்கிய முள்முடியா?
கல்வாரி மலைவரை, கால்வலிக்கச் சுமந்து சென்ற
சிலுவையின் பாரமா?
’யூதர்களின் மன்னனே’ என்ற கிண்டல் மொழியுடன்
காறி உமிழப்பட்ட எச்சிலா?
அடித்து, உடலில் இறக்கப்பட்ட ஆணிகளா?
சிலுவையில் தொங்கிய சித்திரவதை நிமிடங்களில்
தாகத்திற்குத் தரப்பட்ட புளித்துப்போன திராட்சை ரசமா?
எது தமக்கு அதிக வலி தந்தது?
கேள்வியை முடிக்கு முன்னர், வேள்வித் தீயென வேகமாக வந்தது பதில் -
"யூதாசின் முத்தம்!"










