அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் பாட்டி சொன்ன புராண, இதிகாசக் கதைகள்” என்ற நூலும், அண்மையில் நிகழ்ந்திருந்த ரொறன்ரோ தமிழ்ப் புத்தக அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. கே. ஏ. எஸ். சத்தியமனை நூலகத்தின் பெயரில், பண்டத்தரிப்பிலுள்ள ஜே. எஸ். அச்சகத்தினூடாக, கண்கவர் படங்களுடன் இதனை அவருடைய மகள் பபி இரவி அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.

இதிகாசம் என்பது ‘இவ்வாறு நிகழ்ந்தது’ என்ற பொருளைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. புராணங்கள் என்பவை கடவுள்கள், அவர்களின் தோற்றம், செயல்கள், சமய மரபுகள் உள்ளடங்கலான பல்வேறு செய்திகளை எடுத்துரைப்பவையாகும். அரிச்சந்திரன்–சந்திரமதி, சத்தியவான்–சாவித்திரி ஆகிய இரு கதைகளும் இந்த நூலில் புராணங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகைப்பாடு எந்த அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது என்பது எனக்கு விளங்கவில்லை.

அந்த இரு கதைகளுடன், இதிகாசக் கதைகளான இராமர்–இராவணன், கௌரவர்கள்–பாண்டவர்கள் ஆகியவையும், காப்பியக் கதைகளான கோவலன்–கண்ணகி, மணிமேகலை–துறவு ஆகியவையும், துஷ்யந்தன்–சகுந்தலை கதையுமாக மொத்தம் எட்டுக் கதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

கதையொன்றைக் கேட்பது அல்லது வாசிப்பது என்பது, பிள்ளைகளுக்கு அலாதியான மகிழ்ச்சியை அளிக்கும் ஓர் அனுபவம் என்பதை, ஒரு ஆசிரியராகவும், அம்மாவாகவும், பாட்டியாகவும் நான் நன்கறிந்திருக்கிறேன். கதைகளுடன் பிள்ளைகள் ஒன்றிப்போகும்போது, கதைகளின் கருப்பொருள்களும் உட்பொருள்களும் அவர்களின் மனங்களில் நன்கு பதிந்துவிடுகின்றன. அதனால், நாங்கள் கற்பிக்க விரும்பும் விடயமொன்றை கதை ஒன்றினூடாக இலகுவாகக் கற்பித்துவிட முடிகிறது.

கதை ஒன்றைச் சொல்வதுடன் அல்லது வாசித்துக் காட்டுவதுடன் நின்றுவிடாமல், அதில் இடம்பெறும் பாத்திரங்களின் செயல்கள், அவற்றுக்கான காரணங்கள், அச்செயல்களின் விளைவுகள் ஆகியவற்றைப் பற்றியும் பிள்ளைகளுடன் நாங்கள் கலந்துரையாடினால், வாழ்க்கையில் முடிவுகளை எடுக்கவேண்டிய சந்தர்ப்பங்களில் அக்கதைகள் அவர்களுக்கு வழிகாட்டக்கூடும். உதாரணத்துக்கு, ஒன்றிணைந்து செயல்படும்போது கடினமான செயல்களையும் இலகுவாகச் செய்துமுடிக்கலாம் என்ற உண்மையை ‘ஒற்றுமையின் பலம்’ என்ற கதை அவர்களுக்கு நினைவூட்டலாம்.

அவ்வாறே, கதையில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் பிள்ளைகள் இனம்காண முயற்சிக்கும்போது, தங்களைச் சூழவுள்ளவர்களினது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் மட்டுமன்றி, தங்களுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும்கூட சிறப்பாக விளங்கிக்கொள்ளும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், தங்களின் உள்ளக்கிடக்கை எப்படி வெளிக்காட்டலாம் என்பதையும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

அத்துடன், பிள்ளைகளின் எழுத்தறிவு, பொருளுணரும் திறன், தர்க்கரீதியாகச் சிந்திக்கும் ஆற்றல், கற்பனைத்திறன் ஆகியவற்றையும் வளர்ப்பதற்குக் கதைகள் உதவுவதுடன்; நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், பிறருக்கு உதவுதல், மற்றையோரை மதித்தல் போன்ற நற்பண்புகளின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்றன. மகாத்மா காந்தி சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்வதற்கு அரிச்சந்திரன் கதை காரணமெனக் கூறப்படுவதும், ஒருவரின் வாழ்வில் கதைகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறாகப் பல்வேறு நன்மைகளை அளிக்கின்ற கதைகளைப் பாட்டியிடம் கேட்கும்போது, பாட்டிக்கும் பிள்ளைக்கும் இடையிலான உணர்வுபூர்வமான உறவும் வலுப்படுத்துகிறது. என் பாட்டியிடம் நான் கதை கேட்டிருந்த அனுபவங்களும், இன்று என் பேரனுக்கு நான் கதை சொல்லும் தருணங்களும் இதை எனக்கு அனுபவபூர்வமாக உணர்த்தியிருக்கின்றன.

இத்துணை முக்கியத்துவம் வாய்ந்த சிறுவர் இலக்கியம் சங்ககாலத்திலேயே, இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பாகவே தோன்றிவிட்டது என்கிறார், தமிழ்ப் பேராசிரியரும் எழுத்தாளருமான முனைவர் பூவண்ணன் அவர்கள். “நிலாவே வா...வா… உனக்குப் பால் தருகிறேன்,” என நிலவை அழைத்துக் குழந்தைக்குத் தாய் ஒருவர் உணவூட்டும் அகநானூற்றுப் பாடல் ஒன்றை அதற்கவர் மேற்கோளாகக் காட்டியிருக்கிறார்.

பொதுவாகப் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக எழுதப்படுகின்ற இலக்கியமே சிறுவர் இலக்கியம் எனப்படுகிறது. இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் கதைகளை குறித்த பிரிவுக்குரிய வயதினருக்கானவை என வகைப்படுத்த முடியாது. உதாரணத்துக்கு, இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் போர், பழிவாங்கல் போன்ற வன்முறையான நிகழ்வுகளும், கோவலன்–கண்ணகி கதையில் கொலை, நகரமொன்றின் அழிவு போன்ற துயரமான சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதால், இவற்றைப் பிள்ளைகள் எவ்வாறு உள்வாங்கிக் கொள்வார்கள், இவற்றை அறிமுகப்படுத்துவதற்கு அவர்களின் வயது பொருத்தமானதா என்பவற்றை, பிள்ளைகளின் மனமுதிர்ச்சியின் அடிப்படையில் பெற்றோரே தீர்மானிக்க வேண்டும். இக்கதைகளின் சில பகுதிகளை நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, bedtime stories ஆக அப்பா சொன்னதும். பின்னர், பத்து வயதளவில் அவற்றை வாசிப்பதற்காக அவர் எனக்கு நூல்களாக வாங்கித்தந்ததும் எனக்கு நினைவுக்கு வருகிறது.

இலக்கியத்தை அது தோன்றிய காலத்தின் சமூகச் சூழலிலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாது. ஒரு சமுதாயம் குறிப்பிட்ட காலகட்டத்தில் எத்தகைய இலக்கியத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறதோ, எவ்வகையான இலக்கியத்தை வாசித்து இன்புறுகிறதோ, அத்தகைய இலக்கியங்களே அக்காலத்தில் தோன்றுவது இயல்பானது. சமுதாயத்தின் நிலைக்கும் சூழ்நிலைக்கும் அதில் உருவாகும் இலக்கியத்திற்கும் மிக நெருங்கிய, பிரிக்கமுடியாத தொடர்பு உண்டு என்கிறார் தமிழ் அறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை.

இந்தக் கருத்தின் அடிப்படையில் நோக்கும்போது, குறித்த காலத்தின் சமூக, பண்பாட்டுத் தேவைகளையும் விழுமியங்களையும் பிரதிபலிக்கிற இலக்கியங்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும்போது, அவற்றின் பண்பாட்டு முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன், அவற்றில் இடம்பெறும் கருத்துகள் இன்றைய காலத்திற்கும் பொருத்தமானவையாக இருக்கின்றவையா என்பதையும் ஆராயவேண்டிய தேவையுள்ளது.

இன்றைய பிள்ளைகள், பெற்றோரோ ஆசிரியர்களோ சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு செல்பவர்கள் அல்லர். ‘ஏன்?’, ‘எப்படி?’, ‘எதற்காக?’ எனப் பல கேள்விகளை அவர்கள் எழுப்புவதை நாமெல்லாம் பார்த்திருப்போம். கேள்விகளைக் கேட்காவிட்டாலும்கூட, அப்படிச் சிந்திக்கத் தூண்டும் வகையிலேயே இன்றைய கல்வி முறை அமைந்துள்ளது. எனவே, மரபில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் பின்னணியை விளங்கிச் சுயமாகச் சிந்திக்க அவர்களுக்கு வழிவகுப்பதே, இலக்கியமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சிறந்ததோர் அணுகுமுறையாக இருக்கும்.

அவ்வகையில், அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த உடன்கட்டை ஏறுதல், கைம்பெண்ணின் தலையை மொட்டையடித்து, அவளை வெள்ளைச் சேலையை அணியவைத்தல் போன்ற மனிதாபிமானமற்ற வழக்கங்களும், ஒடுக்குமுறைகளும் தவறானவை என்பதை எழுத்தாளர் இதில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கணவனை இழந்த பெண்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அதற்குத் தடைவிதிக்கக் கூடாது என்று அவர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் இருக்கிறார்.

இந்நூலின் மற்றொரு சிறப்பியல்பாகத் தனது தனிப்பட்ட அனுபவப் பகிர்வுகளைக் (personal connections) கதைகளுடன் எழுத்தாளர் இணைத்திருப்பதைக் குறிப்பிடலாம். அரிச்சந்திரன்–சந்திரமதி கதையில், “அந்தக் காலத்தில் தாத்தா நடித்த இந்த நாடகத்தைப் பற்றி மிகுந்த விருப்பத்துடன் சொல்லுவார். அதிலும், கஷ்டங்கள் தொடர்ச்சியாக வாட்டிய காலத்தில் அரசனோடு உறுதியாக நின்ற மந்திரி சத்தியகீர்த்தியை வியந்து சொல்லி, தன் மகனுக்கு சத்தியகீர்த்தி என்ற பெயரையும் வைத்தார்,” எனக் குறிப்பிடும் எழுத்தாளர், காடு மலைகடந்து உங்களின் பெற்றோரும் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் கதைகளையும் கேட்டறியுங்கள் எனக் குடும்ப சரித்திரங்களை அறியும்படி பிள்ளைகளையும் ஊக்குவிக்கிறார்.

அவ்வாறே, “குலம் என்று சொல்லப்படுவது செய்யும் தொழிலில் இருந்து உருவானது என்பதையும் அதன் அடிப்படையில் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் உருவானதையும் விளங்கப்படுத்தி, ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கு உங்கள் தாத்தா பாடுபட்டார். நீங்களும் மனிதரைச் சக மனிதராக மட்டுமே பார்க்கவேண்டும்” என்று சொல்வதன் மூலம், குடும்ப நினைவுகளைப் பகிர்வதுடன், சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் வலியுறுத்தும் சமூகச் சிந்தனைகளையும் பிள்ளைகளிடம் அவர் விதைக்கிறார்.

இன்னொரு இடத்தில் “நீங்களும் எமதர்மராஜாவிடம் தாத்தாவின் உயிரைக் கேட்டிருக்கலாமே, பாட்டி?” என்று பிள்ளைகள் கேட்பதாக இருக்கும் கேள்விக்கு, “அவர் மக்கள் விடுதலைக்காக உழைத்தவர். அதனால்தான் அவர் நினைவுகள் இன்றும் உயிர்ப்புடன் வாழ்கின்றன. உண்மையான அன்பு மரணத்தையும் வெல்லும்” எனப் பாட்டி பதிலளிக்கிறார். இதன் ஊடாக உடல் மறைந்தாலும் ஒருவரின் நினைவுகளும் கொள்கைகளும் அவர் பிறரிடம் ஏற்படுத்திய தாக்கங்களும் தொடர்ந்திருக்கும் என்பதை அவர் உணர்த்துகிறார்.

அடுத்ததாக இந்நூலில் நான் கவனித்த என் கரிசனைக்குரிய விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கீழ்வருவன தகவல் பிழைகளாக இருக்கின்றன.

1. நீங்கள் இப்போது விளையாடும் சதுரங்கம்தான் சூதாட்டம் என 5ம் பக்கத்தில் விளங்கப்படுத்தப்படுகிறது. பின்னர் சூதாட்டம் என்பது தந்திரமான, தவறான விளையாட்டு என 72ம் பக்கத்தில் சரியாக இருக்கிறது. – சதுரங்கம் என்பது திறன், திட்டமிடல், தர்க்கரீதியான சிந்தனை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டேயன்றி, அதிர்ஷ்டத்தைச் சார்ந்ததுமல்ல; மறைக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டதுமல்ல என்பதால், வேண்டுமானால் அதை poker உடன் ஒப்பிடலாம்.

2. இராமரும் இலட்சுமணரும் சிறுவயதில் கூனியின் முதுகில் அம்பெய்து அவரை எள்ளி நகையாடியதால், கூனி அவர்களைத் தனது எதிரிகளாகக் கருதினார் என்கிறார், ஆசிரியர். - கம்பராமாயணத்தில் இராமன் கூனியின் முதுகைக் குறிவைத்து களிமண் உருண்டைகளை அம்பினால் எய்து விளையாடியதாகவே கூறப்பட்டிருக்கிறது. அம்பெய்வதற்கும் அம்பில் களிமண் உருண்டைகளை எய்வதற்கும் வேறுபாடு உள்ளதெனலாம்.

3. கைகேயி, பரதன் நாடாள வேண்டும் என்றும், இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்லவேண்டும் என்றும் தசரதனிடம் வரம் கேட்டபோது, இந்நிகழ்வை தசரதன் ஒரு விளையாட்டாகக் கருதினார் என்று 20ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. பின்னர் 22ம் பக்கத்தில், அதைக் கேட்டவுடன் மன்னன் மயங்கிக் கீழே விழுந்துவிட்டார் என்று மாறான செய்தி இருக்கிறது. - கைகேயி கேட்ட வரங்களைக் கேட்டுத் தசரதன் அதிர்ச்சியடைந்து மயக்கமுற்றதாகவும், பின்னர் மயக்கம் தெளிந்ததும், கைகேயியிடம் தனது முடிவை மாற்றுமாறு கெஞ்சியதாகவுமே கம்பராமாயணம் கூறுகிறது.

4. இந்திரப்பிரஸ்த்தின் அழகைக் கண்டு அதையும் அடையவேண்டும் என்ற பேராசை துரியோதனுக்கு வந்ததால் அரச சபையில் அவர் தவறு இழைத்தார் என்றும் தர்மனும் திரௌபதியும் அவரது அஸ்திரத்தையும் கர்ணனினது அஸ்திரத்தையும் பறித்தனர் என்றும் இருக்கிறது. - ஆனால், உண்மையில் நீர்நிலை எது, தரை எது என்று பிரித்தறிய முடியாதபடி அந்த அரண்மனை அமைக்கப்பட்டிருந்தால், தரையை நீர்நிலை என்று நினைத்து ஆடையைத் தூக்கிக்கொண்டு நடந்த துரியோதனன், நீர்நிலையைத் தரையென நினைத்து இயல்பாக நடந்ததால் நீருக்குள் விழுந்துபோனார் என்றும், அதைப் பார்த்துத் திரௌபதி சிரித்ததால் தான் அவமானப்பட்டதாக துரியோதனன் கோபமடைந்திருந்தார் என்றுமே இராமயணம் கூறுகிறது.

5. ‘நீயும் ஒரு நாளைக்கு எங்களைப் போல புத்திர சோகத்தால் இறப்பாய்” என்று சாபமிடப்பட்டபடி, தசரதன் அம்பெய்தபோது தற்செயலாகக் கொல்லப்பட்ட சிறுவனின் பார்வையற்ற பெற்றோர் உயிர் விட்டதைப் பற்றிக் கூறும் ஆசிரியர் பின்னர் பின்வருமாறு கூறுகிறார்.

-தசரதனுக்கே தனது செயலால் மனத்துன்பம் அதிகம் இருந்தாலும் இன்னொரு புறம் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில், தசரதனுக்கு “நீ மனைவியோடு சேர்ந்தால் தலை வெடித்துச் சாவாய்” என்றொரு சாபம் இருந்தது. அதனால் அவர் தனக்கும் ஏதோ பிள்ளைகள் பிறக்கப்போகிறதா? என்ற நினைப்பில் வாழ்ந்தார். - மகாபாரதத்தில் வரும் பாண்டு மகாராஜாவுக்கே அத்தகைய சாபமிருந்தது. இதில் தகவல் பிழையுடன் வாக்கிய அமைப்புப் பிழையும் இருப்பதை நாங்கள் பார்க்கலாம்.

5. சங்ககாலம் என்பது, கி.மு.100 முதல் கி.பி. 200 என்று இருக்கிறது. ஆனால், சங்ககாலம் என்பது கி.மு. 600 முதல் கி.பி. 300 வரையான காலமாகும். சில இடங்களில் கி.மு/கி.பி என்றும் சில இடங்களில் பொ.ஊ (பொது ஊழிக்காலம்) என்றும் இருக்கிறது. அடுத்த பதிப்பில் ஒரே மாதிரி எல்லா இடங்களிலும் இருப்பது நல்லதென நினைக்கிறேன்.

அடுத்ததாகச் சில இடங்களில் இலக்கணப் பிழைகள் அல்லது வாக்கிய அமைப்புப் பிழைகள் காணப்படுகின்றன.

1. உயிர் எழுத்துகளில் ஆரம்பிக்கும் சொற்களின் முன்பாகப் பயன்படுத்தப்படுகின்ற, ‘ஓர்’ என்ற சொல், உயிர் எழுத்துகளில் ஆரம்பிக்காத பல சொற்களின் முன், ஓர் பணம், ஓர் சம்பிர்தாயம், ஓர் தவறு, ஓர் பெண், ஓர் விரதம்- எனப் பிழையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

2. முற்றுப்புள்ளி வர வேண்டிய இடங்களில் அது இல்லை. ஆனால், வசனங்களில் உள்ள சொற்களிடையே அது போடப்பட்டிருக்கிறது. அதேபோலப் பின்பக்கத்தில், “நான் எழுதிவைத்த இக்கதைகள் எல்லாம் எமது சிறார்களுக்கு சென்றடைய வேண்டுமென்றுதானே எழுதினேன்? இது போன்ற வாய்மொழி இலக்கியங்கள் நின்று விடுமோ? என நினைத்தேன், எனப் பொருத்தமற்ற இடங்களில் கேள்விக்குறி இருக்கிறது.

3. “நான் சகுந்தலையை எத்தனை வருடங்கள் தவிக்கவிட்டு விட்டதோடு, அவளுக்குக் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றவில்லை.”- என வாக்கிய அமைப்பில் பிழை இருக்கிறது.

4. தன் கணவனுக்காக நீதி கேட்டது மிகவும் திருப்தியாக இருந்தது. அதற்குப் பிறகு என்ன நடந்தது? எனப் பிள்ளைகள் கேட்பதாகச் சொல்லப்படும் கேள்விக்குப் பதிலாக

அதற்குப் பிறகு, கோவலனும் மாதவியும் ஒன்றிணைந்து வாழ்ந்தபோது பிறந்த மகள் மணிமேகலை தான் இந்தக் கதையின் நாயகி என்கிறார் பாட்டி. இதில் கேள்விக்கும் பதிலுக்குமிடையில் தொடர்பின்மையைப் பார்க்கலாம்.

முடிவாகக் கருத்தில் மயக்கத்தை தருகின்ற பின்வரும் இடங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1. நூலில், “கண்வ முனிவரைப் பார்த்துவிட்டுச் செல்கிறேன்” என்று துஷ்யந்தன் சகுந்தலையிடமும் அங்குள்ளவர்களிடமும் கூற, அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் இடையே காதல் மலர்ந்தது, என்றிருக்கிறது. – இது துஷ்யந்தன் கூறியதற்கும், காதல் மலர்ந்ததற்கும் நேரடித் தொடர்பு இருப்பதுபோன்ற கருத்தைத் தருகிறது.

2. அவ்வாறே “சந்தனு என்ற மகாராஜா ஆட்சி செய்து வந்தார். அவருக்கு கங்காதேவி, சத்தியவதி என்ற இரண்டு மனைவிமார் இருந்தனர். அவர்களுள் கங்காதேவியின் மகன் பீஷ்மரும் சத்தியவதியின் மகன்மார்கள் சித்திராங்கன், விசித்திரவீரியனும் ஆவர்,” –இந்த வசனங்கள் மயக்கம் தருகின்றன.

அடுத்த பதிப்பு வந்தால் சேர்க்கவேண்டியவை என நான் கருதுபவை:

1. பீஷ்மர் தான் ஏற்றுக்கொண்ட சபதத்தினால் அரசபதவியை மறுத்தார் என்றிருக்கிறது. அதில் ஏன் என்ற விளக்கத்தையும் சேர்த்துக்கொள்ளல்

2. பாண்டிய மாதேவியின் சிலம்பில் முத்துப் பரல்கள் இருந்தன என்பதைத் தெளிவாகச் சொல்லல்

3. கோவலன் பிழை செய்த போதெல்லாம் ஒன்றுமே சொல்லாமல் இருந்த கண்ணகி, அப்பாவி மக்கள் வாழும் ஓர் நகரத்தை எரிப்பது எப்படிச் சரி ஆகும்? எனப் பிள்ளைகள் கேட்பதாக இருக்கும் கேள்விக்கு, “கண்ணகியின் பார்வையில் நடனத்தையும் இசையையும் இரசிப்பவராக ஆரம்பத்தில் இருந்தே கோவலன் பற்றி அறிந்து வைத்திருந்தார். அதைவிடவும் தானாக விரும்பியே மாதவியிடம் போனார், தானாக உணர்ந்து திரும்பி வந்தார். ஆனால் அவர் செய்யாத தவறுக்காகத் தண்டனை கொடுப்பது நியாயம் அற்றது. அதைவிட நீதி தவறாத மன்னன் செய்வது பெரும் குற்றம் எனக் கருதினார் என பதிலில் நியாயப்படுத்துகிறார் பாட்டி. - மாதவியிடம் போன கோவலன் திரும்பிவந்தபோது எதுவுமே பேசாத கண்ணகியின் செயல் சரியா? மன்னன் செய்தது குற்றமே என்றாலும், அதற்காக நாட்டை எரிப்பது சரியா என்பன பற்றியும் பிள்ளைகளுடன் கலந்துரையாடுவது நல்லது.

4. அவ்வாறே இலக்குவன் சூர்பனகையின் மூக்கை அறுத்தது சரியா என்பது பற்றியும் பேசலாம்.

மேலும், அப்புறம், புரிகிறது, துஷ்யந்தனுக்குச் சகுந்தலையைச் சுத்தமாக ஞாபகமே இல்லை போன்ற சில சொற்பிரயோகங்கள் இந்தியப் பேச்சுமொழி வழக்கு எவ்வளவுதூரம் இலங்கையில் இப்போது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.

நிறைவாக

சிறுவர் இலக்கியம் என்பது பிள்ளைகளை மகிழ்விப்பதற்கான ஒரு கருவி மட்டுமல்ல; அவர்களின் அறிவையும் மொழியையும் சிந்தனையையும் வளர்க்கும் ஓர் ஊடகமுமாகும்.

எனவே, மரபுக் கதைகளை அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும்போது அப்படியே கூறுவதா, அல்லது சமகாலத்துக்கு ஏற்ப மறுவடிவமைப்பதா என்பதை எழுத்தாளர் தீர்மானிக்கலாம். ஆனால், அவற்றின் பண்பாட்டு முக்கியத்துவத்தைப் பாதுகாக்கும் அதே நேரத்தில், தகவல்களின் துல்லியத்தையும், மொழியின் தெளிவையும் உறுதிப்படுத்தல் அவசியமாகும்.

மேலிருக்கும் கரிசனைகளைத் தவிர்த்துப் பார்க்கும்போது, புராண, இதிகாசக் கதைகளை கூறுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவற்றின் வழியாகப் பெண்களின் உரிமைகள், சமத்துவம், மனிதநேயம், ஆகியவற்றையும் பிள்ளைகளிடம் கொண்டுசெல்ல அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் முயன்றிருப்பது இந்நூலின் கவனிக்கத்தக்கதொரு சிறப்பம்சமாகும். எங்களின் தலைமுறைக்கு முந்திய தலைமுறையிலிருந்த ஒருவர், இப்படிச் சிந்தித்திருப்பது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

அத்துடன் மகளினால் தாயின் எழுத்துகள் வெளியிடப்பட்டிருப்பதும், உறவுமுறைப் பாட்டியாக மட்டுமன்றி, நூலகத்துக்கு வந்திருந்த சிறுவர்கள் அனைவரினதும் பாட்டியாக இருந்து இந்தக் கதைகளை எழுத்தாளர் சொல்லியிருப்பதும் இதன் இன்னொரு சிறப்பெனலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்