
ஒரு இலக்கியப் படைப்பின் ஜீவன் என்பது காலத்தால் தன் வர்ணங்களையும் வாசனைகளையும் இழக்காது இருப்பதற்கு , அதே காலத்திற்குரிய மானுட வாழ்வியல் முறைகளும் , அவர்களின் உணர்வுகளும் எவ்வாறு இன்றைய வாசகருக்குள் கடத்தப்பட்டு உயிர்பெறுகின்றன என்பது முக்கியமானது. அவ்வாறான இயல்பான படைப்புகளில் அன்றும் இன்றுமான ஒப்பீடு மிகவும் சுவாரசியமாக அமைகின்றது.
அந்த வகையில் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் ஐம்பது வருடங்களைத் தன் அனுபவமாகக் கொண்டவரும் , புகழ்பெற்ற எழுத்தாளருமான தாமரைச்செல்வி அவர்களால் 1977 ம் ஆண்டில் எழுதப்பட்ட 'சுமைகள்' நாவல், இவ்வருடம் மறுபதிப்புக் கண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகின்றது.
முன்பு வாசித்தவர்களின் மறுவாசிப்புக்காகவும் , இன்றைய இளைய தலைமுறையினரின் புதிய வாசிப்பிற்காகவும் தன்னை முன்வைத்துள்ளது . அத்துடன் மூலப்பிரதியில் எதுவித மாற்றங்களும் செய்யாமல் அப்படியே பதிந்திருப்பது பாராட்டிற்கு உரியது .
அரை நூற்றாண்டுக்கு முந்திய கிராமிய வாழ்வியலும் அன்றைய மனித மனக்கோலங்களும் சம்பிரதாயங்களும் நம் முன்னே அன்று உள்ளவாறே காட்சிப்படுத்தப்படும் இவரது எழுத்து நடையின் மூலம், காலத்தின் சுவடுகளில் மீள நடப்பது போல ஒரு உணர்வினை வாசகன் பெறமுடியும்.
இது அவரது முதல் நாவலாயினும் எழுத்துப் பண்புகள் அன்று போலவே இன்றும் ஒரே மாதிரியாக உள்ளன என்று சொல்வதை விட , அன்றே ஒரு தேர்ந்த படைப்பாளராகத் தன்னை முன்வைத்துள்ளார் எனக் கூறுவது மிகப் பொருத்தமானது.
ஒரு எழுத்தாளராக தாமரைச் செல்வியின் படைப்புலகம் பற்றியதோர் பார்வையும் , தனிமனிதராக அவரது பண்புகள் பற்றிய பார்வையும் சேர்ந்ததே இந்த நயப்புரை.
வீரகேசரி பத்திரிகையின் பொன்விழாவினை ஒட்டி நடைபெற்ற போட்டிகளில் , சுமைகள் நாவலானது நல்லதோர் படைப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டு , அதன் முதற்பதிப்பு வீரகேசரியின் 55 வது வெளியீடாக 1977 ம் ஆண்டு ஆடிமாதம் வெளியானது .
புதிய பதிப்பு சுப்ரம் பிரசுராலயத்தின் ஆறாவது வெளியீடாக இவ்வருடம் (2026) பங்குனி மாதம் வெளியானது . அச்சுப்பதிப்பு நெல்லியடி பரணி அச்சகம் . புதிய பதிப்பின் முகப்போவியத்தினை வரைந்தவர் தாமரைச்செல்வி . அட்டை வடிவமைப்பு றோகிதன் இரட்னம்
கதையின் களம் எழுத்தாளரின் பிறந்த இடமான குமரபுரம் - பரந்தன் - கிளிநொச்சி பிரதேசம். அந்தப் பிரதேசத்திற்குரிய வாழ்வியல் மிக இயல்பாக இங்கு கூறப்பட்டுள்ளது.
கரு - ஏழ்மையான ஒரு விவசாயக் குடும்பத்தின் வாழ்வியல் பிரச்சனைகள்.
பொதுவாக தாமரைச்செல்வியின் எழுத்து எவ்வகையானது என்று பார்த்தால் சாதாரண கிராமத்து மக்களின் யதார்த்த வாழ்வியலை , வறுமையை , உறவுகளின் வலிமையை , வலியை , பெண்களின் மனதைப் பேசுவதுடன், போர் இடம்பெயர்வு ஆகியவற்றின் கொடூரங்களை மிக இயல்பான எளிமையான மொழிநடையில் தருவதுமாகும் . இவரது கதைமாந்தர்கள் அனைவரும் அன்றாட வாழ்வில் நாம் காண்பவர்கள்.
பெண் என்ற பால்நிலை அடையாளம் , படிப்பு , திருமணம் , குழந்தைகள் , குடும்பப் பொறுப்புகள் , நாட்டுப் பிரச்சனைகள் எதுவுமே ஒரு எழுத்தாளரின் கரங்களுக்கு விலங்கிடுவதில்லை என்பதற்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவர் எழுத்தாளர் தாமரைச் செல்வி. அவரது எழுத்துகளுக்கு முதல் ரசிகராக இவரது கணவர் இருக்கிறார் என்பது மிகப்பெரிய உந்துதலாகவும் பக்கபலமாகவும் அமைந்திருக்கின்றது.
தற்போது சில வருடங்களாக தாமரைச்செல்வி ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும் , போர் நடந்த நிலத்தில் முற்றுமுழுதாக வாழ்ந்த அனுபவங்களைக் கொண்டிருப்பவர். அதனால் அவர் பிற்காலத்தில் படைத்த எழுத்துகள் போரின் வலியை, புலம்பெயர்வைப் பற்றி அதிகம் பேசின.
தாமரைச்செல்வி ஒரு சித்திரக் கலைஞரும் ஆவார். தனது புத்தகத்திற்காக அக்காலகட்டத்தோடு ஒன்றிய முக அமைப்புகளில் அழகிய சித்திரமொன்றினையும் வரைந்திருக்கிறார்.
எழுத்தாளரது ரம்மியமான இளமைத் தோற்றத்துடன் கூடிய பின் அட்டைப்படம் மிக விசேடமானது . அவரது மென்மையான உண்மையான மனதைப் பிரதிபலிப்பது போலவே அடக்கமான அழகான இருபத்து மூன்று வயது நிழற்படம் .
முன்பொரு நிகழ்வில் அவரது கணவர் தனது உரையொன்றில் கூறினார். தாமரைச் செல்வி எதை எழுதுகிறாரோ அதுவே அவரது உண்மையான மனமும் ஆகும் என்று.
ஊருக்கு உபதேசம் செய்யாமல் , ஏழை எளியவர்களுக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் உதவுவது அவர்களது குடும்ப பாரம்பரியமாகவே தொடர்கிறது. அதனால் அகம் என்பதே எழுத்தானவர் என்றும் கூறலாம்.
அத்துடன் சிறியோரும் பெரியோரும் வாசிக்கத் தகுந்த பண்பு தவறாத கண்ணியமான எழுத்துகளின் சொந்தக்காரர் இவர். நவீனம் பின்நவீனம் மாயாயதார்த்தம் என்ற வித்தகச் சொற்கள் எதற்குள்ளும் அடங்காத , மிக எளிமையான வாசிப்பிற்கு உரியவை இக்கதைகள்.
அன்றும் இன்றும் மாறாத தெளிந்த நீரோடை போன்ற எளிமையான இயல்பு நடை . தமது உரையாடல்களினால் அல்லது பாத்திரங்களின் குண இயல்புகளினால் எங்கும் உறுத்தாத நிஜமான போக்கு . அதனால் இவரது எழுத்து இலகுவாக எவரிடமும் சென்றடையும்.
சமூகத்தில் உலவும் நல்லவர்களை முதன்மைப்படுத்தி எழுதுவதன் மூலமும் , சில கெட்டவர்களுக்கு உள்ளும் திருந்தக் கூடிய நன்மனம் கொண்டவர்கள் உண்டு என்பதாகக் கதாபாத்திரங்களை அமைப்பதன் மூலமும் , ஆரோக்கியமான மனநிலை கொண்ட சமூகத்திற்கான வாயிலை தன் எழுத்தின் மூலம் திறந்து வைத்திருக்கிறார்.
தென்மராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது தந்தை விவசாய முயற்சிகளுக்காகப் பரந்தன் குமாரபுரம் பகுதிக்குச் சென்று குடியேறியவர். இன்றும் அவர்களது பரம்பரையினர் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இவரது இலக்கிய சாதனைகள் பற்றிப் பார்த்தால் தாமரைச் செல்வி அவர்களின் இதுவரை வெளிவந்த நூல்களாக 7 நாவல்கள்: 5 சிறுகதைத் தொகுப்புகளும் அடங்கும் இதில் பச்சை வயல்கனவு, உயிர்வாசம் ஆகிய நூல்களுக்கு அரச இலக்கிய விருது கிடைத்தது
பகுதி 2
//நாவலின் முதன்மை மையக்கருத்தாக அமைவது , குடும்பத்தின் பொறுப்புகள் - மற்றும் மனித மன உணர்வுகளுக்கு இடையே ஏற்படும் முரண்பாடுகள் ஆகும். ஒரு ஒரு விவசாய குடும்பத்தின் வறுமை - வாழ்வாதாரம் - நெல் விற்பனை - திருமணம் - முயற்சிகள் - மற்றும் அன்றாட வாழ்வியல் போராட்டங்கள் கதையின் பின்னணியாக அமைகின்றன. அத்தோடு இளைஞர்களின் பலவீனங்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பார்வை என்பவற்றை நாவலின் வாயிலாக வெளிப்படுத்துவதன் மூலம் நூலாசிரியர் சமூகப் பொறுப்பையும் சமூகத்தை நோக்கிய அக்கறையையும் வெளிப்படுகின்றார்//
இது எழுத்தாளரும் விமர்சகருமாகிய கந்தர்மடம் அஜந்தனின் தெளிவான கூற்று.
அதனால்....
நாவலை வாசித்து முடித்தபோது ஒரு படைப்பாகவன்றி தனிமனித அனுபவங்களாகவே மனம் முழுவதும் வியாபித்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதான யதார்த்த வாழ்வியல் படிமங்கள் கண்முன்னே விரிந்தன.
அடுத்து..,
சுமைகள் நாவல் தந்த காலத்தின் தடங்கள் இவ்வாறாக இருக்க , கதாபாத்திரங்களின் குண இயல்புகள் மீதான மறுவாசிப்பு இன்றைய நாளுடன் ஒப்பீட்டு ரீதியில் தரும் நினைவுகள் வித்தியாசமான பரிமாணம் கொள்கின்றன.
படைப்பு எழுதப்பட்ட சமகாலத்தவர்களது உணர்தலுக்கும் , புதிய தலைமுறையினரின் வாசிப்பு அனுபவத்திற்கும் இடையிலான , சமூக கலாசார பண்பாட்டு மற்றும் தலைமுறை இடைவெளியானது அரை நூற்றாண்டு காலம். இளையவர்களின் புரிதலில் சற்றுப் புதியதாக , இன்றைய காலத்தில் இவ்வாறு உணரப்படவில்லையே என்றதோர் எண்ணத்தினைப் பல சந்தர்ப்பங்களில் தரக் கூடியது.
அதேசமயம் நகரத்தில் வாழும் இளையவர்கள் தமது முன்னைய தலைமுறையின் கிராமிய வாழ்வியல் கோலங்களை அறிந்து வியப்புறும் வண்ணமும் அமைந்துள்ளது.
முக்கியமாக அன்றைய இன்றைய பெண்களின் வாழ்வியல் கோலங்களும் , பதின்ம இளைஞரின் மனநிலை மாற்றங்களும் அவர்களின் மேலான குடும்பத்தினரின் கட்டுப்பாடுகளும் இன்று பெருமளவில் மாற்றம் கண்டுள்ளன.
சுமைகள் நாவலில் தாமரைச் செல்வியின் முன்னுரையில் இருந்தே அவரது எழுத்து முறைமை பற்றி அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறுகிறார்.
//இதை எழுதும்போது எனக்கு 23 வயது தான் . ஒரு கிராமத்தின் வாழ்க்கையும் அதில் கதாநாயகனாக உலாவரும் செந்திலையும் இன்றும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் ஐம்பது வருடங்களுக்கு முந்திய என் எழுத்தை ஒரு வார்த்தையும் மாற்றாது அப்படியே வாசகர் கைகளில் மீண்டும் தருகிறேன்.
தனக்காக மட்டும் சிந்திக்காமல் பிறருக்காகவும் சிந்திப்பவன் தான் உண்மை எழுத்தாளன் ஆகிறான் . அவனது சிந்தனை மிகவும் பரந்தது. சமுதாயத்தின் இன்பமும் துன்பமும் ஓயாமல் அவனைத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. திடீர் திருப்பங்களையும் அதிகமான கற்பனைகளையும் கலந்து மக்களை மயக்க முயல்வது போலித்தனமான நடிப்பாகும். மக்களின் பார்வைக்கு சுலபமாக எட்டக்கூடிய நியாயமான பாதையை காட்டுவது தான் பயன் தரும் படைப்பாகும். சோகமும் சோதனைகளும் நிறைந்த வாழ்வில் பலத்தையும் நம்பிக்கையையும் ஒருவித தெம்பையும் ஏற்படுத்துவது எழுத்தாளனின் கடமையாகும்.//
உண்மை..
அருமையான கருத்துகள்.
அத்துடன் நாவலின் களம் கதாபாத்திரங்கள் பற்றி சில தகவல்களை தாமரைச் செல்வி தந்திருக்கிறார்.
//இக்கதையில் நாம் காணும் எழுபதுகளின் வாழ்க்கை முறை இன்றைய சராசரி வன்னிக் கிராமங்களின் அடிப்படை வாழ்க்கை முறையாகவும் இருக்கின்றது.
வயல் விதைப்பு தோட்டம் செய்தல் மாடு வளர்ப்பு பால் எடுத்து கடைகளுக்கு கொடுத்தால் வீட்டில் பெண்கள் தையல் வேலை செய்து சம்பாதித்தல் தோட்டங்களுக்கு சென்று மரக்கறிகளை வாங்கி சந்தைக்கு கொடுத்து வியாபாரம் செய்தல் , சீதனம் கொடுக்க இயலாத குடும்பத்தில் இருக்கும் பெண்கள் ஏக்கத்தோடு காத்திருத்தல் என பல பல.
நீண்ட கால போரின் விளைவுகளுக்கு பின்னாலும் , வீதிகள் பல தொழில்நுட்ப வசதிகள் வந்த போதும் , பல கிராமங்களில் அதே எளிமையான வாழ்க்கை முறை தான் இன்றைக்கும் இருக்கிறது அன்றாடம் வாழ்வோடு போராடி வாழும் மனிதர்களை கொண்ட கிராமங்களை இன்றும் பார்க்க முடியும் .
அதே நேரம் மேளக்கச்சேரிகள் பாட்டு கச்சேரிகள் காவடியாட்டம் தீக்குளிப்பு என இன்றும் கோவில் கொண்டாட்டங்களும் குறைவின்றி நடக்கின்றன . எந்த நிலை வந்தாலும் எதிர்காலம் பற்றிய ஆசைகளோடும் கனவுகளோடும் வாழுகின்ற இளைய தலைமுறையினர் இக்காலத்துக்கும் பொருந்துபவர்களாகவே இருக்கிறார்கள்.
அதுபோல பொருளாதார வசதி குறைந்த மக்களிடையே பெரிய அக்கா சின்ன அக்கா போன்றவர்களும் எதிர்காலம் பற்றிய ஏக்கங்களுடன் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
செந்தில் போன்ற இளைஞர்களை இந்த தலைமுறையிலும் சந்திக்க முடியும். 70 களில் வாழ்ந்த இளைஞர்கள் மட்டுமின்றி கிராமத்தில் வாழ்கின்ற இன்றைய இளம் தலைமுறை இளைஞர்கள் கூட செந்திலை தம்மோடு பொருத்திப் பார்க்க முடியும்.//
என தாமரைச் செல்வி கூறியிருக்கிறார். அது மிகவும் உண்மையான வார்த்தைகள்.
பகுதி 3
போருக்கு முன்னதான இயல்பு வாழ்வியல் தடத்தில் இந்த நாவல் எழுதப்பட்டு உள்ளது. தந்தையை இழந்த குடும்பம் . தாய் ஐந்து பிள்ளைகள். பொறுப்பு வாய்ந்தவராகக் கருதப்படும் மூத்த மகன். அடுத்து திருமணத்தை எதிர்பார்த்து மனதிற்குள் ஏங்கியிருக்கும் இரு பெண்கள். பதின்ம வயதின் துடிப்புகளும் , குறும்புகளும் , ஆசைக் கனவுகளுமாக படிப்பில் அக்கறையில்லாத ஒரு தம்பி. அவனுக்கு அடுத்து துடுக்குத்தனத்தோடு SSC படிக்கும்ஒரு பதின்மத்துத் தங்கை. இவர்களது வாழ்வாதாரம் வயலும் ஒரு பெண்ணின் தையல் வருமானமும்.
மாபெரும் திருப்பங்களோ அல்லது மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்களோ இல்லாத வாழ்க்கை முறை நமது மனதோடு ஒன்றிப் போகிறது. மிக உத்தமமான கதாபாத்திரங்களோ மிகக் கெட்டவர்களோ இக்கதையில் இல்லை. சுயநலமும் குடும்பநலனும் பொதுநலனும் விகிதாசாரத்தில் வித்தியாசப்படும் குணநலன்கள் கொண்ட கதைமாந்தர்கள் . தத்தமது தனித்துவமான உணர்வுகளுடன் வாழுபவர்கள்.
தாமரைச்செல்வியின் மிக இயல்பான எழுத்து நடையினால் அந்தக் கதாபாத்தாரங்களுடன் நாம் வாழ முடிகிறது.
இங்கு முக்கியம் பெறும் கருத்து சுமைகள் என்ற நாவலின் குறியீட்டுப் பெயர் தரும் உணர்வுகள். இன்றும் அன்றும் மாறாதவைதான் இந்தக் குடும்பச் சுமைகள். இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் வாழ்வில் ஒரு சுமையை விரும்பியோ விரும்பாமலோ சுமக்கின்றனர்.
குடும்பம், பொருளாதாரம், சமூகம் சார்ந்து பெண்களின் திருமணம் , கலாசாரம் , பண்பாடு , மானுடத்தின் இயல்பான ஆசைகள் , கல்வி , உடை , தொழில் , எதிர்கால அச்சம் என பல்வேறு எண்ணச் சுமைகள் இங்கு பேசப்படுகின்றன.
குடும்பத்துக்கு குடும்பம் இவை வேறுபடும். பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தமது பாலியத்து ஆசைகளை ஒதுக்கி வைக்க வேண்டிய சூழ்நிலை. இதனால் பலருக்கு வாலிபம் பொறுப்புகளால் நிறைந்து விரக்தி தோன்றுகிறது.
இக்கதையின் முதன்மைக் கதை நாயகன் செந்தில் அவ்வாறான விரக்தி மனநிலை கொண்டவன். அத்துடன் பதின்ம வயதுடைய அவன் குடும்பத்து பொறுப்புகளை அறியாது விளையாட்டுத்தனமாக நடக்கிறான் என்பது குடும்பத்தவர் அனைவரினதும் குற்றச் சாட்டு.
அவனது சிறிய தங்கையால் கூட குத்திக் காட்டப்படும் நிலை. அதனால் தாழ்வு மனப்பான்மையுடன் குடும்பத்தில் ஒதுக்கப்பட்டவனாக வாழும் அந்த இளைஞன் மீது வெறுப்பை விட அனுதாபமே மிகவும் மேலோங்குகிறது. அவனது பதின்மத்தின் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்று மனம் ஆற்றாமை கொள்கிறது.
ஆனால் அவனும் குடுப்பப் பொறுப்பை விளங்கியவன்தான். தமையன் கதிரேசனுடன் வயலில் பாடுபடுபவன்தான்.
எனினும் பெல்பொட்டம் , இந்திய சாரம், இங்கிலிஷ் அடல்ஸ் ஒன்லி படம் , காதல் சில குறும்புத்தனங்கள் என அன்றைய சராசரி இளைஞர்களின் ஆசைகள்தான் அவனது மனதில்.
அவன் இளைஞருக்குரிய விளையாட்டுப் புத்தியுடன் செய்த ஒரு காரியம் தமக்கைக்கு வந்த திருமண சம்பந்தத்தை குலைக்கும் போது மிகப் பெரும் குற்ற உணர்வுக்கு ஆளாகிறான். அது போலவே அறுவடை செய்த நெல் முற்றாக எரிந்து சாம்பலாகும் சந்தர்ப்பத்திலும் , அவன்செய்யாத செயல்களுக்காக சந்தர்ப்பவசத்தால் குற்றவாளியாகிறான்.
அதே நேரம் சாதாரண தரப் பரீட்சையிலும் மூன்றாம் தரமாக எடுத்தும் சித்தியடையவில்லை. தங்கையும் அவனோடு ஒத்தவர்களும் சித்தி பெறுகின்றனர்.
அவமானமும் குற்ற உணர்வும் பழிச் சொற்களும் தாங்காமல் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை. ஆனால் அதுவே அவனது வாழ்வில் திருப்பத்தையும் வசந்தங்களையும் கொண்டு வருகிறது.
அவனது அண்ணன் கதிரேசன் குடும்பத்தவரால் பொறுப்பு வாய்ந்த தலைமகனாகக் கருதப்படுபவன். ஆனால் கதையின் திருப்பத்தை எழுத்தாளர் அங்கேதான் ஒளித்து வைத்திருக்கிறார்.
செந்திலினதும் அவனது அண்ணன் கதிரேசனினதும் குடும்பம் சார்ந்த பொறுப்புக் கூறல்கள் எவ்வாறு என்பது மிகுதிக் கதை.
ஒவ்வொருவரின் உள்ளக் கிடக்கைகள் எப்படியானது என்பதை அவர்களது வெளித் தோற்றம் மற்றும் மேலோட்டமான செயற்பாடுகள் வார்த்தைகளை மட்டுமே வைத்து எடைபோட முடியாது என்னும் உண்மையைக் கதை கூறுகிறது.
இந்த இரு இளைஞர்களுக்கும் காதல் உண்டு. அக் காதலிகளின் எதிர்பார்ப்பும் இயல்புகளும் குடும்பப் பண்புகளும் கதைக்கு முக்கிய திருப்பத்தைத் தருகின்றன.
காதல் என சொல்லப்படுவது எல்லாம் காதலும் அல்ல. அது மறைமுகமாக சில பொருளாதார எதிர்பார்ப்புகளையும் பொய்மைகளையும் கொண்டது என்பது கதிரேசனின் காதல். அவன் நல்லவனாக வேஷம் போடும் சுயநலம் மிகுந்தவன். ஆனால் குடும்பத்தவர் அவனை நம்புகின்றனர்.
ஆனால் மனதால் ஓரளவு அப்பாவியான செந்திலின் காதலோ உண்மையானதும் காலத்தால் நிலைப்பதுமாகும். அது மட்டுமன்றி நல்லவளான அவனது காதலி அவனைப் பொறுப்புள்ளவனாக மாற்றும் தன்மை கொண்ட தூய்மையான காதல். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே நாவலின் முடிவும் அமைந்துள்ளது.
பகுதி 4
சுமைகள் நாவல் அன்றும் இன்றும் மனதில் என்னென்ன மாறுபட்ட உணர்வுகளைத் தருகின்றது என்பதும் சுவாரசியமானது.
1 ஆண்களின் மேலான குடும்பத்தவரின் எதிர்பார்ப்புகள்
குடும்பத்து தலைமகன் அல்லது அடுத்து வரும் ஆண்மகவுகள் , தந்தை இல்லாத போது அல்லது தந்தையின் இயலாமையின் போது , குடும்ப பாரத்தை ஏற்பதற்கான சமூக சம்பிரதாய நிர்ப்பந்தம் அக்காலத்தில் மிக அதிகம். குடும்பக் கட்டுப்பாடு இன்றி , அதிக குழந்தைகளைப் பெற்ற அக்காலம் பல ஆண்களின் இளமைப் பருவ ஆசைக் கனவுகள் பலவற்றை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைக்குத் தள்ளி விட்டன . ஏழ்மை நிலை என்பதும் மேலதிக சுமையாகவே இங்கு இருக்கிறது.
பதின்மத்தின் இயல்பான ஆசைகளில் மிகச் சாதாரணமானவற்றைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத , செந்தில் என்ற பதின்ம இளைஞனின் நிலையை புரிந்து கொள்ள முயலும் யாரும் அக் குடும்பத்தில் இல்லை. யதார்த்தத்தினைப் புரிந்து கொள்ளும் வயதும் அவனுக்கு இல்லை. குடும்பத்தினரால் அவன் ஒதுக்கப்படும் நிலையை ஆழமாகப் பதிவு செய்கிறது படைப்பாளரின் எழுத்தின் வலிமை. அவனது வயதிற்குரிய மனப் போராட்டங்களும் உணர்வியல் சிக்கல்களும் மிக நுட்பமாகக் கூறுப்பட்டுள்ளன .
ஒப்பீட்டளவில் இன்றைய இளைஞர்கள் தமது குடும்பங்களில் சற்று மேலான நிலையில் கையாளப்படுகின்றனர். காலமாற்றமும் கல்வியும் பெற்றோருக்கு அந்த மனநிலையைப் பெற்றுத் தந்திருக்கிறன. அத்துடன் சமூக ஊடகங்களின் வாயிலாகவும் இந்தப் பதின்ம வயது மேலதிக கவனத்துடன் கையாளப்பட வேண்டியது என்ற புரிதலைக் குடும்பத்தவர் கொண்டிருக்கின்றனர் என்பது சற்று முன்னேற்றமான விடயம். இன்றைய பதின்ம வயதினர் பெற்றோருக்குப் பயப்படுவதை விட , பெற்றோர்தான் அவர்களுக்குப் பயந்து வாழ வேண்டி உள்ளது என்பது காலமாற்றத்தின் விநோதம்.
பெண்களின் கல்வி இடைநிறுத்தம் காணும் அன்றைய நாட்களில் , குடும்பத்தின் ஆண்வரிசுகளே பெண்களின் திருமணப் பொறுப்பின் சுமையை முழுதாக ஏற்க வேண்டி இருந்தது. இன்றும் அது ஓரளவு இருந்தாலும் , பெண்களின் கல்வி முன்னேற்றம் தொழில் வருமானம் காதல் மணம் சமத்துவப் போக்கு என்பனவற்றால் குடும்பத்து ஆண்களுக்கான சில இடர்பாடுகள் குறைத்துள்ளன .
2 பெண்களின் சமூகநிலை
பெண்களின் கல்வி அவர்கள் விரும்பும் காலம் வரை தொடர முடியாத சமூகக் கட்டுப்பாடுகளும் பண்பாட்டு விலங்குகளும் ஓரளவு இறுக்கமாக இருந்த காலம் அன்று. பெண்ணின் திருமண வயது சிறிது தாண்டும் போது உருவாகும் சமூக மதிப்பீடுகள மற்றும் அவளது சிறு நடத்தைக் குழப்பங்கள் அல்லது சிறு காதல் அனுபவங்கள் மட்டுமல்ல , பிறர் மூலம் அவளுக்கு நடக்கும் துரதிஷ்டமான சம்பவங்களுக்கும் அவளே பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம்.. இவை அவளின் திருமணத்திற்கு தடையாகும் காலகட்டம் அது.
குடும்பத்தில் பெண்குழந்தைகள் மேலான தமது பொறுப்பில் இருந்து விடுபடுவதற்காகவே , மனச் சம்மதமில்லாத திருமணத்திற்கு பெண்கள் தலையாட்டுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட காலமாகவும் அது ஓரளவு இருந்தது.
அத்துடன் முள்ளில் சேலை பட்டாலென்ன சேலையில் முள் பட்டாலென்ன பாதிக்கப்படுவது சேலைதான் என்ற நிலையும் இன்று ஓரளவு மாற்றம் கண்டுள்ளது. இக்கதையில் வரும் பெண்பாத்திரங்களில் சிலரது வாழ்வுச் சிக்கல் அங்கு இருக்கிறது
பெண்மனதின் ஆழம் என்பதும் உறுதி , பொறுப்புக் கூறல் என்பதும் தந்திரமான நடவடிக்கைகளும் இக்கதையில் ஐந்து இளம் பெண்களினூடாகக் கட்டமைக்கப்பட்டு, காட்டப்பட்டு உள்ளது.
அதில் இரு பெண்களாக செந்திலின் அக்காமார் . மற்ற இருவர் அண்ணன் கதிரேசன் மற்றும் தம்பி செந்திலின் காதலிகள். அடுத்து செந்தில் வீட்டை விட்டுச் சென்று வேலை செய்யும் இடத்தில் , முருகேசு என்ற பெரியவரின் அயல் வீட்டுப் பெண் பெண் சீதா .
செந்திலின் இரு அக்காமார்கள் முக்கியமானவர்கள். திருமண வயதில் முதிர்ந்தவராக தன் உள்ளக் கிடக்கைகளை வெளிக்காட்டாதவராக , அடுப்படியே கதியென்று கிடக்கும் மூத்த அக்கா. தனது தவறில்லாமலே திருமணம் குழம்பி அடுத்து வரும் திருமணமும் குழப்புவதற்கும் அதுவே காரணமாகி , மனதில் வெறுமையைச் சுமந்து நின்றாலும் இறுதியில் பொறுப்பற்ற தம்பி என நினைக்கப்பட்டவனால் அவளுக்கு அழகியதோர் வாழ்வு கிடைக்கிறது.
மூத்தவள் திருமணம் அமைந்தால் தான் தனக்கும் விடிவு வரும் என மனச்சுமையுடனும் தையல் வேலைச் சுமையுடனும் வாழும் இளைய அக்கா. தன் தையல் வேலையினால் குடும்பத்தின் பொருளாதார சுமைகளைச் சுமக்கிறாள். ஆனால் அவளே குடும்பச் செலவுகளில் பெருமளவைத் தாங்குகிறாள் என்பதை யாரும் அறியவில்லை. தந்திரக்காரனான மூத்தமகனே சுமப்பதான பிரமை வாசகருக்கும் ஏற்படுகிறது.
3 கல்வி திருமணத்தில் வகிக்கும் பங்கு
செந்திலின் காதலி தீபா அவனை விட தான் அதிகம் படித்தவளாக இருக்கக் கூடாது என்பதால் சாதாரண தரத்துடன் கல்வியை நிறுத்துகிறாள். செந்திலின் நண்பன் செல்வராசனின் காதல் சுதா என்ற பெண்ணினால் நிராகரிக்கப்படுகிறது. கல்வித் தராதரக் குறைபாடு முக்கிய காரணம்.
இன்றும் இந்நிலை உண்டு. எனினும் கல்வி , பணம் சம்பாதித்தல் வெவ்வேறாக நோக்கப்பட்டு யதார்த்தம் உணரப்படுகிறது. பல சமயங்களில் பெண் அதிகம் படித்தவளாக உழைப்பவளாக இருக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு .எனினும் நாவலானது கல்வி பொறுப்புணர்வு என்பவற்றின் அவசியத்தை தெளிவாகக் கூறி நிற்கிறது.
4 தவறுணர்ந்த மானுட மனமும் அதன் மாற்றங்களும்
கதையில் இடைக் கதாபாத்திரங்களாக செந்தில் தலைமறைவான போது உதவும் பெரியவரும் அவருடன் வேலையாளாக தொழில் புரியும் பாலன் என்ற ஆணும் அயல் வீட்டுப் பெண் சீதாவும் இருக்கிறார்கள்.
சீதா என்னும் பெண்ணை விரும்பிய பாலனும் , மூத்த தமக்கையை முதலில் பெண்பார்க்க வந்து மறுத்த ராமநாதன் எனும் பையனும் பின்னாளில் மனமாற்றம் பெறுவது பெறுமதியான மனிதப்பண்புகளை சமூகத்திற்குத் தருகிறது.
இங்கு ஒரு பதின்ம இளைஞனின் குடும்பம் சார்ந்த வேண்டுகோளும், ஆண் மனம் சார்பாக இரண்டு வாக்குமூலங்களும் மனதைத் தொடும் வண்ணம் அமைந்துள்ளன.
கதைநாயகன் செந்திலின் கூற்று
//பொறுப்பு பொறுப்பு என்று வாய் கிழிய சொல்லிக் கொண்டிருந்த அண்ணன் இந்த குடும்பத்துக்காக ஒன்றுமே செய்யேல்ல. நான் சொல்லிக் கொண்டிருக்கேல்லை. செய்வன். என்னை நம்புங்கோ போதும்//
பதின்ம இளைஞர்களை வீட்டார் நம்புவதில்லை. அவர்கள் பொறுப்பற்றவர்கள் என குத்திக் காட்டுதல் அவமானப்படுத்துதல் இன்றும் பல குடும்பங்களில் உண்டு. அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க பதின்மத்தை நாமும் நம்ப வேண்டும் என்ற சிந்தனையை இவ்வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன.
அடுத்து பாலன் என்ற கதாபாத்திரத்தின் கூற்று
வாழ்க்கையை திருமணத்தை விளையாட்டாகக் கருதும் பாலன் பக்கத்து வீட்டுப் பெண் சீதாவை விரும்பியது போல நடந்து கைவிடுகிறான். பெண் தற்கொலைக்கு முயல்கிறாள்.
பாலனின் மனமாற்றத்திற்கும் அப்பெண்ணை ஏற்றுக் கொள்வதற்கும் செந்திலின் செய்கைகள் காரணமாகின்றன. அங்கு பாலன் கூறுவதாக ஒரு வசனம் .
//எனக்கு வாற மனைவி எப்படிப் புனிதமாயிருக்க வேணும் என்று நான் நினைக்கிறேனோ அப்படித்தானே எனக்கு வாற மனைவியும் தன் கணவன் புனிதமாயிருக்க வேணும் என்று நினைப்பாள். //
இன்றும் மாறாத ஒரு ஆணிய மனநிலை இங்கு பேசப்படுகிறது. இப்போதும் கூட பெண்தான் மனதாலும் உடலாலும் புனிதம் பேணவேண்டும் என்ற மனநிலை பெரும்பாலான ஆண்களிடையே இருக்கிறது. அது மாறவேண்டும். ஆணுக்கும் தூய்மையான மனதும் உடலும் வேண்டும் என்பதனை பாலனின் வாயிலாக எழுத்தாளர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.
அடுத்து பெரியக்காவை முதலில் மறுத்த இராமநாதன் செந்திலிடம் கூறுவதாக அமைந்த கூற்று ஒன்று.
//ஒரு பொம்பிளையை வீடு வரைக்கும் போய் பாத்துட்டு பிறகு கல்யாணத்தையே குழப்புவது எவ்வளவு பாவம் என்று எனக்கு தெரியும் . உன் மீதுள்ள கோபத்தால் அன்றைக்கு அப்படி செய்துவிட்டன். இப்ப நினைக்க மனதுக்கு வேதனையாய் இருக்குது. என் மனமும் குழம்பி விட்டது . அதனால உன் அக்காவை நானே திருமணம் செய்கிறேன் என்று கூறுவது.//
திருமணம் என வரும்போது பெண்ணில் பழிசுமத்தல் இன்றும் ஓரளவு தொடர்கிறது. அதுவும் மாறவேண்டும்.
இந்த இடத்தில் ஐம்பது வருடம் முந்தைய பெண்மனது எவ்வாறு இருந்தது என்ற ஒப்பீடு முக்கியமானது.
ஞானபீட பரிசு பெற்ற அகிலனின் 'சித்திரப்பாவை' நாவலில் ஒரு காட்சி
மாணிக்கம் எனும் அயோக்கியன் தன்னை முத்தமிட்டு விட்டான் என்ற ஒரு காரணத்திற்காக , தான் விரும்பும் காதலனான ஓவியனை விடுத்து மாணிக்கத்தை மணக்கிறாள் ஆனந்தி எனும் பெண். இது கிட்டத்தட்ட 1968 - 70 களில் எழுதப்பட்ட கதை. கற்பு என்ற மனநிலை அன்றைய இளம் பெண்களின் மனதில் மிக ஆழமாகப் பதிந்திருந்த காலம் ஒன்று இருந்தது.
அயோக்கியனைக் காதலித்தாலும் காதல் என்பது ஒரு தரம் தான். உடல் களங்கம் போலவே மனதும் களங்கப்பட்டு விடும். இப்படியாகப் பல. இப்போதைய இளையவர்களுக்கு இவை நகைச்சுவையாகத் தோன்றலாம்.
இன்றும் அந்தக் 'களங்க' மனநிலை எமது சமூகப் பெண்களிடையே ஓரளவு தொடர்ந்தாலும் பெண்கல்வி , வேலை வாய்ப்புகள், மணவாழ்வினைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் என்பன பெண்மனதினை வெகுதூரம் மாற்றி விட்டன. ஈர்ப்பு காதல் , கெமிஸ்றி சரியில்லா விட்டால் அடுத்தடுத்த காதல்கள் , மனம் பொருந்தாவிட்டால் அடுத்தடுத்த திருமணம் . இதைப்பற்றி ஆண் பெண் இருவரும் முன்னைய காலத்தினைப் போல பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இயல்பாகக் கடந்து போகும் நிலை. இவையெல்லாம் சாதாரண மானுட உணர்வுகள் என்பதை ஏற்றுக் கொள்வது இன்றைய தலைமுறையின் போக்கு.
நிறைவாக......
தொழில்நுட்பம் பயண வசதிகள் தொலைத்தொடர்பாடல் விவசாயம் என்பன மிக வளர்ச்சியடைந்த காலகட்டம் இது. ஆனால் சுமைகள் நாவலோ , இயற்கையின் அழகும் உடல் உழைப்பை நம்பிய விவசாயமும் எளிமையான பயணங்களும் இதமான கடிதங்களும் எனக் கதை கூறும் ரம்மியமான போக்கில் அமைந்தது . இன்றைய பல படைப்புகள் நகரத்தின் பேரிரைச்சல் போன்றதொரு மனநிலையைத் தரும்போது , சுமைகள் நாவல் செழிப்பான வயல்வெளியில் வீசும் தென்றலாக மனதினை வருடிச் செல்லக் கூடியது.
இவ்வாறாக பல சிந்தனைகளையும் ஒப்பீடுகளையும் தோற்றுவித்த நாவல் நல்லதோர் முடிவுடன் நிறைவுக்கு வருகிறது.
இறுதியில் மிகப் பொறுப்புள்ளவனாக குடும்பத்தவரால் ஏற்றுக் கொள்ளப்படும் செந்தில் , தன் குடும்பத்தின் பாசச் சுமைகளையும் காதலின் இன்பச்சுமைகளையும் மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறான்.
காலத்தின் சுவடுகளை மட்டுமல்ல , நிறைவான நல்ல மனநிலைக்கு அவசியமான நல்ல சமூகக் கருத்துகளையும் தனக்குள்ளே தாங்கியபடி இன்றைய வாசிப்பிற்காக வந்திருக்கும் சுமைகள் நாவல், மனதினை இலேசாக்கும் ரசனைக்குரிய நூல் என்பதில் ஐயமில்லை.
( 18/9/2026 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற இலக்கியக் களம் நிகழ்வில் ஆற்றப்பட்ட உரை)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.










