
மாற்றம்:
“முதல் மரியாதை படப்பிடிப்பை மைசூரில் நிகழ்த்தினேன். மூன்று நதிகளும் சங்கமிக்கும் அந்த இடம்… அந்த சூழல்… செடி, மரம், கொடி, மண், ஆகாயம் - அனைத்தையுமே நான் மனம்விட்டு காதலித்தேன்…இது போலத்தான், நடிகர் திலகம் சிவாஜியும். இறுதி நாள்… நாங்கள் மூட்டை முடிச்சுடன் கிளம்பிக் கொண்டிருக்கின்றோம்… சிவாஜி கணேசன் அவர்கள் முன்னாடியே சென்று விடுவதாகவும்,இறுதி படப்பிடிப்பை நான் மற்றவர்களுடன் இருந்து, முடித்து, இரண்டொரு நாட்களில் பின்னாடி வந்து சேர்ந்து விடுவதாகவும் ஏற்பாடு… சிவாஜி கணேசன் இறுதியாக வெளியே வந்த போது…அவரது கண்கள் சிவந்து கலங்கி இருந்தன… அண்ணே… எதுக்கு… இது என்றேன்… தெரியல ராசா… இங்க உள்ள சூழல என்னால விட்டு பிரிய முடியாம இருக்கு… இங்குள்ள மரம்
செடி, கொடி, அத்தனையும் என்னோட பேசுற மாதிரி இருக்கு… அவரது நா தழுதழுத்தது… இவன் கலைஞன், மகத்தான கலைஞன் என தீர்மானித்துக் கொண்டேன்”.
இப்படித்தான் - தான் சந்திக்கும் அனைத்து மனிதர்களிடையேயும், அவர்களின் பங்களிப்புகளை,சரியாக அடையாளம் கண்டுபிடித்து வரவேற்கும் மனிதர்களில் பாரதிராஜாவும் ஒருவரானார். ஒருவேளை சிவாஜி சம்பந்தமான இவரது கூற்று, ஓர் மிகை கூற்றாகக் கூட இருக்கலாம்… ஆனால் விடயம்… பொதுவில், தங்களின் வெற்றிகளை, இவ்வகை மனிதர்கள், தங்களில் அடையாளப்படுத்திக் கொள்வதை விட, பிற மனிதர்களில் அவற்றை ஏற்றி விடுவதை, தமது மைய புள்ளியாகக் கொண்டுள்ளார்கள். கார்க்கி கூறுவான்: “பாருங்கள் நண்பர்களே… எத்தனை மகா கவிகளை, ‘நான்’ என்ற இந்த பிலிஸ்டைன் உணர்வு சிதைத்தழித்து விட்டது” என. உண்மைத்தான். பெரிய மனிதர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வழியில் இந்த அதால பாதாளத்தை ஏதோ ஒரு வகையில் கடக்கவே செய்கின்றனர். வெற்றியும் கொள்கின்றனர். இது, அவர்களின் சுவாசத்தை போன்றது -அவர்கள் இந்த ஆகாசத்தை மனம் விட்டு காதலிப்பதை போன்றது.
பாரதிராஜாவை பொறுத்தவரை, தனது வெற்றியை, இப்படியாய் பிறரிடம் தந்து விடுவதில் மிகுந்த சமர்த்தகராக விளங்கினார் எனலாம். எனது திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமே பாக்கியராஜாவின் திரைப்பட வசனம்தான் என நா கூசாமல் சொல்லி விடுவார் மனிதர். “அவனைப் போல திரைகதை வசனம் எழுத யாருக்கு வரும்…” என்பார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் “எனது திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமே இளையராஜாவின் இசைத்தான்” “என் படங்களுக்கு, அவன் ஒரு புது மரியாதையை, புது பரிமாணத்தை ஏற்படுத்தினான்…” என்பார்.
இவற்றை எல்லாம் வெறும் வார்த்தைகள் என்று கொள்வதற்கில்லை. அவரது மனதில் இருந்து, மனதோடு ஊறி வெளிவரும் பண்பிது. இளையராஜாவின் வார்த்தைகளில் கூறுவோமென்றால்: “முதல் மரியாதை படம் எனக்கு மொத்தமாய் பிடித்ததாய் இருக்கவில்லை… அதை வெளிப்படையாக பாரதிராஜாவிடமே, நான் கூறி இருந்;தேன்…. இருந்தும் படத்திற்கு இசையமைத்தேன்… இறுதி காட்சி… நான் அமைத்திருந்த இசையை போட்டுப் பார்க்க அவனை அன்று அழைத்திருந்தேன்… பார்த்தான்… பின், ஒன்றுமே பேசாது என் கைகளை கட்டிப் பிடித்தவாறே கண்ணீர் உகுத்தான்… பிடிக்காமலேயே இப்படி இசை போட்டிருக்கியே என்று சொல்லி அழுதான் அவன்..”. நடித்து வேறு காட்டினார் மனிதர்.

இவை அனைத்தும், பாரதிராஜா எனும் மனிதனை அடையாளப்படுத்தத்தான் செய்கிறது… தமிழ் திரைப்பட உலகை எடுத்துக் கொண்டால், இது போல உயர்ந்து நின்ற இன்னும் சில மனிதர்களில் எம்.எஸ்.வியும் ஒருவர் எனலாம். தனது வெற்றியை, தனதாக முழங்க தெரியாத “அப்பாவி” இவர். இசை வல்லுனர்களில், பாடகர்களில், டைரக்டர்களில், நடிக-நடிகைகளில் தனது வெற்றியை அடையாளம் காண்பவர் இவர். இவை அனைத்தும் அவரது நடிப்பில்லை – ஒரு ஆளுமையின் வெளிப்பாடு எனலாம். கார்க்கி, லெனினை, இவ்வகையில்தான் ‘குழந்தை’ என வர்ணித்தாரோ தெரியவில்லை.
2
பாரதிராஜா ஒருமுறை சற்றே வித்தியாசப்பட்டு கூற நேர்ந்தது: “எனது வெற்றிக்கு காரணமே, வெகுசனங்கள் தான்… எனது முதல் படத்தை, நான் போட்டு காட்டிய போது, தமது உதட்டை பிதுக்கி கொண்டவர்கள் அநேகர்…”.
எனது, “பதினாறு வயதினிலே… நன்றாக ஓடும் என அந்த மனிதர்கள் அபிப்பிராயப்பட்டார்கள் இல்லை. ஆனால் வெகுஜனங்களோ அதனை ஒட்டுமொத்தமாக ஆமோதித்து விட்டனர்… அந்த படத்தில் தான், நான், முதன் முதலில் திரைப்படத்தை, ஸ்டூடியோவில் இருந்து இழுத்தெடுத்து, கிராமங்களின் முன், கொண்டு வந்து நிறுத்தியிருந்தேன். மொத்த செலவே ஐந்து லட்சம்தான்… ஆனால் வெகுசனங்கள் அவ் எளிமையைத்தான் வரவேற்றார்கள்… எனது இறுதி கணிப்பில், அவர்களே, அந்த மக்களே, ஒரு படத்தை இறுதியில் வெற்றி பெற செய்கின்றார்கள்… அவர்களது நாடி துடிப்போடு, ரசனையோடு ஓடுபவன் நான்… எனவேத்தான், புது புது முகங்களை அறிமுகப்படுத்துவதில், நான் என்றும் பின் தங்கி இருக்கவில்லை… அதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற அசராத நம்பிக்கை எனக்கு… அதனை தெரிந்தே என் படங்களை நான் எடுத்தேன்…”
3
பாக்கியராஜ் பொறுத்த சிவாஜியின் முறைபாடு: “எங்க வீட்டு, பொம்பளைங்கள நீ ரொம்பத்தான் கெடுத்து வச்சிருக்க…”
“இல்லையே… நான்…”
“முதல்நாள் படப்பிடிப்பு முடிந்து வந்தேன்… வீடு அப்படி, அப்படியே விரித்துப் போட்டப்படி கிடக்கின்றது…. வேலையாட்களை அழைத்துக் கேட்டேன்… அம்மா எல்லோரும் படத்துக்கு போய்ட்டாங்க என கூறினான் அவன். யாருடைய படம் என்றேன்…. பாக்கியராஜ்னுடையது என்றார்கள் அவர்கள்…. நானே, குளித்து, சோறு போட்டு சாப்பிட்டேன்…. மறு நாளும் இதே கதை… மூன்றாம் நாள்… இனி வருவது வரட்டும் என்று நடு ஹாலில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு, வாசற்படியை பார்த்தவாறு, குந்தி இருந்து விட்டேன்…”.
“சரியாக மூன்று மணிக்கு, பூனைகளைப் போல் ஒருவர் பின் ஒருவராய் நுழைந்தனர்…”
“என்ன இப்படி எடுத்திருக்கின்றான்… முறைத்தவாறே அவர்கள் ஒவ்வொருவராய் வீட்டினுள் சென்று பதுங்கி கொண்டனர். தொடர்ச்சியாய், இவ்வகையில் முறைப்பவர்கள்தான், இப்படியான படத்தை, மூன்று நாள், அதே ரசனையோடு பார்த்திருக்கின்றார்கள்…”.
மேற்படி இரு சித்திரங்களும் தெரியத்தரும் பிரதான விடயம்: “மாற்றம்”. மக்களின் மனநிலையின் மாற்றம்.
மக்களிடை, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அனுபவத்தின் எதிரொலியாக, காலப்போக்கில், இது, வந்து சேர்வது. ஒன்று திரள்வது.
இமாற்றங்கள் இலகுவில் வந்து சேர்வதில்லை. ஒரு குறித்த காலம் அதற்கு தேவையுறுகிறது. எமது இலக்கியம் இதனை கிருத யுகம் என்றும் கலி யுகம் என்றும் பல்வேறு யுகங்கள் என்றும் விஸ்தரிக்க முயற்சி செய்துள்ளது. பல தசாப்த அனுபவங்களின், ஒட்டு மொத்த திரட்சி இது.
இப்படியான, “மாற்றங்கள்”தான், ஏதோ ஒரு பெயரில், அல்லது வழியில், மக்களால், அங்கீகரிக்கப்படுகின்றன. வந்து சேர்கின்றன. அல்லது அவை, அத்தகைய அங்கீகரிப்புகளுக்கூடாக, மக்களின் தேடுகையை பிரதிபலிக்கின்றன. ஆனால், இந்த போக்கு ஒரு அபாயத்தை உள்ளடக்கியே இருக்கின்றது. மக்களின் நாடித்துடிப்புகளை சரியாக கணிக்கும், வேறு பல “நலன்களும்” இம்மாற்றங்களை சரியாக கிரகித்து, இவற்றுக்கு எதிராய் செயல்படுவதும், பின் அவற்றை வெற்றி கொள்வதும் நடந்தேறவே செய்கின்றது. இது திட்டமிட்ட ஓர் செய்கையைப்போல் உருவாவதில்லை. வாழ்வோடு பரிணமிக்கின்றது. இதன் பாரதூரத்தன்மைகளை, காலம் ஒருவேளை மக்களுக்கு எடுத்துரைக்கலாம். ஆனால், இத்தகைய, படிப்பினை அவர்களுக்கு கிட்டும் போது, அது, சமயங்களில், காலம் கடந்ததாகி விடுகிறது. எனவேத்தான், “வேதம் புதிதை” அடுத்து, பின்,
“பாக்கியராஜ்” தோன்றுவதும் பின் பாரதிராஜா, பாக்கியராஜ் இருவருமே தங்களின் இறுதி நாட்களில் தோல்வியை தழுவுவதும், இவ் விளையாட்டின் விசித்திர விதிகளாகின்றன.
ஆனால், இம்மாற்றங்களை சரியாக பிரதிபலித்து, அதனை, மக்கள் சார்ந்த, தர்க்க நிலைக்கு உயர்த்தும் மனிதர்களும் காலத்தில் உருவாகாமல் இல்லை. இந்த ஒரு சிலரே, இதன் முக்கியத்துவத்தை, பாரதூரத்தன்மையை நன்கு உணர்ந்த மனிதர்களாவர். இம்மனிதர்களே, மனுகுலத்தின் முழு நலனையும், காலந்தோறும் எந்த ஒரு நன்மையற்றும் வாழ்வை இங்கே சுமப்பவர்களாகின்றனர். இவர்களாலேயே, எமது மனுகுலத்தில், பல்வேறு திருப்பு முனைகளும் நிகழ்தேறுகின்றன. பாரதி முதல் கார்ல் மார்க்ஸ் வரை இப்பாதையில் பயணித்த மானிடர்கள் அனந்தம். இப் பிரவாகத்தின் ஒரு துளியையே நாம் பாரதிராஜாவிலும் இனம் காண்கின்றோம் - குறைந்தபட்சம், ஒரு கட்டத்திலாவது – நிச்சயம், ஒரு சிறு துளியாய்.
மக்களின் வாய்ப்பாடல்களை பாரதிராஜா, ஒரு கட்டத்தில், மனம்விட்டு சுவாசித்ததின் எதிரொலியாக கூட இது இருக்கலாம். ஆனால், இது போன்ற வழிகளின் ஒட்டுமொத்த நிகழ்ச்சி நிரல்களே, மகாபாரதம்-ராமாயணம் போன்ற பெருங்காவியங்களில் சென்று முடிவடைவதாகவும் இருத்தலும் கூடும். இது ஒருபுறமாய் இருக்க, மறுபுறமாய் தோன்றக் கூடிய, இரண்டாவது விடயமும், இதே போன்ற முக்கிய ஒரு விடயம்தான். அதாவது, இம்மாற்றமானது, தகுந்த முறையில், முன்னெடுக்கப்பட முடியாத பட்சத்தில் அல்லது சரியான முறையில் திசைத்திருப்ப முடியாத விடத்து, சமயங்களில் இது மக்களின் நலன்களுக்கு எதிராக, செயற்படக் கூடியதுதான் என்ற படிப்பினை சம்பந்தமானது.
அதாவது, எழக்கூடிய இம்மாற்றத்தை, கால நகர்வில், தமக்கு ஏற்ற முறையில், கட்டமைத்து– சீரமைத்துவிட முயற்சிக்கும் வேறுவகைப்பட்ட சக்திகள் இங்கே அனந்தம். இவை, மக்கள் சக்திகள் அல்ல–ஆனாலும், ஆரம்பத்தில் அவை அது போன்று, தோற்றமளிப்பன. எனவேத்தான், பாரதிராஜாவை தொடர்ந்து, ஓர் பாக்கியராஜாவும் மேடையேற்றப்படுவது தற்செயல் அற்ற நிகழ்வாகின்றது. வேறு வார்த்தையில் கூறுவோமானால், பாரதிராஜாவை தொடர்ந்து, ஓர் பாக்கியராஜாவும் முன்னிறுத்தப்படுவது இங்கே தர்க்கப்பூர்வமாகின்றது. இதனால்தான், “எவன் மன்னித்தாலும், வரலாறு எம்மை மன்னிக்காது” என்று கூறிய அந்த மகா பெரியவனின், மகத்துவமான வரிகளும் இன்றும் எம்மிடை ஓங்கி ஒலிப்பதாயுள்ளது.
4
இப்படியாய், மாற்றங்கள், மனுகுலத்தில் வருவதும் போவதும், பின் அவை மழுங்கடிக்கப்படுவதும், இயற்கையாகவும் ஓர் வரலாற்று நிகழ்வாகவும் இருக்கின்றது. இருந்தும், இம்மாற்றங்களை, மக்கள் சார்பாக பாவிக்கக்கூடிய ஓர் மனிதன், பிரமித்தியூசின் வழி வருபவனாய் இருக்கின்றான். அவன், இம் மாற்றங்களை சரியாக இனங்கண்டு, கிரகித்து, சுருதி பிரித்து, ஓர் வரலாற்று நெம்புகோல் கொண்டு சமூகத்தை, மக்களுக்காய் புரட்டி தள்ள முற்படும் மனிதர்களில் ஒருவனாகின்றான். காலத்தால் உருவாகுபவன் இவன். ஆனால், இவ்வகை நெம்புகோல் மனிதர்களை உருவாக்குவது யார்? எவரது செயல் இங்கே? பாலம் கட்ட துணிந்த அணில்களின் செயல்களா இவை…?
இப்புள்ளியிலேயே, “தான் தூக்கில் தொங்கும் போது கூட, தான் தொங்கும் அதே கயிற்றை முதலாளித்துவம் விலைபேசி கொண்டிருக்கும்” என்ற கதையும் இங்கே பெருமளவில் சம்பந்தமுறுகிறது. இதனால்தான், ஒருவேளை, லெனின்-ஸ்டாலினுக்கு பிறகு ஒரு குருஷேவ் தோன்றுவதும், அதன் பின்னர் ஒரு யெல்ஸ்டின் தோன்றுவதும் ஈற்றில் புட்டின் தோன்றுவதும் வாதிக்கதக்கதாகின்றது. சில வேளைகளில், இலங்கை அரசியலில் ஜே.வி.பி அரசின், இன்றைய தோற்றத்தையும், இதனுடன் சம்பந்தப்படுத்தி பார்க்கலாம். இவை யாவும் ஏதோ ஒரு வகையில் தர்க்கம் சார்ந்ததே.
மறுபுறத்தில், “பதினாறு வயதினிலே” என்ற திரைப்படம், பிரதிபலித்த இவ்வகை மக்களின் மனநிலை, மாற்றமானது, நாளடைவில், தர்க்கரீதியில், வளர்ந்து ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘வேதம் புதிது” என பரிணமித்து, பின் ஈற்றில் வேறு பல்தரப்பட்ட சக்திகளின், பல்வேறு, சமரச முயற்சிகளினூடு, ஓர் தர்க்கரீதியில் மீண்டும் தர்க்கங்களுடனேயே நகர்ந்து, முற்றாக தன்னை மாற்றி அமைத்து, பின் இறுதியில் தோல்வியை தழுவிக் கொள்வதும் யதார்த்தமாகின்றது.
ஆனால், முன்பே கோடிட்டதுப் போல், இம் “மாற்றம்” பொறுத்த தகுந்த உள்ளுணர்வுடன் அல்லது பிரக்ஞையுடன் செயல்படும், உண்மை மக்கள் கலைஞன் என்பவனும் ஒரு கட்டத்தில், உருவாகவே செய்யலாம் - பாரதி போன்று! அவன் இம் மாற்றங்களை, அப்படியே தூக்கி நிறுத்துவதும் அதனை, அவன், தன் வாழ்வின் தலையாய விடயமாக நிலைநிறுத்திக் கொள்வதும், அவனது அரசியல் ஆகின்றது. இதுபோன்ற ஒரு துவக்கப் புள்ளியிலேயே, பாரதிராஜா என்னும் குறிப்பிடத்தக்க கலைஞனும், தனது பதினாறு வயதினிலே படத்தினூடு, நுழைந்து, மக்களின் தலையசைப்பையும் ஒரு சந்தர்ப்பத்தில் பெற்றவனாய் இங்கே இருக்கின்றான். இருந்தும், இம்மாற்றத்துடன் இவனால், எத்தனை தூரம் பயணிக்க கூடியதாக இருந்தது என்பது காலம் இன்று கருதும் வினாவாகின்றது.
பாரதிராஜா தோற்றுவித்த இறுதி படங்களின் தோல்வி, வரவிருக்கும் அவ் புதிய கலைஞனின் நல்வரவுக்கான வாழ்த்தொலியாகவும் இங்கே கட்டியங் கூறக் கூடும். ஆனால், அப்புதிய கலைஞன், அதே பாரதிராஜாவின் ஒரு கால கட்டத்து செயற்பாடுகளை மிக நுண்ணிப்பாக உள்வாங்க வேண்டியவனாகவே இருக்கவும் கூடும். சமூகத்தின் முரண்களை ஓர் ஆரம்ப கட்டத்தில், காண்பதும் பின் அவற்றை, மிகுந்த கலைநயத்துடன் உள்வாங்கியதும், பின் அவற்றை அதே கலை நயத்துடன் நேர்த்தி மிக்க முறையில் திரையில் ஏற்றுவதும், பாரதிராஜாவின் மட்டுப்படுத்தப்பட்ட, இயல்பானது. ஆனால், இதுவெல்லாம் ஓர் இலகுவான காரியமல்ல. மண்ணில் புரண்ட ஒரு கலைஞனின் வெளிப்பாடுகள் இவை, ஆகும்.
இத்தகைய படைப்புகளே, தமது உண்மை தாகத்தை ஓரளவில் நிவர்த்தி செய்து, தமக்கான ஓர் நீதியை வழங்கக்கூடியது என மக்கள் தீர்மானித்து கொள்கின்றனர். ஆனால், மக்களிடை காணப்படும் இவ் அடிப்படை மாற்றத்தை மெதுவாக உங்வாங்கும் வேறு சக்திகளும் – முன்பே கூறியப்படி - வேக வேகமாக செயல்படாமலும் இல்லை - இவர்கள், மக்களிடை சூல் கொள்ளும் இம்மாற்றத்தை, தமது இழுப்பிற்கு, ஏற்றாற் போல், திசைத்திருப்பிக் கொள்வதும் மொத்தத்தில், இயல்பானதே. ஆனால், இச்செயற்பாடுகள், செயற்கையாக அல்லது வித்தியாசமாக இங்கே முன்னெடுக்கப்படுவதாயில்லை. மெதுவாக, உறுத்தாத முறையில், நாசூக்காக – காந்தியின் வடிவில் அவை முன்னெடுக்கப்படுகின்றன. இருந்தும், தாமறியாது, மறுபுறத்தில் தமது தேடல்களை இடைவிடாது, தொடரும் மக்கள்சாரியினர், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில், இவ்வகை சித்தரிப்புகளை வெளியேற்றி விட தீர்மானிக்கின்றனர். இதனாலேயே, ஒரு கட்டத்தில்
பாரதிராஜாவை வெற்றி பெறச் செய்த அவர்கள், அவரது பாதைகள் தடம் மாறியதை பார்த்த போது, அவரை தூக்கி எறியவும் பின்நிற்கவில்லை. அதாவது, பதினாறு வயதினி லேயை அங்கீகரித்த, அதே கரங்கள்தாம், பிறிதொரு கட்டத்தில், பாரதிராஜாவின் இறுதி படங்களையும் தூக்கி எறிவது சகஜமாகின்றது. முன்னரே கூறியப்படி, இது திட்டமிட்ட ஒரு செய்கை அல்ல. பிரஞ்ஞையற்றும் இவ்வகை மாற்றங்கள் நடந்தேறலாம். இவ் இடைப்பட்ட காலத்திலேயே ஓர் புதிய கலைஞன் இங்கு தேவைப்படுகின்றான். ஆனால், அவன், பயணிக்கக் கூடிய பாதையின், முதல் தடை கல்லாக தென்படக் கூடியது பாரதிராஜாவின் அனுபவங்களே என்றால் அது மிகையாகாது. மனிதாபிமானமிக்க, கலை நேர்த்தி கொண்ட அந்த மக்கள் சார்பு தடைகல்லை அவன் சிபாரிசித்தே ஆக வேண்டிய ஓர் நிர்பந்தம் இருக்கிறது.
5
இப்படியாக, மாற்றங்களின் மூலகர்த்தாவாக மக்களே திகழ்கின்றனர் என்ற உண்மையானது ஒருபுறம் இருக்க, இம்மாற்றங்களை ஒரு உள்வாங்கும் கலைஞனை, வெற்றி பெற செய்வதும் இறுதியில் மக்களே ஆகின்றனர். ஆனால், முன்பே கூறியப்படி, ஓர் கலைஞன், இம்மாற்றத்தை பிரதிபலிப்பது அவ்வளவு இலகுவான செய்கை அல்ல, என்றாகிறது. மண்ணில் புரண்டு, மக்கள் அலைகளுடன் பயணித்த, பல்வேறு ரசானுபவங்களை தனக்குள் சுமந்த, போராட தெரிந்த ஒருவனுக்கே, இக் கலைஞானம், அத்துப்படியாக வாய்ப்பு இருக்கின்றது.
பாரதிராஜாவை பொறுத்தமட்டில், ஏழ்மையும் போராட்டமும் அவனுக்கு அந்நியமானதல்ல. போராடும் குணம் அவனது உடன் பிறப்பு. “முதல் மரியாதை” படப்பிடிப்பின் போது, சிவாஜியின் மகளாக நடித்த அருணா என்ற பாத்திரம் ஓர் சந்தர்ப்பத்தில், தான் சிவாஜி பெற்ற மகள் இல்லை என்று உணர்கின்றாள். கூறுவாள்: “கருவேல மரத்துக்குள் நிழலுண்டா அப்பா? உங்களை விட்டால் எனக்கு வேறு கதி உண்டா…?”.
ஆசிரியன், செல்வராஜா எழுதியுள்ள, இவ்வசனத்தில் இடையில் புகுவார் பாரதிராஜா. தான், பெற்ற மகள் இல்லை என சடுதியாய், சந்தர்ப்பவசத்தால், உணரும் ஒருத்தி, இப்படியாக உதாரண உவமேயங்களைக் கொண்டு பேசுவாளா? “அந்த கருவேல மரத்தின் உதாரணத்தை தூக்கி விடு”. சிவாஜி குறுக்கிட்டு: “இல்ல ராசா… அது அப்படியே இருக்கட்டும்… ஆசிரியனின் தொழிலில் தலையிடும் உரிமை எம்மிடம் இல்லை. எங்களது தொழில் நடித்தல்… உனது தொழில் டைரக்ட் செய்வது… இதுபோலவே, வசன கர்த்தாக்களின், தொழிலில் நாங்கள் தலையிட்டோமென்றால்… அது ஆகாது…”.
இறுதியில், பாரதிராஜா, தலையிடவே தீர்மானிக்கின்றார். அவ் வசனத்தை தூக்கி எறிந்து விடுகின்றார். யதார்த்தத்துடன் பயணிக்கும் ஓர் கலைஞனை மாத்திரம் இச்சம்பவம் எமக்கு காட்டுவதில்லை. ஆனால் அவனது விட்டுக்கொடுக்கா பண்பு – போராடும் குணம் - தான் மோதுவது ஓர் மிகப் பெரிய நடிகன் என்று உணர்ந்த போதும். இதே போன்று, பாரதிராஜா, தனது “வேதம் புதிது” என்ற படத்திற்காக, டில்லி சென்று அவர் போராட வேண்டிய நிலை எழுகின்றது.
அன்றைய துணை ஜனாதிபதி, வெங்கட்ராமன், இந்த படத்தை திரையிட அனுமதிக்க கூடாது, என்பதில் மிக உறுதியாக இருந்தார். “சாதீயத்தை மட்டும் இந்தப் படம் எதிர்க்கவில்லை… ஆனால், காஞ்சி பெரியவரையும், இப்படம் எதிர்க்கின்றது” என கூறுவார் அவர்.
“இந்த படத்தை திரையிடும் உரிமையை இந்த அரசு தராதவிடத்து, எனக்கு இங்கே தேவைப்படுவதெல்லாம், ஓர் தீக்குச்சியே” என அறிவித்தார் பாரதிராஜா.
“வேதம் புதிது” திரைப்பட, பட சுருள்களை, இம் மண்டபத்தில், இப்போதே கொழுத்தி விடுவேன். தமிழ்நாடு கொந்தளிக்கட்டும். நாடு இரண்டாய் பிளக்கட்டும். இதன் விளைவுகளை இந்த அரசே பொறுப்பேற்கட்டும்” என முழங்கினார் பாரதிராஜா.
ஈற்றில், “வேதம் புதிது” படத்தை திரையிடும் உரிமை, அவருக்கு, அன்று மாலையே வந்து சேர்ந்தது. இது போன்றே தான் செருப்பு திருடிய சம்பவத்தையும் விவரிப்பார் அவர்:
“எட்டாம் வகுப்பு வரை நான் செருப்பு போடாமலேயே இருந்தேன்…”
“வெகு தொலைவில் இருந்து, டயரை உருட்டி, செருப்பு தைப்பவனை அடைந்து, அதை அவன் ஊற வைத்து செருப்பு தைத்து கொடுத்தால், அது கடித்து, புண்ணாகி, எண்ணெய் போட்டு தேய்த்து, நொண்டி நொண்டி நடந்தாலும், நான் ஆகாயத்தில் பறந்தேன்… எனது கனவு கன்னி இனி செருப்புடன், நான் வருவதை பார்ப்பாள் என்று நம்பினேன்…”.
இனி வளர்ந்துவிட்ட இவ் இளைஞன் பின்வருமாறு கூறுவான்: “எனது புது செருப்பை திருடி விட்டார்கள்… ரயிலில், மேம்படுக்கையில் படுத்து யோசித்துக்
கொண்டிருந்தேன்… ரயில் கூரையில், ஃபேன் ஒன்று, கிறீச் கிறீச் என்று சுத்துகிறது. மெதுவாய் கீழே இறங்கி, சத்தம் போடாமல், மேசைக்கடியில் இருந்த, அந்த செருப்புகளில் ஒன்றில், முதலில் ஒரு காலை நுழைத்து இழுத்தெடுத்தேன்… பின் லாவகமாக அதை எனது மஞ்சள் நிற பைக்குள் திணித்துக் கொண்டேன்…”.
“அந்த காலங்களில், இறுதியாக, நான் ஒரு கணக்கெழுதும் உதவியாளனாக, வேலையில் அமர்ந்து கொண்டேன். ஆனால், எனது சிந்தனை முழுவதும் நாடகத்தில்தான்… வேலை பார்க்கும் இடத்தில், இந்த பாதிப்பால், கணக்கு வழக்குகளை தாறுமாறாக நான் எழுதி வைத்தேன். ஐநூறு வரும் இடத்தில், ஐயாயிரம் என்று கணக்கெழுதினேன். காரணம், எனது சிந்தனை முழுவதும் நான் நடிக்கும் நாடகத்திலேயே மூழ்கி கிடந்தது. நாடக யோசனை என்னை, அந்த நாட்களில், அப்படி ஆக்கிரமித்து இருந்தது. அழைத்தார்கள்: இந்த வேலை உனக்கு சரிபட்டு வராது என்றார்கள். விலகினேன்… அப்பாவுக்கு, ஆத்திரமான ஆத்திரம்…”.
“எனது தந்தையிடம் ஓர் துப்பாக்கி இருந்தது… அக்கம் பக்கம் ஏழெட்டு ஊர்களிலும், ஒவ்வொரு துப்பாக்கி. ஓர் நாற்பது பேராய், ஒன்று கூடி, கிளம்பி விடுவோம்… மான் வேட்டைக்கு… காலையில் புறப்பட்டால், மாலையாகி விடும்… காடுகளில் கடும் தாகத்துடன் அலைந்து திரிவோம்… ஒவ்வொருவர் முதுகுகளிலும், ஒரு சிறு மூட்டை, களி தொங்கும்… தண்ணீர் கிடைக்காது… பகல் உணவுக்கு தண்ணீரை தேடி அலைவோம்… ஒரு முறை ஒரு மானை வேட்டையாடியாகி விட்டது. கூறு போட்டுக் கொண்டிருந்தோம். எனது நண்பன் கண்ணைக் காட்டினான்…. ஈரலை மெதுவாக கடத்தி விட்டேன்… பின் நன்கு சுட்டு திண்றோம்… நன்றாய் இருந்தது… விசாரித்தார்கள், ஈரலை காணோமே என்று. அடியான அடி –அப்பாத்தான்…”.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.










