ஆட்ரி ஹெப்பேர்ன் , கிறகோரி பெக் நடிப்பில் ரோமன் ஹொலிடே!

ஆட்ரி ஹெப்பேர்ன் (Audrey Hepburn) புகழ்பெற்ற ஹாலிவூட் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர். பெல்ஜியத்தில் பிறந்தவர். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் இவரது குடும்பத்தினர் நெதர்லாந்தில் வாழ்ந்தபோது மிகவும் வறுமையில் வாடினர். அப்போது நாசிப்படையினர் அந்நாட்டை ஆக்ரமித்திருந்தனர். வறுமையில் வாடியபோது ஊட்டச்சத்துக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டார். சில சமயங்களில் துலிப் மலர்களின் கிழங்குகளை உண்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவரது ஆர்ம்பக்காலக் கனவு புகழ்பெற்ற பாலே நடினக் கலைஞராக உருவாக வேண்டுமென்பதுதான். ஆனால் இளமையில் ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்பட்ட பாதிப்பால் அவரால் அக்கனவை நிறைவேற்ற முடியவில்லை. மொடலிங் துறையில் புகுந்த இவரை ஹொலிவூட் இயக்குநர் வில்லியம் வைலர் (William Wyler) அடையாளங் கண்டு தனது ரோமன் ஹொலிடே (Roman Holiday, 1953) திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அதில் அவர் இளவரசி ஆன் ஆக நடித்தார். அப்பாத்திரம் ஒரு கற்பனைப்பாத்திரம். அக்காலத்தில் இங்கிலாந்தின் இளவரசி மார்கரெட்டின் வாழ்க்கையைத்தான் இத்திரைப்படமாக உருவாக்கினர் என்னும் குற்றச்சாட்டு எழுந்தபோது அதைத் தயாரிப்பாளர் மறுத்து , அத்திரைப்படம் ஒரு கற்பனைப்படைப்பு என்று கூற வேண்டி வந்தது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.

இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கம வருமாறு: இளவரசி ஆன் (இவர் எந்நாட்டு இளவரசி என்பது படத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று கருதுகின்றேன். அதனைப் பார்வையாளர்களின் ஊகங்களுக்கே விட்டு விடுகின்றார்கள்) ரோம் நகருக்குத் தன் விடுமுறையைக் கழிக்க வருகின்றார். தனது இளவரசிக்குரிய கடுமையான பொறுப்புகளாலும், ஓய்வு ஒழிச்சலற்ற வாழ்க்கை முறையினாலும் சலிப்புற்ற அவர் நரம்புத்தளர்ச்சி அடைகின்றார். சுதந்திரமாக வாழ விரும்பும் எண்ணத்துடன் தன்னிருப்பிடத்திலிருந்து தப்பி நகருக்குள் தனியாகப் பயணிக்கின்றார். நகரத்து பெஞ்ச் ஒன்றில் மயங்கிக் கிடக்கின்றார். அப்போது அவரை அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜோ பிராட்லி கண்டு தன் அறைக்குக் கூட்டிச் செல்கின்றார். அப்போது அவர்தான் இளவரசி ஆன் என்பது ஜோவுக்குத் தெரியாது. ஆனால் பின்னர் அறிந்து கொள்கின்றார்.

ஜோவின் பத்திரிகை நிறுவன முதலாளி இளவரசி ஆனுடன் நேர்காண்ல் கண்டு வெளியிட்டால் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டுகின்றார். அதன் விளைவாக ஜோவுடன் அந்நிறுவனப் புகைப்படக் கலைஞர் இர்விங்கும் கூடச் செல்கின்றார். அவர் ஆன் அறியாமல் தான் சிகரட் லைட்டரில் மறைத்து வைத்திருக்கும் கமரா மூலம் இளவரசி ஆன் சம்பந்தப்பட்ட காட்சிகளையெல்லாம் புகைப்படங்களாக எடுக்கின்றார். இளவரசி ஆன் தன் தலைமயிரைக் குட்டையாக வெட்டி, ஜோவுடன் வெஸ்பா ஸ்கூட்டரில் நகரைச் சுற்றி வருகின்றாள், இருவருக்குமிடையில் காதல் முகிழ்க்கின்றது.

இறுதியில் இளவரசி ஆனைத்தேடி அனுப்பப்படும் ஒற்றர்கள் வருகின்றார்கள். இளவரசி ஆனும் தன்னாலொருபோதும் தன் கடமைகளை விட்டுச் சுதந்திரமாகச் செயற்பட முடியாது என்பதை உணர்ந்து , தன் காதாலைத்துறந்து, தன் நாட்டுக்கே செல்ல முடிவெடுக்கின்றாள். அதற்கு முன் நடக்கும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அங்கு ஜோவும் , அவனது உதவியாளரான புகைப்படக்கலைஞனையும் கண்டு அதிர்ச்சி அடைகின்றாள். அதுவரை அவளுக்கு ஜோ ஒரு பத்திரிகையாளன் என்பது தெரியாது. ஆனால் ஜோவும் , இர்விங்கும் இளவரசி ஆன் பற்றிய இரகசியங்களை வெளியிடுவதில்லை என்று முடிவு எடுக்கின்றனர். இர்விங் தான் எடுத்த புகைப்படங்களையெல்லாம் உளளடக்கிய சிகரட் லைட்டரை இளவரசி ஆனுக்கே , நினைவுப்பரிசாகக் கொடுத்து விடுகின்றான்.

அப்பத்திரிகைச் சந்திப்பு முடிவுக்கு வர அனைவரும் வெளியேற ஜோ மட்டும் தனித்து நிற்கின்றான். திரைப்படமும் அத்துடன் முடிவுக்கு வருகின்றது. ஒரு நிறைவேறாத காதல் கதையாக படம் முடிவுறுகின்றது.

இத்திரைப்படத்தில் பத்திரிகையாளர் ஜோ பிராட்லியாக நடித்தவர் புகழ்பெற்ற ஹொலிவூட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான கிறகோரி பெக். இவர் ஐந்து தடவைகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர். To Kill A Mocking Bird திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர். எழுபதுகளில் வெளியான தி மெக்கனாஸ் கோல்ட் திரைப்படத்தில் இவர் நடித்திருக்கின்றார். நான் றீகலில் பார்த்த திரைப்படங்களில் அதுவுமொன்று.

ஆட்ரி ஹெப்போர்னை நினைத்தவுடன், கிறகோரி பெக்கை நினைத்தவுடன் எனக்கு அப்பாவின் நினைவுகள் வந்து விடும். அவருக்குப் பிடித்த நடிகை ஆட்ரி ஹெப்போர்ன். நடிகர்களில் கிறகோரி பெக்கும் ஒருவர். ஏனைய நடிகர்கள் சார்ள்டன் ஹெஸடன், ஹரி கூப்பர், ஷான் கானரி, அந்தனி குயீன்.

இத்திரைப்படத்தின் ஒரு கருவைத் தமிழில் ஏ.சி. திருலோகச்சந்தர் தான் இயக்கிய அன்பே வா திரைப்படத்தில் பாவித்திருக்கின்றார். அத்திரைப்படம் ஏ.வி.எம் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்த அன்பே வா. இளவர்சி போல் செல்வந்தரான எம்ஜிஆரும் அத்திரைப்படத்தில், தன் பொறுப்புகளின் சுமையிலிருந்து விலக, விடுமுறையைக் கழிக்க, களவாக சிம்லா செல்கின்றார். அந்த ஒரு விடயத்தை மட்டும் ஏ.சி.திருலோகச்சந்தர் எடுத்து , நுட்பமாக அன்பே வா திரைக்கதையைப் பின்னியிருக்கின்றார். அன்பே வா திரைப்படத்தின் பிரதான கதை Come September ஹொலிவூட் திரைப்படக் கதையை ஒட்டியது. அதில் நடித்திருப்பவர்கள் ரொக் ஹட்சன் & ஜீனா லொல்லோபிரிஜிடா.

என் முகநூற் பதிவொன்று: எவருக்காவது ஞாபகமிருக்கிறதா?

யாழ்ப்பாண நவீன சந்தைக்கு முன்புறமாக, வடக்குத் திசையில், கஸ்தூரியார் வீதிக்கும். செம்மாதெருவுக்குமிடையில் சிறியதொரு வீதியிருந்தது. அந்த வீதியில் புத்தகங்களை வாடகைக்குக் கொடுக்குமொரு கடை இருந்தது. பெரிய கடை வீதியில் இருந்த அன்பு புத்தகசாலைக்கு முன்பாக , வடக்குப் புறத்தில் அந்த வீதி இருந்ததாக ஞாபகம். உண்மையில் அதை வீதி என்பதை விட நடைபாதை என்பதே பொருந்தும். கடைகளுக்கு இடையில் இருந்ததாக நினைவு.

தமிழகத்திலிருந்து வெளியான பல்வேறு சஞ்சிகைகளிலும் வெளியான தொடர்களை அழகாக 'பைண்டு' செய்து அவற்றை வாடகைக்குக் கொடுப்பார்கள். வேதாளரின் காமிக்ஸ் போன்றவற்றையும் அங்கு வாடகைக்குப் பெறலாம். எனக்கு அந்தக் கடையின் பெயர் மறந்து விட்டது.

இளைஞரொருவர்தான் அந்தக் கடையை நடத்திக்கொண்டிருந்தார். 'wiseway போன்றதொரு பெயர். அல்லது அதுதான் பெயரோ மறந்து விட்டது. நானும் ஓரிரு தடவைகளே அங்கு இரவல் வாங்கியிருந்தேன்.

அந்தக் கடை பற்றிய விபரங்களைத் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

முகநூல்;

Kathiravetpillai Mohanadas - Wiseway வாசகர் வட்டம் 70/80ம் ஆண்டுகளில் இருந்தது. பல எழுத்தாளர்கள் வருவார்கள்.

Navaratnam Giritharan - நன்றி தகவலுக்கு. என் நினைவில் இருந்த பெயர் சரிதான். Wiseway பற்றி மேலதிகத்தகவல்கள் உண்டா? நான் சென்ற சமயம் , இளைஞர் ஒருவர் அதனை நடத்திக்கொண்டிருந்தார்.


பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்