பகுதி–3

“மாறும் உலகின் முகம்”

இதுவே, இக்கட்டுரை தொடரில், சென்ற இருமுறையும் வாதிக்கப்பட்ட விடயங்களின் சாரமாகும். அதாவது, ஒருபுறம் மத்திய கிழக்கின் சவுதி முதல் சிரியா வரையிலான நாடுகள். மறுபுறம் ஆசியாவின் சீனா முதல் இந்தியா வரையிலான நாடுகள், மேலும் ஆப்ரிக்கா கண்டத்தின் அனேக நாடுகள், பின் பிறேசில் முதல் இந்தோனேசியா வரையிலான நாடுகள் - இவை அனைத்தினது முகங்களும் தீவிர மாறுகைக்கு உட்படும் போது, G-7 ன்ற அமைப்புக்கு நேரெதிராக, G-20 அல்லது ஒரு BRICS அல்லது SCO போன்ற அமைப்புக்கள் திரள்வதும், அவை ஓர் சவால் நிலையை கட்டவிழ்க்க நேர்வதும், தவிர்க்கமுடியாததாகின்றது. அதாவது G-7 என்ற நாடுகள்-உலகை வழி நடாத்திய காலம் முடிந்து, அது ஒரு கடந்த காலமாகி, அதற்குப் பதிலாக புதியதோர் ஒழுங்குமுறை கட்டவிழப் பார்க்கிறது.

இதற்கான சான்று அல்லது ஆதாரங்களை வெளிகாட்டி நிற்கும் தடயங்கள் இருவகைப்படுகின்றன. ஒரு புறம், அவற்றில் பெரும்பாலானவை, அமெரிக்காவின் உள்விவகாரங்களுக்கு உள்ளேயே, அடங்கி போகின்றன. (உலக நாடுகளில் இருந்து வெவ்வேறு விதத்தில் அமெரிக்கா கடன் பெற்று இயங்கும் ஒரு போக்கும், அதற்கான அதன் திட்டங்களும், இவ்வடிப்படையில் இருந்து எழும் அதன் கடன்பெறும் உச்ச வரம்பின் எல்லைப்பாடும், இதனுடன் சேர்ந்து ஒலிக்கும் கேள்விகளான டாலரின் ஆதிக்கம் ,காசடிக்கும் நடைறை அல்லது திறைசேரி முறிகளை விற்று பணம் பறிக்கும் முறை) போன்ற விவகாரங்களில், இதற்கான தடயங்கள் வெளிப்பட செய்கின்றன.

இதனுடன் இணைந்தாற்போல், அமெரிக்கா, அண்மையில் மேற்கொண்ட  Hypersonic ஏவுகணையின் தோல்வி ARRW (13.02.2023) பின் இங்கிலாந்தின் VIRGIN ORBIT போன்ற விண்வெளி நிகழ்ச்சிகளின் தோல்வி (09.01.2023) பின் ஜப்பானிய முதல்தர விண்வெளி ராக்கெட்டின் ஏவுதலின் போதான தோல்வி (07.03.2023) -இவை அனைத்தும் மேற்கின் தொழில் நுட்ப அல்லது  இராணுவத் துறையின் பின்னடைவுகளைச் சுட்டும் அதேவேளை இம்மூன்று பிரதான நிகழ்வுகளுமே, இவ்வருடத்தின் முதல் ஆரம்ப மாதங்களுக்குள் அடுத்தடுத்து இடம்பெற்ற தோல்விகளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதே.

வேறு வார்த்தையில் கூறுவதானால், தனது உள்நாட்டு விவகாரங்களை ஒத்தது போல், இதுவரை நிலை பெற்று வந்த, அமெரிக்க-ராணுவ ஆதிக்கத்தின் மேலாண்மை அல்லது மேற்கின் ராணுவ ஆதிக்கம் என்பது இன்று கேள்விக்குட்படுத்தப்பட்ட விடயமாக இருக்கின்றது. இதனை உக்ரேனிய-ரஷிய போரும் மிக உக்கிரமாக வெளிக்கொணர்வதாக, பெருமளவில் இன்று உலகிற்கு நிரூபிப்பதாய் உள்ளது.

உதாரணமாக, இன்று ரஷியாவின் Hypersonic  நடைமுறைகளுக்கு எதிராக இயங்கக்கூடிய மேற்கின் அதி நவீன ஏவுகணை எதிர்ப்பு சமாச்சாரங்களின் போதாமை, உக்ரைன் போரின் போது, அம்பலமாகி நிற்கின்றது. உதாரணமாக, மிக அண்மையில் ரஷியா 06 Hypersonic ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவியதன் காரணமாக 130மீற்றர் (390 அடி) ஆழத்தில் அமைந்திருந்த, பாதுகாக்கப்பட்ட, NATO வின் பாதுகாப்பு தலைமை அலுவலகம் முற்றாக அழித்து நாசமாக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டது.

இத்தாக்குதலின் போது அமெரிக்கா, போலந்து, இங்கிலாந்து போன்ற NATO நாடுகளை சார்ந்த பல ராணுவ அதிகாரிகள் உட்பட 300 மிக முக்கியத்துவம் வாய்ந்த NATO அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என ரஷிய சார்பில் அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இருந்தும் News Week சஞ்சிகையானது இத்தகவல்கள் பொறுத்த விவகாரங்களை பூரணமாய் குறிப்பிட்டிருந்தாலும், அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று மறுதலித்து இருந்தது (31.03.2023).

News Week இப்படி மறுதலித்திருந்தாலும், இத்தகவலை உக்ரைனோ அல்லது ஸெலன்ஸ்கியோ அல்லது ஏனைய மேற்கின் ஊடகங்களோ உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், உலகில் தோன்றியுள்ள நவீன முரண்கள் தொடர்பிலான கேள்விகளை வெளிக்கொணர்வதில், உலகின் பல்வேறு முகங்கள், இன்று, பங்கேற்பது போல, உக்ரைனிய போர்களத்தின் முகமும் ஒருவகையில் பங்கேற்கவே செய்கின்றது எனலாம். வேறு வார்த்தையில் கூறினால், நடந்தேறும் மாற்றங்களின் வெடிப்பு பிளம்புகள், உலகலாவிய ரீதியில் இன்று வெடித்து சிதற ஆரம்பித்து விட்டன எனலாம் -உக்ரைனிய போர்கள் யதார்த்தங்கள் உட்பட.

2

இத்தகைய ஒரு பின்னணியிலேயே, அமெரிக்காவில் அண்மையில் சரிந்த வங்கிகளின் நிலவரத்தை ஒரு புறமாகவும் உக்ரேனிய போர் நிலவரத்தின் கீற்றுகளை மறுபுறமாகவும் வாதிக்க இக்கட்டுரை தொடர் இதுவரை முயன்றது. அண்மையில், அமெரிக்காவில், சரிந்த சிலிக்கன் வங்கியின் நிலவரம் (அல்லது Signature வங்கியின் நிலவரம்) திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஒன்று என்ற வாதம் ஏற்கனவே இணையத்தளங்களில் வெளியாகாமலும் இல்லை. இதனை போன்றே, மேலும் 186 வங்கிகளும் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் என்ற பேச்சும் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள ஒன்றுதான். மொத்தத்தில், இவற்றுக்கான உள்-திட்டங்கள், எவ்வாறு இருந்தாலும், இவ் உள்-திட்டங்கள் ஒரு மறுபக்கத்தையும் தோற்றுவித்து, நிர்மாணித்து விடுவது என்பது தவிர்க்க முடியாததாகின்றது. அதாவது, அமெரிக்க-ஐரோப்பிய வங்கிகள் அல்லது மேற்கால் விநியோகிக்கப்படும் கடன் முறிகள் இன்று, பலத்த சந்தேக கண்கொண்டு பார்க்கப்படுகின்றமையானது, உலக நாடுகளில் பொதுவானதாய் அமைந்து விடுகின்றது.

மேற்குடன் மேலும் நம்பிக்கை வைத்து, இனியும் ஒரு கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளமுடியுமா என்பதனையும்–தமது வைப்புகளுக்கு இவ்வங்கிகளில் இனியும் உத்தரவாதம் உண்டா என்பது போன்ற கேள்விகளையும் இன்று அம்பானி முதல் அதானி வரை எழுப்பக்கூடிய ஒரு சூழல் உருவாகிவிட்டது. இவ்வகையில் புகழ்பெற்ற நாடக ஆசிரியரான BERTOLT BRECHT (1898-1956) தனது பாத்திரத்தினூடாக கூறியது போலவே: “நாம் ஒரு வங்கியில் கொள்ளை அடித்து பணத்தை தேடி கொள்ளலாம் என்பதை விட ஒரு வங்கியை நிர்மாணித்து அதன் மூலம் மக்களை கொள்ளை அடித்து பணத்தை புரட்டி கொள்வது சுலபமானது” என்ற அவரது கூற்று இன்றைய அமெரிக்க உலகின் நிதர்சனங்களில் ஒன்றாகி விட்டது.

3

நாடு முழுவதும் 17 பிரமாண்டமான கிளைகளை பரப்பி, இந்தியா-சீனா-இஸ்ரேல் போன்ற நாடுகள் உட்பட 55 அலுவலகங்களையும் கொண்டு இயங்கிய புகழ்பெற்ற வங்கியான, சிலிக்கன் வங்கியன் கதை இப்படியாய், இரு கிழமைகளின் முன் இனிது முடிவுற்றது. இவ்வங்கி சரிந்த இரண்டே இரண்டு நாட்களில், நியுயோர்க்கில் உள்ள Signature வங்கியும் தனது திவால் நிலையை, கடமை தவறாமல், தன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது. சிலிக்கன் வங்கி விழுந்த அதே Signature தினங்களில், கிட்டத்தட்ட பத்து கோடி அமெரிக்க டாலர் பெறுமதியான தனது வைப்புக்களை, Signature  வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து சடுதியாக மீளப் பெற்றனர். இதனால், காசைத் திரட்ட வங்கி தனது 21 கோடி டாலர் பெறுமதியான முறிகளை 1.8 கோடி டாலர் நட்டத்திற்கு விற்றதாய் கூறியது. அதாவது, இச்சடுதியாக மீளப்பெறும் வைப்பாளர்களின் நடவடிக்கை, வங்கிகளை இன்று, திவால் நிலைக்கு இட்டு சென்று விட்டது.

கடந்த வருடமான, 2022இல் மாத்திரம், Signature வங்கியின் மொத்த சொத்து விபரம் 110.36 அமெரிக்க டாலர் என்றும், வங்கியில் வைப்புசெய்யப்பட்டிருந்த மொத்த வைப்புகளின் பெறுமதி மாத்திரம் 85.89 கோடி அமெரிக்க டாலர் எனவும், வங்கியின் புள்ளி விபரங்கள் தெரிவித்தன. (கூடவே, 2022இல் இவ்வங்கியின் வருமானம் 1.333 கோடி அமெரிக்க டாலர்கள் என்பதும் குறிக்கத்தக்கதே). கிட்டத்தட்ட40 கிளைகளை உலகம் முழுவதுமாய் பரப்பி பிரமாண்டமாய் நின்ற இவ்வங்கி, கடந்த மாதத்தில் அமெரிக்காவில் திவாலாகிய இரண்டாவது பெரிய வங்கி என்றும் கருதப்படுகின்றது. இதற்கு சற்றே முன்பதாக, தனது இறைமுறிக்காக வட்டி வீதத்தை, வரலாறு காணாத வகையில், இப்படி சடுதியாக உயர்த்தி, அதற்கூடாக, தனது இறைமுறிகளை உலக சந்தையில், (நாடுகளினிடையே) விரைவாய் விற்று பணம் திரட்ட முற்பட்ட பைடனின் முயற்சி, இப்படியாக ஓர் எதிர் விளைவை உண்டுபண்ணவே செய்தது. (கூடவே, முன் கூறியது போல, மேலும் 186 வங்கிகள் இந்நிலைக்கு ஆளாகும் நிலையில் இருப்பதாய் அது கூறுவதும், பைடன் அறிவித்த நிவாரண பொதிகளும், இச்சரிவுகள் முன்னரே திட்டமிடபட்டவைதானோ எனும் கேள்வியை வலுப்படுத்துவதாகவே உளது எனலாம்).

இருந்தும், அமெரிக்காவின் இத் திவால்நிலைமைகள், ரஷிய-உக்ரேனிய போரினை தோற்றுவித்ததற்கான மூல காரணங்களில் ஒன்று என்பதும், இல்லை இல்லை, அமெரிக்க திவால் நிலைமையானது, போரின் மூர்க்கத்தை அதிகரிப்பதிலேயே சென்று முடிந்துள்ளது அல்லது இப்போர் நிலைமையே, அமெரிக்காவின் இன்றைய இத் திவால் நிலையை உருவாக்கி உள்ளது என்றும் வாதிடப்படுகின்றது. (அதாவது, உக்ரைனுக்கு “உதவி” என்ற பெயரில் கோடிக்கணக்கான அமெரிக்க வரி செலுத்துனரின் பணத்தை திரட்டி, கேட்பார் கேள்வியின்றி, அவற்றை ஆயுத வியாபாரிகளின் காலடிகளில் குவிக்க வேண்டிய நிர்பந்தம் அமெரிக்க காங்கிரசுக்கு ஏன் இன்று ஏற்பட்டுள்ளது என்பதுவே, மக்கள் இன்று முன்வைக்கும் கேள்வியின் சாரமாகின்றது).

சுருக்கமாய் கூறினால், ஒரு சிக்கலுக்குள் பல சிக்கல்கள்! முட்டையா, கோழியா–எது முதலானது என்பது போல் சிக்கலுக்குள் சிக்கலாய். இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே, சீனாவின் அனுசரணையில், ஜென்மப் பகைவர்களான சவுதியும் ஈரானும் ஒப்பந்தங்களில் ஈடுபட்டு, உள்ளதாயும் கூறப்படுகின்றது. (அதிலும் சீனத்தின் தலைமையில்!). இவ் ஒப்பந்தத்தின் உள்ளடக்கம், இதுவரையில் வெளியிடப்பட்டதாகவும் தெரியவில்லை. இருந்தும் இப்புதிய உறவின் முழு பரிமாணம், அனைத்து மத்திய கிழக்கு நாடுகளையும் ஆழப் பாதித்து, மத்திய கிழக்கின் அரசியலுக்கு, ஒரு புதிய முகத்தை உருவாக்குவதாகவே அமைந்துவிடும் என்று கருதப்படுகின்றது. அதாவது, ஒரு ரஷிய-உக்ரேனிய போர், தன் வழியே உலகில் தன் தாக்கத்தை, பல புதிய வழிகளில் வெளிப்படுத்த தொடங்கியுள்ள நேரம், மறுபுறத்தில், உலகின் பல்வேறு கேந்திர ஸ்தானங்களின் முகங்களும் சடுதியான மாறுதல்களை காட்டி நிற்கின்றன. இவற்றுக்கான அடிப்படை காரணங்களில் மிக முக்கியமானது, இதுவரை உலகில் கோலோச்சி இருந்த அமெரிக்க டாலரின் ஆதிக்கம் சரிவதே என்பது, இன்று மிக தெளிவாக தென்பட தொடங்கியுள்ள ஒரு விடயமாகும்.

4

அமெரிக்க டாலர்களையும், சரியும் அதன் அடிப்படைகளையும் கைகழுவப்படும் இன்றைய அமெரிக்க இறைமுறிகளையும், இன்று அனேக நாடுகள், சந்தேக கண் கொண்டு பார்ப்பது இன்றைய யதார்த்தமாகின்றது. உதாரணமாக, இதுவரை அமெரிக்க இறைமுறிகளை வாங்கி குவித்திருந்த 30 உலக நாடுகளில் மொத்தமாய் 27 நாடுகள், 2020 டிசம்பர் வரை, தாம் வாங்கி குவித்திருந்த அமெரிக்க இறைமுறிகளை, செய்வதறியாது, அவசர அவசரமாய் விற்றுத் தள்ளத் தொடங்கி விட்டன.

சீனம் போன்ற அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் விற்றவை போக, அமெரிக்காவின் ஆபத்பாந்துவ தோழர்கள் என கருதப்பட்ட பிரான்ஸ், ஜேர்மனி, இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகளும் தத்தமது இறைமுறிகளை விற்று தீர்த்துள்ளன. இதில் பிரான்ஸ், இவ்வருடத்தின், ஜனவரியில் மாத்திரம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஜேர்மனி 9.4 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் விற்று தீர்த்துள்ளன. இஸ்ரேல் மார்ச் 15, 2023 வரை தன்வசம் இருந்த 33%  இறைமுறிகளையும் மறுபுறம் சவுதி அரேபியா இதுவரை தனது 40% இறைமுறிகளையும் விற்று தள்ளியுள்ளது.

இச்சூழ்நிலையில் 31.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை தனது தேசிய கடனாக கொண்ட அமெரிக்காவிற்கு காசடிப்பதை தவிர, வேறு மார்க்கம் இருந்ததாக தெரியவில்லை. (கூடவே, உலகெங்கும் யுத்தத்திற்கான முரண்களை தோற்றுவிப்பதோடு).

5

எனவேத்தான் காசு அச்சிடுவது என்பது ஒரு தேவைப்பட்ட மந்திரமாகின்றது. கடந்த 24 மாதங்களில் மாத்திரம் புழக்கத்தில் உள்ள, அமெரிக்க டாலர்களில் 80வீதமானது காசடித்ததால் ஏற்பட்ட பணம் என்று ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. ஜனவரி 2022இல் இருந்து, ஒக்டோபர் 2022 வரை வெளிவந்திருக்கும் தகவல்களின்படி, அமெரிக்கா மேலதிகமாய் நான்கு ட்ரில்லியன் டாலர்களை நோட்டுகளாக அச்சிட்டுள்ளது. 2022இல் மாத்திரம் மூன்று ட்ரில்லியன் காசுகளை அச்சிட்டுருக்கின்றது. இப்புதிய நிலைமைகளை கண்டு அதிர்ச்சியுறும் உலக நாடுகள், இறைமுறிகளை போலவே, தம்மிடம் இருந்த டாலர்களையும் கைக்கழுவி, வரலாறு காணாத அளவில் தங்கத்தை தமது இருப்பாக வாங்கி வைக்கத் தொடங்கிவிட்டன. இது சீனத்திற்கு எப்படி பொருந்துகின்றதோ அதே போன்று, அமெரிக்காவின் ஆத்மார்த்த தோழர்களான ஜேர்மனி-பிரான்ஸிற்கும் பொருந்துவதிலேயே, இன்றைய உலகின் நகைப்புகள் அனைத்தும் உள்ளடங்குகின்றன.

சுருக்கமாய் கூறினால், ஒரு புறம் 31.4 ட்ரில்லியன் உள்நாட்டு கடன். மறுபுறம், (இது உருவாக்கும்) இறைமுறி–காசடிக்கும் நிலைமை-இதனால் ஏற்படும் பணவீக்கங்கள்-தொழிற்சங்க–மக்கள் போராட்டங்கள்-உலக அரங்கில் டாலருக்கு பதிலாக தங்கத்தை தேடும் அவல போக்கு-என்பன உலக நாடுகளை இன்று திரும்பி பார்க்க வைத்துள்ளது. இவை அனைத்தும், இதுவரை, தனது மேலாதிக்கத்திற்கு அனுசரனையாக இருந்த தன் ராணுவ பலம்ஃராணுவ ஆதிக்கம் என்பவற்றால் சாதிக்ககூடியதாக இருந்தது. ஆனால், இன்று, தனது ஆணிவேரான, இவ்ராணுவ ஆதிக்கம் கேள்விக்குட்படுத்தப்பட்ட நிலை ஒன்றுக்கு வந்து சேர்வதாய் இருக்கின்றது. இச்சூழ்நிலையில், மேலும் காசடிப்பதோ அல்லது இறைமுறிகளை விற்பதோ இன்றைய உலகில் சாத்தியமாக போவதில்லை. உதாரணமாக, இந்தியா போன்ற ஒரு நாடு, ஏனைய பதினெட்டு நாடுகளுடன், தனது கொடுக்கல் வாங்கல்களை, இனி இந்திய நாணயமான ரூபாயிலேயே செய்து கொள்ள முடிவு செய்து விட்டது.

இதே போன்று, சீனம் 40 நாடுகளுடன் யுவானில் தமது கொடுக்கல் வாங்கல்களை நடத்திக் கொள்ள முடிவு செய்து விட்டது. (ரஷியாவும், ஈரானும் கூட, சீனா சம்பந்தமுறாத, தமது கொடுக்கல் வாங்கல்களில், டாலரை நிராகரித்து, யுவானை பொது பணமாக ஏற்று, யுவானில் கொடுக்கல் வாங்கல்களை செய்து கொள்ள முடிவு செய்துள்ளன). இதுபோலவே, BRICS அமைப்புடன் ஈரான், சவுதி அரேபியா, மெக்சிகோ, வெனிசுவெலா, ஐக்கிய அரபு ராச்சியம், நைஜீரியா போன்ற நாடுகள் இன்று இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. அதாவது, இவ் BRICS நாடுகளில் ரஷியாவும் ஈரானும் மாத்திரமே உலகின் எரிவாயு உற்பத்தியில் முதலாம் இரண்டாம் இடத்தை பிடித்து கொண்டுள்ளதாய் இருக்கின்றது. இதுபோலவே ரஷியா, சவுதி அரேபியா, ஈரான் போன்ற மூன்றே மூன்று நாடுகளும் கிட்டத்தட்ட (ஏனைய BRICS நாடுகளுடன் இணைந்து) 60% உலக எண்ணை உற்பத்தியை செய்யக்கூடியனவாக இருக்கின்றன. அதாவது, ஒருபுறம், டாலரை தூக்கி வீசும், “கொடுக்கல்-வாங்கல்”. மறுபுறம், உலகின் அதி முக்கியமான மூல பொருட்களின் உற்பத்தியும் அவற்றை உற்பத்தி செய்யக்கூடிய நாடுகளின் ஆதிக்கமும்.

இச்சூழ்நிலையில், கிட்டத்தட்ட 750 ராணுவ தளங்களை உலகலாவிய ரீதியில் கொண்டுள்ள அமெரிக்கா தனது ராணுவத்தை முடுக்கி விட தீர்மானித்து விடுமானால், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. ஏனெனில், தன் இறுதி ஆட்டத்தை ஆடாமல் போவதற்கு அமெரிக்க கோடீஸ்வரர்கள் ஒப்புதல் அளிப்பர் என எதிர்ப்பார்ப்பது வழமையாகும். உதாரணமாக, 2024இல் அமெரிக்கா 886.3 பில்லியன் டொலர்களை தமது ராணுவத்திற்காக செலவழிக்க திட்டமிட்டுள்ளதாக, 2024இற்கான அமெரிக்க பட்ஜெட் தெரிவிக்கின்றது. இது, தனது 22 வருடங்களில் அதிகூடிய பாதுகாப்பு செலவீனம் என்று கருதப்படுகின்றது. அதாவது, 2023ஐ, விட இது, கிட்டத்தட்ட, 26 பில்லியன் டொலர்கள் கூடுதலாய் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மறுபுறம், இரு தினங்களின் முன்னர், US NIMYTZ என்ற தனது பிரமாண்டமான விமானம் தாங்கி கப்பலை, அமெரிக்கா, தாய்வான் நீரிணையில் இறக்கி விட்டது. (இதே கணத்தில் தாய்வானின் அதிபர் TSAI அமெரிக்க காங்கிரசின் கெல்வின் மெக்காத்தியை சந்திக்கும் நிகழ்வும் இடம்பெற்றதாய் கூறப்படுகின்றது).

இதற்கு பதிலடியாக, ஏப்ரல் 5 முதல் சீனம் தனது விமான தாங்கி கப்பலை, இதே தாய்வான் நீரிணையில் இறக்கிவிட்டுள்ளது. (இது தாய்வானின் கிழக்கு முனையிலிருந்து 200 நொட்ஸ் மைல் தொலைவில் உள்ளதாகவும், NIMYTZ தாய்வானின் கிழக்கு முனையிலிருந்து 400 நொட்ஸ் மைல் தொலைவில் உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றது - (ஒரு நொட்ஸ் மைல் என்பது 1.8KM ஆகும்).

6

அதாவது, ஒருபுறம், தனது மேலாதிக்கம் சரியும் ஒரு பின்னணியில், மேற்கின் வரவிருக்கும் ஆண்டில் (2024) செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ஒதுக்கீடு, மேற்கு, இனி கைகொள்ளவிருக்கும் நடைமுறைகளை சுட்டுவதாக இருக்கின்றது. அமெரிக்காவின் ராணுவ அதிபர், ஜெனரல் மில்லி அவர்கள், உக்ரைனானது இவ்வருடத்திற்குள்ளாக (2023) ரஷியாவை, உக்ரைனை விட்டு துரத்தியடிப்பதில் வெற்றி பெற மாட்டாது என அண்மையில் கூறியுள்ளது பல அர்த்தப்பாடுகளை கொண்டுள்ளது. (31.03.2023 -Defense One). பக்மூத்தின் இன்றைய நிலையை கருத்தில் கொண்டு, ஜெனரல் மில்லி இவ்வாறு கூறினாரா அல்லது, 2024ற்கான உச்சம் கண்ட ராணுவு ஒதுக்கீடை நியாயப்படுத்த இவ்வாறு கூறினாரா என்பதெல்லாம் கேள்விகளாகவே இருக்கின்றன. ஆனால், பக்மூத்தின் வீழுகையானது, அமெரிக்காவின் 2024 ராணுவ பட்ஜெட்டை நியாயப்படுத்தலாம் என்றாலும், இது தரக்கூடிய எதிர்விளைவுகள் தவிர்க்கமுடியாதவையாகின்றன.

இச்சூழ்நிலையிலேயே, அண்மையில் செய்துகொள்ளப்பட்ட ரஷிய-சீன ஒப்பந்தங்கள், சீன அதிபரின் ரஷிய விஜயம் போன்றவை, பிணியுற்றிருக்கும் அமெரிக்காவுக்கு இன்னும் நெருக்கடியை கொடுக்கும் விடயங்களாகின்றன. இச்சூழ்நிலையில், தான் இதுவரை முன்னெடுத்திருந்த பொருளாதார தடைகள், உக்ரேனிய யுத்தம் போன்ற அனைத்துமே பின்னடைவை எய்தப் போகின்றது என்றால் முதலில், இதற்கு உறுதுணையாக (ரஷியாவுக்கு ஆதரவாக) இருக்கும் சீன-ரஷிய உறவுகள் கத்தரிக்கப்பட வேண்டியதாகின்றது. இப்பின்னணியிலேயே பிரான்சின் மக்ரோனும், ஐரோப்பிய ய10னியனின் உர்சுலாவும் சீனத்தில் களமிறக்கி விடப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவுடனான, மிக பிரமாண்டமான சீன வர்த்தகத்தை, ஓர் பேச்சுவார்த்தை பொருளாக்கி (பகடையாக்கி), ஐரோப்பாவும் பிரான்சும் மேற்கின் நலன்களை முன்வைத்து, ரஷிய-சீன உறவில், ஓர் விரிசலை உண்டு பண்ணும் ராஜதந்திரத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கு பக்கபலமாகவே, அழுத்தம் தரும் வகையில், தாய்வான் முரண், மேலும் ஊக்குவிக்கப்படுகின்றது. இந்நகர்வுகளில், சீனம் எவ்வாறு தன்னை வெளிகாட்ட போகின்றது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

மொத்தத்தில், உலக ஆதிக்கங்களுக்கான அண்மித்த போட்டிகள், உலகளாவிய ரீதியில் நெருக்கடிகளை உண்டுபண்ணும் போது, இது, எமது பிரதேசத்தில் எத்தகைய தாக்கங்களை உண்டுபண்ணக் கூடும் என்பது கேள்வியாகின்றது. இது தொடர்பில் இந்தியா, இலங்கை, தமிழ் கேள்வி, புலம்பெயர் அரசியல் போன்றவை எவ்வாறு பாதிப்படைய போகின்றன என்பதெல்லாம் ஆர்வத்துக்குரிய வினாக்களாகவே தென்படுகின்றன.

சீனம், 71 போர் விமானங்களுடனும் 7  போர் கப்பல்களுடனும், உண்மை ரவைகளுடனான, படைபயிற்சியை, தாய்வானை சுற்றி துவக்கி விட்டது. மூன்று நாட்கள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள இப் படை பயிற்சியின், முதல் தினத்திலேயே,  தாய்வானின் எல்லைகளை சீன ராணுவம் தாண்ட செய்தது. தாய்வான் பிரதமர்,  அமெரிக்காவில் இருந்து திரும்பியதை, இப்படியாய் சீனம் வரவேற்றதா அல்லது அமெரிக்கா தனது விமானம் தாங்கி கப்பலை, தாய்வான் நீரினையில் இறக்கியதற்கு தந்த ஓர் பதிலடியின் பகுதியா என்பதெல்லாம் கேள்விகளே.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.