1

உக்ரைன்-ரஷ்ய அரசியல் யுத்தமானது, மாறிவரும் ஒரு உலக ஒழுங்கினை, வெளிப்படுத்துவதில் ஓர் சீரிய சமிக்ஞையை தரவே செய்கின்றது” என்பது இன்றைய பரவலான அபிப்ராயமாக இருக்கின்றது.  நலிவடைந்து போயுள்ள தன் பொருளாதாரத்தினை, முட்டுக்கொடுத்து, முன்தள்ளி, அதனை ‘இன்றைய’ சீன அல்லது ரஷ்ய பொருளியல் பூதங்களோடு, (இயல்பான சந்தை பொருளாதார) விதிகளுக்கு ஏற்ப, மல்லுக்கட்ட செய்ய முடியாத ஒரு நிலையில், ஒரு கொவிட் பெருந்தொற்று அல்லது ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பொருளாதார தடை அல்லது இவை இரண்டினூடும் கிடைக்கப்பெற்ற, உலகின் உற்பத்தி அல்லது வினியோக பாதைகளை தடம்புரள செய்து, அதற்கூடாக ஒரு இயல்பான போட்டி நிலையை திட்டமிட்டு இல்லாதொழித்து, அதற்கூடே தன் கோடீஸ்வரர்களை காப்பாற்றி கொள்ளலாம் என்ற திட்டமும் பெரிதளவில் கை கொடுக்காமல் போன நிலையில், ஓர் உக்ரைனிய-ரஷ்ய யுத்தம், புதிதாய் ஓர் பெர்லின் சுவரை மீள கட்டமைத்து கொள்ள, வசதியையும் வாய்ப்பையும் தருவதாகவே உள்ளது என்பதன் அடிப்படையிலேயே, இப்பத்தியில், (பதிவுகளில்) நாம் இதுவரை எழுத துணிந்திருந்தோம். 

இதில் ஓரளவு உண்மை கசியவே செய்திருக்கலாம். ஆனால், இப்போது, ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும், சில விடயங்களை, நாம் நிதானமாய் மீட்டு பார்க்குமிடத்து, இப்படி ‘பெர்லின் சுவர்’ எழுப்பப்பட்டு வருவதுடன் மாத்திரமே, விடயங்கள் மட்டுப்படுத்தப்பட்டு போவதாக இல்லை என்ற உண்மையும் இன்று மேல்நோக்கி கிளம்புவதாகவே இருக்கின்றது.  அதாவது, பிரச்சினைகளின் அடி வேர் இன்னமும் ஆழமாக கிளைத்து பாய்வதாகவே உள்ளது. இது, உக்ரைன் யுத்தத்தை பொறுத்தும் சரி-அல்லது அல்லலுறும் அமெரிக்காவை பொறுத்தும் சரி-பிரச்சினையின் அடிவேர்கள் கிளைத்து பாய்வதாகவே இருக்கின்றன.

2

இப் பின்னணியில் ஓர் அமெரிக்க துணை கொண்டு, இடம்பெற்ற ஜெர்மன்-பிரான்ஸ்-உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தைகளும் அதன் விளைபயனாய் வந்து சேர்ந்த ஒரு மின்ஸ்க் ஒப்பந்தமும், ‘அப்பேச்சுவார்த்தை சமாதானத்தை தேடி போகும் வழிவகை சார்ந்ததல்ல. ஆனால் உக்ரைன் என்ற ஒரு நாட்டுக்கு, ரஷ்யாவை எதிர்ப்பதற்காக, வெறும் கால அவகாசத்தை பெற்றுதரும் ஒரு பாவலாதான் (பாசாங்குதான்) அன்றி பிறிதொன்றில்லை’ என இன்று, கோஷமாக, ஆளுக்காள் போட்டி போட்டு (ஜெர்மனிய அதிபர் ஏஞ்சலா மார்க்கஸ் முதல் முன்னை நாள் உக்ரேனிய ஜனாதிபதி வரை) கூறி வருவதில், உள்நோக்கம் இருக்கவே இருக்க கூடும். எனினும், ரஷ்யா கூறுவது போல், மேற்படி ‘கால அவகாசத்தை பெற்று தரல்’ என்ற இவர்களது இன்றைய ஒட்டுமொத்த ஏற்புரையானது, 2014முதலே, (அதாவது, மின்ஸ்க் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட காலம் தொட்டே) ரஷ்யாவை வீழ்த்தும் நோக்குடன், மேற்கும் அமெரிக்காவும், திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளதை குறிப்பதாகவே உள்ளது என்பது தெளிவாகின்றது.

அதாவது, உக்ரைனுக்கு ஆசைகாட்டி, அவ் ஆசைகளின் அடிப்படையில் அதனை பயிற்றுவித்து, அதற்கேற்ற வகையில் IMF கடன்களையும் வழங்கி, அதற்கூடு அதனை ஒரு பொறிக்குள் சிக்கவைத்து, பின் தான் கூறும் அரசியலுக்கு ஏற்றாற்போல் ஓர் அரசியலை அந்நாட்டில் உருவாக்கி, அதற்கமைய ஒரு பேர் தெரியாத ஹாஸ்ய நடிகனை அந்நாட்டின் அரசியல் உலகில் இறக்கிவிட்டு, கூடவே இலங்கையை போலவே, ஒரு பெருந்தேசிய வாதத்தையும் அந்நாட்டினுள் கிளப்பி, பின் அதனை அங்குள்ள சிறுபான்மை ரஷ்யர்களுக்கு எதிராக திருப்பிவிட்டு, பின் நாளுக்கு நாள் அதனை ஊக்குவித்து, ஒரு நவ நாசிசத்தையும் அங்கே கட்டமைத்து, இனி இதுவெல்லாம் போக, இவை அனைத்தையும் ஒன்று கூட்டி, ஒன்று சேர்த்து, ஒரு ரஷ்ய ராணுவத்தை அல்லது ஒரு ரஷ்ய சாம்ராஜ்யத்தை தகர்த்தெறிய உக்ரைனை படிப்படியாக, கிரமம் கிரமமாக தயார் நிலைக்கு இட்டு செல்லலே, கடந்த சில வருடங்களாய், மேற்கால், உக்ரைன் வளர்த்தெடுக்கப்பட்ட கதையானது. இதன் வழியாகவே ரஷ்யாவை ஒரு வழிக்கு கொண்டு வரலாம், என மேற்கு இவ்வாறு திட்டம் வகுத்ததாகவும், இன்று எடுத்துரைக்கப்படுகின்றது.

அதாவது, குறைந்தபட்சம், தனது நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ரஷ்யா, தன் எண்ணை-எரிவாயு-நாட்டின் வர்த்தக-நிலக்கரி-உணவு-உர சந்தைகள்–அனைத்தையும், தன் சொல்லுக்கிணங்க, தனக்கு வாயப்பாக, திறந்து போட்டுவிட்டு, விரிய, வாய்பிளந்து கிடக்கும்  ரஷ்யாவை ஆவலுடன் மேற்கு எதிர்ப்பார்த்திருந்தது என்பதே இவ் ஆசையின் சாரம்சமாகும்.

உண்மையில் இப்பேராசைக்கும் ஒரு காரணம் இல்லாமல் இல்லை. சோவியத்தின் தகர்ப்பில் தான் அடைந்த வெற்றி, பின் மேற்கானது கிழக்கு நோக்கி, அதாவது, ரஷ்யாவின் எல்லையை நோக்கி நேட்டோவை விஸ்தரித்து, ஒவ்வொரு நாடாய் அது கபளீகரம் செய்த வெற்றி-(போலந்து, ருமேனியா, மோல்டோவா என ஒன்றன்பின் ஒன்றாய்) -  அனைத்து வெற்றிகளின் இம் மமதை இப் பேராசைக்கோர் அடித்தளம் அமைத்தது-ஒத்தடம் கொடுத்தது.  

இருந்தும், இப்பேராசையை, மேலும் முன்னெடுக்க, சரியாக துணைபுரியும் வசதியையும் வாய்ப்புகளையும் உள்ளடக்கியதான நாடு உக்ரைனாகவே இருக்க கூடும் என்ற மேற்கின் தேர்விலேயே, இன்றைய உக்ரைனின் மொத்த சோகமும் அடங்கி போகின்றது எனலாம்.

அதாவது, ரஷ்யாவை தவிர்ந்த, பண்டை சோவியத் நாடுகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டால், அங்கு, உக்ரைனே அளவில் பெரியது என்பதும், பண்டை சோவியத்தில் உருவான பெரும்பாலான ஆயுத தளபாடங்கள் சோவியத் சிதைந்தபோது, உக்ரைனிடமே சிக்கி கொண்டது என்பதும் (S-300, நவீன போர் விமானங்கள், நவீன ட்ரோன்கள், இது போக 250 அடிக்கு அதிகமான நீளத்தையும் 285,000 கிலோ எடையையும், 32 சக்கரங்களையும் (சாதாரண வர்த்தக விமானம்:ஆறே ஆறு சக்கரங்கள் கொண்டவை)  கொண்ட உலகின் மிக பெரிய ராட்சத விமானமான Mriyaயும், அதனை உருவாக்கிய என்டனோவ் தொழிற்சாலையையும், இத்துடன் பல்வேறு அணு உலைகளையும் கொண்ட உக்ரைனே இத்திட்டம் அல்லது பேராசை தொடர்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘வளம்’ கொண்ட நாடானது - மேற்கின் பார்வையில்! உதாரணமாக, Tupolev Tu-141 Strizh  ட்ரோனை குறிப்பிடலாம். சோவியத் யூனியனில் 1970-1980களில் உருவான இவ்ட்ரோனானது 47 அடி நீளமும் 8 அடி உயரமும் 13102 றாத்தல் நிறையும் கொண்ட மிக பிரமாண்டமான ட்ரோனாகும் இது. இதன் சராசரி வேகம் 1000KM/H என்பதும் 19700 அடி உயரத்தில், 1000KM தூரத்தில் பறக்க கூடியதாக அன்றைய சோவியத்தால் அமைக்கப்பட்டிருந்தது என்பதும் குறிக்கத்தக்கது. உக்ரைனின் படைதளங்களில் ஒரு அம்சமாக இருக்கும் இவ் ட்ரோன் ரஷ்யாவின் ஏங்கெல்ஸ் விமானதளத்தை வெற்றிகராமக தாக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இச்சிறிய உதாரணம் ரஷ்hயவை அடிப்பதற்காக ஏன் மேற்கு உக்ரைனை தேர்ந்தெடுத்தது என்பதற்கான சிறு உதாரணமாக இது விளங்க கூடும்.

இது போக, ‘அசோவ்’ தொழிற்சாலையும் அதன் நிலத்தடி வலைபின்னல்கள் (24 கி.மீ: போரின் போது இதில் வாழ்ந்து யுத்தம் புரிந்து வந்த 2000 உக்ரைனிய விசேட கொமான்டோக்கள் இறுதியில் ரஷ்யாவிடம் சரணடைந்தனர்) என்பதும், இது போலவே Soledar நிலத்தடி வலைபின்னல்களும் (201 கி.மீ, நீளம்: 288 மீற்றர் ஆழம்: 98 அடி உயரம் இந் நிலத்தடி வலையமைப்புகள் வாகனங்களை கொண்டு செல்ல கூடியதும், கால்பந்தாட்ட மைதானங்கள், விடுதிகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை உள்ளடக்கி கிடப்பதும், கிட்டத்தட்ட 9 மாடி பிரமாண்டமான கட்டடங்களை உள்ளடக்கி இருந்ததுமான நிலத்தடி வலையமைப்புகளில்தான் ஈற்றில் அண்மையில் பல நூற்று உக்ரைனிய ராணுவ கொமான்டோக்கள் ரஷ்ய படைகளிடம் இந்நிலத்தடி வலையமைப்புகளில் சண்டையிட்டு சரணடைந்தனர் என்பதும்) இத்துடன் இவ் அமைப்புகள் அன்றைய அணுகுண்டுகளை தம்வழியே தாக்கு பிடிக்கும் திறன் கொண்டவையாக அமைக்கப்பட்டவை என்பதும் உக்ரைன் என்ற நாட்டின் தேர்வுக்கான முக்கிய காரணங்களாகின்றன. அதாவது, ஒருபுறம் காலடி எடுத்து வைத்து, நுழையவே முடியாத பாதுகாப்பு அரண்கள்.

மறுபுறம், ராமாயணத்தில் வாலி கொண்டது போல, எதிரியின் வலிமையில் சரி பாதியை தானே உள்வாங்கி கொண்டது போல, ரஷ்யாவின் வலிமையில் சரி பாதியை உள்வாங்கி கொண்டதாய் இருக்கும், ஒரே நாடு உக்ரைன்தான் என்பதும் மேற்கின் கணிப்பானது.

ஆனால், இவற்றைவிட எல்லாம் முக்கியமானது, உக்ரைன் அரிய கனியவளம் கொண்ட நாடு என்ற உண்மையாகும். கனியவளத்தில் உலகிலேயே நான்காவது இடத்தில் இருக்கும் இந்நாட்டின் லித்தியத்தின் அளவு மாத்திரம் 3 ட்ரில்லியன் டொலரில் இருந்து 11.5 ட்ரில்லியன் டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது (ஜீலை 2022). போதாதற்கு, European Lithium போன்ற ராட்ஷச கம்பனிகள் லித்தியத்திற்காக 2020களில் ஒப்பந்தங்கள் செய்தன. எனவே, உக்ரைன் என்ற நாட்டின் தேர்வு இந்த கனியவளங்களையும் அடிப்படையாக கொண்டது என ஆய்வாளர்கள் கருதுவதில் நியாயம் உண்டு எனலாம்.  

3

ஆக ஒரு கொவிட் பெருந்தொற்று, ஓர் பொருளாதார தடை, பின் அதனுடன் தொடர்புபட்ட ஓர் உற்பத்தி வலையமைப்பின் சீர்குலைவு, பின் அதன் விளைபயனாய் எழும் ஓர் வினியோக சந்தையின் குளறுபடி - இவ்வளவையும் தாண்டி, ஒரு யுத்த களத்தை நோக்கி விரையும் ஒரு போக்கு, ‘தனது இறுதி தீர்வை ஈற்றில் யுத்த களத்தின் பூமியிலேயே கண்டறியப்பட்டாக வேண்டும்’ என்று அது உலகுக்கு செய்த அறிவிப்பானது வெறுமனே ஓர் ‘பெர்லின் சுவர் எழுப்புகையுடன்’ விடயங்கள் மட்டுப்படுத்தப்படுவதாய் இல்லை என்பதை மிக திட்டவட்டமாக பறை சாற்றுவதாகவே அமைந்து போனது. அதாவது, இவ் ‘யுத்த திட்டத்தின்’ பரந்துபட்ட விஸ்தாரமும் ஆழமும், பல பரிமாணங்களை கொண்டதாகவே மேலெழுவதாய் உள்ளது என்பது, இன்று வெளிவரும் ஆய்வாளர்களின் முக்கிய கருதுகோளாகின்றது.  அதாவது, ரஷ்யாவை ஆட்டங்காண வைக்கும் இவ் யுத்ததிட்டம் ஒருபுறம். திட்டத்திற்கு தேவைப்படும் நாட்டின் தேர்வு மறுபுறம்.

4

இனி, இத்திட்டத்தையும் இதற்கான தேர்வையும் நோக்கி அமெரிக்காவை இயங்க வைத்த சான்றுகளில் தலையாயது, இன்று மிகுந்த பரபரப்புடன் ஊடகங்களில் பேச முற்பட்டுள்ள அமெரிக்காவின் தற்போதைய உள்நாட்டு பொருளாதார நிலை எனலாம்.  அமெரிக்காவின் தற்போதைய கடன் நிலைமை, மிக மிக மோசமானது. அது, 31.4 ட்ரில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. வரலாற்றிலேயே இப்படி ஒரு இடர் அமெரிக்கா கண்டுப்பிடிக்கப்பட்ட நாளில் இருந்து தோன்றியதில்லை என்பர், அவ் ஆய்வாளர்கள்.  இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் இருந்து இன்று வரை தனது கடன் தொகையை 20 மடங்குகளால் அமெரிக்கா அதிகரித்துள்ளது என ஒரு மதிப்பீடு கூற முற்படுகின்றது.  அதாவது, தன் வரவுக்கேற்ப தன் செலவை சமாளிக்க முடியாது, தனது பட்ஜெட்டில் துண்டு விழும் தொகைகளை தேடிக் கொள்ள, அமெரிக்க அரசும், எமது இலங்கை அரசை போலவே, கடன் முறிகளையும், பிணை முறிகளையும் விற்று தீர்க்கும் கைங்கரியத்தை பின்பற்ற நேர்ந்தது, திணறலுடன்.

துண்டு விழும் இத் தொகை, அமெரிக்க அரசின் கோடிக்கணக்கான ராணுவ பட்ஜெட்டுக்கும் அது கடைபிடிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் (சிறை, பொலிஸ்துறை, உளவுதுறை, நாசா, விண்வெளி ஆய்வுகள், பாதுகாப்பு துறை ஆய்வுகள், இத்தியாதிகளுக்கும்) தேவைப்படும் செலவீனங்களை உள்ளடக்குவதாய் இருந்தது. இதற்கு மேலாய், அமெரிக்க கோடீஸ்வரர்களின் சொத்துக்களுக்கு, ஊறு விளையாத வகையில் விடயங்களும் முன்னெடுக்கப்படல் வேண்டும். இப் பின்னணியில், துண்டு விழும் இத்தொகையினை சமாளிக்க, அமெரிக்க அரசு, இன்னும் சரியாக சொன்னால், அமெரிக்க திறைசேரி, முறிகளை விற்றும், காசை அச்சடித்தும் தலையை ஆட்டி ஆட்டி, சுய திருப்தியுடன் செயல்பட்டாலும், இதற்கும் ஓர் கட்டுப்பாட்டை அமெரிக்கா சட்டம் விதித்தது எனலாம். ‘கடன் எல்லை’ (US Debt Ceiling)) எனப்படும் சட்ட ஏற்பாடு, காங்கிரசின் வாக்கெடுப்பின் மூலம், காலத்துக்கு காலம் உயர்த்தப்படும் ஓர் சங்கதியாயிற்று. (1960 முதல் 78 தடவைகள் இப்படியாக ‘கடன் எல்லைகள்’ காங்கிரசால் உயர்த்தப்பட்டுள்ளன என்பது வரலாறு).

2021இல், நடந்தேறிய ஓர் காங்கிரசின் வாக்கெடுப்பின் பிரகாரம், அமெரிக்க திறைசேரி தான் பெற்று கொள்ளும் கடனை இறைமுறிகளால், அல்லது காசை அச்சடிப்பதால் திரட்டி கொள்ளலாம் என்றாலும் இது 31.4 ட்ரில்லியன் டொலர்களை தாண்ட கூடாது என்ற தனது ‘கடன் எல்லையை’ நிர்ணயித்து விட்டது.

இதன்படி, தற்போதைய, அமெரிக்கா உலகெங்கிலும் உள்நாட்டிலும் 31.4 ட்ரில்லியன் டொலர்களை தன் இறை இறைமுறிகளுக்கூடாகவும் காசை அச்சடித்து விற்று தள்ளியும் சந்தோசம் கண்டது. அதாவது, பிறர் பணத்தில் அது நடத்தேறும் ஜீவிதம் எந்த ஒரு இடையூறுமில்லாமல் செல்வதாய் இருந்தது. ஆனால், உலகின் புதிய வரவுடன் விடயங்கள் மாறின. பல நாடுகள், தொடர்ந்தும் டொலரை தமது வர்த்தக பறிமாற்றுகைக்கான பணமாக கொள்வதை தவிர்த்தன. தன் வினை தன்னை சுடும் என்பது போல், அமெரிக்கா இறக்கிவிட்ட, பொருளாதார தடைகளும் குளறுபடிகளும் அதனையே திருப்பி தாக்க தொடங்கி விட்டன. இதற்கான ஆணிவேர், உலகில் எழுந்த சீனம்-இந்தியா-பிறேசில் போன்ற ‘புதிய’ பொருளாதார சக்திகளினது வருகையாய் இருக்கலாம். ஆனால் அமெரிக்க பொருளாதாரம் தன்அடி ஆழத்தை தரிசிக்கும் நிர்பந்தத்துக்குள்ளானது, என்பது இன்றைய யதார்த்தமானது.    கடந்த 20 ஆண்டுகளில் மாத்திரம் அமெரிக்கா விற்று தீர்த்துள்ள இறைமுறி கடன்களின் மொத்த பெறுமானம் 25ட்ரில்லியன் டொலர்களுக்கும் அதிகமானவை என ஒரு ஆய்வு அறிக்கை கூறுகின்றது. (நியூயோர்க் டைம்ஸ்:22.01.2023).

இதில் 1.3 ட்ரில்லியன் டொலர்களை ஜப்பானும் (16.8மூ: 22.05.2022 கணிப்பின் பிரகாரம்) சீனா ஒரு ட்ரில்லியன் டொலரையும், இங்கிலாந்து 647.4 கோடி டொலர்களையும், அயர்லாந்து 334.3 கோடி டொலர்களையும், லக்சம்பேர்க் 325.6 கோடி டொலர்களையும் கடன் வழங்குனர்களாக அல்லது முறிகளை வாங்கியவர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.  அமெரிக்காவினது, மேற்படி வெளிநாட்டு அரசுகளின், கடன்கள் போக, அதன் உள்நாட்டு கடன்களும் தீவிரப்பட்டதாகவே காணப்படுகின்றது.  கொவிட் பெருந்தொற்று தலைவிரித்தாடிய காலமான 2019இன் இறுதியில் 23ட்ரில்லியன் டொலராக இருந்த அமெரிக்க கடன், ஒரு வருடத்திற்குள்ளாகவே, 27.7ட்ரில்லியன் டொலராக வளர்ச்சி கண்டது. இது, 2022 ஒக்டோபர் மாதத்தை அடையும் போது 30 ட்ரில்லியன் டொலர்களை எட்டி பிடித்து விட்டது.

அதாவது, சுருக்கமாக கூறினால் சீனத்திடம் இருந்து கடன் பெற்று சீனத்திடமே வம்பிழுத்து சீனத்திடமே போரிழுக்கும் நடைமுறையை, உலகமகா சண்டித்தனம் என உலகு கண்டுப்பிடிக்க தொடங்கியது. இதேவேளை, சீனா போன்ற நாடுகள், தாம் இதுவரை பெற்று வந்த அமெரிக்க இறைமுறிகளை, உலக சந்தையில் விற்று கரைத்துவிட முஸ்தீபு கொண்டு விட்டன-இதற்கு அவை துணிந்தும் விட்டன என்பதனை அண்மித்த விடயங்கள் காட்டி நிற்பதாயுள்ளன.  

இவ் யதார்த்தங்கள் அமெரிக்கா நாணயமான டொலரை, இதற்கு மேலும் உலக நாணயமாக, ஏற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்களை நாடுகளுக்கு அறிவிக்கும் குறிகாட்டிகளாகின. இதனாலேயே ரஷ்ய, சீன, இந்தியா, பிரேசில் போன்ற மாபெரும் பொருளாதார சக்திகள் தமது கொடுக்கல் வாங்கல்களை டொலரில் இருந்து மாற்றி தமது சொந்த நாணயங்களில் செய்ய துணிந்த செயற்பாடுகளும் நடைமுறைக்கு வருவதாய் இருந்தன.  (அதாவது, ஒரு புறம் டொலரின் மதிப்பிறக்கம் அல்லது மதிப்பற்ற நிலைமை. மறுபுறம் அமெரிக்க திறைசேரியின் வங்குரோத்து நிலைமை).  இச்சூழலில், 31.4 ட்ரில்லியன் டொலர்களை கடனாக கொண்ட, அமெரிக்கா, இலங்கை போன்றே, தனக்கு கடன் வழங்கியோரின், கடன் கோரிக்கைகளை இனியும் நிறைவேற்ற முடியாத ஒரு புள்ளிக்கு அதாவது தான் பெற்ற கடனின் வட்டியை கூட திருப்பி செலுத்த முடியாத ஒரு புள்ளிக்கு–வந்து சேர்வதாய் அமைந்து விட்டது.

இச்சூழலில், அமெரிக்காவின் முன்னால் உள்ள, தற்போதைய நடைமுறை இரண்டே இரண்டுதான் என பொருளியல் வல்லுனர்கள் அபிப்பிராயப்பட்டுள்ளனர்:

ஒன்று, ‘இனி, தான் கடனை செலுத்த போவதில்லை@ அந்நிலை உருவாகி விட்டது’ என்று பகிரங்கமாய் அறிவித்து தன் பொறுப்புகளில் இருந்து கைக்கழுவி, கரங்களை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு நடப்பது (Default in Payments).  அல்லது தனது சட்டம் கூறும், தன் கடன் பெறும் உச்ச வரம்பான 31.4 ட்ரில்லியன் டொலர்களை ஜனாதிபதி புறந்தள்ளி, அல்லது சட்டை செய்யாது, தன் கடன் பெறும் சட்ட எல்லைபாட்டை, வெறும் தமாசாக கொள்வது.

அதாவது, இலங்கை அல்லது பாகிஸ்தான் விடயத்தினை போன்று, அமெரிக்காவை காப்பாற்ற ஒரு ஐஆகு இல்லை. அல்லது கைகொடுக்க, ஓர் சீனமோ அல்லது இந்தியாவோ கடன் தர போவதுமில்லை. அதாவது தனது வண்டியை தானே உந்தி தள்ள வேண்டிய தேவைப்பாடு அமெரிக்கா போன்ற பருத்த பொருளாதார அமைப்புகளிற்கு வந்து சேரும் சோதனையாகின்றது. (உண்மையில் IMF என்பது அமெரிக்க திறைசேரியின்றி வேறொன்றில்லை என இன்று உலக பொருளியல் வல்லுனர்கள் எடுத்துரைத்துள்ளனர். காரணம், IMFஇல் 46%மான பங்குகள் அமெரிக்காவினது என்பது மாத்திரமல்லாமல், IMFஇல் வீட்டோ அதிகாரம் உள்ள ஒரே நாடு அமெரிக்கா மாத்திரமே என்பதும் குறிக்கத்தக்கதே).

ஆனால் இந்த சோதனைகள் யாதொன்றையும் சுமக்க அமெரிக்க கோடீஸ்வரர்கள் தயார் இல்லை. எனவேத்தான், அவர்கள் மூன்றாவது வழியை கண்டுப்பிடித்து நிற்பவராயினர். ரஷ்யா போன்ற எரிவாயு-எண்;ணை-நிலக்கரி-பொருளாதார-உற்பத்தி சந்தை இவை யாவும் நிறைந்த ஒரு நாடு, அமெரிக்கா போன்ற ஓர் கடன் பட்ட தேசத்தின் கண்களுக்கு, எச்சில் ஊற வைக்கும் சங்கதியாகவே இருக்கும் என்பது சந்தேகமே இல்லை. (மறுபுறத்தில் சீனமும் கண்முன்னால்…!).

இருந்தும், ரஷ்யாவுடன் நேரடியான ஒரு மோதலுக்குள் இறங்காமல் அல்லது சீனத்துடன் நேரடியான மோதலுக்குள் இறங்காமல் ஒரு உக்ரைனை அல்லது ஓர் தாய்வானை முன்னுக்கு தள்ளி விடுவது என்பது ஓர் சால சிறந்த திட்டமாகின்றது.

சுருக்கமாக கூறினால், ஒரு Uni Polar Worldஐ தக்க வைப்பது என்பதனையும் ஒரு Multi Polar World இன் வளர்ச்சியை தடுப்பது என்பதனையும் தாண்டி முதலில் தனது சொந்த இருப்புக்காய், அதாவது தன் சொந்த கோடீஸ்வரர்களின் சுகமான மூச்சுவிடலுக்காய் ஓர் யுத்தத்தை அமெரிக்க அரசு முன்னெடுப்பது, அது கடைபிடிக்க கூடிய மூன்றாவது வழியாகிறது என்பது பொருளியல் நிபுணர்களின் விடையாகின்றது.

5

இச்சூழலில், அமெரிக்காவின் ஏப்ரகாம் தாங்கியும், ஜெர்மனியின் லெப்பர்ட் தாங்கியும் இங்கிலாந்தின் செலஞ்சர் தாங்கியும், உக்ரைனின் யுத்த களத்திற்கு, ஆசிர்வதிக்கப்பட்ட புதிய வரவுகளாகின்றன. ‘இத்தாங்கிகள் அனைத்தும் ரஷ்ய மண்ணில் பூரணமாக எரிந்து  சாம்பலாக்கப்படும்’ என்ற புட்டினின் கோபாவேச குரலோடு, “இத்தாங்கிகள் யுரேனியம் முனை கொண்ட குண்டுகளை பாவிக்குமிடத்து அவை, ஒரு அணுவாயுத போரை கட்டவிழ்த்து விடுகின்றன” என்ற ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையும் சேர்ந்து ஒலிப்பதாயிற்று.

ஆனால், உக்ரைனுக்கு தொடர்ச்சியாக ஏவுகணைகளை வழங்குவது மேற்குக்கு இன்று வந்துள்ள ஒரு சோதனை என்பது கவனிக்கத்தக்கது. உதாரணமாக, NASAMS  ஏவுகணைகளை மேற்கு உக்ரைனுக்கு வழங்க ஏற்கனவே தீர்மானித்திருக்கலாம். திறமான ஏவுகணையான இது என்று கூறப்பட்ட போதிலும் இதில் ஒன்றை தயாரிப்பதற்கு 32மாத கால அவகாசம் தேவை என மெக்ரோகர் குறிப்பிடுகின்றார். இவ்உண்மையை அவர் பிறிதொரு உண்மையோடு சம்பந்தப்படுத்தி காட்டுவார்: அதாவது போர்கலங்களின், தலையாய ஆயுதம் என குறிப்பிடும் ஆர்ட்டிலரி பீரங்கியை ரஷ்யா,  நாள் ஒன்றுக்கு 60,000 சுற்றுக்கள் பாவிக்கையில் உக்ரைனோ நாள் ஒன்றுக்கு 6-7 ஆயிரம் சுற்றுக்களே பாவிக்ககூடிய திறன் படைத்ததாக இருக்கின்றது. இது மேற்கை கசக்கி பிழியும் ஒரு தருணம் மாத்திரம் அல்லாமல் போரின் உண்மை யதார்த்தத்தையும் சுட்டிக்காட்டும் ஓர் நடவடிக்கையாகின்றது. இதனாலோ என்னவோ புட்டின், தனது ஆயுத, ஏவுகணை, பீரங்கி தொழிற்சாலையின் பாரிய பங்களிப்புகள் குறித்து தனியாக குறிப்பிட மறந்தார் இல்லை.

இது தவிர தற்போதைய, உக்ரைனிய-ரஷ்ய போர் பின்வரும் மூன்று பிரதான நடைமுறைகளை நோக்கி மெல்ல சென்று சேர்வதாக உக்ரைனிய ‘சார்பு’ தலைவர்களே அறுதியிட்டு கூறவும் தலைப்பட்டுள்ளனர்:

i. இன்று, உக்ரைனிய-ரஷ்ய யுத்தம், ஓர் மூன்றாம் உலக யுத்தத்துக்கான புள்ளியை நோக்கி அறிந்தோ அறியாமலோ, பிரக்ஞையுடனோ பிரக்ஞையற்றோ நகர்ந்து செல்வதாயுள்ளது.

ii. உக்ரைன்-ரஷ்ய யுத்தத்தில், ரஷ்யா எதிர்ப்பார்க்கப்படும், தன் முழு படை பலத்தையும் இறக்க முற்படும் தருவாயில், நேட்டோ-அமெரிக்கா நாடுகள் இனியும் ஒதுங்கியிராமல் நேரடியாக தாமும் தலையிடவே செய்யும் - (போலந்து படைகளுடனும், ருமேனிய படைகளுடனும், நேட்டோ அல்லது போலந்தில் நிலை கொண்டுள்ள அமெரிக்க படைகளும் இணைந்தாற்போல்).

iii. உக்ரைனிய-ரஷ்ய யுத்தம் இனி அணுவாயுத பிரயோகிப்புக்கு வழிவகுக்கும்.

மேற்படி மூன்று அம்சங்களும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தம் கொண்டதாய் இருப்பினும் அல்லது ஒன்றாகவே கூட இருப்பினும், இப்படியான எச்சரிக்கைகளை விடுவிப்பது, யுத்தத்தின் இன்று ஓர் நடைமுறை யதார்த்தமாகின்றது. ஆனால், இவை வெறும் பேச்சுக்கள் மாத்திரம்தானா, என்ற விடயத்தை உலக நிபுணர்கள் இன்று அலசி ஆராயாமலும் இல்லை எனலாம். அதாவது, இவை வெறும் பயமுறுத்தல்களுக்காக அல்லது அழுத்தங்களை ஏற்படுத்துவதையே நோக்காக கொண்டு விடுக்கப்பட்ட வெறும் பேச்சுக்கள் தானா அன்றி உண்மை நகர்வுகளா என்பதும் கேள்விகுறிகளாகவே திகழ செய்கின்றது. இருந்தும் ரஷ்யா இதனை வெறும் ‘பேச்சுக்களாக’ கொள்வதற்கில்லை என்பதனை இன்று, அது கைக்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் தெரிய வருகின்றது எனலாம்.

6

ரஷ்யா முதன் முறையாக தனது  Zicron ஏவுகணையை (10,265 KM/H) உள்ளடக்கிய தனது 150 மீற்றர் நீளமான, பிரமாண்டமான போர் கப்பலான எட்மிரல் கோர்ச்கோவை (Admiral Gorshkov) அமெரிக்காவின் கிழக்கு கரையோரமாக, அத்திலாந்திக் கடற்பிரதேசத்தில் முதன் முதலாக நுழைய விட்டதை, கரீபிய கடலின் இரண்டாம் சிக்கல் என ஆய்வாளர்கள் வர்ணிக்க முற்பட்டுள்ளது குறிக்கத்தக்கது.
அதாவது, கரீபிய கடலின் முதல் சிக்கல் எனப்படுவது, 1960களில் அமெரிக்கா தனது ஏவுகனைகளின் ஒரு பகுதியை ரஷ்யாவின் அயல்நாடான துருக்கிக்கு நகர்த்த, ரஷ்யா தனது ஏவுகனைகளின் ஒரு பகுதியை கியூபாவிற்கு நகர்த்தியதை குறிப்பதாகின்றது.

பின் இரு நாடுகளும், பேச்சுவார்த்தைகளின் பின், தத்தம் ஏவுகணைகளை வாபஸ் பெற, முரண் தீர்த்து வைக்கப்பட்டதாயிற்று.

இது போன்றே, எட்மிரல் கோர்ச்கோவின் வருகையானது, உக்ரைன் பெறவிருக்கும் தாங்கிகளுடனும் (யுரேனியம் கொண்டதா அல்லது கொள்ளப்படாததா என்பது இன்னமும் வெளிப்படாத நிலையில்) அல்லது உக்ரைன் பெறவிருக்கும் தொலை தூர ஏவுகனைகளுடன் தொடர்பு கொண்டதா இல்லையா என்பதெல்லாம் சரியாக இன்னமும் விளங்கியதாக இல்லை எனலாம். ஆனால், எட்மிரலின் அத்திலாந்து கடலின் உள் நுழைகை, உக்ரைனிற்கு வழங்கப்படவிருக்கும் ஆயுத பட்டியலின் அறிவிப்போடு சேர்ந்து நிகழ்ந்த ஓர் நிகழ்வாகின்றது.

அதாவது, திரைமறைவில், நடந்தேறும் இந்நாடகங்களின் பின்னால், மறைந்திருக்க கூடிய வியூகங்கள் சரியாக புலப்படதக்கவை அல்ல என்பதனையும் ஏற்கத்தான் வேண்டி இருக்கின்றது. ஆனால், மிக ஒரு அண்மித்த செய்திகளின்படி, போரின் துவங்குகையின் பின், ஒரு மூன்று லட்சம் பேரை தன் ராணுவத்தில் புதிதாய் இணைத்துக்கொண்ட ரஷ்யா தற்போது மேலும் ஒரு ஏழு லட்சம் பேர் கொண்ட ஒரு ஆட்சேர்ப்பு திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.

இவை அனைத்தும் முஸ்தீபு பெற்று வரும் இன்றைய யுத்த நிலவரங்களாலும், இதைவிட முக்கியமாக இம்முஸ்தீபுக்கு பக்கபலமாய் சீரழிய முற்பட்டிருக்கும் இன்றைய ஓர் அமெரிக்க கடன் விவகாரத்தாலும், மேலும் கூர்மையுற, ரஷ்யா பதிலுக்கு தன் முன் எச்சரிக்கை நகர்வுகளை அல்லது முன் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் தீவிரபட துவங்கிவிட்டது என்ற அபிப்பிராயமும் இன்று உலக அளவில் வந்து சேர்வதாய் இருக்கின்றன.

தாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பி வைப்பதா இல்லையா என்ற வாதங்களும், ஏட்டிக்கு போட்டியாக, ‘இல்லை-ஆம்’ என்று வீசி எறியப்பட்டு கொண்டிருக்கையில், இவ்வாதங்களை பொருட்படுத்தா ஒரு ரஷ்யா, தனது அட்மிரலை, அத்திலாந்து பயணத்தில் இறக்கி விட்டது.

ஆனால், தாங்கிகளின் வருகை என்ற விடயம் உறுதி செய்யப்பட்டவுடன், இறக்கி விடப்பட்ட எட்மிரல் கோர்ச்கோவ், முதன் முறையாக அமெரிக்க கடற்கரையில், தன்  Hypersonic ஏவுகனைகளை வீசி, வெற்றிகரமாக பரிசோதனையில் ஈடுபட்டது (26.01.2023). அதாவது, தாங்கிகள் பொறுத்த ஒரு சொல்லாடல், ரஷ்யாவை ஓர், பேச்சுவார்த்தைக்கு அழைக்கும், அழுத்தத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து போன நிலையில், அழுத்தங்களை உள்வாங்கும் நிலைகளை முற்றாக புறக்கணித்த ரஷ்யா , தன் போர்க்கப்பல்களின் ஏவுகணைகளை பதிலாக அனுப்ப துணிகின்றது என்ற செய்தி மிக தெளிவான முறையில் எடுத்துரைப்பு செய்யப்பட்டனவாகின்றது.

இதற்கு சற்று முன்பதாக, ரஷ்யா தனது புத்தம் புது போர் கப்பலான Emperor Alexander iii என்ற அணுசக்தியால் இயங்கும், அணுஆயுதங்களை தாங்கும் நீர்மூழ்கி கப்பலை 29 டிசம்பர் 2022 அன்று இயக்கி வைத்தது.  Emperor Alexander iii என்ற அன்றைய ரஷ்ய பேரரசின் கீழேயே அன்றைய போலாந்தும் இருந்தது என்பது இப்பெயரிடலில் புதைந்திருக்கும் அச்சுறுத்தலாகும் என உலகு அபிப்பிராயப்பட்டது.
இவ்வகையான பின்னணியிலேயே, இன்று,  RAND Corporation தன் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது: “நீண்ட போர் ஆபத்தானது - இரு நாடுகளுக்கும் பயன்தராதது. மேலும் உக்ரைனின் நலன் என்பது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அமெரிக்க நலன்களுடன் பயணிக்க தக்கதல்ல” என்று, கூறி.

இது, இருண்ட யுத்த மேகங்களின் விளிம்புகளில் தோன்றும் ஓர் மெல்லிய ஒளிபடலமாக ஆய்வாளர்களின் கண்களில் தென்பட தவறவில்லை.

இருந்தும், இவ் RAND Corporation அறிக்கை கூட இதயசுத்தியுடன், ஓர் விஞ்ஞானபூர்வமான ஆய்வுநிலை நின்று தயாரித்துவிடப்பட்டதா அல்லது வெறுமனே ஓர் பேச்சுவார்த்தைக்கான தூண்டலை வழங்கும் பொருட்டு தயாரித்து விடப்பட்டதா என்பதெல்லாம் கேள்வியாகின்றது. ஏனெனில் சில தினங்களின் முன் எதிர்கால அணு ஒப்பந்தத்துக்கான சாத்தியப்பாடுகள் பொறுத்து ரஷ்யா தனது அவநம்பிக்கையை வெளியிட்டது. இதேவேளை ரஷ்யா தற்போது இருக்கும் ஒரே ஒரு அணு ஒப்பந்தத்தையும் உடைத்தெறிந்துவிட்டது-ஒப்பந்தம் தரும் பரஸ்பர அணுஉலை கண்கானிப்புகளை அது நிராகரித்ததற்கூடு என அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது (01.02.2023).

7

இவ்வகை சூழ்நிலையிலேயே, எட்மிரல் கோர்ச்கோவ், எப்படி முதன் முறையாக அத்திலாந்திக் கடலில், - அமெரிக்க கடற்கரையின் அருகில் இறக்கிவிடப்பட்டதோ, அப்படியே ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் லெப்ரோவும், ஆப்ரிக்க கண்டத்தில் புதிய புதிய திட்டங்களுடன், களமிறக்கி விடப்பட்டுள்ளார்-(தென்னாபிரிக்கா-எஸ்ட்வார்டினி-எரித்ரியா-அங்கோலா) சுற்று பயணத்திற்காய் (20.01.2023).
இவ்விஜயத்தின் போது, லெவ்ரோவ், ரஷ்ய-சீன-தென்னாபிரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் கூட்டு போர் பயிற்சி குறித்தும் அறிவித்துள்ளார். பெப்ரவரி மாதத்தில், பத்து தினங்களுக்கு நடக்கவிருக்கும் இக்கடற்படை கூட்டு பயிற்சியுடன் இணைந்தாற்போல் லெப்ரோவ் மீண்டும் ஆப்ரிக்க கண்டத்திற்கு திரும்பி, வட  ஆப்ரிக்காவில் விஜயம் மேற்கொண்டு டுனீசியா, மார்டீனியா, அல்ஜீரியா, மொரோக்கோ போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆறே ஆறு மாதங்களில் லெப்ரோவ் விஜயம் செய்த அல்லது விஜயம் செய்யவிருக்கும் 12 ஆப்ரிக்க நாடுகளை இது கோடிடுகின்றது, எனலாம்.

ஒருபுறம், எட்மிரல் கோர்ச்கோவ், அத்திலாந்தில் இறக்கிவிடப்பட, மறுபுறம், லெப்ரோவ், ஆப்ரிக்காவில் இறக்கி விடப்படுகின்றார்-ரஷ்யாவால்.
இவை அனைத்தும் உலகம் செல்லகூடிய அல்லது இட்டு செல்லப்படும் திசைகளையும் நகர்வுகளையும் சுட்டி காட்டும் உதாரணங்களாய் அமைகின்றன எனலாம்.  சுருக்கமாக கூறினால், ரஷ்யாவின் இப்புதிய நகர்வுகளானது, பதில் நகர்வுகளை அமெரிக்காவிடம் இருந்து கோரவே செய்யும் எனலாம். இன்றைய உலக நெருக்கடி கொண்டு வந்து சேர்த்துள்ள புதுவிடயம் இதுவாகவே ஆகின்றது எனலாம். மேலும் தெளிவுற கூறுவோமாயின், உண்மையில்,  லெப்ரோவ், தனது ஆப்ரிக்க விஜயத்தின் போது குறித்ததை குறிக்கலாம்:

இனியும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை. பொய்மையும் சூதும் வாதும், நம்பகமற்ற தன்மையுமே இப்பேச்சுவார்த்தைகளின் பெறுபேறென்றால், மேலும் பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் அர்த்தமில்லை. இதனாலேயே ரஷ்யா இன்று, கிழக்கு நோக்கியும் நகர தொடங்கி உள்ளது”.

8

அமெரிக்காவின் நேர்மையற்ற தன்மையும், குளறுபடிகளுமே, தம்மை தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் நகர வைத்துவிட்டது என லெப்ரோவ், தன் ஆப்ரிக்க விஜயத்தின் போது ஊடகங்களுக்கு மேலே, தெரிவித்ததில் உண்மை இருக்கலாம்.

இருந்தும், அமெரிக்கா, லெப்ரோவின் இவ் ஆப்பிரிக்க விஜயத்தை சவாலுக்கு உட்படுத்துவது போல, அல்லது ஆப்ரிக்க தலைவர்களை திசை திருப்ப முயற்சிப்பது போல, இதே நாட்களில் தனது திறைச்சேரி செயலாளரை, ஆப்ரிக்கா கண்டத்திற்கு பத்து தினங்கள் சுற்றுபயணமாய் அனுப்பி வைத்தது.

ரஷ்யா இதனை, ஓர் திசை திருப்பல் அல்லது தலையீடு செய்தல் என வர்ணிக்க துணிந்தது. ஆனால் இரு பெரும் சக்திகளிடையே நடக்கும் இவ் இழுபறி, இன்று உலகின் பல முக்கிய முனைகளிலும் இன்னும், இன்று தீவிரப்படுவதாகவும் நடந்தேறுவதாகவுமே உள்ளது.

அமெரிக்க திறைசேரியின் செயலாளர் YELLEN  அம்மையார், 18.01.2023இல் ஆப்ரிக்க கண்டத்தின், செனகல் நகரில் வந்திறங்கினார். ஆனால், அப்படி அவர் வரும் வழியில், சுவிட்சர்லாந்தின், அவரது நேரெதிர் உத்தியோகத்தரான, சீனத்தின் LIU HEIயை. சந்தித்து, ‘கதைத்து’ விட்டு வந்தார்.இது தொடர்பில், ஆப்ரிக்க தலைவர்களுக்கு, எவ்வித போதனை நடத்துவார் என்பது எதிர்ப்பார்க்க கூடியதே.
இருந்தும், இது பொறுத்து கருத்து தெரிவித்த ரஷ்யா, இது வழமையானதுதான். அதாவது, நாங்களும் ஆப்ரிக்க தலைவர்களும் ஓர் உடன்பாட்டுக்கு வந்து சேர்வதை குழப்பியடிக்கும் முகமாகவே இந்த விஜயம் அமைந்துள்ளது. இது வழமையானதுதான் என அபிப்பிராயப்படுவார்.

அதாவது, ரஷ்யா ஆப்ரிக்க கண்டத்தில் கால் ஊன்றுவதை, தடுக்கும் முகமாக, ரஷ்யாவின் எதிர் சக்தி மூக்கை நுழைப்பதை வழமையானதுதான் என சமாதானப்படுவார் அவர்.

YELLENஉம் வந்திறங்கியவுடன் கூறியது: “அமெரிக்காவானது, அதன் போட்டியாளர்களை விட (RIVALS), ஆப்ரிக்காவுக்கு கூடுதலான நன்மைகளை வழங்கி உள்ளது”. மேலும், டிசம்பரில் பைடனும், அமெரிக்க உதவி ஜனாதிபதி, கமலா ஹாரிசும் ஆப்ரிக்க கண்டத்திற்கு வரவிருப்பது குறித்தும், தற்போதைய உணவு நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் என்றும், ரஷ்யா, ஆப்ரிக்காவின் உணவு நெருக்கடியை ஓர் ஆயுதமாக பாவித்து வருவது குறித்தும் அம்மையார் தன் பங்குக்கு அள்ளி வைக்க தவறவில்லை. இது போதாதென, அம்மையார் சீனாவையும் ஒரு பிடி பிடிக்க மறந்தாரில்லை. (African News:20.01.2023).வரலாறு முழுவதும் இப்படித்தான் இருந்து வந்துள்ளது.

உலக பரப்பில், இன்று நிகழ்ந்தேறும் இக் கெடுபிடி நிகழ்வுகள் போலவே, கிட்டத்தட்ட, இலங்கையிலும், ஒரு சக்தி வந்து போனவுடன், அதனை எதிர்க்கும் மறு சக்தி வருவதும் அழைக்கப்படுவதும் சகஜமாகின்றது.

உதாரணமாக, ஓர் இந்தியா வந்துவிட்டு சென்றால், ஓர் அமெரிக்கா அல்லது ஓர் சீனா அல்லது ஓர் பாகிஸ்தான் வந்து சேர்ந்து விடும்-புது புது ‘சங்கதிகளோடு’. (அல்லது அழைக்கப்பட்டுவிடும்). நினைவேந்தல் காலங்களில் அல்லது ஜெனிவா கூட்ட தொடர் போன்ற சிறப்பான காலங்களில், இந்த அலை அடித்தல் கூடிவிடும்-யாழ் பல்கலைகழகத்திற்கு, ஒரு கட்டு புத்தகங்கள் கணிணிகள்-என்றளவில், பலதும் வகைப்பட்ட பரிசு மழைகள் கொட்டப்படும்-(ஆப்ரிக்காவை போல)-அல்லது தமிழ் பண்டிகை காலங்களில் மேற்கின் தலைவர்கள் மழலையில் தமிழில் வாழ்த்து தெரிவிப்பதை போல.
ஆனால், இவற்றில் ஒரு மாறுதல் இன்று, வந்து சேர்ந்துள்ளது என்பதிலேயே, உலகின் இன்றைய முக்கியத்துவம் செறிவடைகின்றது.

9

ஜெய்சங்கரின் விஜயத்தை அடுத்து நடந்தேறிய அண்மை சர்வகட்சி மாநாட்டில், ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பின்வரும் கூற்றை முன்வைத்திருந்தார்:

13வது திருத்த சட்டத்தினை அமுல்படுத்த கடமைப்பட்டுள்ளேன். அதிகாரத்தை பகிர நான் தயார்”.

ஆனால், அவர் எந்த காலப்பகுதியில் 13வது திருத்த சட்டம் அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பிலும் அதிகரங்களை பகிர்தல் என்பது தொடர்பிலும் பூரண மௌனமே சாதித்துள்ளார், என்பது குறிக்கத்தக்கது.  
அதாவது, இது நாளையும் நடக்கும் பத்து பதினைந்து வருடங்கள் கழித்தும் நடக்கும் என்ற விதத்திலேயே அவரது இக்கூற்று அமைந்ததாகின்றது.  பெறுமானமற்ற இக்கூற்றை ஆற்ற, ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒன்றும் கடிக்க தெரியாத பாப்பா அல்ல என்று அரசியர் விமர்சகர்கள் இன்று சுட்டிக் காட்டி உள்ளனர். போதாதற்கு காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு தரப்பினரே முடிவு செய்ய வேண்டும் என்றும் இதற்காக ஒரு காணி குழுவையும் தேசிய காணி கொள்கையையும் தீர்மானிக்க இருக்கின்றோம் என்றெல்லாம் இவர் கூறும் கூற்றின் உண்மை பெறுமானம், என்பது, ஈற்றில் கையை விரித்து விடுவதே என்பதையும் இதே விமர்சகர்கள் முன்வைத்துள்ளனர்.  இது போலவே, பொலிஸ் ஆணைக்குழு தொடர்பாக, மாகாண பொலிஸ் ஆணைக்குழு தொடர்பில் -இவ்றை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்-என்ற வகையில் இவர் ஆற்றும் கூற்றின் அர்த்தம், ஈற்றில் இவை அனைத்தும் நடந்தேறுவது எந்நாளில், எப்போது, நடக்க கூடிய காரியம்தானா என்பவை போன்ற கேள்விகளுக்கு ஒருவரை இட்டு செல்வதாகின்றது.

இவை அனைத்தையும் ஒன்று சேர தொகுத்து பார்க்கும் பொழுது ஜெய்சங்கரும் வௌ;வேறு பாதைகளிலா அல்லது ஒரே பாதையிலா பயணிக்கின்றனர் எனும் கேள்வி மேல்நோக்கி நகர்வதாயுள்ளது. இருந்தும், இக்கூற்றின் போது, ‘இந்தியா’ என்ற பெயர், மருந்துக்கு தானும், குறிப்பிடப்பட்டதாக இல்லை எனலாம்.  அதாவது, 13வது திருத்த சட்டம் என்பது முற்றாக இந்தியா சம்பந்தப்படாதது என காட்டப்பட்டது மாத்திரமல்லாமல், முழுக்க முழுக்க இது, இந்நாட்டு பாராளுமன்றம் சம்பந்தப்பட்ட ஒன்றே-இதனை ஒரு தனி நபர் கூட பாராளுமன்றத்தில் ஒரு யோசனையை கொண்டு வந்து இல்லாதொழிக்க முடியும் என்றளவில் அன்னார் நிகழ்த்தி முடித்து விட்டார்.

சுருக்கமாக கூறினால், இலங்கையின் தமிழ் கேள்வியில், இந்தியாவை கத்தரித்து விடுவது அன்னாரின் முதல் தேவைப்பாடா என்ற கேள்வி இச்சூழலில் எழுவதாயுள்ளது. ஆனால், மறுபுறத்தில், இந்தியாவுக்கான இலங்கை தூதுவர், இதே தினங்களில், டைம்ஸ் ஒப் இந்தியாவில் தனது பேட்டி ஒன்றை பிரசுரிக்க செய்து விட்டார். பேட்டியின் சாரம், இந்தியாவே, இந்தியா மட்டுமே இலங்கைக்கு உதவும் புண்ணிய நாடு என்பதேயாகும்.  சுருக்கமாக சொன்னால், ஒரு புறம் கத்தரிப்பது. மறுபுறம், வானளவு புகழ்ந்து தள்ளுவது. இவை இலங்கையின் மனநிலைகளையும், அதற்கு வடிவம் தரும் ஜனாதிபதிஃதூதுவர் நடவடிக்கைகளையும் பறைசாற்றுவதாக உள்ளது.

இது ஒரு புறம் இருக்க, இதே நாட்களில், தினங்களில் விமல் வீரவன்ச முதல், சரத் வீரசேகர-பௌத்த மத குரு தலைவர்கள் ஈறாக, கிரமமாக 13க்கு எதிராக களம் இறக்கி விடப்பட்டனர்-எதிர்ப்பார்க்கப்பட்டது போல. ஆனால், இந்த நகர்வுகளை இந்தியா உள்வாங்காது இருக்கும் என்பதை நம்புவது சற்றே கடினமான செய்கையாகவே இருக்கும். இச்சூழ்நிலையிலேயே, அமெரிக்க Under Secretary விக்டோரியா நியுலன்ட்டும் இலங்கைக்கு வந்து சேர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இருப்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜெய்சங்கர் வந்து முடிய நியூலன்டின் வருகை தேவைப்பட்டதாகின்றது. சுருக்கமாக கூறினால், ஒரு சக்தியின் வரவு மறுசக்தியை ஈர்ப்பதாக இருக்கின்றது.

இது நேற்றும் நடந்த ஒரு சங்கதிதான் எனினும் இன்றைய மாறிய உலக சூழ்நிலையில் இவ் வரவுகள், லெப்ரோவின் கூற்று போல, புதிய அர்த்தங்களை உள்ளடக்ககூடியனவாகவும், தீவிரமானதாகவும் இருப்பதற்குறிய வாய்ப்புகள் அதிகமாகின்றன எனலாம். இதற்கமைய, தமிழ் கேள்வியின் பரிமாணங்கள் வித்தியாசமுறும்.  ஆனால், உலக அளவில் நடந்தேறும் மாற்றங்கள் இவ் இருவகைப்பட்ட அரசியல் சக்திகளின் இயங்குகையை-அவற்றின் சக்தி மட்டத்தை-வௌ;வேறானதாக நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கப்போகின்றன என்பது தெளிவு.  இதற்கமைய, தமிழர் கேள்வி இனிவரும் நாட்களில் வித்தியாசமான பெறுமானங்களை ஏந்தக்கூடும்.  இதற்கமைய, தமிழ் அரசியலின் நடைமுறைகளும் மாறுதல் பெறுமா என்பதே கேள்வியாகின்றது-அதாவது, தத்தம் கனவுநிலைகளில் இருந்து விழித்தெழுந்து-உலக யதார்த்தங்களுடன் இறுகி பயணித்து.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.