1
 
உக்ரைன் - ரஷ்ய போர்:

ஒக்டோபர் 8 இல், கிரைமியா பாலத்தை, தனது குண்டுவெடிப்பால் உக்ரைன் தகர்த்தெரிந்த முயற்சியுடன், ‘ரஷ்யா–உக்ரைன் போர்’  ஒரு புது பரிணமிப்பை எட்டிப்பிடித்தது எனலாம்.  இதே நாளில், ரஷ்யா, தனது போர் முனைக்கான, புதிய எளபதியையும் நியமித்தது–– Sergei Surovikin . Surovikin னின் நியமிப்புடன், ரஷ்யாவின் ‘யுத்த அணுகுமுறை’, புதிய மாற்றங்களை கண்டது. இதுவரை பாவித்திராத ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் ரஷ்யா பெருமளவில் பாவிக்க தொடங்கியது என்பது இரண்டாம் பட்சமே. முக்கியமானது, தன் யுத்த ‘அணுகுமுறையை’ ரஷ்யா மாற்றிக் கொண்டது என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது.

ஓர் ‘எல்லைக்குட்பட்ட, சிறப்பு போர் நடவடிக்கை’ என்ற எண்ணங்கள் அன்றுடன் காலாவதியாகி, இப்போது விரிய தொடங்குவது, இரு நாடுகளுக்குமிடையிலான திறந்த வெளி போர் என்ற எண்ணக்கருவை, ரஷ்யா சுவீகரித்துக்கொண்டது இத்தகர்ப்பு முயற்சியின் பின்னர்தான், என்று கூறினால் அது மிகையாகாது.

‘பெப்ரவரி நடவடிக்கை’, பேச்சுவார்த்தைக்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டு இயங்கியது. ஆனால் ‘இப்போதைய நடவடிக்கை’, முழு நிறைவான, உக்ரைனின், சரணடைவை, குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றது. இதுவே இரண்டுக்குமிடையிலான வித்தியாசமானது. இவ்வித்தியாசமானது, ரஷ்ய புதிய தளபதி Sergei  Surovikin தனது நியமிப்பை ஒட்டி வெளியிட்ட நேர்காணலிலும் வெளிபடவே செய்தது.

உக்ரைன் போருக்கு ஒரு ‘சிரிய தீர்வு’ கிடையாது  (Syrian Answer) உக்ரைன் போருக்கு ஒரு ‘உக்ரைன் தீர்வே’ உண்டு, என்ற அடிப்படையில் மாத்திரமே, இப் பொறுப்பை நான் இன்று ஏற்றுள்ளேன்” என்பது அவரது கூற்றானது.

கர்ணல்  Douglas Macregor போனற இராணுவப் புலனாய்வாளர்கள், இக்கூற்றின் முழு அர்த்தத்தையும் ஆழ உணர தலைப்பட்டவர்களாகவே காணப்பட்டனர். இதன் பொருள்: ‘ஒரு சிரிய அரசு, ஓர் ஈரானிய நலன், ஓர் துர்க்கிய நலன், ஓர் அமெரிக்க நலன், ஓர் குர்தீஷிய, நலன் - இவை யாவற்றையும் கவனத்தில் கொள்ள கூடியதாகவே – ஓர் ‘சிரிய தீர்வு’ – அதாவது, ஒரு ‘ரஷ்ய ராணுவ முன்னெடுப்பு’ அமையும், என்பதே Surovikin  இன் ‘சிரிய தீர்வு’ என்ற இரு சொல்லில், அடங்கும் ஆழமான அர்த்தப்பாடாகும். ஆனால் இது போல அன்றி, ‘உக்ரைன் தீர்வு’ என்பது ஒரு ரஷ்ய நலனை தவிர்த்து, வேறு எந்த ஓர் நலனையும் கவனத்தில் கொள்ள சம்மதியாது, என்பதே Surovikin உள் கருத்தாக (வெளிப்படை அர்த்தமாக) அமைந்து போகின்றது.

இதே கருத்து மேலும் மிக மிக தெளிவாகவும், மேலும் அதிக உறுதியாகவும், மிக அண்மையில் ரஷ்ய தூதுவரால், பின்வருமாறு வெளியிடப்பட்டது: “அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் (இனி) உக்ரைன் ஒரு பேசு பொருளாக இருக்கப் போவதில்லை”. (18.11.2022 - CNN). இவை, இரண்டையும் இணைக்குமிடத்து, இனி. ‘ரஷ்ய-உக்ரைன்’ போரில் வெளியாரின் தலையீடுகளை தாம் பொருட்படுத்த போவதுமில்லை அங்கீகரிக்க போவதுமில்லை என்ற ரஷ்ய வெளிப்பாடு தெளிவாகின்றது. ஆனால், நாளும் மாறிவரும் போர் சூழலில், தற்சமய ரஷ்யாவின் அணுகுமுறை, ரஷ்ய உதவி வெளிநாட்டமைச்சின், தீர்க்கமான மிக அண்மித்த கூற்றில் வெளிப்பட்டது: “ரஷ்யா–அமெரிக்கா பேச்சு வார்த்தையில், பங்கெடுத்துக் கொள்ள சம்மதம் கொண்டே உள்ளது. ஆனால் அது, நடக்கக் கூடியது என்பதெல்லாம் டிசம்பர் மாதத்திற்கு பின்னரே சாத்தியப்படும்” என்பது அவரது கூற்றாகின்றது. (நேர்காணல் : RT : 30-11-2022).
 
இருக்கலாம். ஏனெனில், டிசெம்பர் மாதம், என்பது குளிர்காலத்தின் வரவை மாத்திரம் குறிப்பதில்லை. ரஷ்ய படைகளின், எதிர்ப்பார்க்கப்படும், பிரமாண்டமான உள் நுழைவையும் குறிக்கவே செய்கின்றது. இதைவிட முக்கியமாக, உக்ரைன் போர் முனையில், தன் வலிமையை சந்தேகம் அற்ற முறையில் நிரூபித்த பின்னரே, இனி, பேச்சுவார்த்தை நோக்கி தன் கவனத்தை திருப்பலாம் என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடாகின்றது.

கிரைமியா பால தகர்ப்பும், எற்படுத்தப்பட்ட மாற்றங்களும்:

கிரைமியா பால தகர்த்தெறிப்பு முயற்சிக்கு கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு முன்னதாகவே கடலுக்கடியிலான ரஷ்ய எரிவாயு குழாய்களின் வெடிப்பும் நிகழ்ந்து முடிந்தது. (26.09.2022)  “இது விபத்து அல்ல. திட்டமிட்ட நாச முயற்சி இது” என டென்மார்க் பிரதமர் இதனை விவரித்தார். (28.09.2022). காரணம் உண்டு. கடலுக்கடியில், 70–90 மீட்டர் ஆழத்தில், 12 சென்றிமீற்றர் தடிப்பில், எஃகும் காங்கிரீட்டும் கொண்டு அமைக்கப்பட்ட, எரிவாயு குழாய்கள் தகர்க்கப்பட வேண்டுமெனில், அதனை ஒரு சில குழுக்களால் தனிப்பட செய்து முடிக்க முடியாது. ஒரு  வினைத்திறனை கொண்ட சில அரசுகளால் கூட இதனை செய்வது கடினமான செய்கையாகவே இருக்கும். ராணுவ ஆய்வாளர்களின் கணிப்பின் படி, இக் கருமத்தை ஆற்றக் கூடிய ‘இரண்டொரு நாடுகளே’, உண்டு. இவற்றில், பிரிட்டனும் இதற்கான தகுதியை கொண்டுள்ளது என்பதே ஆகும்.  மறுபுறம், இது தொடர்பான, விசாரணைகளில் பங்கெடுக்கும் உரிமையையும், மேற்கு, ரஷ்யாவுக்கு மறுத்து விட்டது, என்பதும் குறிக்கத்தக்கதே.

அதாவது, பலகோடி செலவு செய்து, எரிவாயுவை ஐரோப்பாவுக்கு (முக்கியமாக ஜேர்மனுக்கு) மிக குறைந்த விலையில், முன்னெடுக்கப்பட்ட, பிரமாண்டமான ஒரு திட்டம், சதி முயற்சியில், தகர்க்கப்பட்டது என்பது ஒரு புறம் இருக்க, இச்சதி முயற்சி குறித்த, ஏற்கத்தக்க கூடிய ஒரு விசாரணை முயற்சியில், ஒரு பங்குதாராராகும் முயற்சியும் ரஷ்யாவுக்கு மறுக்கப்பட்டுவிட்டது.  இது ஒரு புறம் இருக்க, இதனை தொடர்ந்தாற் போல், புட்டினின் இன்னுமொரு செல்லப் பிள்ளையான கிரைமியா பால தகர்ப்பு முயற்சிக்கு பின்னர், உக்ரைன் நடந்து கொண்ட விதமும் பெரும் திகைப்பை உண்டு பண்ணுவதாகவே இருந்தது. பால தகர்ப்பு முயற்சியை அடுத்து, அதனை உக்ரைன், முத்திரை வெளியிட்டு கொண்டாடியது மாத்திரமல்ல, தகர்ப்புக்கான குண்டு வெடிப்பையும், அப்போது கிளம்பிய தீப்பிழம்புகளையும் அது தத்ரூபமாக படம்பிடித்து, பெரிய பெரிய சித்திரங்களாக காட்சிப்படுத்தியது, புகைப்படங்களாக –சட்டகம் அமைத்து. பின் தனது நகரங்களின் மையப் பகுதிகளில் இவற்றை இருத்தி,  மக்கள் மத்தியில் கோலாகலமாக கண்காட்சி நடத்தியது.  காட்சிக்காக வைத்தது. மக்களும் இதனை கண்டுகளித்து, இப் பிரமாண்ட படங்களின் முன் நின்று புகைப்படங்கள் எடுப்பதும், செல்பிகளை எடுப்பதுமாய் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனிடை, இரண்டு தாக்குதல்களும் நடந்தேறிய பத்து தினங்கள் கடந்து முடிந்த கையோடு புட்டின் Surokovin ஐ உக்ரைன் போர்த் தளபதி ஆக்கியதும் நடந்து முடிந்தது.  

ரஷ்யா ஆரம்பத்தில், பெப்ரவரியில் தொடங்கிய ‘சிறப்பு படை முயற்சி’ என்பது, உண்மையில் ஏமாற்றம் அளித்ததாகவே ராணுவ ஆய்வாளர்கள் கூறினர். காரணம், எதிர்பார்த்த மூர்க்கத்துடன் ரஷ்ய ராணுவம் இயங்கவில்லை. அதனது, எதிர்பார்த்த துருப்புகளின் எண்ணிக்கைகளும் களத்தில் இறக்கப்பட்டதாக இல்லை. ஆயுதங்களும் மிக அடக்கமாகவே பாவிக்கப்பட்டன. காரணம், “உக்ரைனிய மக்கள் எமது சகோதரர்கள் - அவர்களுக்கு தீங்கிழைக்காதவாறு - இவ் ராணுவ நடவடிக்கை அமைந்தாக வேண்டும்” என்பது புட்டினின் கோரிக்கையாக இருந்தது. இக்கட்டளை காரணமாக, மக்கள் பாதிப்படையக் கூடிய, கட்டமைப்புகளை தவிர்த்து, ரஷ்யாவின் ஆரம்ப கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக, எதிர்பார்த்த இலகு வெற்றிகள் கிடைக்கப் பெறவில்லை என்பது ஒரு புறம் இருக்க, தமது ராணுவ தளபதிகளிடையேயும், தமது அரசியல் விமர்சகர்களிடையேயும் மாத்திரமல்லாமல் தமது மக்களிடையே,  புட்டின் சரமாரியாக கேள்விகளை எதிர் கொள்ள தொடங்கினார். இச்சூழ்நிலைகள், புதிய படை தளபதியின் நியமிப்பை கோருவதாக அமைந்தவனவாக இருக்கலாம். இவர் இவரது பதவியேற்பின் பின், உக்ரைனின் நீர், மின்சார, எரிசக்தி, ரயில் - போன்ற அனைத்து மைய கட்டமைப்புகளும், ஏவுகணைகள் கொண்டு, கிரமமாக, படிப் படியாக அழிக்கப்பட்டது.

ஒரு கணிப்பின் பிரகாரம், உக்ரைனின் தலைநகரான கியவில் மாத்திரம் பத்து லட்சத்திற்கு அதிமான மக்கள் மின்சாரமோ அன்றி எரிபொருளோ அன்றி வெப்ப உபகரணங்களோ இன்றி இக் குறித்த காலத்தில், அவதியுறுகின்றனர் என கணிக்கப்படுகின்றது. மறுபுறம், நீர், எரிசக்தி, மின்சாரம் என்பன கியவுக்கு மாத்திரமின்றி, முழு உக்ரைனுக்குமே கிடைக்க மாட்டாமல் அல்லலுறுகின்றது என்று நாளாந்தம் வெளிவரும் அறிக்கைகளுக்கும், முடிவில்லாமல் போனது.

“இவை போர் விதிகளில் ஒன்று: அமெரிக்கா நாசிகளுக்கெதிராக, ஈராக்கிற்கு எதிராக, அல்லது செர்பிய–கொசோவா யுத்தத்தின் போது – நீர், எரிசக்தி–மின் விநியோக மையங்களை குறிவைத்து தாக்கி, திட்டமிட்டு அழித்து தீர்த்தது தற்செயலால் அல்ல. ஏற்கனவே திட்டமிட்டதின் பெறுபேறே இது. இதுவே இரண்டாவது உலக போரின்போது, நாசிகளின் விமானங்கள் பறக்க இரண்டு மணி நேர எரிசக்தியே மிஞ்சி இருக்க வழி வகுத்தது.  நாசி படைகள், எரிபொருள் இன்றி, தமது பீரங்கிகளை குதிரைகளை கொண்டு இழுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன….”

இது கர்ணல் டக்லஸ் மக்ரோகரின் கூற்று.

அதாவது, இதன்படி பார்த்தால், உக்ரைன்-ரஷ்ய போரின் முதலாவது கட்டம் நிறைவு பெற்று விட்டது. அதாவது, எரிசக்தி–மின்சார–நீர் வழங்கும் மையங்களும் ராணுவ தளபாடங்களின் நகர்வுக்கு ஆணிவேரான ரயில் மையங்களும் தாக்கி முற்றாக அழிப்பட்டு விட்டன. இரண்டாவது கட்டம், வரவிருக்கும் குளிர் காலத்துடன் (அதாவது டிசம்பர் முதல்) துவங்க உள்ளது.

நிலம் கெட்டிப்பட வேண்டும் - கட்டாந்தரையைப்போல – பத்து, பதினைந்து அடி ஆழத்திற்கு… இதுவே சகதிகளை நீங்கி, துருப்பினர் தமது கன ரக வாகனங்களுடன், பயணிக்க வசதியையும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தரும்…” - இது டிசெம்பர் 10-19 இல் நடைபெறும் என்பது டக்லசின் கூற்று. ஆனால், ஏற்கனவே, குளிர்காலத்தின் முன்னரேயே, அவரது கணிப்பின் பிரகாரம், குறிப்பிடத்தக்க அளவில், நட்டத்தினை ரஷ்ய ஏகணைகளும், ஆட்லரிகளும் உக்ரைன் ராணுவத்திற்கு ஏற்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட 80 வீதமான உக்ரைனின் விமான எதிர்ப்பு தாங்கிகளும் விமானங்களும் தவிடு பொடியாகி உள்ளன. அவரின் கணிப்பில், இதற்கான அடிப்படை காரணம் அவர்களின் விண்வெளி வலிமையே என்பார் அவர்.

விண்வெளி வலிமை:

இதுவரையில் 74 விண்வெளி செயற்கைகோள்களை, ரஷ்யா கொண்டிருப்பதாக ஒரு கணிப்பு சொல்கின்றது. இருந்தும் இதைவிட, இவ் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

ஓர்  உக்ரைன்-ரஷ்ய போர் பின்னணியில், ரஷ்யா, கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம், பல்வேறு விதமான செயற்கை கோள்களை விண்வெளிக்கு செலுத்தியது. கடந்த ஒக்டோபரில், ரஷ்யா விண்வெளிக்கு செலுத்திய செயற்கை கோள்கள் குறித்து கருத்து தெரிவித்த Space சஞ்சிகை, (25.10.2022) இது ‘கடந்த இரு கிழமைகளில்’ ரஷ்யா செலுத்திய ‘5வது செலுத்துகை’  (lift Off) என கருத்து தெரிவித்தது. இந்நான்கு செயற்கை கோள்களும், பூமியிலிருந்து 1500KM தொலைவில், விண்வெளி ஓடுபாதையில் (Orbit நிலை நிறுத்தப்பட்டன.

இதற்கு பத்து தினங்களின் முன், 15.10.2022 இல், மர்மமான ஒரு ராணுவ செயற்கை கோளை (EMKA -3) நிலை நிறுத்திய ரஷ்யா, ஒரு கிழமைக்குள்ளாகவே (21.10.2022) மேலும் இரு ராணுவ செயற்கை கோள்களை நிலைநிறுத்தியது, சர்வதேச அவதானத்தை, ஈர்த்தது.
ஆனால், இத்துடன் நிறுத்தாது, நவம்பரில் மேலும், பல ராக்கெட்டுக்களை விண்ணில் ஏவி, தனக்கு தேவைப்படும் செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தியது ரஷ்யா.

நவம்பரில், ரஷ்யாவால் விண்ணில் செலுத்தப்பட்ட ராணுவ செயற்கை கோள்கள் முக்கியமானவை. நவம்பர் 22 அளவில் ரஷ்யாவால் செலுத்தி நிலைநிறுத்தப்பட்ட 6 ராணுவ செயற்கை கோள்களும், உக்ரைனிய-ரஷ்ய போர் முனையின் பின்னணியில், எத்தகைய பாத்திரத்தை வகிக்க கூடும் என்பது தெளிவு.

ஓர் அணு ஆயுத முன்னெச்சரிக்கையையும், மாஸ்கோவை பாதுகாக்கும் ஓர் திட்டத்தின் பகுதியை உள்ளடக்கியதாகவும், எதிர் ஏவுகணை நடவடிக்கைகளுக்கு துணைபுரிவதாகவும், இவ் ஆறு செயற்கை கோள்களும் இயங்கக்கூடியவை என கருதப்படுகின்றன. இது போக, நவம்பர் துவக்கத்தில் (02.11.2022) ஏவப்பட்ட ராணுவ செயற்கை கோளான ‘„Tunera–ஏவுகணை– முன்னெச்சரிக்கை செயற்கைகோளும்’, கவனத்தில் எடுக்கப்படவே செய்கின்றது.

ரஷ்யா இப்படி அடுத்தடுத்ததாய், விண்வெளியில், சாவகாசமாக ராக்கெட்டுக்களை செலுத்துவது என்பது, கடினமற்ற ஒரு நடைமுறைத்தான் - நவீன விஞ்ஞானத்தில், வழமையானதுதான் என்று கருதவும் இடமுண்டு. ஆனால் ஒரு 20 வருட காலமாய், முக்கி முணகி, தனது எட்டு செயற்கைகோள்கள் கொண்ட ஒரே ஒரு ராக்கெட்டை ஏவிய ஜப்பான், தன் முயற்சி தோல்வியில் முடிய கண்டது. (12.10.2022) (Epsilon) என்ற இந்த 85 அடி உயரமும் 95.6 தொன்னையும் கொண்ட, இவ் ரொக்கட்டுக்கான மொத்த பெறுமதி யாதாக இருக்கக்கூடும் என்பது ஊகிக்க கூடிய ஒன்றே.

இதே போன்று, இதற்கு முந்திய தினமான 13.10.2022 இல் பிரிட்டிஷ் தனது Skylark ராக்கெட்டை செலுத்தியது. 36 அடி உயரமும், 4 தொன் எடையுமுள்ள இவ் ராக்கெட் 100-125 கிலோ மீற்றர் பயணிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனாலும், எடுத்த எடுப்பில், சொற்ப தூரத்திலேயே (பாழும் 500 மீட்டர்) கடலில் வீழ்ந்தது.

இது ஒருபுறம் இருக்க, அண்மித்த (இரண்டொரு நாட்களின் முன்னதான) பக்ரூத் நகருக்கான உக்ரைன்-ரஷ்ய போரில், செயற்கை கோள்களின் பங்களிப்பு குறித்து, ராணுவ விமர்சனர்கள் கோடிட்டு காட்டாமலும் இல்லை. உக்ரைனிய படைகள், செயற்கை கோள்களின் வசதியற்று தடுமாறுகின்றன–இச் செயற்கை கோள்கள் ரஷ்யாவால் குழப்பியடிக்கப்படுகின்றன என்பது அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாகின்றது.

இதுவரையில் எலன் மாஸ்க், ‘ரகசியமாய்’ (?) உக்ரைனிய படைகளுக்கு உதவினார் என்பதும், பின்னர் தனக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில், முரண் விழைந்து விரோதம் பூண்டுவிட்டதாயும் ஒரு காட்சியை அவர் கட்டமைக்க முயன்றார். ஆனால் ரஷ்யாவோ இதை  சிறிதும் சட்டை செய்ததாக இல்லை.  இந்நிலையில் துருப்புகளின் நடமாட்டம், நகர்வுகள் என்பன குறித்து ரஷ்ய செயற்கை கோள்கள் மிக தெளிவுற படம் பிடிக்க, ரஷ்ய துருப்புகளின் நகர்வுகள் - நடமாட்டங்கள்–(Line of Defence ) குறித்து, உக்ரைனிய படைகள், இருளில் இருத்தப்பட்டு விட்டதாகவும் - இதுவே, ரஷ்ய படைகள் தற்போது அடையும் வெற்றிகளின் ஆணி வேர் என்றும் கூறப்படுகின்றது. அதாவது, விண்வெளியில் தற்போது சஞ்சரிக்கும் US-NATO செயற்கை கோள் வலைப்பின்னல்கள் (Constellations )–உக்ரைனை பொருத்தமட்டில், ரஷ்யாவால் கேள்விக்குட்படுத்தப்பட்டு விட்டன. சுருக்கமாக கூறினால், ரஷ்யாவுக்கும் மேற்குக்கும் இடையே நடைபெறும் இவ் விண்வெளி போரின், மொத்த பெறுமானமும், இவ் உக்ரைனிய-ரஷ்ய போரில், மெல்ல, மெல்ல வெளிப்படுத்தப்படுவதாகவே இருக்கின்றது.
இச் சூழ்நிலையிலேயே, பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட, டிசம்பர் குளிர்காலமும் வந்து சேர்கின்றது.

டிசம்பர்  குளிர்காலம்:

“தரை கெட்டி பட்டு விட்டால், உக்ரைனை சுற்றிலும் வளைத்து நிற்கும், 540,000, நன்கு பயிற்றப்பட்ட ரஷ்ய துருப்பினர் நகர ஆரம்பித்து விடுவர். இவர்கள் மூன்று நிலையில் நகர்வர். வடக்கு–தெற்கு–மேற்கு என. இவர்கள் ருமேனிய-போலந்து ஆசிய இரு நாட்டினரின் எல்லைகளை மூடி விடவும் கூடும். அதாவது, இதுவரை 20 சதவீத துருப்புகளையே இறக்கிய ரஷ்யா, இப்போது முற்று முழுதான வீச்சுடன் (80 வீதத்தில்) தன் படை பலத்தை செலுத்த முற்படும். மேலும், இதுவரையில் பாவித்திராத ஆயுதங்களை, இந்த படைபிரிவுகள் கொண்டியங்கவும் கூடும். இது சர்வ நாசத்தை விளைவிக்க கூடியது”.

இது பிரபல்யமான, ராணுவ விமர்சகர் கர்ணல் டக்ளஸ் மெக்ரோகரின் கூற்று. ஆனால், டக்ளஸ் பயப்படுவது இது மாத்திரமல்ல.

நீங்கள் ஒரு புது ரஷ்யாவை வடிவமைக்கின்றீர்கள் - ஒரு Monster ஐத் தோற்றுவிக்கின்றீர்கள்”.

இதுவே, டக்ளஸ் பயப்படும் பாரிய விடயமுமாகின்றது. வேறு வார்த்தையில் கூறுவதானால், இதுவே, ஓர் புது உலக ஒழுங்குக்கும் வழிவகுக்க கூடியது, என்றாகின்றது.  இதனாலேயே கிசிஞர் முதல் டக்ளஸ் மகரோகர் வரை, உக்ரைன்  உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஆவல் தெரிவித்துள்ளனர். (தற்போதைய ரஷ்யா, சோவியத் அல்ல. எனவே தற்போதைய ரஷ்யாவுக்கு எதிராக சதிகளில் ஈடுபடுவது தேவையற்ற விடயம் என்பதே டக்லஸின் தார்ப்பரியம்).

தனது இறுதி உரைகளில் மெக்ரோகர், அமெரிக்க வெள்ளை மாளிகையின் ராணுவ ஆலோசகர் ஜெனரல் மார்க் மில்லியின் குணாதிசயங்களை எடுத்துரைக்கின்றார்: ‘அதிமுக்கிய’ விடயங்களில் சிலவற்றை ஊடகங்களுக்கு கசியவிடும் குணாதிசயங்களை கொண்டவர் - இவர் தனது ஆலோசனைகளை வெள்ளை மாளிகைக்கு வழங்குபவர்: ‘உக்ரைன் தன்னால் முடிந்த யாவற்றையும் செய் நேர்த்தியுடன் செய்து முடித்து விட்டது. ஆனால், இனி பேச்சுவார்த்தை நோக்கி திரும்ப வேண்டிய கணம் இது. கணம் கனிந்துவிட்டது’ என்று அவர், நிலைமையை கசிய விட்டுள்ளார். (10.11.2022: New York Times).

இவர், இப்படி வேண்டும் என்றே கசிய விட்டுள்ளாரா அல்லது தனது குணாதிசயங்களில் ஒன்றாக இதனை கொண்டுள்ளாரா என்பதெல்லாம் எமது தர்க்கத்துக்குரியதுதான். இருந்தும், போர் தனது முடிவெல்லைகளை நோக்கி சாவகாசமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. உக்ரைன், இன்னும் பணம், இன்னும் ஆயுதங்கள் (ஏவுகணைகள்) என்று கதறுகையில், நேட்டோ நாடுகளில் 20 கையை விரிக்கும் சூழ்நிலையை நோக்கி தள்ளப்பட்டுவிட்டன.  எழும் சூழ்நிலை, நேட்டோவை மாத்திரமல்ல –ஐரோப்பிய யூனியனையும் சீர்குலைத்து விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கும் வண்ணம், எண்ணெய்–எரிவாயு–பணவீக்கம்–வாழ்க்கை செலவு –போன்ற சுமைகளால் இந்நாடுகள் மேலும், மேலும் அவதியுற தொடங்கி உள்ளன.  வரவிருக்கும் –அல்லது–வந்துள்ள குளிர்காலம், விடயங்களை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல வாய்ப்பளிக்க கூடிய ஒன்றாக தென்படவில்லை.

இச்சூழ்நிலையிலேயே, பைடனின் மிக அண்மித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது. ‘நான் பேச்சு வார்த்தைக்கு தயாராகவே உள்ளேன்’ (01.12.2022). ‘கொலையாளி’ என்று வர்ணிக்கப்பட்ட ஒருவருடன் பேச்சுவார்த்தைக்கான விருப்பத்தை அன்னார் தெரிவித்துள்ளது, சர்வதேச ரீதியில், சற்று இள நகையுடன் நோக்கப்பட்டாலும், அமெரிக்காவை பொறுத்தவரை, இது வழமையானதுதான். உதாரணமாக, சீன விண்வெளி ஆய்வு மையத்தில் (Tiangong) தானும் பங்கேற்க அமெரிக்கா அண்மையில் விண்ணப்பித்த போது, 17 நாடுகளுக்கு அனுமதி அளித்த சீனா, அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டது (ஒக்டோபர் 2022). இதற்கு காரணம் உண்டு. சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் (ISS) பங்கேற்க சீனா விண்ணப்பித்த போது, அமெரிக்காவே. அவ் விண்ணப்பத்திற்கு எதிரான வீட்டோவை பாவித்து வரும் நாடாக தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. ஆனால் அதனை ‘மறந்து’ இப்போது விண்ணப்பித்து மூக்குடைப்பும் பட்டுக்கொண்டது. ஆனால் மறப்பது என்பது எமது பண்பாட்டுக்குரிய ஒன்று என்று மெக்ரோகர் கூறுவார்:

வியட்நாமை நாங்கள் மறக்கவில்லையா?  மறந்தோம். மக்களும் மறந்தார்கள். உலகமும் மறந்தது. ஏனெனில், அவ்விடயத்தை அடுத்து, வேறொரு கதை, ‘கதைக்கவும், உலகு செவிமடுக்கவும் தயாராக உள்ளது.. ஆப்கானை போன்று… அல்லது ஈராக்கை போன்று…” என்பார் அவர்.  இருக்கலாம். கிசிஞர் மார்ச் மாதத்தில் கூறியவற்றை, இப்போது நவம்பர் முடிய, உலகு, ஆரம்பிக்கவே ஆரம்பிக்கலாம்.

ஆனால், ரஷ்ய, ஜேர்மன், பிரான்ஸ் அணுசரனையில் மேற்கொள்ளப்பட்ட பண்டைய  Minsk ஒப்பந்தம் செயற்படுத்தப்பட்டிருந்தால், இவை யாவையுமே நடந்திராது. இதன் காரணமாகவே, எப்படியோ இருந்த நாடு, இப்போது எப்படியோ தவிடுபொடியாகி நிற்கின்றது. போதாததற்கு, தற்போது, தனது புதிய ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தையும் ((Defence System Rocket) ரஷ்யா செயல்படுத்தி பார்த்ததாக, ஊடக செய்திகள் விவரிக்கின்றன. (02.12.2022: : Reuters). இவை அனைத்தும், எதிர்வரும் குளிர்கால சூட்டை குறிக்கவல்லன.

சர்வதேசம், தந்த வாக்குறுதிகளை நம்பி, இப்போது தனது பட்டு வேட்டியையும் இழந்து போய் நிற்கும், ஹாஸ்ய நடிகர் செலன்ஸ்கி, இப்போது ஆiளெம ஒப்பந்தம் குறித்து, நினைத்து பார்ப்பது சற்று வேடிக்கையாகத்தான் இருக்கும். (இவர் ஒரு வேடிக்கை நடிகர் என்றாலும்). ஆனால், மேற்படி சூழ்நிலைகள், எம்மை, எமது இலங்கை–இந்திய ஒப்பந்தம் குறித்தும் திரும்பி பார்க்க வைக்கின்றன Minsk  ஒப்பந்தங்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளும் ஒரு நடைமுறையை கோரி நிற்கின்றன – முக்கியமாக, ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசு முன்வைக்கும் யோசனைகளின் பின்னணியில். இவை அனைத்தும், அடுத்து வரும் பகுதிகளில் வாதிக்கதக்கதுதான் - முக்கியமாக, மாறிய ஓர் புதிய உலக ஒழுங்கு (World Order) கொணர்ந்து சேர்க்கக்கூடிய விடயங்களின் பின்னணியில்…

(தொடரும்…)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.