13

பேட்டியின் போது திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் திருகோணமலை துறைமுக புனரமைப்பு திட்டத்தை முதன்முதலில், தானே 2003இல், பிரதமர் வாஜ்பாயுடன் கதைத்ததாகவும் பின்னர் சம்ப10ர் அனல்மின்திட்டம் குறித்தும் தாங்களே, முதன்முதலில் பிரேரித்ததாகவும், ஆனால் இந்தியா, எப்போதும் ஒப்பந்தத்துக்குள்ளாகவே(1987) விடயங்களை பார்க்க முற்படுகின்றது என்றும், தாங்களோ அதற்கும் வெளியே, வழிகளை தேடுவதாகவும் குறிப்பிட்டது ஏனையவற்றை போன்றே முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.

அதாவது, இக்கட்டுரையின் முற்பகுதியில் (12ம் பகுதி) குறிப்பிட்டவாறே, ‘விடயங்களை’ –முக்கியமாக ‘வட-கிழக்கு நலன்களை’ - இந்தியா முன் கவிழ்த்து விட்டு அல்லது இந்தியா முன் நகர்த்தி வைத்து விட்டு, வட-கிழக்கு மக்களும், இந்தியாவும் ஒருவரோடு ஒருவர் அடிபடுதலை ஊக்குவிக்கும் ஓர் அணுகுமுறை, இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல், உண்மையில், நடைமுறையில், காணக்கிட்டுகின்றதா என்பது ஓர்கேள்வியாகின்றது.  இருந்தும், திரு.யதீந்திரா அவர்கள் மிக அண்மையில் கூறியுள்ளது, மேற்படி அணுகுமுறைகளை கருத்தில் கொண்டதால் எழுந்த ஒன்றா என்பதும் சரியாக தெரியவில்லை:


“இந்தியாவை விடுதலை புலிகள் அணுகிய முறைமை தவறென்பதையே வரலாறு நிரூபித்துவிட்டது. இந்தியாவை தவிர்த்து, புறந்தள்ளி, தங்களின் இலக்கை அடைய முடியுமென்றே பிரபாகரன் நம்பினார். ஒன்றை நம்புவது தவறல்ல. ஆனால் அது தோல்வியுற்ற பின்னர் அந்த நம்பிக்கையை நியாயப்படுத்த முற்படுவதும், அதனை சரியென்று நம்பி செயற்பட எத்தனிப்பதும்தான் தவறானது” (தினக்குரல்:02.10.2022).

இத்தகைய ஓர் பின்னணியிலேயே மேற்படி நிட்டின் கோக்லேயின் பேட்டியின்போது திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ‘இந்தோ-பசுபிக்’ கடற்பிரதேசம் குறித்து அதிக அக்கறை காட்ட முற்பட்டதும் என்றுமில்லாத முக்கியத்துவத்தை எட்டி பிடிக்கின்றது எனலாம்.

14

இந்து மகா சமுத்திரத்தின்” பூகோள அரசியல் குறித்து பேட்டியாளர் நிட்டின் கோக்லே, பேச முற்பட்ட போதெல்லாம், அதில் அதிக அக்கறை செலுத்தாமல் தான் இப்போது “இந்து மகா சமுத்திரத்தின்” கடற் பிரதேசத்தை விட “இந்தோ-பசுபிக் கடற்பிரதேசம்” குறித்தே அதிக அக்கறை செலுத்த முற்பட்டுள்ளதாக அன்னார் சூட்சுமமாக தெரிவித்திருந்தார்.

அதாவது, “இந்துமகா சமுத்திர” கடற்பிரதேசமானது, “இந்தோ-பசுபிக்” கடற்பிரதேசமாக விரியுமிடத்து “பிரதேச வல்லரசு” என்ற பதம் வலுவிழந்து போன ஒரு பதமாகவே காட்சி தரும் என்பது வெளிப்படை. (அதாவது, அத்தகைய ஓர் விரிவாக்கத்தில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளும் ‘பிரதேச நாடுகளாக’ அல்லது ‘பிரதேச சக்திகளாக’ இணையும் சூழல் ஒன்று எழுந்துவிடும்).

இச்சூழலில், “பிரதேச வல்லரசு” என்ற இந்தியாவுக்கான அடைமொழி பொருந்தாததாகி உருவெடுத்து வெறும் மிகை கூற்றாக தென்படும் யதார்த்தம் வெளிக்கிளம்புவதாய் இருந்துவிடும்.

சுருக்கமாக கூறினால், இவ் அணுகுமுறை தென்னிலங்கை அரசியலுக்கு சாதகமானதா அல்லது தமிழர் அரசியலுக்கு சாதகமானதா போன்ற கேள்விகளை, இவ் வரைவிலக்கணங்கள் எழுப்பி விடுவதாக தெரிகின்றது. ஆனால், இத்துடன் நிறுத்தாது, அன்னார், ‘கடற்பயண சுதந்திரம்’ என்ற கருத்தாக்கம் குறித்தும் பேட்டியின் இடைநடுவே பிரஸ்தாபிக்க முற்பட்டது, தென்னிலங்கை அரசியலின் இரண்டாம் அம்சத்தை சுட்டுவதாய் இருக்கின்றது. அதாவது, மேற்கூறிய கடற்பிரதேச ‘மாற்றீட்டு’ அணுகுமுறை என்பது, முன்னர் கூறிய, தென்னிலங்கை அரசியலின், ‘நலன்களை கவிழ்த்துவிடும் அணுகுமுறையில்’ இருந்து பிரிபடாத ஒரு போக்குத்தான் என்ற கருத்தாக்கத்தினை, இது, மேலும் வலுவுடன் நிறுத்துவதாகவே இருக்கின்றது.  அதாவது, ஒருபுறம், ‘இந்தோ-பசுபிக் கடற்பிரதேசம்’ என்ற கருத்தாக்கத்துடன் இணைந்ததாய் வெளிக்கிளம்பும் ‘கடற்பயண சுதந்திரம்’. மறுபுறம், ‘நலன்களை கவிழ்த்து வைத்துவிடும்’ ஓர் அணுகுமுறை. ஒன்று, வல்லரசுகளை இழுத்து விடுதல். மற்றது உள்ளுக்குள் அடிபட வைத்தல்.

திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குறிப்பிட்ட ‘இக்கடற்பயண சுதந்திரம்’ என்பது, அமெரிக்க யுத்த கப்பல்கள், தாய்வான் நீரிணையில் பயணம் செய்ய கூறப்படும் நியாயங்களை அடியொட்டி எழுந்த ஒன்றாக அமைவு காணக்கிட்டுகின்றது. ஆனால், இதே அடிப்படையில் அமையக்கூடிய தர்க்கங்கள், வெவ்வேறு வடிவில், வெவ்வேறு உலக முரண்களில் வெளிப்படாமலும் இல்லை. உதாரணமாக, உக்ரைன் நாடானது, நேட்டோவில் இணையும் தனது உரிமை குறித்து வாதிடும் போது, தனது சொந்த “இறைமை” அல்லது தனது சொந்த “பாதுகாப்பு” குறித்து முடிவு செய்ய, தான் ஓர் பூரண சுதந்திரம் கொண்ட நாடு என்ற வகையில் அல்லது தான் பூரண இறைமையை கொண்டுள்ள ஒரு நாடு என்ற வகையில் இணைய உரித்தானதுதான் என்று வாதிக்க முற்படுகின்றது.

அதாவது, இந்த ‘கடற்பயண சுதந்திரம்’ என்ற வாதமானது, ‘நேட்டோவில் இணைவதற்காக’ முன்வைக்கப்படும் வாதத்துடன் ஒத்திசைய கூடியதுதான். அதாவது, இரண்டும் ஒன்று போலவே இயங்ககூடியனத்தான். ஆனால், நேட்டோவில் இணைவதற்கான, “பூரண சுதந்திரம்” குறித்து வாதிடும் இத் தர்க்கத்தின் பின்னாலேயே, இத்தகைய பூரண “சுதந்திர உரித்துடைய தன் பாதுகாப்புக்கான தேடல்” என்பது பிறிதொரு நாட்டின் பாதுகாப்பினை விலையாய் தருவதால் ஏற்பட்டுத்துவதாய் இருக்க முடியாது அல்லது பிறிதொரு நாட்டின் “அடிப்படை நலன்களை” பாதிப்பதாய் இருக்க முடியாது என்ற தர்க்கமும் எழுச்சி கொள்கின்றது. இவ் அடிப்படையிலேயே, இத்தர்க்கத்தை உக்ரைனும் நேட்டோவும் முன்னெடுக்கும்போது, ரஷ்யா பின்வருமாறு கூறி நின்றது:

“உண்மைத்தான். ஒரு நாடு தனது சொந்த பாதுகாப்பை தேடிகொள்ளலாம்தான் - ஆனால், பிறிதொரு நாட்டின் பாதுகாப்பை இதற்கு விலையாக வழங்குவதற்கூடாக அல்ல”

இதே வாதம், “இந்துமகாசமுத்திர” பிரதேசத்திலும் உயிர் பெற்று மேலெழுவதற்குரிய சாத்திய கூறுகள் இல்லாமல் இல்லை எனலாம்.

அதாவது தென்னிலங்கையின் அரசியல் பார்வை இப்படியாகத்தான், இந்து மகா சமுத்திரத்துக்குள், ‘சுதந்திர கடற் பயண உரிமை’ என்ற அடிப்படையில், கப்பல்களை இழுத்து விடும் நகர்வுகளை முன்னெடுத்துக் கொண்டு, அந்நகர்வுகளுக்கூடாக ஒரு ‘பிராந்திய-உலக’ வல்லரசுகளின் முரண்களை இப்பிரதேசத்தில் தோற்றுவித்து, அம்முரண்களுக்கூடு, இலங்கை, தனது பொருளாதார அல்லது அரசியல் லாபத்தை தேடி கொள்வதாக, இருந்துவிடும் என்றால், அதற்கேற்ற, எதிரான வாதங்கள் காலாகாலத்தில் கட்டியெழுப்பப்பட்டுவிடும் என்பதே இந்திய ஆய்வாளர்கள், இன்று பிசகின்றி பதிவு செய்துள்ள விடயங்களில் ஒன்றாகின்றது.

சுருக்கமாக கூறுவதெனில்: வார்த்தைகள் வார்த்தைகளாகவே நீடிக்க கூடும். ஆனால், வார்த்தைகளை புறந்தள்ளி, தன்நாட்டின் நலனை அடிப்படையாக கொண்டு, ஆக்கிரமிக்கும் நகர்வுகளை பேணிக்கொள்ள ஒரு நாடு முனையும் போது, அதனது ராணுவ-பொருளியல் பலங்கள் முக்கியத்துவப்பட்டு போகின்றன என்பது மாத்திரமல்லாமல், இவற்றுக்குரிய எதிர் தர்க்கங்களையும் அவை உருவாக்கி கொள்ளவே செய்கின்றன.


15

இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலிலேயே, இந்தியாவின் அண்மித்த நகர்வுகள் கூட கூர்மையடைய தொடங்கியுள்ளன எனலாம். திருக்கேதீச்சர ஆலயத்தை புனரமைப்போம் அல்லது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழி சமைப்போம் அல்லது நாடு முழுவதும் 100க்கும் அதிகமான எரிபொருள் நிலையங்களின் தேவைப்பாட்டு கோரிக்கையை முன்வைப்போம் அல்லது அக்டோபரின் முற்பகுதியில் சுப்ரமணிய சுவாமிகளை அனுப்பி வைப்போம் (ஜெய்சங்கருடன் இவர் இடிபட்டாலும் கூட) - இந் நுண்நகர்வுகள் அனைத்துமே மேலும் மேலும் கூர்மையுறுவதற்கான சந்தர்ப்பங்களே அதிகம் என்றாகின்றது. ஆனால் தென்னிலங்கையின் நகர்வுகளும், இதற்கு சற்றும் சளைக்காத வண்ணம், எதிரெதிர் நகர்வுகளாக, மாறி மாறி,  தாமதமின்றி கட்டவிழ்க்கப்பட தொடங்கியுள்ளன எனலாம்.  

“எரிக் சொல்ஹேமின் விஜயம் குறித்து வீண் அச்சமடைய தேவையில்லை. இலங்கை ஒரு சுயாதீன நாடு. இதனால் ‘ஏனைய அரசுகளின் அழுத்தங்களுக்கு’ அடிபணிய வேண்டிய தேவை கிடையாது” என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அவர்கள் அறிவித்த அதேநேரம் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் பிரச்சினைகளை நேரில் ஆராய்வதற்காக வந்து சேர்ந்த புத்த சாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்களும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஆலய வாசல் - வியாபார நிலையங்கள் - ராஜகோபுரம் - மரபுகள் - தொல்பொருள் அதிகாரிகள், இத்தியாதி - இவை யாவற்றையும் பற்றி கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு ‘இன முறுகல்’ ‘ஏற்படாத வண்ணம்’ தீர்வு காண்பதாக அறிக்கை விட்டு சென்றுள்ளனர் (வீரகேசரி: 12.10.2022). (இந்நுண்நகர்வுகள், மேற்கூறிய இந்திய நகர்வுகளை அடுத்துவந்த நகர்வுகள் என்பதும் குறிக்கத்தக்கதே).

இவற்றில் எரிக் சொல்ஹேமின் நியமனம் இலங்கையில் பெரிதும் விமர்சனத்துக்குள் உள்ளாக்கப் பட்ட–படுகின்ற, ஒன்றாகவே தென்படுகின்றது. காரணம், இந்நியமனமானது தமிழ் தேசிய அரசியல்வாதிகளால் மாத்திரம் விமர்சிக்கப்படவில்லை. மாறாக, தென்னிலங்கை அரசியல்வாதிகளாலும், ஆய்வாளர்களாலும் விமர்சிக்கப்படுவதாகவே காணக்கிட்டுகின்றது. காரணம், எரிக் அவர்கள் தென்னிலங்கையை சார்ந்த அரசியல் அல்லது ஆய்வாள பிரமுகர்களால் தமிழர்களின் பிரதிநிதி அல்லது புலம்பெயர்ந்தோரின் பிரதிநிதி என்று பார்க்கப்படும் அதேவேளை, தமிழ் பிரமுகர்களால் அல்லது சில தமிழ் ஆய்வாளர்களால், முள்ளிவாய்க்காலின் பின்னணியில் வைத்து அவர் நோக்கப்படுவதாக தெரிகின்றது.

இங்கேயே, அதாவது, இந்நியமிப்பே, திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் முதிர்ச்சியை காட்டி நிற்கின்றது எனலாம். மாலைதீவின், ரஷீட்டுடன் இணைந்து பூகோள பசுமை நிலையை இவர்கள் நிலைநிறுத்த உதவுவர் என்று கூறப்பட்டாலும், இந்நியமிப்புகள் ஆழமானவைத்தான் என்பதில் ஐயமில்லை.

இவை அனைத்தும், மிக அண்மித்த, தென்னிலங்கை அரசியலின் நுண் நகர்வுகள் சார்ந்த கேள்விகளை, முக்கியமாக இந்திய ஆய்வாளர்களின் பார்வையில் எதிரொலிக்க செய்கின்றதா என்பதுவே தற்போதைய கேள்வியாகின்றது.

16

இது போன்றே, அண்மைக்கால ‘புணர்வாழ்வு பணியகத்தின்’ ஸ்தாபிப்பையும் நாம் கவனத்தில் கொள்ள நேரிடுகின்றது. சுமந்திரன் முதல் அம்பிகா சற்குணம் வரை இவ்யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டிருந்தாலும் கூட, இப்பணியகத்தின் ஸ்தாபிப்பு எதிர்வரும் தினங்களில் நடந்தேற உள்ளதா என்பதும் கேள்விக்குறியாகின்றது. முன்மொழியப்பட்ட உத்தேச புணர்வாழ்வு பணியக சட்டத்திற்குள் உள்ளடங்கக்கூடிய ஆட்கள் வருமாறு:

“முன்னாள் போராளிகள், தீவிரமான அல்லது அழிவுகரமான நாசவேளைகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் (வன்முறை தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள்), போதைபொருள் சார்ந்த நபர்கள் மற்றும் சிகிச்சைகள் மற்றும் மறுவாழ்வு தேவைப்படும் ஏனைய ஆட்கள் அடங்கிய குழு” என்பவர்களை, ‘ஆட்கள்’ பொறுத்த அச்சட்டத்தின் வரைவிலக்கணம் உள்ளடக்க கூடியதாக தீட்டப்பட்டுள்ளது.

அதாவது, வசந்த முதலிகே முதல், முன்னாள் போராளிகள் அல்லது போதை பொருள் கடத்தல் மன்னர்கள், அல்லது போதை பொருளுக்கு அடிமையானவர்களையும் கூட இப்புணர்வாழ்வு பணியகங்கள் (முகாம்கள்) உள்ளடக்கப் போகின்றனவா என்பதே மனித உரிமை கோட்பாளர்கள் இன்று எழுப்பும் கேள்வியாகின்றது. ஆனால், மறு பக்கத்தில், இந்நிகழ்வுகள் ஓர் நுணுக்கமான அரசியல் நகர்வுகளை காட்டி நிற்கின்றதா என்பதுவும் கேள்வியாகவே செய்கின்றது.

ஏனெனில், விடயங்களை  திசைதிருப்பவும், அரசியலின் உள்ளடக்கத்தை மாற்றியமைக்கவும் இத்தகைய நகர்வுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்ததற்கான சான்றுகள், எமது கடந்த கால அரசியலில் இல்லாமல் இல்லை எனலாம். இப்புள்ளியிலேயே, எதிர்வரும் நவம்பர் நினைவேந்தல்களும், கோக்லேயின் பேட்டி எழுப்பும் வினாக்களும் கைகோர்ப்பதாக உள்ளன.


17

நினைவேந்தல்கள் என்பன, கடந்த காலங்களில் ஒரு இனம் தனது இழந்து போன சொந்தங்களை அல்லது தமக்குரிய நியாயங்களை நினைவுறுத்தும் அல்லது நியாயப்படுத்தும் ஓர் நிகழ்வாக இருக்கும் போது, மறுபுறத்தில் இவை இனங்களை துருவப்படுத்தும் ஓர் அரசியல் நிகழ்ச்சிக்கு தம்மை அறியாது  இட்டு செல்கின்றனவா என்ற கேள்விகளும் அவ்வவ் சந்தர்ப்பங்களில் எழாமல் இல்லை.

இருந்தும், காலி முகத்திடல் போராட்டத்தின் போது இளைய தலைமுறையினரை சேர்ந்த பௌத்த குருமார்கள் உட்பட்டோரால் நினைவேந்தல்களும் நிகழ்த்தப்பட்டது என்ற உண்மையும் நினைவில் நிறுத்தத்தக்கது. இதுபோன்றே, அண்மைக்காலங்களில் நினைவேந்தல்களுக்கு எதிராக, அரசியல் கூற்றுக்கள், பேரினவாத சக்திகளால் அல்லது அரசியல் தலைமைகளால் ஆற்றப்பட்ட போது, ‘நினைவேந்தல்களை அரங்கேற்றும் உரிமைகள் அம்மக்களின் அடிப்படை மனித உரிமை சார்ந்தது, அதனை எமது அரசியல் சாசனமும் கூட வலியுறுத்துகின்றது’ என நினைவேந்தல் தொடர்பில் ஆற்றப்பட்ட அனுரகுமார திசாநாயக்காவின் கூற்றும் முக்கியத்துவப்படுவதாகவே உள்ளது (01.10.2022).

இதுபோன்ற நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை, அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டாமலும் இல்லை. காரணம், எதிர்ப்பலை அரசியலின் சுவாத்தியத்தை மாற்றியமைக்கும் திட்டத்தின், பிரதான இரண்டு சக்கரங்களில் ஒன்று, இப்படி முறிபட்டு செயலிழக்குமாயின், இது, கோக்லேயின் பேட்டியில் வெளிக்கிளம்பும் ஆதிக்க சக்திகளின் எதிர்கால திட்டத்தின் ஒரு பகுதியை சீர்குலைப்பதாக அமைந்து விடும்.

அதாவது, எதிர்ப்பலை அரசியலை அரச யந்திரமானது, இரும்பு கரம் கொண்டு, அடித்து நொறுக்கி துவாம்சம் செய்து விடுவது ‘ஒரு முகம்’ என்றால் எதிர்ப்பலை தோற்றுவிக்கும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமைகளை அல்லது தோழமைகளை, சிதைத்து துவாம்சம் செய்து, இனக்கலவரங்களை கொணர்ந்து சேர்க்க கூடிய துருவப்படுத்தும் அரசியலை, பிரக்ஞையுடன் முன்னேற்றுவது இத்திட்டத்தின் மறுமுகம் அல்லது ‘இரண்டாம் முகமாகின்றது’.  

வேறு வார்த்தையில் கூறுவதானால், எதிர்ப்பு அரசியல்வாதிகளை அடைத்து, தாக்கி, சிதைத்து சின்னாப்பின்னப்படுத்துவது ஒருமுகம் என்றால், தகுந்த இனவாத அரசியலின் மூலமாக எதிர்ப்பலை சுவாத்தியத்தை மாற்றீடு செய்வது அதன் இரண்டாம் முகமாகின்றது.

இதனாலேயே, “வடக்கில் தீ வைத்து தமிழ் இளைஞர் யுவதிகளை அழித்தது போல, தெற்கிலும் தீ வைக்க முயற்சிக்க வேண்டாம்” என்று  சாணக்கியன் எம்.பியிடம் பொதுஜன பெரமுண எம்.பி பஸ்குவல் விடுத்த வேண்டுகோளும் பார்க்கத்தக்கதாகின்றது. (தினக்குரல்: தலைப்பு செய்தி: 05.10.2022). (இணைவை தடுப்பது என்ற ரீதியில்).

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.