6

தம்மை பதவியில் இருந்து நீக்கியதில் அமெரிக்கா நேரடியாக சம்பந்தப்பட்டு இருந்தது என்று இம்ரான் கான் பகிரங்கமாக தெரிவித்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம்.  ஆனால், அவரது அமைச்சர்களில் ஒருவர் (Mifta Ismail) ஏற்கனவே இம்ரான்கான், பெப்ரவரியில் அறிவித்திருந்த மக்களுக்கான உதவி பொதியை உடனடியாக வாபஸ் பெற்றுவிட்டு IMFஇன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு அது பிரயோகிக்கும் ஓர் பொறிமுறையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஓர் கோரிக்கையின் பின்னணியிலேயே இம்ரானின் பதவிபறிப்பு நிகழ்ந்தேறியதாக  அவர் குற்றம் சாட்டியிருந்தார் (22.04.2022). பாகிஸ்தானின் இம்ரான் கானுக்கு முந்தைய அரசு, 25 கோடி டொலரை, துண்டு விழும் தொகையாக அறிவித்திருந்தது. அது பின்னர், 1.3 ட்ரில்லியன் பாகிஸ்தான்-ரூபாயாக வளர்ச்சி கண்டிருந்தது என்பது அறிந்த ஒன்றே. IMFஇன் கோரிக்கைகளில் ஒன்று, 21 ரூபாயாக இருந்த பெற்றோலின் விலையை, பாகிஸ்தான், உடனடியாக 134 ரூபாவாக மாற்றியமைக்க வேண்டும் என்பதனையும் உள்ளடக்கும்.

எண்ணெய் தொடர்பில், இலங்கை போன்றே பாகிஸ்தானும் சலுகைகளை தன் மக்களுக்கு அளித்து வந்த காலம், அந்த காலம். கூடவே, பாகிஸ்தானின் கடன் முறி உள்ளடங்கலான, வெளிக்கடன் 130,192 மில்லியன் டொலர்களாகும். (அதாவது 130.2 பில்லியன்களாகும்) - இதில் 30 கோடி டொலர்  சீனக்கடன் 30மூ  எனவும் கூறப்படுகின்றது.

அதாவது, 2006 இல், வெறும் 37.2 பில்லியன் டொலராக இருந்த பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன், இன்று மேற்படி 130.2 பில்லியன் டொலராக பரிணமித்துள்ளது என்பதும், இதில் IMFஇன் திட்டமிடுதல் எந்தளவுக்கு பங்கு வகிக்கின்றது என்பதும் எழக்கூடிய கேள்விகளில் ஒன்றாகும். ஏனெனில் இதுவரையில், பாகிஸ்தான், IMFஇடம் 22 முறையில் கடன் வாங்கிய சரித்திரத்தை கொண்டுள்ளது, என்பதுவே இங்கே முக்கியமானதாகின்றது.  சுருக்கமாக கூறினால், இம்ரான்கானின் பதவி பறிப்பு என்ற ஓர் நிகழ்வின் பின்னணியில், பாகிஸ்தான் என்ற ஓர் நாட்டை வீழ்த்தும் பொருளாதார பொறி, அந்நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கும் வலுவான காரணியாகின்றதா என்ற கேள்வி, சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் முன்னோக்கி நகர்வதாயுள்ளது.

அதாவது பொருளியல் நெருக்கடிகளால் இம்ரான்கான் அகற்றப்பட்டார் என்றால் இப்பொருளாதார நெருக்கடிகள் அந் நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியும் ஆகின்றது.  

7

இச்சூழலில், இலங்கையின் நிலவரமும் கிட்டத்தட்ட இதுவாகவே இருக்கின்றது.

206 கோடி டொலரை, 2009 இல் இலங்கைக்கு வழங்கிய IMF, 2.5 கோடி டொலரை, 2015இல் வழங்க செய்தது.

இப்பொதிகளின் வழங்கல், தமிழ் மக்களுக்கான எந்த ஒரு அரசியல் பொதியையோ அல்லது தீர்வையோ உள்ளடக்கவில்லை (குறைந்தபட்சம், ஒரு நிபந்தனையாகவோ அல்லது கோரிக்கையாகவோ கூட).

மறுபுறம் IMFஇன் 2015இன் பொதி வழங்கப்பட்டபோது, நிச்சயமாய் அது போர் முடிந்த நிலையில் வழங்கப்பட்ட ஒன்று என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக அமைகின்றது.

இதுபோக, இலங்கையின் ராணுவ செலவீனம் என்பது, இலங்கை வரலாற்றிலேயே, உச்சம் கண்டதும் 2015லேயே ஆகின்றது. (1852 மில்லியன் டொலர்) – அதாவது, போர் முடிந்த ஒரு நிலையில்! என்பதும் இதே ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டும் இன்னுமொரு விடயமுமாகின்றது.

அதாவது இலங்கையின் பொருளாதார நெருக்கடி மாத்திரம் அல்லாமல் இதனை தொடரும் அரசியல் நெருக்கடிகள் கூட, மேற்படி யதார்த்தங்களால் திட்டமிட்டு கட்டவிழ்க்கப்படும் ஒன்றா என்பதும் பல்வேறு சர்வதேச விமர்சகர்களின் நேரடியான அல்லது மறைமுகமான எழுப்பப்படும் கேள்விகளில் ஒன்றாகின்றது.

இந்நிலைமைக்கு இணையானதாகவே உக்ரைனின் நிலவரமும் இருக்கின்றது. 2015இல், 17.5 பில்லியன் டொலர்களை, உக்ரைனுக்கு வழங்குவதாக IMF பொருந்தியிருந்தது. ஆனால், தான் பொருந்திய இந்த 17.5 பில்லியன் டொலர்களில் ஒரு பில்லியன் டொலரையே IMF 2017இல் உக்ரைனுக்கு வழங்கியது. அதாவது, பொதியின் பெரும்பகுதியான, மிகுதி 16.5 பில்லியன் டொலரை பிற்பாடு உக்ரைன் அரசியல்-பொருளியல் பாதையை உறுதிப்படுத்திய பின் பார்த்து முடிவு செய்யப்படும் என்று பொருள்படுகின்றது.  இதன் பின்னர், கிட்டும் புள்ளிவிபரங்களின்படி 2020–2021லேயே உக்ரைனுக்கு தான் வாக்குறுதியளித்திரந்த பொதியில்  டொலர் 1.4 பில்லியன் டொலரை, IMF அவிழ்த்து விடுகின்றது.

அதாவது பொறியை தருவதாக ஒப்பந்தம் செய்வது முதற்படி என்றால், மிகுதியை நீ செல்லக்கூடிய அரசியல்–பொருளாதார பாதையை பொறுத்தே மிகுதியை தருவேன் என கூறி உண்மை நடைமுறையில்,  ஒரு நாடு, பயணிக்க வேண்டிய அரசியல்-பொருளியல் பாதையை  நிர்ணயித்து விடுவது அதன் பண்பாகின்றது.

8

இத்தகைய ஒரு பின்னணியிலேயே, கலாநிதி கதிர்காமர் அவர்கள், தர்க்க நடைமுறைக்கு எவ்விதத்திலும் ஒவ்வாத வகையில், இலங்கையானது, தன் கடன்களை மீள செலுத்த கூடிய ஒரு புறநிலை காணப்பட்டிருந்த போதிலும், எதற்காக 'செலுத்த முடியாது’ என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டது என்ற கேள்வியை முன்வைக்கின்றார்.

இச்சூழ்நிலையிலேயே  Hamilton வங்கி தொடுத்த வழக்கும் எமது கவனத்தை ஈர்ப்பதாக வந்து சேர்கின்றது.

Hamilton வங்கியானது, மத்திய வங்கியின் ‘கடன் செலுத்த முடியாது’ என்ற அறிவிப்பை தொடர்ந்து 257,539,331 டொலர்களை கோரி, தான் பெற்ற இலங்கை அரசின் கடன்முறிகள் தொடர்பாக, வழக்கு தொடர்ந்திருந்தது (22.06.2022). (அதாவது இலங்கை அரசு ‘கடனை செலுத்த முடியாது’ என்ற அறிவிப்பை விடுத்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே  Hamilton வங்கி வழக்கை தொடர்ந்து விட்டது. வழக்கின்  இவ் அழுத்தங்கள் கூட, இலங்கையை IMF முன்வைக்கும் ஒரு பொறியில் அல்லது அது ஊக்குவிக்கும் ஓர் அரசியலில் இலங்கையை வீழ்த்தி, சிக்கவைக்கும் ஒரு அம்சமாகவே உளது என அபிப்பிராயப்படும் சர்வதேசத்து பொருளியல் நிபுணர்கள் தமது கருத்துக்களை ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்.

9

கடன்களை மீள செலுத்துவது தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள், கோக்லேயின் பேட்டியில் கூறியிருந்தாலும், அவர் சாமர்த்தியமாக இறைமுறிகளை (Sovereign Bonds) வாங்கி போட்டுள்ள, மேற்கின் பிரமாண்டமான நிதி–வங்கி ஸ்தாபனங்களுடனான, பேச்சு வார்த்தைகள் குறித்து ஒரு வார்த்தைதானும் கூற மறுத்து விட்டார்.

ஆனால், IMFஇன் பொறிகளின் ஒரு நிபந்தனை, கடன் முறிகளை வாங்கிய இந்நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் ஆகியவற்றுடன் முதலில் ஒரு பேச்சுவார்த்தையை நடத்தி அவற்றுடன் ஒரு உடன்பாட்டிற்கு, இலங்கை வந்து சேர்ந்தாக வேண்டும் என்பதாகும்.

அதாவது இனி வாங்கும் கடனில் (முக்கியமாக IMFஇல் இருந்து) பெறப்படும் கடனின் கணிசமான பகுதி மேற்படி வங்கி–நிதி நிறுவனங்களின் வட்டிகளை செலுத்த இலங்கை கொடுத்துவிட நேரிடும். இதுவே, IMF பொதிகளின் ஒரு முக்கிய அம்சம் என்று கூறப்படுகின்றது.

சுருக்கமாக கூறினால், ‘கடனை’ இந்த புறம் வாங்கி அந்த புறம் ‘வட்டியாக’ கொடுத்துவிடல் என்பது பெறவிருக்கும் கடன்களின் அடிப்படையாகின்றது. (முக்கியமாக, கடன்,IMF இடம் இருந்து பெறுமிடத்து).  உண்மையில், பேட்டியின் போது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இவ்வருடத்தின் டிசம்பர் மாதம் அளவில், எண்ணை விலை மேலும் அதிகரிக்கப்படலாம் என்று அபிப்பிராயப்பட்டது பல அர்த்தங்களை உள்ளடக்ககூடியதே என்பதில் சந்தேகமில்லை.  (இக்கூற்று மிக அண்மையில் இடம்பெற்ற ஒபெக் நாடுகளின் தீர்மானத்திற்கு -05.10.2022க்கு முற்பட்டது). இதில், இந்திய-இலங்கை அரசியலும் சம்பந்தப்படுகின்றதா அல்லது வெறும் பொருளியல் யதார்த்தங்கள் மாத்திரம்தான் சம்பந்தமுறுகின்றதா என்பதெல்லாம் தொடர்புபட்ட வினாக்களே.

இருந்தபோதிலும், ஒரு நாட்டு மக்களின் உழைப்பை கிரமமாக உறிஞ்சி எடுக்கும் ஒரு நடைமுறையாக, அதாவது நியோ காலனித்துவத்தின் ஒரு புதிய ஏற்பாடாக கடன்முறிகள் இருக்கையில் அது உருவாகும் போதினிலேயே அதனுடன் இணைந்த ஓர் அரசியலையும் உருவாக்கிவிட IMF செயல்படுவது குறித்து ஏற்கனவே சர்வதேச ஆய்வாளர்கள் 1980முதல் பகிரங்கப்படுத்தி வந்துள்ளனர்.

அதாவது, இலங்கை மக்கள், ஆதிக்க சக்திகள் பெற்ற கடன்களுக்காய் வாழ்விழந்து, மாடாய் உழைத்து தேய்ந்து, கடன்களின் வட்டிகளை காலம் காலமாக கட்டி வருவது என்றாகின்றது.  இது IMF கடன்கள் ஏற்படுத்தி தரும் பொருளியல் முகத்தின் ஒரு தோற்றமாக இருக்கலாம்.

இருந்தும், இந்த நடைமுறையின், அதாவது, இலங்கை மக்கள் மேல், மேலும் சுமை ஏற்றும் இந்த நடைமுறையை எப்படி கையாள்வது, என்ற கேள்விலேயே இலங்கையின் எதிர்கால அரசியல் உள்ளடங்கப்போகின்றது என்று நம்பலாம்.

பேட்டியின் போது கோக்லேயால் இலங்கை அரசியல் பொறுத்த இரண்டு முக்கிய வினாக்கள் எழுப்பபட்டன.

ஓன்று: அரசியல்-பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக எழக்கூடிய எதிர்ப்பாளர்கள் பொறுத்ததாகவும் மற்றது காலங்காலமாக இடம்பெற்று வரும், புரையோடி நிற்கும் இனப்பிரச்சினை தொடர்புபட்டதாகும். இவற்றில், எதிர்ப்பாளர்களை ரணிலின் அரசு கையாண்ட விதம் குறிக்கத்தக்கதே. ஒருபுறம் அரசு யந்திரத்தை மறுசீரமைத்தது. மறுபுறம் எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்த அனைத்து பிரயோகங்களையும் கட்டவிழ்த்து விட்டது.

10

முதலாவதை எடுத்துக்கொண்டால், அரச யந்திரத்தின் சீரமைப்பு பணி கடந்த ஜூலை மாதத்திலேயே தொடங்கி விட்டது எனலாம். அதாவது, பிரதமர் அலுவலகம் தாக்கப்பட்டு எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போது, துப்பாக்கி பிரயோகம் செய்ய மறுத்த கட்டளை அதிகாரி, பிரிகேடியர் அணில் சோமவீர, மற்றும் உப படையணியின் கட்டளை அதிகாரி குணவர்தன ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டது. (வீரகேசரி:17.07.2022). இதனை தொடர்ந்து, மிக அண்மையில் உடன் அமுலுக்கு வரும் வகையில், கடந்த மே 9ஆம் திகதியும் அதனை ஒட்டிய காலப்பகுதியிலும் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையானதை தவிர்க்க அல்லது தடுக்க தவறியதாக கூறி, 23 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்தது (வீரகேசரி:30.09.2022).

அதாவது, இன்றைய எதிர்ப்பாளர்களை, ஆதியோடு அந்தமாக அடக்கி ஒடுக்கும், அரசின் தீவிர தன்மையில் இருந்து, கடன்களின் அரசியல் முகம் தோற்றம் கொள்கின்றது.

அதாவது, ஒருபுறம் பொருளியல் முகம். மறுபுறம் அரசியல் முகம்.

எதிர்ப்பு ஊர்வலங்களில் பங்கேற்ற இளைஞர்கள் கர்ண கொடூரமாய் நைய புடைக்கப்பட்டது போக, பயங்கரவாத தடைசட்டம் அவர்கள் மீதே ஏவி விடப்பட்டு, எதிர்ப்பாளர்களின் தலைவர்கள், தடை உத்தரவுகளுக்கேற்ப 90 நாட்கள் சிறைக்குள் அடைபட்டனர். (வசந்த முதலிகே உட்பட). தொடர்ந்து, தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ள, உயர்-பாதுகாப்பு-வலய-பிரதேசங்கள் என்பன தேவையுறும் ஏற்பாடுகளாயின. (இவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர், வழமை பிரகாரம் அல்லது பழக்கதோஷம் காரணமாகவோ தமது கடும் விசனத்தை தெரிவித்ததும், விடயப் பொருள்களை மாற்றியமைக்கும் ஓர் செயல்முறைதானோ என்ற அச்சத்தையும் எம்மவரிடை எழுப்புவதாக இருந்தது) (30.09.2022).

மொத்தத்தில், பயங்கரவாத தடைசட்டம் நீக்கப்படல் வேண்டும் என்ற எதிர்ப்பாளர்களின் இன்றைய கோஷத்திற்கு எதிராக, சட்டம், அவர்கள் மீதே ஏவப்பட்டு அவர்களை அடைத்து வைக்கும் அவலங்களை உள்ளடக்கியதாகின்றது.  ஆனால், இவ் ‘அடக்குமுறை யதார்த்தமென்பது’, தகுந்த பிரதியீடு இல்லாமல், காலங்காலமாய் தொடரப்பட முடியாது என்ற அரசியல் விவேகம், ஆதிக்க சக்திகளுக்கு–முக்கியமாக ரணில் விக்கிரமசிங்க போன்ற தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருக்காது.

மேலும் உத்தியோகத்தர் மட்டத்தில் இன்று அடையப்பட்டுள்ள IMF  உடன்பாடானது, மேலும் மேலும் பொருளியல் நெருக்கடிகளை கொணர்ந்து சேர்க்குமாயின், (இதற்கு தற்போதைய உலக நிலவரமும் வலுசேர்க்கக்கூடிய ஒன்றேயாகும்) நாட்டில், மேலும் மேலும் எதிர்ப்பலைகள் உருவாகுவதற்குரிய சாத்தியக் கூறுகளே அதிகமாகின்றது என்பது வெளிப்படை.

இச்சூழ்நிலையிலேயே, இவ் எதிர்ப்பலைகளின் அரசியல் சுவாத்தியம் என்பது, தகுந்த பிறிதொரு அரசியல் சுவாத்தியத்தால் மாற்றீடு செய்யப்பட்டாக வேண்டும் அல்லது பிரதியீடு செய்யப்பட்டாக வேண்டும் அல்லது இடமாற்றப்பட வேண்டும் என்ற தேவைப்பாட்டை எதிர்நோக்குகின்றது.

இத்தகைய ஒரு பின்னணியிலேயே, நாட்டில் ஒப்பீட்டளவில், உறங்கு நிலையில் உள்ள இனவாதம் மீண்டும் தட்டியெழுப்பப்பட்டு, நன்கு இச்சூழலுக்கு கைக்கொடுக்கும் வகையில் அல்லது சுவாத்தியத்தை பிரதியீடு செய்யும் வகையில் மாற்றியமைக்க அல்லது கைகொடுக்க வேண்டிய புள்ளிக்கு தள்ளப்படுகின்றது.

இங்கேயே தமிழர்களின் நலன் சார்ந்த கோரிக்கையும் போராட்டமும் மேற்படி புள்ளியை நோக்கி நகர்வதாயும் உள்ளது எனலாம்.

                    - நிட்டின் கோக்லே -

11

கோக்லேயின் பேட்டியின் போது கேட்கப்பட்ட இன்னுமொரு கேள்வி, 13வது திருத்தம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு யாது என்பதாகும்.

இதற்கு நேரடியாக பதில் கூற மறுத்துவிட்ட ரணில் அவர்கள், இது பொறுத்து தற்போது தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது என்று மாத்திரம் குறிப்பிட்டுள்ளார். இதற்கு, இன்று அவர் அமைத்துள்ள தேசிய பேரவையில் (தேசிய சபை) வௌ;வேறு தமிழ் கட்சிகளின் பங்கேற்பும் இவ்வகையில் சாதகமானதாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. (மிகுந்த தீவிர அரசியல் பேசிவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரமுகரும் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இச்சபையில் பங்கேற்பது என்பதுவும் குறிப்பிடத்தக்கதே).

அதாவது, ‘கப்பலை காப்பாற்ற தமிழர்கள் ஒன்று திரள வேண்டும்’  என்ற கவிஞரின் அவா, இங்கே, அரசியல் தளத்தில் தேசிய சபையில் அமர்வதாய் வடிவம் கொள்கின்றதா எனும் கேள்வி எழவே செய்கின்றது.

இது போன்றே ‘சந்தர்ப்பத்தை நழுவவிட கூடாது’ எனும் மனோ கணேசனின் கோரிக்கையும் (தேசிய சபையில் அவர் பங்கேற்ற ஓர் பின்னணியில்) இப்புள்ளியில் இணைந்து கொள்ளவே செய்கின்றன (வீரகேசரி: 30.09.2022). (இதுபோன்றே, முன்னர், காலி முகத்திடல் போராட்டத்தின் போது, திடலுக்கு விஜயம் செய்த மனோகணேசன் அவர்கள்,  காலிமுகத்திடல் போராளிகளிடம் “சிங்கள பௌத்த நாடு அமைந்தால் இலங்கையில் தமிழ்நாடு உருவாகும்” என்று எதிர் வெடி வீசியதும் அவரது வழமையான நுண் அரசியல் சார்ந்ததா என்ற கேள்வியை எழுப்பவே செய்கின்றது). (தினக்குரல்:08.07.2022)

இருந்தும், இந்த பங்கேற்பு என்பது, தமிழர் முன்வைக்கும் அரசியல் கோரிக்கைகளை தவிர்த்து கொள்ளவும், அதே வேளை சர்வதேச மட்டத்தில், (முக்கியமாக ஜெனிவா கொண்டாட்டத்தின் போது) சிறப்பான ஓர் முகத்தை  காட்டி நியாயப்படுத்திக் கொள்ளவும் துணைபோக கூடியவைதாம் என்பதில் ஐயமில்லை என்ற விமர்சனம், இலங்கையில் எழாமலும் இல்லை.


12

மறுபுறம், முக்கியமாக, ஜெனீவா காலங்களில், வழமை போல் திலீபனின் நினைவேந்தல் விழா தொடக்கம், வழமையான எதிர்ப்பு பிரேரணைகள் வரை களைகட்டவே செய்கின்றது என்பதிலும் சந்தேகமில்லை. அதாவது, திலீபனின் நினைவேந்தல் விழா, வழமைபோல் இந்தியாவை குறிவைத்து இன்னமும் ஆற்றப்படுகின்றதா என்பதும் ஒரு தொடர்புபட்ட வினாவாகவேத்தான் இருக்கின்றது. (பழைய இந்திய ஆய்வாளர்கள் இது தொடர்பில் கேட்பது போல).

ஆனால், தமிழர் அரசியலில், இந்திய எதிர்ப்பலைகள் என்பது காலங்காலமாய், ரஜீவ் காந்தியின் கொலை தொடக்கம் தொட்டு தொடர்பவைதான். இன்னும் சரியாக கூறினால், அதற்கு முன்பிருந்தே ஆரம்பமான ஒன்றுதான். இது, இலங்கை-இந்திய  உறவின் ஒரு பிரிபட முடியாத அம்சமாக கூட கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே இன்று நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகின்றது.

உதாரணமாக, கோக்லேயின், மீனவர் பிரச்சினை தொடர்பான கேள்விக்கு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பதில் பிசகின்றி வெளிவந்தது: “ஆம். உண்மைத்தான். இந்திய-இலங்கை மீனவர்கள், ஒன்றுபட்டு மீன் பிடிக்கும் பிராந்தியங்கள்  ; (Joint Fishing Zone) உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்ட ஒன்றுத்தான். ஆனால் வடக்கின் மீனவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் காலங்காலமாய்  தங்கள் மீன் பிடிக்கும்,-வழமையான – மரபு சார்ந்த பிரதேசங்களை விட்டு தர மாட்டார்கள்” –என்ற அவரது ‘ஆதங்கம்’ பதிலாக முன்வைக்கப்பட்டு போனது.

வேறு வார்த்தையில் கூறினால் வடக்கின் பிரதேசங்களை அல்லது வளங்களை அல்லது நலன்களை இந்தியா முன் கவிழ்த்து வைத்துவிட்டு வடக்கின் தமிழ் மக்களும் இந்தியாவும் முரண்பட்டு அவர்கள் அடிபடுதலை இவர்கள் வேடிக்கை பார்ப்பதை தென்னிலங்கை தனது அரசியலின் முக்கிய அம்சமாக வளர்த்து வந்துள்ளது என்பதனையும் இதே இந்திய ஆய்வாளர்களில் பலர் ஏற்கனவே கோடிட்டு காட்டியுள்ளனர்.

இது சாம்பூர் அனல் மின் திட்டம் குறித்தும் இருக்கலாம். அல்லது திருகோணமலை முறைமுக திட்டம் குறித்தும் இருக்கலாம். அல்லது திருகோணமலையின் எண்ணை குத திட்டம் அல்லது காங்கேச துறைமுக திட்டம் குறித்தும் இருக்கலாம் - ஆனால் விடயம் ஒன்றாகவே காணக்கிட்டுகின்றது.
 
[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.