மக்ஸிம் கார்க்கியின் இறுதி நூலான, ‘கிளிம்மின் சரித்திரம்’ எனும் இப்பிரமாண்டமான பேரிலக்கியத்தின் நான்கு தொகுதிகளில், முதல் தொகுதி 1927 இல் வெளிவந்துள்ளது. இரண்டாம் தொகுதி 1928 இலும் மூன்றாம் தொகுதி 1930 இலும் 4ம் தொகுதி 1936 இற்கு பிறகேயும் அச்சேற்றப்பட்டுள்ளது. தன் வாழ்க்கையின் மொத்த சாரத்தை பிழிந்து தரும் நூலாகவும், தான் வாழ்வில் சந்தித்திருக்ககூடிய அனைத்து சவால்களிலும் ஆகப் பெரியதும் பலமிக்கதுமான சவால் என்றும், தன் வாழ்வின் இறுதிச் சாசனம்  எனவும் கார்க்கியால் வரையறுக்கப்பட்ட இந்நூல் ஓர் 40 வருட கால ரஷ்ய வாழ்வின் குறுக்கு வெட்டு முகத்தையும், அதன் உக்கிரமான பல்வேறு திருப்பு முனைகளையும், அவற்றை ஓர் ‘நவ’ மனிதன் முகங் கொடுக்கும் விதத்தையும், அன்னியப்பட்ட, பண்பாட்டுக்கு எதிரான ஆனால் மேலோட்டமான பண்பாடு மூலாம் பூசப்பட்ட அவனது அந்தரங்க நகர்வுகளையும் நூல் இனங்காட்ட முனைகின்றது.

மக்கள் சாரிகள் உருவாக்கித் தந்த பிரமித்தியூஸ் போன்ற கட்டறுந்த வரலாற்று கட்டமைப்புகளின் பின், அத்தகைய ஒரு பாத்திரம் நவீன இலக்கியத்திலும் சாத்தியப்படுமா என்பது கார்க்கியின் வாழ்நாள் கேள்வியாக இருந்து வந்துள்ளது. தன் இறுதி காலத்தில் இவ்வரலாற்று பணியை, செய்து முடிக்க வேண்டிய பொறுப்பை வரலாறானது தன்மீதே சுமத்தியுள்ளது என்ற முடிவுக்கு அவர் வந்து சேர்கின்றார். பெரிதும் தயக்கத்துடனேயே தன் பேனையை தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர் ஆளாவதை, நூல் குறித்த அவரது குறிப்புகள் தெளிவுற வெளிக்கொணர்கின்றன. ஒரு கட்டத்தில், இப்பொழுது நான் பயப்படுவதெல்லாம் ஒரே ஒரு விடயத்தை பற்றி மாத்திரமே. அதாவது, நான் இந்நூலை எழுதி முடிப்பதற்கு முன் மரணம் என்னை அணுகிவிடுமோ என்ற ஒரே அச்சம் தான். இந்நூலை மனுகுலத்தின் இன்னுமொரு சாதனை என நாம் வகைப்படுத்தலாம் - இதில் உள்ளடங்கும் சாரத்தின் பல்வேறு பரிமாணங்களை சரியாக நாம் கையேந்த முடியுமானால்.

கிளிம் தன் பதின் வயதுகளை கடந்த நிலையில், நாவலின் இரண்டாம் பகுதி ஆரம்பமாகின்றது. இது வெறும் தரவோடு சம்பந்தப்பட்ட ஒன்று என்பதுடன் மாத்திரம் இதன் முக்கியத்துவம் மட்டுப்படுத்தப்படுதல் நன்று. காரணம், இந்நூலின் முக்கியத்துவம், வெறும் வயதுகளோடு எல்லைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்பதை குறித்தாக வேண்டும். ரஸ்யாவின் குறித்த காலப்பகுதியில் அரங்கேறும் நிகழ்வுகளும் எழுச்சிகளும் ஓர் வர்ணக்கலவையில் தீட்டப்பட்ட ஓவியங்களாக ஒன்றன்பின் ஒன்றாக நூலில் அரங்கேறுகின்றன. கூடவே, இதற்கு பக்கபலமாய், அச்சமூகத்தில் அன்று முகிழ்த்து கிளம்பி முன்னணிக்கு வந்திருக்கக்கூடிய வெவ்வேறு அரசியல் தத்துவங்களும் சிந்தனை ஓட்டங்களும் அந்தந்த அளவுக்கு ஏற்புடைய வகையில் அவ்வவ் கதாப்பாத்திரங்களுக்கூடாக, முன்வைக்கப்பட்டு, ஓர் அறிமுக - ஆய்வுவெளி நோக்கி பயணிப்பதாய் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தும், இத்தத்துவ கருத்தாடலானது நாவலின் கட்டமைப்பிலிருந்து எவ்வகையிலும் அந்நியப்படாத வகையில், கதாப்பாத்திரங்களின் நலன்களுக்கும் சிந்தனை ஓட்டங்களுக்கும் அவர்களின் வாழ்நிலைக்கும் ஏற்ற வகையில் அவரவர்களாலேயே தேரப்பட்டு முன்வைக்கப்படுவதற்கூடு, அவை நிதானமான ஒரு வாசகப் பரிசீலனைக்கு கிட்டக்கூடியதாக அமைக்கப்பெற்றுள்ளன. அதாவது, இத்தொகுதியில், நாவலின் நகர்வுகளுக்கூடு பற்பல மனிதர்கள் தோன்றி எமக்கு முகமன் தெரிவிக்கும் பொழுதே, அவர்களோடு ஒட்டியதாய், அவர்கள் போற்றும் அல்லது பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய பல தத்துவங்களும் தோன்றி எமக்கு முகமன் தெரிவித்து விடுகின்றன.

இருந்தும், இவற்றுக்கெல்லாம் நடுநாயகனாக, நாவலின் தலையாய கதாப்பாத்திரமான கிளிம் அமையப் பெற்றுள்ளான். வேறு வார்த்தையில் கூறுவதானால், இவை அனைத்தும், கிளிம்மை மையப்படுத்தி நடந்தேறும் நிகழ்வுகளின் சித்திரங்களாகின்றன. ஏனெனில், இது அவனது சரிதை அல்லவா? முதல் தொகுதியில் ஒரு நோஞ்சான் குழந்தையாகவும் பின் ஆரோக்கியமற்ற ஒரு சிறுவனாகவும் அறிமுகப்படுத்தப்படும் சிறுவன் கிளிம், தனது பலம்குன்றிய நிலைக்கமைய, தனித்து வாழும் ஒரு போக்கை கடைபிடித்துக் கொள்பவனாகவும், இன்னும் குறிப்பாக கூறினால், ஏனைய சிறுவர்களுடன் கட்டிப்புரண்டு ஆனந்தம் கொள்வதில் இருந்து கவனமாக தன்னை தவிர்த்து கொள்பவனாயும், கூடி வாழும் திறனற்றவனாயும், இக்குணச்சித்திரங்களோடு அன்றி பண்புகளோடு மெல்ல மெல்ல பெரியவனாக வளருவதை காணலாம்.

தன்னை ஒத்த சிறுவர்களை விலக்கிவிட்டு, பெரியவர்கள் மத்தியிலேயே வலம் வரும் இவன், பெரியவர்களுக்கு ஒரு விளையாட்டு புதினமாக, (புதிராக?) தன் புத்தியை அவர்கள் மத்தியில் விளம்பரப்படுத்தி, அப்பெரியவர்களிடம் இருந்து ஓர் சபாi~ பெற்றுக்கொள்ளும் எண்ணப்பாடு கொண்டவனாகவே அவன் தந்தையால் வளர்த்தெடுக்கப்படுகிறான். அவன் தாய், அவன் தந்தையிடம் முறையிட்டு கொள்வாள்: “இவனை நீ வெறும் விளையாட்டு பொம்மையாக்கி விடாதே” என்று. ஆனால் இந்த சோலைக்காட்டு பொம்மையோ, “மேலோட்டமாக” விளையாட்டு காட்டுவதை ஒரு கட்டத்தின் பின் கழற்றி வைத்து விடுகின்றது. அதன் பின்னரே இப்பொம்மையின் அமைதியான அட்டகாசம் சூல் கொள்ளத் தொடங்குவதை காணக்கூடியதாக இருக்கின்றது. கிளிமின் வசதியும் வாய்ப்பும், மேல் மத்திய வர்க்கம் கொண்ட சூழலும், வெளிப்படையாக பேசாத அவனது மௌனம் சார்ந்த ஒரு புத்தகத் தன்மையும் அவனுக்கு, அவன் புழங்கும் ஓர் வட்டத்தில், ஒரு, நூல் அறிவுடைய ‘புத்திஜீவி’ என்ற அந்தஸ்தை பெற்று தந்து விடுகின்றது.

மலினமான அங்கீகரிப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் அவனுடன் பிறந்த குணாம்சம், சிறுவயது முதலே அவனுள் தொடர்கின்றது. ‘மூலச்சிறப்புள்ள’ என்ற அவனது சிறு பிராயத்து கற்றுவிப்பு, அவன் பெரியவனாகியும், அவனை விட்டகலாத ஓர் ஆகர்ஷிப்பாய் அவனுள் தொடர்கின்றது. இருந்தும், எந்த ஒரு தத்துவத்தையும் தன் கடின உழைப்பால், ஆழமாக கற்றுத் தேரும் பண்போ, உழைப்போ, தேவைப்பாடோ அல்லது அதற்கும் மேலாக அதற்காக மிகுதியாய் தேவைப்படும் தன்னை வென்றாளும் தகுதியோ, அன்றி தன்னை மறந்த அர்ப்பணிப்புக்களோ, அவனிடம் வந்து சேராமலே போகின்றது.

‘படிப்பு’ என்பது பெருமளவில் தனது மேலாதிக்கத்துக்காக அல்லது ஒரு சுய அங்கீகரிப்பிற்காக ஆற்றப்படும் ஒன்றாகவே, அவனைப் பொருத்தமட்டில் சுருங்கிபோய் விடுகின்றது – வாழ்நாள் முழுவதும். உண்மை இப்படி இருந்த போதும், தன்னை ஒத்த இளையவர் கூட்டத்தில் இவன், ஓர் தீவிர சிந்தனையாளன் அல்லது புத்திஜீவி என்ற தோற்றப்பாட்டை கொண்டவனாகவும், அதிலும், முற்போக்கு அணியை சார்ந்த சிறு குழுவினர் முன்னால், ஒரு புரட்சிகர சாயல் கொண்ட மனிதனாகவும் சுற்று வட்டாரத்தில், (ஒரு கட்டம் வரை), கிளிம் பெயர் பெற்று கொள்வதில், வெற்றி பெறுகின்றான் எனலாம்.

அவனது அறிவு தேடல்களை எடுத்தாலும் சரி அல்லது அவன் தேடி நாடும்; அரசியல் - தத்துவார்த்த ஒன்று கூடல்கள் - இவற்றை எடுத்தாலும் சரி: இவை அனைத்தின் ஆகர்ஷிப்பிற்கும் அவனின் அடிநாதமாய் அமைவது அவனே. அனைத்தையும் செவிமடுத்து, அவற்றிற்கு தனது கேள்வி ஞான அறிவால் பெற்ற கருத்தினை கொண்டு அல்லது தான் கற்றிருக்கக்கூடிய நூல்களுக்கூடு, ஓர் தத்துவாரத்;த தொடர்பினை ஏற்படுத்தி அவற்றுக்கு ஒரு தத்துவார்த்த விளக்கத்தை தர முயற்சிப்பதற்கூடு தனக்கான ஓர் புத்திஜீவி பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள முயல்வதில் சிரத்தை கொள்கின்றான் அல்லது தனக்கான ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி கொள்வதில் சிரத்தை காட்டுகின்றான்.

ஆனால் இந்த புத்திஜீவி பிம்பமானது இறுதி கணிப்புகளில் அந்நியமுற்றதாயும் உள்ளீடற்றதாயும் வெறும் கோதோடு மிஞ்சி போவதாய் உள்ளது என்பது ஒரு சிலரால் கண்டுக்கொள்ளப்படவே செய்கின்றது. மனித துன்பம் அல்லது ஏழையர் அழுத கண்ணீர் - இவையனைத்தும் அவனில் தோற்றுவிக்கக்கூடிய மிக கூடிய அதிர்வு என்பது, மிஞ்சி மிஞ்சி போனால் “இது போன்ற கண்ணீரை மூலதனமாக்கி எத்தகைய, எவ்வகை கவிதைகள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன – அல்லது, இவற்றை, இதுவரை எந்தெந்த எழுத்தாளர்கள் முயன்று பார்த்துள்ளனர்” என்பது போன்ற ஏட்டுச்சுரைக்காய் சார்ந்த ஆய்வுணர்வாக மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டதாய் இருக்கின்றது.

எந்த ஒரு மனிதனுடனோ அல்லது எந்த ஒரு மக்கள் சாரியின், எந்த ஒரு கண்ணீருடனோ ஒட்டமுடியாத மனோநிலையை தன் வாழ்க்கை போக்கில் அடைபவனாய் இருக்கின்றான் கிளிம். அதாவது, இந்த அளவில் இவன் சமூகத்திலிருந்தும் தன் சக மனிதனிடமிருந்தும் அந்நியமுற்றவனாய், தனக்கேயான ஒரு உலகத்தை வடிவமைத்து கொள்பவனாயும், தன்னளவில் அல்லது தான் நம்பும் அளவில், மூலச்சிறப்புள்ள கூற்றுக்களை அல்லது குறிப்புகளை ஆற்ற முயல்வதற்கூடு ஓர் அங்கீகாரத்தை சமூகத்தில் கோரி நிற்பவனாகவும் சிறுத்து போகின்றான், இவன். உதாரணமாக, தன்னுடன் கல்வி கற்ற ஒரு இளம்பிராயத்து பால்ய நண்பி ஒருத்தி, தன் காதலானது மிக மிக அநீதியான முறையில் பையனின் தாயாரால் சிதைக்கப்பட்டதை கூறி, வேதனையுற்று கண்ணீர் வடிக்கும் போது, இவன் தனக்குள் தலை குனிந்து சிரித்துக் கொள்பவனாய் இருக்கின்றான். ஒரு பெண்ணின் மிக ஆழமான துயர் அவனில் ஏற்படுத்தக்கூடிய அதிகபட்ச உணர்வு இதுவாகவே இருக்கின்றது.

இனி, இந்த விசேட மனிதன், அன்றைய ரஸ்யா சமூகத்தில் ஏற்பட்ட மாறுதல்களுக்கும் அசைவுகளுக்கும், ஓட்டங்களுக்கும் ஆர்ப்பரிப்புகளுக்கும் ஏற்ப அசைந்து, அசைந்து, தகவமைத்து காலத்தோடு காலமாய் வளர்கின்றான். ஆரம்பத்தில், ஒரு கட்டத்தில், ஜார் மன்னனை வியக்கும் இவனது உள்ளம், தன் பிற்பட்ட காலத்தில் ஒரு ரஸ்ய பாராளமன்ற உதயத்தை சிலாகிக்க முயல்கிறது. (ஆனால் இந்த அரசியலையும் அவன் மிக கவனமாக, அந்தரங்கமாக தனக்குள்ளேயே வைத்துக் கொள்வதில் கவனம் கொள்பவனாயும் இருக்கின்றான்). போதாதற்கு, ரஸ்யாவில், அன்றைய கட்டத்தில், சூல் கொள்ளும் புரட்சிகர அலையை கூட அவன் ஆன்மா, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தனக்குள்ளாகவே, அந்தரங்கமாய் எள்ளி நகையாட முற்படுவதில் இருந்து தவிர்க்க முடியாமல் வேறு இருக்கின்றது.

சோசலிஸ்டுகள் எனப்படுவோர் முதிர்ச்சியற்றோராயும், வாழ்வைப்பற்றி அறியா அல்லது முற்றாய் உணரா முதிரா ஜன்மங்கள் என்பதும் - தம்மை விட புத்திஜீவி தனத்தில் சற்றே கூடிய ஒரு சில சில்லறை ஆளுமைகளால் தடுக்கிவிழச் செய்யப்பட்டு, பின் வாழ்வின் இப்படுகுழிக்குள் இப்படியாய் வீழ்த்தப்பட்ட இவர்கள், இப்படுகுழிக்குள் இருந்து மேலெழுவதற்கான மார்க்கம் ஒன்றினை அறியாமல், அதற்குள்ளேயே செக்கு மாடுகள் போல் சுற்றி சுற்றி வந்து தவிப்பவர்கள் என்றும் அவனது ஆன்மா அப்புரட்சியாளர்களை வரைவிலக்கணம் செய்து விடுகின்றது. (அவனுக்கே உரிய மூலச்சிறப்புடன்!)

அவனது அந்தரங்க ஆன்மா, அல்லது அவனது ரகசிய சிந்தனை கூடம், இப்படி இருந்தும் கூட அவன் சுழலும் வட்டமோ, ஒப்பிட்டளவில் ஓர் முக்கிய வட்டமாகவே இருக்கின்றது. வளர்ந்த ஒரு மனிதனாய், அவனது மாற்றான் தந்தையின் பத்திரிக்கை கூடம்-அதனுடன் தொடர்புபட்ட ஊடகம் சார்ந்த ஒரு சிறு ‘கற்றோர்’ கூட்டம் அல்லது அதைவிட்டால் அவன் சார்ந்த வழக்கறிஞர் கூட்டம் அல்லது அவன் கல்விக் கற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக் கழகங்கள் எனக் கொண்டாலும் சரி அல்லது அவன் தேடிப்போகும் அரசியல் ஒன்று கூடல்கள் அல்லது ஜெயகாந்தனது ‘மடம்’ போன்ற ஏற்பாடுகள், இவற்றை எடுத்துக்கொண்டாலும்; சரி – ஒரு புத்திஜீவியின் மோஸ்தாரில் - அதுவும் ஒரு முற்போக்கு புத்திஜீவி மோஸ்தாரில் - வலம் வரும் இவன், அவ்வட்டங்களின் மத்தியில் மேலோங்கும் பல்வேறு அரசியல் தத்துவார்த்த சித்தாந்தங்களின் மோதுகைகளின் மத்தியில் அல்லது நடவடிக்கைகளின் மத்தியில், தானும் ஒருவனாய் பங்கேற்கக்கூடிய ஓர் பாத்திரத்தை கொண்டவனாய் இருக்கின்றான் ஒரு புத்திஜீவியாய்.

இத்தகைய ஒரு சூழலை வாய்ப்பாக கொள்ளும் இந்நூல் தனது இத்தகைய பாத்திரங்களுக்கூடு, அன்றைய ரஸ்யாவில் குறுக்கும் நெடுக்குமாக ஓடியிருக்க கூடிய பல்வேறு சிந்தனை மரபுகளை தொட்டு விசாரித்து மெல்ல அசைபோட்டு தன் வளர்ச்சியோடு, மேல் நோக்கி நகர்வதாய் இருக்கின்றது. டால்ஸ்டாய், ட்தஸ்தவஸ்க்கி, நீட்சே, பேர்னடின் என முடிவற்று நீளும் பல்வேறு சிந்தனை மரபுகளையும் அவற்றின் தொடர்ச்சிகளையும் தத்தமது உள விருப்பத்தின் பிரகாரம் அல்லது இன்னும் சரியாக சொல்லதானால், தத்தமது வாழ்க்கை நலனின் பிரகாரம் - தேர்ந்து ஏற்று கொள்ளும் மனிதர்களையும் அவர்தம் செயற்பாடுகளையும், அவர்தம் வாழ்க்கை பொறுத்த முடிவுகளையும் அவதானிப்புக்களையும் கூற்றுகளையும் நூல் தொட்டுத் தொட்டு விரிகின்றது. அதாவது இச்சிந்தனை மரபுகளின் சாராம்சம் என்ன, அவை எப்படிப்பட்டவை, அவற்றை தேரும் மனிதர்கள் எப்படிப்பட்டோராய் இருக்கின்றனர் என்பவற்றையெல்லாம், அவற்றின் சாரம் கசிய, ஆனால் இரண்டொரு வரிகளில் கோடிட்டு வெளிச்சத்திற்கு கொண்டுவருவதாய் நூல் அமைக்கப் பெற்றுள்ளது. நூலின் இவ் அம்சமே, மரபுகளை சிதறடிக்க செய்யும் அல்லது மரபுகளையும் அவற்றின் பின்னால் மறைந்திருக்கும் சமூக நலன்களையும் அம்பலப்படுத்தும் அம்சமாக நூலில் ஆழ வெளிப்பட்டு விகசிப்பதாயுள்ளது. அதாவது, இதுவரை, கலகம் செய்ய எழுந்தவனுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்குடையதே எமது எழுத்து என்ற சித்தாந்தத்தில் இருந்து நகர்ந்து, கார்க்கி, இந்நூலுக்கூடு அத்தகைய ஓர் கலகத்தை உருக்கொள்ள அல்லது கட்டமைக்க செய்யும், மரபுகளின் சிதைவுகளுக்கு வித்திடுவதாக, தன் எழுத்தின் நோக்கை மாற்றியமைத்து கொண்டாரோ என்று கேள்வியை எழுப்பும் வண்ணம் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.


[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.