வெள்ளையானையின் சித்தரிப்பின்படி, பஞ்சங்கள் சூழ்ந்த நிலையில், அவலங்களும் கொடுமைகளும் கண்முன்னே விரிய ஒரு வகையில், கூடவேஷெல்லியின் தாக்கத்தாலோ என்னவோ, சமூக நீதிக்கான உள்ளுணர்வு ஏய்டனை மேலே கூறியவாறெல்லாம், தடுமாறவைக்க, காத்தவராயன் தன் “கருணை அரசியலோடு” வந்து சேர்கின்றான். காத்தவராயனின் மேற்படி கருணை அரசியலால், இறுதியில், இந்தியாவின் முதல் வேலை நிறுத்தமும் ஐஸ் ஹவுசில் வந்து சேர்ந்ததாய் நாவல் விபரிக்கின்றது. வேலை நிறுத்தங்களை, அதன்போது வேகம் பெறும் மனித நடத்தைகளை, அங்கே ஒன்றிணையும் திரள்களின் தோழமைகளை ஒன்றிணையும் திரட்சியின் தியாகங்களை, விவரிக்கும் நவீனங்களை இலக்கிய பாரம்பரியம் அறியும். ஆனால் திரு.ஜெயமோகன் அவர்கள் முன்நிறுத்தும் வேலைநிறுத்தம் சற்று வித்தியாசமானதாகவே அரங்கேறுகின்றது. வேலை நிறுத்தத்தை ஒழுங்கமைக்கும் தலித்திய வீரன் காத்தவராயன், வேலை நிறுத்தத்தை, கருணையின் அடிப்படையில் கட்டுவிக்க முனைகின்றான்.

“மூன்று நாள் போராட்டம் அதுதான் என் திட்டம். அதற்குள் நான் எல்லா செய்தி தாள்களுக்கும் செய்தி அனுப்பி விடுவேன்… மதராஸ் மெயில்… கடந்த பல மாதங்களாகவே பஞ்சம் பற்றிய செய்திகளை போட்டுக் கொண்டிருக்கின்றது. அவர்களின் உதவி நமக்கு இருக்கும். போராட்டம் சமரசம் ஆனாலும் பிரிட்டிஷ் அரசு இதைப் பற்றி யோசிக்கும்… நான் டியூக் ஆஃப் பக்கிங்காமை நம்புகிறேன். அவரது கருணையின் ஒரு சொட்டு எங்கள் மக்கள் மீது விழுந்தாலே போதும். ஏனென்றால் நூற்றாண்டுகளாக கருணையென்றால் என்னவென்றே எம் மக்கள் அறிந்ததில்லை (பக்கம் 279).

அதாவது சிப்பாய் கலகம் முடிந்து 21 ஆண்டுகள் முடியும் முன்னரே காத்தவராயன் கட்சியினதோ அன்றி ஒரு தத்துவத்தினதோ வழிகாட்டலின்றி தனிமனிதனாய், ஆங்கிலேயரின் கருணையை அடித்தளமாக கொண்டு மேற்படி வேலை நிறுத்;தத்தைக் கட்டியெழுப்ப முற்படுவதாக சித்திரம். இதேவேளை மேலே கூறப்பட்ட, சிப்பாய் கலகத்தின் போது, குறைந்தது எட்டு லட்சம் பேரின் உயிர்களுக்கு உலைவைத்த - காவு கொண்ட ஆங்கிலேயர் ஆட்சி, பின்னர் பின்னால் வந்திருக்கக்கூடிய ஜாலியன் வாலா பாக் கொலைகள் - இவை அனைத்தும், ஆங்கிலேய ஆட்சி அதிகாரம் என்பது கருணையின் அடிப்படையிலா கட்டப்பட்டது என்பதைத் தெளிவாக்கும் வரலாற்று பதிவுகளாகின்றன.

அனைத்து ஆதிக்க சக்திகளின் பல்ஈறுகளில் படிந்திருக்கும் கருப்பு திட்டுகளின் சுவடுகள் போன்றே, இந்த ஆங்கில காலனித்துவ ஆதிக்கச் சக்திகளின் ஈறுகளில் படிந்துள்ள கரையுமாகின்றது இது. – (சமயங்களில் அதைவிட மிக மோசமானதாய்). இனி அக்காலத்தை விட்டு இக்காலத்துக்கு வந்து சேர்ந்தாலும் கொடுமைகள் தொடர்வதாகவே உள்ளது. அது கீழ் வெண்மணியாக இருக்கலாம். அல்லது தெலுங்கு கவிஞர் வரவர ராவோவின் இன்றைய நிலைமையாகவும் இருக்கலாம். கருணை என்பது, இந்த வடிவில் தான், ஆதிக்கச் சக்திகளைப் பொறுத்து செயல்படக்கூடும். இது வரலாறு. இச்சூழலில், அரசியல் விதிமுறைகளை மறந்து, காத்தவராயனை ஒரு கனவு ஜீவியாக படைத்தளித்து அவனைத் தன்னிச்சையாக சுரம்பாட செய்வது ஜெயமோகனின் அரசியலுக்கு உவப்பானதாக இருக்கலாம்.

கருணையில் நம்பிக்கை வைத்து களமிறக்கப்படும் தொழிலாளர்களிடம் மாறிய சூழல்கள் காரணமாக ஒரு கட்டத்தில் ஏய்டனாலும் காத்தவராயனாலும் போராட்டத்தை முடித்து வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி கேட்கப்படுகின்றது. (பக்கம் 343)

தொழிலாளர்கள் உடன்பட மறுக்கின்றார்கள். அவர்கள் ஏய்டனின் உத்தரவையும் நிராகரிக்கின்றார்கள். காத்தவராயனின் கோரிக்கையையும் நிராகரிக்கின்றார்கள்:

“முடியாது சார். எங்களுக்கு நீதி வேண்டும்..” (பக்கம் 344)

“நான் தாக்குதலுக்கு ஆணையிடுவேன். தாக்கச் சொல்லுவேன். கலைந்து செல்லுங்கள்’ என ஏய்டன் கூறுகின்றான்” (பக்கம் 345)

மீண்டும் மீண்டும் கூவிய ஏய்டனில் வேகம் பீறிட்டு வருகின்றது. ஜெயமோகன் பின்வருமாறு சித்தரிக்கின்றார் அவனது நிலையை:

“ஒரு வகை அகங்காரம். கட்டுக்கடங்காத வெறி… அகங்காரம் சீண்டப்பட்டதன் விளைவா? மிதிப்பட்ட பாம்பு போல – ஆனால் அவனுள் உறையும் வெள்ளையனின் ஆணவம் தானா அது? அந்தக் கருப்பு மக்கள் முன் தோற்று நிற்கும் கணத்தில் பல்லாயிரம் ஆண்டு காலம் தோல் நிறத்துக்காக அகங்காரம் கொண்ட அவனில் மூதாதையரின் ஆவிகள் எல்லாம் அவனுள் ஒருங்கு கூடினவா? (பக்கம் 347)

இறுதியில் ஆதிக்கச் சக்திகளின் ஆணவத்திற்கு, அவர்களின் ஆதிக்கத்திற்கு இப்படியாக ஜெயமோகன், ஒரு தொன்மையையும் அங்கே கற்பித்து விடுகின்றார். இப்பின்னணியில் உலகெங்கும் அரங்கேறி வெற்றிப்பெற கூடியதாக இருந்த புரட்சிகளில் (குறிப்பிட்ட காலம் வரையிலேனும்) தோல்வியைத் தழுவ நேர்ந்த ஆதிக்க சக்திகளின் மூதாதையரின் ஆவிகள் அங்கே என்ன செய்தன, ஒருங்கு கூடவில்லையா என்பது போன்ற கேள்விகளும் இவை தொடர்பில் எழாது இருக்க முடியாதுதான்.

ஆனால் “அகங்காரம் கொண்ட அவன் மூதாதையரின் ஆவிகள் எல்லாம் அவனுள் ஒருங்கு கூடினவா என்ற கேள்வியை முதலாவது பந்தியில் இருத்திவிடும் ஜெயமோகன், தனது அடுத்த பந்தியில் வேறு ஒரு ராகத்தை அதே சுரத்தில், இசைக்க முற்படுவது சுவாரஸ்யமானதுதான்:

“இல்லை. அது இல்லை. அந்தக் கணத்தில் எழுந்தது எந்தப் போர் வீரனுக்குள் உள்ள இயல்பான தன் அகங்காரம் தான். எதிர்ப்பினைச் சந்திக்கும் போது சீறி எழுவது அவனுள் உள்ள பயிற்றுவிக்கப்பட்ட ராணுவ மனம். அது ஒரு ஆயுதம்… என் மனம் ராணுவ பயிற்சியால் வடித்து கூர் தீட்டப்பட்டு விட்டிருந்தது. நான் ஒரு கச்சிதமான துப்பாக்கி. விசையில் கைப்பட்டதும் வெடித்தே ஆக வேண்டியவன். ஆம், நான் அதுதான். எங்கே உலகின் எந்தப் படைவீரன் நின்றிருந்தாலும் அதைத்தான் செய்வான். ஆம்” (பக்கம் - 348)

இப்படியாக மூதாதையரின் ஆவிகளின் ஒன்று கூடலில் இருந்து, கிளைபிரிந்து, இப்போது ராணுவ மனநிலை என்ற புதிய கண்டுபிடிப்பு முன்னிறுத்தப்படுகின்றது. ஆனால் கச்சிதமான, இவ்வகையான, பயிற்றுவிக்கப்பட்ட ராணுவ மனங்கள் தாம் அதாவது இந்த கச்சிதமான துப்பாக்கிகள் தாம் ஓர் 15 ஆண்டுகளுக்கு முன்பதாக, தமது ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எதிராக ஒரு சிப்பாய் கலகத்தை நடத்தி முடித்து தம்மை பயிற்றுவித்த அதே அதிகாரிகளை, பதம் பார்க்கவும் துணிந்து நின்று நடவடிக்;கை எடுக்க நிர்ப்பந்தமாகின. இக்காட்சி, இந்தியாவுக்கு மாத்திரம் உரித்தானது அன்று. உலகெங்கிலும் சிப்பாய் கலகம் போன்ற காட்சிகளால் வரலாறு நிரம்பி வழியவே செய்கின்றது.
உதாரணமாக ரஸ்ய புரட்சியின் துவக்கத்தை அறிவித்த ரஸ்ய போர் கப்பலான அரோரா, தனது முதல் குண்டை றுiவெநச Pயடயஉந ஐ நோக்கி வீசி எறிந்து ரஸ்ய புரட்சியின் துவக்கத்தை இடியென அறிவித்தது.
வர வர ராவோ போன்ற ஆயிரக்கணக்கான பிராமணர்கள் தத்தமது இருக்கு வேத சடங்குகளைப் புறந்தள்ளி இடதுசாரி கட்சிகளில் இணைந்து கொள்கின்றனர். இவை ஒட்டுமொத்தமாக எதைக் குறிக்கின்றன? ஆவிகள் ஒன்று கூடும் சூழ்நிலையில் மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதனையா? அல்லது சாதீய அடுக்குகளும் பயிற்றுவிக்கப்பட்ட மனங்களும், மூதாதைகளின் ஒன்றுக்கூடக்கூடிய ஆவிகளும் சாசுவாதமானவை – எந்நாளும் மாற்றப்பட முடியாதவை என்பதனையா? ஜெயமோகனில் உள்ளடங்கும் வரலாற்று குருட்டுத்தனம் இதுவாகின்றது. ஆனால் இது இயல்பான குருட்டுத்தனம் என்பதிலும் பார்க்க திட்டமிட்டு தோற்றுவித்து கொள்ளப்பட்ட குருட்டுத்தனம் என்பதே சாலப்பொருந்தும். ஏனெனில் இது ஒரு குறித்த அரசியலின் முகமுமாகின்றது.

நாவலில், ஏய்டனின், அக்கணத்தை, தொடர்புபடுத்தி, ‘பயிற்றுவிக்கப்பட்ட ராணுவ மனம்’ , அல்லது ‘ஒன்றுகூடும் மூதாதையரின் ஆவிகள்’ அல்லது ஷெல்லியின் வரிகள் - இப்படி ஏதோ ஒன்றுடன் தொடர்புபடுத்தி அவனது ஆதிக்க உணர்வு நியாயப்படுத்தப்படுகிறது. இது இயல்பானதே. இன்னும் சரியாக சொன்னால் ஜெயமோகன் போன்ற எழுத்தாளருக்கு இது போன்ற விடயங்கள் மிக மிக இயல்பானதே. ஏனெனில், ஷெல்லியின் எழுத்துக்கள் என்பது ஜெயமோகன் போன்ற வகைகளுக்கு, தொட்டு கொள்ள, ஊறுகாய் போன்ற ஒரு சமாசாரமே என்பதனைத் தவிர வேறில்லை. ஆனால் பாரதி போன்ற ஓர் மனிதனை எடுத்துக் கொண்டால் அவனது வாழ்வின் ஆணி வேராகவும் சிரஞ்சீவியாகவும் இருக்ககூடியதுஷெல்லியின் எழுத்துக்கள். இதன்படி பார்த்தால் இளந்தலைமுறைகளை சார்ந்த, சிரஞ்சீவிகளாக பரிணமிக்கக் கூடிய, இளையோர் மனங்களை எப்படி ஊசிப்போன ஊறுகாய்களாக மாற்றுவது என்பதிலேயே ஜெயமோகன் போன்றோரின் நுண் அரசியல் அடங்குகின்றது எனலாம்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.