- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -


அமைதியாக கிடந்தது குளம்.

பூம்பாறை செல்லும் வழியில், ஒரு சாலையோர தேநீர் கடைக்காரர் என்னை எச்சரித்திருந்தார், காடுகளின் ரம்மியங்கள் குறித்து பேசும் போது:

“நேரே மண்ணனூர் போயிருங்க சார்… காடு… அப்படி ஒரு காடு… ஆனா நீங்க யாராவது ஒரு ஃபாரஸ்ட் ஆப்பிசரோடத்தான் உள்ள போகனும்… ஏன்னா வனத்து தேவதைக வாசம் செய்ற காடு அது… அடிக்கிற காத்துலேயே வசியம் கலந்து இருக்கு… ஆள மயக்கி, புத்திய பேதலிக்க வச்சு அப்படியே சர்ருன்னு உள்ளுக்கு இழுத்துக்கும்…”

இலக்கியங்களும், மனிதர்களை காடுகள் எப்படி எப்படி ஆகர~pப்பதாய் இருக்கின்றன என்பதை நன்கு பதிவு செய்தே உள்ளன. இதுபோலவே இக்குளமும் சிற்சில மனிதர்களை தன்வசம் இழுத்து உள்ளே வைத்து கொள்கின்றதோ என்ற சந்தேகம் இப்போது என்னிடம் பெரிதாய் எழுந்தது.

இக்கேள்விகள் எல்லாவற்றிற்கும், காரணமே பெரியவர்தான்.

அவரது வார்த்தைகளில் கூறுவதானால், “எங்கோ பிறந்து, எங்கோ அலைந்து”, பின் போராடி, ஸ்தாபித்து, அலைகளால் எத்துண்டு வாழ்வால் அலைக்கழிக்கபட்டு போன ஒரு நாராய் இப்புல்வெளியில் வந்து சாய்ந்த அவரை, இக்குளமே அரவணைத்து ஆசுவாசப்படுத்தியிருக்க கூடும். பெருந்தன்மையும், வாழ்வில் தன் சக மனிதனை முடிந்தவரை உய்விக்க முயன்று அவனுக்காய் அனுதாபங்கள் கொண்டு விசனிக்க தலைப்பட்டவர் அவர். அவரின் அகத்திடை தோய்தலுக்கான ஓர் வெளியையும் இக்குளமே அவருக்கு ஏற்படுத்தி தந்திருக்கவும் கூடும். “மூளையில சிக்கினிச்சோ, அப்புறம்…” என்று சமயங்களில் மனிதர்களின் எச்சரிப்புகளுக்குள்ளாகும் இக்குளம் சிலரது வாழ்வில், பனிபடர் பர்வத சாரல்களின் குகை தவங்களா என்பதும் புரியவில்லை.

அட்டுவம்பட்டிக்கு நான் இம்முறை சென்றிருந்த போது, கொடைகானலின் பிளம்ஸ் மர வகைகளை எனக்கு கற்று தந்த மாதை நான் காண தவறவில்லை. பெரிதும் சந்தோசமடைந்தாள். காப்பி தந்தாள். அட்டுவம்பட்டி நகரை போல அவளும் மாற்றமடைந்திருந்தாள் எனலாம்.

தன் கை விரல்களை நீட்டி எனக்கு காட்டி “இந்த கையெல்லாம் அப்படியே மரத்து போகுதுங்க…” என்று முறையிட்டாள். “முந்தி மாதிரி வேல செய்ய முடியுதுல்ல இப்போ. தெரேசா காலெஜ்ஜ கூட பெருசா கட்டிட்டாங்க… அங்க படிப்பிக்கிறவங்க எல்லாம், இங்க இந்த இந்த வீட்ல வாடகைக்கு வந்து குடியேறி இருக்காங்க” என்று எதிர்த்தாற் போல் – இப்போது பெரிது பெரிதாய் வீதியோரமாய் நின்ற “தட்டுவைத்து வைத்து கட்டப்பட்ட” வீடுகளை காட்டினாள்.

“அவங்க எல்லாம் கீநாட்டு காரவுங்கத்தான்… கதைக்கிறதோட சரி… பழக மாட்டாங்க… நம்ம மாதிரி…”

சுருக்கமாக கூறினால், கருப்பண்ணசாமீ “கொல்லி மலையில ஒரு காலும் அட்டுவம்பட்டியில ஒரு காலும்” வைத்ததின் தாக்கங்களை பார்க்க முடிந்தது.

கல்லொடைக்கும் சேவியர் வேண்டுமானால் முறையிடலாம்: “வெளிய இருந்து வந்த அத்தனை பேருக்கும், அவ்வளவும் கிரிமினல் மூளைங்க” என.

ஆனால் சுழல் சுழல்கின்றது.

இந்த சுழற்சியில் தன் எதிரி யார், தன் விரோதி யார் என்று தெரியாத வண்ணம் புழுதி மண்டலமும் மேலெழும்புகின்றது. பெரியவரின் “அவன் எப்படித்தான் கண்டுணர்வான்”; என்ற கேள்வி மேலும் சுழல்கின்றது.

“புத்தி சொல்ல ஏலாதுங்க… ஒரு சம்பவம் நடக்கனும்…” என்பது அவரது நம்பிக்கை.

கண்ணை மறைக்கும், இந்த பாழும் புழுதி மண்டலத்திலிருந்து அவனை வெளியே இழுத்தெடுத்து அவன் கண்ணை திறக்கக்கூடிய என்ன சம்பவத்தை குறித்தார் அவர்? எதை சம்பவம் என்று வர்ணிக்க முனைந்தார் அவர்?

முப்பது கோடி முகங்கள் கொண்ட இந்திய விடுதலை இயக்கத்தை ஒத்த, ஆயிரம் தலைகள் கொண்ட இன்னும் ஒரு பேரலையையா? அல்லது இன்னுமொரு தளத்தில் இயங்கக்கூடிய வேறொரு, வகை சார்ந்த பேரலையையா?

இந்திய விவசாய பேருலகை இந்தியாவின் இதயம் என்று வரையறை செய்துள்ளார்கள் பலர். இருக்கலாம்.

கனவுகள், கனவுகள், கனவுகள் – எத்தனை கனவுகள்தாம் இங்கே.

விவசாய பேருலகு பிறப்பித்த இக்கனவுகளில் வரும் கால்கள் வெவ்வேறு.

“அடே… நான் கொல்லி மலையில ஒரு காலும் அட்டுவம்பட்டியில ஒரு காலும் வைக்க போறேன்டா” – பெரியவரு சொல்லி இருக்காரு.

கால்கள், கால்கள், கால்கள்.
எத்தனை கால்கள்.

எந்த கருப்பண்ணசாமி ஒரு காலை கொல்லி மலையிலும் ஒரு காலை அட்டுவம்பட்டியிலும் வைத்தாரோ – அதே கருப்பண்ணசாமி ஒரு காலை விடுதலை நகரிலும் இன்று சற்று வித்தியாசமாக வைக்க தவறவில்லை.

பெரிய பெரிய குழிகளும் வாகனங்களும் ட்ரக்டர்களும், விடுதலை நகரில் படிப்படியாக.

அட்டுவம்பட்டி பூசாரி கூறியது படி ஒரு முப்பத்தொரு ஆடு… ஒரு நூறு கோழி… விசேஷம்…

எவ்வளவு பலிகளைத்தான் இந்த கனவுகளும் – அந்த காலடிகளும்; கோருவதாயுள்ளன?

அதிலும் வித்தியாச வித்தியாசமான பலிகளை அவை விரும்புவதாயுள்ளன.

இப்பலிகள், இப்பலிகளை கோரிநிற்கும் காலடிகள், அக்காலடிகள் உண்டுபண்ணும் அழுத்தங்கள் – பின் – அவ் அழுத்தங்கள் ஏற்படுத்தும் சிதைவுகள், பின் அவற்றில் வேகும் – வெந்து, குமைந்து விடப்படும் மனிதர்களின் ஏக்க பெருமூச்சுகள் – இவற்றை என் கொடைக்கானல் பயணங்களின் போது நிறையவே சந்திக்க நேர்ந்தது.

ஆனால், விடுதலை நகரில் இன்று வைக்கப்படும் காலடிகளை விட மோசமான வேறொரு காலடி, மழை அடித்து கொட்டி, குளிர் வாட்டி எடுக்கும் சகதிகள் நிறைந்த ப10ம்பாறை காடுகளின் நடுவே சவுக்கு மர பட்டைகளுக்காக, ஒரு காலத்தில் எடுத்து வைக்கப்படவே செய்தது.

அந்த காலடிக்குரிய கனவுகளில் வந்தது யாரென தெரியவில்லை.

இருந்தும் அவற்றையெல்லாம் தூறெடுத்து, சகதிகளின் விஷ வாயுக்களில் புதைந்து உழன்ற மாந்தர்களை மீட்டெடுக்க அவ்வப்போது மனிதர்கள் தோன்றாமலும் விட்டதில்லை.

பேரலைகளில் இம்மனிதர்கள் தோன்றியிருக்க கூடும்.

அல்லது பேரலைகளாய் நிகழ்ந்தேறிய சமூக பிறழ்வுகளால் இம்மனிதர்கள் தோன்றியிருக்கக் கூடும்.

சில சந்தர்ப்பங்களில் இப்பேரலைகளை தோற்றுவிப்பது கூட அக்கினி குழம்பின் ஓர் துளி என கூறப்படுகின்றது. அவ் அக்கினி குழம்பின் ஓர் துளியை எங்கே தேடுவது? – இனி என்ன செய்யலாம்? இனி செய்ய வேண்டியது என்ன?

குளம், இப்போது, அமைதியாக கிடந்தது.

[முற்றும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.