4.

ஏய்டன் என்பவன் அயர்லாந்தில் இருந்து வந்த ஒரு ஆங்கில அதிகாரியாக இருந்தாலும், ஒரு ஆங்கிலேய ராணுவ பள்ளியில் படித்து வளர்ந்திருந்தாலும், ஷெல்லியின் எழுத்துக்களை அவன் உருப்போட்டிருப்பதால், அது, அவனை சமயங்களில் அலைக்கழித்து சமூக நீதிக்கான மன உலைச்சல்களை, சலனங்களை அவனில் ஏற்படுத்துவதாய் நாவல் சித்தரிக்கின்றது. ஷெல்லியின் மானுட நோக்கானது அல்லது அவனது சமூக நீதிக்கான குரல் எவ்வளவு வலிமை பொருந்தியது என்பதெல்லாம் ஏற்கனவே வரலாற்றில் பதியப்பட்டுள்ள சங்கதிகள்தாம். ஷெல்லி மாத்திரம் என்றில்லாமல் ஷெல்லிதாசன் என அறியப்பட்ட பாரதி முதல் இன்னும் இருக்ககூடிய அனந்த எழுத்தாளர்கள், மானுட நேயத்தின் பார்வையால் தூண்டப்பெற்று ஓரணியாய் நின்றதும், நிற்பதும் கூட வரலாறுதான். இதன் தொடர்ச்சி இன்றும் எம்மிடை அவதானிக்கக் கூடியதுதான். இவ்வெழுத்துக்கள் மனிதனை அப்படி என்னதான் செய்கின்றன? இவ்வெழுத்துக்களின் தேவைப்பாடுதான் என்ன?

ஒரு முறை ஜெயகாந்தன் ஒரு கதையைக் கூற நேரிட்டது:

ஒரு கிராமத்து திருடன். நீண்ட நாள் சிறை வாசத்தின் பின், ஊரார் அவனைத் தீண்டாத நிலையில் இருத்திய போது ஒரு பாதிரி, அவனைத் தன் வாசஸ்தலத்திற்கு இட்டு வந்து அவனை அன்பால் திருத்தும் பொருட்டு அவருடன் தங்கவைத்து கொள்கின்றார். நடு இரவில் கண் விழிக்கும் அவன் தன் பழக்க தோசத்தாலோ என்னவோ மாதா கோயிலின் இரண்டு விளக்குகளில் ஒன்றைச் சுருட்டி எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகின்றான். இருந்தும் ஊர் எல்லையில் காவலாளர்களிடம் பிடிபட்டு போகின்றான். விளக்கைப் பார்த்துவிட்டு அவனை அவர்கள் மாதா கோயிலுக்கே திருப்பி அழைத்து வருகின்றார்கள். இவர்களைக் கண்ட மதகுரு, ‘நண்பரே வாருங்கள்’ ஏன் மற்ற விளக்கையும் எடுத்துக் கொள்ளாமல் மறந்து போய் விட்டிருந்தீர்கள்…இந்தாருங்கள், எடுத்து செல்லுங்கள் என்று மற்ற விளக்கையும் அவனிடம் கொடுத்து விடுகின்றார். மதகுருவின் இந்நடவடிக்கை அவனில் ஒரு மாற்றத்தைக் கொணர்ந்து சேர்ப்பதாய் கதை.

இதைக் கூறும் ஜெயகாந்தன் “இப்படித்தான் - நூல்கள், புத்தகங்கள் எம்மைப் பாதிக்கின்றன. எங்கோ, தொலைதூரத்தில் எழுதப்பட்ட இந்த சிறுகதை எனது மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. யாரோ ஒரு நண்பர் ஒருமுறை சில தென்னங்கன்றுகளை எனக்குத் தத்திருந்தார். அவை கிடு கிடு வென வளர்ந்து ஒவ்வொரு மரத்திலும் குலை குலையாக காய்களை ஏந்தியிருந்தன. இளநீர் குடிக்க ஆசை இருந்தும் அண்ணாந்து பாரப்பதோடு நான் சரி. மரமேற தெரியாது. யாரையாவது கொண்டு தேங்காய்களைப் பறிக்கலாம் என்றாலும் யாருமே அகப்படவில்லை.

ஒரு நாள் இரவு, தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும் போது தொப் தொப் என்று சத்தம். எழுந்து டோர்ச் லைட்டை அடித்து பார்த்தேன். மரத்தின் உச்சியில் ஒருவர். கூறினேன்: ஐயா உம்மை எங்கெல்லாம் தேடுவது. பகல் முழுவதும் வராமல் இருந்துவிட்டு இப்போது வந்துள்ளீர்கள். சரி பரவாயில்லை. எல்லாவற்றையும் பிடுங்கி உமக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு மிகுதியை எமக்கும் வைத்துவிட்டு போம் என்றேன் –அதன் பிறகு கதவைத் தாழிட்டுவிட்டு படுத்தேன். அதன் பிறகே நிம்மதியான தூக்கம் வந்தது. காலை எழுந்து வெளியே வந்தேன். என்ன ஆச்சரியம். ஒவ்வொரு மரத்தடியிலும் அழகழகாக தேங்காய்கள்; அப்படி அப்படியே, குவித்து அடுக்கப்பட்டு இருந்தன. எனது கவலையெல்லாம் ஒன்றுதான். எனக்காக இவ்வளவு தேங்காய்களை விட்டுசென்றிருக்கின்றாரே. தனக்காக ஓரிரண்டையாவது எடுத்து சென்றிருப்பாரா இல்லையா? என்பதே அது. இப்படியாகத்தான் நூல்கள், எழுத்துக்கள் எம்மைப் பாதிக்கின்றன. மாற்றுகின்றன. அந்த நாட்களில் நான் என்றும் ஓர் பாரதியார்; புத்தகத்தோடுதான் திரிவேன்” என்றார் அவர்.

எழுத்தின் மகத்துவம் குறித்து குறிக்கும் மேற்படி கதையைப் போன்றே பாரதி மேல் n~ல்லி செலுத்திய செல்வாக்குமாகும். அது எப்படிப்பட்டது என்பது குறித்து பின்வருமாறு ஆற்றப்படும் ஒரு விமர்சகரின் குறிப்பில் இருந்து அறியலாம்:

“ஷெல்லிதாசன் என்பது பாரதியின் இளமைக்கால புனை பெயர்களில் ஒன்று… ரவீந்திரநாத் தாகூரும் இளமையில் n~ல்லிதாசனாகவே இருந்தார்… அடிமை, மிடிமை, மடைமை, வறுமை முதலியன என்ன வடிவத்தில் எங்கிருந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிய துடித்த அராஜக கவிஞன் ஷெல்லி… எவ்விதமான தலையீடும் இன்றி மனிதன் சுத்த சுயம்புவாக சுதந்திரபிறவியாக துலங்க வேண்டும் என்பது ஷெல்லியின் கனவு. எங்கெங்கு மனிதன் தளைகளில் இருக்கின்றானோ அங்கெல்லாம் விடுதலையின் சங்க நாதம் முழங்க வேண்டும் எனப் பாடியவன் ஷெல்லி… காப்பியமான கட்டறுந்த புரொமித்தியூஸ் (Prometheus Unbound) என்பதனைப் படைத்தவன்”.

“கட்டறுந்த பிரமித்தியூஸ் போல் பாரதியும் ‘கட்டுகளை தவிர்ப்போம்’ எனக் கூறுவதும் கவனிக்கத்தக்கது.”

இப்படி பெரும் ஆளுமைகளால் விவரிக்கப்பட்ட இதே ஷெல்லிதான் ஜெயமோகனின் தலையாய பாத்திரமான ஏய்டனிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஜெயமோகன் தனது வெள்ளை யானையில் சித்திரிக்கின்றார். ஆனால் ஜெயமோகன் பாத்திரத்தில் ஷெல்லியின் பாதிப்பு எவ்வாறு காட்டப்படுகின்றது என்பது கூர்ந்து அவதானிக்கதக்கதே. கணங்களில் ஏய்டனின், மனக்கண்ணில் தோன்றும் ஷெல்லியின் வரிகள் ஏய்டனை இருப்பு கொள்ளாமல் ஷெல்லி பொறுத்து விமர்சிக்க வைத்துவிடுகின்றது. இது ஏய்டனின் குரலா அல்லது உண்மையில் எமது கலைஞர் ஜெயமோகனின் குரலா என்பது தேவையற்ற ஒரு வாதமாகின்றது. ஏனெனில் ஏய்டனின் பின்னணியிலிருந்து ஏய்டனை இயக்குவிப்பது அல்லது நீலமேகம் அல்லது காத்தவராயன் பின்னணியில் இருந்து அவர்களை இயக்குவிப்பது, அல்லது ஏய்டன் மூலம் தன் குரலை அல்லது நிலைப்பாட்டை ஒலிக்க செய்து தன் மனக்கிடக்கையை அவிழ்த்து விட்டு இப்பாத்திரங்களின் பின்னால் மறைந்து கொள்வது என்பது நாவல் வரலாற்றில் சகஜமானதே–நாம் ஏற்கனவே பார்த்ததுதான்.

சமூக நெருக்கடி அல்லது சமூக நீதி தொடர்பிலான கேள்விகள் எழக்கூடிய ஒரு சூழலில், ஏய்டன் பின்வருமாறு நினைத்துக் கொள்வான்:

“ஷெல்லி, முட்டாள். குடிகாரன். கனவுஜீவி. மனித குலத்தின் மிடிமையையும், கீழ்மையையும் காண முடியாமல் துடித்தவன். எரியும் நெஞ்சுடன் தன் கொந்தளிக்கும் சொற்களை போலவே புயற்பட்ட கடலில் மூழ்கிச் செத்தான். ஏய்டன் அப்போது விரும்பியதெல்லாம் மூக்குமுட்ட குடிப்பதே…” (பக்கம்-127)

ஷெல்லியின் பாதிப்பு இப்படியாகவே ஏய்டனில் வெளிப்படுவதாக வெள்ளையானைக் கூறுகின்றது. அதாவது, ஷெல்லியின் வரிகள், ஏய்டனின் சமூக நீதிக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்து விடுகின்றது. அதற்காகவே, அவனை, அவனொரு “முட்டாள் –நடைமுறை யதார்த்தத்தை மறந்து செயற்பட ஒரு கனவு ஜீவி–கடல்களில் மூழ்கிச் செத்துத் தொலைத்தவன்” என்ற ரீதியில் அவனை நிந்திக்க செய்துகின்றது.
அதாவது மானுடம் பாடும் எழுத்துக்கள் அனைத்தும் கனவு ஜீவிகள் சம்பந்தம் கொண்டவையே என்பதும் இக்காரணத்தாலேயே அவர்களின் கூட்டம் ஒரு முட்டாள்களின் கூட்டம் என்பதும் மனுகுலத்தின் மிடிமையும் கீழ்மையும் இச்சூழலில் மிக மிக சகஜமானதே எனக் கூறும் அவாவும் ஷெல்லி பொறுத்த மேற்படி கூற்றில் உள்ளூர அடங்கியுள்ளதை நாம் கண்டு கொள்ளலாம்.

இத்தகைய ஒரு தர்க்கம் எங்கிருந்து புறப்படுகின்றது என்பதனை நாம் கவனமாக எடுத்து நோக்கினால், அஃது வாழ்க்கையே அபத்தம், மண் வாங்கி வாங்கி செரித்து கொள்ளும் –பின் இணைத்துப் பார்க்க ஒரு மையப்புள்ளி–அந்த மையப்புள்ளியான ஒரு கடவுளார் –என்று கோர்த்து எழும் அதே தர்க்கத்தில் இருந்தே வெளிக்கிளம்புகிறது என்பதனை நாம் கண்டு கொள்ளலாம். ஏனெனில் வாழ்வே அபத்தம் என்று சொல்பவனுக்கும் ஈற்றில் மண் வாங்கி வாங்கி செரித்துக் கொள்ளும் என்பவனுக்கும் பின் கடவுளின் தேவைப்பாடு ஒரு மையப்புள்ளியின் தேவைப்பாடே என்று புரிந்துவைத்திருக்ககூடிய ஒருவனுக்கு, மனுகுலத்தின் மிடிமையின் கீழ்மையும், ஒருகாலும் ஒரு பொருட்டாய் இருக்கபோவதில்லை.- அது ஒரு பொருட்டாகவும் இருப்பதில்லை - அனைத்தும் முரட்டு தோலால் மூடப்பட்டு, சகஜமாகி விடுகின்றது. ஏனெனில் வாழ்க்கையே ஒரு அபத்தம் தானே. சாதீயக் கட்டுமானங்களைத் தக்கவைத்து கொள்ளவும், தனது தேரை வழமை போல் வழுவழுத்து ஓட்டிச் செல்லவும், இத்தர்க்கமானது சகஜமான சாத்தியமான முரட்டு மனநிலையை ஒருவனில் உண்டுபண்ணி விடுகின்றது. ஆனால் இத்தகைய தர்க்கத்தின் முதல் வீச்சில், இப்பார்வை கோரக்கூடிய முதல் நரப்பலி எழுத்தும் அவ்வெழுத்து மானுடம் சார்ந்து ஒலிக்கும் தன்மையுமாகும்.
அப்பொழுதுதான் வெள்ளையானை சலனமின்றி தன் பயணத்தை இத்தகைய ஓர் அலங்காரத்துடன் நகர்த்தக்;கூடியதாக இருக்கும்.

நாவலின் இன்னுமொரு பாத்திரமான பாதர் பிரண்ணன் என்பவர், ஏய்டனின் சிந்தனையை ஒட்டியே பின்வருமாறு கூறுவார்:
(இது பிரண்ணனின் குரலா அல்லது பிரண்ணனின்கூடு ஒலிக்கும் ஜெயமோகனது அடிமனது வேட்கையா என்பதும் நோக்கத்தக்கதே):

“நீங்கள் கவிதை எழுதுவீர்களா…? உங்கள் வார்த்தையில் கனவு இருக்கின்றது… இந்த காலக்கட்டத்தில் மனிதாபிமானம் நீதியுணர்சியெல்லாமே வெறும் கனவு…”

“ஷெல்லி அப்படி சில பிரிட்டிஷாரை கனவு ஜீவிகளாக்கிவிட்டு செத்தான். அவர்கள் பெரும்பாலும் குடித்து சாகின்றார்கள்…” (பக்கம்-167)

இது ஜெயமோகனின் அடிமனது வேட்கை ‘இல்லை’ என்றால், நாவலில், இதற்கெதிரான பார்வை எங்கேயேனும் நகர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை, நாவல் முழுவதிலும். மேற்படி கூற்றுக்கள், மனிதனில் நம்பிக்கை வரட்சியினை ஏற்படுத்தும் வரிகள் என்பதில் சந்தேகம் இல்லை. மறுபுறத்தில் மனிதாபிமானம் நீதியுணர்ச்சி என்பவற்றையெல்லாம் இவை ஒட்டுமொத்தமாய் புறந்தள்ளி வைப்பதாகவுமே அமைகின்றன. அதாவது, ஷெல்லியின் எழுத்துக்களின் மொத்த சாரமே அல்லது விளைவே, ஒருவனை வெறும் கனவு ஜீவியாக்கி, அதன் காரணத்தினாலேயே நீதி நோக்கி அவனை நகரச் செய்து, பின் அனைத்தும் பிழைப்பட்டு போக, அவனை ஈற்றில் பெரும் குடிகாரனாக்கி, பின் செத்தொழிய செய்து விடுகின்றது. இவ்வாதத்தின் பாவிப்பு ஷெல்லிக்கு எதிரானது மாத்திரமே என்றில்லாமல் ஷெல்லி போன்றோர் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய ஆயிரமாயிரம் மானுடம் சார்ந்த கலைஞர்களின் எழுத்துகளுக்கும் ஏற்புடையதாகின்றது. இதுவே காலங்காலமாய் எழுத்துலகில் இருந்து வரும் இரு வௌ;வேறுபட்ட அணிகளுக்கிடையிலான, வரலாற்று முரண் என்பதனையும் இதே வீச்சில் எமக்குக் காட்டி அகல்கின்றது. இவ் அரசியலை நாம் புரிந்து கொள்ளாமல், வெள்ளையானையை நாம் புரிதல் என்பது முடியாத காரியமாகின்றது என்பதனையும் நாம் இங்கே கூறியாக வேண்டும்.

பஞ்சத்தைப் பார்வையிடும் ஏய்டனுக்கு ஒரு சில ஷெல்லியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. உடனே அவனது மனவோட்டம் பின்வருமாறு உருவெடுக்கின்றது. தன் சவாரியைத் தொடங்குகின்றது:

“எங்கிருந்து வந்த வரி? என்னுள் விஷக் கசப்பாய் தேங்கிய ஷெல்லிதான்… அர்த்தங்கள் எல்லாம் அழிந்து வெறும் உளறல்களாக என்முன் கிடக்கின்றன இவ்வரிகள்…”

மேலும் நினைப்பான்:

“முட்டாள், நீ ஷெல்லியை கொண்டு உன் மனசாட்சி மீது மண்ணை அள்ளி போட்டுக் கொண்டிருக்கின்றாய். ஷெல்லி உனக்கு ஒரு புளித்து நுரைத்து போன மது மட்டுமே…” (பக்கம் - 345)

இப்படியாக வெள்ளை யானையானது, ஷெல்லி மீது மாத்திரமல்லாமல், பொதுவாய் இளம் வாசகர்களின், இளம் எழுத்தாளர்களின், இளம் தலைமுறையினரின் இளம் மனசாட்சிகள் மீது மண்ணை அள்ளி வீசி அறைந்து அவற்றை மூடிவிடும் கைங்கரியத்தைத் திறம்பட செய்து முடிப்பதாய் உள்ளது.

ஜெயகாந்தன் கூறும் ‘எழுத்தின்’ மகத்துவம், அது தோற்றுவிக்கக்கூடிய மனசாட்சியின் உந்துதல், மற்றும் பாரதியின் பல பாடல்களுக்கு அடியெடுத்து கொடுத்த பெருங்கவிஞன் ஷெல்லியின் எழுத்தின் திராணி-இவை அனைத்துமே மண்ணால் மூடப்பட வேண்டியதாக இருக்கின்றது, ஒட்டுமொத்தமாய்: இங்கே, சாதீய அடுக்குமுறைகள் தொடர வேண்டுமாயின். இதேப்போல், ஷெல்லியின் அல்லது அவனது போன்ற எழுத்துக்களால் மனசாட்சியைக் கிளர செய்து கொள்ளும் ஒருவன் வெறும் கனவுஜீவி வகைப்பட்டவன் என்று கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது– இங்கே தத்தமது ரத்த உறிஞ்ஞல்களைத் தொடர வேண்டுமெனில். இது வெள்ளை யானை ஆற்றும் அருமந்த அரசியல் கருமங்களில் ஒன்றாகின்றது–மனசாட்சிகளை மண் கொண்டு மூடுவது.


5

பஞ்ச சித்திரிப்பின் அரசியல்

வேர்களை அல்லாமல், வேர்களின் விளைவுகளைப் சித்தரிப்பதே, கீழ்மைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் கலைஞர்களின் பெரும்பான்மையான தந்திரோபாயமாகின்றது. அதாவது கண்ணீரைச் சித்திரிக்கலாம். ஆனால் கண்ணீருக்கான காரணத்தை வெளிக்கொணரக் கூடாது, இறுதிவரையில். இருந்தும், ஜெயமோகன் இன்னுமொரு படிநிலை மேலேயே சென்று, இவற்றை வர்ணிப்பதுடன் மாத்திரம் நிறுத்தாது, தமது வர்ணிப்புக்கும் - கதைக்கும் மேலதிகமாக வலுச் சேர்க்கும் விதத்தில் அதற்கேற்ற தத்துவங்களையும் தர்க்கங்களையும் முன்னெடுப்பதுடன் நிறுத்தாது பஞ்சம் தொடர்பிலான கருப்பு-வெள்ளைப் படங்களையும் வெள்ளை யானையில் பிரசுரித்து வாசக உள்ளங்களுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை அளிக்கவும் செய்ய முன்வந்திருக்கின்றார், தனது வெள்ளை யானையில். இவ் அதிர்ச்சி வைத்தியமானது வாசக உள்ளங்களை மரத்துப் போகச் செய்யும் உள்நோக்குடனேயே பிரசுரமாகியுள்ளது என நாம் ஐயத்துடன் கருத இடமுண்டு. ஏனெனில் உள்ளங்களை இப்படி மரத்துப் போகச் செய்வதற்காக “தேர்ந்தெடுக்கப்பட்ட வாதங்களும் சித்தரிப்புகளும் வெள்ளை யானை முழுவதிலுமே பரப்பப்பட்டுள்ளன–ஒரு வடிவத்தில் இல்லாவிடில் மறு வடிவத்தில். (இவற்றில் இரண்டொன்றை ஏற்கனவே மேலே பார்த்திருந்தோம்.)

இருந்தும், மேற்குறிப்பிட்ட இக்கருப்பு–வெள்ளைப் படங்கள் உண்டுப்பண்ணக்கூடிய அதிர்ச்சி வாசகனை நிலைகுலைந்து மரத்துப் போகச் செய்யவும் இந்திய நிலைமைகள் குறித்து சுரணையற்று திரியவும் செய்வதாய் இவை அமைந்து போவதால், இப்படங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு எம்மை இவை இட்டுச் செல்வதாய் உள்ளது. எனவே மேற்படி கேள்வியானது அடிப்படையில் ஓர் அரசியல் சார்ந்த கேள்வியானது என்பதிலும் சந்தேகமில்லை.

இந்நாவல் விரியும் காலப்பகுதியான 1870 களில் தலையெடுத்த தக்காணா-மதராஸ் பஞ்சம் கிட்டத்தட்ட 5-8 மில்லியன் பேரை பலிகொண்டது என்பதும் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்தது என்பதும் உண்மை. நாவலில், பஞ்சம் பொறுத்த ஜெயமோகனின் கூற்று வருமாறு:
“இந்திய மண்ணில் ஆதிக்கம் செலுத்திய ஒரு நூற்றாண்டுக்குள் தங்கள் ஈவிரக்கமற்ற சுரண்டல் மூலம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி உருவாக்கிய செயற்கைப் பஞ்சங்களில் இந்திய சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் செத்து அழிந்தார்கள்…” (பக்கம் 72)

கிட்டத்தட்ட 400 பக்கங்களைக் கொண்ட இந்நாவலில் மேல் குறித்த நான்கு வரிகளுடன் பஞ்சத்துக்கான காரணம் முடிவடைந்து விடுவது தம் கலையார்வத்தின் மிகுதியால் என ஜெயமோகனின் வாசக நண்பர்கள் கூறத் துணியலாம். இருந்தும் கூட இங்கு குறிப்பிடப்படும் “ஈவிரக்கமற்ற” சுரண்டலையே பஞ்சத்திற்கான உண்மை காரணம் எனக் காணும் போது, இன்று மாத்திரம் இந்த ஈவிரக்கமற்ற சுரண்டல் இல்லாமல் மனிதாபிமானத்துடனான சுரண்டலா இங்கே, இந்தியாவில் காணக்கிட்டுகின்றது என்பதும் ஒரு கேள்வியாகின்றது. இது ஒரு புறமிருக்க, பஞ்சத்திற்கான உண்மை காரணம் ஏற்கனவே வரலாற்றில் பல அறிஞர்களாலும் ஆழப் பதிவு செய்யப்பட்டே கிடக்கின்றது என்ற உண்மையும், இவ்வகையில், நிராகரிக்கப்பட முடியாதது. இவ்வகையில் உதாரணமாக இரண்டைப் பார்க்கலாம்.

இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சி தொடர்பாகவும் அங்கு உருவாக்கப்பட்ட பஞ்சங்கள் தொடர்பாகவும் கவனத்தைச் செலுத்திய கார்ல் மார்க்ஸ் பின்வருமாறு பொருள்படக் குறிக்கின்றார்: 

" இந்துஸ்தான் (இந்தியா) என்பது சிசிலி போன்ற ஓர் இலங்கைத் தீவினையும் அல்ப்ஸ் மலைத்தொடர் போன்ற ஓர் இமாலய மலைத் தொடரையும் லொம்பாடி போன்ற ஓர் வங்க சமவெளி பிரதேசத்தையும் உள்ளடக்கி, ஒரு புவியியல் கோணத்தில் ஆசியாவின் இத்தாலியாக திகழ்கின்றது..”

“கை நெசவும்… ராட்டினமும் அச்சமூகத்தின் ஆணிவேராக இருந்தது.. விவசாயம் அல்லது பயிர்ச் செய்கை என்பது அந்தந்த மன்னர்களின் ஆட்சி பாணிக்கேற்ப, காலத்துக்குக் காலம் ஊக்குவிக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வீழ்ச்சியுற்றும் காணக்கிட்டியது…எனவேத்தான் அதன் ஆணி வேர், விவசாயமாக இல்லாது, லட்சோப லட்ச நெசவாளர்கள் சம்பந்தமுற்ற நெசவு தொழிலாகவே இருந்தது…”

“தொன்று தொட்ட காலம் முதலே, ஐரோப்பியா தனக்குத் தேவையான மிகச் சிறந்த ஆடைகளை, இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்தது. பதிலுக்கு ஐரோப்பாவின் மிகச் சிறந்த மதிப்பு வாய்ந்த உலோகங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதியானது…”

“இப்படியாக ஒரு நீண்ட பாரம்பரியம் கொண்ட நெசவு தொழிலை முற்றாக சிதைத்தெறிந்த பெருமை முற்றும் முழுதாய் பிரிட்டி~hரையே சாரும்…இந்திய பருத்தியை ஆங்கிலேயர்கள் ஐரோப்பியச் சந்தையில் இருந்து அப்புறப்படுத்தி துரத்தியடிப்பதுடன் ஒரு சகாப்தம் ஆரம்பமாகிறது”

“தொடர்ந்து, பிரிட்டன், தன் பருத்தி நூலை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்துவதுடன் இதுகாறும் பருத்தி உற்பத்தியின் தாய்நாடு என அறியப்பட்ட இந்தியாவின் பருத்தி சந்தையை, தான் உற்பத்தி செய்த பருத்தியைக் கொண்டு (பிரிட்டிஷ்) மூழ்கடித்தது…”

“1816 முதல் 1836 வரையிலான காலப்பகுதியில் இந்தியாவுக்கான இங்கிலாந்தின் பருத்தி ஏற்றுமதியானது 5200 மடங்கால் அதிகரித்தது…1824 இல் இந்தியாவுக்கான, இங்கிலாந்தின் பருத்தி நூலின் ஏற்றுமதி, வெறும் 10 லட்சம் யாரைத் தாண்டியதாக இருக்கவில்லை. ஆனால் 1837 இல் இதுவே 640 லட்சங்களாக பெருக்கமடைந்தது. இதேவேளை, நெசவுக்கு பேர் போன இந்திய நகரமான டாக்கா நகரின் சனத்தொகை 150,000 இல் இருந்து வெறும் 20,000 மாக குறைந்தது…”

மேற்படி தரவுகள் நுணுகி நோக்கத்தக்கன.

இவை, ஜெயமோகனது போன்று, புனைவுகள் சம்பந்தப்பட்டதும் இல்லை. இவை, வரலாற்றில் பதிவாகியுள்ள புள்ளிவிபரங்கள். இங்கே, மக்கள் ஜனத்தொகை 150,000 மாக இருந்து 20,000 மாக குறைந்தது என்ற குறிப்பு எமது கவனத்தைக் கோருவதாக இருக்கின்றது. ஏனெனில் இதற்கூடாகவே வங்க-தக்காணா-மதராஸ் பஞ்சத்திற்கான முன்னுரையை நாம் கண்டு கொள்ளவும், உய்த்துணர்ந்து கொள்ளவும் கூடியதாக இருக்கின்றது.

இதேபோன்று மிக அண்மையில் நிக்கில் வெங்கடேஷ் (Nikhil Venkatesh – 2019) என்பாரின் கூற்றும் இந்த வகையில் அவதானிக்கத் தக்க ஒன்றே. இந்திய நெசவை முடமாக்கிய ஐந்து ஆங்கிலேய வழிமுறைகள் பற்றி ஆராயும் அவர் 'Five Ways Imperial British Crippled Indian Handlooms'  என்ற தனது குறிப்பில், அவர் பட்டியலிடும் ஐந்து காரணிகளில் மூன்று எமது ஆழ்ந்த கவனத்தை ஈர்ப்பனவாக அமைகின்றன.

i. ஆங்கிலேயர்கள் இந்திய நெசவின் விலையை உள்ளூர் சந்தையில் மிக மிக தாழ்த்தி நிர்ணயம் செய்தார்கள் (Fixed Price) இதன் காரணத்தால் நெசவுற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி செலவில் (Cost of Production) 80% ஐ கூட மீட்க முடியாமல் போனது.
ii. இப்படியாக குறைந்த விலைக்கு விற்க மறுத்தோரை சவுக்கால் விலாசுவதும், சிறையிடுவதும், பெருத்த தண்டப்பணம் அறவிடுதலும் வழமையாயிற்று. சில சந்தர்ப்பங்களில் நெசவு செய்ய முடியாதபடி சிலரின் கட்டை விரல்களை வெட்டியெறிவதும் நடைமுறையாகிற்று. (எமது ஏகலைவனைப் போன்று).

iii. மூன்றாவதாய் மிக மிக அநீதியான வரி சட்டங்களின் மூலம் நெசவு துறையைத் தம் வழிக்கு கொணர்ந்து சேர்த்தலாகும்.
அதாவது ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பருத்திக்கு (ஊயடiஉழ) 86மூ வரியும் இந்திய மஸ்லினுக்கு (ஆரளடin) 44மூ வரியும் செலுத்துமாறு ஆங்கிலேயர்கள் ஆணையிட்டார்கள். இதே வேளை இங்கிலாந்தில் இருந்து, இந்தியாவுக்குள் இறக்குமதியாக நுழையும் நெசவுக்கு 5மூ வரியையே விதித்தார்கள். இது, காலங்காலமாய் பயிலப்பட்டு வந்த இந்திய நெசவு தொழிலை எங்கே கொண்டுச் சென்று நிறுத்தியிருக்கும் என்பது தெளிவு. ஆக கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டது போல இந்தியாவில் பரவிய பஞ்சத்திற்கான முதல் காரணி, இந்திய வாழ்வாதாரமாய் திகழ்ந்த நெசவாலைகளை அடித்து நொறுக்கி நிர்மூலமாக்கியது என்பதேயாகும். ஆனால் வெள்ளை யானையோ “ஈவிரக்கமற்ற சுரண்டல்” என்ற கண்டுப்பிடிப்புடன்; சமாச்சாரத்தை முடித்து வைத்து விடுகின்றது. ஒருவேளை இது வரலாற்றை அறியாததன் காரணமாக இருக்கலாம். மறுபுறத்தில் ஆங்கிலேயரும் எம்மைப்போன்ற மனிதர் தானே என்ற மனிதாபிமானத்தின் உந்துதல், மறு காரணமாக இருக்கலாம். (ஆங்கிலேயர் தொடர்பாக வெள்ளை யானையில், இடம்பெற்றுள்ள மறைமுகமான வாஞ்சை சற்றே அவதானிக்க தக்கதுதான்.)
ஏனெனில் முதலாளிகளிடையே ‘சமயங்களில்’ நாடு கடந்த பாசங்களும் இல்லாமல் இருப்பதும் இல்லை. இதே போன்று நாடு கடந்த பஞ்சங்களும் –படங்களும் இல்லாமல் இருப்பதும் இல்லை.

உதாரணமாக, 1983-1985 காலப்பகுதியில் மாத்திரம் 10 லட்சம் பேர் எத்தியோப்பிய பஞ்சங்களில் மடிந்தனர் என்பதும் மேலும் 80 லட்சம் பேர் பட்டினியால் பாதிப்படைந்தனர் என்பதும் ஐ.நா அறிக்கைகளில் ஒன்று கூறுகின்றது. இதே போன்று 1941-1945 காலப்பகுதியில் மாத்திரம் 60 லட்சம் யூதர்களை ஜெர்மனிய நாசிப்படையினர் கொன்றொழித்தனர் என்பதும் மேலும் லட்சக் கணக்கானோர் நாசிகளின் ஆயிரக்கக்கான முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதும் எமது அண்மைக்கால வரலாறுதான். (ஜெயமோகனின் வெள்ளை யானை வர்ணிக்கக்கூடிய 1878 ஆண்டு காலப்பகுதிக்கு, மிக பின்னர் அரங்கேறும் காட்சிகள் இவை) முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த (Holocaust) எலும்பும் தோலுமான யூதர்களின் படங்கள், அவர்களில் குற்றுயிரும் குலையுயிருமாக இறந்தோரின் தொகை 10 லட்சமாகவும் இருந்ததாக நவீன புள்ளிவிபரங்கள் என்பன, - இவை, இன்று எவருக்கும் கண்கூடாகக் கிட்டக்கூடிய ஒன்றுத்தான்.
இதே போன்று இன்றைய யேமனை எடுத்துக் கொண்டால் கூட யேமன் பஞ்சத்தால் 20 லட்சம் பேர் அங்கே பாதிப்புற்றனர் எனவும் குழந்தைகள் லட்சகணக்கில் மடிகின்றார்கள் என்பதுவும் இன்று நாளாந்தம் செய்தி ஊடகங்கள் எமக்கு அறிவித்த வண்ணமே இருக்கின்றன.
இவை அனைத்தும் எமது நவீன காலப்பகுதியில் இடம்பெறும் எலும்புகளினதும் தோல்களினதும் கதையாகின்றன.


இவற்றை விடுத்து, எமது இன்றைய இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்தாலும் கூட எமது தலித்துக்கள் மீது ஏவப்படும் அரக்கத்தனங்கள், கூடவே உலகின் மிகப்பெரிய சேரியான “தாராவி” சேரியில் 10 லட்சம் ஏழைகள் (2.1 சதுர கிலோமீற்றருக்குள்) –பாகிஸ்தானின் ஒரென்ஜி (Oranji Town) சேரியில் 20 லட்சம் ஏழைகள் (22 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள்) போன்றவற்றில் வாழ சபிக்கப்பட்டவர்களிலும், கொரோனா மூடுகையின் போது கால்நடையாக ஆயிரக்கணக்கான மைல்களை நடக்க நிர்பந்திக்கபட்டவர்களிலும் ஜெயமோகன் குறிப்பிடும், இந்த ஈவிரக்கமற்ற சுரண்டலின், இன்றைய தாண்டவம், வெளிப்பட்டு விடும். இதனையும் கூட ஜெயமோகன் படங்களாக காட்சியேற்றியிருந்தால் சிறப்பானதாகவே இருந்திருக்கும்.

அதாவது, வரலாறு வரலாறாகவே, இன்றைய நாள்வரை, தொடரக்கூடிய, இப்பஞ்சங்களுக்கான காரணங்கள் எவை என்பது கேள்வியாகவே இருக்கின்றது. நேற்றைய கருப்பு–வெள்ளை எலும்புத் தோல் படங்களை அரங்கேற்றுவதற்கூடு இன்றைய எலும்புத் தோல் கதைகளை மறக்கடிக்கச் செய்து மனித உள்ளங்களை மரத்துப் போகச் செய்யும் ஓர் நுண்ணரசியல் இங்கே செயல்படுகின்றதா – அதற்காகவா இப்படங்கள் அரங்கேற்றப்படுகின்றன, என்பதே கேள்வி.அதாவது பஞ்சங்களை விவரித்து அதற்கூடாக, வாழ்வின் அபத்தத்தையும், n~ல்லியின் தேவையின்மையையும், கடவுளாரின் தேவைப்பாட்டையும் கோரும் அரசியல் ஒரு புறம் இருக்க, மறுபுறத்தில், உலகில் இக்கொடுமைகளுக்கான உண்மை காரணம் யாதெனப் பறைசாற்றும் எழுத்துக்களும் சான்றுகளும் இதே உலகில் தான் அருகருகே இருக்கின்றன. இப்பின்னணியிலேயே வெள்ளை யானை நகரும் அரசியல் பாதையை அம்பலப்படுத்தி உண்மைகளை வெளிக் கொணர்வதும் மேற்படி வித்தியாசங்களை எம் கண்முன் நிறுத்துவதும், விமர்சன உலகின் இன்றைய கடமைகளில் ஒன்றாகின்றது.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.