- இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் எண்பதுகளில் மலையகத்திலிருந்து வெளியான 'தீர்த்தக்கரை' சஞ்சிகைக்கும் முக்கியமானதோர் இடமுண்டு. எல்.சாந்திகுமாரை ஆசிரியராகக் கொண்டு வெளியான காலாண்டு சஞ்சிகையான 'தீர்த்தக்கரை'சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் எஸ்.நோபட், எல்.ஜோதிகுமார் , எம்.தியாகராம் ஆகியோரிருந்தனர். எஸ்.நோபட் (சூசைப்பிள்ளை நோபட்) டொமினிக், ஜீவன், கேசவன், பிரான்ஸிஸ் சேவியர் மற்றும் கோவிந்தன் என்னும் புனைபெயர்களில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்டவர். தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திலும் இணைந்து போராடிப்பின் அதிலிருந்து பிரிந்து 'தீப்பொறி' அமைப்பில் இயங்கியவர். 'புதியதோர் உலகம்' நூலாசிரியர்.  அண்மையில் ஜோதிகுமார் அவர்களிடம் 'தீர்த்தக்கரை' சஞ்சிகை பற்றியும் எழுதுங்களேன் என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் அனுப்பிய 'தீர்த்தக்கரை' சஞ்சிகை பற்றிய குறிப்பிது.  - வ.ந.கி -


அன்பின் கிரி, தீர்த்தக்கரை தொடர்பில் எழுத கூறியிருந்தீர்கள். புனித நீராடுதுறை, பாவம் கலையும் நீர்த்துறை என்று தீர்த்தக்கரைக்கு தமிழ் விளக்கம் கூறப்படுகின்றது. மேலும், புனித நீர் வைக்கப்படும் சிறு தேங்காய்த்துண்டு அகல் என்றும் கூறப்படுகின்றது. கூடவே தீர்த்தக்கரை என்பதனை பண்டைய ஒரு குருவுடன் சம்பந்தப்படுத்தி ஒரு புராண கதையும் உண்டெனவும் கதைக்கப்படுகின்றது. குறித்த குரு ஆறுகளில் வாசம் செய்யும் வரம் பெற்றவர் என்று கூறப்பட்டாலும், ஆறுகளை வணங்கும் மனிதப் பண்பை மேற்படி கதைகள் உள்ளடக்குவதாக உள்ளது என்பதில் அர்த்தம் உண்டு எனுமாப் போல் படுகின்றது. ஆனால் மேற்படி பெயரை வைக்கும் பொழுது இவை அனைத்தையும் தீர்த்தக்கரை தனது கவனத்தில் கொள்ளவில்லை என்பதை கூறுதல் வேண்டும். கடந்த கால திரைப்பட பாடல் ஒன்று கூட ராமேஸ்வரத்துக்கான புனித யாத்திரையை தீர்த்த யாத்திரை என வரையறை செய்து கொள்வதில் திருப்தியடைந்தாற் போல் இருந்தாலும் இத்தகைய ஒரு கருத்தை ஆசிரிய பீடம் ஒரு காலமும் கருதியதில்லை என்றே கூறுதல் வேண்டும்.

மாறாக இப்பெயரை தேர்வு செய்யும் போது, ஆசிரிய குழாத்தின் மனதில் பாரதியை நோக்கிய ஒரு யாத்திரையாக இது இருக்க கூடும் என்ற எண்ணப்பாடு ஒரு சிறிது அல்லது பல மட்டங்களில் இருந்தது என கூறலாம். அதாவது பாரதி எப்படி தொன்மங்களில் இருந்ததெல்லாம் உள்வாங்கி அவற்றில் பலதையும் நிராகரித்து சிலதை உள்வாங்கி தனது நவீன கால சிந்தனைகளுடன் அவற்றை இணைத்து தன் அழுத்தமான காலடிகளை கட்டுவித்தானோ - அதே அடிப்படையில் ஒரு வரலாற்று பார்வையை கட்டுவிக்கும் அவாவை வெளிப்படுத்தும் அல்லது எதிரொலிக்கும் ஒரு அவாவினை உள்ளடக்கிய பெயராகவும் - அதே வேளை பாரதியின் அழகியலை - அவ் அழகியலில் அடங்கக்கூடிய தார்ப்பரியத்தை சிலாகித்ததின் நேரடி விளைவாகவும் இப்பெயரின் தெரிவு அமைந்து போயிற்று எனலாம்.

பாரதியை ஒரு எல்லைக்குட்பட்ட வகையில் ஆரோக்கியமாக உள்வாங்கிய இரண்டொரு இலக்கிய கர்த்தாக்களில் ஜெயகாந்தனும் அடங்குவார் என்பது தீர்த்தக்கரையின் பிரதம ஆசிரியராக இருந்த எல்.சாந்திகுமாரின் தனித்த கருத்தாக இருந்தது. இருந்தும் பாரதி எந்த வகையில் சரியாக உள்வாங்கப்பட்டு, விகசிக்கப்படல் வேண்டும் என்பதில் எல்லாம் ஜெயகாந்தனிடம் போதாமையே தேங்கி நின்றது என்பது திரு.சாந்திகுமாரின் வருத்தம் தோய்ந்த கருத்தாக இருந்தது. அதாவது பாரதி என்ற ஒரு பிரமாண்டம் அல்லது அக்கினி குழம்பு உருவாகுவதின் அடிப்படைகளை, ஓரளவில் சரியாக உள்வாங்கி அவற்றில் ஒரு சிலவற்றை மாத்திரம் திரு.சாந்திகுமார் அங்கீகரித்துக் கொண்டார் போலவும் இருந்தது. இதன் அடிப்படையிலேயே தீர்த்தக்கரையின் பெயர் தெரிவும் அமைந்து போனது.

ஒரு புறம் அதன் அழகியல் அம்சம். மறுபுறம் அதன் புதிய திசை நோக்கி பயணிக்கும் ஆர்வம். இங்கே புதிய திசை எனும் போது இது, தான் இதுவரை கடந்து வந்திருக்கும் தனது வரலாற்று தொடர்புகளை அறுத்துக் கொண்டது என்பதில்லை. இப்புதிய திசை என்பது இறுதி கணிப்பில் ஒரு வரலாற்று சிந்தை போக்கின் பூரண பிரக்ஞையுடன் கூடிய முரணற்ற தொடர்ச்சிதான் என்பதனையும் திரு.சாந்திகுமார் தெளிவுற அறிந்தே இருந்தார் எனலாம். இதுவே இப்பெயரின் முக்கியத்துவம் - அல்லது திரு சாந்திகுமார் அவர்களின் விதந்துரைக்க கூடிய அம்சம் எனலாம். தீர்த்தக்கரை வெளிவந்த காலப்பகுதியல் பண்டை மரபுகளையும் அதனடிப்படையில் பண்டை இலக்கிய செழுமைகளையும் ஒன்றாகவே சேர்த்து உதறிவிடும் அம்சம் தழைத்தோங்கியிருந்த காலக்கட்டமாகும். பண்டைய இலக்கிய செழுமைகள், அனேக சந்தர்ப்பங்களில், பண்டைய நசிவுற்ற அந்நாளைய வரலாற்று அம்சங்களுடன் பிண்ணிப் பிணைந்து காணப்படுவது இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்க கூடும். அதாவது வானம்பாடிகளின் புது கவிதை தோற்றம் பெற்று, சுட்டெரிக்கும் தீயாக வெளிவர முயற்சித்த காலக்கட்டம் ஒருபுறம்.
இதேபோல் அரசியலில் கீழை வானின் கொதிக்கும் சிந்தனைகளை எப்படி சரியாக உள்வாங்குவது என்று திணறிய போக்கு மறுபுறம். இவ் எதிரொலிகளை இலக்கியம் ஏந்திப்பிடித்து இயங்க முற்பட்டதாயும் இக்காலம் மிளிரவே செய்தது.

ஆக, இவை அனைத்தும் இணைந்தே அன்றைய புதிய தலைமுறையை செதுக்குவிக்கும் போக்கை தூக்கிப்பிடிக்கும் காலமாக உருவெடுக்க தொடங்கிய காலக்கட்டம் அது. இத்தகைய ஒரு சூழலிலேயே தீர்த்தக்கரை என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்படுகின்றது – அதன் பல்வேறு அர்த்தப்பாடுகளுடன். சாந்திகுமார், தனது கட்டுரைகளில் ஒன்றில் சரியாக குறிப்பிட்டது போல, கண்ணாடி சுவர்களின் உடைப்பை நியாயப்படுத்தும் அதே வீச்சு அத்துடன் தனக்குள் அடங்கி விடாது தன்னை சூழ இருக்கும் அல்லது தான் குடியிருக்கும் கண்ணாடி அறையின் சுவர்களையும் உடைத்துக் கொண்டு கலைஞனை வெளிக்கொணர்வதாக விஸ்தரிக்கப்பட்டாக வேண்டும் என்ற அபிப்பிராயத்தை தீர்த்தக்கரை உயர்த்தி பிடித்த அவாவின் தர்க்கபூர்வ வெளிப்பாடே இப்பெயரில் அடங்கிப் போனது எனலாம். இவ் அவாவின் வெளிப்பாட்டு தளத்தை பாரதியில் இனங்கண்டுக் கொள்வதில் சிரமமில்லை என்றாலும் இதன் மொத்த சாரத்தை தேட கார்க்கியையும் லெனினையும் தீண்டாமல் இருத்தலாகாது என்பதே சாந்திகுமாரின் பிரக்ஞையானது. இதன் வெடிப்பு சிதறல்ளை முக்கியமாக சாந்திகுமாரின் அக்காலக்கட்டத்து எழுத்துக்களை கூர்ந்து அவதானிக்கும் போது உணர்ந்து கொள்ளலாம் என்றாகின்றது. சாந்திகுமாரின் எழுத்துக்கள் தற்போது தொகுக்கப்பட்டு நூலுரு பெற ஆரம்பித்துள்ளது. மிக கூடிய விரைவில் இந்நூல் வெளிவர கூடும் எனவும் எதிர்ப்பார்க்கலாம். இந்நூலின் தலைப்பை அவர் நினைவாக தீர்த்தக்கரை என்று இட்டுவிடுவது சிறப்பானதாகவே அமையக் கூடும். ஏனெனில் இப்பெயர் மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்க கூடும் என்றாலும், இவ்அம்சங்களை, மிக சரியாக, அதனது உயரிய மட்டத்தில் அக்காலக்கட்டத்தில் மிக தீர்க்கமாய் எதிரொலிக்க செய்தவரும் அவரேயாவார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


* 'தீர்த்தக்கரை' சஞ்சிகையின் இதழ்கள் சிலவற்றை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம்:  https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88