- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -


புதுக்காடு

கால் கடுக்க நிற்க தொடங்கினேன். பக்கத்தில் ஒரு மீன் வியாபாரி. மீன் வெட்டும் அகன்ற பலகை தரையில் கிடக்க அதன் மீது மீன் வெட்டும் பெரிய கத்தியும் மீன் செதில்கள் அங்குமிங்குமாயும் ஒட்டிக் கிடக்க - அதனருகே மீன் கொணரும் தனது வட்ட வடிவான வாயகன்ற கூடையை போன்ற அலுமினியத்திலான ஓர் பெரிய பாத்திரம் - இரண்டொரு ஈக்களும் அங்கே ஒன்றாய் மொய்க்க தொடங்கியிருந்தன. அவர் மீன் மீன் என்று கூவியும் அழைக்கவில்லை. தரையில் அமர்ந்து வருவோர் போவோரை என்னைப்போல பராக்கு பார்த்தவாறே இருந்தார். ஒரு வேளை மீன் அவ்வளவையும் விற்று முடித்து விட்டாரோ என்னவோ. நடந்தோரை விட அந்த ஒடுங்கிய பாதையில் விடுமுறை கழிக்க வந்தோரின் வாகனங்கள் அதிகமாக இருந்தது. அவை, அந்த சந்தியில் புழுதியை கிளப்பி பெரும் அசௌகரியத்தை வேறு தந்தது.

நான் ஒருவன் மாத்திரமே அந்த பஸ் தரிப்பிடத்தில் தனியனாக நின்றிருந்தேன், தோளில் தொங்கும் எனது பையோடு. என்னை பார்த்த வாகனங்கள், என்னருகே நிறுத்தி “பாதை விசாரிக்க” முற்பட்டன. முதலில், இரண்டொன்றை கூறத்தொடங்கினேன் - தெரிந்த மட்டும். பிறகு, இந்த தொழில் சரிபடாது என்ற எண்ணம் தோன்ற பாதை ஓரத்தில் இருந்து அகன்று பாதையின் சற்று உட்புறமாய் வந்து ஒளிந்திருந்தாற் போல் நின்று கொண்டேன் - வாகனங்களுக்கு எளிதில் தென்படாதவாறு.

ஓர் அரை மணி நேரம் பஸ்ஸ{க்காக அல்லது ஏதேனும் ஒரு வண்டிக்காக காத்திருந்தப்பின் கேட்டபோது கூறினார்கள். வழமையாக வரும் இன்று வராது. பாதை செப்பனிடப்படுவதால் மாற்று பாதையில் சென்று விடுவார்கள். இறுதியில் அந்த ‘மாற்று பாதையை’ அடைந்த போது, ஓர் இறக்கத்தில், ஒடுங்கிய ஒரு பாதை ஓரமாக சின்னஞ்சிறு வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டிருந்தன.

“இதெல்லாமே புதுக்காடு போற வண்டிங்கத்தான் - நீங்க முன்னுக்கு இருக்கிறதுல ஏறிக்கிங்க – பஸ் வர்றது – சொல்ல முடியாது”

இவ்வண்டிகள் “படி”(டீருனுனுலு) என்று அழைக்கப்படும் தீப்பெட்டி அளவிலான வண்டிகள். நீங்க முன்சீட்ல ஏறிக்கிங்க – புதுகாடுதானே – ட்ரைவர் ஓர் பருத்த நடுத்தர வயது மனிதர். ஆள் திரட்டும் முயற்சியில் குறியாக இருந்தார்.

ஒடுங்கிய சீட்டு. நான் ஏறி அமர்ந்ததும் இன்னும் இரண்டொரு நடுத்தர - வயதான பெண்கள் பின்னுக்கு ஏறி கொண்டார்கள். கூட வந்த ஒரு ஆண் முன்னால் வந்தார். நான் தள்ளி அமர, அவர் நெருக்கி என்னை ஒருபுறம் தள்ளி என் மீது சாய்ந்து கதவை இழுத்து அடித்துக்கொண்டார்.

முழங்கால் வாகனத்தின் முன்பகுதியை இடித்தது. வாகனத்தின் கியரும், கைபிரேக்கும், மடித்த என் இரு கால்களிடையும் இருந்தது – கூரை தலையை ஒட்டியது போல் தாழ்வாய் இருந்தது.

பக்கத்தில் நெருக்கி அமர்ந்திருப்பவரிடம் வினவினேன், எங்கு செல்கின்றார் என. அவரும் “புதுக்காடு”. சந்தோசமாய் போய்விட்டது, எனக்கு.

ட்ரைவர் பெண்களையும், அவர்களது கூடைகளையும் பின்னால் ஏற்றி, “நீ தள்ளு… அத சீட்டுக்கு அடியில நொழ” என்றெல்லாம் அவர்களை நெருக்கி அடைத்து வைப்பதில் ஈடுபட்டு, மொத்தத்தில் எங்கள் அனைவரையும் அந்த நெருப்பெட்டி வானுக்குள் பிடித்து புளிமூட்டைகளைப் போல் அழுத்தி தள்ளி அடைத்து கதவுகளை இழுத்து மூடினார்.

நெருப்பட்டி வான் புறப்பட்டது. பின்புறமாய் நெருக்கியடித்து கொண்டிருந்த பெண்கள் ஏதேதோவெல்லாம் கதைத்தனர்.

ஒருத்தி ட்ரைவரிடம் தான் பிளம்ஸ் பழ மூட்டையை கொண்டு வந்த விதம் குறித்தும், தான் பட்ட கஷ்ட்டங்கள் குறித்தும் எடுத்து கூறினாள்.

ட்ரைவர் பாதையில் இருந்து பார்வையை அகற்றாமல் வாகனத்தை செலுத்தியவாறே அவளிடம் கேள்விகள் கேட்டும், மறுமொழி சொல்லியும் வந்தார்.

இது, தினமும் நடக்கும் சமாச்சாரமாயிருக்க வேண்டும். இந்த பெண்கள் இவ் வண்டியின் வாடிக்கையாளர்கள் - அல்லது இவர்கள் அனைவரும் இங்கே கூறுவது போல, ஒரே வில்லேஜ் ஆட்களாக இருக்க வேண்டும்.
அந்த வாகன பயணம் எனக்கு ஓரளவு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.


இவ்வளவு சின்னஞ்சிறு விளையாட்டு வண்டியில், நெருக்கடித்து கொண்டு, பெண்களும் ட்ரைவருமாய், எத்தனையோ கதைகளை பேசிக்கொண்டு – பதில் சொல்லிக்கொண்டு – சத்தம் வைத்துக் கொண்டு – ஒரு சிறிய கிராமமே பாதையில் ஒரு மூட்டையாய் நகர்வது போன்று இருந்தது எனக்கு.

பெண்கள் மாற்றுபாதை அமைக்கும் பணியை கடுமையாக விமர்சித்தவாறே வந்தனர்.

வண்டி நகரை விட்டு இப்போது குன்றில் மிக மெது மெதுவாக ஏறத் தொடங்கியது.

சிறிது நேரத்தில் வளைந்து வளைந்து குன்றின் உச்சியை அடைந்த போது ‘புதுக்காடு’ என்ற பெயரிடப்பட்ட பலகை வந்ததும், வண்டி வலப்புறமாய் வளைந்து திரும்பி, மேலும் ஒடுங்கலான ஒரு பாதையில் செல்ல தொடங்கியது. ஆரம்பத்தில் தார் போடப்பபட்டிருந்ததாக இருந்த இந்த ‘புதுக்காட்டு’ பாதை ஓர் சிறிது தூரத்தின் பின் வெறும் மண்ரோட்டாய் மாறியது.

என் பக்கத்து சீட்டு பயணியிடம் பேச்சு கொடுத்தேன் - சேகர் வீடு எது என்று.

சேகர் என்பவர் “கல்லொடைக்கும் சேவியரால்” அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட இன்னுமொரு ‘சிலோன்’ மனிதராவார்.

பக்கத்து சீட்டு புதுக்காட்டு பயணி வாய்திறக்கும் முன்பே பின்னால் இருந்து பெண்களின் குரல் கேட்டது. “சேகரா… எந்த சேகரு…”

“சந்திர சேகரா – ராச சேகரா” – என்று நாலைந்து சேகர்களை அடுக்கினார்கள் அவர்கள். ட்ரைவரும் சேர்ந்து கொண்டார்.

“சாமீ கோயில்ல வேல செய்யுறவரா…” “கொத்தனாரா” “தடிச்சவரா” – அங்க அடையாளங்கள் குறித்து விசாரணைகள் மும்முரமாக நடைபெற்றது.

ஒரு முடிவுக்கு வந்தார்கள். என்னை இறக்கி விடும் இடத்தை தெரிவு செய்தார்கள்.

“இங்கன இறங்கி அப்பிடியே போகனும்” என்று மேலும் ஒரு குன்றின் வழியாக செங்குத்தாய் ஏறிய மேலும் ஒரு மண்பாதையை சுட்டி காட்டினார்கள். “வண்டி அங்க போகாது” “அப்படியே நீங்க ஏறி போங்க…அந்தா தெரியுது ஒரு வீடு…” என்றெல்லாம் கூறி அவர்கள் காட்டிய அந்த மண்பாதை, ஒரு வரட்டு மண்பாதைத்தான். சறுக்கி விழாமல் செல்ல நிறைய பிராயத்தனம் எடுக்க வேண்டுமாப்போல் தோன்றியது.

என்னுடனேயே இறங்கி, எனக்கு தேவையான “சேகரை” கண்டுபிடித்து தருவதில் மும்முரமாய் முன்னின்ற அந்த மாதுக்கு ஓர் அறுபது வயதிருக்கலாம். கூலி வேலை செய்து விட்டு, இந்த மாலையில், வீடு திரும்புபவளாய் இருக்க வேண்டும்.

தன் உழைப்பு சேலையை இழுத்து தன் கணுக்காலில் இருந்து ஒரு நான்கைந்து அங்குல உயரத்திற்கு சுற்றி கட்டியிருந்தாள் அவள். எண்ணை படாத வரண்ட தலையை சீவாமல், அள்ளி முடிந்திருந்தாள். கறுப்பு நிறம். முகமெல்லாம் வரிவரியான சுருக்கம். இது, அவள் முதுமையை மேலும் மோசமாக்கி காட்டியது. ஆனால் கண்கள் மாத்திரம் அவள் முகத்தில் பெரிதாயும், மிகுந்த நட்புரிமையுடனும், எடுப்பாயும் இருந்தன. வலது கையில் ஒரு சிறிய பையை பிடித்திருந்தாள். “வாங்க…இந்த கடையில கேட்டுருவோம்…” என்று ரோட்டோரமாய் இருந்த ஒரு பெட்டி கடைக்குள் நுழைந்து கேட்டாள்.
“சேகரா, அப்படி யாருமே இல்லையே” என்று ஒரேடியாக கையை விரித்தாள் கடையில் நின்றவள். அவள் முகத்தில் உதவும் தன்மையோ, விசாரிக்கும் பண்போ ஒரு சிறிதும் தென்படவில்லை. தட்டி சுடப்பட்ட வரட்டு ரொட்டியை போன்று ஈரலிப்பற்றதாய் இருந்தது அவளது முகம்.

இவள் விடவில்லை.

“அந்த சேகரு, இந்த சேகரு” என்று அவளை இவள் வம்புக்கிழுப்பதாகவே எனக்கு பட்டது.

நானும் இவளுமாய் ஏறத் தொடங்குகையில் எதிரே வந்தவர் இரண்டொரு கேள்விகளை கேட்டுவிட்டு சுருக்கமாக கூறினார்: “அப்படியே ஏறி வலப்புறமா திரும்புங்க… ஒரு தன்னையான எடம் வரும்… அத தாண்டி போனா ஒரே சரிவு…அந்த சரிவுக்கு ரோட்டுக்கு பக்கத்திலேயே இருக்கிற மஞ்ச வீடு…”

“ ஓ… அது விஜயா வீடு… நானும் வர்றேன் அது வரைக்கும்… ஒங்களுக்கு தெரியாது…”

“நீங்களும் இலங்கையா…டெல்மாரா அந்த பக்கம் தானே… டெல்டா, சங்குவாரி எல்லாம்…” என்றேன், ஏறிக் கொண்டே அவளை பார்த்து…

இப்போது என்னை நோக்கி தன் முகத்தை திருப்பி, மிகுந்த ஆர்வத்துடன் புன்னகைத்தாள் அவள்.

குரல் மென்மைப்பட்டது. கேட்டாள் அன்புடன்: “அங்கெல்லாம் போயிருக்கீங்களா…”

கேட்டேன் அவளிடமும், பேச்சுவாக்கில், அந்த நாட்களை, அந்த இடங்களை இப்போதும் நினைத்து கொள்வாளா என்று.

“இங்க நாங்க வந்து படாத துன்பம் இல்லைங்க… அக்கா புருசனும் செத்து போயிட்டாரு, இங்க வந்து… மதுரையில இருந்து இங்க வந்தோம்… செய்யாத வேல இல்ல…”

“இப்ப ஆஸ்பத்திரியில வேல செய்யுறேன்…”

இப்போது இருவரும் ஏறி முடித்து, அந்த தன்னையான இடத்தை அடைந்து விட்டிருந்தோம். அவள் இப்போது கையில் பிடித்திருந்த பையை, ஏனோ தலையில் வைத்து கொண்டாள் - அது சின்ன பையாக இருந்தாலும் கூட.
எங்கள் வலப்புறமாய் வீடுகளும், ஒரு சிறிய சர்ச்சும் காணப்பட்டது. இடது புறமாய் பியர்ஸ் பழ தோட்டம், ஒரு தோப்பாக இருந்தது. நூற்றுக்கணக்கான மரங்கள் மிக செழிப்புடன் இருந்தன. ஒவ்வொரு மரத்திலும்; சிறிதும் பெரிதுமாய் காய்கள் அரும்பி கிடந்தன. சில முற்றும் பருவத்தையும் அடைந்திருந்தது.

இனி, கண்டு பிடித்து விடுவேன் என்று கூறி அவளை செல்லுமாறு வேண்டிய பொழுது அவள் மறுத்தாள்… “இல்ல… நீங்க தேடுறது விஜயாவுட்டு வீடு… தெரியும் எனக்கு… அங்க நாய்க இருக்கு… ஒங்கள கடிச்சிரும்… நானும் வர்றேன்… வந்து காட்டிட்றேனே…” என்றாள் அவள்.

இப்போது பாதை, குன்றின் கீழ் கிடுகிடுவென சடுதியாக கீழிறங்கியது. காங்கிரீட் பாதை அது… சற்று இறங்கியவுடன், குன்றின் மத்திய பகுதியில் இருந்து, வலது புறமாய் வரிசையாய் சின்ன சின்ன வீடுகள்…”

அவ்வீடுகளுக்கு ஓர் இருபது முப்பதடி முன்னேயே நின்று, இவள் கூக்குரல் வைத்தாள். “ஏ விஜயா… ஏ விஜயா… வா…வெளிய வா… ஓ வீட்டுக்கு ஆள் வந்திருக்கு… ஏ… விஜயா…”

இப்பொழுது, ரோட்டோரமாய் நின்ற அந்த சிறிய மஞ்சள் வீட்டில் இருந்து, ஓர் மெலிந்த, தலை மயிரை குட்டையாக கழுத்தளவு வெட்டிக் கொண்ட மாது ஒருத்தி வெளியே வந்தாள்.

அவள் முகமும், உடம்பும் மெலிந்து, முகம் நீண்டிருந்தது.

“ஒங்க வீட்டுக்குத்தான் என்று கத்தினாள் இவள்.

நான் இவளிடம் திரும்பி, “சரி… நான் போயிடுவேன்” என்றேன்.

“சரிங்க… நீங்க போயிட்டு வாங்க…” என்றாள் இவள்.

நான் அவசர அவசரமாய் காற்சட்டை பாக்கெட்டுக்குள் கையை விட்டு சில மூன்று நான்கு பத்துருபாய் தாள்களை அவளிடம் நீட்டி பிடித்தேன்.

“ஐயா சாமீ… பெத்த தொர… நீயே வச்சுக்க… எஞ்சாமீ…” என பிடிவாதமாய் மறுத்துவிட்டாள் அவள். இருவரும் கைகூப்பி விடைபெற்றுக் கொண்டோம்.
வெளியே என்னை எதிர்கொள்ள வந்த மாதிடம், “நாய் இருக்கா” என்று கேட்டேன்.

“இங்க இல்ல கட்டி கெடக்கு… நீங்க வாங்க உள்ளுக்கு…” என்று அழைத்தாள் அவள் என்னை.

அது ஒரு மிக சிறிய வீடு… எந்த உழைப்பாளி வீட்டிலும் உள்ளதுப்போல், சென்றவுடனேயே வாசற்படியை ஒட்டி ஒரு மிக சிறிய அறை. அதில் ஒரு தாழ்வான கட்டில் போடப்பட்டிருந்தது, அறையை அடைத்ததுப்போல்.
“இலங்கையில இருந்து வர்றீங்களா… சப்பாத்தோட வரலாம்… நானே செருப்போடத்தானே இருக்கேன்…

கட்டிலை ஒட்டினாற் போல் ஒரு சிறிய ஸ்டூல். அதன் மேல் ஓர் மிக சிறிய டி.வி. அதில் கிரிக்கெட் மெட்ச் ஓடிக்கொண்டிருந்தது.

கட்டில், அலுமாரியாகவும், தலையணைகள், துணி, பாய் இத்தியாதி - இவற்றை அடுக்கி வைக்கும் ஓர் சிறிய மேசையாகவும் பயன்படுத்தப் பட்டது.

கட்டிலின் ஒரு தொங்கலில் நானும், மறு தொங்கலில் மாதுமாய் அமர, எந்த ஒரு சங்கடமோ சம்பிரதாயமோ இன்றி, அவளின் மெலிந்த, உயர்ந்த கணவன், தன் நீள கால்சராயுடன், கட்டிலின் மீது சாவதானமாய் ஏறி, எம்மிருவருக்கும் இடையே சுவரை ஒட்டினாற்போல் அடுக்கப்பட்டிருந்த தலையணைகள் மீது, உயர்ந்த ஓர் சிம்மாசனத்தில் அமர்வதுப்போல் அமர்ந்து கொண்டான்.

“எனக்கு வந்தோடன அரசாங்க உத்தியோகம் - ஆஸ்பத்திரியில… அத வச்சித்தான் என் மூனு பிள்ளைகளையும் படிக்க வச்சேன்…பெரியாளாக்கினேன்… இப்ப… இன்னமும் தலுக்கா ஆபிஸ்ல மூனுமணி நேர வேல… ரெண்டாயிரம் கொடுக்கறாங்க… ஏதோ இந்த வயசுல…”

“நம்ம ஊர டி.வியில பாத்தோம்… போரெல்லாம் பாத்தோம்… பாத்துட்டு கண்ணீர் விட்டு அழுதோம்…”

“அம்மா இருக்காங்களா… பையன்… எத்தன பேரு…”

“சரி… என்னைக்கு போறீங்க… போகையில வந்துட்டு போக முடியுமா… அம்மாவுக்கு ஒரு சாரி வாங்கி தாறேன்… நாளைக்கு வாங்க… சாப்பிட்டுத்தான் போகனும்…” – அவளது ஆர்வம் என்னை துயரப்படுத்தியது.

“இங்க நெறைய இலங்கை மக்கள் இருக்கிறாங்க…”

ஓர் இரண்டு மணி நேரத்தை செலவிட்டேன்.

அவளது ஆர்வம் கரை கடந்து செல்வது நன்றாகவே புலப்பட்டது.

நான் புறப்பட்டேன்.

வெளியே வாசற்படி தாண்டியும் நின்று கதைத்தவாறே இருந்தாள், ஓயாது. தன் வாழ்க்கை பொறுத்தும், இலங்கை பொறுத்தும், தன் நினைவுகள் பொறுத்தும் - எந்த ஒரு “நாத்து நடப்பட்ட” மக்களை போன்றும் அவள் கதைத்துக் கொண்டே இருந்தாள்.

அவர்கள் ஒவ்வொருவரையும் போலவே இவளது இதயத்தின் அடி ஆழத்திலும் வாட்டும் ஏக்க உணர்வு இவளை கௌவி பிடித்திருந்தது.

பிரியும் நேரம், தன் வாழ்வின் ஒட்டுமொத்த சுருக்கத்தினையும் பின்வருமாறு கசந்த குரலில் கூறினாள் அவள்: “கடவுள் எங்கள இப்படி படைச்சிருக்கவே கூடாது - இவ்வளவு கஷ்டப்பட…”

கடவுள் மேல் இந்தளவு ஆழ்ந்த அதிருப்தியை அவள் போல் இவ்வளவு அழுத்தமான குரலில் ஒலித்ததை நான் வேறெங்கும் கேட்டேனில்லை. இவ்வளவு கசப்பை இவ்வாழ்நிலை உருவாக்கி இருக்கலாம். அவள் குரலில் – கூற்றில் – அவள் கடவுள் இருப்பதை நம்பாதவளாய் தோன்றவில்லை. இருக்கிறான் – ஆனால் இவ்வாழ்க்கை சூழலில் எப்படிப்பட்ட ஓர் அசடாக, என்பது போல அவள் முறையிட முனைவதாகவே பட்டது எனக்கு.

“இவர ஒரு வண்டியில ஏத்தி கொண்டு போய் விடுங்களேன்” – என்று அவள் தன் கணவனை மன்றாடினாள்.

கணவரோ ஒரு காலை இழுத்து இழுத்து நடப்பவர். நான் மன்றாடினேன்: நான் சென்று விடுவேன்… நடப்பது எனக்கு இனிமையானது… இடங்களை பார்க்க வசதி தருவது என.

செங்குத்து சரிவில் நான் மீண்டும் ஏற முற்பட்ட போது அவளும் மலை உச்சிவரை வருவதாக, அடம் பிடித்து, வரவும் முனைந்தாள்.

நல்ல வேளையாக அவளது மகன் சேகர், சமயத்தில், பைக்கில் வந்து சேர்ந்தான்.

“அப்பா… அப்பா… இவர கொண்டு போயி உட்டுருப்பா…” – கெஞ்சினாள்.

என்னை பைக்கில் ஏற்றி சென்ற போது சேகர் பலதும் கதைத்தான்.

உறவுகள் பொறுத்தும் அவன் கதை தொட செய்தது.

“உறவுங்கிறது ஒன்னுமே இல்ல சார். எல்லாமே ஓர் எதிர்பார்ப்புத்தான்… எதிர்பார்ப்பு இல்லனா ஒறவே இல்ல… இருக்கக்கூடிய ஒறவுன்னா அது ஈஸ்வரனோட மட்டும்;தான்… எனக்கு வந்த பிரச்சினைங்க வேற எந்த ஒருத்தனுக்கும் வந்திருந்தாலும் அப்படியே ஒடஞ்சி செத்துருப்பான்… ஈஸ்வரன் கோயில்லே தஞ்சமுன்னு நான் போனதால தப்பிச்சேன்…”

ஆனால் இவனது தாயின் கூற்றோ வேறு விதமாய் உருவெடுத்திருந்தது: “கடவுள் மனுசன இப்படி படைக்கவே படைச்சிருக்ககூடாது… இப்படி எல்லாம் கஸ்டப்பட வைக்க”.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.