2

நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களில் ஒன்று ஏய்டன். மற்றது நீலமேகம். மற்றது காத்தவராயன் எனும் தலித் இளைஞன். இடையே ஏய்டனின் தோழி – ஓர் ஆங்கிலோ இந்திய விலைமாது. ஒரு மதகுரு. இன்னும் ஓர் ஆங்கிலேய காலனித்துவ அதிகாரி இப்படியாய் சில பாத்திரங்கள் வந்து போகின்றன, கதையின் தேவை கருதி. இருந்தும், மேலே கூறப்பட்ட மூன்று பாத்திரங்கள் முக்கியமானவை. காரணம் அவை சமூகத்தில் இயங்கும் அரசியலை ஏந்திபிடிக்க வசதி செய்து தருவன.

நாவலில் நீலமேகம் அறிமுகமாகும் காட்சி குறிக்கத்தக்கது:

“சவுக்கடியின் ஒலியும் குளறும் குரல்களும் கேட்கும்… குதிரையில் சவாரி செய்யும் ஏய்டன் திடுக்கிடுகின்றான்…”

“சட்டென்று ஒரு பெண்குரல் வீறிட்டது… மீண்டும் அடியின் ஓசை…” (பக்கம் - 45)

“கீழே இருவர் விழுந்து கிடக்கின்றனர்…நாலைந்து தாவல்களில் அருகே சென்றுவிட்டான் ஏய்டன்… அவர்களில் ஒருவர் பெண்ணென்பதை அப்போதுதான் கவனித்தான்” (பக்கம்-46)

ஏய்டன் விசாரிக்கும் போது நீலமேகம் கூறுகின்றான்:

“இவர்கள் ஐஸ் ஹவுஸ் தொழிலாளர்கள்”

“வேலை செய்யவில்லை…ஒளிந்திருக்கின்றார்கள்”

“கீழே கிடந்தவன் உரத்த குரலில் ஏதோ கத்தியபடியே ஏய்டன் காலை பிடிக்க வந்தான். சாட்டைக்காரன் (நீலமேகம்) சாட்டையைச் சுழற்றி அவனை ஓங்கி அடிக்க சாட்டைநாக்கு அவன் கரிய முதுகை நக்கிச் சுழன்றது. அவன் அலறியபடி மண்ணிலேயே விழுந்துவிட்டான். அந்தப் பெண் அலறியபடி அவனை பிடித்தாள்”. (பக்கம்-46)

இப்போது, ஜெயமோகனின் பார்வையில் ஏய்டனின் சமூக நீதிக்கான மனம் விழித்துக் கொள்கின்றது.

“வேண்டாம் எனத் தடுத்து கூறுவான்: நீலமேகம், நீ இவர்களை தண்டிக்க அதிகாரம் உள்ளவன் இல்லை..” (பக்கம் - 47)

“நீல மேகம் பயத்துடன் கைக் கூப்பினான். கூப்பிய கை நடுவே சாட்டை இருந்தது”

“ஒப்படை… இவர்களுக்கு சட்டப்படி என்ன தண்டனையோ அதை கொடுக்கட்டும். இவர்கள் அடிமைகள் இல்லை.. பிரிட்டிஷ் சட்டப்படி.. சாட்டையால் அடிக்க எந்தவொரு குடிமகனுக்கும் அதிகாரமில்லை…”

“அவர்களை தூக்கி எழுப்பு…”

“அவர்கள் கைக்கூப்பியபடி எழ முயற்சிக்கின்றனர். அந்த ஆண் எழ முயன்றான். தள்ளாடி மீண்டும் விழுந்து விட்டான்”

“பிடி அவனை…”

‘நீலமேகம் பேசாமல் நின்றான்…”

அவன் எழுந்து நடப்பான் சார்…” – நீலமேகம்

“அப்போதுதான் நீலமேகத்திடம் இருந்த அந்த முரண்டல் ஏய்டனுக்கு உறைத்தது… உறுதியான எதிர்ப்பு…”

‘நான் சொன்னதைச் செய்… பிடி அவனை…”

“நீலமேகம் தலை குனிந்து, உடலை இறுக்கி பேசாமல் நின்றான்”

“ஏய்டனுக்கு புரிந்தது இந்த உள்ள10ர் மக்கள் பலர் ஒருவரை ஒருவர் தொடுவதில்லை. கீழிருக்கும் குலத்தைச் சேர்ந்த ஒருவனைத் தொட்டால் தாங்கள் அசுத்தமாகி விடுவோம் என நம்புகிறார்கள். சில சமயம் குளித்தால் கூட அந்த அசுத்தம் நீங்குவதில்லை. பசுவின் சாணத்தைக் கரைத்து குடிக்க வேண்டும். அவர்களின் கோயில்களுக்குச் சென்று பிராய்சித்தம் செய்ய வேண்டும். சில சாதிகளில் தீண்டிய பாவம் போக தீயில் கையைத் தொட்டு தண்டனை அனுபவிக்க கூட வேண்டும்…” (பக்கம் - 49)

இது ஏய்டனின் குரலா அல்லது ஜெயமோகனின் குரலா என்பது தீர்க்கமாய்க் கூற முடியாது இருக்கின்றது. இருந்தும் ஒன்றை குறிக்கலாம்:

மேலே உள்ள பந்தியில் முதல் மூன்று வரிகள் விடயத்தைக் கூறி வைக்க போதுமானது. இதனையே பிறிதொரு எழுத்தாளர் சில சமயம் அப்படியே கூற நிர்பந்திக்கப்பட்டிருந்தாலும் கூட வேறு வகையில் கூறியிருப்பார். அப்படியே மிஞ்சி போனாலும் மேலே காணும் மூன்று வரிகளோடு மாத்திரம் தன்னை மட்டுப்படுத்தியிருப்பார். ஆனால் ஜெயமோகனின் சாதீய மனம், அந்தளவில் தன்னைச் சுருக்கி எல்லைப்படுத்தி கொள்ள விருப்பம் கொள்ளாது. தன் சாதீய மமதையை, அவர்களை நோக்கி எள்ளி நகையாடுதலை தத்தமது வாழ்க்கைப் பாரம்பரியத்தை, ஆழமாக பேசிக் கொள்வதில் ஆனந்தம் தேடிக் கொள்கின்றது. இவ் ஆனந்தமே அதன் அரசியலாகவும் இருக்கின்றது. இவ் அரசியலே மேற்படி சமூக அநீதிகளைத் தொடரவும் ஸ்திரப்படுத்தி கொள்ளவும் வழி வகுக்கின்றது. எனவேத்தான், ஜெயமோகன் மேலும் ஏழு வரிகளை எழுதித் தன் மனப்பக்குவத்தை நேர்த்தியாக்குகின்றார், வருமாறு:

“ஏய்டனுக்கு புரிந்தது இந்த உள்ளூர் மக்கள் பலர் ஒருவரை ஒருவர் தொடுவதில்லை. கீழிருக்கும் குலத்தை சேர்ந்த ஒருவனைத் தொட்டால் தாங்கள் அசுத்தமாகி விடுவோம் என நம்புகிறார்கள். சில சமயம் குளித்தால் கூட அந்த அசுத்தம் நீங்குவதில்லை. பசுவின் சாணத்தைக் கரைத்து குடிக்க வேண்டும். அவர்களின் கோயில்களுக்குச் சென்று பிராய்சித்தம் செய்ய வேண்டும். சில சாதிகளில் தீண்டிய பாவம் போக தீயில் கையை தொட்டு தண்டனை அனுபவிக்க கூட வேண்டும்…” (பக்கம் - 49)

இப்போது, இதே போன்று ஏய்டனுக்கு எரிச்சல் வருகின்றதாம்:

“முட்டாள். இது என் ஆணை. அவனை தூக்கு…” – முகம் சிவக்கின்றது”

“மன்னிக்க வேண்டும். என்னால் முடியாது” – நீலமேகம்

“தூக்கப்போகிறாயா இல்லையா – ஏய்டன் சாட்டையைத் தயார் செய்கின்றான்”

“மன்னிக்க வேண்டும்” – (நீலமேகத்தின்) “கண்கள் உலோக உருளைகள் போல் உயிரற்று இருந்தன”

“ஏய்டன் சாட்டையைத் தூக்குகின்றான்…”

“நீலமேகம் அப்படியே அசையாமல் நின்றான்…”

“நான் உன்னைச் சிறையில் தள்ளுவேன். நீ ஆறுமாதம் வெளியில் வர முடியாது…”

“நீலமேகம் அசையாமல் அப்படியே நின்றான்”

ஏய்டன், இப்படியாக இந்திய சாதீயமுகத்தின் முன் தோற்றுப்போவதைக் காட்டுகின்றது நாவல். உடனே அவன் “சரி நான் உன்னைக் கவனித்துக் கொள்கின்றேன் என்று சமாளித்து குதிரையில் ஏறி அதன் விலாவில் குத்த அது பாய்ந்து செல்கின்றது. நீலமேகம் தோன்றி அறிமுகமாகும் இந்தக் காட்சியுடன் அத்தியாயம் ஒன்று முடித்துவைக்கப்படுகின்றது.

இனி இரண்டாம் அத்தியாயத்தில் ஏய்டன் தன் வீரர்களைத் திரட்டிக் கொண்டு, விசாரிக்கவென ஐஸ் ஹவுசுக்குச் செல்கின்றான் –முக்கியமாக நீலமேகத்தைத் தண்டிக்கும் பொருட்டு. விசாரிக்குகைகளில் இப்போது நீலமேகம் புதுக்கதை ஒன்றை அவிழ்த்து விடுகின்றான்.

“இன்று காலையில் நீ சாட்டையில் அடித்த அந்த வேலையாட்கள் எங்கே? (பக்கம்-68)

“அவர்கள் இங்கே இல்லை” – நீலமேகம்.

“எங்கே போனார்கள்?”

“அவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது சார்..”

“தெரியாதா… அவர்கள் இங்கே தானே வேலை செய்தார்கள்..”

“அப்படித்தான் சொன்னார்கள்… ஆனால் உண்மையில் அவர்கள் இங்கே வேலை செய்யவில்லை… ஏனென்றால் அவர்கள் இங்கே வரவில்லை..”

தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள ஏய்டன் அருகில் நின்ற குதிரையைத் தடவினான். ஏன் தன்னைக் கட்டுப்படுத்தி கொள்கிறான் என்றும் தெரியவில்லை. ஏனெனில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஏய்டன் ஐஸ் ஹவுசில் அமெரிக்க பிரதிநிதியையே மார்பில் எட்டி உதைத்துத் தள்ளுவதாகவும் பிற்பாடு சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏய்டனின் குணநலன் அப்படித்தான் இருப்பதென்றால் இங்கே சாதியத்தைக் கலக்கவா அல்லது சாதியத்தின் முன் வணங்கி செல்லவா இத்தகைய சித்தரிப்பு வழிந்து புறப்படுகின்றது? இருந்தும், பின் ஏய்டன் நீலமேகத்தைக் கைது செய்து கைகளில் விலங்கிட்டு தள்ளிச் செல்ல செய்கின்றான்.

“அவன் மனம் கூறுகின்றது:

“எதற்காக இந்த கண்காணிப்பாளனை இழுத்துக் கொண்டு செல்கின்றேன்? என் சொற்களை மதிக்காமல் இருந்ததிற்காக இவனை நான் சாட்டையால் அடிக்க செய்யலாம் ஆனால் எனக்கு ஒருவகையான திருப்தியைப் பெற முடியுமே அல்லாமல் எந்தப் பயனும் இல்லை” (பக்கம் - 73)

“இவன் உறைந்து குளிர்ந்த பிணம் போல கிடந்து அடிகளை வாங்கி கொள்வான். அவனைத் தண்டித்த உணர்வைக் கூட எனக்கு அளிக்க மாட்டான். அவனை ஒரு தாழ்ந்த சாதியினனைத் தொடச் செய்தேன் என்றால் நான் வெற்றிப் பெற்றவனாவேன் அல்லது குறைந்தபட்சம் மனமுடைந்து அழ வைத்தாலாவது வெற்றியென உணர முடியும். ஒரு போதும் அதற்கான வாய்ப்பை இவன் எனக்கு அளிக்கப் போவதில்லை.. ஆம் இவன் மௌனமாக இறப்பான்..” (பக்கம் - 74) (அழுத்தம் எம்முடையது)

பிறகு முடிவு செய்கின்றான்:

“காலையில் நீலமேகத்தை விட்டுவிட வேண்டியதுதான்”

தொடர்ந்து நாவலாசிரியர் ஜெயமோகனின் கூற்று வருகின்றது:

“அவனால் நீலமேகத்தை ஒன்றுமே செய்ய முடியாது. யானையை அடிக்கலாம். வசை பாடலாம். துரத்தலாம். அது எந்த எல்லைவரை என்பதை எப்போதும் யானைத்தான் தீர்மானிக்கின்றது” (பக்கம்-78)

இப்படியாக ஜெயமோகன் அவனது (தனது) சாதீய பிரஞ்ஞையைப் படைத்தளித்திருப்பது மாத்திரமல்ல–அவனது சாதீய மனதுக்கான தர்க்கத்தையும் வாதிட்டு உறுதி செய்கின்றார். இப்படி செய்வதற்கூடு அவரது சாதீய வாசகரின் வன்மம் சாதீயத்தால் மேலும் உறுதி செய்யப்பட்டு புடம் போடுதலை உறுதியாக்குகின்றார். மேலும், இவ்உறுதி செய்வதற்கூடு, சாதிய தர்க்கமும் அதற்கான வாழ்க்கை அடிப்படைகளும் நித்தியமாவதற்கு ஓர் முயற்சியை ஜெயமோகன் மேற்படி சித்தரிப்புக்கூடு செய்து முடிக்கின்றார், எனவும் கூறலாம். யார் இந்த நீலமேகம்? சாதீயத்தின் இறுக்கமான ஒரு பிரதிநிதி. இவனை ஒரு பிரதிநிதியாக்கி, அதாவது பொதுவில் காணக்கூடிய ஒரு பிரதிநிதியாக்கி, சாதீய அடிப்படையில் சோடித்து அவனை நம்முன் நிறுத்துகின்றார் இந்த ஜெயமோகன். இவ்உதாரண புருஷன் எப்படிப்பட்டவன்? யானையை போன்றவன். எல்லைகளை அவன்தான் தீர்மானிக்கின்றான். சுருக்கமாகச் சொன்னால் எல்லைகளை கடந்தவன் அவன். யாருடைய கட்டுக்கும் அடங்க மாட்டான். தன் சாதீயத்தை நிலைநிறுத்த சாகவும் அஞ்சமாட்டான். ஆங்கிலேயராவது-மண்ணாவது என்று அனைத்தையுமே துச்சமாய்ப் பார்க்கும் மனவலிமை கொண்ட சாதீயான் அவன். ஜெயமோகன் இப்படியாக தன் ஆதர்சன புருடனை முன்னிறுத்துவதற்கூடாக அவரது ஆழ்மனம், அவரது அரசியல், அவரது அறம் - இவை அனைத்தையும் பிரஞ்ஞையுடன் வெளிக்கொணர்கின்றார். சாதீய அடுக்குகளை போதிப்பவர்கள், இவ் எழுத்துக்களை வாசிக்கும் போது பூரண திருப்தி கொள்வார்கள். மேலும் இச்சாதீய தர்க்கத்தால், அழகுபடுத்தல்களால் இன்னும் சிலர் தொடர்ச்சிக்க கூடிய தம் சாதீய அருட்டுணர்வை பெற்று மேலும் உறுதி கொள்வர். இருந்தும், யானை போன்ற இம்மனிதர்களின் இருப்பு உண்மையானதுதானா? –இவர்கள் ஓர் விதிவிலக்காய் இல்லாமல் ஓர் சராசரியாக நிறுத்தப்படும் சூட்சுமை-சூட்சுமம் இயல்பானதுதானா?–போன்ற கேள்விகளை சற்றே வரலாற்றுடன் உரசி பார்க்க, சில வரலாற்று பிதாமகர்களின் வாழ்வை, மேலாகவேனும் தட்டிப்பார்த்தல் தகும். உண்மையில் எமது பி.ஜே.பி அரசால் வெகுவாக போற்றிப் புகழப்படும் எமது வீர சாவர்காரின் வாழ்க்கையை, இவ்வகையில், ஓர் வசதியான உதாரணத்திற்காக எடுத்துக் கொள்ளலாம். திரு.ஜெயமோகனைப் பொறுத்தவரை தன் நாவலை அழகுபடுத்த–இன்னும் சரியாக சொன்னால் –தன் பாத்திரத்தை அழகுபடுத்த ஒரு வீர சாவர்காரை நிறுத்தாமல் ஏன் ஒரு நீலமேகத்தை நிறுத்த வேண்டியுள்ளது எனும் கேள்வி எழவே செய்கின்றது, இங்கே–வீர சாவர்கார் ‘இந்துத்துவா’வை கண்டுப்பிடித்த, படைத்தளித்த மாவீரர் என்றாலும் கூட.

மராத்திய சிட் பவான் பிராமண குடும்பத்தில் பிறந்து இளமையில் தன் முஸ்லீம் பள்ளித் தோழர்களுக்கு எதிராக போர் புரிந்து ஈற்றில் சிறையில் அடைபட்ட வீர சாவர்கார் தனது கடுமையான அந்தமான் சிறைவாழ்வைத் தாக்குபிடிக்க முடியாமல், பரிதவித்த நிலையில், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு, கடிதம் மேல் கடிதம் எழுத நேர்ந்தது. சிறை சென்று ஆறே ஆறு மாதங்களில் (1911) அவர் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் ஆரம்பித்த கெஞ்சல் 1913 இல் தீவிரம் பெற்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிதம் எழுதுவது என்ற நிலைமைக்கு அவரைத் தள்ளிக் கொண்டு வந்து சேர்த்து விட்டது. அவரது கெஞ்சல்களின் (கடிதங்களின்) சுருக்கம் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டு கிடக்கின்றது:

1. என்னைப் போக விடுங்கள்.

2. என்னைப் போக விட்டால், இனி சுயராஜ்ஜியத்திற்கான போராட்டத்தில் ஒரு போதும் பங்கேற்கேன்.

3. மேலும், இதன் பிறகு, பிரிட்டி~hரின் காலனித்துவ ஆட்சிக்கு விசுவாசமாகவே இருப்பேன்.

மொத்தத்தில், வீர சாவர்காரின் இந்தப் பிரகடனம், ஜெயமோகன் விதந்தோதும், “இவனைத் தொடக்கூட வைக்க முடியாது” என்ற தத்துவத்திற்கும், தான் ஒப்புவமைக்காக நிறுத்தும் யானைக்கும், நீலமேகம் போன்ற தன் பாத்திரத்தின் கட்டுமானத்திற்கும் பொருந்தி வரவே வராது என்பது தெளிவு. ஆனால் மனஉறுதியில், இதிகாசத்து காலத்து கதைகளையும் விஞ்சக்கூடிய பாத்திரங்களை வரலாறு உருவாக்கியே உள்ளது, என்பதும் உண்மையே. ஒரு சிறு உதாரணம்: பகத்சிங். பகத்சிங்குக்கும் வீர சாவர்காருக்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டெனில் இருவருமே ஏதோ ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் காலனிய வாதிகளிடம் மனு போட்டு கடிதம் எழுதியவர்கள் தாம் என்பதே அது.
அந்த வகையில் இருவரிடையும் மேற்படி ஒற்றுமை உண்டு. கடிதங்களை இருவருமே எழுதினார் என்ற வகையில். ஆனால் கடிதங்களின் சாரம் வேறுபட்டது. வீர சாவர்காரின் கெஞ்சல்களின் சுருக்கம் போன்றே பகத்சிங் கடிதத்தின் அல்லது மனுவின் சுருக்கத்தையும் பின்வருமாறு சுருக்கிக் கொள்ளலாம்:

1. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக நாம் புரிவது ஒரு யுத்தமே ஆகும்.

2. அப்படி இடம்பெறும் யுத்தத்தில் நான் ஒரு பங்குதாரியாக நின்று யுத்தம் புரிந்ததை ஏற்றுக் கொள்கின்றேன்.

3. அப்படி நான் யுத்தம் புரிந்ததால் நான் ஒரு யுத்த கைதியாவேன்.

4. இதன் காரணத்தால் என்னை ஒரு சராசரி கைதியாக பாவித்து தூக்கில் போடாமல் துப்பாக்கிப் படையினரால் சுட்டே நான் கொல்லப்பட வேண்டும்.

5. ஆகவே என்னைத் தூக்கில் போடாமல் துப்பாக்கி வீரர்களால் சுட்டுக் கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.

6. நான் காண விழைவது பிரிட்டிஷாராலோ அல்லது உள்நாட்டு சுதேசிகளாலோ சுரண்டலுக்கு உள்ளாகாமல் இருக்கும் உழைப்பாளர் வாழும் ஒரு இந்தியாவையே.

இருபத்து மூன்று வயதே நிரம்பிய பகத்சிங் என்ற இளைஞனின் ஓர் கம்பீரம் இதைவிட எப்படியும் எடுத்துரைக்கப்பட மாட்டாது. இத்தகைய ஒருவனை அதாவது எம் கண் முன் வாழ்ந்திருக்க கூடிய ஒருவனை அல்லது அவனை ஒத்த ஒருவனை, தன் நாவலின் பாத்திரமாய் தேர்ந்தெடுத்து யானையுடன் ஒப்பிட்டு பலதும் கதைத்திருக்கலாம் ஜெயமோகன். ஆனால் மேலே குறிப்பிட்ட பகத்சிங்கின் சரத்துகளில் ஆறாவது சரத்து எமது ஜெயமோகன் என்ற கலைஞருக்கு சற்றும் ஆகாததாகி விடும் என்பது தெளிவு. அதாவது, பகத்சிங் செல்ல உத்தேசித்துள்ள பாதையை மேற்படி ஆறாவது ஷரத்து வெளிக்கொணர்ந்து விடுகின்றது. அதாவது, பகத்சிங் செல்ல உத்தேசிக்கும் பாதையை வெள்ளையானை நடக்க முற்படும் பாதையும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானதாக இருக்கின்றன. எனவேதான், தனது அரசியலுக்கு ஒத்த, தன் அரசியல் தேர்ந்தெடுக்க கூடிய ஓர் பாத்திரமாக நீலமேகத்தின் பாத்திரத்தை ஜெயமோகன் கடைந்தெடுத்துள்ளார். வேறு வார்த்தையில் கூறினால் இச்சாதீயக் கட்டுமானத்தைக் காப்பதென்றால் (சில தலைமுறைகளிடையேனும்) பல்வேறுபட்ட காரணங்களால் மறையத் தொடங்கும் ஓர் சாதீயக் கட்டுமான உணர்வலையை (T.M.. கிருஸ்ணாவை போன்றோரிடம்) ஸ்திரப்படுத்தவும் சாதீயத்தை மீளுணர்வு கொள்ள செய்யவும், அவர்களுக்கு மேலும் உரமூட்டி நியாhயம் கற்பித்து அவற்றை மேலும் வளர்த்து விடுவதும் தான் தன் எழுத்தின் நோக்கம் என்ற பிரஞ்ஞை கொண்டு தன் பேனாவை ஏந்தத் துணிகின்றார், ஜெயமோகன். ஆனால் காலம் உருவாக்கி தரும் பகத்சிங் முதல் வீர சாவர்கர் வரையிலான எண்ணற்ற பாத்திரங்களில் இருந்து தன் மனதுக்கும் தன் அரசியலுக்கும் ஒவ்விய ஒரு நீலமேகம் போன்றவனை ‘தேர்ந்து’ படைத்துவிட்டால் மாத்திரம் தனது பணி அத்துடன் முடிந்து போகாது என்பதனையும் திரு.ஜெயமோகன் அவர்கள் மிக தெளிவாக, பிரஞ்ஞைபூர்வமாகவே உணர்ந்து வைத்துள்ளார். அதாவது, இவ் யானையை ஒத்த நீலமேகம் காலத்தின் நகர்வால் ஆட்டம் கண்டு விடுவான் என்பதை அவர் அறிந்தே உள்ளார். எனவேதான், இந்நீலமேகம் அல்லது இச்சாதீய அடுக்குகள் சரிந்து விடாமல் உறுதியாக நிற்பதற்காக தன் தத்துவ முன்னெடுப்புகளையும் வாழ்வு பொறுத்த தனக்கே உரித்த பாணியிலான, ஒரு பரிசீலனையையும் தன்னளவில் ஜெயமோகன் மேற்கொள்கின்றார், நாவலில். அதாவது, அவ் அரசியலானது அப்படியே அம்மணமாய் நிறுத்தப்படாமல் தத்துவங்களாலும் இலக்கியங்களாலும் கலையாலும் தர்க்கங்களாலும் ஆடைத் தரித்து நிறுத்தப்படுகின்றது. அதாவது காட்டுமிராண்டி தலை சீவிக் கொள்கின்றான் –முகத்தையும் கழுவிக் கொள்கின்றான். இருந்தும் காட்டுமிராண்டி ஆகவே, ஒரு கால வரலாற்றில் வலம் வருகின்றான். இதனையே ஓர் அறிஞர் ஒருமுறை குறிக்க நேர்ந்தது:

“இயற்கையை வென்று, இயற்கையின் மேல் ஆட்சி செலுத்தும் மனிதன், இன்றைய சூழலில் குரங்கின் முன்னாலும் மாட்டின் முன்னாலும் மண்டியிட்டு தலைவணங்கி தன் தன்மானத்தையே பறிகொடுத்து விட்டு நிற்கின்றான்” என.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.