இந்தியாவில் சிப்பாய் கலகம் முடிந்து, 15 வருடங்கள் ஆகாத ஒரு சூழலில், 1878 ஐ, பின்புலமாகக் கொண்டு, St.George.Fort அருகே உள்ள ஐஸ் தொழிற்சாலையை மையமாகக் கொண்டு, அக்காலத்தைய சமூக நிகழ்வுகள் எனக் கூறப்படுபவற்றைத் தன் பார்வையில், பரிசீலனைக்கு எடுத்து கொள்வதாய் ஜெயமோகன், தன் நாவலான வெள்ளையானையை அமைத்துள்ளார். இங்கே ‘காலத்தின் தேர்வும்’, ‘தன் பார்வையில்’ என்ற விடயமும் மிக முக்கிய அம்சங்களாகின்றன. வேறு விதமாய் கூறினால், ஜெயமோகன் தன் பார்வையில் ஓர் வரலாற்றைத் தன் வாசகர் முன் நிறுத்திட தெண்டித்துள்ளார் எனலாம். இக்காரணத்தினாலேயே, இதனை ஓர் வரலாற்று நாவல் என நாம் கறாரான மொழியில் வரையறுக்க முடியாதிருக்கின்றது.

முதலாவது, வரலாற்று நாவல் எனின் குறித்த வரலாறு – அதன் நிகழ்வுகள் – விருப்பு வெறுப்பற்ற சரியான முறையில் பதிவு செய்தாகப்பட வேண்டும். கூடவே அது எழுதுபவனின் பிரித்தியேக அரசியல் அபிலாசைகளை முடிந்தளவில் தள்ளி வைத்துவிட்டு, நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்வதில் அக்கறை காட்டுவதாக இருக்க வேண்டும். இங்கே, இந்நாவலில் மேற்படி இரண்டு அம்சங்களும் சற்றே தள்ளாடுவதாகவே இருக்கின்றன. நாவலின் மையக் கதாப்பாத்திரமான, ஏய்டன் எனப்படும் ஓர் அயர்லாந்து இளைஞன், ராணுவப் பள்ளியில் தனது படிப்பை முடித்துவிட்டு மதராஸ்ஸில், காலனித்துவ ஆட்சியில், ஓர் அதிகாரியாக வந்து சேர்கின்றான். ராணுவ அதிகாரியாக அவன் இருந்த போதிலும்கூட ஷெல்லி அவனுக்கு அத்துப்படி. இதன் காரணத்தினாலோ என்னவோ அவன் ஓரளவு சமூக நீதிக்கான உணர்வினையும் கொண்டவனாக படைத்து காட்டப்பட்டுள்ளான். அவ்வப்போது எழும் இவனது சமூக நீதிக்கான, வாஞ்சைக்கான வேறு காரணம் நாவலில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த அவனது தந்தைக்கு இவன் அயர்லாந்து ராணுவத்தில் பணிபுரிய செல்வது–அல்லது ஓர் ஆங்கிலேய அரசுக்காக பணிபுரிய செல்வது அவ்வளவு பிடித்தமானதாக இல்லை. மேலும் அவர், அவரளவிலேயே ஓரளவு தனித்து போன ஓர் ஆசாமித்தான். வேட்டையும் பண்ணையுமாக, தன் குடும்பத்தாரின் மத்தியிலேயே ஓர் தனித்த கட்டையாகத்தான் உலவுகின்றார். இந்தத் தனிமையின் பாதிப்பு ஏய்டனுக்கும் ஒரு வகையில் தொற்றிக் கொண்டுள்ளது என்பதனை நாவல் நாசூக்காக வெளிப்படுத்துகின்றது. இதனுடன், ஷெல்லியும் சேர்ந்து கொள்ள, ஏய்டன் ஏனைய ஆங்கிலேய அதிகாரிகளிடமிருந்து, சற்றே வித்தியாசப்பட்டவனாக தோற்றம் தருகின்றான். ஆக இப்பாத்திரப் படைப்பின் தர்க்கம் இப்படியாகத்தான் முன்வைக்கப்படுகின்றது.

இவன் இந்தியாவுக்கு வந்து சேர்ந்த காலப்பகுதியில், இரண்டு முக்கிய விடயங்கள் இந்தியாவில் நடந்தேறுகின்றன. ஒன்று, பஞ்சம். மற்றது, மதராஸ்ஸில் உள்ள ஐஸ் ஹவுசில் நிகழ்வதாய் கூறப்படும் நிகழ்வுகள். ஏனெனில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு வேலை நிறுத்தம் இந்த ஐஸ் ஹவுஸ் தொழிற்சாலையில்தான்; சூல் கொள்கின்றது என நாவல் கூறுகின்றது. உலகில் அந்தந்த நாடுகளில் நடந்து முடிந்திருக்கக் கூடிய இத்தகைய முதலாவது “வேலை நிறுத்தங்களை” பற்றிய விலாவாரியான விசாரிப்பு, அந்தந்த நாட்டு வரலாற்றாசிரியர்களாலும் நாவலாசிரியர்களாலும் பதிவு செய்யப்பட்டே இருக்கின்றது. சிக்காகோவில் நடந்ததாய்க் கூறப்படும் மேதின போராட்டம் என அறியப்பட்ட போராட்டத்தில் எண்மர் சூடுபட்டு உடல் சரிந்தது முதல் மாக்சிம் கார்க்கியின் நாவலான ‘தாயில்’ வேலைநிறுத்த போராட்டக்காரர்கள், முதன் முறையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வது உட்பட இலங்கையின் மலையகத்தில் சூல் கொண்டிருந்த ஆரம்பகட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளும் வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும், அதன் வேறுபட்ட வடிவங்களும் – இப்படியாக, மிக அழுத்தமான முறையில், பதிவு செய்யப்பட்டே கிடக்கின்றன. இப்படியாக, வரலாற்றில் ‘முதல்’ அல்லது ‘ஆரம்ப முளைகள்’ எனப்படுபவை பொறுத்த விரிவான பதிவுகள் கவனமாகத் தீட்டப்பட்டே உள்ளன.

இருந்தும், ஜெயமோகன், தன் நாவலான, வெள்ளையானைக்கூடாக, தற்போது ஓர் வித்தியாசமான பதிவை மேற்கொள்ள முயற்சித்துள்ளார். அதாவது வரலாறு என்பது, ஜெயமோகனுக்கே உரித்தான பார்வையில் படைத்தளிக்கப்பட்டுள்ளது. ஜெயமோகன் இப்படியாக தேர்வு செய்துள்ள கால சூழலும், நாவலில் தேர்வு செய்து அவர் நிறுத்தியுள்ள பாத்திரங்களும் அவரது தனித்த இந்தப் பார்வைக்குத் தோதாக அமைந்துள்ளன. அல்லது தனித்த தன் பார்வையை நிலை நிறுத்திக் கொள்ள அவருக்கு வசதி செய்வதாக உள்ளன. வேறுவார்த்தையில் கூறினால், இவரது இந்தத் தன்னிச்சையான தேர்வு வெளிப்பார்வைக்குப் பாதகமற்றும், கலை ஆர்வத்தால் உந்தித் தள்ளப்பட்டும் முன்வைக்கப்பட்ட ஒரு தேர்வாக, காட்சி தந்தாலும், சற்று ஊன்றி அவதானிக்குமிடத்து, வாழைப்பழத்தில் ஊசியேற்றும், அதே ஊசிப்போன சமாச்சாரம் தான் இத்தேர்வின் பின்னணியிலும் அப்படியே அப்பிப் போயிருப்பதை நாம் காண முடிகின்றது. வாழ்க்கையில், ஓர் குறித்த பார்வையை, அல்லது ஒரு குறித்த நிலைப்பாட்டை, இப்பாத்திரங்கள் தத்தமக்குத் தேர்வு செய்வதற்கூடு, இக்குறித்த சமூக நலனை அல்லது குறித்த அரசியலை இப்பாத்திரங்கள் ஏந்தி பிடிப்பவனவாக இருப்பது ஓர் தற்செயல் ‘கலை’ நிகழ்வல்ல. மாறாக, இப்பாத்திரங்கள் தமது அரசியலை வலிமையாக முன்நிறுத்த முனைவதே இங்கே நடந்தேறும் அரசியல் செயற்பாடாகின்றது. இவற்றை நாம் இங்கே தனிப்பட கூறியாவதற்கான காரணம், மேலோட்டமாய் பார்க்குமிடத்து நாவல், அரசியலைத் தாண்டிய ஓர் நாவலாகக் காட்சிதர பிரயாசபடுவதே. இப்பாத்திரங்களின் வாயிலாக எழுத்தாளனின் கருத்து கூறல்களும், நடத்தைகளின் மொழி பெயர்ப்புகளும், பொருள்கோடல்களும், தர்க்கங்களும் ஆற்றப்படுவது, மேற்படி அரசியலுக்கு மேலும் வலுச் சேர்க்கும் உபாயமாக வேறு அமைந்து போகின்றது.

ஓர் சிறு உதாரணமாக ‘பஞ்சம்’ என்பதனை ஜெயமோகன் எப்படி தன் பார்வையில் விவரிக்கின்றார் அல்லது எடுத்துரைப்புச் செய்கின்றார் என்று பார்ப்பது அவரது இத்தகைய அரசியலை வெளிக்கொணரும் அம்சங்களில் ஒன்றாகின்றது. கிட்டத்தட்ட 5-8 மில்லியன் மக்களை பலிக்கொண்ட, ஆங்கிலேயரால் தோற்றுவிக்கப்பட்டது என வரலாற்றாசிரியர்களால் நம்பப்படும் மேற்படி பஞ்சத்தை ஜெயமோகன், நாவலில் பின்வருமாறு வர்ணிக்கின்றார்:

“ பஞ்சமும் அதை போலத்தான் அது நம் சிந்தனைகளை ‘உருகி’ வழியச் செய்யும். நம் ‘தர்க்க புத்தியை’ அழிக்கும். வாழ்க்கையின் ‘எல்லா அடிப்படைகளையும்’ நிராகரிக்க வைக்கும். சாவதே மேல் என்று நம்பச் செய்யும். ஆம், நம்மை வெறும் முட்டாளாக்கி கனவில் நடந்து சென்று அதன் வாயில் விழச் செய்யும்.. அதிலிருந்து வரும் ஒவ்வொரு சிந்தனையும் சாத்தானால் உருவாக்கப்பட்டவை..” (அழுத்தம் எம்முடையது)
மனிதர்கள், எலும்பும் தோலுமாய் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில், உறவுகள் பறிக்கப்பட்ட நிலையில், மக்கள், சிதைக்கப்பட்ட நிலையில் தத்தம் குழந்தைகளோடு பரிதவித்து, மண்ணோடு மண்ணாக செத்து மடிந்து தொலைப்பது ஓர் சராசரி மனசாட்சியை எந்த விதத்திலும் உலுக்க வேண்டுமா கூடாதா? என்ற கேள்வியை மேற்படி பந்தி வலுவாக முன்வைக்கின்றது.

உலகின் மிகப்பெரிய சேரி வாழ்வைக் கண்ணுறுவது அல்லது அண்மையில் கொரோனா நோய் நிமித்தம் முடக்கப்பட்ட டில்லி வாழ்வில் இருந்து வாழ்விழந்த மனிதர்கள் லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்து கால்நடையாக தத்தம் சுமைகளோடு பசித்த தம் குழந்தைகளோடு ஊர் திரும்பும் காட்சி–இவை ஓர் மனித பிரஞ்ஞையைத் தட்டி எழுப்புமா–எழுப்பாதா, எழுப்ப வேண்டுமா – எழுப்பக் கூடாதா என்பதே கேள்வியாகின்றது. கூடாது என்கிறது நாவல். திரு.ஜெயமோகனின் கூற்றுப்படி இது சகஜமானது. கவனமாக இல்லாவிட்டால் இவை, உங்கள் மனித மனசாட்சியை அல்லது சிந்தனையை உருகி வழிய செய்துவிடும். அது நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். இது நாவல் கூறுவது. மேலும், இது நம் தர்க்க புத்தியை வேறு அழித்து விடுமாம். சாவதே மேல் என்று வேறு எண்ண செய்து விடுமாம். கேள்வி–மேற்படி கூற்று, ‘நம் தர்க்க புத்தியை அழித்துவிடும் இது’ எனக் கூறுவதில், இங்கு காணக்கிட்டும் தர்க்கம் யாருடைய தர்க்கம்? எந்தத் தர்க்கம்? எதற்கான தர்க்கம்? போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை. ஒரு சாதீய படிப்பினையை அல்லது சுரண்டல் படிமுறையை–உறுதியாக்கி–அதன் இருப்பை நியாயப்படுத்தி–ஓர் ஆயிரம் ஆயிரம் வருடமாய் –வாழ்ந்து வந்துள்ளோமே–அந்தத் தர்க்கத்தையா, இப்படி உருகி வழிய செய்துவிடும் என்று மேற்படி கூற்று அஞ்சுகிறது? அல்லது, இக்காட்சி, எமது மனசாட்சியை, விழித்தெழச் செய்து எமது எல்லா அடிப்படைகளையும் நிராகரிக்கவேறு வைத்துவிடும் என்றா அஞ்சுகிறது. அதாவது, சமூக கொடுமைகளை, கொடுமையான சமூக அவலங்களை கண்ணுறும் ஒரு மனித மனம் விழித்து அவனது மனித மனசாட்சி உயிர் பெறுவதையா மேற்படி கூற்று நிந்திக்க பார்க்கின்றது? எச்சரிக்கின்றது:

“உன்னை வெறும் முட்டாளாக்கி கனவில் நடந்து சென்று சாவதே மேல் என்று வேறு எண்ண செய்து விடும்”

உண்மைதான். அனந்த இளைஞர்கள் இப்பாரை உயர்த்துவதற்காய், சாவையும் எதிர் கொள்ள துணிகின்றார்களே–சமூக தொடுவானில் மாந்தரின் வாழ்க்கை இப்படி எல்லாம் பறிப்படுதலை மனம் பொறுக்காமல் உருக முற்படுகின்றார்களே–அதனைத் தடுத்தாக வேண்டும் –என்பதே இந்நாவலின் மூலைக்கல்லாகின்றது, இங்கு. உண்மையைக் கூறினால் இது ஜெயமோகனின் அனைத்து எழுத்துக்களினதும் மூலைக்கல்லாகவே இருந்துள்ளது. இதனையே வேறு வார்த்தையில் கூறுவதானால், இம்மூலைக்கல்லே ஜெயமோகனின் அரசியலுமாகின்றது. இங்கிருந்தே அவரது அனைத்துச் சமாச்சாரங்களும் வெளிக் கிளம்புவதாயும் உள்ளன. இது ஒரு நுண்ணிய அரசியல் –மிக நுணுக்கமாகச் செயற்படும் ஒரு அரசியல், எனலாம். இதனையே வெள்ளை யானையும் தன் அடித்தளமாகக் கொண்டு தன் வாசக பிரஞ்ஞையின் செவிகளுக்கு எட்டாமல், மெதுவாய் அசைந்து அசைந்து முன்னேறுகின்றது தன் காதுகளை ஆனந்தமாய் அசைத்தவாறே.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.