- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்!  - பதிவுகள்.காம் -


ஜாம கோடாங்கி

எங்க தாத்தாவுட்டு அப்பா பேரு ஊத்தங்கொட்டான் புள்ள. எங்க தாத்தா பேரு நாராயணன் புள்ள. எங்க அப்பா ஆரோக்கியசாமி. அவர, ரம்பகார ஆறுமுகம்ன்னுதான் எல்லாருக்கும் தெரியும். நான் சேவியர். கல்லொடைக்கிற சேவியர்னா யாருக்கும் தெரியும்”

“எங்க அண்ணா வீட்டுக்கு வராட்டி எங்க அம்மா வருத்தப்படும். எங்க தம்பி வீட்டுக்கு வராட்டியும் அப்படித்தான். அதே யோசனையோட அம்மா அடுப்படியிலேயே ஒக்காந்திருப்பாங்க. நான் வீட்டுக்கு வராட்டி கவலையே வராது எங்க அம்மாவுக்கு…”

“அவென் சிங்ககுட்டி… எப்படியானலும் எந்த ஜாமமானாலும் வந்து கதவெ தட்டுவான். என் சம்சாரத்துக்கு கூட என் அம்மா சொல்றது அதேதான். போய் படு புள்ள. அவென் ஒரு ஜாம கோடாங்கி. நடு சாமத்துல வந்து கதவ தட்டுவான்னு…”

இந்த ஜாம கோடாங்கியையும் எக்குத்தப்பாய்த்தான் கொடைக்கானல் குளக்கரையில் சந்தித்தேன்.

குளம் மாறிவிட்டிருந்ததா என்பது சரியாக பிடிபடவில்லை. ஆனால் நகரை ஒட்டிய பகுதியில் முன்பு போலில்லாமல், சற்றே கலங்கலாய் காணப்பட்டது. ஆனால் நடந்து செல்ல செல்ல – குளத்தின் களங்கல் தெளியத்தொடங்கி, நீல வானத்தின், கீழ், ஓரங்களில் நீல அல்லிகளுடன் வழமைபோல் தனது அழகை பாதுகாத்து நின்றது. இருந்தும் கரையை ஒட்டிய பிரதேசம் முன்போலன்றி, புல்லும் புதருமாய் நிறைந்திருந்தது. ஒரு வேளை அடுத்த முறை திருத்தி இருப்பார்கள்.

குளக்கரையின் மருங்கே, பாதையை ஒட்டி போடப்பட்டிருந்த அதே ஒடுங்கிய காங்கிரிட் திட்டின் மீது தன் நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தவன், தொழிலுக்கு நேரமாகிவிட்டதை அறிந்து அவசர அவசரமாக எழுந்து, பின்னால் ஒட்டியிருந்த தூசி துரும்புகளை தன் வல கரத்தால் தட்டி விட்டுக்கொண்டு, தன் நண்பனுடன் வேகமாக நடக்க தொடங்கினான், குளக்கரையின் நடைபாதையில்.



நான் போகவும், அவன் வேலியை தாண்டி வரவும் சரியாக இருந்தது.

“கோபாலகிருஸ்ணனை தெரியுமா…?

“அவர் இறந்து மிச்ச நாளாயிருச்சே… எல்லாரும்தான் செத்து செத்து போறாங்களே…”

ஒரு வகை எரிச்சலுடன், அவசர அவசரமாய் சொல்லிக் கொண்டே நடந்தான் அவன்.

உண்மைத்தான். அவனது வயது அவனை அப்படி பேச வைக்கின்றது. அவனது வயது ஓர் அம்பது அறுபதை எட்டியிருக்கலாம். உழைப்பாளிகள் மத்தியில் வயதை கணிப்பிடுதல் சற்றே கடினம். திடகாத்திரமான உடம்பு, போதிய உணவின்றி அம்பது வயதிலேயே, சீர்குலைந்து அறுபது எழுபதை காட்டி நிற்கும், போதிய போஷாக்கும் கவனிப்பும் இன்றி.

அவனது நடைக்கு ஈடுகொடுத்து, நானும் வேகமாக நடந்தவாறே கேட்டேன்:

“நீங்களும் மீன் பிடிப்பீங்களா…”

“மீன் பிடிக்றதா” – நடந்துக்கொண்டே என்னை ஒருதடவை நிராகரிப்பதுப்போல் பார்த்துவிட்டு, முகத்தை மீண்டும் பாதையை நோக்கி திருப்பிக்கொண்டு சொன்னான். “ஒரு காலத்துல…ம்… அந்த பழக்கம் மூளையில சிக்கினிச்சி – அவ்வளவுத்தான் - மனுசி, புள்ள, தொழிலு – ஒன்னையும் கவனிக்க முடியாதப்படி செஞ்சுரும். வேல உட்டு வெளிய வந்தா, கால் தன்னால கொளத்துக்கு இழுத்து கொன்னாந்து சேத்துரும்.”
இப்பொழுது மற்றவனும் இணைந்தான். தலையை ஆட்டியபடி அவனும் கூறினான். “கண்ணும் மூளையும் அப்படியே தூண்டில்லேயே சிக்கிரும்… அசையாது…”

“ ஒரே பைத்தியமாயிருக்கும்…” – அவன்.

“கோபாலகிருஸ்ணன் எத்தன மணிக்கு வருவாரு போவாருன்னே தெரியாது. வர்றப்ப இருப்பாரு… போகயிலயும் இருப்பாரு… மீன் புடிச்சிக்கிட்டு.”

என்னிடம் கதைத்தாலும் கூட,அவன் வேகமாக நடப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். என்னிடம் கதைப்பதில் எந்த ஓர் ஆர்வத்தையும் அவன் வெளிப்படுத்தவே இல்லை. தொழிலுக்கு நேரமாகிவிட்டது என்பதன் அவனது அவசரம் எனக்கு நன்கு புரிந்தது.

“மனுச கவலைகள்ல இருந்து விடுபடவா இப்பிடி நேரங்காலம் தெரியாம மீன் புடிக்கிறாங்க…” இப்பொழுது திரும்பி என்னை ஏறிட்டு பார்த்தான். – “மனுச கவலைகள்” – என்று குறித்து நான் கூறியது அவனை எங்கோ குத்தியிருக்க வேண்டும்.

நடையின் வேகம் சடுதியாக குறைந்தது. உடனடியாக ஆமோதித்தான்.

“நீங்க சொல்றது சரி… தப்புறதுக்குத்தான்…”

“ஒங்க பேரு…” – இப்போதுதான் என்னை ஒருவித கரிசனையுடன் விசாரிக்க தலைப்பட்டான்.

கூறினேன்.

“மனசுல வச்சுக்கிறேன்” என்று தன் வலது கையை எடுத்து நெஞ்சில் வைத்துக்கொண்டான்.

இப்போது அவர்கள் உள்ளே நுழையும் ஒரு கட்டிட வாசற்படி வந்துவிட்டது. இப்பொழுது அவனது நண்பன் அவனை அவசரப்படுத்தினான் : “நேரமாச்சு நேரமாச்சு…”. ஆனால் இவனோ, இப்போது தாமதிக்க தலைப்பட்டான்.
“இரு… இரு…  ஃபோன் நம்பர்… ம்… கொடுங்க… இல்லாட்டி பாக்யபுரம்… நாயுடுபுரம் தாண்டி… வந்து, கல்லொடைக்கிற சேவியர்ன்னு…”  – உள்ளே சென்று விட்டான் – சிறு ஓட்டத்துடன்.

மறுநாள், வேலை முடிந்து, குளக்கரையில் காங்கிரீட் திட்டில் அமர்ந்து, இருட்டும் வரை பேசிக்கொண்டிருந்தோம்…

மெல்லிய உடல்… குளிர் தாக்காமல் – ஓர் ஜெக்கட் அணிந்திருந்தான். – அதையும் இப்போது அரைவாசிக்கு திறந்து விட்டிருந்தான் – பரந்த நெற்றி – மாநிறம் – முடியை மேலே சீவியிருந்தான் – பரந்த நெற்றியை தெளிவுற காட்டியவாறு…

“ஜாம கோடாங்கின்னா நடு ஜாமத்துல வந்து, ஒரு மணி – ரெண்டு மணிக்கு குறி சொல்லுவானுங்க –  நல்லது – கெட்டது நடக்கும்ன்னு… காலைல வந்து காசு கேப்பானுங்க… இருக்கவுங்க கொடுப்பாங்க”
“பூர்வீகமே கொடைக்கானல்தான்… இந்த டவுன்ல எல்லாமே கள்ளனுங்க…”

“நானா?... நான் நல்லவென்… கெட்டவென்… அதாவது – இது யாருட்டு…” தான் கையோடு கொண்டு வந்திருந்த கையளவு பிளாஸ்டிக் தண்ணீர் போத்தலை என்னிடம் தூக்கி பிடித்து, காட்டி கேட்டான்.

“இது ஏவுட்டு… யாருக்கும் கொடுக்கமாட்டேன்… எழுதுறிங்க அந்த பேனா…? அது ஒங்கவுட்டு. எத்தன கோடி கொடுத்தாலும் எனக்கு அது வேணாம். நீங்களே வச்சுக்குங்க… ஆனா இந்த பொருள எடுக்க எவன் வந்தாலும் உடமாட்டேன். ரெண்டுல ஒன்னு பாத்துருவேன்…”

“இந்த டவுன்ல இருக்கிற எல்லாம் சுத்த கள்ள பசங்க… சேர்மன்… அதாவது முனிசிப்பல் சேர்மன்… அவர் சொல்லிட்டாரு இந்த முற நிக்க மாட்டேன்னு… ஏன்னா ரெண்டு முற நின்னுட்டாராம்… இப்ப இது இருக்கு, அது இருக்கு, எல்லாத்தையும் கவனிக்கனும்… அதனால நிக்க மாட்டேங்கிறாரு…”

“எல்லாம் கதைக்கிறாங்க – ரொம்ப ரொம்ப நல்லவர்ன்னு…”

“இவரு எப்படி வந்தார்ன்னு எங்க மாதிரி பூர்வீகம் தெரிஞ்சவங்களுக்கில்ல தெரியும்…”

“இவரு அப்பா, கேரளாவுல இருந்து வந்து, ஒரு சேர்ச் திறந்தாரு… வெளிநாட்டு பணம் கோடி கோடியா வந்துச்சி… அது இங்கிலீஷ்காரன் காலம்… சமாஜத்துக்கு ஆள் சேத்தாரு… தப்படிச்சி தப்படிச்சி, சேர்ச்சுக்கு ஆள் சேத்தாரு…”
“தப்புன்னா… ரெண்டு குச்சவச்சிகிட்டு அடிப்பானுங்களே சேர்ச்ல… ட்ரம்ஸ் – அது – தப்புத்தானே… வேறென்ன…”

“மகென் சேர்மன் ஆனா ஒடன, அரசாங்கத்துக்கு சொந்தமான காடெல்லாம் அவென் கைக்கு வந்துருச்சி – சடசவுக்கு பட்ட, இங்க தங்கம் மாதிரி… உரிச்சு உரிச்சு வித்தானுங்க – ஏழைங்கவுட்டு காணி பூமி எல்லாம் வளைச்சி போட்டானுங்க… இப்ப, இன்னொரு தடவ நிக்க ஏலாது… அது இருக்கு இது இருக்கு அப்படிங்கிறானுங்க – கொடைக்கானல் டவுனும் ஜோரா கைத்தட்டிக்கிட்டு நிக்குது…”

“இங்க பாருங்க… கொடைக்கானல்ல பூர்வீகமா இருக்கிறவனுங்க நல்லவனுங்க – சூது வாது தெரியாதவனுங்க… வந்தவனுக்கு, அதாவது வெளிய இருந்து வந்தவனுக்கு, மூளையே கிரிமினல் மூள – ஏன்னா அவன் சம்பாதிக்கிறத மட்டுமே குறியா வச்சி கொடைக்கானலுக்கு வந்தவன்…”

“அவனுங்கத்தான் இந்த கொடைக்கானலையே குட்டி சுவரா ஆக்குனவனுங்க… அவனுங்க மூள நாள் பூரா கிரிமினல் வேலையையே செஞ்சிகிட்டிருக்கும்…”

“கீ நாட்ட பாருங்க… சூடு ஒரு பக்கம் – காஸ்ட் ஒரு பக்கம் – பஞ்சாயத்து வேற வச்சிக்குவானுங்க – அதுல நெனைச்சா ஒருத்தன ஒருத்தன் அப்பைக்கு அப்ப, குத்திக்குவானுங்க…”

“மோடியா… என்னா சார்… இந்த வாட்டர் பாட்டில் எவ்வளவு… பத்து ரூபா… உண்மையில இது வெல மூனுரூவாத்தான் வரும்… மீதி ஏழு ரூவா? டாக்ஸ்… வரி… இவென் அதெல்லாம் சேத்து சேத்து அம்பானி காலடியில கொண்டு போய் கொட்றான்… அதுக்கு பேருத்தான் மோடி… நாடு அங்க போயிருச்சி”

“சர்ச்சுக்கு போகமாட்டேன் சார்… எனக்கு ரெண்டு மக – சொல்லுவாங்க ரெண்டு பேருமே… அப்பா இந்த ஞாயிறாவது கோயிலுக்கு போங்கப்பாங்க – நா சொல்லுவேன்: எதுக்கு… நா என்ன பாவம் செஞ்சேன் –  கோயிலுக்கு போகன்னு…”
“ஆனா எனக்கும் கடவுளுக்கும் நேரடி தொடர்பு இருக்கு… அவரு என்ன பாத்துக்குவாரு… நான் மனசுல அவர வணங்குறேன்…ஆனா கோயிலுக்கு போக மாட்டேன்…”

“சேர்மன் சொல்லுவாரு…ஒனக்கு என்னா வேணும்… வண்டின்னா வண்டி… குதிரென்னா குதிரே… ஆனா நீ சேர்ச்சுக்கு வரனும்…அந்த இந்த சாமியெல்லாம் கும்புட்டுக்கிட்டு - அந்த இந்த கோயிலுக்கெல்லாம் போக ஏலாது – எங்க சேர்சு;சுக்கு மட்டும்தான் நீ வரனும் - இப்படியே ஒரு லட்சம் பேர சேத்துட்டான் அவென். இப்படித்தான் எனக்கு பக்தியே இல்லாம போச்சு – சேர்ச்சுல…”

“வேலையா… நான் பன்னெண்டு வயசுல வேல செய்ய தொடங்கினேன் சார்… அப்ப… தெரியுமா, இவ்வளவு ஒயரம் ரோத… அதுக்கு ஒரு வாளியில இருந்து ஒரு செரட்டையில தண்ணிய அள்ளி அள்ளி வீசனும், அது ஓட ஓட”

நாளைக்கு பன்னெண்டு காசு. எட்டாது… எட்டி எட்டி வீசி ஊத்தனும். ஒரு என்ஜின் ட்ரைவர் இருந்தாரு… எங்க வீட்டு பக்கத்துல… வாடா பையா… சும்மா இருக்கியே… வந்து வேல செய்யு அப்படின்னு கூட்டிட்டு போயி சேத்தாரு… கார் டயர் ட்யூப்ப வெட்டி, பூட்ஸ் மாதிரி செஞ்சி, பெரிய கயிறுல நல்லா கட்டிக்குவோம், கொதிக்கிற தார் சுடாம… அப்படியே தண்ணிய மொண்டு மொண்டு வீசுவோம் – ரோதைக்கு… அதுக்கு பெறகு… இன்னைக்கு வரைக்கும் என்னென்ன வேல… எதுவுமே செய்வேனே…”

“எங்க தாத்தா… அவரோடத்தான் படுப்பேன்… கெடா மாதிரி மீசெ… படுக்க முந்தி, மூனுமணிநேரம், படுக்கையில ஒக்காந்து, கை ரெண்டையும் ஏந்தி புடிச்சி, மேல பாத்து எதையோ கேட்டுக்கிட்டிருப்பாரு மனுசன். பிரார்த்தன. கடைசியில தேனீ கொட்டி செத்து போனான் மனுசன். இதுதான் வாழ்க்க… என்னத்த சொல்றது…”

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.