இலங்கை மலையகத்தின் டிக்கோயாவைச் சேர்ந்த ஓவியர் வீரப்பன் சதானந்தன் இலங்கையின் முக்கியமான நவீன ஓவியர்களிலொருவர். அண்மையில் இவரைப்பற்றியும், இவரது ஓவியங்கள் பற்றியும் எழுத்தாளர் ஜோதிகுமார் மூலம் அறிந்து கொண்டேன். இவரைப்பற்றியும், இவரது ஓவியங்கள் பற்றியுமான சுருக்கமான அறிமுகக்குறிப்பொன்றினை அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்திருந்தோம். தற்போது இவருடனான நேர் காணலினைப் பிரசுரிக்கின்றோம். இவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு இந்நேர்காணல் உதவும். 'பதிவுகள்' சார்பில் இந்நேர்காணலைக் கண்டவர் எழுத்தாளர் ஜோதிகுமார். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -


கேள்வி: உங்கள் சிறு வயது குறித்தும், உங்களுக்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட ஓவிய நாட்டங்கள் குறித்தும் கூற முடியுமா?

பதில்: நான் ஆரம்ப கல்வியை கற்றது சென்ஜோன் பொஸ்கோ கல்லூரியில். எனது தந்தை மு.சு.வீரப்பா, ஹட்டன் நீதிமன்றத்தில் ஒரு மொழிப்பெயர்ப்பாளராக (முதலியாராக) இருந்தார். அவர், 1940 களில் இருந்தே நீதிமன்ற அலுவலராக இருந்து வந்துள்ளார். ஓர் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தை பெற்ற அவர் பொதுவில் வாசிப்பதில் அதிக அக்கறை கொண்டவர். அவரும் எனது சென்ஜோன் பொஸ்கோ கல்லூரியில் அதிபராக பணியாற்றிய வணக்கத்துக்குரிய பிரதர் தோமஸ{மே என்னை முதன் முதலாக இனங்கண்டு என்னை ஓவியத்திற்கான தூண்டுதலை தந்தவர்கள்.

கேள்வி: அப்படியென்றால் உங்கள் தந்தையைப் பற்றியும், பிரதர் தோமஸை பற்றியும் அவர்கள் எவ்வகையில் ஓவியங்கள் தொடர்பில் உங்களுக்கு உதவினார்கள் என்று கூற முடியுமா?

பதில்: முதலில் எனது தந்தையாரை பற்றி கூறுவது பொருத்தமானதாக இருக்கும். எனக்கு பத்து வயதாக இருக்கும் போதே எனது தந்தையாரானவர் நான் ஓவியத்தில் ஈடுபாடு கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வரைவதற்கான ஓவிய தாள்களையும் வர்ணப்ப10ச்சிகள் செய்வதற்கான வண்ணங்களையும் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார். அதுமாத்திரமல்லாமல் பண்டிகைகள் வரும் போதெல்லாம் அஞ்சல் அட்டைகளை வாங்கி அவற்றில் என்னை ஓவியங்கள் தீட்ட வைத்து அவற்றை தனது நண்பர்களுக்கு அனுப்பி மகிழும் வழக்கமும் அவரிடம் இருந்தது. போதாதற்கு மாலை வேளைகளில், வேலை பளுக்கள் மிகுதியான நாட்களில், ஓரளவு மது அருந்திவிட்டு தன்னிடமிருந்த கலைக்களஞ்சிய தொகுதிகள் (encyclopedia) பதினொன்றில் அவர் விரும்பியதை தேர்ந்து வாசித்துக் கொண்டிருப்பார். அச்சமயங்களில் ஓவியர்களை பற்றி அவர் வாசிக்க நேரும் போதெல்லாம் என்னையும் அழைத்து அவ் ஓவியர்களை பற்றி கூறி அவர்களின் ஓவியங்களையும் காட்டி என்னிடம் விவரிப்பதில் இன்பமடைவார்.

கேள்வி: பிரதர் தோமஸ்?

பதில்: பிரதர் தோமஸ் அவர்கள், நான் ஒன்பதாம் வகுப்பு பயிலும் போது என்னை இணங்கண்டார் என்று சொல்ல வேண்டும். அவரின் தூண்டுதலால் நான் ஹட்டன் கல்லூரிகளுக்கு இடையே நடந்த ஓவிய கண்காட்சியில் கலந்து கொள்ள நேர்ந்தது. இதே போன்று ஹட்டன் இந்துமா சபை நடாத்திய போட்டியில், அவர் என்னை கலந்து கொள்ள செய்தார். போட்டியானது திருக்குறளில் என்னை கவர்ந்த ஏதாவது ஒன்றை பற்றி ஓவியமொன்று தீட்டல் வேண்டும் என்பதே. இதற்கிணங்க நான் “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி – எல்லா உயிருந் தொழும்” என்ற குறளுக்கிணங்க வன உயிர்வாழ் மிருகங்களை நாங்கள் அன்போடு பார்வை செலுத்துதல் வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு ஓவியத்தைத் தீட்டினேன். போட்டியில் எனக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக தமிழ்நாட்டில் இருந்து கி.வா ஜெகநாதன் அவர்கள் வருகை தந்திருந்தார்கள். ஆனால் எனக்கு கிடைத்தது என்னவோ ஆறுதல் பரிசு மாத்திரமே. இருந்தும் பிரதர் தோமஸ் அவர்கள் சமாதானம் அடையாமல் எனது ஓவியத்தை திருகோணமலையில் நடந்த திருவள்ளுவர் மாநாட்டிற்கு அடுத்த வருடம் அதே ஓவியத்தை அனுப்பி வைத்தார். உண்மையில் நான் அதில் கலந்திருக்க வேண்டும். அல்லது நேரடியாக நானே சென்று ஓவியத்தை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் எனது சிறு வயது காரணமாகவும், அக்காலத்தில் திருகோணமலை என்பது மிக தொலைவில் அமைந்திருந்த ஒரு நகரம் என்றபடியாலும் நான் செல்வதென்பது முடியாத காரியமாகியது. ஆகவே மேற்படி, திருவள்ளுவர் மகாநாட்டின் ஓவிய போட்டியில், நான் கலந்து கொள்ளும் எண்ணம் எனக்கு சிறிதேனும் இருக்கவில்லை. ஆனால் பிரதர் தோமஸ் அவர்கள் எனது ஓவியத்தை ஏதோ ஒரு வழியில் ஓவிய போட்டிக்கு, திருகோணமலையில் சமர்பித்து விட்டார். போட்டி முடிவுகள் வெளிவந்தன. எனது ஓவியம் முதலாமிடத்திற்காய் தெரிவு செய்யப்பட்டது. இரண்டாவதாக ஒன்றை குறிப்பிடலாமென்றால் மனிதன் சந்திரனில் இறங்கிய போது அதனை நான் ஓவியமாக தீட்ட தொடங்கினேன். இதுவும் பாடசாலைகளுக்கிடையே நடந்த ஓவிய போட்டியின் காரணமாகவே. அதன் பரப்பு 4 ஒ 3 சதுர அடிகளாக இருந்தன. இதனால் ஓவிய அட்டையை உயரத்தில் பாடசாலை சுவரில் மாட்டி வரையத் தொடங்கினேன். ஓவியத்தை வரைய நான் ஏணியில் ஏறி நின்றே வரைய வேண்டிய நிர்பந்தம். மாலை வேளைகளில், நான் களைப்புடன் தீட்டிக்கொண்டு இருக்கையில், ஏணியின் கீழ் நின்று பிரதர் தோமஸ் ஒரு வடையும் பிளேன்டியும் வைத்துக் கொண்டு என்னை அழைப்பார்: “தம்பி… வா வந்து இத குடி”.

இப்படியாகவே என் ஓவிய வாழ்வு மலரத் தொடங்கியது.

கேள்வி: இந்த ஆரம்ப ஓவிய வாழ்வு மேலும் எப்படி வளரத் தொடங்கியது என்பதை விபரிப்பீர்களா?

பதில்: அதிலும் பிரதர் தோமஸ்தான் முக்கிய பங்காற்றினார் என சொல்வேன். எனது ஓவியங்கள் இடம்பெற்ற கண்காட்சிக்கு வந்த திருமதி லூயிஸ் என்ற பெண்மணி, பிரதர் தோமஸிடம் எனது ஓவியத்தை பற்றியும் என்னை பற்றியும் விசாரித்துள்ளார். பிரதர் தோமஸின் அறிவுரைக்கமைய நான் திருமதி லூயிஸ் அவர்களை லிந்துலையில் சந்திக்க நேர்ந்தது. திருமதி லூயிஸின் கணவர் லிந்துல வைத்தியசாலையில் ஒரு மருத்துவராக இருந்தார். திருமதி லூயிஸ் அவர்கள் கொழும்பில் ஓவியர் டொனால்ட் ராமநாயக்க அவர்களின் ஓவிய வகுப்புகளில் ஓர் ஓவிய மாணவியாக இருந்தார். திருமதி லூயிஸ் அவர்கள் என்னை ஓவியங்களில் மேலும் ஈடுபடும்படி உற்சாகப்படுத்தியும் ஓவியர் டொனால்ட் ராமநாயக்கா அவர்களை சந்திக்கும் படியும் என்னை கேட்டார். இந்த விடயங்கள் நடந்தேறும் சமயத்தில் எனது பொஸ்கோ பாடசாலை வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வந்திருந்தது. நானும், ஓர் படவரைவாளராக (Draughtman) என் தந்தையின் அறிவுறுத்தல் பிரகாரம், விருப்பம் கொண்டிருந்தேன். எனவே, படவரைவு கற்பதற்காய், நான், தந்தையால் கொழும்புக்கு அனுப்பப்பட்டேன்.

கொழும்பில் நான் ஓவியர் டொனால்ட் ராமநாயக்காவை சென்று சந்தித்தேன். அவரது அறிவுறுத்தலுக்கு இணங்க ஒரு கிழமைக்கு இரு தினங்களில் அவரது வகுப்புகளில் நான் கலந்து கொண்டேன். அவர் திருமதி லூயிஸ் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் எனக்கு ஓவிய கலையை இலவசமாக கற்றுத்தர முன்வந்தார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவரிடம் நான் ஓவியம் வரைவது சம்பந்தமாக கற்க தொடங்கினேன். மொத்தத்தில் அவர் நிலவரைபட (Landscape painting) ஓவியராக இருந்தார். ஆகவே Landscape ஓவியங்கள் சம்பந்தமான நுணுக்கங்களையும், ஓவியங்களின் அடிப்படைகளையும் அவரிடமிருந்து எனது ஆரம்ப அறிமுகத்தை பெற தொடங்கினேன் எனலாம்.

கேள்வி: அதன் பிறகு உங்கள் ஓவிய வாழ்வு எவ்விதம் பரிணமித்தது?

பதில்: கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இப்படியாக திரு டொனால்ட் ராமநாயக்கா அவர்களிடம் பயின்ற பின் நான் எனது இருப்பிடத்தை மாற்றி ஒரு வழக்கறிஞரின் வீட்டில் வாடகைக்கு இருக்க நேர்ந்தது. அவ்வழக்கறிஞர் சென்ஜோசப் கல்லூரியில் கல்வி கற்றவராவார். உண்மையில் சென்ஜோசப் கல்லூரியில் அவர் கல்வி கற்ற பொழுது அங்கு ஓவிய பாடத்தை கற்பித்த திரு ரிச்சர்ட் கெப்ரியல் அவர்களின் மாணவராயிருந்திருக்கின்றார். திரு.ரிச்சர்ட் கெப்ரியல் அவர்கள் இலங்கையின் புகழ் பெற்ற 43ம் குழு ஓவியர்களில், ஒருவர். வழக்கறிஞர் எனது ஓவிய ஆர்வங்களை கண்டும் கேட்டும் என்னை திரு.ரிச்சர்ட் கெப்ரியல் அவர்களிடம் அழைத்து சென்றார். அதனை தொடர்ந்து திரு.ரிச்சர்ட் கெப்ரியலிடம் நான் இரண்டு வருடங்கள் வரை ஓவியங்களை பயின்றேன். இந்நேரத்தில் நான் ஒரு படவரைகலைஞராக (Draughtman) ஒரு ஸ்தாபனத்தில் பணிபுரிய தொடங்கியிருந்தேன்.

ஒவ்வொரு சனி மாலைகளிலும், கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் எனக்கு ஓவிய வகுப்புகள் நடாத்தினார். அதற்குரிய கட்டணம் அன்றைய காலத்தில் ரூபாய் 25. ஆனால் எனக்கோ இவை விலைமதிப்பற்ற மணிகளாய் கழிந்தது.

கேள்வி: டொனால்ட் ராமநாயக்காவிற்கும் ஓவியர் ரிச்சர்ட் கெப்ரியலுக்கும் என்ன வித்தியாசங்களை நீங்கள் காணக்கூடியதாக இருந்தது?

பதில்: டொனால்ட் ராமநாயக்க அவர்கள் அடிப்படையில் ஒரு Landscape painter. தூரிகைகளின் வீச்சு, வண்ணங்களின் தேர்வு, நிலவரைகலை அணுகுமுறைகள் - இவை, என்னை கவர்ந்தன.

ரிச்சர்ட் கெப்ரியலின் கிராமிய ஓவிய அணுகுமுறைகளும் வித்தியாசப்பட்டது. அவையும் என்னை கவருவதாக அமைந்தன. அவர் Landscape ஓவியங்கள் செய்து நான் கண்டதில்லை. செய்திருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்த வகையில் அவரது ஓவியங்களை நான் கிராமிய அணுகுமுறைக்காகவே தேர்ந்து கொள்வேன் எனலாம்.

அவரது ஓவியங்களில் ஒரு கிராமிய வண்ணத்தை கண்டேன். அதாவது, மண்நிறம், கிராமத்து குடிசை, கிராமத்து பெண்கள் விரும்பக்கூடிய சேலையின் பூ ப்போட்ட நிறங்கள் - இவை அனைத்தையும் பார்த்தால் டொனால்ட் ராமநாயக்காவின் ஓவிய உலகமும் ரிச்சர்ட் கெப்ரியலின் ஓவிய உலகமும் வித்தியாசப்பட்டது. ஒன்றுடன் ஒன்று ஒப்பு நோக்க முடியாதது. இருந்தும் அவ்வவ் ஓவியங்களில் அவ்வவ் சிறப்புகள் இருந்தன. அவை என்னை ஆகர்சித்தது. அவற்றை நான் பயில தொடங்கினேன்.

கேள்வி: டொனால்ட் ராமநாயக்காவையும், ரிச்சர்ட் கெப்ரியலையும் தவிர உங்களை ஆகர்ஷித்த இலங்கை ஓவியர்கள் குறித்து கூற முடியுமா?

பதில்: இலங்கையில் புகழ்பெற்ற ஓவியர்களை இரண்டு விதமாக பிரித்துக் கொள்வேன். உருவங்களை (Figures) கீறுபவர்கள் முன்னணி இடம் வகித்தவர்கள். இரண்டாம் பிரிவினர் நிலவரைபடத்துடன் (Landscape) சம்பந்தமுள்ளவர்கள். உருவங்களை (Figures) வரைவதில் A.C.G.S அமரசேகர, ஐவான் பீரிஸ், டேவிட் பெயின்டர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதாவது மேற்கூறிய டொனால்ட் ராமநாயக்க, கெப்ரியல் இவர்களை தவிர்த்து மூன்றாவதாக ஓர் புதிய நடைமுறை எழுந்தது. இதற்கான பின்புலம் ஓவியர் ஜோர்ஜ் கீட்டால் வழங்கப்பட்டது. அதாவது Impressionism, Post Impressionism இரண்டையும் தாண்டி ஒரு நவீனத்துவத்தை நோக்கி பிக்காசோவின் வழியாக பெற்று ஜோர்ஜ் கீட் அறிமுகம் செய்ய முனைந்தார்.

கேள்வி: சர்வதேச ஓவியர்கள் பற்றி கூறுங்கள்.

பதில்: சர்வதேச ஓவியர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் வின்சன்ட் வான்கோ தான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.